Monday 11 August 2014

எபோலா’ வைரஸ் காய்ச்சல் நோய் - புன்னியாமீன்


எபோலா’ என்ற வைரஸ் காய்ச்சல் நோய் தற்போது உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த நோய் ஆப்பிரிக்காவின் மேற்கு பகுதியில் உள்ள லைபீரியா, நைஜீரியா, சியாராலோன், கினியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து பரவி வருகிறது.

இந்த நோய்க்கு இதுவரை  ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். எபோலா காய்ச்சல் அறிகுறிகளுடன் ஆயிரக் கணக்கானவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதை கட்டுப்படுத்த மருந்து எதுவும் இல்லை. எனவே இது உலகப் பேரழிவு நோயாக உலக சுகாதார நிறுவனம் பிரகடனம் செய்துள்ளது. மேலும் அவசர கால பிரகடனமும் அறிவித்துள்ளது.

''எபோலா நோய் மேற்கு ஆப்பிரிக்காவில் மிக வேகமாகப் பரவிவருகிறது'' என்றும், ''ஆனால் அதனைக் கட்டுப்படுத்த எடுக்கப்படும் முயற்சிகள் மந்தகதியிலேயே நகர்கின்றன'' என்றும் உலக சுகாதார கழகத்தின் தலைமை இயக்குநர் மார்கரெட் சான் கூறியுள்ளார். எபோலா வைரஸ் தொற்று, கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தி வருகின்றது என்றும்  இந்நிலை நீடித்தால் மிக மோசமான பாதிப்புகள் உருவாகும் என்று அவர் எச்சரித்தார்.

மேலும் எபோலா தொற்று நோயை முறியடிக்க, பரந்துபட்ட அளவில் சோதனை மருந்துகள் பயன்படுத்தப்பட வேண்டும் என, அந்தத் தொற்றைக் கண்டுபிடித்தவரான பேராசிரியர் பீட்டர் பியாட் தெரிவித்துள்ளார். இந்தத் தொற்று நோய் மேற்கு ஆப்ரிகாவில் பரவி வருவதால், பெருமளவிலானவர்கள் உயிரிழந்துள்ளனர். சோதனை மருந்துகளை பரந்துபட்ட அளவில் பயன்படுத்தி பரிசோதிப்பதன் மூலம் உயிரிழப்புகளை தடுக்க வாய்ப்புகள் ஏற்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

எபோலா தொற்று நோயால் ஏற்பட்டு வரும் நெருக்கடிகள் அதிகரித்து வரும் வேளையில், அதை எப்படி சமாளிப்பது என்பது தொடர்பில், உலக சுகாதார நிறுவனம் அவசரக் கூட்டம் ஒன்றுக்கு அழைப்பு விடுத்துள்ளது. எபோலா வைரஸ் தொற்று காரணமாக உலக சுகாதார நிறுவனம் 'உலகளாவிய அவசர நிலையை' பிரகடனப்படுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

லைபீரியா,  சியாராலோன், கினியா மற்றும் நைஜீரியா ஆகிய நாடுகளில் இந்த வருடத்தின் இதுவரையிலான காலப்பகுதிக்குள் மாத்திரம் எபோலா தொற்றினால் ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில் சர்வதேச நாடுகள் இந்த வைரஸ் தொற்று மேலும் பரவாமல் கட்டுப்படுத்துவதற்குத் தேவையான முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் மார்க்ரட் சேன் தெரிவித்துள்ளார். இந்த வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களை தனிமைப்படுத்துவதன் மூலம் வைரஸ் பரவுதலை முற்றாகக் கட்டுப்படுத்த முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

எபோலா தொற்று தொடர்பான அவசர ஆய்வு கூட பரிசோதனையை மேற்கொண்ட லண்டன் சுகாதார மருத்துவ அமைப்பின் தலைவர் பேராசிரியர் டேவிட் ஹெய்மன் கருத்து தெரிவிக்கையில்- காற்று மூலம் இந்த தொற்று பரவுவதில்லை என்பதினை உறுதிப்படுத்தியுள்ளார்.

இதேவேளை மேற்கு ஆபிரிக்க நாடுகளில் அதி வேகமாக பரவிவரும் எபோலா வைரஸ் தற்போது ஏனைய நாடுகளையும் தாக்கும் அபாயம் ஏற்பட்டுள்ள நிலையில் சர்வதேசம் இது குறித்து விழிப்புடன் செயற்படுமாறு மார்க்ரட் சேன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஆபிரிக்க நாடுகளில் மிக வேகமாக பரவி வரும், கொடூர விளைவுகளை ஏற்படுத்தும் எபோலா வைரஸ் தாக்கத்தையடுத்து இலங்கையிலிருந்து எவரையும் இனிமேல் லைபீரியாவுக்கு வேலைவாய்ப்புகளுக்காக அனுப்புவதில்லை எனவும் தற்போது லைபீரியாவில் தங்கியுள்ள 200 இலங்கையர்களையும் அவர்களது உறவினர்கள் ஊடாக திருப்பி அழைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இலங்கை அரசாங்கம் அறித்துள்ளது.

எபோலா வைரஸ் நோயினால் பாதிக்கப்பட்ட நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு ஹஜ் விசா மற்றும் உம்ரா விசா வழங்குவதை சவூதி அரேபியா நிறுத்தியுள்ளது என்று அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்நிலையில் இந்நோயைப்பற்றி நாமும் சற்று தெரிந்து வைத்திருப்பது அவசியமாகும்

எபோலா வைரஸ் நோய்  (Ebola virus disease) (EVD) அல்லது எபோலா இரத்தப் போக்கு காய்ச்சல் (Ebola hemorrhagic fever) (EHF)  என்று இந் நோய்  அறியப்பட்டுள்ளது. இது ஓர்  உயிர் காவி நோயாகும். கடுமையான இரத்தப் போக்கு ஏற்பட்டு நோய்வாய்ப்பட்ட பத்து பேரில் சராசரியாக ஐந்து முதல் ஒன்பது பேர் உயிரிழக்கின்றனர்.

முதன் முதலாக இந் நோய் 1976ஆம் ஆண்டு ஆபிரிக்காவின் சையர் நாட்டின் எபோலா ஆற்றங்கரையில் கண்டறியப்பட்டதால் இதற்கு எபோலா வைரஸ் என்ற பெயர் ஏறபட்டது.

எபோலா காய்ச்சல் பாதித்தால் முதலில் வயிற்றுப் போக்கும், வாந்தியும் ஏற்படும். பிறகு ஏராளமாக இரத்தம் வெளியேறும். கண், காது, மூக்கு, வாய் மற்றும் மர்ம உறுப்புகளில் இருந்தும் ரத்தம் வெளியேறும். இதன் காரணமாக காய்ச்சல், உடல் வலி, தலைவலி, வயிற்று வலி, மூட்டு வலி, தொண்டை வலி ஏற்படும். உடல் முழுமையாக தளர்ந்து விடும்.

முதலில் பெரும்பாலானவர்கள் இந்த அறிகுறிகளை சாதாரண காய்ச்சல் என்று நினைத்து விட்டு விடுவதுண்டு. ரத்தம் அதிகமாக வெளியேறிய பிறகுதான் விபரீதத்தை உணர்வார்கள். இந்த காய்ச்சல் நீடிக்கும் பட்சத்தில் இரத்த அழுத்தம் குறையும். நாடித்துடிப்பும் பல மடங்கு உயரும்.

இது எபோலா வைரஸ்கள் உடல் முழுவதும் பரவி விட்டதை உறுதி செய்யும். அதன்பிறகு எபோலா காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்களால் எழுந்து உட்கார கூட முடியாது. படுத்த படுக்கையாகக் கிடந்து போய் சேர வேண்டியதுதான்.

தொடுதல், முத்தமிடுதல், கட்டித் தழுவுதல் ஆகியவற்றின் மூலம் நோய் பரவலாம். ரத்தம், உமிழ்நீர், சிறுநீர், வியர்வை, தண்ணீர் மற்றும் உயிரணுக்கள் மூலமும் இவ்வகை வைரஸ் பரவும்.

இந்த நோய் வைரஸினால் உண்டாவதால் இன்னும்மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆயினும் நோயாளிகளுக்கு நோயைத் தாங்க தகுந்த மருத்துவ ஆதரவு அளித்தால் உடலின் எதிர்ப்பாற்றலால் உயிர் பிழைக்கின்கும் வாய்புண்டு. எபோலா நோயாளிகளுக்கு வயிற்றுப்போக்குஇ வாந்தி மற்றும் குருதி இழப்பினால் நேர்ந்த நீர் இழப்பைச் கீராக்க அவை தொடர்ச்சியாக கொடுக்கப்பட்டு வர வேண்டும்.

அமெரிக்க ஆராய்ச்சி கூடங்களில் ஆய்வு செய்யப்பட்டு வரும் எபோலாவுக்கு எதிராக மாற்று மருந்தின் ஆராய்ச்சியில் ஆரம்பநிலை மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், எபோலாவால் பாதிக்கப்பட்டிருந்த அந்த இரு அமெரிக்கர்களுக்கும் சோதனை முயற்சியாக இந்த மருந்து அளிக்கப்பட்டு, அவர்கள் எபோலாவின் தாக்கத்தில் இருந்து விடுபட்டதாகவும் சில தினங்களுக்கு முன்னர் செய்திகள் வெளியாகின.

’ஸ்மேப்’ என பெயரிடப்பட்டுள்ள அந்த மருந்தினை தங்கள் நாட்டுக்கு அனுப்பி வைத்து எபோலாவுக்கு மேலும் பல உயிர்கள் பலியாவதை தடுத்து உதவிட வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவுக்கு நைஜீரிய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்த வேண்டுகோளை அமெரிக்க அதிபர் ஒபாமா நிராகரித்து விட்டதாக கூறப்படுகிறது.

நைஜீரியாவுக்கோ, மற்ற தென்னாப்பிரிக்க நாடுகளுக்கோ ஆராய்ச்சி நிலையில் இருக்கும் ஒரு மருந்தினை எபோலாவுக்கான மாற்று மருந்தாக தன்னால் வழங்க முடியாது என்று ஒபாமா கைவிரித்து விட்டதாக நைஜீரியா நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Saturday 9 August 2014

தமிழ் பாட நூல்களில் அருகிவரும் இஸ்லாமிய ஆக்கங்கள்

'எங்கள் தேசம்'  இணையத்தில் பிரசுரமான இவ்வாக்கம் முஸ்லிம் கல்விமான்களினதும், முஸ்லிம் அரசியல்வாதிகளினதும், புத்திஜீவிகளினதும், முஸ்லிம் ஊடகவியலாளர்களினதும் சிந்தனையைத்தூண்ட வேண்டும் என்ற நோக்கில் மறுபிரசுரம் செய்கின்றேன். 
-புன்னியாமீன்-


“இன்பத் தமிழ் எங்கள் மொழியாகும் இஸ்லாம் எங்கள் வழியாகும்” என்று வாழ்பவர்கள் தமிழ் மொழியைத் தாய் மொழியாகக் கொண்ட முஸ்லிம்கள். தமது குழந்தைகளையும் தமிழ் மொழிப் பாடசாலைகளிலேயே கல்வி பயில அனுப்புவார்கள். அன்றைய தமிழ்ப் பாடசாலைகளில் கற்பிக்கப்பட்ட தமிழ்ப் பாட நூல்களில் இஸ்லாமிய ஆக்கங்கள் பெரும்பான்மையாக இடம்பெறவில்லை.

1949 முதல் 1953 வரை பாடசாலைகளில் கற்பிக்கப்பட்ட தமிழ் நூல்களில் ஓன்று “மணிவாசகம்”. இதில் ஏழாம் புத்தகம் ஒன்றில் ஒரு பாடத்தில் கூட இஸ்லாம் சம்பந்தமான ஆக்கம் எதுவும் இடம்பெற்றிருக்கவில்லை.

1953இல் பாடசாலைகளில் கற்பிக்கப்பட்ட தமிழ் நூல்களில் ஒன்று “உமாவாசகம்” இதில் எட்டாம் புத்தகத்தில் இஸ்லாமிய ஆக்கங்கள் எதுவுமே இல்லை.

1954ல் பாடசாலைகளில் கற்பிக்கப்பட்ட தமிழ் நூல்களில் ஒன்று “உமாவாசகம்“ நான்காம் புத்தகம் இதிலுள்ள 25 பாடங்களில் 7ஆம் பாடம் “முகம்மது நபி” என்பதாகும், இதே காலப்பகுதியில் கற்பிக்கப்பட்ட நூல்களில் ஒன்றுதான் “பாலபோதினி” ஏழாம் புத்தகம், இதில்கூட இஸ்லாமிய கருத்துக்கள் அடங்கிய ஆக்கங்கள் இடம்பெறவில்லை.

இந்த மோசமான நிலையை அவதானித்த சேர் ராசிக் பரீத் (பா.உ) அவர்கள், 1955ஆம் ஆண்டளவில் முஸ்லிம் மாணவர்களுக்கென இஸ்லாமியக் கருத்துக்களடங்கிய ஆக்கங்கள் பாடப் புத்தகங்களில் இடம்பெற வேண்டும் என்பதை வற்புறுத்தியதோடு அதற்கான முன்னெடுப்புகளையும் மேற்கொண்டார்.

இதன் விளைவாக, “முஸ்லிம் பாலர் வாசகம்”  என்ற பாடப்புத்தகம், காலஞ்சென்ற ஏ.எல்.எம். இஸ்மாயீல், எஸ்.பி. சாமிநாதன் ஆகியோரால் உருவாக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 1962 காலப்பகுதியில் முஸ்லிம் பாடசாலைகளில் கற்கும் முஸ்லிம் மாணவர்களுக்கென “தமிழ் இலக்கியம் ஆபாடத்திட்டம்” என்ற பகுதி பாடத்திட்டத்தில் இடம்பெற்றது. இதற்கு முழு மூச்சாக உழைத்தவர், அன்றைய கல்வி, ஒலிபரப்புத்துறை அமைச்சராகப் பணிபுரிந்த மர்ஹூம் கலாநிதி பதியுதீன் மஹ்மூத் அவர்கள். இவரது முயற்சியால், முஸ்லிம் பாடசாலைகளில் க.பொ.த. (சா.த) மாணவர்களுக்கு முஹிதீன் புராணம், சீறாப் புராணம், புதுகுஷ்ஷாம், ஆசாரக்கோவை (அப்துல் மஜீத் புலவர்) என்பவை போதிக்கப்பட்டன.

1967 டிசம்பரிலும் அதற்குப் பின்னரும் முஸ்லிம் மாணவர்களுக்காக “ஆ“ பாடத்திட்டத்தில் இலக்கியத் தொகுப்பும் “உரைநடைத் தொகுப்பும்” என்ற நூல் அமுலுக்கு வந்தது. பின்னர் 1985இல் முஸ்லிம் மாணவர்களுக்காக அமுல்படுத்தப்பட்ட “ஆ” பாடத்திட்டம் நிறுத்தப்பட்டது. அத்தோடு, முஸ்லிம் மாணவர்களுக்காக இஸ்லாமிய கருத்துக்களடங்கிய ஆக்கங்கள் தமிழ் மொழிப் பாடங்களில் அருகி வந்த வரலாற்றைப் பின்வரும் அட்டவணை மூலம் தெரிந்து கொள்ளலாம்.
*
ஆண்டு 1985    
புத்தகப் பெயர் ஆண்டு 7  
பாடங்களின்எண்ணிக்கை  28  
இஸ்லாமிய கருத்தாக்கம் 02
*
ஆண்டு 2000  
புத்தகப் பெயர் ஆண்டு 7  
பாடங்களின்எண்ணிக்கை  24  
இஸ்லாமிய கருத்தாக்கம் 02
 *    
ஆண்டு 2004  
புத்தகப் பெயர் ஆண்டு 7  
பாடங்களின்எண்ணிக்கை  20  
இஸ்லாமிய கருத்தாக்கம் 01
*
ஆண்டு 1999  
புத்தகப் பெயர் ஆண்டு 8  
பாடங்களின்எண்ணிக்கை  22  
இஸ்லாமிய கருத்தாக்கம் 01
*
ஆண்டு - 2004  
புத்தகப் பெயர் ஆண்டு - 8
பாடங்களின்எண்ணிக்கை  - 18  
இஸ்லாமிய கருத்தாக்கம் - 00
*
ஆண்டு - 2005  
புத்தகப் பெயர் ஆண்டு - 8
பாடங்களின்எண்ணிக்கை  - 20  
இஸ்லாமிய கருத்தாக்கம் - 01
 *
ஆண்டு - 2009  
புத்தகப் பெயர் ஆண்டு - 8
பாடங்களின்எண்ணிக்கை  - 18  
இஸ்லாமிய கருத்தாக்கம் - 00
*
ஆண்டு - 1986  
புத்தகப் பெயர் ஆண்டு - 9
பாடங்களின்எண்ணிக்கை  - 09  
இஸ்லாமிய கருத்தாக்கம் - 00
*
ஆண்டு - 1998  
புத்தகப் பெயர் ஆண்டு - 9
பாடங்களின்எண்ணிக்கை  - 19  
இஸ்லாமிய கருத்தாக்கம் - 03
*
ஆண்டு - 2004  
புத்தகப் பெயர் ஆண்டு - 9
பாடங்களின்எண்ணிக்கை  - 16  
இஸ்லாமிய கருத்தாக்கம் - 01
*
ஆண்டு - 2005  
புத்தகப் பெயர் ஆண்டு - 9
பாடங்களின்எண்ணிக்கை  - 26  
இஸ்லாமிய கருத்தாக்கம் - 03
*
ஆண்டு - 1986  
புத்தகப் பெயர் ஆண்டு - 10
பாடங்களின்எண்ணிக்கை  - 09  
இஸ்லாமிய கருத்தாக்கம் - 00
*
ஆண்டு - 1999  
புத்தகப் பெயர் ஆண்டு - 10
பாடங்களின்எண்ணிக்கை  - 12  
இஸ்லாமிய கருத்தாக்கம் - 02
*
ஆண்டு - 1999  
தமிழ் இலக்கியத் தொகுப்பு 10-11  
பாடங்களின்எண்ணிக்கை  - 18  
இஸ்லாமிய கருத்தாக்கம் - 00
*
ஆண்டு - 1986  
தமிழ் இலக்கியம்  11    
பாடங்களின்எண்ணிக்கை  - 17  
இஸ்லாமிய கருத்தாக்கம் - 07
*
ஆண்டு - 1987  
தமிழ் இலக்கியம்  11    
பாடங்களின்எண்ணிக்கை  - 09
இஸ்லாமிய கருத்தாக்கம் - 01
*
ஆண்டு - 2000  
தமிழ் இலக்கியம்  11    
பாடங்களின்எண்ணிக்கை  - 10  
இஸ்லாமிய கருத்தாக்கம் - 01
*
ஆண்டு - 2004  
தமிழ் இலக்கியம்  11    
பாடங்களின்எண்ணிக்கை  - 15  
இஸ்லாமிய கருத்தாக்கம் - 01
*
ஆண்டு - 2007  
தமிழ் இலக்கியம்  10    
பாடங்களின்எண்ணிக்கை  - 12  
இஸ்லாமிய கருத்தாக்கம் - 00
*
ஆண்டு - 2007
தமிழ் இலக்கியத் தொகுப்பு  10-11    
பாடங்களின்எண்ணிக்கை  - 18  
இஸ்லாமிய கருத்தாக்கம் - 00
*
ஆண்டு - 2004
தமிழ் இலக்கிய நயம்      
பாடங்களின்எண்ணிக்கை  - 40  
இஸ்லாமிய கருத்தாக்கம் - 01

இந்த அட்டவணையை அவதானித்தால் தமிழ் மொழி மூலம் முஸ்லிம் பாடசாலைகளில் கற்கும் முஸ்லிம் மாணவர்களின் இஸ்லாமியக் கருத்துக்களடங்கிய பாடங்கள் எந்த அளவு புறக்கணிக்கப்பட்டு வந்துள்ளன என்பது நன்கு விளங்கும். சம்பந்தப்பட்டவர்கள் இதில் கவனம் செலுத்தாதது வியப்புக்குரியதே.

1986இல் பேராசிரியர் மர்ஹூம் ம.மு. உவைஸ் அவர்களும் அ.மு. அஜ்மல்கான் அவர்களும் சேர்ந்து எழுதிய “இஸ்லாமியத் தமிழ் இலக்கிய வரலாறு” பாகம் 1இல் எழுதியுள்ள முன்னுரையில் இஸ்லாமிய இலக்கிய நூல்கள் இரண்டாயிரத்துக்கும் அதிகமானவை என்று குறிப்பிட்டுள்ளனர். இவ்விதமிருந்தும் இலங்கைப் பாடநூல் வெளியீட்டுத் திணைக்களம் இஸ்லாமிய இலக்கிய ஆக்கங்களை ஏன் இருட்டடிப்புச் செய்தது என்பது விளங்கவில்லை.

எனவே, இதன் பின்பாவது தமிழ் மூலம் பாண்டித்தியம் பெற்ற முஸ்லிம் அறிஞர் பெருமக்கள் இதுவிடயமாகக் கவனமெடுத்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

- எம்.ஐ.எம். ஹாலித் (ஓய்வு பெற்ற ஆசிரியர்) -
நன்றி:  எங்கள் தேசம் Wednesday, 06 August 2014