Monday 26 September 2011

இலங்கை சிங்களத் திரைப்பட ரசிகர்களிடையே நீங்கா இடம்பிடித்த ஜோ அபேவிக்கிரம - புன்னியாமீன்

பல்வேறுபட்ட குணசித்திர பாத்திரங்களில் 150 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து இலங்கை சிங்களத் திரைப்பட ரசிகர்களிடையே நீங்கா இடத்தைப் பெற்றுள்ள சிங்கள திரைப்பட நடிகர் ஜோ அபேவிக்கிரம கடந்த செப்டம்பர் 21ம் திகதி காலமானார். இவர் காலமாகும்போது இவரது வயது 84 ஆகும். அவர் உடற்பயிற்சிகளில் ஈடுபட்டிருந்த போது விழுந்த நிலையில் களுபோவில மருத்துவமனைக்குக் கொண்டு செல்கையில் உயிரிழந்தார். இவர் இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார்.

ஜோ அபேவிக்கிரம இலங்கையின் சப்ரகமுவ மாகாணத்தில் அமைந்துள்ள இரத்தினபுரி மாவட்டத்தில் லேலோபிட்டிய எனும் பிந்தங்கிய கிராமமொன்றில் 1927 ஜுன் மாதம் 22ம் திகதி பிறந்தார். இவருடன் கூடப் பிறந்தவர்கள் மூவர். திப்பித்திகல கலவன் பாடசாலை மற்றும் இரத்தினபுரி சீவலி வித்தியாலயம் ஆகியவற்றில் கல்வி கற்றார்.

1940 களில் இலங்கையின் தலைநகர் கொழும்புக்கு வந்த இவர் ஆரம்ப காலத்தில் நகைச்சுவை நடிகராக திரைப்படத்துறையில் இணைந்தார். இவரால் நடிக்கப்பட்ட முதல் திரைப்படம் தேவசுந்தரி என்பதாகும், இருப்பினும் இத்திரைப்படத்திற்கு முன்பாக இவரால் நடிக்கப்பட்ட மற்றுமொரு திரைப்படமான சரதம 1957இல் திரையிடப்பட்டது. எனவே ரசிகர்களுக்கு இவர் அறிமுகமான முதல் திரைப்படம் இதுவாகும். பின்பு 70களில் குணசித்திர பாத்திரங்களில் நடித்து குணசித்திர நடிகராகவும் கதாநாயகனாகவும் புகழ் பெற்றார்.

ஆரம்பகாலங்களில் இவர் நகைச்சுவை நடிகராக அறிமுகமானதினால் நகைச்சுவை நடிகர் என்றடிப்படையிலே இவர் ரசிகர்களின் மனதிலே இடம்பிடித்துக் கொண்டார். 1960களின் மத்தியில் குணசித்திர நடிகராக இவர் நடிக்கத் தலைப்பட்டாலும் அவை ஆரம்பத்தில் தோல்வியிலேயே முடிந்தன. ஏனெனில், நகைச்சுவைப் பாத்திரங்களிலேயே ரசிகர்கள் இவரை அதிகமாக எதிர்பார்த்தனர். 1970களில் துன்மங்ஹந்திய, வெலிகதர, தேஸநிசா, பம்பருஎவித் போன்ற திரைப்படங்களில் குணசித்திர பாத்திரங்களில் நடித்து ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்துக் கொண்டார்

இவர் திரைப்படத்துறையில் பல பாத்திரங்களில் நடித்துள்ளார். இவரது இறுதிக்காலம் வரை பலதரப்பட்ட ஒன்றுக்கொன்று வித்தியாசமான குணசித்திர பாத்திரங்களில் தோன்றியமை விசேட அம்சமாகும். அதிக முக அலங்காரங்கள் இல்லாமல் இயற்கையான நடிப்பினையே இவர் விரும்பியிருந்தார். இவரின் பெரும்பாலான பாத்திரங்கள் இயற்கையோடு பின்னிப் பிணைந்தவை. இவரின் நடிப்பும்ää வாழ்வும் இளைய தலைமுறை நடிகர்களுக்கு ஒரு முன்மாதிரியாகும். தான் இறக்கும்வரை கலைத்துறையை மாத்திரமே நேசித்துவந்த இவர் ஏனைய துறைகளை அதிகமாக நேசிக்கவில்லை.

இலங்கையில் அண்மைக்காலங்களாக திரைப்படத்துறையில் ஓரளவு பிரபல்யம் அடைந்ததும் அரசியலில் ஈடுபட்டுவரும் கலாசாரம் தலைதூக்கியுள்ள இக்காலகட்டத்தில் இவருக்கும் பலவித அரசியல் அழைப்புகள் வந்தன. ஆனால் அவற்றை செவிமடுக்காது தான் இறக்கும்வரை கலைஞனாகவே வாழ வேண்டும் என்ற உயர் இலட்சியத்தில் வாழ்ந்து அந்த இலட்சியத்துடனேயே மரணித்தார்.

இந்தியாவில் தமிழ்நாட்டில் அரசியல் ஈடுபாட்டிற்கு திரைப்பட ஈடுபாடு ஒரு முக்கியமான தகுதியாக அண்மைக்காலங்களில் கருதப்படுகின்றது. இந்திய மக்கள் திரைப்படங்களில் நடிகர்களின் நடத்தைகள் செயல்பாடுகளை வைத்தே அவர்களை அரசியலில் ஈடுபட வைக்கின்றனர். இலங்கையில் ஒப்பீட்டளவில் இந்நிலை குறைவாகக் காணப்பட்டாலும்கூட, அண்மைக்காலங்களில் திரைப்பட மற்றும் விளையாட்டுத்துறை வீரர்களும் பாராளுமன்றம் செல்வதற்கு எத்தனிப்பதை நாம் அவதானிக்கின்றோம். இப்படிப்பட்டவர்கள் பாராளுமன்றம் சென்ற பின்பு இவர்களது கலைத்துறை அஸ்தமித்துவிடுகின்றது. எனவே தானோ என்னவோ தான் மரணிக்கும்வரை ஒரு சிறந்த கலைஞனாகவே வாழ விரும்புகின்றேன் என்று ஜோ அபேவிக்கிரம கூறியிருந்தமை அவதானத்தில் எடுத்துக் கொள்ள வேண்டிய ஒரு விடயமாகும்.

விருதுகள்

இலங்கையில் திரைப்படத்துறையில் ஈடுபட்டுள்ளோருக்கு வழங்கப்படும் உயர்ந்த விருதாகக் கருதப்படுவது சரசவிய விருதாகும். ஜோ அபேவிக்கிரம 11 தடவைகள் இந்த விருதைப் பெற்றுள்ளார்.

1965 சரசவிய விருது (திரைப்படம் - கெடவரயோ)

1966 ஜனரஞ்ச மற்றும் சிறந்த நடிகர் விருது (திரைப்படம் - சாரவிட)

1981 சிறந்த நடிகர் விருது (திரைப்படம் - பெத்தேகம)

1983 சிறந்த நடிகர் விருது (திரைப்படம் - மலட்ட நொயன பம்பரு)

1986 சரசவிய உயர் விருது

1987 சிறந்த நடிகர் விருது (திரைப்படம் - மல்தெனியோ சிமியோன்)

1991 சிறந்த துணை நடிகர் (திரைப்படம் - பாலம யட்ட)

1992 சிறந்த நடிகர் விருது (திரைப்படம் - கொலு முகுதே குனாட்டுவ)

1993 சிறந்த நடிகர் விருது (திரைப்படம் - உமயாங்கனா)

1997 சிறந்த நடிகர் விருது (திரைப்படம் - வித்துசித்துவம்)

2002 சிறந்த நடிகர் விருது (திரைப்படம் - (புர ஹந்த கலுவர)

ஜனாதிபதி விருது

திரைப்படத்துறையினரை ஊக்குவிக்குமுகமாகவும்ää திரைப்படக் கலைஞர்களை கௌரவிக்குமுகமாகவும் வழங்கப்பட்ட இலங்கையின் அதியுயர் விருதாக சனாதிபதி விருதினை இவர் 7 தடவைகள் பெற்றுள்ளார்.

1980 சிறந்த துணை நடிகர் விருது (திரைப்படம் - வசந்தயே தவசக்)

1981 சிறந்த நடிகர் விருது (திரைப்படம் - சிறிபோ அய்யா)

1982 சிறந்த நடிகர் விருது (திரைப்படம் - பெத்தேகம)

1983 சிறந்த நடிகர் விருது (திரைப்படம் - மலட்ட நொயன பம்பரு)

1987 சிறந்த நடிகர் விருது (திரைப்படம் - பூஜா)

1996 சிறந்த நடிகர் விருது (திரைப்படம் - லொக்கு துவ)

1997 சிறந்த நடிகர் விருது (திரைப்படம் - விது சிதுவம்)

சர்வதேச விருது

1999ல் 12வது சிங்கப்பூர் திரைப்பட சர்வதேச விருதினை இவர் பெற்றார். புரஹந்த கலுவர திரைப்படத்தில் நடித்தமைக்காக சிறந்த நடிகருக்காக வழங்கப்படும் சில்வர் ஸ்கிரீன் விருது இவருக்குக் கிடைத்தது.

ஜோ அபேவிக்கிரம இதுவரை நடித்து வெளிவந்த திரைப்படங்கள் வருமாறு

சரதம (1957), அவிஸ்வாசய  (1959),  சிறி 296  (1959),  கெஹனு கீத (1959), சிறிமலீ (1959),

நாலங்கன (1960), பிரிமியக் நிசா (1960), தருவா காகேத (1961), ரன்முத்து துவ (1962),    தேவ சுந்தரி (1962), வென ஸ்வர்கயக் குமடத (1963),  தீபசிகா (1963), ஹெட்ட பிரமாத வெடி (1964), கெட்டவரயோ (1964), சுபசரண செமசித (1964), சிதக மஹிம (1964), சண்டியா (1965), சதுட்டு கந்துலு (1965), சாரவிட (1965), ஹிதட ஹித (1965), அல்லபு கெதர (1965), சத பனஹ (1965),  சுவீப் டிக்கட் (1965), லந்தக மஹிம (1966), செங்கவுன செவனெல்ல (1966), மஹதென முத்தா (1966), செனசும கொதனத (1966), எதுல்வீம தஹனம் (1966), சீகிரி காசியப்பா (1966), கபட்டிகம (1966), பரசது மல் (1966), சொருங்கெத் சொரு (1967), மணமாலயோ (1967), தரு துக (1967), செந்து கந்துலு (1967), புஞ்சி பபா (1968), அக்கா நகோ (1968), எமதிகம முதலாளி (1968), தஹசக் சிதுவிலி (1968), ஆதரவந்தயோ (1968), அட்டவெனி புதுமய (1968), செனேஹச (1969), ஒப நெதினம் (1969), நாரிலதா (1969), ஹரி மக (1969), படுத் எக்கா ஹொரு (1969), உதும் ஸ்த்ரீ (1969), பரிஸ்சம் வென்ன (1969), பரா வளலு (1969), பெஞ்சா(1969), ரோமியோ ஜுலியட் கதாவ (1969),

லக்செத கொடிய (1970), தேவத்தா (1970), துன் மங் ஹந்திய (1970), சீயே நொட்டுவ (1971), வெலிகதர (1971), ஹாரலக்சய (1972), சந்தர் த பிலக் லெபோர்ட் ஒப் சிலோன் (1972), வீதுருகெவல் (1973), மாத்தர ஆச்சி (1973), துசாரா (1973), சதஹட்டம ஒப மகே (1973), கல்யாணி கங்கா (1974), ஒன்ன பாபோ பில்லோ எனவா (1974), நியகலா மல் (1974), ரத்தரன் அம்மா (1975), தரங்கா (1975), சூரயா சூரயாமய் (1975), சிகுருலியா (1975), சாதனா (1975), கலு திய தஹரா (1975), தேச நிசா (1975), வாசனா (1975), மடோல் தூவ (1976), கொலம்ப சன்னிய (1976), த கோட் கிங் (1976), உன்னத் தஹாய் மலத் தஹாய் (1976), ஒன்ன மாமே கெல்லா பெனப்பி (1976), ஹிதுவொத் ஹிதுவாமய் (1977), யலி இபதி (1977), சிறிபால ஹா ரென்மெனிகா    (1977), கெஹனு லமய் (1978), சிறிபதுல (1978), செலினாகே வளவ்வ (1978), சாரா (1978), வீர புரான் அப்பு  (1978), பம்பரு அவித் (1978), சல்லி(1978), குமர குமரியோ (1978), சந்தவட்ட ரன்தரு (1978), ஜீவன கந்துலு (1979), ஹிங்கன கொல்லா (1979), ரஜ கொல்லோ (1979), வசந்தயே தவசக் (1979), விசி ஹதர பெய (1979), ஹரி புதுமய் (1979),

டக் டிக் டுக் (1980), ஜோடு வளலு (1980), எக்டெம் கே (1980), சீதா (1980), ஆதர ரத்னே (1980), சிறிபோ அய்யா(1980), பம்பர பஹச (1980), தண்டு மொனரா (1980), முவன் பெலஸ்ஸ 2 (1980), பர திகே (1980), சிங்ஹபாகு (1981),  கோலம் காரயோ (1981),  தரங்க (1981),  பத்தேகம (1981),  சயுரு தெரே (1981),  சொல்தாது உன்னஹே (1981),  சத்தர பெர நிமிதி (1981), பின்ஹாமி (1981),  சதர திகந்தய (1981),   ரேன கிரவய் (1981),  வதுர கரத்தய (1982), மேஜர் சேர் (1982), கெலே மல் (1982), மலட நெஎன பம்பரு (1982), ரேல் பார (1982), கடவுனு பொரந்துவ (1982), ரன் மினி முத்து (1983), சந்தமாலி (1983), சுமித்ரோ (1983), நிலியகட பெம் கலெமி (1983), சமுகனிமி மா செமியனி (1983), சுபோதா (1983), முவன் பெலஸ்ஸ  3 (1983), மொனர தென்ன 2 (1983), பீட்டர் ஒப் த எலிபன்ட்ஸ் (1983), முகுது லிஹினி (1983), சிராணி (1984), தாத்தாய் புதாய் (1984), பொடி ராலாஹாமி  (1984),  சசரா சேதனா (1984), வடுல (1984), ஹிம கதர (1984), சகோதாரியககே கதாவ (1984),  சுத்திலாகே கதாவ (1985), மல்தெனிய சீமன் (1986), தெவ் துவ (1986), பூஜா  (1986) ஆதர ஹசுன (1986), விராகய (1987), ரச ரஹசக் (1988), அங்குலிமாலா (1988)

பாலம யட (1990), கொலு முகுதே குனாட்டுவக் (1990), செரியோ டொக்டர் (1991) ஸ்திரீ (1991), உமயங்கனா (1992)  அம்பு செமியோ (1994), அவரகிர (1994), ச்செரியோ கப்டன் (1996), ஹித்த ஹொந்த கெஹெனியக் (1996), லொகு துவ (1996), செரியோ டார்லிங் (1996), பிது சிதுவம் (1996), சுது அக்கா  (1996), விமுக்தி (1998),

சரோஜா (2000), புர ஹந்த கலுவர (2001), அஸ்வசுவம (2001), தீவாரி (2006).