அளுத்கம, தர்காநகர் சம்பவங்களுக்கு மூலகாரணமாக அமைந்த காதியவத்த பௌத்த தேரர் தாக்குதல் தொடர்பாக முதலில் கைதாகிய மௌலவி அஸ்கர் இடம்பெற்ற நிகழ்வுகள் தொடர்பாக எம்முடன் பகிர்ந்து கொண்ட தகவல்கள்.
தர்கா நகரில் இல்ஹாருல் இஸ்லாம் அரபுக் கல்லூரியில் கல்வி பயின்று தற்போது தர்காநகரில் குர்ஆன் மத்ரஸாவொன்றில் கடமையாற்றிக் கொண்டிருக்கின்றார்.
சம்பவத்தின் ஆரம்பம்
ஜூன் மாதம் 12ம் திகதி நண்பகல் 12.30 மணியிருக்கும். காதியவத்தையிலுள்ள எனது வீட்டின் முன் எனது அண்ணன் நின்று கொண்டிருந்தார். குறித்த தினத்தன்று எனது தம்பி, பணியாற்றும் கடை உரிமையாளரின் திருமண நாள். எனது உம்மா,தங்கையை திருமணவீட்டுக்கு அழைத்துச் செல்வதற்காக எனது அண்ணன் முச்சக்கர வண்டியொன்றினை எடுத்து வருவதற்காக மோட்டார் சைக்கிளில் சொன்றிருந்தார்.
முச்சக்கரவண்டி வீட்டுக்கு முன்பு நிறுத்தப்பட்டிருந்தது. எனது அண்ணன் முச்சக்கர வண்டிக்கு முன்னால் இடது பக்கமாக மோட்டார் சைக்கிளை வைத்துக் கொண்டிருந்தார். அப்போது தேரரின் வாகனம் வந்தது. இரண்டு மூன்று தடவை ஹோர்ன் சத்தம் ஒலித்தது. எனது அண்ணன் மோட்டார் சைக்கிளை முச்சக்கர வண்டிக்குப் பின்னால் நிறுத்தி வைத்தார்.
வாக்குவாதம்
மோட்டார் சைக்கிள் அகற்றப்பட்டதும் தேரரின் வாகனம் முன்னே சென்று நிறுத்தப்பட்டது. வாகனத்தில் இருந்து இறங்கிய வான் சாரதி எனது அண்ணனுக்கு தூஷண வார்த்தைகளால் பேச ஆரம்பித்தார். பொறுக்க முடியாத நிலையில் அண்ணனும் பதிலுக்கு பேச ஆரம்பித்தார். பின் எனது தம்பி உள்ளே இருந்து ஓடி வந்தான். நானும் வேண்கதவை திறந்த படி நின்று கொண்டிருந்தேன். அப்போது அண்ணனுக்கும் வாகன சாரதிக்கும் இடையிலான வாய்த்தர்க்கம் கடுமையாகியது. எனது அண்ணன் வாகனச் சாரதியைப் பிடித்து தள்ளியதுடன் இரண்டு அடியையும் விட்டான். அப்பொழுது வாகனத்திலிருந்த தேரர் இறங்கி வந்தார். வாகனச் சாரதி தேரரை அவ்விடத்தில் நிறுத்தி விட்டு வாகனத்தை ஓட்டிச் சென்றார்.
தேரருடன் உரையாடல்
இதன் பின் தேரருடன் நான் நடந்த சம்பவத்தை கூறிக்கொண்டிருந்தேன். தேரரும் நல்ல முறையில்தான் என்னுடன் பேசினார். சற்று நேரத்தில் அந்த இடத்திற்கு பதிராஜகொட விகாராதிபதி வந்தார். வாகன சாரதி போய்ச் சொன்னதையடுத்து அந்த தேரர் இங்கு வந்து மிகவும் மோசமான முறையில் பேச ஆரம்பித்தார். பத்திராஜகொட தேரர் எனது வீட்டுக்கு முன் வந்து மிகவும் மோசமான வார்த்தைகளால் ஏசினார். அப்போது அந்த இடத்தில் வாகன சாரதி இருக்கவில்லை. என்றாலும் வாகனச் சாரதி சிறிது நேரத்தில் அங்கு வந்தார்.
மன்னிப்பு கேட்டோம்
எனது மாமா ஒருவர் அங்கு வந்து பத்திராஜகொட தேரருடன் பேசினார். பின்னர் தேரர்களுடன் கலந்துரையாடியதுடன் நடந்த தவறுக்காக அவர்களிடம் மன்னிப்புக் கோரினோம். எனது அண்ணனே மன்னிப்புக் கோர வேண்டுமென தேரர்கள் கேட்க அண்ணனும் அவர்களிடம் மன்னிப்புக் கோரினார். பின் அண்ணனும் தம்பியும் திருமண வீட்டுக்கு சென்றனர். பின் நான் தேரர்களுடன் நிலைமைகள் தொடர்பாக கலந்துரையாடிக் கொண்டிருந்தேன்.
பொலிஸாரால் கைது
இச்சம்பவத்தில் இரண்டு மோட்டார் போக்குவரத்து பொலிஸார் குறித்த இடத்துக்கு வந்தனர். அப்போது பதிராஜகொட தேரர் என்னைக் காட்டி இவர்தான் சாரதியைத்தாக்கியவர் எனக் கூறவும் போக்குவரத்து பொலிஸார் என்னைப் பொலிஸாரிடம் அழைத்துச் சென்றனர்.
மணியளவில் பொலிசுக்குப் போய்ச் சேர்ந்தேன். அங்கு என்னிடம் நடந்த சம்பவம் தொடர்பாக வாக்கு மூலம் பெறப்பட்டது. அவ்விடத்திற்கு வந்த குருந்துவத்த தேரர் இவர் என்னை அடிக்கவில்லை, சாரதியை இவர் அண்ணன்தான் அடித்துத் தள்ளினார் என்றார்.
பத்திராஜகொட தேரர் பொலிஸ் நிலையத்துக்குள் சப்தமிட்டுக் கொண்டிருந்தார். குருந்துவத்த தேரர் தன்னை அடிக்கவில்லை என தெரிவித்ததால் எவரும் இங்கு வரவேண்டியதில்லை என அங்கு வந்திருந்த சாட்சிகளையும் பொலிஸ் பொறுப் பதிகாரி விரட்டினார். என்றாலும் பதிராஜகொட தேரரை விரட்டவில்லை. ஏரத்தாழ இரண்டு மணித்தியாளத்திற்கு மேலாக பொலிஸ் நிலையத்திற்குள் தங்கியிருந்து கைத்தொலைபேசி மூலம் அடிக்கடி தொடர்புகளை மேற்கொண்டவண்ணம் இருந்தார். பின்னர் அங்கு அதிகமானோர் திரள ஆரம்பித்தனர். பத்திராஜகொட தேரர் உள்ளே இருந்து அங்கு வந்திருந்தவர்களுடன் பேசி விட்டு பின் உள்ளே வருவார்,பொலிஸாருடன் பேசுவார்.
நடவடிக்கை வேண்டும்
பத்திராஜகொட தேரர் பொலிஸ் அதிகாரியை நோக்கி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இன்றேல் நிலைமை விபரீதமாகும் என்றார். அப்படியானால் குருந்துவத்த தேரர் ஆஸ்பத்திரியில் தங்கி சிகிச்சை பெற வேண்டுமென பொறுப்பதிகாரி குறிப்பிட்டார். குருந்துவத்தை தேரரின் வற்புறுத்தலின் பேரில் ஆஸ்பத்திரியில் தங்கி நின்று சிகிச்சை பெற விருப்பம் தெரிவித்தார். இதன் பின்தான் என்னிடம் வாக்குமூலம் பெறப்பட்டது. பின் குருந்துவத்தை தேரர் ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆனார்.
அண்ணன், தம்பி கைது
மணியிருக்கும் போது பொலிஸ் நிலையத்தைச் சுற்றி நூற்றுக்கணக்கானோர் ஒன்று திரண்டனர். எனது அண்ணனையும், தம்பியையும் பொலிஸ் பொறுப்பதிகாரிமணியளவில் கைது செய்து பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தார். என்றாலும் பொலிஸ் நிலையத்தை சுற்றி அனைவரும் நிரம்பியிருந்ததால் அண்ணன், தம்பியை பிற்பகல் மணிக்கே பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.
ரிமாண்டில் வைத்தனர்
மாலை 5.30 மணிக்கு என்னையும், அண்ணனையும், தம்பியையும் ரிமாண்டில் போட்டனர். காலில் விழுந்து மன்னிப்புக் கேட்குமாறும் எம்மைப் பணித்தனர். பொலிஸில் மூன்று பேரிடமும் வாக்கு மூலம் பெறப்பட்டதன் பின்னர் எம்மை களுத்துறை சிறைச்சாலைக்கு அழைத்துச் சென்றனர். சிறைச்சாலையில் 21 நாள் இருந்தேன்.
பொய்யான வாக்குமூலம்
தேரரை அடிக்க வேண்டாமென அழுதோம். அவர்கள் கேட்கவில்லை. அவரை அடித்தார்கள் என ஒரு சாட்சி பொய்ச்சாட்சி வழங்கினார். அவரது மனைவி இப்படி சாட்சியம் அளித்தார். நான் சொல்வது பொய்ச்சாட்சியாக இருந்தால் நானும் எனது கணவரும், பிள்ளைகளும் வாகனத்தில் மோதி சாகவேண்டும் என சாட்சியமளித்தார். என்னைக்காட்டி நான் அடித்ததாகவும் கூறினார்கள். குருந்துவத்த தேரரை வற்புறுத்தியே மனம் மாற்றியுள்ளார்கள்.
எம்மீது தாக்கினர்
எனது தம்பியை பொலிஸ் நிலையம் அழைத்துவருகையில் தேரர்கள் தாக்கியுள்ளனர். அதனால் அவரது முகம் வீங்கியிருந்தது. பொலிஸ் ரிமாண்டில் வைக்கப்பட்டிருந்த போது அங்கு வந்த தேரர்கள் ரிமாண்டில் இருந்த சக கைதிகளைப் பார்த்து அடியுங்கள், கொன்று போடுங்கள் எனச் சத்தமிட்டனர். இவர்களை கொன்றால் உங்களை வெளியே எடுப்போம் எனத் தேரர்கள் கத்தினர் ரிமாண்டில் வைத்திருக்கையில் காலில் வீழ்ந்து மன்னிப்பு கோருமாறு வற்புறுத்தினர். அப்போது அங்கிருந்த பெரும்பான்மைக் கைதிகள் எம்மைத் தாக்கினர். பின்னர் ரிமாண்டிலிருந்த பெரும்பான்மைக் கைதிகள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.
வழக்கு ஒத்திவைப்பு
இப்போது நாங்கள் விடுவிக்கப்பட்டுள்ளோம். வழக்கு விசாரணை ஆகஸ்ட் 6ம் திகதி நடைபெறவுள்ளது. உண்மையான விசாரணை இடம்பெற்றால் நீதி கிடைக்கும் என நம்புகிறேன்.
வீடு தாக்கப்படவில்லை
தர்காநகர் வன்முறைச் சம்பவங்களின் போது எமது வீடு தாக்கப்பட வில்லை. சம்பவ தினத்தன்று மூன்று முச்சக்கரவண்டிகளில் வீட்டை உடைக்க வந்திருக்கிறார்கள். எனினும் பொலிஸாரின் தலையீட்டால் அது தவிர்க்கப்பட்டுள்ளது.
ஸிராஜ் எம். சாஜஹான்
(நன்றி: நவமணி)
No comments:
Post a Comment