Sunday, 29 June 2014

சர்க்கரை நோயாளிகள் நோன்பு நோற்கலாமா? !



ரமலான் நோன்பு என்பது ஆரோக்கியமான ஒவ்வொரு முஸ்லிம்கள் மீதும் கட்டாயக் கடமையாகும். ரமலான் மாதங்களில் நோயுற்றவர்கள், அந்த நாளில் நோன்பு வைப்பதை தவிர்த்துவிட்டு, ரமலான் அல்லாத மற்ற நாட்களில் அதற்கு பகரமாக நோன்பு வைக்க வேண்டும்.


இந்த நிபந்தனையானது சாதாரணமான நோய்களுக்கும் பொருந்தும். ஆனால் நிரந்தரமான, கட்டுப்படுத்தி மட்டும் வைக்கப்படும் நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள், குறிப்பாக சர்க்கரை நோயாளிகள் எப்படி நோன்பை எதிர் கொள்வது?


இது சம்பந்தமாக சர்வதேச அளவில் நடந்த மருத்துவ மாநாடுகள் சில விதிமுறைகளை வகுத்துள்ளது. பொத்தாம் பொதுவாக சர்க்கரை நோயாளிகள் நோன்பு நோற்கலாம் என்றோ அல்லது கூடாது என்றோ கூறி விட முடியாது. சில நோயாளிகளின் சில தன்மைகளை வைத்தே தீர்மானிக்க முடியும்.


கீழ்க்கண்ட சர்க்கரை நோயாளிகள் கட்டாயம் நோன்பு நோற்கக்கூடாது

இன்சுலின் மூலம் மட்டுமே கட்டுக்குள் வைக்கப்படும், முதலாம் வைக் (type1) சர்க்கரை நோயாளிகளும் இதுபோன்று இன்சுலின் மூலம் மட்டுமே கட்டுக்குள் வைக்கப்படும் எந்த வகை சர்க்கரை நோயாளிகளாக இருந்தாலும் இவர்கள் நோன்பைத் தவிர்க்க வேண்டும்.


சர்க்கரை நோயால், சிறுநீரகம் மற்றும் இதயம் பாதிக்கப்பட்டு செயலிழந்தவர்கள் ஆகியோரும் கட்டாயம் நோன்பு நோற்கக்கூடாது.


ரமலானுக்கு முந்திய மூன்று மாதங்களில் தாழ்நிலை சர்க்கரையால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் தாழ்நிலை சர்க்கரையை உணர முடியாமல் இரத்த சோதனை மூலம் மட்டுமே கண்டறியப்படும் நோயாளிகள், மிக மோசமான கட்டுபாடற்ற தன்மையில் உள்ள சர்க்கரை நோயாளிகள், முந்திய மூன்று மாதங்களில் சர்க்கரை நோயின் பக்கவிளைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள் ஆகியோரும் கட்டாயம் நோன்பு நோற்கக்கூடாது.


சர்க்கரையுடன், மற்ற கடுமையான நோய் கண்டவர்கள், உடலுழைப்பு செய்யும் சர்க்கரை நோயாளிகள், கருவுற்ற சர்க்கரை நோயாளிகளின் அல்லது கருவினால் உண்டான சர்க்கரை நோய் உள்ள கர்ப்பிணிகள், டயாலிசிஸ் தொடரும் சர்க்கரை நோயாளிகள் இவர்களும் நோன்பு நோற்பதை அறவே தவிர்க்க வேண்டும்.


இரத்த சுகர் 180ல் இருந்து 300 வரை உள்ளவர்கள், மூன்று மாத சர்க்கரை அளவானது HbA1C 10 என்று உள்ளவர்கள் சர்க்கரையால் கண் விழித்திரை பாதிக்கப்பட்டவர்கள், சர்க்கரையால் மூளை இரத்த நாளங்கள் பாதிக்கப்பட்டவர்கள், யாரின் உதவியும் இன்றி தனியாக வாழும் சர்க்கரை நோயாளிகள் மற்றும் உடல் நலம் பாதிக்கப்பட்ட வயதான சர்க்கரை நோயாளிகள் ஆகியோரும் நோன்பை தவிர்ப்பது நல்லது.


மேலும் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டு, அதற்காக எடுக்கப்படும் மருந்துகளால் புலனுணர்வு (cognitive function) பாதிக்கப்பட்ட சர்க்கரை நோயாளிகளும் நோன்பைத் தவிர்க்க வேண்டும்.


மேற்கணடவர்கள் நோன்பு நோற்பதால் உடனடியாகவோ அல்லது பின்னரோ பாதிக்கப்படலாம். அல்லாஹ் எந்த ஆன்மாவையும் அதன் சக்திக்கு மீறி சோதிக்க மாட்டான் என்ற அடிப்படையிலும் இவர்கள் நோன்பு வைப்பதை தவிர்க்க வேண்டும்.


உணவு கட்டுப்பாடு அல்லது மாத்திரைகள் மூலம் நன்றாகக் கட்டுக்குள் வைக்கப்பட்ட சர்க்கரை நோயாளிகள் மருத்துவரின் ஆலோசனையுடன், தகுந்த முன்னெச்சரிக்கையுடன் நோன்பு நோற்க வேண்டும்.


தாழ்நிலை சர்க்கரை ஏற்படுவதாக அறிந்தால் உடனே நோன்பை முறித்து, சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.


சர்க்கரை நோயாளிகள் (நோன்பு நோற்றால்) கவனிக்க வேண்டியவை.
சர்க்கரையின் சிக்கல்களான தாழ்நிலை சர்க்கரை, அதிக உயர்நிலை சர்க்கரை, தண்ணீர் சத்து குறைந்து போதல், போன்ற பலவற்றை ரமலானுக்கு ஒரு சில மாதங்களுக்கு முன்பே மருத்துவரை கலந்து ஆலோசித்து அறிந்து, சர்க்கரை அளவை தாங்களாகவே வீட்டில் வைத்தே பரிசோதித்து, அவசர சிகிச்சைக்குத் தயாராக வேண்டும்.


சிறுநீர் பரிசோதனை, ஊட்டச்சத்து நிபுணர் ஆலோசனையுடன் திட்டமிட்ட உணவு முறை, மாவுச்சத்து குறைவாக உள்ள கொழுப்பற்ற உணவை எடுத்தல், அதிக நார்சத்துள்ள பழங்கள், காய்கறிகள் ஆகியவற்றையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். மருத்துவரின் அறிவுரை மீறி நோன்பு நோற்கக் கூடாது.


ரமலான் மாத உணவு முறை


சஹர் உணவில் இனிப்பான உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. பழங்கள், எண்ணெய் இல்லாத காய்கறி சாலட், அவரை வகைகள், பருப்பு தயிர் எனப்படும் யோகார்ட், முழு தானியங்களால் செய்யப்பட்ட உணவுகள், அவிக்கப்பட்ட காய்கறி போன்றவை அதிகம் எடுத்துக் கொள்ளலாம். அசைவ உணவுகளை, பொரிக்காமல், கிரில் மூலமாகவோ சமைத்தோ அல்லது அவித்தோ (steam cooked) சாப்பிடலாம்.


சஹர் உணவை, எவ்வளவு முடியுமோ அவ்வளவு தாமத்திப்பது நல்லது.


இப்தார் உணவை அனுமதிக்கப்பட்ட நேரம் வந்தவுடன் சற்றும் தாமதிக்காமல் உண்ண வேண்டும்.


இப்தாரிலும் அதற்குப் பிறகும் சர்க்கரை இல்லாத பானம், பழச்சாறுகள் மற்றும் தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும். எண்ணெய் மிகுதியாக உள்ள உணவுகளைத் தவிர்க்க வேண்டும். அதிகம் நோன்புக் கஞ்சி குடிப்பதையும் தவிர்க்க வேண்டும்.


மாத்திரை எடுக்க சில வழிமுறைகள்


ஒரு வேலை மட்டும் மாத்திரை அல்லது இன்சுலின் ஊசி போடுபவர்கள், அதை இப்தார் நேரத்தில் போடுவது போல் மாற்றி கொள்ளவேண்டும். இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வேலைகளில் மாத்திரை அல்லது இன்சுலின் போடுபவர்கள், மருத்துவரின் ஆலோசனையோடு மூன்றில் இரண்டு பாகம் மருந்துகளை இப்தாரின் போதும், மற்ற ஒரு பாகம் மருந்துகளை மற்ற வேலைகளிலும் பிரித்துப் போடலாம்.


உடற் பயிற்சி 


சர்க்கரை நோய்க்கு உடற் பயிற்சியும் ஒரு சிகிச்சை முறை. எனவே இரவு நேரங்களில் மிதமான உடற்பயிற்சி செய்யலாம். மிகக் கடுமையான உடற்பயிற்சி செய்யலாம். மிகக் கடுமையான உடற்பயிற்சி செய்வதைக் கண்டிப்பாக நோன்பு பிடித்து இருக்கும்போது தவிர்க்க வேண்டும். இரவுத் தொழுகைகளில் பங்கேற்கலாம்.


முடிவுரை:


இரத்தத்தில் சர்க்கரை அளவு பார்ப்பதால் நோன்பு முறியாது என்பதால் நோன்பாளிகள் தங்கள் சர்க்கரை அளவை சோதித்துக் கொள்ள வேண்டும். இரத்த சர்க்கரை அளவு குறைந்தாலோ அல்லது தாழ்நிலை சர்க்கரையின் அறிகுறி தென்பட்டாலோ (படபடப்பு, வியர்த்து ஊத்துதல், இதயம் விரைவாக துடிப்பது போல் உணர்வு, கைகால் நடுக்கம் போன்றவை) உடனே நோன்பை முறித்துவிட்டு, சர்க்கரையையோ அல்லது இனிப்பு உள்ள பொருட்களையோ அல்லது இனிப்பு பானங்களையோ அவசரத்திற்கு உண்டு, சர்க்கரை மேலும் குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.


 நன்றி  :டாக்டர் த. முஹம்மது கிஸார். 
நன்றி    :உணர்வு ஜூன் 06 - 12, 2014 பதிப்பு.

No comments:

Post a Comment