Tuesday, 23 September 2014

மேகத்துக்குள் மறைந்தியங்கும் சூரியனாய்...... : என் பார்வையில் செல்வராஜா - கலாபூஷணம் புன்னியாமீன் -

அக்டோபர் 20 2014 அன்று தனது 60வது அகவையில் காலடி எடுத்து வைக்கும் சிரேஷ்ட நூலகவியலாளர் என். செல்வராஜா அவர்கள் பற்றிய என் மனப்பதிவுகள்



மூன்று தசாப்தங்களுக்கு மேலான எனதிலக்கியப் பயணத்தில் 2003 ஜனவரி வரை நூலகவியலாளர் என். செல்வராஜா அவர்களுடன் எனக்கு எந்த விதமான தொடர்புகளும் இருக்கவில்லை. ஊடகங்களில் அவரது சில கட்டுரைகளை வாசித்துள்ளேனே தவிர அவரைப்பற்றி வேறு ஒன்றையும் நான் தெரிந்திருக்கவில்லை.

2002ம் ஆண்டில் இறுதியில் பேராதனைப் பல்கலைக்கழக நிகழ்வொன்றில் கலந்து கொள்ள பல்கலைக்கழகம் சென்ற நேரத்தில் சிரேஷ்ட துணை நூலகவியலாளர் மகேஸ்வரன் அவர்கள் 'நூல் தேட்டத்தில்' உங்களுடைய புத்தகங்கள் பற்றிய பதிவுகள் இடம்பெற்றுள்ளன' என்று கூறும் வரை நூல்தேட்டம் பற்றியும் நான் அறிந்து வைத்திருக்கவில்லை.

பின்பு ஒரு நாள் கொழும்பு பூபாலசிங்கம் புத்தகநிலையத்திற்கு சென்றிருந்த நேரத்தில் நூல்தேட்டம் முதலாம் தொகுதியைக் கண்டு அதனை நான் விலை கொடுத்து வாங்கினேன். லண்டனில் அச்சிடப்பட்ட அந்த நூலில் 1000 தமிழ் நூல்கள் பதிவாக்கப்பட்டிந்தன. நூலில் 003  வது பதிவாக என்னுடைய இலக்கிய விருந்து எனும் நூலும், 445 வது பதிவாக பாலங்கள் எனும் கவிதைத் தொகுப்பு நூலும் பதிவாக்கப்பட்டிருந்தன. இந்நூல்கள் இரண்டும் இந்தியா - தமிழ்நாட்டில் பதிப்பிக்கப்பட்டு வெளிவந்தவையாகும். எனவே அவர் இந்தியா சென்ற நேரத்தில் அவற்றைப் பெற்றிருப்பார் என எனக்குள்ளேயே முடிவெடுத்துக் கொண்டேன்.

2003ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ஒரு நாள்....
--------------------------------------------------------------
எனக்கு இலண்டனிலிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. 'புன்னியாமீன்.. நான் இலண்டனிலிருந்து செல்வராஜா கதைக்கின்றேன்....'  ஆளுமையான அதேநேரம் கனிவான ஒரு குரல் இலாவகமாகத் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டது.

'உங்களுடைய முஸ்லிம் எழுத்தாளர் விபரத்திரட்டு முயற்சிகள் எந்தளவு உள்ளன?' அவர் கேட்ட போது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. 'ஓர் உண்மையான ஆய்வாளன் தன்னைப்பற்றி மாத்திரம் சிந்திக்க மாட்டான், அவனது சிந்தனை பரந்துபட்டிருக்கும்' என்பதனை அன்று அனுபவரீதியாக நான் உணர்ந்து கொண்டேன்.

சுமார் 25 நிமிடங்கள் மட்டில் எமது உரையாடல் தொடர்ந்தது. எமது உரையாடலில் 'நூல்தேட்டம்' பற்றிய கருத்துக்களும், எனது எழுத்தாளர் விபரத்திரட்டு பற்றிய கருத்துக்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டன. என்னுடைய ஏனைய நூல்விபரங்களைப் பெற்றுக் கொள்வதற்காகவும், என்னுடைய எழுத்தாளர் விபரத்திரட்டில் இடம்பெற்ற  எழுத்தாளர்களின் நூல் விபரங்களைப் பெற்றுக் கொள்வதற்காகவும் விபரத்திரட்டுப்படிவத்தை அனுப்பி வைப்பதாகக் குறிப்பிட்டார்.

- முதல் முறை அவர் கதைத்தபோதே அவரின் பேச்சில் ஒரு வசீகரத்தன்மையை நான் உணர்ந்தேன்.

- அவரின் இரத்தத்தோடு ஊறிய இலக்கிய  தாகத்தின் விளைவான ஆவணப்படுத்தல் உணர்வினை அறிந்துகொண்டேன்.

- தன் அனுபவத்தின் ஊடாக பிறருக்கு அறிவுரை கூறும் பண்பைத் தெரிந்துகொண்டேன்.

முதல் தொலைபேசி அழைப்பையடுத்து எமது உறவு மிக நெருக்கமானது. வாரத்தில் மூன்று அல்லது நான்கு தினங்கள் நாங்கள் தொலைபேசியினூடாக கருத்துகளைப் பரிமாறிக்கொள்வோம்.

பிறப்பால் செல்வராஜா ஒரு இந்துவாக இருந்தபோதிலும் கூட இஸ்லாம் மதத்தைப் பற்றி, இலங்கையின் இஸ்லாமிய எழுத்தாளர்கள் பற்றி, அவர்களின் நூல்கள் பற்றி நிறைய அறிந்து வைத்திருந்தார்.

சுமார் இரண்டரை ஆண்டு தொடர்பில் அவரைப்பற்றியும், அவரது இலட்சியங்கள் பற்றியும், அவரது பண்புகள் பற்றியும் நிறைய விளங்கிக்கொண்டேன்.

அவரின் குணாதிசயங்களினூடாக அவரைப்பற்றி உயர்ந்த எண்ணம்  என் மனதில் இடம்பிடித்தது. இக்காலகட்டங்களில் நவமணி பத்திரிகையில் நான் எழுதிக்கொண்டிருந்த இலங்கை முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு தொடருக்கு நியாயமான ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் வழங்கிவந்த அதேநேரத்தில் இலண்டன் ஐ.பி.சி. வானொலியில் முஸ்லிம் எழுத்தாளர்கள் பற்றிய குறிப்புகளையும் சேர்த்துக்கொண்டார்.

எனது சிந்தனை வட்ட வெளியீட்டுப் பணியகத்தின் 100வது வெளியீட்டின் போது நான் இலங்கையின் ஐந்து சிரேஷ்ட  எழுத்தாளர்களையும் கல்விமான்களையும் பல்கலைக்கழக பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் முன்னிலையில் பிரமாண்டமான முறையில் கௌரவித்தேன். 2000 ஆண்டில் கண்டி சிட்டிமிஷன் கேட்போர் கூடத்தில் இந்த கௌரவிப்பு விழா நடந்தேறியது. திருவாளர் டொமினிக் ஜீவா, திருமதி இராஜேஸ்வரி சண்முகம், திருவாளர் ஸ்ரீதர்சிங், அல்ஹாஜ் எஸ்.எச்.எம்.
ஜெமீல் ஆகியோருக்கு இவ்விழாவிலே  கௌரவிப்பு வழங்கப்பட்டது.


   
2005ம் ஆண்டு இறுதிப் பகுதியில் சிந்தனைவட்டத்தின் 200வது புத்தகம் வெளிவரக்கூடிய நிலையில் இருந்தது. இதனையும் ஒரு பெருவிழாவாகக் கொண்டாடி என். செல்வராஜா அவர்களை பிரதம அதிதியாக அழைப்பதுடன் அவரை கௌரவிக்கவும் முடிவெடுத்தேன். 2005ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஒரு குறுகியகால விஜயத்தை மேற்கொண்டு செல்வராஜா இலங்கை வரவிருந்தார். இதனை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்ள நான் ஆசைப்பட்டேன்.

என் விருப்பத்தை அவரிடம் தெரிவித்தபோது உடனே விருப்புத் தெரிவிக்காவிடினும் கூட சில நிபந்தனைகளுடன் தனது சம்மதத்தினைத் தெரிவித்தார். அந்த நிபந்தனைகளில் முக்கியமானது கண்டியிலுள்ள எழுத்தாளர்களை குறிப்பாக முஸ்லிம் எழுத்தாளர்களைத் தான் சந்திக்க ஏற்பாடு செய்து தர வேண்டும் என்பதே.

இதற்கமைய 2005 செப்டெம்பர் 11ம் திகதி சிந்தனைவட்டத்தின் 200வது நூல் வெளியீட்டினை நான் பிறந்த மண்ணிலே பிரமாண்டமான முறையி;ல் முழுநாள் நிகழ்வாகக் கொண்டாடுவதற்கான  ஏற்பாடுகளைச் செய்தேன்.

மனித நேயரைச் சந்தித்த போது ...
--------------------------------
2005 செப்டெம்பர் 10ம் திகதி
அன்று தான் என். செல்வராஜா அவர்களை நான் முதன்முதலில் நேரடியாகச் சந்தித்தேன்.

கொழும்பிலிருந்து செல்வராஜா அவர்களையும், நவமணி பிரதம ஆசிரியர் (மர்ஹும்) அஸ்வர் அவர்களையும் சகோதரர் சட்டத்தரணி ஏ. எம். ஜிப்ரி எங்கள் வீட்டுக்கு அழைத்து வந்தார்.

அன்றைய தினம் இரவு சுமார் 09 மணியிலிருந்து நானும் செல்வராஜா அவர்களும் நவமணி அஸ்ஹர் ஹாஜி அவர்களும் (விடிந்தால் விழா என்பதை மறந்து) அதிகாலை 3மணி வரை என் வீட்டு மேல்மாடியில் கதைத்துக் கொண்டிருந்தோம்.

இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்று 10 ஆண்டுகள் கழிந்து விட்டன. நவமணி ஹாஜியாரும் மரணித்து விட்டார். ஆனால் அந்தக் காத்திரமான கலந்துரையாடலை இன்று வரை என்னால் மறக்க முடியாது. ஏனெனில் சுமார் 6 மணித்தியாலங்கள் அளவில் இலங்கையில் முஸ்லிம்களின் இலக்கியத்துறை பற்றியும், அவர்களின் இலக்கிய ஆர்வம் பற்றியும், ஈழத்து இலக்கியப் பரப்பில் முஸ்லிம் எழுத்தாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றியும், தமிழ்இலக்கிய முயற்சிகளை ஆவணப்படுத்துவது பற்றியும் கதைத்துக்கொண்டிருந்தோம். அச்சந்தர்ப்பத்தில் செல்வராஜா அவர்கள் ஈழத்து முஸ்லிம் இலக்கியம் பற்றி எவ்வளவு தூரம் தெரிந்து வைத்துள்ளார், ஆராய்ந்துள்ளார். என்பதை எம்மால் உணர்ந்து கொள்ள முடிந்தது.

செப்டம்பர் 11ம் திகதி எமது விழா திட்டமிட்டபடி உடத்தலவின்னை மடிகே க/ ஜாமிஉல் அஸ்ஹர் மத்திய கல்லூரியில் அஸ்ரப் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

முழுநாள் விழாவினை இரண்டு அமர்வுகளாக நான் ஏற்பாடு செய்திருந்தேன்.

முதலாவது அமர்வில் சிந்தனைவட்டத்தின் 200வது நூல் வெளியீடும், சான்றோர் கௌரவிப்பும் இடம்பெற்றது. இதில் என். செல்வராஜா அவர்களுக்கு எழுத்தியல் வித்தகர் பட்டம் வழங்கி மனங்கொளத்தக்க விதத்தில் கௌரவிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. இவ்விழாவில் பெருந்தகைகளான ஏ.எச்.எம். அஸ்ஹர் அவர்களுக்கு இதழியல் வித்தகர் விருதினையும், மூத்த பெண்  எழுத்தாளர் நயீமா சித்தீக் அவர்களுக்கு சிறுகதைச் செம்மல் விருதினையும், மூத்த கவிஞர் எம்.எச்.எம்.ஹலீம்தீன் அவர்களுக்கு இருமொழி வித்தகர் விருதினையும், எம்.என்.என். ரஸீன் அவர்களுக்கு சமூக சேவை செம்மல் விருதினையும் வழங்கி கௌரவித்தோம்.



உடத்தலவின்னை வரலாற்றில் நடைபெற்ற பிரமாண்டமான அதேநேரம் வித்தியாசமான இலக்கிய நிகழ்வாக பலராலும் விதந்து பேசப்பட்ட நிகழ்வாக அது திகழ்ந்தது.

75க்கும் மேற்பட்ட எழுத்தாளர்களும், ஊடகவியலாளர்களும் 200 க்கு மேற்பட்ட இலக்கிய ஆர்வலர்களும் கலந்து கொண்ட அந்த விழாவின் 2வது அமர்வாக எழுத்தாளர் சந்திப்பும், கலந்துரையாடலும் இடம்பெற்றது. இந்த அமர்வினை செல்வராஜா அவர்கள் பெரிதும் விரும்பியதுடன் வந்திருந்த அனைத்து எழுத்தாளர்களும் ஊடகவியலாளர்களும் தனிப்பட்ட முறையில் கருத்துக்களை அவருடன் பரிமாறிக்கொண்டமையானது அவரின் இலக்கியம் சார்ந்த உத்வேகத்தினை  எடுத்துக் காட்டும் சந்தர்ப்பமாகவே அமைந்தது.

மன உணர்வுகளைப் புரிந்து கொள்ளல்.
--------------------------------------------------
இலங்கையில் தமிழ் முஸ்லிம் இன உறவுகள் எனும் தலைப்பில் 2007- மார்ச் மாதம் 10ம் திகதி லண்டன் நகரில் கலந்துரையாடலுடன் பொதுக் கூட்டமொன்றுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

லண்டன் தேசம் சஞ்சிகை இதனை ஒழுங்கு செய்திருந்தது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொள்ள என்னை அழைத்திருந்தார்கள். என்னை அழைப்பதற்கான ஏற்பாடுகளை தேசம் ஆசிரியர் த. ஜெயபாலன் அவர்கள் மேற்கொண்டிருந்தார்.

இந்நிகழ்வில் கலந்து கொள்ள நான் 2007- மார்ச் மாதம் 8ம் திகதி இலண்டன் நோக்கி பயணமானேன். என் வாழ்வில் முதல் விமானப் பயணம் அது. சற்றுப்பய உணர்வுடன் இரவு 7 மணியளவில் ஹீத்ரோ விமான நிலையத்தில் இறங்கினேன். நடுங்கும் குளிர் ஒரு புறம். பய உணர்வு மறுபுறம்.

நான் வெளியே வந்தபோது ஹீத்ரோ விமான நிலையத்தின் பயணிகள் வெளியேறும் வாயிலருகே என். செல்வராஜா அவர்கள் எனக்காக காத்திருந்தார். அவரைக் கண்டதும் தான் உறைந்திருந்த என்இரத்தம் மீண்டும் செயற்பட ஆரம்பித்தது. என் முகத்தில் இழையோடிய பய உணர்வினை அவதானித்த அவர் வார்த்தைகளால் தைரியத்தை ஊட்டி அவருடைய காரிலே லூட்டனில் உள்ள அவருடைய வீட்டிக்கு அழைத்துச் சென்றார்.

இலண்டனில் இருந்த சுமார் 3 வாரத்தில் 17 நாட்கள் செல்வராஜா அவர்களின் வீட்டிலேயே தங்கியிருந்தேன். அவரின் விருந்தினராக இருந்த நிகழ்வினை எனக்கு மறக்க முடியாது.


விருந்தினர்களை கௌரவிக்கும் பண்பினையும், விருந்தோம்பும் பண்பினையும் அவரிடமும் அவரின் மனைவி விஜி (அக்கா) விடமும் பிள்ளைகளிடமும் நான் நன்கு கண்டு கொண்டேன். அந்தப் 17 தினங்களும் செல்வராஜாவின் வீட்டிலிருந்த பொழுது எனக்கு அந்நியமாகத் தோன்றவில்லை. என் குடும்பத்தினர்; ஒருவரது வீட்டில அந்நியோன்னியமாக இருக்கும் உணர்வே ஏற்பட்டது.

இலண்டனில் நான் கலந்து கொள்ள இருந்த கூட்டங்கள், நான் சந்திக்க வேண்டி இருந்தவர்கள், நான் சந்திக்க வேண்டுமென அவர் விரும்பியவர்கள் அனைவரையும் சந்திக்க அவரே அழைத்து சென்று சந்திக்க வைத்தார்.

நான் எழுதிய நூறாவது புத்தகமான இலங்கை எழுத்தாளர் ஊடகவியலாளர் கலைஞர்களின் விபரத்திரட்டு 4 ம் தொகுதியின்  வெளியீட்டு விழாவினை என் இலண்டன் பயணத்துடன் இணைந்த வகையில் 2007மார்ச் 17ம் திகதி ஜேர்மன் டியுஸ்பேர்க் நகரில் வெளியிடுவதற்கான ஏற்பாடுகளை
ஜேர்மன் தமிழ் எழுத்தாளர் சங்கம் ஏற்பாடு செய்திருந்தது.
   
இதற்கான ஏற்பாடுகளை நான் இலங்கையில் இருந்தபோதே ஜேர்மன் தமிழ் எழுத்தாளர் சங்கம் ஒழுங்கு செய்திருந்;தது. இருப்பினும் வைத்தியக் காப்புறுதி சான்றிதழை சமரப்;பிக்கத் தவறியமையினால் ஜேர்மன் செல்வதற்கான வீஸாவினை என்னால் பெற்றுக்கொள்ள முடியவில்லை. ஆனால் இலண்டனுக்கான வீஸாவினை நான் பெற்றிருந்தேன். இலண்டனில் வைத்து ஜெர்மனிக்கான வீஸாவினை ப் பெற முயற்சிகள் மேற்கொண்ட போதிலும் கூட அவையும் தோல்வியில் முடிந்தது.

இதனால் நான் மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டேன். முக்கியமாக எனது நூறாவது புத்தகத்தின் வெளியீடு அது. என் மனஅழுத்தத்தைப் புரிந்து கொண்ட செல்வராஜா குடும்பத்தினர் அனைவருமே எனக்கு ஆறுதல் தந்து  என்னைத் தேற்றினார்கள். அத்துடன் என் மனநிலையைப் புரிந்து கொண்ட செல்வராஜா அவர்கள் என் சார்பாக ஜேர்மன் சென்று அவ்விழாவிலே கலந்து கொள்வதாகக் குறிப்பிட்டார். நான் இலண்டன் சென்ற காலகட்டத்தில் சுகயீனம் காரணமாக மருத்துவ விடுகையில் அவர் இருந்தார். தனது சுகயீனத்தையும் பொருட்படுத்தாமல் எனது 100வது புத்தக வெளியீட்டில் என்சார்பாகக் கலந்து கொள்ள முடிவெடுத்தபோது அவரை என் உடன் பிறந்த சகோதரனாகவே நான் உள்வாங்கிக் கொண்டேன். எனக்கு சகோதரர்கள் யாரும் இல்லை. அந்தக்குறையை என்னில் களைந்தெறிந்தவர் செல்வராஜா தான் என்பதனை எச்சந்தர்ப்பத்திலும் நான் கூறிக்கொள்ளப் பின்னிற்க மாட்டேன்.

அன்று முதல் இன்று வரை ஒரு நண்பன் என்ற போர்வையில் அல்லாமல் ஒரு சகோதரனாகவே அவருடனும் அவர் குடும்பத்துடனும் நானும் எனது குடும்பத்தினரும் பழகி வருகின்றோம். அது போன்று அவர் குடும்பத்தினரும் என் குடும்பத்தினரோடு சகோதர வாஞ்சையுடனேயே பழகுவதையிட்டு மகிழ்வெய்துகிறேன்.

நான் இலண்டனில் இருந்த மூன்று வாரங்களும் ஒரு நிகழ்ச்சித் திட்டமொன்றை எனக்கென தயாரித்துத் தந்து அதன் படி செயற்பட தூண்டிய அவரின் பண்பினை என்னால் மறக்கவே முடியாது.

செல்வராஜா அவர்கள் தனது தொழில் மூலமாக  கிடைக்கும் வேதனத்தின் பெரும் பகுதியினையும் நேரத்தின் பெரும்பகுதியையும் தமிழ் இலக்கிய முயற்சிகளுக்காகவும் நூல் தேட்டப் பணிகளுக்குமே செலவிட்டு வருவதை நான் கண்கூடாக அவதானித்திருக்கின்றேன்.

நூல் தேட்ட தேடல்களுக்காக அவர் இலங்கை புலம்பெயர் நாடுகளான ஜெர்மனி, பிரான்ஸ், கனடா மற்றும் இந்தியா, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு தனது சொந்த செலவில் அடிக்கடி சென்று ஈழத்து எழுத்தாளர்களின் தமிழ் நூல் விபரங்களை சேகரிப்பார். தனது அலுவலக வேலை முடிந்து வீடு வந்ததும் சுமார் 04, 05 மணித்தியாலங்கள் நூல்தேட்ட பதிவுகளிலும் எழுத்துப் பணிகளிலுமே ஈடுபடுவார். எத்தகைய குளிர் காணப்பட்டாலும் அதிகாலை 6 மணிக்கெல்லாம் எழுந்து அலுவலகம் செல்லும் வரை நூல் தேட்டப் பணிகளை மேற்கொள்வார். நூல் தேட்டத்திற்காக ஒரு நூலைப் பதிவு செய்வதற்கு அந்த நூலை வாசித்து ஆராய்ந்த பின்பே அவர் தனது மடிக்கணணியுடாக அதனை பதிவில் இடுவார். இதனையும் நான் என் கண்களாலே கண்டேன்.

குடும்பத்தின் இதர பொறுப்புக்களை இவரின் மனைவி ஏற்றிருப்பது இவரின் இலக்கிய நூல்தேட்டப் பணிகளுக்கு பெரிதும் உதவியாக இருந்து வருகின்றது. ஓர் எழுத்தாளனின் வெற்றியின் பின் அவரின் இல்லாளின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது என்பார்கள். அவரைப் பொருத்தமட்டில் இது நூறுவீத உண்மை. அவரின் ;செயற்பாடுகளுக்கு மனைவி மற்றும் பிள்ளைகள் வழங்கும் ஒத்துழைப்பு விசாலமானது.

திட்டமிடலும், நேர முகாமைத்துவமும்.
-------------------------------------
செல்வராஜாவிடம் நான் அவதானித்த மிக முக்கியமான பண்புகளாவன திட்டமிடலும், நேர முகாமைத்துவமுமாகும். இதனை நான் ஏற்கனவே அறிந்து வைத்திருந்தாலும் கூட நூல்தேட்டம் தொகுதி 07காக பேராதனைப் பல்கலைக்கழக நூலகத்தில் நூல் விபரங்களை பதிவு செய்ய வந்த நேரத்தில் என்னால் நேரடியாக அவதானிக்கக்கூடியதாக இருந்தது.
   
பேராதனைப் பல்கலைக்கழக நூலகத்தில் காணப்பட்ட நூல்களைப் பார்வையிட்டு பதிவுசெய்வதற்கான அனுமதியை அவர் இலண்டனில் இருந்து வருவதற்கு சுமார் 6 மாதங்களுக்கு முன்பே நூலகத்தில் தமிழ் நூல்களுக்குப் பொறுப்பான சிரேஷ்ட துணை நூலகர் இ. மகேஸ்வரனிடம்  பெற்று வைத்திருந்தார்.

பேராதனைப் பல்கலைக்கழகத்திற்கு சுமார் 15 கிலோமீற்றர் தொலைவில் எனது வீடு அமைந்திருந்ததினால் சுமார் மூன்று வாரங்கள் எனது வீட்டில் தங்கி இப்பணியை நிறைவேற்ற அவர் திட்டமிட்டார்.

2010ம் ஆண்டு மார்ச் மாதம் அவரது இலங்கை வருகை தொடர்பாக ஆறு மாதங்களுக்கு முன்பே நிகழ்ச்சி நிரலை தயாரித்து எனக்கு அனுப்பிவைத்திருந்தார். அவரின் நிகழ்ச்சி நிரலுக்கேற்ப சுமார் 3 வாரங்களுக்குள் 500 புத்தகங்களைப் பதிவாக்க வேண்டும் என்பது  அவரின் திட்டமாகும். அதற்கேற்ப போக்கு வரத்து வசதிகளுடன் எனது அலுவலகத்தில் பணியாற்றும் ஜெ. இல்முன் நிஸா அவர்களையும் செல்வராஜா அவர்களின் பதிவு உதவிக்காக ஏற்பாடுகளை செய்திருந்தேன்.

சுமார் 6 மாதங்களுக்கு முன் எதனைத் திட்டமிட்டிருந்தாரோ அந்த நிகழ்ச்சி நிரலில் ஒன்று கூட பிசகாமல் நிகழ்த்தியமை என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. உண்மையாக சொல்வதானால் திட்டமிடல் நேரமுகாமைத்துவம் போன்ற விடயங்களை அவரிடம் தான் கற்றுக்கொண்டேன் என்று கூறலாம்.

அவர் இலங்கை வந்த நேரத்தில் கண்டிப் பகுதியைச் சுற்றிப்பார்க்கலாம் என நான் அழைத்த சந்தர்ப்பத்தில் என்னுடைய குறிக்கோள் குறைந்தது 500 புத்தகங்களைப் பதிவாக்குவது எனவே தயவு செய்து சுற்றுலாவுக்கு எல்லாம் அழைக்காதீர்கள் என உறுதியாக கூறிவிட்டார். ஒரே நோக்கில் இருந்தமையினால் மூன்று வாரங்களுக்குள் அவரால் 700 புத்தகங்களை பதிவாக்க முடிந்தது.

சுமார் காலை 8 மணிக்கு பல்கலைக்கழகம் செல்லும் அவர் மாலை 4.30 மணிவரை பல்கலைக்கழக
நூல்களைப் படித்து அவற்றை குறிப்பெடுத்துக் கொண்டு இரவில் அதிக நேரம் மடிக்கணணியில் தான் திரட்டிய விபரங்களை பதிவாக்குவார். சில நேரங்களில் நள்ளிரவு 12 மணியையும் தாண்டிவிடும். இவ்வளவு அதிகமாக களைப்படைய  வேண்டாம் என நான் கேட்டுக்கொண்டு மின்குமிழை அணைத்த சந்தர்ப்பமும் உண்டு. நான் தூங்கும் வரை பார்த்திருந்து மின்குமிழைப் போடாமல் கையடக்கத் தொலைபேசியின் மின்குமிழ் வெளிச்சத்தில் வேலை செய்ததை பின்னால் என்னால் தெரிந்து கொள்ள முடிந்தது.

எனவே தன் இலக்கை அடைய அவர் மிகவும் திட்டமிட்டு தியாக சிந்தையுடன் செயற்படுவதாலேயே அவரால் 10000 தமிழ் நூல்களை ஆராய்ந்து பதிவுக்குட்படுத்த முடிந்தது. 

சமூகப்பற்று
-----------
செல்வராஜா அவர்கள் தன் சமூகத்தின் மீதும் அதிக பற்று வைத்திருந்தார். என்னோடு சம்பந்தப்பட்ட ஒரு விடயத்தை நான் சுட்டிக்காட்டியேயாக வேண்டும்.

2009ம் ஆண்டு இறுதி யுத்தத்தின் போது முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களிருந்து தமிழ் மக்கள் இடம் பெயர்ந்து வவுனியா அகதி முகாம்களுக்கு அனுப்பப்பட்டிருந்த நேரத்தில் அகதி முகாம்களிலுள்ள மாணவர்களுக்காக வேண்டி சிந்தனை வட்டமும் தேசம் சஞ்சிகையும் முதல் கட்டமாக 2009ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை எழுதவிருந்த மணவர்களுக்காக வேண்டி சுமார் 27 இலட்சம் ரூபா செலவில் கல்வி நிவராண செயற்திட்டத்தினை ஆரம்பித்தது. இச் செயற்திட்டத்தினை விரிவுபடுத்தி புலமைப்பரிசில் கா.பொ.த.(சா.த) மாணவர்களுக்காக வேண்டி 2010ம் ஆண்டிலும் கல்வி நிவாரண செயற்திட்டத்தை முன்னேடுத்தோம். அதன் போது தனதும் இலண்டனிலுள்ள தனது குடும்பத்தினரதும் சேமிப்பாக சில இலட்சம் ரூபாய்களை தந்துதவினார்.

அத்துடன் மாணவர்களின் நலன் கருதி புக்ஸ் எப்ரோட் நிறுவனத்துடன் இணைந்து சுமார் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை வடக்கு கிழக்கு பகுதிகளிலுள்ள நூலகங்களுக்கு நூல் களைப் பெற்றுக்கொடுப்பதில் அதிக ஆர்வம் காட்டி வந்தார். இக்கட்டத்தில் ஒரு முறை புக்ஸ் எப்ரோட்டால் வழங்கப்பட்ட நூல்களில் மூன்றில் ஒரு பகுதியை எனது சிந்தனை வட்டத்திற்கு தந்து தென் பகுதி பாடசாலைகளுக்கு விநியோகிக்கும் பொறுப்பினை என்னிடம் ஒப்படைத்தார். ஒரு முறை அவரால் அனுப்பப்படும் புத்தகத்தொகையில் எனக்குத் தரப்பட்ட மூன்றில் ஒரு பகுதியை தென்பகுதியிலுள்ள 116 தமிழ் முஸ்லிம் பாடசாலைகளுக்கு நான் வழங்கினேன். அவ்வாறாயின் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை வடக்கு கிழக்கு பிரதேசங்களுக்கு பெற்றுக் கொடுக்கும் நூல்கள் மூலமாக எத்தகைய பயன்களைஅப்பகுதி மக்கள்  பெற்றிருப்பர் என்பதை எம்மால் ஊகிக்கமுடியும்.

3000க்கும் மேற்பட்ட முஸ்லிம் எழுத்தாளர்களின் நூல்களைப் பதிவாக்கியிருப்பது....
----------------------------------------------------------------------------

செல்வராஜா பற்றிக் கூறும் போது பொதுவாக ஒரு விடயத்தையும் குறிப்பிட்டே ஆக வேண்டும்.

20ம் நூற்றாண்டின் இறுதிவரை இலங்கை தமிழ் இலக்கியப்பரப்பில் முஸ்லிம் எழுத்தாளர்கள் பற்றியோ அவர்களின் படைப்புகள் பற்றியோ பெரிதாகப் பேசப்படவில்லை. பல்கலைக்கழக தமிழ்துறைப் பேராசிரியர்கள் விரிவுரையாளர்கள் மற்றும் தமிழ் இலக்கிய ஆய்வாளர்கள் போன்றோர் குறிப்பிட்ட சில முஸ்லிம் எழுத்தாளர்கள் பற்றி தெரிந்திருந்தார்களேயன்றி யாரும் முழுமையான ஆய்வினை நோக்கி செல்ல எத்தனிக்கவில்லை.

இந்தப் பணியினை செல்வராஜா ஆவணப்பதிவாகவே முன்வைத்திருப்பதானது இலங்கை முஸ்லிம்கள் எழுத்தாளர்கள் பெற்ற வரப்பிரசாதமென்பதனை யாரும் மறுப்பதற்கு இயலாது.

2014ம் ஆண்டு வரை செல்வராஜா அவர்களால் வெளியிடப்பட்ட நூல் தேட்டம் 10 தொகுதிகளிலும் 10000 இலங்கைத் தமிழ் மொழி எழுத்தாளர்கள் நூல்கள் பதிவாக்கப்பட்டுள்ளன.

இன மத செயற்பாடுகளுக்கு அப்பால் நின்று ஈழத்து தமிழ் இலக்கிய
நூல்களை ஆவணப்படுத்திவரும் இவர் 3000க்கும் மேற்பட்ட இலங்கை முஸ்லிம் எழுத்தாளர்களின் நூல்களை ஆவணப்படுத்தியிருப்பது குறித்துக் காட்டக்கூடிய ஒரு விடயமேயாகும்.

இலங்கையில் மூத்த எழுத்தாளரும், கல்விமானும் ஆய்வாளருமான எஸ்.எச்.எம். ஜெமீல் அவர்கள் 1994ம் ஆண்டு எழுதி வெளியிட்ட சுவடு ஆற்றுப்படை முதலாம் தொகுதியில் 198 நூல்கள் பற்றிய தகவல்களையும் 1995ம் ஆண்டு வெளியிட்ட இரண்டாம் தொகுதியில் 350 நூல்கள் பற்றிய தகவல்களையும் 1997ம் ஆண்டில் வெளிவந்த மூன்றாம் தொகுதியில் 924 நூல்கள் பற்றிய தகவல்களையும் 2001ம் ஆண்டில் வெளிவந்த நான்காம் தொகுதியில் 500 நூல்கள் பற்றிய தகவல்களையும் ஆவணப்படுத்தியுள்ளார். (தற்போது சுவடி ஆற்றுப்படை 5ம் தொகுதிக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன) இவரால் இதுவரை 1977 முஸ்லிம் எழுத்தாளர்களின் நூல்கள் பதிவாக்கப்பட்டுள்ளது.

ஈழத்து தமிழ் இலக்கியத்தினை எவ்விதப்பாகுபாடும் இன்றி ஒருமுகப்படுத்த வேண்டியதும் அவற்றின் பதிவுகளை திரட்டவேண்டியதும் காலத்தின் தேவையாகி விட்டது.

இத்தகைய நோக்கத்தைக் கொண்ட செல்வராஜா ஒரு சர்வதேச ஆவணப்பதிவான தன்னுடைய நூல் தேட்டத்தில் 3000க்கும் மேற்பட்ட முஸ்லிம் எழுத்தாளர்களின் நூல்களைப் பதிவாக்கியிருப்பது மிகவும் பெறுமதி வாய்ந்த ஒரு நிகழ்வாகும். இதனூடாக  இலங்கையில் முஸ்லிம் எழுத்தாளர்கள் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு ஆற்றிய பங்களிப்புகள் எத்தகையவை என இனங்கண்டு கொள்ளமுடியும்.

இலங்கை தமிழ் இலக்கிய வரலாற்றில் இதுகாலவரை 3000 முஸ்லிம் எழுத்தாளர்களின் நூல்களைப் பதிவாக்கிய தனியொருவராகவே செல்வராஜா திகழ்கின்றார்.

இலங்கையில் காலத்திற்கு காலம் இஸ்லாமிய தமிழ் இலக்கிய ஆராய்ச்சி மாநாடுகள் நடைபெறுவதுண்டு. இம்மாநாடுகளின் போது அரைத்த மாவையே அரைப்பது போல பழமையான ஒரு சில முஸ்லிம் எழுத்தாளர்களின் படைப்புகளே ஆராயப்பட்டுக்கொண்டிருக்கும் நிலையைத ;தவிர்த்து இதுபோன்ற வரலாற்றில் அழிந்து விடக்கூடாத நிகழ்வுகளும் ஆய்வுக்கெடுக்கப்பட வேண்டியது மிகவும் அத்தியாவசியமாதொரு  விடயமாகும்.

அதே நேரம் முஸ்லிம் பண்பாட்டு கலாசாரத் திணைக்களம் போன்ற அரச நிறுவனங்கள் செல்வராஜாவினால் ஆவணப்படுத்தப்பட்டுள்ள 3000 முஸ்லிம் எழுத்தாளர்களின் நூல் விபரங்களை மீள்பதிப்பித்து தனியொரு ஆவணமாக வெளியிடுவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளுமாயின் அது முஸ்லிம்கள் தமிழ் இலக்கியத்திற்கு ஆற்றிய சேவையினை அழியாச் சுவடாக என்றென்றும் பறைசாற்றிக் கொண்டே இருக்கும் என்பது கவனத்திற் கொள்ளப்பட வேண்டிய விடயமாகின்றது.



தனது 60வது அகவைப் பயணத்தில் காலடி எடுத்து வைக்கும் இந்த ஈரநெஞ்சனின் இலக்கியப் பயணம் மௌனமாய்ப் பொழியும் மழை போன்று நிதானமாய்த் தொடர வேண்டும். அதற்கவர் இன்னும் பல்லாண்டு உடலும் உளமும் தேறியவராய் வாழவேண்டும் என்று உளமாரப் பிரார்த்திக்கின்றேன். இந்த இலக்கிய நேசனின் அன்பும் நட்பும் எனக்குக் கிடைத்தமையையிட்டு இறைவனுக்கு நான் நன்றி கூறுகின்றேன். 


No comments:

Post a Comment