Tuesday, 3 November 2015

வாழ்க்கையில் மறக்க முடியாத - மயிரிழையில் உயிர் தப்பிய பயங்கரமான அனுபவம் 
1989ம் ஆண்டு - கண்டி மாவட்டத்தில் உள்ள வாரியகலை தமிழ் வித்தியாலயத்தில் நான் கற்பித்துக் கொண்டிருந்தேன். இலங்கையில் தென் பகுதியில் ஜே.வி.பி வன்முறைகளை அடக்குவதற்கு அரசு தீவிரமாக செயற்பட்டுக் கொண்டிருந்த காலகட்டம் அது.
பாடசாலைக்குச் செல்லும் வழியில் பேராதனைப் பல்கலைக்கழக வளைவு வட்டத்தில் முண்டம் இல்லாத தலைகள் வரிசையாக அடுக்கப்பட்டிருக்கும். வாரியகலையில் இறங்கினால் பாடசாலை சந்தியில் சில சடலங்கள்இ டயர்போட்டு எரிக்கப்படும் சடலங்கள்இ ஆற்றில் மிதந்து வரும் சடலங்கள் .... இவைகளைப் பார்த்துப் பார்த்து மனசு இசைவாக்கப்பட்டுவிட்டது.
அரசாங்கத்தால் இக்கால கட்டத்தில் Prra எனும் படைப்பிரிவு வன்முறைகளை அடக்குவதற்குப் பயன்படுத்தப்பட்டிருந்தது.
1989 மார்ச் மாதம் -
பாடசாலை அண்மையில் வரும் வழியில் பல சடலங்கள் - மாணவர்கள் எவரும் பாடசாலைக்கு வரவில்லை.
அந்தப்பிரதேசமே அதிர்ச்சியில் ஆழ்ந்திருந்தது.
9 மணிக்குப் போல பாடசாலையை மூடிவிட்டு தெல்தோட்டையில் இருந்து கண்டிநோக்கி வந்த பஸ்ஸில் ஏறிக்கொண்டேன். பஸ்ஸிலும் ஏழெட்டுப் பயணிகள் மாத்திரமே இருந்தார்கள். ஹிந்தகலை எனும் இடத்தில் பொலிஸார் நான் வந்த பஸ்ஸை இடைமறித்து எம்மை இறங்கச் சொல்லி வரிசையாக நிறுத்தி எம்மை பரிசோதனை செய்தனர்.
கெட்ட காலம் முதுமாணிப் பட்டப்படிப்புக்கான பல்கலைக்கழக அடையாள அட்டையை அவர்கள் கண்டு கொண்டார்கள். பல்கலைக்கழக மாணவர்கள் என்றால் பொலிசுக்கு அக்காலத்தில் அலர்ஜிக். போதாக் குறைக்கு என் அடையாள அட்டை அரசியல் விஞ்ஞான முதுமாணிப் பட்டப்படிப்புக்கானது.
பஸ்ஸில் வந்த ஏனைய பயணிகளை அனுப்பி விட்டு என்னை மட்டும் நிறுத்திக்கொண்டார்கள். நிறுத்திக்கொண்டிருந்த நேரத்தில் அவர்கள் கதைத்த கதைகள்.... என்னைப் பற்றிய நம்பிக்கையை இழக்க வைத்துவிட்டது. இரத்தம் உரைந்து விட்டதைப் போல ஓர் உணர்வு.
அந்த நேரத்தை இப்போது நினைத்தாலும் உள்ளம் நடுங்குகின்றது.....
நம்பிக்கையிழந்த நிலையில் இருக்கையில் கனவிலும் எதிர்பாராத ஒரு நிகழ்வு இடம் பெற்றது.
அவ்வழியே வந்த மற்றுமொரு பொலிஸ் ஜிப் வண்டி எம் அருகே நிறுத்தப்பட்டது. அந்த ஜிப் வண்டியிலிருந்து என்னுடைய சாச்சா (சித்தப்பா) வாப்பாவின் உடன் பிறந்த தம்பி இறங்கி வந்தார். சாச்சா கண்டி பொலிஸில் அதிகாரியாகப் பணியாற்றிக் கொண்டிருந்தார். அவரைக் கண்டதும் எனக்கு என்னுயிர் மீண்டது போல ஓர் உணர்வு.
சாச்சா நிலைகளை விசாரித்து என்னைத் தடுத்து வைத்திருந்த அதிகாரியிடம் நீண்டநேரம் கதைத்து என்னை அவர் வந்த ஜீப் வண்டியிலே கண்டிக்கு அழைத்து வந்தார்.
அச்சமயம் சாச்சா வந்திரா விட்டால்...
இப்போது நினைத்தாலும் புல்லரிக்கின்றது.
மயிரிழையில் இறைவன் என்னைக் காப்பாற்றிய இரண்டாவது சந்தர்ப்பம் இது வாகும்.

No comments:

Post a Comment