Monday 10 October 2011

உலக மரண தண்டனை எதிர்ப்பு தினம் - புன்னியாமீன்

உலக மரண தண்டனை எதிர்ப்பு தினம் (World Day Against the Death Penalty)  ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 10ம் திகதி கடைபிடிக்கப்படுகிறது.

மரண தண்டனைக்கு எதிரான உலகக் கூட்டமைப்பு (World Coalition Against the Death Penalty)  என்ற அமைப்பு இந்நிகழ்வை முன்னெடுத்து வருகிறது. இந்த அமைப்பு மரண தண்டனைக்கு எதிராகக் குரல் கொடுக்கும் அரச சார்பற்ற அமைப்புகள், வழக்குரைஞர் கழகங்கள், தொழிற் சங்கங்கள், மற்றும் உள்ளூராட்சி அமைப்புகள் போன்றவற்றின் கூட்டமைப்பாகும்.

மரண தண்டனைக்கு எதிரான இயக்கத்தை உலகளாவிய அளவில் வளர்த்தெடுக்க வேண்டும் என்பதே இதன் குறிக்கோள் ஆகும். மரண தண்டனைக்கு எதிராக சர்வதேச அமைப்புக்கள் மற்றும் அரசுகளில் ஆதரவைத் திரட்டல், சர்வதேச நிகழ்வுகளை ஏற்பாடு செய்தல், மற்றும் மரண தண்டனை எதிராக தேசிய மற்றும் பிராந்தியக் கூட்டுறவை வலுப்படுத்தல் போன்றவற்றில் இவ்வுலகக் கூட்டமைப்பு கவனம் செலுத்துகிறது. ஜுலை 2011 அளவில் இக்கூட்டமைப்பில் மொத்தம் 121 உலக அமைப்புகள் அங்கத்துவம் வகிக்கின்றன.
.
2002, மே 13 இல் ரோம் நகரில் கூடிய இந்த அமைப்பின் மாநாட்டில் மரண தண்டனையை ரத்து செய்யவும், மரண தண்டனை எதிர்ப்பு இயக்கத்தை வளர்க்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின் 2003, அக்டோபர் 10 மரண தண்டனை எதிர்ப்பு நாளாக அறிவிக்கப்பட்டது.

மரணதண்டனை என்பது, ஒரு அதிகார நிறுவனம் தனது நடவடிக்கைகளூடாக மனிதர் ஒருவரின் உயிர்வாழ்வைப் பறிக்கும் தண்டனை ஆகும். மனிதர் இழைக்கும் குற்றம் அல்லது தவறு அவரின் உடல் சார்ந்த செயல்பாடாகப் புரிந்துகொள்ளப்பட்ட தொன்மைக்கால தண்டனை முறைகளில் இதுவும் ஒன்றாகும்.

மிகப் பழைய காலம் முதலே கடுமையான குற்றங்களுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டு வந்துள்ளது. அதில் குறிப்பானது கொலையாகும். எல்லா நாடுகளிலும் கொலைக்கு மரணதண்டனை விதிக்கப்படுதல் ஏதேனும் ஒரு காலப்பகுதியில் நிலவிவந்துள்ளது. எனினும் கடுமையான குற்றம் எது என்பது அவ்வச் சமூகங்களின் பண்பாடு, அரசு அல்லது அரசனின் கொள்கைகள்,  அரசியல் ஆகியவற்றைப் பொறுத்து மாறுபட்டு அமையும். இத் தண்டனை நிறைவேற்றப்படும் முறையும் நாட்டுக்கு நாடும், காலத்துக்குக் காலமும் வேறுபாடாக இருந்து வந்துள்ளன.

தலையை வாளினால் துண்டித்தல், கழுவில் ஏற்றுதல், கல்லால் எறிந்து கொல்லுதல், கல்லில் கட்டிக் கடலில் எறிதல்,  கழுத்துவரை நிலத்தில் புதைத்து யானையால் மிதிக்கச் செய்தல், காட்டு விலங்குகளுக்கு இரையாக்குதல்,  தூக்கில் இடுதல், உயிருடன் புதைத்தல்,  நஞ்சூட்டுதல், துப்பாக்கியால் சுடுதல், மின்னதிர்ச்சி கொடுத்தல் போன்று பல முறைகள் கையாளப்பட்டு வந்துள்ளன.

கொலை, தேசத்துரோகம், அரசுக்கு அல்லது அரசனுக்கு எதிரான சதி செய்தல் போன்ற குற்றங்கள் பரவலாக மரணதண்டனைக்குரிய குற்றங்களாகக் கருதப்பட்டவை. இவை தவிர அரசு சார்பான மதங்களுக்கு எதிரான குற்றங்கள், பாலியல் குற்றங்கள் போன்றனவும் சில சமூகங்களில் மரண தண்டனைக்குரிய குற்றங்களாகக் கருதப்படுகின்றன. தற்காலத்தில் சில நாடுகளில் போதை மருந்துகளைக் கடத்துதல் போன்றவையும் மரணதண்டனைக்கு உரிய குற்றங்களாக ஆக்கப்பட்டுள்ளன.

மரணதண்டனை நவீன நீதிமுறைகளின் அடிப்படைக்கோட்பாடுகளுக்கு எதிரானது என்றும் அதனை ஒழிக்கவேண்டும் என்றும் பல்வேறு கருத்துகள் வலுப்பெறத் தொடங்கிய பின்னர் பல நாடுகள் மரணதண்டனையை ஒழித்து விட்டன. வேறு பல நாடுகளிலும் இது பற்றிய விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

=உசாத்துணை=
* http://www.hrea.org/index.php?doc_id=889
*  http://www.penalreform.org/news/world-day-against-death-penalty-2009
*  http://theonlinecitizen.com/2009/10/world-day-against-death-penalty/
*  http://www.iheu.org/node/3513
*  http://www.worldcoalition.org/worldday.html

Tuesday 4 October 2011

இலங்கை மாணவர்களுக்கு மலேசியாவில் உயர்கல்வி பெறும் வாய்ப்பு. கலாநிதி க. ஹரிகிருட்டிணனுடன் ஒரு நேர்காணல் - புன்னியாமீன்

மலாய் இனத்தவரல்லாத மலேசிய பெற்றோரின் மனவுளைச்சல்களை அதிகப்படுத்தும் ஒரு நிலையையும், அரசாங்கத்தின் மீது வெறுப்புணர்ச்சியை வெளிப்படுத்தக்கூடிய  ஒரு நிலையினையுமே மலேசிய எஸ்.பி.எம். பரீட்சை முடிவுகள்  எற்படுத்துகின்றன - கலாநிதி க. ஹரிகிருட்டிணன்

நேர்காணல்: புன்னியாமீன்

மலேசியாவில் நோட்டிங்ஹாம் அனைத்துலக பல்கலைக்கழக கணிதத்துறை துணைப் பேராசிரியரான கலாநிதி க. ஹரிகிருட்டிணன் அவர்கள் தனிப்பட்ட விஜயம் ஒன்றை மேற்கொண்டு அண்மையில் இலங்கை வந்திருந்தார்.

கலாநிதி க. ஹரிகிருட்டிணன் மலேசியாவில் வாழும் 3ம் தலைமுறையைச் சேர்ந்த ஒரு இந்தியத் தமிழராவார். இறப்பர் தோட்டத் தொழிலாளர்களான கந்தன், அத்தாயி தம்பதியினரின் புதல்வரான இவர் 1963ம் ஆண்டில் மலேசியா மண்ணில் சீபில்டூ எனும் தோட்டத்தில் பிறந்தார்.  ஆரம்பக் கல்வியை சீபில்டூ தோட்ட தமிழ் பாடசாலையிலும் இடைநிலைக் கல்வியை கிள்ளான் மாவட்டத்தில் உள்ள உயர்நிலைப் பாடசாலையிலும் தொடர்ந்தார். பின்பு மலாயப் பல்கலைக்கழகத்தில் கணிதத் துறையில் ஆசிரியப் பட்டப்படிப்பை மேற்கொண்ட இவர் தனது முதுநிலைக் கல்வியை யப்பான் ஒசாக்கா பல்கலைக்கழகத்தில் கற்று அதே பல்கலைக்கழகத்தில் பிரயோகக் கணிதத் துறையில் கலாநிதிப் பட்டத்தினையும் பெற்றார்.

மலேசியக் கல்வித்துறையில் சுமார் இரண்டு தசாப்த கால அனுபவமிக்க இவரிடம் மலேசியா கல்விக் கட்டமைப்பு தொடர்பாகவும், மலேசியாவின்  கல்வி நிலை தொடர்பாகவும் 'நமது தூது" சார்பில் ஒரு நேர்காணலில் ஈடுபட்டோம்.

கேள்வி:    வணக்கம் கலாநிதி க. ஹரிகிருட்டிணன் அவர்களே! நமது தூது சார்பில் தங்களை வரவேற்பதில் மகிழ்ச்சியடைகின்றோம். மலேசியா 1957ம் ஆண்டு பிரித்தானிய காலனித்துவத்திலிருந்து விடுதலைப் பெற்றது. மலேசியாவின் கல்விக் கட்டமைப்பு கல்வி நிலை தொடர்பாக தங்களுடன் கலந்துரையாட விரும்புகின்றோம். முதலில் தற்போதைய மலேசியாவின் கல்விக் கட்டமைப்பு எவ்வாறு உள்ளது எனக் குறிப்பிட முடியுமா?

பதில்:    வணக்கம்,  மலேசியாவில் ஒரு மாணவன் தனது 7வது வயதில் ஆரம்பக் கல்வியைத் ஆரம்பிக்கின்றான். ஆறாண்டுகளில் தொடக்கக் கல்வியை முடிந்த பின்னர் இடைநிலைப் பாடசாலையில் 3 அல்லது 4 ஆண்டுகள் கற்று, உயர்நிலைப் பள்ளியில் 4 ஆண்டுகள் பயில வேண்டும். அதன் பின் பல்கலைக்கழகத்தில் துறைச் சார்ந்த கல்வியைத் தொடர்கிறார்கள்.

கேள்வி: இடைநிலைப் பள்ளியில் 3 அல்லது 4 ஆண்டுகள் எனக் குறிப்பிட்டீர்கள். இதற்கான காரணம் என்ன?

பதில்:    மலேசியா பல்லின மக்கள் வாழும் நாடு. குறிப்பாக மலாயர், சீனர் மற்றும் இந்தியர் என பெரும்பான்மை சமூகங்களைக் கொண்ட ஒரு நாடு. மலாயர் சுமார் 55 வீதத்தினரும், சீனர் 32 வீதத்தினரும், இந்தியர் 8 வீதத்தினரும், மீதமானோர் ஏனைய சமூகத்தினரும் வாழ்கின்றனர். மலேசியாவில் ஆரம்பப் பாடசாலைகளில் 6 ஆண்டுகள் அவர்களின் தாய்மொழி மூலமாகவே கல்வி கற்கும் வாய்ப்புண்டு. மலேசியாவில் மலாய மொழியே தேசிய மொழியாக உள்ளது. இடைநிலைக் கல்வி தேசிய மொழியான மலாய் மொழியிலேயே போதிக்கப்படுகின்றது. இந்நிலையில் இடைநிலை கல்வியை தொடரும் போது தாய்மொழி மூலமாக கல்வி கற்றவர்கள் ஓராண்டு புகுமுக வகுப்பில் கற்க வேண்டிய கட்டாய நிலை உள்ளதினால் இவர்கள் 4 ஆண்டுகள் இடைநிலைக் கல்வியை பெற வேண்டியுள்ளனர். அதேநேரம், ஆரம்பக் கல்வியை மலாய் மொழியில் கற்றவர்களும், தாய் மொழிப் பள்ளிகளில் கற்று மிகச் சிறந்த தேர்ச்சி பெற்ற மாணவர்களும் புகுமுக வகுப்பில் கற்க வேண்டிய அவசியமில்லை. இதனால் இவர்களுக்கு இடைநிலைக் கல்வி 3 ஆண்டுகளுள் நிறைவடைகின்றது.

கேள்வி    :மலேசியாவில் ஆரம்பப் பாடசாலைகளில் தாய்மொழி மூலமாக கற்கும் வாய்ப்பு உள்ளது எனக் குறிப்பிட்டீர்கள். அதேநேரம், மலேசியாவில் தேசிய மொழியான மலாய்மொழியிலும் ஆரம்பப் பாடசாலைகள் பிரதானமாக உள்ளன. இப்பாடசாலைகள் ஒரு பொதுவான பாடத்திட்டத்தின் கீழ் செயல்படுகின்றனவா? அல்லது மலாய்மொழிப் பாடசாலைகளுக்கு வேறாகவும் தாய்மொழிப் பாடசாலைகளுக்கு வேறாகவும் பாடத்திட்டங்கள் உள்ளனவா?

பதில்:    பாடத்திட்டத்தில் எவ்வித மாற்றமுமில்லை. என்றாலும், ஆரம்பப் பள்ளிகளை  தேசிய பாடசாலைகளாகவும் தேசிய மாதிரிப் பாடசாலைகளாகவும் அரசாங்கத்தின் கொள்கை வகுக்கின்றது. அனைத்து மலாய்ப் பாடசாலைகளும் தேசிய பாடசாலைகள். அனைத்து தாய்மொழிப் பாடசாலைகளும் தேசிய மாதிரிப் பாடசாலைகளாகும்.

கேள்வி    : கலாநிதி அவர்களே! தங்கள் கருத்துப்படி மலேசியாவில் தேசிய பாடசாலைகள், மாதிரிப் பாடசாலைகள் என இரு கட்டமைப்புகள் உள்ளதை எம்மால் விளங்கிக் கொள்ள முடிகின்றது. இத்தகைய கட்டமைப்பு நிலையினை ஆரம்பப் பாடசாலைகளைப் பொறுத்தவரையில் இலங்கையில் காணப்படுவதில்லை. மலேசியாவில் இந்த தேசிய பாடசாலைகள் மற்றும் தேசிய மாதிரிப் பாடசாலைகளுக்கிடையிலுள்ள வேறுபாடுகளை கூற முடியுமா?    

பதில்: இவ்விடத்தில் பெருவாரியான தமிழ், சீனப் பாடசாலைகள் பிரித்தானிய காலனித்துவத்தின்போது தோட்டங்களில் அல்லது தனியார் நிலங்களில் நிறுவப்பட்ட பாடசாலைகளாகும். தமிழ்மொழிப் பாடசாலைகளைப் பொறுத்தவரையில் பெரும்பாலான பாடசாலைகள் தற்போதும் தனியார் தோட்டங்களில் அமைந்தவையாகவே காணப்படுகின்றன. இவ்வாறு தனியார் நிலங்களில் அமைந்திருக்கும் மாதிரிப் பாடசாலைகள் அரசாங்கத்தின் முழு உதவி பெறும் பாடசாலைகளாக இதுவரை அங்கீகரிக்கப்படவில்லை. ஆனால் எல்லா தேசியப் பாடசாலைகளும் அரசாங்கத்தின் முழு உதவிப் பெற்ற பாடசாலைகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. பாடத்திட்டங்கள் ஒன்றாக இருந்தாலும் பாடசாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகள் சமநிலையில் பேணப்படுவதில்லை. மாதிரிப் பாடசாலைகளில் கற்றல் கற்பித்தலுக்குரிய வளங்கள் குறைவாக உள்ளமையினால் தேசியப் பாடசாலைகளைவிட இப்பாடசாலைகளின் கல்வித்தரம் ஒப்பீட்டளவில் குறைவாகவே உள்ளன. தற்போது மலேசியாவில் 523 தமிழ்மொழி மாதிரிப் பாடசாலைகள் காணப்படுகின்றன. பிரித்தானிய காலனித்துவத்தின்போது சுமார் 1500 தமிழ்மொழிப் பாடசாலைகள் இருந்தன.


கேள்வி    : மலேசியாவில் தமிழ்மொழி மூல மாதிரிப் பாடசாலைகளை எடுத்துநோக்குமிடத்து சுதந்திரத்தின் பின்பு எண்ணிக்கைக் குறைவடைந்துள்ளதாக தெரிகின்றது. இப்பாடசாலைகளின் எண்ணிக்கைக் குறைவடைவதற்கு காரணமாக பாடசாலைகள் மூடப்பட்டனவா அல்லது வேறு யாதாவது காரணங்கள் உள்ளனவா?

பதில் : காலப்போக்கில் மலேசியா அடைந்த துரித வளர்ச்சியில் இறப்பர் தோட்டங்களும் செம்பனை தோட்டங்களும் காணாமல் போயின. இதனால் அங்கு இருந்த தமிழ் பாடசாலைகளும் மறைந்தன. சுதந்திரத்துக்குப் பின்னால் இதுவரை எந்தவொரு புதிய தமிழ்ப் பாடசாலையும் தோற்றுவிக்கப்படவில்லை என்பது மலேசியா இந்தியர்களின் ஆதங்களுள் ஒன்றாக இன்னமும் இருந்து வருகின்றது.

கேள்வி:     அவ்வாறாயின் இவ்வாறாக மூடப்பட்ட தமிழ்ப் பாடசாலைகளின் மாணவர்களுக்கு என்ன நடந்தது?

பதில்:    மலேசியாவின் சுதந்திரத்தின் பின்பு பிரித்தானியர்கள் அவர்கள் வசமிருந்த தோட்டங்களை கைவிட்டுச் சென்றமையினால் தோட்டத் துண்டாடல்கள்ää தோட்ட விற்பனைகள் நடந்தன. இதனால் தோட்டங்களில் வாழ்ந்த தமிழ் மக்களின் எண்ணிக்கையும் துண்டாடப்பட்டது. இதன்விளைவாக பாடசாலை மாணவர்களின் எண்ணிக்கை குறைவடைந்த நேரத்தில் அப்பாடசாலைகள் மூடப்பட்டன. மூடப்பட்ட பாடசாலைகளின் மாணவர்கள் அதிக தூரத்தில் அமைந்திருந்த மற்றொரு தமிழ்ப் பாடசாலைக்குச் செல்லவேண்டும் அல்லது பக்கத்தில் அமைந்துள்ள மலாய் தேசிய பாடசாலைகளில் பயில வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது. இந்நிலையில் மூடப்பட்ட மாதிரிப் பாடசாலைகளில் கற்ற பெரும்பாலான மாணவர்கள் தேசிய பாடசாலைகளிலேயே இணைந்து கல்வியைத் தொடர்ந்தார்கள். இந்நிலையானது படிப்படியாக மலேசியாவில் தமிழ்மொழிப் பாடசாலைகளின் வீழ்ச்சிக்கு பிரதான காரணமாயிற்று.

கேள்வி :    தற்போதைய நிலையில் மலேசியாவில் தமிழ்மொழிக் கல்வியின் நிலை எவ்வாறு உள்ளது? என சற்று கூற முடியுமா?

பதில் :    கடந்த நூற்றாண்டின் 7ம், 8ம் தசாப்தங்களில் பெற்றோரின் மனோநிலையில் ஏற்பட்ட தாக்கம் மலேசியாவில் தமிழ்மொழிக் கல்வியில் பாதிப்பினை ஏற்படுத்தத் தொடங்கியது. அடிப்படை கட்டமைப்பு வசதிகள் குறைந்த தமிழ்மொழிப் பாடசாலைகளைவிடவும் சகல வசதிகளும் மிக்க தேசிய பாசடாலைகளுக்கு தங்கள் பிள்ளைகளை அனுப்பத் தொடங்கினார்கள். தேசியப் பாடசாலைகளில் ஆங்கிலமும் ஒரு பாடமாகப் போதிக்கப்பட்டுவந்தது. இத்தகைய நிலையினால் தமிழ்ப் பாடசாலைகள் பற்றிய உதாசீனப்போக்கு வெளிப்பட்டது. 9ம் தசாப்தங்களில் இந்நிலையில் மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின. "தாய்மொழியில் கற்போம்." "தமிழ்ப் பாடசாலைகளுக்கு பிள்ளைகளை அனுப்புவோம்" போன்ற பிரச்சாரங்களை தமிழ் அமைப்புகள் மேற்கொண்டன. இதனால் மலேசியாவைப் பிறப்பிடமாகக் கொண்ட இந்திய மக்கள் தமது பிள்ளைகளை தமிழ்மொழியில் கற்பிக்க வேண்டும் என்பதில் ஆர்வம் காட்ட ஆரம்பித்தார்கள். தற்போது இந்நிலை மேலும் விரிவடைந்துள்ளது. ஒரு காலத்தில் தேசியப் பாடசாலைகளில் கற்பதை கௌரவமாகக் கருதிய தமிழ் பெற்றோர் இன்று தமிழ்மொழிப் பாடசாலைகளில் கற்பதையும் பெருமையாக எண்ணத் தலைப்பட்டுள்ளனர். இந்நிலை காரணமாக தற்போது பெரும்பாலான தமிழ்ப் பாடசாலைகளில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. அரசாங்கத்தின் முழு உதவி பெறாத நிலையில் பல தமிழ்ப் பாடசாலைகளின் வசதிகளை மேம்படுத்துவது இன்று இந்திய சமுதாயத்தின் சொந்தக் கடப்பாடாக விளங்குகின்றது. ஆனால், பொருளாதாரம் வளம் குன்றிய நிலையில் இந்தியச் சமுதாயத்திற்கு இதுவொரு சுமையாகவே அமைந்துள்ளது. அனைத்து தமிழ்ப் பாடசாலைகளும் முழு உதவி பெற்ற பாடசாலைகளாக அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட வேண்டுமென்பது இந்திய சமுதாயத்தினர் அரசாங்கத்திடம் முன்வைக்கும் கோரிக்கைகளுள் மிக முக்கியமானதொன்றாகும்.

கேள்வி :    மலேசியாவில் இடைநிலைப் பாடசாலைகள் பற்றி சற்று குறிப்பிட முடியுமா?

பதில் :    தேசிய பாடசாலைகளிலும், மாதிரிப் பாடசாலைகளிலும் ஆரம்ப நிலையில் 6ம் ஆண்டுத் தேர்வு தேசிய பரீட்சையாக நடாத்தப்படும். இத்தேர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு இடைநிலைப் பாடசாலையில் தரம் பிரிக்கப்பட்டு மாணவர்கள் அமர்த்தப்படுவர். இடைநிலைப் பாடசாலையில் தேசிய மொழியான மலாய் மொழியிலேயே போதிக்கப்படும். இங்கு பிரதான பாடங்களாக மலாய், ஆங்கிலம், கணிதம், விஞ்ஞானம், வரலாறு ஆகிய பாடங்களுடன் புவியியல், நன்நெறி,  பொருளியல், கணக்கியல் போன்ற பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன. இடைநிலைப் பாடசாலையில் மூன்றாடுகள் முடிவில் பி.எம்.ஆர். எனப்படும் தேசியத் தேர்வு நடைபெறும். இத்தேர்வில் மாணவர்கள் கலை, விஞ்ஞானம் என்ற பிரிவுகளுக்கு தெரிவு செய்யப்படுவர்.

கேள்வி : மலேசியாவில் முழு ஆசிரமப் பாடசாலைகளும் சில செயல்படுவதாக அறிய முடிகின்றது. இது பற்றி சற்று விளக்கம் தருவீர்களா?

பதில் :    பி.எம்.ஆர். தேர்வில் 'சிறந்த' தேர்ச்சிப் பெற்ற மாணவர்களை முழுமையாக அரசாங்கச் செலவில் ஆசிரமங்களில் (விடுதிகளில்) தங்கவைத்து போதிக்கப்படுகிறார்கள். ஏறக்குறைய 90 வீதத்தினர் மலாய மாணவர்களுக்காகவே இவ்வசதி செய்யப்பட்டுள்ளதென மலாய் அல்லாதவர்களின் குற்றச்சாட்டாக முன்வைக்கப்பட்டுள்ளது. இத்தகைய பின்னணியில் அமைந்த பாடசாலைகளே முழு ஆசிரமப் பாடசாலைகளென அழைக்கப்படுகின்றன.


கேள்வி : மலேசியாக்கல்வித்திட்டத்தின் கீழ் பி.எம்.ஆர். தேர்வையடுத்து வரக்கூடிய எஸ்.பி.எம். தேர்வு பற்றி சற்று விளக்க முடியுமா?

பதில் :    எஸ்.பி.எம். எனப்படும் மலேசிய கல்விச் சான்றிதழ் பரீட்சை  மலேசியாவை பொறுத்தவரையில் மிக முக்கியமான பரீட்சையாகும். (இலங்கையில் க.பொ.த.சாதாரண தர பரீட்சையை ஒத்தது.) பி.எம்.ஆர். தேர்வுக்குப் பின்னர் இரண்டாண்டுகள் கலைத்துறை விஞ்ஞானத்துறை எனப்பிரிக்கப்படக்கூடிய துறைகளில் மாணவர்கள் பயில்வர். இவ்விரு துறைகளுக்கும் பொதுவான பாடங்களாக மலாய், ஆங்கிலம், கணிதம், வரலாறு, நன்நெறி ஆகிய 5 பாடங்களும் விஞ்ஞானத் துறை மாணவர்களுக்கு மேலதிகமாக பௌதீகவியல், உயிரியல், இரசாயனவியல், மேலதிகக் கணிதம் ஆகியனவும் கலைத்துறையில் மாணவர்களுக்கு துறைசார்ந்து தேர்ந்தெடுக்கப்படும் 4 பாடங்களும் கற்பிக்கப்படும். எஸ்.பி.எம். தேசிய பரீட்சையில் 9 பாடங்களில் தோற்ற வேண்டியது கட்டாயமாகும். மாணவர்கள் விரும்புமிடத்து அவர்களின் சுயவிருப்பின்படி மேலதிக பாடங்களையும் எடுப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. (இந்த விருப்பத்துக்குரிய பாடங்களாக மாணவர்கள் தங்கள் தாய்மொழிப் பாடங்களைத் தேர்ந்தெடுப்பது வழக்கத்தில் உள்ளது. குறிப்பாக இந்திய மாணவர்கள் தமிழ்மொழி மற்றும் தமிழ் இலக்கியம் என பாடங்களில் தோற்றிவருகின்றனர்.)  

கேள்வி : எஸ்.பி.எம். தேர்வின் பெறுபேற்றின் பின்பு மாணவர்களின் நிலை எவ்வாறு இருக்கும்?

பதில் : எஸ்.பி.எம். தேர்வே மலேசிய மாணவனொருவனின் எதிர்காலத்தை தீர்மானிக்கக்கூடிய முக்கிய தேர்வாக அமைகின்றது. இத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் உள் நாட்டு மற்றும் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுக்கும் மற்ற உயர்கல்விக் கூடங்களுக்கும் விண்ணப்பிக்க தகுதிபெறுகின்றனர். மேலும், மாணவர்களின் புலமைப்பரிசில் உபகார வசதிகளைப் பெற்றுக்கொள்ளக்கூடிய அடிப்படையையும் வழங்குகின்றது. இவ்வாறான நிலை காணப்பட்டாலும்கூட, இத்தேர்வில் தேர்ச்சிபெற்ற மலாய் இனத்தவரல்லாத மலேசிய பெற்றோரின் மனவுளைச்சல்களை அதிகப்படுத்தும் ஒரு நிலையையும் இதனால் அவர்கள் அரசாங்கத்தின் மீது வெறுப்புணர்ச்சியை வெளிப்படுத்தக்கூடிய  ஒரு நிலையினையும் உருவாக்கிவிடுகின்றது.

பகுதி 1 முடிவுற்றது

பகுதி 2

இலங்கை மாணவர்களுக்கு மலேசியாவில் உயர்கல்வி பெறும் வாய்ப்பு. மலேசியப் பேராசிரியர் க. ஹரிகிருட்டிணன் உடனான நேர்காணல் - நேர்காணல் புன்னியாமீன்

தொடர்ச்சி


கேள்வி: எஸ்.பி.எம். தேர்வு முடிவு மலாய் இனத்தவரல்லாத, மலேசிய பெற்றோரின் மனவுளைச்சல்களை அதிகப்படுத்தும் ஒரு நிலையையும் இதனால் அவர்கள் அரசாங்கத்தின் மீது வெறுப்புணர்ச்சியை வெளிப்படுத்தக்கூடிய ஒரு நிலையினையும் உருவாக்கிவருகின்றது என தெரிவித்தீர்கள். ஒரு தேர்வு முடிவு எந்த அடிப்படையில் இந்நிலையை உருவாக்குமென குறிப்பிட முடியுமா?

பதில் :  எஸ்.பி.எம். தேர்வு முடிவு மலேசிய மாணவர்களின் எதிர்காலத்தைத் திட்டமிடுவதில் ஒரு முக்கியமான தேர்வு முடிவாகும். ஏனெனில், இத்தேர்வின் அடிப்படையிலேயே உயர்கல்விக்காக வேண்டி சர்வதேச மற்றும் உள்நாட்டு பல்கலைக்கழகங்களில் விண்ணப்பிக்கும் வாய்ப்பும் ஏனைய தொழில்துறைப் பயிற்சிகளுக்கு விண்ணப்பிக்கும் வாய்ப்பும் அவற்றிற்கான புலமைப்பரிசில்களைப் பெற்றுக் கொள்வதற்குமான அடிப்படையும் கிடைக்கின்றது. ஆனால், நடைமுறையில் இன விகிதாசார அடிப்படையில் மேற்படி வாய்ப்புகளை மாணவர்களுக்கு பெற்றுக் கொள்ள முடியாத சூழ்நிலை உள்ளதினால் மலாய் இனத்தவர்கள் தவிர ஏனைய சிறுபான்மையினத்தவர்கள் பெருமளவிற்குப் பாதிப்படையக்கூடிய நிலைகள் ஏற்பட்டுவிடுகின்றது. மலேசியாவில் மலாய் இனத்தவர்களில் 55 வீதத்தினரும் சீனர்கள் 32 வீதத்தினரும் இந்தியர்கள் 8 வீதத்தினரும் வாழ்கின்றனர். இன விகிதாசார அடிப்படையில் மேற்படி நியமனங்களை வழங்கினால் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பில்லை. மாறாக விகிதாசார நிலைப் பேணப்படாமல் மலாய் இனத்தவர்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படுவதும் மேலும் அவர்களுக்கான சிறப்பு வாய்ப்புகள் வழங்கப்படுவதும் அடிப்படைப் பிரச்சினை உருவாவதற்கு காரணமாக அமைகின்றது.

கேள்வி : இங்கு ஒரு குறிப்பிட்ட இனத்தவர்களுக்கு சிறப்பு வாய்ப்புகள் வழங்கப்படுவதாக குறிப்பிட்டீர்கள். இவை பற்றியும் மலேசியாவில் பூமிபுத்ரா, பூமிபுத்ரா அல்லாதவர்கள் என இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளதாகவும் அறிகின்றோம் இவைகள் பற்றி சற்று விளக்க முடியுமா?

பதில் : 1960களில் மலேசியாவில் வாழும் சீன சமூகம் பொருளாதார வளம் மிகுந்த சமுதாயமாகவும் மற்ற இனங்கள் குறிப்பாக பெரும்பான்மை மலாய் இனத்தவர்கள் பொருளாதார வளம் குன்றியவர்களாகவும் இருந்தார்கள். மலேசியாவில் இத்தகைய பின்னணியில் 1967 மே 13ம் திகதி ஓர் இனக்கலவரம் தோன்றியது. இதையடுத்து மலாய் இனத்தவரின் பொருளாதார வளத்தினை அபிவிருத்தி செய்யும் நோக்கில் புதிய பொருளாதாரக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் கீழ் பூமிபுத்ரா, பூமிபுத்ரா அல்லாதோர் என இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டது. பூமிபுத்ரா எனும்போது மலாய் இனத்தவர்களும் கிழக்கு மலேசியாவில் வாழும் இனத்தவர்களுமாக 65 வீதத்தினராக இன்று காணப்படுகின்றனர். பூமிபுத்ரா அல்லாதோர் எனும்போது பொதுவாக சீன இனத்தவரும் இந்திய இனத்தவரும் உள்ளடங்குவர். இப்புதிய பொருளாதாரக் கொள்கையின் கீழ் 1970லிருந்து 1990 வரை 20 ஆண்டுகளுக்கு பூமிபுத்ராக்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டு நாட்டின் பொருளாதார வளத்தில் 30வீத இலக்கை மலாயர்கள் அடைய வேண்டும் என்பதே இத்திட்டத்தின் நோக்கமாக அமைந்திருந்தது. ஆனாலும் இத்திட்டம் இன்றும் தொடர்ந்தே வருகின்றது. தங்கள் கேள்விபடி எஸ்.பி.எம். பரீட்சை முடிவுகளையடுத்து சிறப்பு நிலை எனக் குறிப்பிடும்போது அதனை பின்வருமாறு தெளிவுபடுத்தலாம். எஸ்.பி.எம். பரீட்சையில் மிகச் சிறந்த தேர்ச்சியடைந்த பெரும்பாலான பூமிபுத்ரா மாணவர்களுக்கு புலமைப்பரிசில்கள் மூலம் வெளிநாட்டு பல்கலைக்கழங்களில் விரும்பிய துறையில் பயிலும் வாய்ப்பு ஏற்படுத்தித்தரப்படுகின்றது. அந்த வாய்ப்பினைப் பெறாத மற்ற பூமிபுத்ரா மாணவர்களுக்கு உள்நாட்டுப் பல்கலைக் கழகங்களில் மெட்ரிக்லேசன் எனப்படும் ஓராண்டு கல்வியினை மேற்கொண்டு அதன் பின் பல்கலைக்கழகத்தில் விரும்பிய துறையில் பயிலும் வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்பட்டிருக்கின்றது. வசதியுள்ள எனைய இன மாணவர்கள் தனியார் பல்கலைக்கழங்களிலோ அல்லது கல்லூரிகளிலோ பவுன்டேசன் எனும் ஓராண்டு கல்வியை மேற்கொண்டு விரும்பிய துறையில் பயில்கிறார்கள். மேற்படி இரு வழிகளிலும் வாய்ப்புக் கிடைக்காத மாணவர்கள் இரண்டாண்டுகளுக்கான எஸ்.டி.பி.எம். எனப்படும் உயர்தராதர சான்றிதழ் பரீட்சைக்குத் தோற்றுவர். இந்தப் பரீட்சையில் மிகச் சிறந்த முறையில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே பல்கலைக்கழத்தில் விரும்பிய துறையில் இணைந்து பயில முடியும்.

கேள்வி: இங்கு பல்கலைக்கழக துறை சார்ந்த கல்விக்காக மெட்ரிக்லேசன் பவுன்டேசன் அல்லது உயர்தராதர சான்றிதழ் பரீட்சை எனும் 3 பரீட்சைகளை குறிப்பிட்டீர்கள். இம்  மூன்று பரீட்சைகளும் ஒரே தராதரத்தில் உள்ளவையா?

பதில்: இல்லை என்பதே பெரும்பாலான புத்திஜீவிகளின் கருத்து. ஈராண்டுகளைக் கொண்ட எஸ்.டி.பி.எம் எனும் கல்விமுறை மிகவும் கடினமான ஒன்றாகும். ஆனால் மெட்ரிக்லேசன் தேர்வு முறை மிகவும் எளிமையானது. இரண்டு தேர்வு முறைகளும் வேறாகவே நடைபெறும். ஆனால், பல்கலைக்கழகத் துறை சார்ந்த விண்ணப்பத்திற்கு புள்ளிகளை ஒப்பிடும்போது இரண்டு பரீட்சைகளிலும் பெறப்பட்ட புள்ளிகளின் அடிப்படையிலேயே வாய்ப்பு வழங்கப்படும். இதனால் எளிமையான மெட்ரிக்லேசன் தேர்வினை செய்த பூமிபுத்ரா மாணவனுக்கு அதிகமான புள்ளிகளைப் பெற முடிவதனால் அம்மாணவன் மிக எளிதாக வைத்தியம், பொறியியல், சட்டம் போன்ற துறைகளை தேர்ந்தெடுத்துக் கொள்ளக்கூடிய வாய்ப்பு ஏற்படுகின்றது. இங்கு பல்கலைக்கழக நுழைவுக்கு ஒரே நுழைவுத் தேர்வினைக் கொள்ள வேண்டுமென்பதே மலேசியக் கல்விமான்களின் இன்றைய கோரிக்கையாகும்.

கேள்வி : இத்தேர்வு முறையில் பெற்றோர்களின் மனோகிலேசங்கள் ஏற்படுவதாக தெரிவித்திருந்தீர்கள். இதைப் பற்றி சற்று விளக்கிக் கூற முடியுமா?

பதில்: இத்தகைய மனக் கிலேசங்களுக்கு கூடுதலாக இந்தியப் பெற்றோரே உட்படுகின்றனர். தங்கள் பிள்ளைகள் அதியுயர் பெறுபேறுகளைப் பெற்றிருந்த போதிலும் புலமைப்பரிசில்களோ அல்லது மெட்ரிக்லேசன் பாடநெறிக்கான வாய்ப்புகளோ வழங்கப்படாது புறக்கணிக்கப்படுகிறார்கள். இதன் காரணமாகவே பெரும்பாலான இந்தியப் பெற்றோர் மனஉளைச்சல்கள் மற்றும் மனக்கிலேசங்களுக்கும் உட்படுகின்றனர். இதனை மேலும் தெளிவுபடுத்துவதாயின் பூமிபுத்ராக்கள் அவர்களுக்கான 'சிறப்பு' வாய்ப்புகளைப் பெற்று முன்னுரிமைப் பெற்றுவிடுவர். சீன மாணவர்கள் அவர்களிடம் காணப்படக்கூடிய பொருளாதார வளத்தைப் பயன்படுத்தி தனியார் பல்கலைக்கழங்களிலும் சர்வதேச பல்கலைக்கழங்களிலும் வாய்ப்புகளைப் பெற்றுக் கொள்வர். அதேநேரம், பொருளாதார வளம் குன்றிய பெரும்பாலான இந்திய வம்சாவழியினரால் எத்தகைய வாய்ப்புக்களையும் பெற்றுக் கொள்ளப்பட முடியாமல் பெரிதும் பாதிப்புக்குள்ளாகுவர். அத்துடன், தங்கள் பிள்ளைகளின் உயர்கல்விக்காக தங்களிடமுள்ள வாழ்நாள் சேமிப்பை செலவழித்தும் சொத்துக்களை விற்குமளவிற்கும் தள்ளப்படுகின்றார்கள். மிகச் சிறந்த தேர்ச்சி பெறாத சக மலாய் நண்பன் புலமைப்பரிசில் பெற்று உயர்கல்வியைத் தொடருவதை அவதானிக்கும் இம்மாணவன் பெரிதும் மானசீகமாகப் பாதிக்கப்பட்டு கல்வியில் ஒரு விரக்தி நிலையையும் அடைகின்றான்.

கேள்வி: கலாநிதி ஹரிகிருட்டிணன் அவர்களே! பல்கலைக்கழக அனுமதிக்கு மலேசியாவில் காணப்படும் முறையைப் போல இலங்கையில் இரு பரீட்சைகள் நடத்தப்படுவதில்லை. இலங்கையில் க.பொ.த.உயர்தரப் பரீட்சையில் கூடிய சித்தியைப் பெறக்கூடிய மாணவர்கள் இசர்ட் (Z) புள்ளியின் அடிப்படையிலேயே பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாவர். மலேசியாவில் காணப்படக்கூடிய மேற்படி தேர்வு முறையை இல்லாமல் செய்வதற்கான யாதாவது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளனவா?

பதில்: நான் அறிந்த வரை வேறு எந்தவொரு நாட்டுக் கல்விமுறையிலும் இத்தகைய முறைமை பேணப்படுவதில்லை. மலேசியாவில் காணப்படும் இத்தகைய கல்வி சமச்சீரற்ற தன்மையை இல்லாமல் செய்வதற்கான  வேண்டி பூமிபுத்ரா அல்லாதார் இயக்கங்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். இத்தகைய போராட்டங்களுள் 2007ம் ஆண்டு நவம்பர் 25 இல் இடம்பெற்ற இந்திய வம்சாவழியினரின் அணித்திரளலான ஹின்ட்ராப் பேரணி முக்கிய இடத்தைப் பெறுகின்றது. இந்தப் பேரணியின்போது சுமார் 2 இலட்சம் மக்கள் தலைநகர் கோலாலம்பூரில் திரண்டனர். மலேசிய வரலாற்றில் இப்போராட்டம் ஒரு முக்கிய மைல் கல்லாக அமையக்கூடிய நிலை உருவாகியுள்ளது. இப்பேரணியினரால் மலேசிய அரசாங்கத்திற்கு மலேசிய சமச்சீர் தன்மையை உருவாக்குவதற்கான பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருந்தன. இதே போன்று சீன சமூகத்தினரின் பல அமைப்புகளும் மலேசிய சமச்சீர் தன்மையை வேண்டி போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றன. மலேசிய அரசாங்கமும் மேற்படி நெருக்கடிகளினால் மேற்படி திட்டங்களை நோக்கி நகர்ந்துவருவது ஓரளவிற்கு அவதானிக்க முடிகின்றது.

கேள்வி: மலேசியாவில் பல்கலைக்கழக கட்டமைப்பு பற்றி சற்று கூற முடியுமா?

பதில் : மலேசியாவில் தற்போது 20 தேசிய பல்கலைக்கழங்கள் உள்ளன. இதுதவிர மேலும் ஏறக்குறைய 100 தனியார் கல்லூரிகள்/ பல்கலைக்கழங்கள் காணப்படுகின்றன. 04 சர்வதேச பல்கலைக்கழங்கள் தங்களது கிளைகளை மலேசியாவில் நிறுவியுள்ளன. அதில் ஒன்று தான் நான் கற்பித்துவரும் நோட்டிங்ஹாம் பல்கலைக்கழகம். மேற்குறிப்பிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களும் மலேசியாவின் உயர்கல்வி அமைச்சகத்தினால் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. ஆசியாவின் கல்வி மையமாக மலேசியாவை மாற்றுவதே  மலேசியாவின் தற்போதைய கொள்கையாகவும் உள்ளது.

கேள்வி: மலேசிய பல்கலைக்கழங்களில் மற்றும் பல்கலைக்கழகக் கல்லூரிகளில் கல்வித் தராதரம் எந்தடிப்படையில் அமைந்துள்ளது?

பதில்: மிகச் சிறப்பாக உள்ளதென்றே கருதுகின்றேன். ஒவ்வொரு பல்கலைக்கழகமும் தமக்கென்று ஒரு கல்வித்திட்டத்தை வகுத்துள்ளது. இதன் தராதரத்தை 2007 ஆண்டு  சட்டத்திருத்த மசோதாப்படி அமைக்கப்பட்ட மலேசிய கல்வி நிர்ணய நிறுவனம் Malaysian Qualifications Agency (MQA)  பராமரிக்கின்றது. மலேசியாவிலுள்ள தேசிய பல்கலைக்கழகங்கள் மலேசிய அரசாங்கத்தால் நேரடியாக நிருவகிக்கப்படுகின்றன. அங்குள்ள தனியார் பல்கலைக்கழகக் கல்லூரிகள் மற்றும் சர்வதேச பல்கலைக்கழங்கள் மாணவர்களின் தவணைக்கட்டணங்களைக்கொண்டு தனியார் நிறுவனங்களினால் பராமரிக்கப்படுகின்றன. இத்தகைய பல்கலைக்கழக அமைப்புகளுக்கு ஆய்வுப் பணிகளுக்கென அரசாங்க நிதி ஒதுக்கீடுகள் வழங்கப்படுகின்றன. சில தனியார் நிறுவனங்களும் ஆய்வுப் பணிகளுக்கான நிதி ஒதுக்கீடுகளை செய்து வருகின்றன.

கேள்வி: மலேசியாவில் வெளிநாட்டில் பிரபல்யம்பெற்ற பல்கலைக்கழகங்களில் கிளைகள் அமைக்கப்பட்டு செயல்படுகின்றன என அறிகின்றோம். இத்தகைய சர்வதேச பல்கலைக்கழகங்கள் பற்றி சற்று விளக்க முடியுமா?

பதில் : இதுவரை நான்கு பல்கலைக்கழங்கள் அவ்வாறு கிளை வளாகங்களை அமைத்துள்ளன. பிரித்தானியாவின் பிரபல பல்கலைக்கழகங்களில் ஒன்றான நோட்டிங்ஹாம் பல்கலைக்கழகமும் அவுஸ்திரேலியாவில் பிரபல்ய பல்கலைக்கழங்களான மோனாஸ், சுவின்பேர்ன் மற்றும் கேர்ட்டின் பல்கலைக்கழகங்களும் இப்போதைக்கு தங்கள் கிளைகளை மலேசியாவில் நிறுவியுள்ளன. மேலும் சில பல்கலைக்கழங்கள் அங்கு தங்களது கிளைகளை அமைக்க அனுமதி பெற்றுள்ளன.

கேள்வி: பேராசிரியர் அவர்களே! தாங்களும் இத்தகைய பலக்லைக்கழகங்களில் ஒன்றான நோட்டிங்ஹாம் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வருகின்றீர்கள். பிரித்தானியாவிலுள்ள நோட்டிங்ஹாம் பல்கலைக்கழகத்துக்கும் மலேசியாவில் அமைக்கப்பட்டுள்ள நோட்டிங்ஹாம் பல்கலைக்கழக வளாகத்திற்கும் இடையிலான ஒற்றுமை வேற்றுமைகள் பற்றியும், இப்பல்கலைக்கழகத்தின் மாணவர் சேர்ப்பு மற்றும் கல்வித் தரங்கள் பற்றியும் கற்கைநெறிகள் பற்றியும் விளக்கம் தர முடியுமா?

பதில்: 2000ஆம் ஆண்டில் பிரித்தானிய  நோட்டிங்ஹாம் பல்கலைக்கழக கிளையாக மலேசியா நோட்டிங்ஹாம் பல்கலைக்கழக வளாகம் அமைக்கப்பட்டது. ஆரம்பத்தில் சில நூறு மாணவர்களைக் கொண்டிருந்த இப்பல்கலைக்கழகம் தற்போது 4000 மாணவர்களை உள்வாங்கியுள்ளது. பிரித்தானிய  நோட்டிங்ஹாம் பல்கலைக்கழகத்தில் போதிக்கப்படும் அதே பாடத்திட்டங்களே இங்கும் போதிக்கப்பட்டுவருகின்றன. சித்தியடையும் மாணவர்களுக்கு வழங்கப்படும் பட்டமானது பிரித்தானிய  நோட்டிங்ஹாம் பல்கலைக்கழக பட்டத்திற்கு சமனானது. சர்வதேச ரீதியில் ஏற்புடையது. தற்போது இவ்வளாகத்தில் பிரதானமாக பொறியியல்துறை, வணிகவியல்துறை, கல்வியியல்துறை, மருந்தியல்துறை, உயிரியல்துறை போன்ற பாடநெறிகள் காணப்படுகின்றன. அத்துடன் பட்டப்பின் படிப்பு சார்ந்த துறைகளும் குறிப்பாக முதுமாணி, கலாநிதி போன்ற கற்கைநெறிகளும் இங்கு அமைந்துள்ளன. இப்பல்கலைக்கழகத்தில் மலேசியா மாணவர்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த, குறிப்பாக ஆசிய, ஆபிரிக்கா நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் இங்கு கற்கின்றனர். இம்மாணவர்களுக்கு தங்குமிட வசதிகள் உட்பட சகல வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. இப்பல்கலைக்கழகத்தில் பல நாடுகளைச் சேர்ந்த  திறமைவாய்ந்த பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் பணியாற்றிவருகின்றனர். பற்பல ஆய்வுப் பணிகளும் இப்பல்கலைக்கழகத்தில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பிரித்தானிய நோட்டிங்ஹாம் பல்கலைக்கழக நிர்வாகத்துறையினரின் நேரடி நிர்வாகத்தின் கீழ் இப்பல்கலைக்கழகம் செயல்பட்டுவருகின்றது.

கேள்வி : இத்தகைய சர்வதேச வளாகங்கள் மலேசியாவில் அமைக்கப்படுவதற்கான பிரதான காரணம் யாதென நீங்கள் கருதுகின்றீர்கள்?

பதில் : தற்போதைய சூழ்நிலையில் ஒரு மாணவனால் பிரித்தானியாச் சென்று உயர்கல்வியை கற்கும்போது ஏற்படும் செலவுகள் அதிகமானதாகும். மேலும், வீசாக்களைப் பெறுவதில் பல்வேறுபட்ட கடின வழிமுறைகளை பிரித்தானியா அரசு கடைபிடித்து வருவதினால் இப்பல்கலைக்கழங்களில் இலகுவாக அனுமதியைப் பெற்றுக்கொள்ள முடியாது. ஆனால்ää மலேசியாவில் இத்தகைய பிரச்சினைகள் மிகவும் குறைவாகவே உள்ளது. குறிப்பாக கல்வி கற்பதற்காக வரும் மாணவர்களுக்கு வீசா பிரச்சினைகள் பெருமளவு ஏற்படுவதில்லை. பிரித்தானியாவுடன் ஒப்பீட்டளவில் இங்கு வாழ்க்கைச் செலவு குறைவாகக் காணப்படுவதினால் கற்கை செலவுகளும் குறைவாகவே உள்ளது. அத்துடன், பல்லின மக்கள் வாழும் மலேசியாவில் பெரும்பாலான மக்கள் ஆங்கிலம் பேசக்கூடியவர்களாக இருப்பர். சர்வதேச மாணவர்களுக்கு மொழிப் பிரச்சினை ஒரு பிரச்சினையாக இங்கு அமைவதில்லை. அத்துடன்ää மலேசியா இடைவெப்ப வலயத்தில் அமைந்துள்ள நாடாகையால் காலநிலையில் பாரிய மாற்றங்களைக் கொண்டிருப்பதில்லை. இது போன்ற காரணஙகளைக் குறிப்பிடலாம்.

கேள்வி : இலங்கை மாணவர்கள் தற்போது மலேசியா சென்று பல துறைகளிலும் கல்வி கற்று வருகின்றனர். இலங்கை மாணவர்களுக்கு மலேசியாவில் கற்பதற்கான வாய்ப்புகள் எத்தகைய துறைகளில் காணப்படுகின்றன என்பதை சற்று விளக்க முடியுமா?

பதில் : நோட்டிங்ஹாம் பல்கலைக்கழகத்திலும் எனது மாணவர்களுள் இலங்கை மாணவர்களும் அடங்குவர். ஆண்டுதோறும் இலங்கை மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகின்றது. எங்களது நோட்டிங்ஹாம் பல்கலைக்கழகம் உட்பட மலேசியாவிலுள்ள மற்ற சர்வதேச பல்லைக்கழகங்களிலும் இம்மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக அறிகிறேன். குறிப்பாக நோட்டிங்ஹாம் பல்கலைக்கழகத்தில் பொறியியல் துறையில் அனைத்து கிளைகளிலும் அவர்கள் பயின்று வருகின்றார்கள். இது தவிர வணிகவியல் துறைகளிலும் பயின்று வருகின்றார்கள். மேலும்ää இலங்கை மாணவர்கள் விரும்பும் துறையில் கற்கும் வசதிகள் இங்குள்ள ஏனைய பல்கலைக்கழகங்களிலும் செய்துகொடுக்கப்பட்டுள்ளன.

கேள்வி : மலேசியா பல்கலைக்கழகங்களில் இலங்கை மாணவர்கள் கற்பதற்கு எத்தகைய கல்வித் தகைமை அடிப்படையாகக் கொள்ளப்படுகின்றது?

பதில் : இலங்கையில் க.பொ.த. சாதாரணதரம்ää உயர்தரம் மற்றும் அதற்கு இணையான ஏற்றுக்கொள்ளப்பட்ட சான்றிதழ் உள்ள மாணவர்களுக்கு இப்பல்கலைக்கழகங்களில் இணைந்து கற்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. அதேநேரம், க.பொ.த. சாதாரண தரம் சித்தியடைந்த மாணவர்கள் பல்கலைக்கழகங்களில் இணைந்து கற்பதாயின் முதலில் அப்பல்கலைக்கழகத்தில் பவுன்டேசன் எனும் ஓராண்டு கல்வியைக் கற்று தேர்ச்சியடைய வேண்டும். இப்பவுன்டேசன் கல்வி நிலையானது இலங்கையில் ஈராண்டுகள் பயிலும் க.பொ.த. உயர்தர கற்கை நெறிக்கு ஈடானதாகும். பவுண்டேசன் தேர்வின் தேர்ச்சிக்கேற்பவும் அல்லது இலங்கையில் க.பொ.த. உயர்தர தேர்வின் சித்தித் தராதரங்களுக்கேற்பவும் அவர்கள் எத்தகைய பாடநெறியினை தொடரலாம் என தீர்மானிக்கப்படுகின்றது. இங்கு எத்தகைய பாடநெறியைத் தொடர்ந்தாலும் ஆங்கில அறிவு பிரதானமாகக் கொள்ளப்படுகின்றது. சர்வதேச மாணவர்களுக்கு சகல விரிவுரைகளும் ஆங்கிலமொழி மூலமாகவே வழங்கப்படுகின்றன. இலங்கை மாணவர்களைப் பொறுத்த வரையில் ஆங்கில அறிவு பெரும் பிரச்சினையாக இருக்காது என்று கருதலாம்.

கேள்வி : மலேசியாவில் பட்டப்பின் படிப்பு சம்பந்தமான வாய்ப்புகள் எவ்வாறு உள்ளன?

பதில் : மலேசியா பல்கலைக்கழகங்களில் பட்டங்களைப் பெறும் மாணவர்களுக்கு தொடர்ந்து பட்டப்பின் படிப்பை மேற்கொள்ளக்கூடிய வாய்ப்புகள் அனைத்துத் துறைகளிலும் காணப்படுகின்றன. மிகச் சிறந்த முறையில் தேர்ச்சிபெறும் மாணவர்களுக்கு புலமைப்பரிசில் மூலமாகவும், பட்டப்பின் படிப்பை மேற்கொள்ளக்கூடிய வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இத்தகைய வாய்ப்புகளை இலங்கை மாணவர்கள் தொடர்ந்தும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதே எனது விருப்பமாகும்.

மிக்கநன்றி பேராசிரியர் ஹரிக்கிருட்டிணன் அவர்களே! மலேசியாக் கல்வி நிலை தொடர்பாக ஒரு தெளிவான விளக்கத்தினை இலங்கை மக்களுக்கு வழங்கியுள்ளீர்கள். இலங்கை மாணவர்கள் மலேசியாவில் கற்க விரும்புமிடத்து அவை குறித்த கற்கை நெறி விபரங்களை இணையத்தளங்களில் பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கும். இத்தகைய நேர்காணலில் கலந்துகொண்ட தங்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

நன்றி. வணக்கம்.

இப் பேட்டி இலங்கையில் நமது தூது பத்திரிகையில் செப்டெம்பர் 18. 2011, செப்டெம்பர் 25. 2011 திகதிகளில் பிரசுரமானது.