நினைத்துப் பார்க்கின்றேன்..... - 01
என் வாழ்வில் பெருநாளும், நானும்
சுமார் 40 வருடங்களுக்கு முன் நடந்த ஒரு நிகழ்வை முதற்தடவையாக எழுத்தில் பதிய விடுகின்றேன்...
அப்போது நான் மாணவன்.
வீட்டில் ஒரே மகன் என்பதால் எனக்குப் பெருநாள் விசேடம் தான்.
வாப்பா எப்படியும் பெருநாளைக்கு எனக்குப் பல புத்தாடைகளை வாங்கித் தந்து விடுவார்.
ஒரு பெருநாளன்று...
எனக்கு 'ஆரியசூட்' (சிங்கள ஆண்கள் அணியும் ஆடை. இலங்கையின் தேசிய ஆடையும் கூட) எனக்கு வாங்கித் தந்திருந்தார். எனக்கு ஞாபகம். வெள்ளை நிற பட்டுத்துணியாடை அது.
சிறிய வயதில் பெருநாளன்று புத்தாடைகளை அணிந்து கொண்டு நண்பர்களுடன் சேர்ந்து பாதை வழியே திரிவதும், ஜில்போல (மாபிள்) விளையாடுவதும் முக்கிய விடயம். பெருநாள் என்றாலே அதுதான் என்பது போல...
நானும் கிராமத்தின் அந்த மரபுக்கு விதிவிலக்காகவில்லை.
எனது புதிய 'ஆரியசூட்டை' அணிந்து கொண்டு நண்பர்களுடன் சேர்ந்து ஊர் சுற்ற ஆரம்பித்தேன்.
அச்சமயம் ஆரியசூட் எமது கிராமத்தவர்களுக்கு புதிது. எனவே நான் ஒரு ஹீரோ போல நடந்து சென்றேன்.
அப்போது....
என்னை விட ஓரிரு வயது குறைந்த பையன் ஒருவன் (என் குடும்பத்தினரும் கூட) என் உடையை மிகுந்த ஆசையுடன் பார்த்தான். அவன் மிகவும் வரிய நிலையில் வாழ்ந்தவன். ஒரு நேர சாப்பாட்டுக்குக் கூட கஷ்டப்படுபவர்கள்.....
என் புத்தாடையை தொட்டுப்பார்த்தான்.
முகர்ந்து பார்த்தான்.
அவன் கண்களில் நீர் துளிகள் கசிந்தன.
அவனது பெருமூச்சு சிறியவனாக இருந்தாலும் என்னை வெகுவாகப் பாதித்தது.
அந்த வயதிலும் அவனது ஏக்கத்தை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.
அவனது பார்வை -
அவனது கண்ணீர் -
அவனது பெருமூச்சு......
என்னை மிகவும் காயப்படுத்தி விட்டது.
வீட்டுக்கு வந்து முதல் வேலையாக ஆரியசூட்டை கலட்டி விட்டு பழைய உடுப்பொன்றை அணிந்து கொண்டேன்.
இது ஒரு சிறிய விடயமென்றாலும்
ஒவ்வொரு பெருநாள் வரும் போதும்
அவனது பார்வை -
அவனது கண்ணீர் -
அவனது பெருமூச்சு.
என் மனக்கண் முன்பே வந்து நிற்கும்.
இப்போதும் கூட
அன்றிலிருந்து இன்றுவரை.....
பெருநாள் தினத்தன்று நான் புத்தாடை அணிந்து பள்ளிவாயிலுக்கு சென்று வந்தபின்
என் பெருநாள் முடிந்து விடும்.
அதில் எனக்குத்திருப்தி.
பெருநாளன்று நான் எங்கும் செல்லமாட்டேன்.
ஆனால் வீட்டுக்கு வருபவர்களை
இன் முகத்துடன் வரவேற்று உபசரிப்பேன்.
அன்று ஏற்பட்ட மனப்பாதிப்பை
இன்றுவரை எனக்கு மறக்க முடியாமல் இருப்பது
உளவியலின் பார்வையில்
ஒரு மனக்குறைபாடாக இருக்கலாம்.
ஆனால் என் பார்வையில்....
எனக்கு அது சரியாகவே
40 ஆண்டுகள் கடந்தும் படுகிறது.
நான் மரணிக்கும் வரை
இதையே விரும்புகின்றேன்.
No comments:
Post a Comment