Thursday, 4 November 2010

150 நூல்கள் எழுதியுள்ள எழுத்தாளர் புன்னியாமீன்: அன்புமணி இரா.நாகலிங்கம்

மத்திய இலங்கையின் தலைநகர் கண்டியைச் சேர்ந்த பீர்மொஹம்மட் புன்னியாமீன் அவர்கள் மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக எழுத்துத்துறையில் ஈடுபட்டு வரும் ஒரு எழுத்தாளரும், பன்னூலாசிரியரும், வெளியீட்டாளரும்,  ஊடகவியலாளருமாவார்.

இவர் ஐக்கிய இராச்சியத்தைத் தளமாகக் கொண்டியங்கும் முன்னணி இணையத்தளமொன்றின் செய்தியாசிரியருமாவார். இலக்கியத்துறையில் பல்வேறு சாதனைகளைப் புரிந்தாலும்கூட, இவரின் தனிப்பட்ட சாதனைகளும்,  இவர் பற்றிய விபரங்களும் வெளியுலகிற்கு அதிகமாகத் தெரிய வரவில்லை. அவற்றை வெளிப்படுத்திக் கொள்ள இவர் அதிகமாக விளைவதுமில்லை. “ஈழத்துத் தமிழ் இலக்கியத்துறைக்கு என்னால் ஆற்றப்பட்டுள்ளது ஒரு சிறு துளி மாத்திரம் தான். நான்  இன்னும் இலக்கியத்துக்குச் செய்ய வேண்டிய எத்தனையோ விடயங்கள் உண்டு” என எச்சந்தர்ப்பத்திலும் அடக்கமாகக் கூறிவரும் இவர், பழகுவதற்கு இனியவர்.  

1960ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 11ஆம் திகதி பீர்மொஹம்மட், சைதா உம்மா தம்பதியினரின் புதல்வராகப் பிறந்த புன்னியாமீன் க/ஜாமியுல் அஸ்ஹர் மத்திய கல்லூரி,  க/ மடவளை மதீனா தேசிய கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவராவார். பேராதனைப் பல்கலைக்கழக கலைமாணிப் பட்டதாரியான இவர்,  ஊடகவியல் துறையில் டிப்ளோமா பட்டத்தினையும் பெற்றுள்ளார்.

தொழில் ரீதியாக 1983ஆம் ஆண்டில் ஸ்ரீலங்கா ஆசிரியர் சேவையில் இணைந்த புன்னியாமீன்,  பின்பு கல்லூரி அதிபராகவும், மத்திய மாகாண சபையின் கல்வி, கலாசார அமைச்சின் இணைப்பதிகாரியாகவும்,  மத்திய மாகாண கலாசார அமைச்சின் உதவிப் பணிப்பாளராகவும் சேவையாற்றி 2004ஆம் ஆண்டில் சுயவிருப்பின் பேரில் ஓய்வுபெற்றார். தற்போது வரையறுக்கப்பட்ட “சிந்தனைவட்டம்” தனியார் கம்பனியின் முகாமைத்துவப் பணிப்பாளராகக் கடமையாற்றிக் கொண்டிருக்கின்றார். அத்துடன்,  லண்டனிலிருந்து வெளிவரும் ‘லண்டன் குரல்’,  ‘உதயன்’ உள்ளிட்ட பல புலம்பெயர் பத்திரிகைகளின் செய்தியாளராகவும் பணிபுரிந்து கொண்டிருக்கின்றார். அத்துடன், இந்தியாவிலுள்ள முன்னணி இணையத்தளங்களில் ஒன்றான http://thatstamil.oneindia.in/ இல் சர்வதேச நினைவு தினங்கள் பற்றி தொடர்ச்சியாக எழுதி வருகின்றார். இவரின் இந்த ஆக்கங்கள் சர்வதேச ரீதியில் பல இணையத்தளங்களில் மறுபிரசுரம் செய்யப்பட்டு வருகின்றன. எழுத்துத் துறையிலும், ஊடகத்துறையிலும் ஏற்பட்டு வரும் நவீனமாற்றங்களுக்கேற்ப இவர் இலத்திரனியல் ஊடகங்களுடன் நெருக்கமான தொடர்புகளை விரிவுபடுத்திக் கொண்டிருப்பது குறிப்பிட்டுக் கூறக்கூடிய ஓர் அம்சமாகும்.

மாணவப் பராயத்திலிருந்தே வாசிப்புத்துறையில் தீவிர ஆர்வம் காட்டி வந்த இவரின் சுய ஆக்கமான முதல் உருவகக் கதை ‘அரியணை ஏறிய அரசமரம்’ எனும் தலைப்பில் 1978 ஜுலை 02ஆம் திகதி தினகரன் வாரமஞ்சரியில் பிரசுரமானது. அதிலிருந்து இதுவரை 160க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும், 5000க்கும் மேற்பட்ட சமூக, இலக்கிய, அரசியல்,  திறனாய்வு,  கல்விசார் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். இத்தகைய ஆக்கங்கள் இந்தியாவில் கலைமகள், தீபம்,  தாமரை உட்பட பல புலம்பெயர் இலக்கிய சஞ்சிகைகளிலும்,  ஈழத்து தேசிய பத்திரிகைகள், சஞ்சிகைகளிலும் பிரசுரமாகியுள்ளன.

இவரின் இலக்கிய சேவையைக் கருத்திற்கொண்டு கிழக்கிலங்கையிலிருந்து வெளிவந்த ‘தடாகம்’ எனும் இலக்கியச் சஞ்சிகை 1999 நவம்பர் - டிசம்பர் இதழில் இவரின் புகைப்படத்தை முகப்பட்டையில் பிரசுரித்து கௌரவித்தது. அதேநேரம், இலங்கையிலிருந்து நான்கு தசாப்த காலங்களுக்கும் மேலாக வெளிவரும் தரமான இலக்கிய சஞ்சிகையான ‘மல்லிகை’ 2005 மார்ச் இதழிலும்,  மற்றொரு தரமான இலக்கிய சஞ்சிகையான ‘ஞானம்’ தனது 102வது (2008 நவம்பர்) இதழிலும் இவரின் புகைப்படத்தை முகப்பட்டையில் பிரசுரித்து கௌரவித்துள்ளன. மேலும்,  கிழக்கிலங்கையிலிருந்து வெளிவரும்  ‘சமாதானம்’ இலக்கிய சஞ்சிகையின் 2007 அக்டோபர் இதழும்,  இந்தியாவிலிருந்து வெளிவரும் ‘ஏழைதாசன்’  (இதழ் எண்:159) 2008 மே இதழும் இவரின் புகைப்படத்தை அட்டைப்படத்தில் தாங்கிவெளிவந்துள்ளன.

இவரது முதலாவது சிறுகதைத் தொகுதி 1979.11.11ஆந் திகதி “தேவைகள்” எனும் தலைப்பில் வெளிவந்தது. முதல் புத்தகம் வெளிவந்து சரியாக முப்பது ஆண்டுகள் நிறைவுறும்போது 2008.11.11இல் இவரது 150வது புத்தகமான “இவர்கள் நம்மவர்கள் - தொகுதி 04” எனும் புத்தகம் வெளிவந்துள்ளது. இவரது வெளியீட்டுப் பணியகமான சிந்தனைவட்டத்தின் மூலம் இதுவரை 300 தமிழ்மொழி மூலமான நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இலங்கையில் யுத்த சூழ்நிலைகள் காணப்படும் இந்நேரத்தில் ஒரு தனிப்பட்ட எழுத்தாளன் சுயமாக 150 தமிழ்மொழி மூலமான புத்தகங்களை எழுதி வெளியிடுவது என்பது ஒரு சாதனையே. இந்த அடிப்படையில் கலாபூஷணம் புன்னியாமீன் அவர்களுடன் மேற்கொள்ளப்பட்ட நேர்காணல் கீழே இடம்பெறுகின்றது.

கேள்வி:- எழுத்துத்துறையில் நீங்கள் எவ்வாறு அறிமுகமானீர்கள் என்பதைப் பற்றி சுருக்கமாகக் கூற முடியுமா?

பதில்:- நான் பாடசாலையில் கற்கும் காலங்களில் (1974/1975) இளங்கதிர், இளங்காற்று, இளந்தென்றல் ஆகிய கையெழுத்துச் சஞ்சிகைகளின் ஆசிரியராக இருந்து செயற்பட்டுள்ளேன். அதனால் ஏற்பட்ட ஆர்வம் தொடர்ந்தும் எழுத வேண்டும் என்ற உணர்வினை என்னுள் ஏற்படுத்தியது. கையெழுத்து சஞ்சிகைகளில் எழுதி வந்த எனது எழுத்துக்கள் 1976ஆம் ஆண்டு தேசிய பத்திரிகையான தினகரனில் பிரசுரமாகின. அதையடுத்து ஏனைய தேசிய பத்திரிகைகள்,  சஞ்சிகைகள், வானொலி என்ற அடிப்படையில் என் எழுத்தை பரவலாக்கிக் கொண்டேன்.

கேள்வி:- தங்கள் முதலாவது சிறுகதைத் தொகுதி வெளிவந்ததைப் பற்றி……..

பதில்:- எனது முதலாவது சிறுகதைத் தொகுதி 1979.11.11ஆம் திகதி வெளிவந்தது. இத்தொகுதியின் தலைப்பு “தேவைகள்”. இத்தொகுதியில் 14 சிறுகதைகள் இடம்பெற்றன. அக்கதைகளுள் அதிகமான கதைகள் தினகரனிலும்,  தினகரன் வாரமஞ்சரியிலும் பிரசுரமானவையாகும். இதனை எனது சொந்தக் கிராமத்துக்கு அண்மையில் கட்டுகஸ்தோட்டை எனும் நகரை மையமாகக் கொண்டு இயங்கிய “இஸ்லாமிய சேமநல சங்கம்” எனும் சமூக சேவையமைப்பு வெளியிட்டது. எனது பத்தொன்பதாவது பிறந்த தினத்தன்று இப்புத்தகம் வெளிவந்தமை குறிப்பிடத்தக்கது.

கேள்வி:- படைப்பிலக்கிய முயற்சிகளில் தங்களின் பங்களிப்புகள் பற்றி குறிப்பிடுங்கள்.

பதில்:- ஆரம்ப காலங்களில் சிறுகதை,  கவிதை,  நாடகங்கள் என படைப்பிலக்கிய முயற்சிகளிலே நான் அதிகளவில் ஈடுபட்டு வந்தேன். இதுவரை 160க்கும் மேற்பட்ட சிறுகதைகளை நான் எழுதியுள்ளேன். இவை இலங்கையில் மாத்திரமல்லாமல் தமிழகத்தில் கூட,  கலைமகள், தாமரை,  தீபம், தீ போன்ற இலக்கிய சஞ்சிகைகளில் பிரசுரமாகியுள்ளன. இதுவரை ஏழு சிறுகதைத் தொகுதிகள் வெளிவந்துள்ளன. அவை “தேவைகள்”,  “நிழலின் அருமை”,  “கரு”,  “நெருடல்கள்”, “அந்த நிலை”,  “யாரோ எவரோ எம்மை ஆள”,  “இனி இதற்குப் பிறகு”. ஆரம்ப காலங்களில் காதலைப் பற்றியும்,  மாணவப்பராயத்து உணர்வுகள் பற்றியும் எழுதிவந்த நான் பிற்காலத்தில் நான் வாழும் சமூகத்தைப் பற்றியும்,  ஒடுக்கப்பட்ட பாட்டாளி வர்க்கம் பற்றியும், இலங்கையில் இன உறவுகள் பற்றியும் எழுத ஆரம்பித்தேன்.

ஆரம்ப காலத்தில் என் படைப்பிலக்கியங்களில் கற்பனை வாதத்துக்கு முக்கியத்துவம் கொடுத்த போதிலும்கூட,  பிற்காலத்தில் சமூக யதார்த்தத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து சமூகமயமாக்கப்பட்ட எழுத்துகளையே முன்வைத்தேன். இதனால் பல்வேறுபட்ட கெடுபிடிகளுக்கும் ஆளானேன். ஒரு எழுத்தாளன் என்ற வகையில் சமூக யதார்த்தங்களை முன்வைக்கச் சென்று பலவிதமான தாக்குதல்களுக்கு உட்படுத்தப்பட்ட பல அனுபவங்கள் எனக்குண்டு.

கேள்வி:- சிறுகதைத் துறையைப் போல நாவல் துறையில் நீங்கள் அதிக ஈடுபாடு காட்டாமைக்கான காரணம் என்ன?

பதில்:- நியாயமான கேள்வி. 160க்கும் மேற்பட்ட சிறுகதைகளை நான் எழுதியபோதிலும்கூட,  இதுவரை ஒரேயொரு நாவலை மாத்திரமே எழுதி வெளியிட்டுள்ளேன். 1983ஆம் ஆண்டு எழுதப்பட்ட அந்த நாவலின் பெயர் “அடிவானத்து ஒளிர்வுகள்” என்பதாகும். நாவலை எழுதிய பின்பு அதனை பிரசுரத்துக்காக வேண்டி பல பத்திரிகைகளுக்கு அனுப்பி வைத்தேன். ஆனால்,  அந்த நாவல் நிராகரிக்கப்பட்டது. இலங்கையைப் பொறுத்தமட்டில் 1980களில் குறிப்பிட்ட சில எழுத்தாளர்களின் நாவல்களை மாத்திரமே இலங்கையின் தேசிய பத்திரிகைகளில் பிரசுரித்து வந்தனர். நாவல் துறையில் அறிமுக நாவலாகக் காணப்பட்ட என்னுடைய நாவலை வாசித்துக்கூடப் பார்க்காமல் நிராகரிக்கப்பட்டதையடுத்து உண்மையிலேயே பாரிய மனத் தாங்கலுக்கு உட்பட்டேன். பின்பு 1987ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் “அல்-பாஸி பப்ளிகேஷன்” அந்த நாவலை நூலுருப்படுத்தி வெளியிட்டது. இதற்கு பக்கதுணையாக கல்ஹின்னை தமிழ்மன்ற ஸ்தாபகர் எஸ்.எம். ஹனிபா அவர்கள் இருந்தார்கள்.
“அடிவானத்து ஒளிர்வுகள்” நாவல் மூலமாக இலங்கையில் முஸ்லிம் சமூகத்தின் அரசியல் பிரச்சினைகளை நான் எடுத்துக் காட்டினேன். இந்த நாவல் எழுதும் காலகட்டத்தில் இலங்கையில் முஸ்லிம்களுக்கென அரசியல் கட்சியொன்றிருக்கவில்லை. மறுபுறமாக இந்த நாவல் எழுதப்பட்ட காலகட்டங்களில் இலங்கையில் வடபகுதியில் தமிழ் மக்கள் தமது விடுதலைப் போராட்டத்தை ஆயுத ரீதியாக ஆரம்பித்த கால கட்டமாகவும் இருந்தது. எனவே,  இந்த நாவலினூடாக இலங்கையின் இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வொன்றைப்பெற அதிகாரப் பகிர்வு முறை முன்வைக்கப்பட வேண்டுமென்பதையும்,  முஸ்லிம்களைப் பொறுத்தமட்டில் முஸ்லிம்களின் உரிமைகளுக்காக வேண்டி தனியொரு அரசியல் கட்சி உருவாக்கப்பட வேண்டுமென்பதையும் வலியுறுத்தி எழுதினேன். நாவல் வெளிவந்த பிறகு இலக்கிய உலகிலும், அரசியல் உலகிலும் என் நாவல் அதிகமாகப் பேசப்பட்டது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம்களுக்கான ஒரு தனிக்கட்சியாக 1987ஆம் ஆண்டு உருவாக்கம் பெற்றது. அதன் ஸ்தாபகத் தலைவர் மறைந்த எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களும், அப்போதைய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சுந்திரமூர்த்தி அபூபக்கர் அவர்களும் என் நாவலைப் படித்துவிட்டு என் வீட்டுக்கு வந்து பாராட்டினர். இந்நாவலில் இலங்கையின் இனப்பிரச்சினைக்கு மாகாண அலகுகள் பொருத்தமானது என்பதை நான் 1983ஆம் ஆண்டில் சுட்டிக் காட்டியிருந்தேன். இந்திய - இலங்கை ஒப்பந்தப்படி இலங்கையின் அரசியலமைப்பின் 13ஆம் திருத்தப் பிரகாரம் இலங்கையின் இனப்பிரச்சினைக்குத் தீர்வாக மாகாணசபை முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இவ்விரு நிகழ்வுகளையும் வைத்து அரசியல் தளத்தில் கூட என் நாவல் அதிகமாகப் பேசப்பட்டது. இந்நாவலின் இரண்டாவது பதிப்பு சிந்தனைவட்டத்தின் வெளியீடாக வெளிவந்து குறிப்பிட்ட சில மாதங்களுக்குள் விற்பனையாகி முடிந்தமையும் குறிப்பிடத்தக்கது. இந்த நாவல் பிற்காலத்தில் தமிழகத்தைச் சேர்ந்த சில பேராசிரியர்களால் ஆய்வுசெய்யப்பட்டதுடன், இலங்கைப் பல்கலைக் கழகங்களிலும் ஆய்வுக்குட்படுத்தப்பட்டது.

இருப்பினும், எனது தனிப்பட்ட வாழ்வில் தொழில் நிமித்தமாக எனக்கு ஏற்பட்ட நேரநெருக்கடிகளும்,  தனிப்பட்ட சில பிரச்சினைகளும் நாவல் துறையில் ஈடுபடக்கூடிய அவகாசத்தை குறைத்தது. அன்று முஸ்லிம்களுக்குத் தனிக்கட்சியொன்று அவசியம் என்று இலக்கிய வடிவமாக நான் முன்வைத்த கருத்தையிட்டு இன்று மனவேதனைப் படுகின்றேன். இன்று இலங்கையில் முஸ்லிம்களுக்கென 12 அரசியல் கட்சிகள் உள்ளன. இதுவே ஒரு சாபக்கேடாகவும் அமைந்து விட்டது. குறிப்பாக ஒரு அரசியல் தலைமைத்துவமில்லாத நிலைக்கு இலங்கை முஸ்லிம்களை மாற்றிவிட்டது. எனவே,  எதிர்காலத்தில் “அடிவானத்து ஒளிர்வுகள் பாகம் 02” ஐ எழுதும் எண்ணம் உண்டு. அதில் அன்று அரசியல் ரீதியாக என்னால் கூறப்பட்ட எதிர்வுகூறல்களை இன்றைய சூழ்நிலைகளுடன் தொடர்புபடுத்தி அக்கதையைத் தொடுப்பது என் எதிர்பார்க்கையாகும்.

கேள்வி:- இதுவரை 150 நூல்களை எழுதி வெளியிட்டுள்ளீர்கள். இவற்றுள் அதிகமான நூல்கள் பாடநூல்கள் எனப்படுகின்றனவே.

பதில்:- உண்மைதான். நான் எழுதிய நூல்களுள் 72 நூல்கள் போக மீதமானவை பாடவழிகாட்டி நூல்கள் என்பதை நான் ஏற்றுக் கொள்கின்றேன். இதற்கான மூல காரணத்தையும் குறிப்பிட வேண்டும். இலங்கையைப் பொறுத்தமட்டில் இலக்கிய நூல்களை வெளியிட்டு சந்தைப்படுத்துவது மிகவும் கடினமானவொரு காரியம். இந்தியாவில் வெளியிடப்படக்கூடிய நூல்களில் ஒரு தொகுதியை நூலகங்களோ,  அரசோ கொள்வனவு செய்வதைப் போல இலங்கையில் எத்தகைய ஏற்பாடுகளுமில்லை. இதனால் இலங்கையைப் பொறுத்தமட்டில் எழுத்தாளனே வெளியீட்டாளனாக இருக்க வேண்டிய துர்ப்பாக்கியமான  நிலை காணப்படுகின்றது.

ஆரம்ப காலங்களில் இலக்கிய நூல்களை மாத்திரம் வெளியிட்டு நான் பல இலட்சங்கள் நஷ்டமடைந்துள்ளேன். இந்நிலையில் நான் ஒரு கல்லூரி ஆசிரியராகவும் அதேபோல தனியார் கல்லூரிகளில் முன்னணி அரசறிவியல் போதகராகவும் இருந்ததினால் நாடளாவிய ரீதியில் பல்கலைக்கழகங்கள்,  பாடசாலைகளுடன் எனக்கு நேரடியான தொடர்புகள் ஏற்பட்டன. இதனைப் பயன்படுத்தியே ஆரம்ப கல்வி, இடைநிலைக் கல்வி, உயர்தரக் கல்வி,  பல்கலைக்கழகக் கல்வி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு பாடவழிகாட்டி நூல்களை குறிப்பாக அரசறிவியல், வரலாறு, சமூகக்கல்வி போன்ற பாடங்களில் எழுதி வெளியிட்டேன். பல்கலைக்கழக பீ.ஏ. பட்டப்படிப்பு மாணவர்களுக்காக வேண்டி அரசறிவியல் நூல்களையும் எழுதி வெளியிட்டேன். மேலும், என்னுடைய மனைவி மஸீதா புன்னியாமீனுடன் இணைந்து தரம் 05 புலமைப்பரிசில் பாடத்திட்டத்திற்கமைய பல நூல்களை எழுதி வெளியிட்டுள்ளேன். என்னால் எழுதப்பட்ட பாடநூல்களுக்கு அதிகக் கேள்வி இருந்தது. இந்நூல்களால் கிடைத்த இலாபத்தை வைத்து இலக்கிய நூல்களுக்கு முதலீடு செய்தேன். எனவே,  பாடநூல்கள் மூலமாக ஒரு வருமானம் கிடைக்காதவிடத்து என்னால் இலக்கிய நூல்களை இவ்வளவு தூரத்திற்கு எழுதி வெளியிட முடியாது போயிருக்கும்.

கேள்வி:- 21ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்து இலங்கை எழுத்தாளர்கள்,  ஊடகவியலாளர்கள்,  கலைஞர்களின் விபரங்களைத் தொகுத்து நூலுருப்படுத்துவதிலும் அவற்றை ஆவணப்படுத்துவதிலும் கூடிய கரிசனை செலுத்தி வருகின்றீர்கள். இதைப் பற்றி சற்று கூற முடியுமா?

பதில்:- 19ஆம் நூற்றாண்டுக் காலப்பகுதியிலிருந்து இலங்கையில் தமிழ்மொழி வளர்ச்சிக்காக வேண்டியும்,  தமிழ்மொழியினூடாக சமய,  கலாசார,  தேசிய உணர்வுகளை ஏற்படுத்தக்கூடிய வகையிலும் ஆயிரக்கணக்கான எழுத்தாளர்கள்,  ஊடகவியலாளர்கள்,  கலைஞர்கள் தமது பங்களிப்புக்களை நல்கி வந்துள்ளனர். ஆனால்,  இன்றுள்ள தலைமுறையினருக்கும், நாளைய தலைமுறையினருக்கும் அவர்கள் யார்? என்ன செய்தார்கள்? அவர்களின் பணிகள் எத்தகையவை என்ற விபரங்கள் தெரியாமல் இருக்கின்றது. பல்கலைக்கழக மற்றும் உயர்மட்ட ஆய்வுகளில் கூட,  இத்தகைய தகவல்களைப் பெற முடியாதிருப்பது வேதனைக்குரிய ஒரு விடயமாகும். இதற்கான காரணம்  இவர்கள் பற்றிய தரவுகள்,  விபரங்கள், குறிப்புகள் இன்மையே.

இது பற்றி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும், அவை பதிவு செய்யப்பட்டு ஆவணப்படுத்தப்பட வேண்டுமெனவும் நீண்ட காலமாக பலரும் கூறிவந்தாலும்கூட,  தொடர்ச்சியாக அம்முயற்சிகளில் யாரும் ஈடுபடவில்லை. முயற்சிகளை மேற்கொண்டவர்களும் குறிப்பிட்ட சிலரின் விபரங்களைத் திரட்டி ஆவணப்படுத்தியதுடன்,  அவற்றைத் தொடரவில்லை. எனவேதான்,  இலங்கையிலிருந்து வெளிவந்த நவமணி பத்திரிகையின் பிரதம ஆசிரியர் காலஞ்சென்ற எம்.பி.எம். அஸ்ஹர் அவர்களின் பத்திரிகை அனுசரணையுடன் இம்முயற்சியை நான் 2002ஆம் ஆண்டிலிருந்து ஆரம்பித்தேன். இன்றுவரை இலங்கையைச் சேர்ந்த 325 எழுத்தாளர்கள்,  ஊடகவியலாளர்கள்,  கலைஞர்களின் விபரங்களைத் திரட்டி 14 தொகுதி நூல்களை வெளியிட முடிந்தது. அத்துடன்,  http://noolaham.org/wiki   இணையத்தளத்திலும் இவற்றை பதிவாக்க முடிந்துள்ளது. மேலும்,  என் சக்திக்கு எட்டியவாறு தேசிய ரீதியிலும்,  சர்வதேச ரீதியிலும் இவர்கள் பற்றிய குறிப்புகளை ஆவணப்படுத்தி வருகின்றேன். இன்னும் இம்முயற்சி தொடர்கின்றது. தற்போது இலங்கையிலிருந்து வெளிவரும் முன்னணி பத்திரிகைகளில் ஒன்றான ‘ஞாயிறு தினக்குர’லில் “இவர்கள் நம்மவர்கள்” எனும் தலைப்பில் மேற்கொண்டு வருகின்றேன்.

கேள்வி:- இம்முயற்சிக்கென இலங்கையிலுள்ள முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம்,  இந்து சமய கலாசார திணைக்களம் அல்லது வேறு யாதாவது நிறுவனங்கள் மூலமாக உதவிகள் கிடைக்கின்றனவா?

பதில்:- இல்லை. முழுமையாக இது என்னுடைய தனி முயற்சியே. உண்மையில் இத்தகைய முயற்சிகளை இலங்கையைப் பொறுத்தமட்டில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம்,  இந்து சமய கலாசார திணைக்களம் போன்றன மேற்கொண்டிருக்க வேண்டும். இதைப் பற்றி இவ்விடத்தில் நான் விமர்சிக்கத் தயாராக இல்லை. இந்த முயற்சியை மேற்கொள்ளும்போது எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள்,  கலைஞர்களின் விபரங்களைத் திரட்டுவதில் பல செலவினங்களை மேற்கொள்ள வேண்டியுள்ளது. அதுமட்டுமல்லாமல் விபரங்களைத் திரட்டிய பின் அவற்றை நூலுருப்படுத்துவதிலும் என்னுடைய சொந்த முதலீட்டையே நான் மேற்கொள்கின்றேன். இது போன்ற ஆவணப் பதிவுகளை இலங்கையில் சந்தைப்படுத்தி வருமானத்தைப் பெறுவதென்பது இயலாத காரியம். மேலும்,  இந்த விபரங்களை ஆவணப்படுத்துவதிலும் என் சொந்த பணத்தையே நான் செலவிடுகின்றேன்.

கூட்டுமொத்தமாக இதுவரை 14 தொகுதிகள் வெளிவந்துள்ளன. இந்த 14 தொகுதிகளிலும் பல இலட்சம் ரூபாய்களை நான் இழந்துள்ளேன். இவ்விடத்தில் ஒரு விடயத்தைக் குறிப்பிட வேண்டும். இலங்கையைப் பொறுத்தமட்டில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம்,  இந்து சமய கலாசார திணைக்களம் போன்றன இலங்கை எழுத்தாளர்களின் நூல்களில் சுமார் 5000 ரூபாய் பெறுமதியான நூல்களை கொள்வனவு செய்து உதவுகின்றன. என்னுடைய இந்த ஆவணத் திரட்டு நூலை கொள்வனவு செய்து உதவும்படி முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம்,  இந்து சமய கலாசார திணைக்களம் ஆகியவற்றிற்கு பலமுறை விண்ணப்பம் செய்த போதிலும்கூட,  அவர்களிடமிருந்து ஒரு பதில் கூட கிடைக்காமை இவ்விடத்தில் சுட்டிக்காட்டப்பட வேண்டியதே. (முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் இதுவரை வெளிவந்த 14 தொகுதிகளில் மூன்று தொகுதிகளை மாத்திரம் சில ஆண்டுகளுக்கு முன் கொள்வனவு செய்தது.)

இலங்கையில் அரச திணைக்களங்களுடனான இத்தகைய உதவிகளை கோரும்போது அரசியல் செல்வாக்குகள்,  அரசியல்வாதிகளின் செல்வாக்குகள்,  பிரதேசவாத செல்வாக்குகள் முதன்மைப் படுத்தப்படுவதினால் சேவையின் பெறுமானத்தை உணர்ந்து செயல்படாத அவர்களிடம் மண்டியிட நான் விரும்புவதில்லை. எவ்வாறாயினும் என் சக்திக்கெட்டியவாறு நான் மேற்கொண்டு செல்லும் முயற்சி எதிர்கால சந்ததியினருக்கு ஒரு பயன்தரும் முயற்சி என்ற நம்பிக்கையில் தொடர்ந்து கொண்டிருக்கின்றேன். நிச்சயமாக இதன் பெறுமானம் என்றோ ஒரு காலத்தில் உணரப்படும்.

கேள்வி:- இலங்கை எழுத்தாளர்கள்,  ஊடகவியலாளர்கள்,  கலைஞர்களின் விபரத்திரட்டுக்கள் தகவல்களைப் பெறும் முறை பற்றியும்,  வகைப்படுத்தல்கள்  மேற்கொள்ளப்படும் முறை பற்றியும் சற்று கூறுங்கள்.

பதில்:- இலங்கை எழுத்தாளர்கள்,  ஊடகவியலாளர்கள்,  கலைஞர்களின் விபரத்திரட்டுக்கான தகவல்களை நேரடியாகவும்,  ஆதாரபூர்வமாகவும் சம்பந்தப்பட்ட எழுத்தாளர்கள்,  ஊடகவியலாளர்கள், கலைஞர்களிடமிருந்தும் மரணித்தவர்களாயின் அவர்களின் உறவினர்களிடமிருந்தும் பெறுகின்றேன். இதற்காக வேண்டி தொடர்புகளுக்காக இலங்கையில் ஞாயிறுதினக்குரல் ஆசிரியர் திருவாளர் இராஜபாரதி அவர்கள் பூரண ஒத்துழைப்பு வழங்கி வருகின்றார். புலம்பெயர் நாடுகளில் நூலகவியலாளர் என். செல்வராஜா,  த. ஜெயபாலன் போன்றோரும்; ஜெர்மனியில் திருவாளர்கள் அருந்தவராசா,  சிவராசா,  ஜீவகன்,  புவனேந்திரன் போன்றோரும் ஒத்துழைப்பு நல்கி வருகின்றனர். புலம்பெயர் ஊடகங்களான உதயன்,  லண்டன் குரல், காலைக்கதிர்,  அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் ஐ.பி.சி.,  தீபம் தொலைக்காட்சி,  ஜெர்மனியில் மண்,  அவுஸ்திரேலியாவில் உதயம்,  இலங்கையில் ஞானம் போன்றன ஊடக அனுசரணையை வழங்கி வருகின்றன. இதன் மூலமாகவே எழுத்தாளர்கள்,  ஊடகவியலாளர்கள்,  கலைஞர்களுடனான தொடர்பினை நான் ஏற்படுத்திக் கொண்டு விபரங்களைப் பெறுகின்றேன். மேலும்,  சில தேடல்களின் மூலமாக பழைய எழுத்தாளர்கள்,  ஊடகவியலாளர்கள்,  கலைஞர்களின் விபரங்களைப் பெறுகின்றேன்.

இந்த இயந்திர யுகத்தில் பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கும் மத்தியில் குறிப்பாக நேரம் போதாமையினால் தேடல் முயற்சிகளினூடாக விபரங்களைத் திரட்டுவதில் பின்னடைவு நிலைதான் காணப்படுகின்றது. விபரத்திரட்டில் எவ்வித வகைப்படுத்தலையும் நான் மேற்கொள்ளவில்லை.
எனக்குக் கிடைக்கும் தகவல்களின் நம்பகத்தன்மைக்கு முன்னுரிமைக் கொடுத்து எழுதுகின்றேன். குறிப்பாக இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட எழுத்தாளர்கள்,  ஊடகவியலாளர்கள்,  கலைஞர்களின் விபரங்களையே நான் திரட்டுகின்றேன். அவர்கள் புலம் பெயர்ந்திருந்தாலும் அவர்கள் இலங்கை மண்ணில் பிறந்தவர்களாகவே இருக்க வேண்டும். இதுவே எனது அடிப்படை.

கேள்வி:- இந்த எழுத்தாளர்கள்,  ஊடகவியலாளர்கள்,  கலைஞர்களின் விபரத்திரட்டின் மூலம் உங்கள் இலக்கு என்ன?

பதில்:- சற்று சிந்திக்க வேண்டிய கேள்வி. 19ஆம் நூற்றாண்டின் ஆரம்ப கட்டத்திலிருந்து 21ஆம் நூற்றாண்டின் ஆரம்ப கட்டம்வரை இலங்கையில் தமிழ்மொழி மூல வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்த 20 ஆயிரத்துக்கும்  மேற்பட்ட எழுத்தாளர்கள்,  ஊடகவியலாளர்கள்,  கலைஞர்களின் இனங்காண முடிகின்றது. ஆனால்,  இவர்கள் அனைவரினதும் விபரங்களைத் திரட்ட முடியும் என்பது நிச்சயமாக என் வாழ்நாளில் முடியாததே. ஏனெனில்,  ஒரு தனி மனிதனாக நின்று தான் பல்வேறுபட்ட பிரச்சினைகளின் மத்தியில் இதுவரை 350 பேருடைய விபரங்களை ஆதாரபூர்வமாக திரட்டித் தொகுத்து ஆவணப்படுத்தியுள்ளேன்.
தங்கள் கேள்விக்கு என்னுடைய இலக்கைக் குறிப்பிடுவதாயின்,  தேகாரோக்கிய நிலையில் நான் உயிருடன் உள்ள வரை இயலுமான வரை விபரங்களைத் திரட்டுவதே இம்முயற்சியில் என்னுடைய அடுத்த இலக்கு 500 பேர். பின்பு 1000……. ஆசையும்,  ஆர்வமும்,  முயற்சியும் உண்டு. என் தேகாரோக்கியத்தைப் பொறுத்து இந்த இலக்கையடையலாம். அடையாமலும் விடலாம்.

இருப்பினும் ஒரு ஆசை. சுமார் எட்டாண்டுகளாக மிகவும் சிரமப்பட்டு பல்வேறு தரப்பினரின் எதிர்ப்புகளை சமாளித்துக் கொண்டு பாரிய பொருளாதாரப் பிரச்சினைகளையும் முகம்கொடுத்து என்னால் மேற்கொள்ளப்பட்டு வரும் இம்முயற்சியை நான் இல்லாத காலங்களில் யாராவது தொடர வேண்டும். அது தனிப்பட்டவராகவும் இருக்கலாம். அல்லது ஒரு அரச அன்றேல் சுயேச்சை நிறுவனமாகவும் இருக்கலாம். இதுவரை என்னால் மேற்கொள்ளப்பட்ட சகல ஆய்வுக்கும் ஆதாரங்கள் உள்ளன. அவை தொடர்ச்சியான ஆய்வுக்கு வழிவகுக்கும்.
கேள்வி:- தங்கள் குறிக்கோள்கள் நிறைவேற வாழ்த்துக்கள். சில எழுத்தாளர்களின் விபரங்களை http://thatstamil.oneindia.in/ இணையத்தளத்திலும் எழுதுவதாக அறிகின்றோம். இதை பற்றி கூற முடியுமா?
பதில்:- எழுத்தாளர்கள்,  ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டினை நான் ஞாயிறு தினக்குரலில் முதன்மையாக செய்து வருகின்றேன். தற்போது ஞாயிறு தினக்குரலில் பிரசுரமாகிவரும் இத்தொடரில் ஒரு குறித்த ஒழுங்கின் அடிப்படையில் செய்து வருகின்றேன். குறிப்பாக எழுத்தாளர்கள்,  ஊடகவியலாளர்கள்,  கலைஞர்களின் பிறப்பிடம், வாழ்விடம்,  பிறந்த திகதி,  பெற்றோர்,  கற்ற பாடசாலைகள்,  தொழில், எழுத்து,  ஊடகம்,  கலைத்துறையில் ஈடுபாடு,  சாதனைகள்,  பெற்ற விருதுகள்,  இத்துறையில் தன்னை ஊக்குவித்தவர்கள் போன்ற விபரங்கள் ஒரு ஒழுங்கமைப்பின் கீழ் இடம்பெறுவதை நீங்கள் அவதானித்திருக்கலாம். மேற்குறிப்பிட்ட ஒழுங்கமைப்பிற்கிணங்க தகவல்களைப் பெற்றுக் கொள்ள முடியாத நிலையில் அல்லது விசேட காரணமொன்றின் நிமித்தம் ஒரு துறையை முதன்மைப்படுத்த வேண்டிய நிலையிலுள்ள எழுத்தாளர்கள்,  ஊடகவியலாளர்கள்,  கலைஞர்களின் விபரங்களை http://thatstamil.oneindia.in/ இணையத்தளத்தில் பிரசுரித்து வருகின்றேன். http://thatstamil.oneindia.in/ இணையத்தளம் இலட்சக்கணக்கான வாசகர்களைக் கொண்ட ஒரு இணையத்தளமாகும். சர்வதேச ரீதியில் இந்த இணையத்தளத்துக்கு வாசகர்கள் உள்ளனர். எனவே,  இந்த இணையத்தளத்தில் எமது படைப்பாளிகளை அறிமுகப்படுத்துவதென்பது சர்வதேச ரீதியிலான ஓர் அறிமுகப்படுத்தலாகவே உள்ளது. இருப்பினும் இத்தகையோரின் அறிமுகம் பிரசுரமானாலும் இவர்கள் நம்மவர்கள் நூற்றொடரிலே இக்குறிப்புகளும் பதிவாக்கப்படும். எதிர்காலத்தில் இலங்கை எழுத்தாளர்கள்,  ஊடகவியலாளர்கள்,  கலைஞர்களின் விபரத்திரட்டில் இடம்பெற்றுள்ள அனைவரையும் சர்வதேச மட்டத்திலான அறிமுகத்தில் சேர்க்க விரிவான திட்டமொன்றை வகுத்து வருகின்றேன். இது பற்றிய விரிவான தகவல்களை பின்பு அறிவிப்பேன். இவ்விடத்தில் http://thatstamil.oneindia.in/ இணையத் தளஆசிரியர் திருவாளர் A.K Khan அவர்களுக்கும்,  நண்பர் முனைவர் மு. இளங்கோவன் அவர்களுக்கும் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

குறிப்பு:-
இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட எழுத்தாளர்கள்,  ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் தங்கள் பற்றிய குறிப்புகளை வழங்க விரும்பினால் உரிய விபரத்திரட்டுப் படிவங்களைப் பெற பின்வரும் முகவரியுடன் தொடர்பு கொள்ளவும்

P.M. PUNIYAMEEN
14, UDATALAWINNA MADIGE,
UDATALAWINNA
SRI LANKA.
தொலை பேசி   : 0094 -812 -493 892
தொலை நகல்   : 0094 -812 -493 746
மின் அஞ்சல்    :  pmpuniyameen @ yahoo.com

நன்றி: ஞாயிறு தினக்குரல் (இலங்கை) : 24 மே 2009

No comments:

Post a Comment