இலங்கையில் மத்திய மலைநாட்டில் தலைநகர் கண்டி மாநகருக்கு அண்மையில் அமைந்துள்ள கிராமமொன்றில் பிறந்து வாழ்ந்து வரும் கலாபூசணம் புன்னியாமீன் அவர்கள் தமிழ்மொழி மூலமாக இதுவரை 170க்கும் மேற்பட்ட நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். 1960ம் ஆண்டு நவம்பர் 11ம் திகதி பீர்மொஹம்மட், சைதா உம்மா தம்பதியினரின் புதல்வராகப் பிறந்த இவர் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைமானிப் பட்டம் பெற்றவர். மேலும், ஊடகத்துறையில் சிறப்புப் பட்டம் பெற்றவர். கல்லூரி ஆசிரியராக தன் பணியை ஆரம்பித்து, கல்லூரி முதல்வராகவும், பின்பு மத்திய மாகாண கல்வி அமைச்சின் இணைப்புச் செயலாளராகவும், மத்திய மாகாண கலாசார அமைச்சின் உதவிப் பணிப்பாளராகவும் பணியாற்றி 45 வயதிலேயே ஓய்வுபெற்ற இவர், தற்போது முழுநேர ஊடகவியலாளராகவும், எழுத்தாளராகவும், சிந்தனைவட்ட வெளியீட்டகத்தின் முகாமைத்துவப் பணிப்பாளராகவும் பணியாற்றி வருகின்றார்.
1970களில் சிறுகதை மூலம் இலக்கியத்தில் பாதம் பதித்த இவரின் முதலாவது நூல் 1979ம் ஆண்டில் “தேவைகள்” எனும் தலைப்பில் வெளிவந்தது. அன்றிலிருந்து இதுவரை சிறுகதை, நாவல், கவிதை, பல்கலைக்கழக மாணவர்களுக்கான அரசறிவியல் நூல்கள், தரம் 05 புலமைப்பரிசில் மாணவர்களுக்கான வழிகாட்டி நூல்கள், க.பொ.த.சாதாரண தரம்; மற்றும் உயர்தர மாணவர்களுக்கான வழிகாட்டி நூல்கள், ஆய்வு நூல்கள்….. என 170க்கும் அதிகமான நூல்களை தமிழ்மொழி மூலமாக எழுதி, வெளியிட்டுள்ளார். இவரின் சிறுகதைகள் தமிழ்நாட்டிலிருந்து வெளிவரும் தாமரை, தீபம், கணையாழி, கலைமகள் போன்ற இலக்கிய சஞ்சிகைகளிலும் இடம்பெற்றுள்ளன. இவரின் ஆக்கங்கள் பல்கலைக்கழக மட்டத்தில் பல்வேறு ஆய்வுகளுக்குட் படுத்தப்பட்டுள்ளன.
கடந்த ஒரு தசாப்த காலமாக இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரங்களைத் திரட்டி அவற்றை ஈழத்து முன்ணணித் தேசிய பத்திரிகைகளுள் ஒன்றான 'ஞாயிறு தினக்குரலில்' எழுதி வரும் அதேநேரம் அவற்றைத் தொகுத்து இதுவரை 15 பாகங்களாக நூலுருப்படுத்தியுமுள்ளதுடன் தேசிய, சர்வதேச ரீதியில் ஆவணப்படுத்தியும் வரும் இவரின் இப்பணி ஈழத்து இலக்கியப் பயணத்தின் இமயமாகத் திகழ்கின்றது.
இலங்கையில் தமிழ்மொழி மூல நூல்களை வெளியிடுவதில் வெளியீட்டுப் பணியகங்கள் குறைவு என்பதை உணர்ந்து ‘சிந்தனைவட்டம்’ எனும் பெயரில் பதிப்பகம் ஒன்றை உருவாக்கி இதுவரை 320க்கும் மேற்பட்ட தமிழ்மொழி நூல்களை இவர் வெளியிட்டுள்ளார். இந்த வெளியீட்டுப் பணியகத்தினூடாக நூற்றுக்கணக்கான எழுத்தாளர்கள் பயன்பெற்றுள்ளனர்.
பயிற்றப்பட்ட கணித, விஞ்ஞான ஆசிரியையான எம். எச். எஸ். மஸீதாவின் அன்புக் கணவரான இவருக்கு சஜீர் அஹமட், பாத்திமா சம்ஹா ஆகிய இரண்டு செல்வங்கள் உள்ளனர்.
‘சர்வதேச நினைவு தினங்கள்’ எனும் தலைப்பில் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை தேசிய, சர்வதேச அச்சு ஊடகங்களிலும், இணைய ஊடகங்களிலும் இவர் எழுதியுள்ளார். அவற்றைத் தொகுத்து நான்கு பாகங்களாக நூலுருப்படுத்தி வெளியிடும் முயற்சி இவரின் தமிழ் எழுத்துப் பணியின் மற்றுமொரு பரிமாணத்தை எடுத்துக் காட்டுகின்றது. இவரின் முயற்சிகள் வெற்றிபெற மனதார வாழ்த்துகின்றேன்.
Dr.Mu.Elangovan
Assistant Professor of Tamil
Bharathidasan Govt.college For women
Puducherry-605 003,India
E.Mail : muelangovan@gmail.com
blog: http://muelangovan.blogspot.com/
cell: +91 9442029053
No comments:
Post a Comment