Tuesday, 30 December 2014

ஜனாதிபதித் தேர்தலில் தேர்தலில் வாக்களிப்பது எப்படி? - புன்னியாமீன்

ஜனாதிபதித் தேர்தலில் வழங்கப்படும் வாக்குச் சீட்டில் அபேட்சகர்களின் பெயர்கள் சிங்கள அகர வரிசைக்கிணங்க மும்மொழிகளிலும் அச்சிடப்பட்டிருக்கும். அபேட்சகர்களின் பெயருடன் கட்சியின் சின்னம் அல்லது அபேட்சகருக்கு வழங்கப்பட்ட சின்னம் இரண்டாம் கட்டத்தில் அச்சிடப்பட்டிருக்கும். 3ம் கட்டத்தில் வாக்களிப்பதற்கான இடம் ஒதுக்கப்பட்டிருக்கும். வாக்களிக்கும் போது ஏனைய தேர்தல்களைப் போல “புள்ளடி” ( X ) யிடத் தேவையில்லை. போட்டியிடும் வேட்பாளர்களுக்கு வாக்காளரின் விருப்பத்திற்கமைய 1ம்,  2ம்,  3ம்,  4ம்….. விருப்பங்களைப் பதியலாம். 



இலங்கைத் தேர்தல் சட்டத்தின் பிரகாரம் ஜனாதிபதித் தேர்தலில் 2 வேட்பாளர்கள் மாத்திரம் போட்டியிடும் சந்தர்ப்பத்தில் தமது விருப்பத்தை ஒரு வேட்பாளருக்கும், 3 வேட்பாளர்கள் போட்டியிடின் 1ம்,  2ம் விருப்பங்களையும்,  மூவருக்கு மேல் போட்டியிடின் 3ம்,  4ம் விருப்பங்களையும் வழங்குமாறு வாக்காளர் கேட்கப்படுவர். வாக்களிக்கும் போது ஒரு வேட்பாளருக்கு மாத்திரம் புள்ளடி இட்டால் அந்தப் புள்ளடி உரிய வேட்பாளருக்கான விருப்பத் தெரிவாகக் கொள்ளப்படும். மாறாக ஒரே வாக்குப் பத்திரத்தில் ஒன்றுக்கு மேற்பட்டோருக்கு புள்ளடி இடப்பட்டிருப்பின் அந்த வாக்குப் பத்திரம் நிராகரிக்கப்படும்.

ஜனாதிபதியைத் தேர்ந்தெடுத்தல்.

இலங்கைத் தேர்தல் சட்டத்தின் பிரகாரம் செல்லுபடியான மொத்த வாக்குகளில் 50 சதவீதத்துக்கு மேல் பெற்றவர் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார் என தேர்தல் ஆணையாளர் அறிவிப்பார்.

வேட்பாளர்கள் 3 அல்லது 3க்கு மேல் போட்டியிடும் சந்தர்ப்பத்தில் 50 சதவீத வாக்குகளை எவரும் பெறாத நிலை ஏற்படின் ஆகக் கூடுதலான வாக்குகளைப் பெற்ற இரண்டு வேட்பாளர்கள் தவிர ஏனைய வேட்பாளர் (அல்லது வேட்பாளர்கள்) போட்டியிலிருந்து நீக்கப்படுவர்.

இவ்வாறு நீக்கப்பட்ட போட்டியாளர்கள் பெற்ற வாக்குகளில் இருந்து 2ம் விருப்பத் தெரிவாக போட்டியில் நிற்கும் வேட்பாளருக்குரிய வாக்குகள் எண்ணப்பட்டு பதியப்படும். இக்கணிப்பீட்டின்படி பின்பும் 50 சதவீதம் பெறாவிடின் 3ம்,  (4ம்) விருப்ப வாக்கு கணிக்கப்படும். இறுதியில் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றவர் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்படுவார்.

No comments:

Post a Comment