Monday, 29 November 2010

''எய்ட்சை நிறுத்து. சத்தியத்தை காப்பாற்று' (Stop AIDS. Keep the Promise." - புன்னியாமீன்

உலக எய்ட்ஸ் விழிப்புணர்வு தினம் -  டிசம்பர் முதலாம் திகதி 20ஆம் நூற்றாண்டில் இறுதிப் பகுதியிலிருந்து உலகை ஆட்டிப் படைக்கும் பயங்கர ஆட்கொல்லி நோயாகவே எய்ட்ஸ் இனங்காட்டப்பட்டது. இந்த கொடிய நோயால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை இன்றுவரை நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டே செல்கிறது. அதேநேரம், அனைத்து நாடுகளும் இந்நோயின் பாதிப்பிலிருந்து விடுவிப்பதற்கான முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு வந்தபோதிலும்கூட, இந்த நோயை பூரணமாகக் கட்டுப்படுத்த இன்றுவரை எந்தவித கண்டுபிடிப்புக்களும் மேற்கொள்ளப்படவில்லை.

உலகளவிலான எய்ட்ஸ் நோய் எதிர்ப்பை குறிக்கும் 'சிகப்பு நாடா சின்னம்" அல்லது 'உலக எய்ட்ஸ் விழிப்புணர்வு தினம்" ஆண்டுதோறும் டிசம்பர் முதலாம் திகதி அனுஸ்டிக்கப்படுகிறது. இந்நாளில் எய்ட்ஸ் நோய் பற்றியும், அதன் கொடிய விளைவுகள் பற்றியும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதை பிரதான நோக்காகக் கொண்டு திட்டமிடப்படுகின்றது.
1981ம் ஆண்டில் உலகின் முதலாவது எயிட்ஸ் நோயாளி அமெரிக்காவில் (U.S.A.) கண்டுபிடிக்கப்பட்டார். முதலாம் நோயாளி இனங்காணப்பட்டு ஏழு ஆண்டுகளுக்குள் 1988ம் ஆண்டு நவம்பர் மாதம் 30ம் திகதி வரை உலக சுகாதார ஸ்தாபன (W.H.O.) அறிக்கையின்படி, 119, 818 நோயாளர்கள் பதிவாகியிருந்தனர்.

இந்நிலையில் எய்ட்ஸ் தினம் பற்றிய எண்ணக்கரு முதலாவதாக 1988 இல் நடைபெற்ற, எய்ட்ஸ் பற்றிய உலக சுகாதார அமைச்சர் மாநாட்டில் உருவானது. இம்மாநாட்டிலேயே எய்ட்ஸ் தினம் அனுஸ்டிக்கப்பட வேண்டுமென தீர்மானிக்கப்பட்டதுடன், டிசம்பர் மாதம் முதலாம் திகதி இத்தினத்தை அனுஸ்டிக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை முடிவெடுத்தது. இதையடுத்து அரசுகளும் தன்னார்வத் தொண்டர் நிறுவனங்களும் இந்நாளை உலகம் முழுவதும் நடைமுறைப்படுத்தி வருகின்றன. ஒவ்வோர் ஆண்டும் ஒரு கருப்பொருளின் அடிப்படையில் நிகழ்வுகள் ஒழுங்குபடுத்தப்படுவது வழக்கம். 1988-2004 வரை எய்ட்ஸ் தினம், ஐக்கிய நாடுகள் சபையின் எய்ட்ஸ் நிறுவனத்தால் நேரடியாக மேற்கொள்ளப்பட்டு வந்தது. 1988ஆம் ஆண்டு இதன் கருப்பொருள் 'தொடர்பாடல்" என்பதாகும். தொடர்ந்து
1989 - 'எய்ட்சும் இளைஞர்களும்',
1990 - 'எய்ட்சும் பெண்களும்',
1991 - 'சவாலை பகிர்ந்து கொள்ளல்',
1992 - 'சமூகத்தின் ஈடுபாடு',
1993 - 'செயலாற்றுதல்',
1994 - 'எய்ட்சும் குடும்பமும்',
1995 - 'உரிமைகளையும், பொறுப்புகளையும் பகிர்ந்து கொள்ளல்',
1996 - 'ஒரு உலகம் ஒரு நம்பிக்கை',
1997 - 'எய்ட்சுடன் வாழும் குழந்தைகள்',
1998 - 'மாற்றத்துக்கான சக்தி',
1999 -'செவிகொடு, கற்றுக்கொள், வாழ்'.
2000 - 'எய்ட்ஸ்: மாற்றம் செய்யும் மனிதர்',
2001 - 'நான் பாதுகாப்புடன் - நீ?',
2002, 2003 - 'தழும்புகளும். சாதக பாதகத்தை வித்தியாசம்காண்',
2004 - 'பெண்கள், எச்.ஐ.வி., எய்ட்ஸ்' ஆகிய தலைப்புகளில் அனுஸ்டிக்கப்பட்டது.
2005 முதல் இப்பொறுப்பு "உலக எய்ட்ஸ் பிரசாரம்" (The World AIDS Campaign) என்ற அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து 2005 முதல் 2010ஆம் ஆண்டுவரை இதன் கருப்பொருள் 'எய்ட்சை நிறுத்து. சத்தியத்தை காப்பாற்று' (Stop AIDS. Keep the Promise." என்பதாகும்.

பல மில்லியன் உயிர்களை காவுகொண்டுள்ள இக்கொடிய நோயைப் பற்றிய முழு விவரங்களை நாம் ஒவ்வொருவரும் அறிந்திருக்க வேண்டியது காலத்தின் தேவையாகும். அவ்வாறு முழுமையாக அறிந்து கொண்டு விழிப்புணர்வுடன் இருந்தால் மட்டுமே எய்ட்ஸ் அரக்கனை வெல்ல முடியும். 'ஒருவர் தானே பெற்ற நோய்த் தடுப்பாற்றல் குறைபாட்டு கூட்டு அறிகுறி" எனப் பொருள் தரும்
எய்ட்ஸ் (AIDS-
Acquired - (பெற்ற)
Immuno -  (நிர்பீடக், )
Deficiency - (குறைபாட்டுச்)
Syndrome- (சிக்கல்) )
என்பது மனித நோய்த் தடுப்பாற்றல் இழப்பைக் குறிக்கும் நோயாகும்.

பல்வேறு நோய்கள் தாக்கப்பட்ட ஒருவருக்கு அவருடைய உடலின் நோய் எதிர்ப்பு சக்தி குறையத் தொடங்கியிருப்பதை மருத்துவ பரிசோதனை உறுதி செய்யும் நிலைதான் எய்ட்ஸ் என்று அழைக்கப்படுகிறது.

எய்ட்ஸ் வைரஸினால் பரவும் நோய்.

எச்.ஐ.வி எனும் வைரஸினால்தான் எய்ட்ஸ் ஏற்படுகிறது. வைரஸ் என்பதை நோயை உண்டாக்கக்கூடிய மிக சிறிய நுண்ணுயிர் என்று சொல்லலாம். பக்டீரியா (Bacteria), பங்கஸ் (Fungus) போன்ற நுண்ணுயிர்களைச் சாதாரண நுணுக்குக்காட்டி (Microscope) மூலம் பார்க்கலாம். சாதாரண நுணுக்குக்காட்டி மூலம் காணமுடியாத அளவிற்கு வைரஸ் மிகச்சிறியது. இதனை மிகவும் சக்தி வாய்ந்த இலத்திரன் நுணுக்குக்காட்டி (Electron Microscope) மூலமே பார்க்கமுடியும். தற்போது இலங்கையில் மிக வேகமாகப்பரவி வரும் பன்றிக் காய்ச்சலும், A H1N1 வைரஸ் தொற்றின் காரணமாகவே பரவுகின்றது.

வைரஸ் கிருமிகள் விருத்தியடைந்து, பெருகுவதற்கு உயிருள்ள கலம் (Cell) தேவை. அது பெருகும் போது, தான் தங்கியிருக்கும் கலத்தை அழிக்கக்கூடும்; அல்லது செயற்திறனைப் பாதிக்கக்கூடும்.
எயிட்சை உண்டாக்கும் HIV வைரஸ் மனித உடலின் நிர்ப்பீடனத் தொகுதியை தாக்குகின்றது. நிர்பீடனத்தொகுதியில் உள்ள ரீ-ஹெல்பர் கலங்களையே (T-helper Cell) இது முக்கியமாகத் தாக்குவதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். HIV வைரஸ் தொற்றியிருக்கும் கலத்தில் பெருகிப் பின் அக்கலத்தை அழித்து வெளியேறுகிறது. வெளியேறிய வைரசுகள் மேலும் பல கலங்களைத் தாக்கி அழித்துப் பெருகுகின்றன. இவ்வாறு நோயாளியின் நிர்பீடனத் தொகுதி பெரிதும் பாதிக்கப்படும். இந்நிலையிலேயே நோய்க்கான அறிகுறிகள் தோன்ற ஆரம்பிக்கிறது.

ஒருவர் எச்.ஐ.வி யுடன் பல ஆண்டுகாலம் வாழ முடியும். ஆனால், அவர் உடல் நோய் எதிர்ப்புச் சக்தியை இழக்கும் போதுதான் எய்ட்ஸ் நோயாளியாகிறார். ஓர் ஆண்டுக்குள் அவருக்கு ஏராளமான நோய்கள் ஒன்றன் பின் ஒன்றாக தொற்றிக் கொள்ளும் நிலை அவருக்கு ஏற்படுகிறது.

எயிட்ஸின் வரலாறு

ஜூன் 5, 1981அன்று அமெரிக்காவைச் சேர்ந்த நோய்கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் சி.டி.சி. ஆண் ஓரினச்சேர்க்கை கொண்டிருந்த 5 நபர்களிடம் ஒரு அரிய வகை நிமோனியாவைக் கண்டறிந்து ஓர் அறிக்கையை வெளியிட்டது. இந்த அறிக்கையே எய்ட்ஸ் கண்டறியப்பட்டதற்கான முதல் ஆவணமாகும். முதலில் எய்ட்ஸ் என்பது ஓரினச்சேர்க்கையோடு தொடர்புடைய நோய் எதிர்ப்பு குறைப்பாடு என்று அழைக்கப்பட்டது. ஓரினச்சேர்க்கை புற்று நோய் என்றும் இது ஆரம்பத்தில் அழைக்கப்பட்டது. இவ்வாறாக எயிட்ஸ் நோய் 1981ம் ஆண்டிலேயே அறியப்பட்ட போதிலும், அதை உண்டாக்கும் வைரஸ் கிருமி 1983ம் ஆண்டிலேயே இனங்காணப்பட்டது. பிரான்ஸ் நாட்டில் உள்ள பாஸ்டர் விஞ்ஞானக் கூடத்தில் (Institute Pasteur) பிரான்சு நாட்டு விஞ்ஞானி லூக் மொண்டிக்கயர் எனும் விஞ்ஞானியால் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. அப்பொழுது இது L.A.V வைரஸ் (Lymphadenopathy associated Virus) என்று பெயரிடப்பட்டது. 1984 ம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள ''தேசிய புற்று நோய் நிறுவனம்" இக்கிருமிதான் எயிட்ஸ் நோயை உண்டாக்குகிறது என்பதை உறுதிப்படுத்தியது. அப்பொழுது இதற்கு H.I.V - type III வைரஸ் ( Human T-Iymphotrophic Virus type III) என்று பெயரிடப்பட்டது. 1986 ம் ஆண்டில் தான் தற்போது பயன்படுத்தப்படும் HIV வைரஸ் (Human (மானுட) I mmuno deficiency (நீர்ப் பீடனக் குறைபாடு.) Virus (வைரசு)) என்ற பெயர் உலகளாவிய ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

HIV வைரஸின் இரண்டு உப பிரிவுகள் இருப்பதாக இப்பொழுது நம்பப்படுகிறது. ஆரம்பத்தில் அமெரிக்கா உட்பட மேற்கத்தைய நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்டதை HIV-I என்றும், பின்பு மேற்கு ஆபிரிக்க நாடுகளில் கண்டு பிடிக்கப்பட்ட புதிய உபபிரிவை HIV - II என அழைக்கிறார்கள்.

எயிட்ஸ் பரவுதல்

உலக சுகாதார அமைப்பின் 2006 கணக்கெடுப்பின்படி உலகளாவிய ரீதியில் எய்ட்ஸ் தொடர்புடைய நோயின் காரணமாக மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 330,000 குழந்தைகள் உட்பட 2.1 மில்லியனாக அதிகரித்திருந்தது. 39.5 மில்லியன் மக்கள் எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டிருந்தனர். இதில், 4.3 மில்லியன் மக்கள் புதிதாக நோய் காவப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆபிரிக்காவின் சகாராப் பாலைவனப்பகுதியை அண்மித்த பகுதி எய்ட்ஸ் நோயினால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட பகுதியாகும். 2007-ல் அப்பகுதியில் எயிட்ஸுடன் வாழ்பவர்களில் 68 % ஐயும், எயிட்ஸினால் மரணமடைந்தவர்களில் 76% ஐயும் உள்ளடக்கியிருந்ததோடல்லாமல், பின்பு வந்த 1.7 மில்லியன் புதிய நோய்த்தொற்றுக்கள், எச் ஐ வி யுடன் வாழ்வோர் எண்ணிக்கையை 22.5 மில்லியன் என்ற அளவிற்கு உயர்த்தியுள்ளதையும், அப்பகுதியில் எயிட்ஸினால் அனாதையாக்கப்பட்ட 11.4 மில்லியன் குழந்தைகள் வாழ்ந்து வருவதையும் உள்ளடக்கியிருந்தது. ஏனைய பகுதிகளைப் போலல்லாமல் சகாராவை அண்மித்த பகுதிகளில் எச் ஐ வி யுடன் வாழ்வோரில் 61% பேர் பெண்களாவர். தென்னாப்பிரிக்காவே உலகிலேயே அதிக அளவில் எச் ஐ வி நோயாளிகளைக் கொண்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து நைஜீரியாவும் இந்தியாவும் உள்ளன.

பொதுவாக HIV மனித உடலில் உள்ள எல்லா திரவங்களிலும் படிந்திருக்கிறது என்றாலும் கூட, இரத்தம், விந்து, பெண்ணுறுப்புகளில் உருவாகும் திரவம், தாய்ப்பால் ஆகியவற்றின் வாயிலாகத்தான் பரவுகின்றது. எனவே ஆண் பெண் உடலுறவின் போது பாதுகாப்பு முறைகளைக் கையாள்வது அவசியமாகின்றது. எச்.ஐ.வி தொற்று உள்ளவருடன் பாதுகாப்பற்ற உடல் உறவு கொள்வோருக்கு இந்த எச்.ஐ.வி தொற்றி விடுகிறது. 80 சதவீத எய்ட்ஸுக்கு காரணம் பாதுகாப்பற்ற உடல் உறவுதான் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. 25 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கு எய்ட்ஸ் அதிகமாக பரவுகிறது. அதற்கு காரணம் அந்த வயதில் அவர்கள் பாலுறவில் அதிக நாட்டமிக்கவர்களாக இருப்பதால் பாதுகாப்பான உடல் உறவை மறந்து விடுகிறார்கள். "நீங்கள் எப்படிபட்டவராக இருந்தாலும், எங்கு வாழ்கிறவராக இருந்தாலும் எச்.ஐ.வி தொற்று பற்றிய விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்' என்று தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு நிறுவனம் மற்றும் யுனிசெப் கூட்டாக வெளியிட்டுள்ள கையேட்டில் தெரிவித்துள்ளது.

மேலும் போதைப் பொருட்களைப் பயன்படுத்துகையில் சுத்தம் செய்யாப்படாத ஊசியை ஒருவருக்கொருவர் செலுத்திக் கொள்வதன் மூலமாகவும் HIV பரவுகிறது. இதே போல் அறுவை சிகிச்சையின் போது சுத்திகரிக்கப்படாத ஆயுதங்களைப் பயன்படுத்துவதனாலும், HIV பரவக்கூடிய வாய்ப்புகள் உள்ளன. அதே நேரம் HIV உள்ள இரத்தம் மூலமாகவும் எளிதாக பரவுகிறது.

பாதிக்கப்பட்ட தாயிடமிருந்து குழந்தைக்கு பரவுதல் எனும் போது
கர்ப்பகாலம், பேறு காலம், தாய்ப்பால் புகட்டும் காலம் ஆகிய காலங்களில் குழந்தைக்கு HIV பரவுகிறது. எயிட்ஸ் நோயுற்றவரின் உடற் திரவங்களுடன் தொடர்பு ஏற்பட்ட எவரையுமே இந்நோய் தாக்கக்கூடும். அதே நேரம் கொனரியா (Gonorrohoea), சிபிலிஸ் (Syphilis), ஹெர்பீஸ் (Herpes) போன்ற ஏனைய பாலியல் நோய் உள்ளவர்களுக்கும், பாலியல் உறுப்புகளில் சிறுகாயங்கள், உரசல்கள் உள்ளவர்களுக்கும். பலரோடு உடலுறவு வைப்பவர்களுக்கும் இந்நோய் ஏற்படக்கூடிய நிகழ்தகவு அதிகம்.
HIV தொற்றியோருடன் சாதாரணமாக சமூக பழக்கவழக்கங்களில் ஈடுபடுவதனூடாகவோ, கைகுலுக்குதல், தொடுதல், கட்டியணைத்தல், விளையாடுதல், புகையிரதம் மற்றும் பஸ் வண்டிகளில் பயணம் செய்தல், வியர்வை, கண்ணீர், சிறுநீர் மற்றும் முத்தமிடல் மூலமாகவோ, பொதுக்கழிப்பறைகள் மற்றும் படுக்கை, அவர்கள் பயன்படுத்திய உணவுப் பாத்திரங்கள் மூலமாகவோ, நீச்சல் குளம் மற்றும் இருமல், தும்மல், கொசுக்கடி மூலமாகவோ பரவாது. இருப்பினும் பொது இடங்களில் சவரம் செய்து கொள்ளும் ஆண்கள் பொதுக் கத்திகளைப் பயன்படுத்தாமல் புதிய சவர அலகுகளை பயன்படுத்துவதை உறுதி செய்து கொள்ளல் வேண்டும்.

எயிட்ஸ் அறிகுறிகள்

அறிகுறிகள் HIV பாதிப்புக்குள்ளான பலரிடம் ஆரம்பநிலையில் அதற்கான அறிகுறிகள் தெரிவதில்லை. இருந்தபோதிலும் சிலரிடம் இது "ஃப்ளு சுரமாக" (காய்ச்சல்) வெளிப்படுகிறது. அதுவும் இந்த வைரஸ் மூன்று முதல் ஆறு வாரங்களுக்குப் பிறகே தெரிகிறது. இந்தத் தீவிர HIV பாதிப்பினால் ஏற்படும் உடல் நலக்குறைவு, காய்ச்சல், தலைவலி, உடல்சோர்வு, குமட்டல், வியர்வை (குறிப்பாக இரவு நேரங்களில் ) நடுக்கம், வயிற்றுப்போக்கு, நெறிகட்டுதல் (அக்குள், கழுத்து) போன்றவற்றினைத் தோற்றுவிக்கின்றது. இந்த அறிகுறிகள் கூட HIV தொற்றிய ஒரு சில நாட்களில் தெரிவதில்லை. மேலும் இது, ஆரம்பநிலையில் வேறு ஏதோ ஒரு வைரஸ் என்று தவறாகவே இனங் காணப்படுகிறது. எனவே ஆரம்ப நிலையில் HIV தொற்றைக் கண்டுபிடிப்பது கடினமாகும்.

தொற்று ஏற்பட்ட முதல் மூன்று மாதங்களில் வைரசின் எண்ணிக்கை கணக்கற்றுப் பெருகி, உடலின் பல பாகங்களிலும் பரவுகின்றன. குறிப்பாக மூட்டுக்களில் உள்ள இழையங்கள் இதனால் பாதிக்கப்படுகின்றன. இந்நிலையில் அத்தொற்று, பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து மற்றவர்களுக்கு எளிதாகப் பரவிவிடுகின்றது.

உடலில் உள்ள நோய் எதிர்ப்பு கலங்களான வெண் குருதித்துணிக்கை அனைத்தும் ஒன்று திரண்டு போராடத் தொடங்கும் போதுதான் HIV யின் வேகம் சற்று குறைகிறது. HIV தொற்றின் தீவிரமான அறிகுறிகள் தெரிய பல வருடங்கள் ஆகின்றன. பெரியவர்களுக்கு HIV தொற்றிய பிறகு அது வெளித் தெரிவதற்கு 10 வருடங்களுக்கும் மேல் ஆகிறது. HIV தொற்றோடு பிறக்கும் குழந்தைகளுக்கு அது தெரிய இரண்டு வருடங்கள் ஆகின்றன. இவ்வாறு அறிகுறிகள் தெரியாத நிலை மனிதருக்கு மனிதர் மாறுபடும்.
"எய்ட்ஸ்" வெளியில் தெரிய ஆரம்பித்த உடன் பாதிக்கப்பட்டவர் அடிக்கடி நோய் வாய்ப்படுவர். உடல் எடை குறைவு, தொடர் காய்ச்சல், வயிற்றுப்போக்கு ஆகியன எய்ட்ஸின் முக்கியமான அறிகுறிகளாகும். மேலும் எய்ட்ஸ் நோயாளிகள், காசநோய், பூஞ்சான் நோய் தொற்று, சில வகைப்புற்று நோய்கள், நிமோனியா போன்ற பல்வேறு நோய்களால் பாதிக்கப்படுகின்றனர்.

எச் ஐ. வீ இரத்தச் சோதனை.

HIV தொற்றடைந்தோர் நீண்டகாலம் செல்லும் வரை எவ்வித நோயறிகுறிகளையும் வெளிக்காட்டுவதில்லை.எனவே புறத்தே தென்படும் பண்புகளை கொண்டு அவர்களை இனம்காண முடியாது. HIV தொற்றடைந்துள்ளோரை இனம்காணப்படுவதற்கு மிகச் சிறந்த முறை அவர்களது இரத்தத்தில் அடங்கியுள்ள HIV பிறபொருளெதிரிகளை இனம்காண்பதாகும். இதற்காக இரண்டு வகை இரத்தச் சோதனைகள் நடத்தப்படுகின்றன.

முதலாவதாக நடத்தப்படும் இரத்தச் சோதனை. ELISA TEST எலைசா சோதனையாகும். இது இனம்காணல் பரிசோதனை (screening test) எனப்படுகிறது. ELISA சோதனையானது HIV தொற்று அல்லாத பிற காரணங்கள் தொடர்பாகவும் நேர் வகை பெறுபேற்றை தர இடமுண்டு.
Western blot test வெஸ்டர்ன் புலொட் சோதனை. இது உறுதிப்படுத்தும் சோதனையாகும் (Conformation test). ELISA சோதனையில் நேர் வகையை காட்டும் ஒவ்வொரு இரத்த மாதிரியும் Western blot சோதனைக்கு உட்படுத்தப்படும். இது ஒரு சிறப்பான சோதனையாகும். இரத்த வகையில் HIV பிறபொருளெதிரி காணப்பட்டால் மாத்திரமே இச் சோதனையின் போது பெறுபேறு காட்டப்படும்.

ELISA சோதனை, Western blot சோதனை ஆகிய இரண்டு சோதனையிலும் (+ ) வகை பெறுபேறு காணப்பட்டால் HIV பிறபொருளெதிரி உண்டு என்பது அல்லது HIV தொற்று ஏற்பட்டுள்ளது என்பது உறுதியாகும்.
இவ்விடத்தில் யார் HIV குருதிப் பரிசோதனையைச் செய்து கொள்ள வேண்டும் என்ற கேள்வியும் எழுகின்றது. குறிப்பாக தமது பாலியல் நடத்தைகள் தொடர்பாக ஒருவருக்கு சந்தேகம் ஏற்பட்டால் அல்லது ஒருவருக்கு HIV தொற்று ஏற்பட்டுள்ளதாக வைத்தியர் சந்தேகப்படுவதாக இருந்தால், மேலும் வேலை வாய்ப்புப் பெறுவதற்கோ வெளிநாட்டு வேலை வாய்ப்பு பெறச் செல்வதற்கோ முன் தேவையாகக் கருதப்படும் சந்தர்ப்பத்தில் இரத்தப் பரிசோதனை மேற்கொள்ளுதல் அவசியமானதாகும். அதேபோல இரத்ததானம் செய்யப்படும்போது

இரத்த மாதிரி ஒவ்வொன்றிலும் HIV தொற்றுக் காணப்படுகின்றதா என்பதை அறிதல் அவசியம். இத்தகைய சந்தர்ப்பங்களில் இரத்த சோதனைகள் செய்து கொள்ளல் வேண்டும். மேலும், சுய விருப்பின் பேரிலும் ஒருவர் இரத்தப் பரிசோதனை செய்து கொள்ளலாம். இத்தகைய இரத்த சோதனைகள் பாலியல் நோய்கள் தொடர்பான வைத்திய நிலையங்களிலும், அரசாங்க, தனியார் வைத்தியசாலைகளிலும், இரத்தப் பரிசோதனையை மேற்கொள்ளும் ஆய்வுகூடங்களிலும், விசேட இரத்த பரிசோதனைக் கூடங்களிலும் இச்சோதனைகளை செய்து கொள்ளலாம்.
HIV தொற்றுக்கு ஆளாகியிருப்பதாக அறுவுத்தலானது மிக உறுத்துணர்வுடைய ஒன்றாக அமையக் கூடுமாதலால் சோதனைப் பெறுபேற்றை அறிந்து கொள்ளத்தக்க வகையில் அவரைத் தயார்படுத்த வேண்டியது அவசியமாகும். இரத்தச்சோதனைக்கு உள்ளானவருக்கே சோதனைப் பெறுபேறு வழங்கப்படும். அதன் அந்தரங்கத் தன்மையைப் பேணுவது சுகாதார ஊழியர் ஒருவரினதும் பொறுப்பாகும். நோய் பற்றித் தீர்மானிப்பதற்காக HIV சோதனை நடத்துதல். இச் சோதனைப் பெறுபேறு அதனைக் கோரிய வைத்தியருக்கு மாத்திரமே வழங்கப்படும். ஒவ்வொரு சுகாதார ஊழியரும் சோதனையின் அந்தரங்கத் தன்மையைப் பேணக்கடமைப்பட்டுள்ளனர்.

எயிட்ஸ் மருந்துகள்

HIV தொற்று ஏற்பட்ட பின்பு அதனை முற்றாக அழிக்க இதுவரை மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை. இதன் காரணமாகவே எய்ட்ஸைக் குணப்படுத்த முடியாத நோயாக கூறப்படுகின்றது. இருப்பினும் HIV கிருமிகள் உடலினுள் பரவும் வேகத்தை குறைக்கக் கூடிய மருந்துகள் இப்போது சந்தையில் கிடைக்கின்றன. நோய்த் தொற்றுக்களுக்கான சிகிச்சையுடன் இந்த மருந்துகளையும் முறையாகப் பயன்படுத்தினால் HIV பாதிப்பு உள்ளவர்கள் பல ஆண்டுகள் ஆரோக்கியத்துடன் உயிர் வாழக்கூடிய நிகழ்தகவு உண்டு.

HIV யைக் கட்டுப்படுத்தும் மருந்துகள் பொதுவாக "ஆண்டி ரெட்ரோ வைரஸ் மருந்துகள்" (Antireteoviral Drugs) என்று அழைக்கப்படுகின்றன. இம்மருந்துகள் பல்வேறு நிறுவனங்களின் மூலம் மூன்று நிலைகளில் கிடைக்கின்றன. இவை இரத்தத்தில் கலந்துள்ள வைரசின் எண்ணிக்கையைக் குறைப்பதுடன், அவை பரவுவதையும் கட்டுப்படுத்துகின்றன. மருந்துகளில் ஏற்படும் ஒவ்வாமையைக் குறைக்க பொதுவாக "ஆன்டி ரெட்ரோ வைரஸ் (Antireteoviral Drugs) மருந்துகளை கலப்பு சிகிச்சை முறையில் தான் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.

'ஆன்டி ரெட்ரோ வைரஸ்" மருந்துகளை பயன்படுத்துபவர்கள் முறையாகவும், தொடர்ச்சியாகவும் சிகிச்சை மேற்கொள்வது அவசியமாகும். HIV க்காக மாத்திரமல்லாமல் அபாயகரமான வைரஸ் தொடர்பாக எத்தகைய தொற்றுக்களுக்கும் இது பொருந்தும். சிகிச்சை மேற்கொள்ளப்படுவது மாத்திரமன்றி வைத்தியர்களின் ஆலோசனைப்படி உரிய மருந்தை உரியநேரத்தில் உட்கொள்ளுதல் அவசியமானதாகும். மாறாக தான் நினைத்தவாறு மருந்துகளை உட்கொண்டால் அதன் பலன் குறைவாகவே இருக்கும். மேலும், தொடர்ச்சியாக மருத்துவரை உரிய நேரத்தில் சந்தித்து ஆலோசயைப் பெறுவதினூடாக, தான் உட்கொள்ளும் மருந்தின் ஆற்றலை அறிந்து கொள்ளவும் அல்லது அதனால் ஏற்படும் பக்க விளைவுகளை அறிந்து விரைவாக அவற்றைப் போக்கிக் கொள்ளவும் முடியுமானதாக இருக்கும். ஒரு முறை 'ஆன்டி ரெட்ரோ வைரஸ்" மருந்துகளை பயன்படுத்த ஆரம்பித்து விட்டால் அவர்கள் வாழ்நாள் முழுவதும் அம்மருந்துகளை பயன்படுத்த வேண்டும். எனினும் இம்மருந்து வகைகளுக்கு அதிக பணம் செலுத்தவேண்டியதால் சிலர் தொடர்ச்சியாகப் பயன்படுத்துவதில்லை. இருப்பினும் தற்போது இம்மருந்துகளின் விலைகள் குறைக்கப்பட்டிருக்கிறது.

அதேநேரம், HIV ஆனது இம் மருந்து வகைகளுக்கு இசைவாக்கமடைந்து எதிர்ப்பைக் காட்டும் ஆபத்து நிலையும் தற்போது உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் HIV தொற்றடைந்தோருக்காகப் பெரும்பாலும் ஏக காலத்தில் இரண்டு அல்லது மூன்று வகை மருந்துகள் வழங்கப்படுவதுண்டு. இவ்வாறான நிலைமைகளில் வைரஸின் இசைவாக்கத்தன்மை குறைவடையலாம்.

HIV தொற்றுக்கு பெரும்பாலும் பின்வரும் மருந்து வகைகளே பயன்படுத்தப்படுகின்றன.
!. Nucleoside analogues
2. NonNucleoside reverse trancriptasinhibirors
3.Protese inhibitors
இந்த மருந்து வகைகள் வெவ்வேறு வர்த்தகப் பெயரில் சந்தையில் காணப்படுகின்றன.

ஆராய்ச்சி நிலையிலுள்ள சிகிச்சை முறைகள்

ஆல்பேர்டா பல்கலைக்கழக (University of Alberta) விஞ்ஞானிகள் எச்.ஐ.வி வைரஸ் பரவுவதைத் தடுக்கும் ஆற்றல் கொண்ட TRIM 22 என்ற ஒரு பரம்பரை அலகைக் (Gene) கண்டுபிடித்துள்ளதாக அண்மையில் அறிவித்துள்ளார்கள். இது பற்றிய செய்தி scienceblog.com ல் வெளியாகியுள்ளது. இந்த பரம்பரை அலகானது எச்.ஐ.வி வைரஸ் மனித கலங்களில் பெருகுவதைத்த தடுக்கும் ஆற்றல் கொண்டது என்பதை அவர்கள் ஆய்வுகூடப் பரிசோதனைகளிலேயே கண்டுள்ளனர். ஆயினும் எச்.ஐ.வி வைரஸ் தொற்றிய மனிதர்களில் வைரஸ் தொற்றை அழிக்கும் முறையை இன்னும் அவர்கள் கண்டறியவில்லை. அதனை கண்டறியும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டுக் கொண்டு இருக்கிறார்கள். இந்த ஜீனைக் கண்டுபிடித்ததன் மூலம் எதிர்காலத்தில் எயிட்ஸ{க்கு எதிரான புதிய இன மருந்தையோ அல்லது தடுப்பு மருந்தையோ கண்டு பிடிக்க முடியும் எனவும் நம்புகிறார்கள்.

தடுப்பூசி குறைந்த விலையில் கிடைக்கக்கூடும் என்பதாலும், இதனால் வளர்ந்து வரும் நாடுகள் தடுப்பூசி பெற்றுக் கொள்ள எதுவாய் இருக்கும் என்பதாலும், தடுப்பூசி இருக்கும் பட்சத்தில் தினசரி சிகிச்சை தேவையற்றது என்பதாலும் இப்பரவல் தொற்றினைத் தடுக்க தடுப்பூசி ஒன்றே சிறந்த வழி என்று கணிக்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் ஏறத்தாழ 30 வருடங்களுக்குப் பின்னும் எச் ஐ வி -1 தடுப்பூசி தயாரிப்பதென்பது கடினமான இலக்காகவே உள்ளது.

தற்போதைய மருந்துகளின் பக்கவிளைவுகளைக் குறைப்பது, சிகிச்சை பின்பற்றப்படுதலை அதிகரிக்க மருந்து நியமங்களை எளியவையாக்குதல், மற்றும் மருந்துக்கான எதிர்ப்பை சமாளிக்க சிறந்த மருந்து நியமத் தொடர்களைத் தீர்மானித்தல் ஆகியனவைகளை உள்ளடக்கியதே தற்போதைய சிகிச்சை முறைகளை முன்னேற்றும் ஆராய்ச்சியாகும்.
எச் ஐ வி தொற்றின் வீச்சு குறைகிறது - ஐ நா தெரிவிப்பு

கடந்த எட்டு ஆண்டுகளில் புதிதாக ஏற்படும் எச் ஐ வி தொற்றின் அளவு கணிசமாக குறைந்திருப்பதாக ஐநா மன்றத்தின் அறிக்கை குறிப்புணர்த்தியுள்ளது. எயிட்ஸ் நோய் எதிர்ப்பில் செயலாற்றிவரும் ஐ.நா மன்ற அமைப்பின் அறிக்கையில், சஹாராவுக்கு தெற்கே இருக்கும் ஆபிரிக்க நாடுகளில் தான் மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2001 ஆம் ஆண்டின் ஆரம்பத்துடன் ஒப்பிடும்போது, 2008 ஆம் ஆண்டில் ஏற்பட்ட புதிய எச் ஐ வி தொற்றுக்களின் எண்ணிக்கை 4 லட்சமாகக் குறைந்திருப்பதாக இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
எச் ஐ வி தடுப்பு நடவடிக்கைகள் ஓரளவு இதற்கு காரணமாக இருந்ததாக ஐநா மன்றத்தின் எயிட்ஸ் நோய் தடுப்புப்பிரிவின் இயக்குநர் தெரிவித்திருக்கிறார். அதேசமயம் இந்த எயிட்ஸ் நோய் தன்னை தொடர்ந்து தகவமைத்துக்கொண்டு வருவதாக தெரிவித்த அவர், இதனால் அதிகம் பாதிக்கப்படக் கூடியவர்களுக்கு இதை தடுக்கும் நடைமுறைகள் சென்று அடைவதில்லை என்றும் கவலை வெளியிட்டிருக்கிறார்.
HIV தொற்று வராமல் இருக்க...

எய்ட்ஸ் பாதுகாப்பு HIV தொற்றுவராமல் இருக்க தடுப்பூசிகளோ அதனை குணப்படுத்துவதற்கு மருந்துகளே இல்லை. HIV தொற்று வராமல் இருக்க ஒரே வழி பாதுகாப்பான நடத்தைகளே ஆகும். பிரதானமாக உடலுறவின் மூலம் பரவுவதைத் தடுத்தலுக்கான பூரண முயற்சிகளை மேற்கொள்ளல் வேண்டும். இச்சந்தர்ப்பத்தில் பாதுகாப்பான உடலுறவுக்குப் பின்வரும் வழிகாட்டு நெறிகள் உதவும்.

ஒருவருக்கொருவர். உண்மையாக இருத்தல் வேண்டும். பாலுறவு நடத்தைகள் நபருக்கு நபர் வேறுபடுவதால் ஒருவருக்கொருவர் நம்பிக்கையோடு இருத்தல் அவசியமானதாகும். இச்சந்தர்ப்பத்தில் ஒருவர் மற்றொருவரை உண்மையாக இருக்க வலியுறுத்த வேண்டும். மேற்கத்தேய நாடுகளைப் போல எண்ணற்ற நபர்களுடன் உடலுறவு கொள்வதை தவிர்த்துக் கொள்ளல் வேண்டும். இதே போல் அடிக்கடி உடலுறவு கொள்வோரை மாற்றுவதையும் இயலுமான வரை தவிர்த்துக் கொள்ளல் வேண்டும்

பிற பாதுகாப்பு முறைகளிலும் அவதானம் செலுத்துதல் வேண்டும். ஒரே முறை பயன்படுத்தக் கூடிய ஊசியை மட்டுமே உபயோகப்படுத்த வேண்டும். அதிலும் குறிப்பாக நரம்புகளில் செலுத்தும் ஊசியைப் பயன்படுத்தும் போது இதை கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும். இது முடியாமல் பல முறை பயன்படுத்தக் கூடிய ஊசியை ஏற்க வேண்டியிருந்தால் அது நன்கு சுத்திகரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும். கருவுற்ற பெண்கள், "தாய் சேய் தொற்றுத் தடுப்பு மையத்தை" அணுக வேண்டும். அங்கு பரிசோதனை செய்து கொண்டு HIV இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் மருத்துவர்களின் அறிவுரையைப் பின்பற்றி குழந்தைகளுக்கு இத்தொற்று பரவாமல் இருக்க முயற்சிக்க வேண்டும்.
இரத்தம் தேவைப்பட்டால் அங்கீகரிக்கப்பட்ட இரத்த வங்கிகளை அணுக வேண்டும். HIV தொற்று இல்லை என்ற சான்றிதழுடன் கூடிய இரத்தத்தைப் பெறுவது அவசியமாகும். ஒருவர் பால்வினை நோயைப் பெற்றிருந்தால், அவர் உடலுறவு கொள்ளும் போது அந்நோய் அதிகரித்து பல்வேறு மாற்றங்களை அடைந்து HIV தொற்றாக மாறிவிடும். எனவே பால்வினை நோய் உள்ளவர்கள் எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக தகுந்த சிகிச்சையினை மேற்கொண்டு இந்நோயை குணப்படுத்திக் கொள்ள வேண்டும்.

எய்ட்ஸ் நோயாளிகளும் மனிதர்களே!

எய்ட்ஸ் நோயாளிகள் சமூகத்தின் பார்வையில் பொதுவாக வேண்டப்படாதவர்களாகவே கருதப்படுகின்றனர். இது தவறு. ஒரு எயிட்ஸ் நோயாளியைப் பொறுத்தமட்டில் தகாத பாலுறவால் மாத்திரம் நோயைப் பெற்றிருப்பார் என்று கூற முடியாது. சில சந்தர்ப்பங்களில் அத்தகைய பழக்கங்கள் இல்லாதவர்களும்கூட அவர்களை அறியாத சந்தர்ப்பங்களிலும் இந்நோய் தொற்றலாம். எனவே எயிட்ஸ் நோயாளிகளை சாதாரண மனிதர்களாக கருதி அவர்களுக்கு உரிய உரிமைகளைகளையும், சலுகைகளையும் வழங்க வேண்டியது சமூகத்தின் கடமையாகும்.
சட்டத்தின் முன் அனைவரும் சமமானவர்களே. அனைவருக்கும் சம உரிமைகள் உண்டு. பிறப்பு, பால், இனம், மதம் முதலிய வேறுபாடுகள் இன்றி உரிமைகள் அனைவருக்கும் பொதுவானவை. எயிட்ஸ் ஆல் பாதிக்கப்பட்டவர்கள் என்பதற்காக அவர்களுக்கு இந்த உரிமைகள் மறுக்கப்படக் கூடாது. தெரிந்து தெளிவடைதல், ஒப்புக் கொள்ளுதல் என்பது ஒரு விஷயத்தையும் அதற்கு உட்பட்டவர், அதனைப் புரிந்து கொண்டு சுயமாக முடிவெடுப்பதாக இருக்க வேண்டும்.

மருத்துவர் மற்றும் நோயாளியின் உறவு நிலை புரிதலின் அடிப்படையில் அமைய வேண்டும். எனவே மருத்துவர், ஒரு நோயாளியிடம் பரிசோதனை மேற்கொள்கிறார் என்றால் அதன் உண்மையான நிலையினை அந்த நோயாளியிடம் தெரிவித்துவிட வேண்டும். அவருடைய முழுமையான சம்மதத்தை தெரிந்த பிறகே அந்தப் பரிசோதனையைத் தொடருவதோ, விடுவதோ என்று வைத்தியர் முடிவெடுக்க வேண்டும். எயிட்ஸ் பாதிப்பானது மற்ற நோய்களிலிருந்து மிகப்பெரிய வித்தியாசத்தை உடையது. எனவே இது குறித்து பரிசோதனை என்றால் சம்பந்தப்பட்டவருக்குத் தெளிவாக இப்பரிசோதனை குறித்துத் தெரிவித்துவிட வேண்டும். தெரிவித்த பின் வேறு ஒரு பரிசோதனையை மேற்கொள்ளல் கூடாது. இது நோயாளிகளின் உரிமையாகும். அப்படி ஏதேனும் தவறு நேர்ந்தால் அது குறித்து நோயாளிகளினால் நீதி மன்றத்தை அணுக முடியும். ஆனால் HIV . மற்றும் எய்ட்சுடன் வாழும் மக்கள் நீதி மன்றம் செல்ல அஞ்சுகின்றனர். ஏனெனில் வெளி உலகத்திற்குத் தங்களின் நிலைமை தெரிந்துவிடும் என்று பயப்படுகின்றனர்.

வேறுபடுத்திப் பார்க்கும் போக்கிற்கு எதிரான உரிமை எனும் போது 'எல்லோரையும் சமமாக நடத்த வேண்டியது அடிப்படை உரிமையாகும்." இதனை அரசாங்கம் போற்றுகிறது. ஆனால் தனியாரிடம் இது காணப்படுவது குறைவு. இது குறித்து சட்டம் தெரிவிக்கும் கருத்து, அரசுத்துறையோ அல்லது அரசு சார்புடைய நிறுவனங்களோ, அல்லது தனியார் துறையோ தங்களிடம் பணிபுரிந்தவர்கள் இடையே வேறுபாடு காட்டக்கூடாது என்பதாகும்.

தங்கள் உடல் நலனில் அக்கறை காட்டுதல் என்பது ஒவ்வொரு மனிதருக்குமான அடிப்படை உரிமையாகும். எனவே எயிட்ஸ் நோயாளிகள் பரிசோதனைக்காக மருத்துவமனையை அணுகும் போது, அவர்களை மருத்துவமனைகளில் சேர்க்க மறுப்பதோ, சிகிச்சைஅளிக்க மறுப்பதோ கூடாது. அப்படி நடந்தால் அதற்கு எதிராக சட்டத்தை நாடலாம்.
அதே போல் பணிபுரியும் இடங்களில் HIV நோயாளிகளை வேறுபடுத்திப் பார்க்கக்கூடாது. உடல் நலக் குறைவின் காரணமாக, ஒருவர் தொடர்ந்து வெகுநாள் பணிக்கு வரவில்லை என்றால் அவர்களை வேலையை விட்டு நீக்கலாம். ஆனால் HIV உள்ளது என்ற ஒரே காரணத்திற்காக ஒருவரை வேலையை விட்டு நீக்க கூடாது. அப்படிச் செய்தால், அவர்கள் சட்டபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். எனவே சாதாரண மனிதர்களைப் போலவே HIV எய்ட்ஸ் நோயாளிகளுக்கும் எல்லா உரிமைகளும் உண்டு. அந்த உரிமைகள் மறுக்கப்படும்போது அவர்கள் நீதி மன்றத்தை நாடலாம்.

Wednesday, 24 November 2010

பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம். International Day for the Elimination of Violence Against Women - புன்னியாமீன்

நவம்பர் 25ம் திகதி பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினமாகும்.

2008ம் ஆண்டில் இத்தினத்தை முன்னிட்டு ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் விடுத்திருந்த செய்தியில், 'உலகில் உள்ள பெண்களில் மூன்றில் ஒருவர் தமது வாழ்நாளில் ஏதாவது ஒரு விதத்திலாவது துஷ்பிரயோகத்தை சந்தித்து இருக்கலாம்" என்று குறிப்பிட்டிருந்தார். மேலும் பல நாடுகள் பெண்களைப் பாதுகாக்க சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் கூட இவற்றை விட மேலதிக நடவடிக்கைகளை எடுக்க வேண்டியுள்ளதாகவும், வன்முறைகளை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் புதிய பிரச்சாரத்தை முன்நின்று செய்யப்போவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இதேநேரத்தில் கென்யாவில் உள்ள பெண்களில் சரி பாதி வீதத்தினர் குடும்ப வன்முறையால் பாதிக்கப்படுவதாக தொண்டு நிறுவனமான ஆக்ஸ்ஃபோம் கூறியுள்ளது. எனவே உலகளாவிய ரீதியில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிக்க பாரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய காலகட்டத்தில் நாம் வாழ்கின்றோம்.

டொமினிக்கன் குடியரசில் Dominican Republic, 1960 நவம்பர் 25 இல் மூன்று சகோதரிகள் அவர்களின் அரசியல் செயற்பாடுகளுக்காக அந்நாட்டின் அன்றைய ஆட்சியாளர் ராபீல் ருஜிலோவின் Rafael Trujillo (1930-1961). உத்தரவின் பேரில் கொலைசெய்யப்பட்டனர். இவர்கள் பாதிக்கப்படும் பெண்களுக்கெதிராகவே விசேடமாகக் குரல் கொடுத்தவர்கள். 'மறக்கமுடியாத வண்ணத்துப் பூச்சிகள்" என்று பின்னர் உலகில் பிரபல்யமான இந்த மிராபெல் சகோதரிகள் லத்தீன் அமெரிக்காவில் பெண்களுக்கு எதிரான வன்முறைக் கொடுமையின் சின்னமாக மாறினார்கள். 1980 ஆம் ஆண்டு முதல் அந்தத் தினம் அவர்களின் படுகொலையை நினைவு கூருவதற்காகவும், பால்நிலை வன்முறைகளுக்கு எதிராக விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவதற்காகவும் தெரிவுசெய்யப்பட்டது. அன்றைய தினத்தைத் தொடர்ந்து 16 நாட்களுக்கு பால்நிலை வன்முறைகளுக்கு எதிரான விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவதற்கு உலகளாவிய ரீதியில் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன. இந்தச் செயற்பாடுகள் சர்வதேச மனித உரிமைகள் தினமான டிசம்பர் 10 ஆம் திகதி முடிவடையும்.

இந்நிலையில் ஐக்கிய நாடுகள் பொதுச்சபை 1999 டிசம்பர் 17 ஆம் திகதி கூடிய போது ஆண்டுதோறும் நவம்பர் 25 ஆம் திகதியை பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு சர்வதேச தினமாகப் பிரகடனம் செய்யும் தீர்மானத்தை நிறைவேற்றியது. இத்தீர்மானம் ஐக்கிய நாடுகள் சபையின் 54/ 134. இலக்க பிரேரணையாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

உலகளாவிய ரீதியில் பெண்கள் இன்று பல விதமான வன்முறைகளுக்கு உட்படுத்தப்படுகின்றனர். பெண்களுக்கு எதிரான வன்முறைகளை வெளி உலகிற்கு காட்டி அதற்கான நியாயமான தீர்க்கமான முடிவுகளை எடுப்பதற்காக சர்வதேச மகளிர் தினம் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு சர்வதேச தினம் ஆகியன முன்வைக்கப்படுகின்றன. இருப்பினும் இத்தகைய வன்முறைகள் குறைந்ததாக இல்லை. இத்தகைய வன்முறைகளுள் சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு உட்படுபவையும், வெளியே தெரிய வருபவையும் மிகவும் சொற்பமானவையே. வெளியே வராதவையாகவும், சட்ட ரீதியான நடவடிக்கைகளுக்கு உட்படாதவையாகவும், மூடி மறைக்கப்படுபவைகளும் உள்ளவை மிக அதிகமானவைகளாகும்.

பெண்கள் மீதான வன்முறை இன்றைய சமூகத்தில் பற்பல வடிவங்களில் வெளிப்படுகின்றன. தொழிற்சாலைகளில், அலுவலகங்களில், மருத்துவமனைகளில், பாடசாலைகளில்... இவ்வாறு அடுக்கிக்கொண்டே போகலாம். இங்கெல்லாம் உள்ள முதலாளிகள், நிர்வாகிகள், கண்காணிப்பாளர்கள், ஒப்பந்தகாரர்கள், சில ஆசிரியர்கள், அரசியல்வாதிகள், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மற்றும் அரசியல் அதிகாரமுள்ள நபர்கள், நிறுவனத் தலைவர்கள் போன்றவர்களாலும் சட்ட ஒழுங்கு, பாதுகாவலர்கள் என குறிப்பிடப்படும் காவல்துறை, நீதித்துறை மற்றும் செய்தி ஊடகங்களிலும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் இடம்பெறுகின்றன. மறுபுறமான குடும்ப உறுப்பினர்களாலும் பல்வேறு சந்தர்ப்பங்களில் வன்முறைகளுக்கு உட்படுகின்றனர்.

பொதுவாக பெண்களுக்கெதிரான வன்முறைகளை பின்வருமாறு சுருக்கமாகத் தொகுத்து நோக்கலாம். துஸ்பிரயோகம், அசிட் திராவகம் வீச்சு, குடும்ப வன்முறை, சீதனக் கொடுமை மரணங்கள், பெண் இன உறுப்பை சேதமாக்குதல், பெண் சிசுக் கொலை, இரத்த உறவுகளுக்கு இடையிலான புணர்ச்சி, கொலைகள், உடல்ரீதியிலான வன்முறைகள், உளவியல் ரீதியிலான வன்முறைகள், பாலியல் வல்லுறவு, பாலியல் ரீதியிலான வன்முறை, பாலியல் ரீதியிலான சேட்டைகள், தொல்லைகள், பாலியல் அடிமை தரக்குறைவாக நடத்துதல் போர்க் குற்றங்கள்....இவ்வாறாக பல வடிவங்களில் இடம்பெறலாம்.

இங்கு துஸ்பிரயோகம் எனும் போது பெண்களின் சகல நடவடிக்கைகளும் கண்காணிக்கப்படுதல், உண்மைக்கு புறம்பாக எப்பொழுதும் செயற்படத்தூண்டுதல், மதுபானம் அல்லது போதைவஸ்து போதையில் வக்கிர உணர்வை வெளிப்படுத்துதல், பணம் செலவு செய்வது தொடர்பாக கட்டுப்படுத்தல், பிறர் முன்னிலையில் அவமானப்படுத்தல், சொத்துக்கள், பொருள்களை சேதப்படுத்தல், துன்பமடையும் வகையில் பிள்ளைகள் அல்லது செல்லப்பிராணிகளை துன்புறுத்தல் அல்லது எச்சரித்தல், அடித்தல், கடித்தல், தள்ளுதல், குத்துதல், உதைத்தல், கிள்ளுதல் போன்ற செயல்களினூடாக மேற்குறிப்பிட்ட துன்புறுத்தல்கள் அல்லது எச்சரிக்கைகள் அமையலாம். ஆயுதங்களினால் தாக்குதல், விருப்பத்திற்கு மாறாக பாலியல் புணர்ச்சிக்காக கட்டாயப்படுத்துதல், சின்னச்சின்ன விடயங்களிலும் விமர்சிக்கப்படல் அல்லது குற்றம் சாட்டுதல் என்பன அடங்கும். துஸ்பிரயோகத்திற்குள்ளாகி இருக்கும் நபர் ஒருவர் அல்லது அவரைச் சார்ந்தோர் குறிப்பிட்டநபர் துஸ்பிரயோகத்திற் குள்ளாக்கப்படுகிறார் என்பதை உணர்வதோ அல்லது அடையாளம் காண்பதோ சில சந்தர்ப்பங்களில் மிகவும் கடினமாகி விடுகிறது. சிலர் விளையாட்டாக சில விடயங்களை செய்தாலும் அவை பாராதூரமான நோக்குடையதாக இருந்தால் அவையும் வன்முறையே.

பெண்களுக்கெதிரான குடும்ப வன்முறைகள் எனும் போது அண்மைக்கால அறிக்கைகளின் படி மிகவும் அதிகரித்து வருவதாக தெரியவருகின்றது. குறிப்பாக உடல் ரீதியாக, பாலியல் ரீதியாக, பணம் அல்லது பொருளாதார ரீதியாக, உளவியல் ரீதியாக, சைகைமுலமான எச்சரிக்கையாக, வேறு நபர்களைத் தூண்டி விட்டு எச்சரிக்கை செய்வதாக, அச்சுறுத்தலின் கீழ் தன் விருப்பத்துக்கு மாறாக நடக்கச்செய்வதாக, தனிமைப்படுத்தி விடுவதாக, சூழ்ச்சி மனோபாவத்துடன் நடப்பதன் மூலமாக, சுயகௌரவம் தன்மானத்தை இழக்கும் படி செய்வதனூடாக, அச்சத்தை அல்லது பீதியை ஏற்படுத்தலூடாக, உடல்நலக்குறைவை ஏற்படுத்துதல் அல்லது மருத்துவ சிகிச்சையை புறக்கணிப்பதனூடாக இத்தகைய குடும்ப வன்முறை இடம் பெறலாம். மேலும் இந்தியா போன்ற நாடுகளில் சீதனம் காரணமாகவும், பெண்கள் பல வன்முறைகளுக்கு உட்படுகின்றனர். பெண்களுக்கெதிரான குடும்ப வன்முறைகளின் போது பெரும்பாலானவை குறிப்பாக மூன்றாம் உலக நாடுகளில் வெளியே வருவதில்லை.

குடும்ப வன்முறை இனம், சமயம், பால், வயது போன்ற எந்த வேறுபாடின்றி யாவருக்கும் நடக்கலாம். குடும்ப வன்முறையானது வருமானத்தில் பற்றாக்குறையை ஏற்படுத்தி கல்வி நிலையில் பின்னடைவை ஏற்படுத்தத் தவறுவதில்லை. குடும்ப வன்முறையானது அந்நியோன்னியமாக ஒன்றாக வசிக்கும் எதிர்ப்பாலாருக்கிடையில், ஒரே பாலாருக்கிடையில், அல்லது ஒன்றாக வசிக்கும் நண்பர்களுக்கிடையில் இடம்பெறலாம் .

பெண்களுக்கெதிரான வன்முறைகளுள் பாலியல் வன்முறையும் பிரதான இடத்தை வகிக்கின்றது. பாலியல் வன்முறை எனும் போது விருப்பத்துக்கு மாறாக வற்புறுத்தி உறவு கொள்ள நிர்ப்பந்திப்பது, விருப்பத்துக்கு மாறாக பாலியல் தூண்டல்களை ஏற்படுத்தக்கூடியவாறான நடத்தைகளை புரிதல், ஏமாற்றி அல்லது ஆள்மாறாட்டம் செய்து உறவு கொள்ளச் செய்தல், ஏதேனும் ஒரு உணவுப்பொருளுடன் அல்லது பானத்துடன் போதை தரக்கூடிய பொருளைக் கலந்து கொடுத்து உறவு கொள்வது, துணையின் சம்மதமில்லாமல் உறவு கொள்வது என்பனவும் பாலியல் வன்முறைக்குள் அடங்குகின்றன.

அதிகளவு வருமானத்தைத் தரக்கூடியதும் குற்றவியல் சட்டத்திலிருந்து குறைந்த மட்டத்திலான ஆபத்தையும் கொண்ட பாலியல் அடிமைத்தொழில் அமெரிக்கா, கனடா ஐரோப்பிய நாடுகள் உள்ளடங்களாக 192 நாடுகளில் காணப்படுவதாக கூறப்படுகிறது. ஆபிரிக்கா, ஆசியா நாடுகளில் இருந்து கொள்வனவு செய்யப்பட்டு அல்லது கடத்தி வரப்படும் பெண்களும், சிறுவர்களுமே இத்தொழில் அதிகளவு ஈடுபடுத்தப்படுகின்றார்கள். புவியியல் அடிமைகள் அதிகளவில் பெருகிக் காணப்படுவதற்கான காரணம் அதிகளவு வருமானம் கிடைப்பதும் சட்டத்திலிருந்து தப்பித்துக் கொள்ளும் வரையிலான பல ஓட்டைகள் இருப்பதாகும். இதனால் சர்வதேசரீதியில் இந்த அடிமைத் தொழில் வியாபாரம் அதிகரித்து வருகின்றது. புவியியல் அடிமைகள் பிரச்சினை, அடிப்படை மனித உரிமை மீறல் வரையறைக்குள் உள்ளகப்படுத்தி அதனுடன் இணைந்ததான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான பல சந்தர்ப்பங்களாலும் பல தடங்கல்கள் சிக்கல்கள் எங்குமே காணப்படுகின்றன.

ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளுக்கு கடத்திவரப்படும் பாலியல் அடிமைகளின் சரியான எண்ணிக்கையை சரியான முறையில் அறிய முடியாவிட்டாலும் கூட அமெரிக்க அரசின் புள்ளிவிபரங்களின்படி சுமார் 50 ஆயிரம் பெண்கள் பாலியல் அடிமைகளாக ஒவ்வொருவருடமும் கடத்திவரப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் எந்த நேரமாக இருக்கட்டும், நெருக்கடிமிக்க பஸ்களிலும், ரயில்களிலும் பெண்கள் பிரயாணம் செய்வது அவர்களுக்கு மகிழ்ச்சிகரமான அனுபவமொன்றை அளிக்காது. உடல்களை வேண்டுமென்று தொடுவதற்கு மேலதிகமாக, ஆபாசமான விதத்தில் அபிநயம் காட்டுவதும் அசௌகரியமாகத் தோற்றமளிப்பதும் பெண்களுக்கு அது ஒரு பயங்கரமான அனுபவமாகவே முடிகின்றது. இது குறித்து அண்மையில் கணிப்பீடு ஒன்று இலங்கையில் நடத்தப்பட்டது. இது சம்பந்தமாக 200 பெண்கள் அளவீடு செய்யப்பட்டனர். இவர்களில் 188 பெண்கள் தனியார் பஸ்களில் பிரயாணம் செய்யும்போது வாழ்க்கையில் ஒரு தடவையாவது ஏதோ ஒரு வேளையில் தொந்தரவுக்குள்ளாகியுள்ளனர்.  இள வயதான பெண்களே, குறிப்பா 11க்கும் 20க்கும் உட்டபட்டவர்களே அதிகளவு ஊறுபடும் நிலையில் இருந்திருக்கின்றனர்.

குற்றமிழைப்பவர்கள் பெரிதுமே 35 வயதுக்கு மேற்பட்ட கௌரவமான ஆண்களாவார். பெண்கள் தனியாக பிரயாணம் செய்யும் போது அவர்கள் பலிகடாவாகின்றார்கள். ஒவ்வொருவருமே கணவருடன் அல்லது ஆண் நண்பர்களுடன் பிரயாணம் செய்யும் போது தொந்தரவு செய்யப்படவில்லை என நேர்முகங்காணப்பட்ட பெண்கள் தெரிவித்திருந்தனர். உடல் ரீதியாக தொடுதல் பொதுவானதாகும். ஆனால் பாலியல் பகிடிகள், உடல், உடைகள் பற்றிய கெட்ட கருத்துக்கள், முத்தமிடும் ஒலிகள், விசில் அடிக்கும் ஒலிகள் கூக்காட்டுதல் ஆகியவற்றையும் ஆண்கள் மேற்கொள்கின்றனர். அவர்கள் பாலியல் பொருட்களையும், புகைப்படங்களையும் காட்டுகின்றார்கள். பஸ்கள் மிகவும் நெருக்கடியாக இருக்கும் போது பெண்களையும், யுவதிகளையும் தொந்தரவு செய்வதற்கு அவர்களுக்கு அதிகளவுவாய்ப்பு கிட்டியது.

தரக்குறைவாக நடத்துதல் எனும் போது நவீன காலத்தில் e - mail, SMS, MMS, தொலைபேசி தபால் போன்ற எந்த ஒரு தொடர்பு சாதனத்தின் ஊடாக திரும்ப அவசியம் எதுவும் இல்லாமல் மீள, மீள தொடர்பு கொண்டு தொல்லை கொடுத்தல் அல்லது அச்சுறுத்தல். போன்றவையாகும். அத்துடன் குறிப்பிட்ட பெண்கள் மீது அவதூறு பேசுதல் அல்லது அவதூறு பரப்புதல். அவ்வாறு குறிப்பிட்ட நபர் பற்றிய அத்தகவல் மற்றும் சுய தகவல்களை பிறரின் பார்வைக்கு வைத்தல் இதற்காக இணையம் அல்லது ஏனைய தொடர்பு சாதனங்களைப் பயன் படுத்தல், தனியார் நிறுவனங்களை சேவைக்கமர்த்தி குறிப்பிட்ட நபர் குறித்து இரகசியத் தகவல்கள் திரட்டல், பின்தொடர்தல், நண்பர்களை தொடர்பு கொள்ளல், அயலவர்களை அல்லது அலுவலகத்தில் உடன் வேலை செய்பவர்களை தொடர்பு கொள்ளல் போன்றவையும் பாலியல் தொல்லைகளாக கணிக்கப்படுகின்றன. மேலும் இரகசியமான முறையில் தனிமையில் காணப்படக்கூடிய பெண்களை புகைப்படம் பிடித்தல், பெண்களின் அந்தரங்க விடயங்களை பகிரங்கப்படுத்தல் என்பனவும் வன்முறைகளே
போர் பாலியல் குற்றங்கள் அரசு இராணுவம் அல்லது ஆயுதமேந்திய குழு பாலியல் பலாத்காரம் ஈடுபடுதல் அல்லது விபசாரத்திற்கு கட்டாயப்படுத்தல் போன்றவை போர் பாலியல் குற்றங்களுக்குள் அடங்குகின்றன. மிகவும் பரந்த அளவில் நன்கு திட்டமிடப்பட்ட வகையில் நடைபெறும் இந்தவகை குற்றச்செயல்கள் மனிதாபிமானத்திற்கு எதிராக கணிக்கப்பட்டு சர்வதேச குற்றவியல் நிதிமன்றதில் தீர்ப்பு வழங்கப்படுகின்றது.

நகர்ப்புற வாழ்க்கையிலும் சரி, கிராமிய வாழ்க்கையிலும் சரி வன்முறைகளினால் கூடுதலான அளவுக்கு பாதிக்கப்படுபவர்கள் இளம் பெண்களே என்பது ஏற்றுக்கொள்ளப்பட்ட ஓர் உண்மையாகும். பாதிப்புகளுக்குள்ளாகிய அனேக பெண்கள் தமது பாதிப்புகள் குறித்து எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்வதில்லை. பயம், சங்கடம் மற்றும் அந்நேரத்தில் சம்பவம் பற்றி சரிவர அறிந்திருக்காதிருந்தமை ஆகியனவே இதற்கான காரணமாகும். மேலும் பாதிக்கப்பட்டவர்களை சமூகம் ஏளனப்பார்வைக்கு உட்படுத்துவதும் பாதிப்புகள் வெளிவராமல் இருப்பதற்கு மற்றுமொரு காரணமாகும். இந்நிலையில் குற்றமிழைக்கப்பட்டவரிடமிருந்து விலகிச் செல்வதே பொதுவான நடவடிக்கையாக விளங்குகின்றது. ஒரு சிலர், விசேடமாக சற்று வயதானவர்கள் குற்றமிழைத்தவரை ஏசியுள்ளதுடன், அடித்தும் உள்ளனர். பெரும்பான்மையானவர்கள் சுயகௌரவம் காரணமாக மூடி மறைக்கின்றனர். இத்தகைய உதாசீனப் போக்குகள் காரணமாக குற்றமிழைத்தவர்கள் மேலும் மேலும் குற்றமிழைப்பவர்களகவே உள்ளனர். இதனாலேயே 'உலகிலுள்ள பெண்களில் மூவரில் ஒருவர் தனது வாழ்நாளில் ஏதாவது ஒரு வடிவிலான வன்முறையினால் பாதிக்கப்படுகிறார். வாழ்வை நிர்மூலமாக்கிச் சமூகங்களைச் சிதைக்கும் ஒரு கொள்ளை நோயாக பெண்களுக்கு எதிரான வன்முறை காணப்படுகின்றது."

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் உலகளாவிய ஒரு பாரதூரமான பிரச்சினையாகும். இதனை மிகவும் பரந்தளவில் நோக்க வேண்டும். கடந்த ஒரு சில தசாப்தங்களில் நிலைவரங்களில் சில வகை மேம்பாடுகளைக் காணக்கூடியதாக இருக்கின்ற போதிலும் இந்த நெருக்கடியின் கொடூரத்தன்மை இன்னமும் பெருமளவுக்கு ஒப்புக் கொள்ளப்படாததாகவே தொடர்ந்து இருந்து வருகிறது.

16-44 வயதுக்கு இடைப்பட்ட பெண்களைப் பொறுத்தவரை, அவர்களுக்கு எதிரான வன்முறைகளே மரணத்துக்கும், உடல் ஊனமாதலுக்கும் முக்கிய காரணியாக அமைகின்றன. இனப்பெருக்க வயதிலுள்ள பெண்களைப் பொறுத்தவரை புற்று நோயைப் போன்று வன்முறைகளும் அவர்கள் மத்தியிலான மரணத்துக்கு முக்கிய காரணமாகின்றன. உலக சுகாதார நிறுவனம் அண்மையில் மேற்கொண்ட ஆய்வொன்று உலகில் "வீதிவிபத்துகளையும், மலேரியா போன்ற நோய்களையும் விட பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அவர்களில் பெரும் எண்ணிக்கையானவர்களின் உடலாரோக்கியத்தை பாதிப்பதாக"த் தெரிவித்திருக்கிறது. வன்முறைகளை அனுபவிக்கும் பெண்கள் எச்.ஐ.வி.யின் தொற்றுக்கு இலக்காகும் ஆபத்தும் அதிகமாக இருப்பதாக தெரியவந்திருக்கிறது.

மேலும் கொலைக்கு ஆளாகும் பெண்களில் அரைவாசிப்பேர் அவர்களது தற்போதைய அல்லது முன்னாள் கணவர்களின் அல்லது துணைவர்களின் கைகளினாலேயே மரணத்தைத் தழுவுகின்றார்கள் என்று உலகளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
'பெண்களுக்கு எதிரான வன்முறைகள் என்று வரும் போது உலகில் நாகரிகமான சமுதாயம் என்று எதுவுமேயில்லை" என்று ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் செயலாளர் நாயகம் கொபி அனான் ஒருதடவை குறிப்பிட்டிருந்ததை இச் சந்தர்ப்பத்தில் நினைவுபடுத்துவது பொருத்தமாக இருக்கும்.

Sunday, 21 November 2010

பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு கணினிகள் கையளிப்புஇலண்டன் ஈலிங் கனக துர்கை அம்மன் ஆலயத்தின் அநுசரணையுடன், இலண்டன் லிட்டில் எய்ட்ஸ் அமைப்பின் வழிகாட்டலின்கீழ் வழங்கப்பட்ட 07 கணினிகளையும், வறுமையால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு கணினி கற்பித்தலுக்காக வேண்டி, இலங்கையின் இணைப்பாளராகக் கடமையாற்றிய சிந்தனை வட்டப் பணிப்பாளர் கலாபூசணம் பீ.எம். புன்னியாமீன் அவர்கள், சிந்தனை வட்ட அலுவலகத்திலிருந்து கையளிப்பதை மேலுள்ள படங்களில் காண்க.

Tuesday, 16 November 2010

எனது சிறுகதை நூல்கள்

01. தேவைகள்
      1வது பதிப்பு : நவம்பர் 1979
      வெளியீடு :KIWS - KATUGASTOTA

02. நிழலின் அருமை
     1வது பதிப்பு : மார்ச் 1986
     வெளியீடு : தமிழ்மன்றம்

03. கரு
    1வது பதிப்பு : பெப்ரவரி 1990
    வெளியீடு : சிந்தனைவட்டம்

04. அந்த நிலை
   1வது பதிப்பு : ஜனவரி 1990
   வெளியீடு : சிந்தனைவட்டம்

05. நெருடல்கள்
   1வது பதிப்பு : பெப்ரவரி 1990
   வெளியீடு : சிந்தனைவட்டம்

06. யாரோ எவரோ எம்மை ஆள.....
   1வது பதிப்பு : ஜுலை 1996
   வெளியீடு : குமரன் வெளியீட்டகம் (இந்தியா)

07. இனி இதற்குப் பிறகு
   1வது பதிப்பு : ஜுலை 2003
   வெளியீடு : சிந்தனைவட்டம்
   ISBN: 955-8913-03-0

Thursday, 4 November 2010

150 நூல்கள் எழுதியுள்ள எழுத்தாளர் புன்னியாமீன்: அன்புமணி இரா.நாகலிங்கம்

மத்திய இலங்கையின் தலைநகர் கண்டியைச் சேர்ந்த பீர்மொஹம்மட் புன்னியாமீன் அவர்கள் மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக எழுத்துத்துறையில் ஈடுபட்டு வரும் ஒரு எழுத்தாளரும், பன்னூலாசிரியரும், வெளியீட்டாளரும்,  ஊடகவியலாளருமாவார்.

இவர் ஐக்கிய இராச்சியத்தைத் தளமாகக் கொண்டியங்கும் முன்னணி இணையத்தளமொன்றின் செய்தியாசிரியருமாவார். இலக்கியத்துறையில் பல்வேறு சாதனைகளைப் புரிந்தாலும்கூட, இவரின் தனிப்பட்ட சாதனைகளும்,  இவர் பற்றிய விபரங்களும் வெளியுலகிற்கு அதிகமாகத் தெரிய வரவில்லை. அவற்றை வெளிப்படுத்திக் கொள்ள இவர் அதிகமாக விளைவதுமில்லை. “ஈழத்துத் தமிழ் இலக்கியத்துறைக்கு என்னால் ஆற்றப்பட்டுள்ளது ஒரு சிறு துளி மாத்திரம் தான். நான்  இன்னும் இலக்கியத்துக்குச் செய்ய வேண்டிய எத்தனையோ விடயங்கள் உண்டு” என எச்சந்தர்ப்பத்திலும் அடக்கமாகக் கூறிவரும் இவர், பழகுவதற்கு இனியவர்.  

1960ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 11ஆம் திகதி பீர்மொஹம்மட், சைதா உம்மா தம்பதியினரின் புதல்வராகப் பிறந்த புன்னியாமீன் க/ஜாமியுல் அஸ்ஹர் மத்திய கல்லூரி,  க/ மடவளை மதீனா தேசிய கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவராவார். பேராதனைப் பல்கலைக்கழக கலைமாணிப் பட்டதாரியான இவர்,  ஊடகவியல் துறையில் டிப்ளோமா பட்டத்தினையும் பெற்றுள்ளார்.

தொழில் ரீதியாக 1983ஆம் ஆண்டில் ஸ்ரீலங்கா ஆசிரியர் சேவையில் இணைந்த புன்னியாமீன்,  பின்பு கல்லூரி அதிபராகவும், மத்திய மாகாண சபையின் கல்வி, கலாசார அமைச்சின் இணைப்பதிகாரியாகவும்,  மத்திய மாகாண கலாசார அமைச்சின் உதவிப் பணிப்பாளராகவும் சேவையாற்றி 2004ஆம் ஆண்டில் சுயவிருப்பின் பேரில் ஓய்வுபெற்றார். தற்போது வரையறுக்கப்பட்ட “சிந்தனைவட்டம்” தனியார் கம்பனியின் முகாமைத்துவப் பணிப்பாளராகக் கடமையாற்றிக் கொண்டிருக்கின்றார். அத்துடன்,  லண்டனிலிருந்து வெளிவரும் ‘லண்டன் குரல்’,  ‘உதயன்’ உள்ளிட்ட பல புலம்பெயர் பத்திரிகைகளின் செய்தியாளராகவும் பணிபுரிந்து கொண்டிருக்கின்றார். அத்துடன், இந்தியாவிலுள்ள முன்னணி இணையத்தளங்களில் ஒன்றான http://thatstamil.oneindia.in/ இல் சர்வதேச நினைவு தினங்கள் பற்றி தொடர்ச்சியாக எழுதி வருகின்றார். இவரின் இந்த ஆக்கங்கள் சர்வதேச ரீதியில் பல இணையத்தளங்களில் மறுபிரசுரம் செய்யப்பட்டு வருகின்றன. எழுத்துத் துறையிலும், ஊடகத்துறையிலும் ஏற்பட்டு வரும் நவீனமாற்றங்களுக்கேற்ப இவர் இலத்திரனியல் ஊடகங்களுடன் நெருக்கமான தொடர்புகளை விரிவுபடுத்திக் கொண்டிருப்பது குறிப்பிட்டுக் கூறக்கூடிய ஓர் அம்சமாகும்.

மாணவப் பராயத்திலிருந்தே வாசிப்புத்துறையில் தீவிர ஆர்வம் காட்டி வந்த இவரின் சுய ஆக்கமான முதல் உருவகக் கதை ‘அரியணை ஏறிய அரசமரம்’ எனும் தலைப்பில் 1978 ஜுலை 02ஆம் திகதி தினகரன் வாரமஞ்சரியில் பிரசுரமானது. அதிலிருந்து இதுவரை 160க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும், 5000க்கும் மேற்பட்ட சமூக, இலக்கிய, அரசியல்,  திறனாய்வு,  கல்விசார் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். இத்தகைய ஆக்கங்கள் இந்தியாவில் கலைமகள், தீபம்,  தாமரை உட்பட பல புலம்பெயர் இலக்கிய சஞ்சிகைகளிலும்,  ஈழத்து தேசிய பத்திரிகைகள், சஞ்சிகைகளிலும் பிரசுரமாகியுள்ளன.

இவரின் இலக்கிய சேவையைக் கருத்திற்கொண்டு கிழக்கிலங்கையிலிருந்து வெளிவந்த ‘தடாகம்’ எனும் இலக்கியச் சஞ்சிகை 1999 நவம்பர் - டிசம்பர் இதழில் இவரின் புகைப்படத்தை முகப்பட்டையில் பிரசுரித்து கௌரவித்தது. அதேநேரம், இலங்கையிலிருந்து நான்கு தசாப்த காலங்களுக்கும் மேலாக வெளிவரும் தரமான இலக்கிய சஞ்சிகையான ‘மல்லிகை’ 2005 மார்ச் இதழிலும்,  மற்றொரு தரமான இலக்கிய சஞ்சிகையான ‘ஞானம்’ தனது 102வது (2008 நவம்பர்) இதழிலும் இவரின் புகைப்படத்தை முகப்பட்டையில் பிரசுரித்து கௌரவித்துள்ளன. மேலும்,  கிழக்கிலங்கையிலிருந்து வெளிவரும்  ‘சமாதானம்’ இலக்கிய சஞ்சிகையின் 2007 அக்டோபர் இதழும்,  இந்தியாவிலிருந்து வெளிவரும் ‘ஏழைதாசன்’  (இதழ் எண்:159) 2008 மே இதழும் இவரின் புகைப்படத்தை அட்டைப்படத்தில் தாங்கிவெளிவந்துள்ளன.

இவரது முதலாவது சிறுகதைத் தொகுதி 1979.11.11ஆந் திகதி “தேவைகள்” எனும் தலைப்பில் வெளிவந்தது. முதல் புத்தகம் வெளிவந்து சரியாக முப்பது ஆண்டுகள் நிறைவுறும்போது 2008.11.11இல் இவரது 150வது புத்தகமான “இவர்கள் நம்மவர்கள் - தொகுதி 04” எனும் புத்தகம் வெளிவந்துள்ளது. இவரது வெளியீட்டுப் பணியகமான சிந்தனைவட்டத்தின் மூலம் இதுவரை 300 தமிழ்மொழி மூலமான நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இலங்கையில் யுத்த சூழ்நிலைகள் காணப்படும் இந்நேரத்தில் ஒரு தனிப்பட்ட எழுத்தாளன் சுயமாக 150 தமிழ்மொழி மூலமான புத்தகங்களை எழுதி வெளியிடுவது என்பது ஒரு சாதனையே. இந்த அடிப்படையில் கலாபூஷணம் புன்னியாமீன் அவர்களுடன் மேற்கொள்ளப்பட்ட நேர்காணல் கீழே இடம்பெறுகின்றது.

கேள்வி:- எழுத்துத்துறையில் நீங்கள் எவ்வாறு அறிமுகமானீர்கள் என்பதைப் பற்றி சுருக்கமாகக் கூற முடியுமா?

பதில்:- நான் பாடசாலையில் கற்கும் காலங்களில் (1974/1975) இளங்கதிர், இளங்காற்று, இளந்தென்றல் ஆகிய கையெழுத்துச் சஞ்சிகைகளின் ஆசிரியராக இருந்து செயற்பட்டுள்ளேன். அதனால் ஏற்பட்ட ஆர்வம் தொடர்ந்தும் எழுத வேண்டும் என்ற உணர்வினை என்னுள் ஏற்படுத்தியது. கையெழுத்து சஞ்சிகைகளில் எழுதி வந்த எனது எழுத்துக்கள் 1976ஆம் ஆண்டு தேசிய பத்திரிகையான தினகரனில் பிரசுரமாகின. அதையடுத்து ஏனைய தேசிய பத்திரிகைகள்,  சஞ்சிகைகள், வானொலி என்ற அடிப்படையில் என் எழுத்தை பரவலாக்கிக் கொண்டேன்.

கேள்வி:- தங்கள் முதலாவது சிறுகதைத் தொகுதி வெளிவந்ததைப் பற்றி……..

பதில்:- எனது முதலாவது சிறுகதைத் தொகுதி 1979.11.11ஆம் திகதி வெளிவந்தது. இத்தொகுதியின் தலைப்பு “தேவைகள்”. இத்தொகுதியில் 14 சிறுகதைகள் இடம்பெற்றன. அக்கதைகளுள் அதிகமான கதைகள் தினகரனிலும்,  தினகரன் வாரமஞ்சரியிலும் பிரசுரமானவையாகும். இதனை எனது சொந்தக் கிராமத்துக்கு அண்மையில் கட்டுகஸ்தோட்டை எனும் நகரை மையமாகக் கொண்டு இயங்கிய “இஸ்லாமிய சேமநல சங்கம்” எனும் சமூக சேவையமைப்பு வெளியிட்டது. எனது பத்தொன்பதாவது பிறந்த தினத்தன்று இப்புத்தகம் வெளிவந்தமை குறிப்பிடத்தக்கது.

கேள்வி:- படைப்பிலக்கிய முயற்சிகளில் தங்களின் பங்களிப்புகள் பற்றி குறிப்பிடுங்கள்.

பதில்:- ஆரம்ப காலங்களில் சிறுகதை,  கவிதை,  நாடகங்கள் என படைப்பிலக்கிய முயற்சிகளிலே நான் அதிகளவில் ஈடுபட்டு வந்தேன். இதுவரை 160க்கும் மேற்பட்ட சிறுகதைகளை நான் எழுதியுள்ளேன். இவை இலங்கையில் மாத்திரமல்லாமல் தமிழகத்தில் கூட,  கலைமகள், தாமரை,  தீபம், தீ போன்ற இலக்கிய சஞ்சிகைகளில் பிரசுரமாகியுள்ளன. இதுவரை ஏழு சிறுகதைத் தொகுதிகள் வெளிவந்துள்ளன. அவை “தேவைகள்”,  “நிழலின் அருமை”,  “கரு”,  “நெருடல்கள்”, “அந்த நிலை”,  “யாரோ எவரோ எம்மை ஆள”,  “இனி இதற்குப் பிறகு”. ஆரம்ப காலங்களில் காதலைப் பற்றியும்,  மாணவப்பராயத்து உணர்வுகள் பற்றியும் எழுதிவந்த நான் பிற்காலத்தில் நான் வாழும் சமூகத்தைப் பற்றியும்,  ஒடுக்கப்பட்ட பாட்டாளி வர்க்கம் பற்றியும், இலங்கையில் இன உறவுகள் பற்றியும் எழுத ஆரம்பித்தேன்.

ஆரம்ப காலத்தில் என் படைப்பிலக்கியங்களில் கற்பனை வாதத்துக்கு முக்கியத்துவம் கொடுத்த போதிலும்கூட,  பிற்காலத்தில் சமூக யதார்த்தத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து சமூகமயமாக்கப்பட்ட எழுத்துகளையே முன்வைத்தேன். இதனால் பல்வேறுபட்ட கெடுபிடிகளுக்கும் ஆளானேன். ஒரு எழுத்தாளன் என்ற வகையில் சமூக யதார்த்தங்களை முன்வைக்கச் சென்று பலவிதமான தாக்குதல்களுக்கு உட்படுத்தப்பட்ட பல அனுபவங்கள் எனக்குண்டு.

கேள்வி:- சிறுகதைத் துறையைப் போல நாவல் துறையில் நீங்கள் அதிக ஈடுபாடு காட்டாமைக்கான காரணம் என்ன?

பதில்:- நியாயமான கேள்வி. 160க்கும் மேற்பட்ட சிறுகதைகளை நான் எழுதியபோதிலும்கூட,  இதுவரை ஒரேயொரு நாவலை மாத்திரமே எழுதி வெளியிட்டுள்ளேன். 1983ஆம் ஆண்டு எழுதப்பட்ட அந்த நாவலின் பெயர் “அடிவானத்து ஒளிர்வுகள்” என்பதாகும். நாவலை எழுதிய பின்பு அதனை பிரசுரத்துக்காக வேண்டி பல பத்திரிகைகளுக்கு அனுப்பி வைத்தேன். ஆனால்,  அந்த நாவல் நிராகரிக்கப்பட்டது. இலங்கையைப் பொறுத்தமட்டில் 1980களில் குறிப்பிட்ட சில எழுத்தாளர்களின் நாவல்களை மாத்திரமே இலங்கையின் தேசிய பத்திரிகைகளில் பிரசுரித்து வந்தனர். நாவல் துறையில் அறிமுக நாவலாகக் காணப்பட்ட என்னுடைய நாவலை வாசித்துக்கூடப் பார்க்காமல் நிராகரிக்கப்பட்டதையடுத்து உண்மையிலேயே பாரிய மனத் தாங்கலுக்கு உட்பட்டேன். பின்பு 1987ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் “அல்-பாஸி பப்ளிகேஷன்” அந்த நாவலை நூலுருப்படுத்தி வெளியிட்டது. இதற்கு பக்கதுணையாக கல்ஹின்னை தமிழ்மன்ற ஸ்தாபகர் எஸ்.எம். ஹனிபா அவர்கள் இருந்தார்கள்.
“அடிவானத்து ஒளிர்வுகள்” நாவல் மூலமாக இலங்கையில் முஸ்லிம் சமூகத்தின் அரசியல் பிரச்சினைகளை நான் எடுத்துக் காட்டினேன். இந்த நாவல் எழுதும் காலகட்டத்தில் இலங்கையில் முஸ்லிம்களுக்கென அரசியல் கட்சியொன்றிருக்கவில்லை. மறுபுறமாக இந்த நாவல் எழுதப்பட்ட காலகட்டங்களில் இலங்கையில் வடபகுதியில் தமிழ் மக்கள் தமது விடுதலைப் போராட்டத்தை ஆயுத ரீதியாக ஆரம்பித்த கால கட்டமாகவும் இருந்தது. எனவே,  இந்த நாவலினூடாக இலங்கையின் இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வொன்றைப்பெற அதிகாரப் பகிர்வு முறை முன்வைக்கப்பட வேண்டுமென்பதையும்,  முஸ்லிம்களைப் பொறுத்தமட்டில் முஸ்லிம்களின் உரிமைகளுக்காக வேண்டி தனியொரு அரசியல் கட்சி உருவாக்கப்பட வேண்டுமென்பதையும் வலியுறுத்தி எழுதினேன். நாவல் வெளிவந்த பிறகு இலக்கிய உலகிலும், அரசியல் உலகிலும் என் நாவல் அதிகமாகப் பேசப்பட்டது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம்களுக்கான ஒரு தனிக்கட்சியாக 1987ஆம் ஆண்டு உருவாக்கம் பெற்றது. அதன் ஸ்தாபகத் தலைவர் மறைந்த எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களும், அப்போதைய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சுந்திரமூர்த்தி அபூபக்கர் அவர்களும் என் நாவலைப் படித்துவிட்டு என் வீட்டுக்கு வந்து பாராட்டினர். இந்நாவலில் இலங்கையின் இனப்பிரச்சினைக்கு மாகாண அலகுகள் பொருத்தமானது என்பதை நான் 1983ஆம் ஆண்டில் சுட்டிக் காட்டியிருந்தேன். இந்திய - இலங்கை ஒப்பந்தப்படி இலங்கையின் அரசியலமைப்பின் 13ஆம் திருத்தப் பிரகாரம் இலங்கையின் இனப்பிரச்சினைக்குத் தீர்வாக மாகாணசபை முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இவ்விரு நிகழ்வுகளையும் வைத்து அரசியல் தளத்தில் கூட என் நாவல் அதிகமாகப் பேசப்பட்டது. இந்நாவலின் இரண்டாவது பதிப்பு சிந்தனைவட்டத்தின் வெளியீடாக வெளிவந்து குறிப்பிட்ட சில மாதங்களுக்குள் விற்பனையாகி முடிந்தமையும் குறிப்பிடத்தக்கது. இந்த நாவல் பிற்காலத்தில் தமிழகத்தைச் சேர்ந்த சில பேராசிரியர்களால் ஆய்வுசெய்யப்பட்டதுடன், இலங்கைப் பல்கலைக் கழகங்களிலும் ஆய்வுக்குட்படுத்தப்பட்டது.

இருப்பினும், எனது தனிப்பட்ட வாழ்வில் தொழில் நிமித்தமாக எனக்கு ஏற்பட்ட நேரநெருக்கடிகளும்,  தனிப்பட்ட சில பிரச்சினைகளும் நாவல் துறையில் ஈடுபடக்கூடிய அவகாசத்தை குறைத்தது. அன்று முஸ்லிம்களுக்குத் தனிக்கட்சியொன்று அவசியம் என்று இலக்கிய வடிவமாக நான் முன்வைத்த கருத்தையிட்டு இன்று மனவேதனைப் படுகின்றேன். இன்று இலங்கையில் முஸ்லிம்களுக்கென 12 அரசியல் கட்சிகள் உள்ளன. இதுவே ஒரு சாபக்கேடாகவும் அமைந்து விட்டது. குறிப்பாக ஒரு அரசியல் தலைமைத்துவமில்லாத நிலைக்கு இலங்கை முஸ்லிம்களை மாற்றிவிட்டது. எனவே,  எதிர்காலத்தில் “அடிவானத்து ஒளிர்வுகள் பாகம் 02” ஐ எழுதும் எண்ணம் உண்டு. அதில் அன்று அரசியல் ரீதியாக என்னால் கூறப்பட்ட எதிர்வுகூறல்களை இன்றைய சூழ்நிலைகளுடன் தொடர்புபடுத்தி அக்கதையைத் தொடுப்பது என் எதிர்பார்க்கையாகும்.

கேள்வி:- இதுவரை 150 நூல்களை எழுதி வெளியிட்டுள்ளீர்கள். இவற்றுள் அதிகமான நூல்கள் பாடநூல்கள் எனப்படுகின்றனவே.

பதில்:- உண்மைதான். நான் எழுதிய நூல்களுள் 72 நூல்கள் போக மீதமானவை பாடவழிகாட்டி நூல்கள் என்பதை நான் ஏற்றுக் கொள்கின்றேன். இதற்கான மூல காரணத்தையும் குறிப்பிட வேண்டும். இலங்கையைப் பொறுத்தமட்டில் இலக்கிய நூல்களை வெளியிட்டு சந்தைப்படுத்துவது மிகவும் கடினமானவொரு காரியம். இந்தியாவில் வெளியிடப்படக்கூடிய நூல்களில் ஒரு தொகுதியை நூலகங்களோ,  அரசோ கொள்வனவு செய்வதைப் போல இலங்கையில் எத்தகைய ஏற்பாடுகளுமில்லை. இதனால் இலங்கையைப் பொறுத்தமட்டில் எழுத்தாளனே வெளியீட்டாளனாக இருக்க வேண்டிய துர்ப்பாக்கியமான  நிலை காணப்படுகின்றது.

ஆரம்ப காலங்களில் இலக்கிய நூல்களை மாத்திரம் வெளியிட்டு நான் பல இலட்சங்கள் நஷ்டமடைந்துள்ளேன். இந்நிலையில் நான் ஒரு கல்லூரி ஆசிரியராகவும் அதேபோல தனியார் கல்லூரிகளில் முன்னணி அரசறிவியல் போதகராகவும் இருந்ததினால் நாடளாவிய ரீதியில் பல்கலைக்கழகங்கள்,  பாடசாலைகளுடன் எனக்கு நேரடியான தொடர்புகள் ஏற்பட்டன. இதனைப் பயன்படுத்தியே ஆரம்ப கல்வி, இடைநிலைக் கல்வி, உயர்தரக் கல்வி,  பல்கலைக்கழகக் கல்வி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு பாடவழிகாட்டி நூல்களை குறிப்பாக அரசறிவியல், வரலாறு, சமூகக்கல்வி போன்ற பாடங்களில் எழுதி வெளியிட்டேன். பல்கலைக்கழக பீ.ஏ. பட்டப்படிப்பு மாணவர்களுக்காக வேண்டி அரசறிவியல் நூல்களையும் எழுதி வெளியிட்டேன். மேலும், என்னுடைய மனைவி மஸீதா புன்னியாமீனுடன் இணைந்து தரம் 05 புலமைப்பரிசில் பாடத்திட்டத்திற்கமைய பல நூல்களை எழுதி வெளியிட்டுள்ளேன். என்னால் எழுதப்பட்ட பாடநூல்களுக்கு அதிகக் கேள்வி இருந்தது. இந்நூல்களால் கிடைத்த இலாபத்தை வைத்து இலக்கிய நூல்களுக்கு முதலீடு செய்தேன். எனவே,  பாடநூல்கள் மூலமாக ஒரு வருமானம் கிடைக்காதவிடத்து என்னால் இலக்கிய நூல்களை இவ்வளவு தூரத்திற்கு எழுதி வெளியிட முடியாது போயிருக்கும்.

கேள்வி:- 21ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்து இலங்கை எழுத்தாளர்கள்,  ஊடகவியலாளர்கள்,  கலைஞர்களின் விபரங்களைத் தொகுத்து நூலுருப்படுத்துவதிலும் அவற்றை ஆவணப்படுத்துவதிலும் கூடிய கரிசனை செலுத்தி வருகின்றீர்கள். இதைப் பற்றி சற்று கூற முடியுமா?

பதில்:- 19ஆம் நூற்றாண்டுக் காலப்பகுதியிலிருந்து இலங்கையில் தமிழ்மொழி வளர்ச்சிக்காக வேண்டியும்,  தமிழ்மொழியினூடாக சமய,  கலாசார,  தேசிய உணர்வுகளை ஏற்படுத்தக்கூடிய வகையிலும் ஆயிரக்கணக்கான எழுத்தாளர்கள்,  ஊடகவியலாளர்கள்,  கலைஞர்கள் தமது பங்களிப்புக்களை நல்கி வந்துள்ளனர். ஆனால்,  இன்றுள்ள தலைமுறையினருக்கும், நாளைய தலைமுறையினருக்கும் அவர்கள் யார்? என்ன செய்தார்கள்? அவர்களின் பணிகள் எத்தகையவை என்ற விபரங்கள் தெரியாமல் இருக்கின்றது. பல்கலைக்கழக மற்றும் உயர்மட்ட ஆய்வுகளில் கூட,  இத்தகைய தகவல்களைப் பெற முடியாதிருப்பது வேதனைக்குரிய ஒரு விடயமாகும். இதற்கான காரணம்  இவர்கள் பற்றிய தரவுகள்,  விபரங்கள், குறிப்புகள் இன்மையே.

இது பற்றி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும், அவை பதிவு செய்யப்பட்டு ஆவணப்படுத்தப்பட வேண்டுமெனவும் நீண்ட காலமாக பலரும் கூறிவந்தாலும்கூட,  தொடர்ச்சியாக அம்முயற்சிகளில் யாரும் ஈடுபடவில்லை. முயற்சிகளை மேற்கொண்டவர்களும் குறிப்பிட்ட சிலரின் விபரங்களைத் திரட்டி ஆவணப்படுத்தியதுடன்,  அவற்றைத் தொடரவில்லை. எனவேதான்,  இலங்கையிலிருந்து வெளிவந்த நவமணி பத்திரிகையின் பிரதம ஆசிரியர் காலஞ்சென்ற எம்.பி.எம். அஸ்ஹர் அவர்களின் பத்திரிகை அனுசரணையுடன் இம்முயற்சியை நான் 2002ஆம் ஆண்டிலிருந்து ஆரம்பித்தேன். இன்றுவரை இலங்கையைச் சேர்ந்த 325 எழுத்தாளர்கள்,  ஊடகவியலாளர்கள்,  கலைஞர்களின் விபரங்களைத் திரட்டி 14 தொகுதி நூல்களை வெளியிட முடிந்தது. அத்துடன்,  http://noolaham.org/wiki   இணையத்தளத்திலும் இவற்றை பதிவாக்க முடிந்துள்ளது. மேலும்,  என் சக்திக்கு எட்டியவாறு தேசிய ரீதியிலும்,  சர்வதேச ரீதியிலும் இவர்கள் பற்றிய குறிப்புகளை ஆவணப்படுத்தி வருகின்றேன். இன்னும் இம்முயற்சி தொடர்கின்றது. தற்போது இலங்கையிலிருந்து வெளிவரும் முன்னணி பத்திரிகைகளில் ஒன்றான ‘ஞாயிறு தினக்குர’லில் “இவர்கள் நம்மவர்கள்” எனும் தலைப்பில் மேற்கொண்டு வருகின்றேன்.

கேள்வி:- இம்முயற்சிக்கென இலங்கையிலுள்ள முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம்,  இந்து சமய கலாசார திணைக்களம் அல்லது வேறு யாதாவது நிறுவனங்கள் மூலமாக உதவிகள் கிடைக்கின்றனவா?

பதில்:- இல்லை. முழுமையாக இது என்னுடைய தனி முயற்சியே. உண்மையில் இத்தகைய முயற்சிகளை இலங்கையைப் பொறுத்தமட்டில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம்,  இந்து சமய கலாசார திணைக்களம் போன்றன மேற்கொண்டிருக்க வேண்டும். இதைப் பற்றி இவ்விடத்தில் நான் விமர்சிக்கத் தயாராக இல்லை. இந்த முயற்சியை மேற்கொள்ளும்போது எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள்,  கலைஞர்களின் விபரங்களைத் திரட்டுவதில் பல செலவினங்களை மேற்கொள்ள வேண்டியுள்ளது. அதுமட்டுமல்லாமல் விபரங்களைத் திரட்டிய பின் அவற்றை நூலுருப்படுத்துவதிலும் என்னுடைய சொந்த முதலீட்டையே நான் மேற்கொள்கின்றேன். இது போன்ற ஆவணப் பதிவுகளை இலங்கையில் சந்தைப்படுத்தி வருமானத்தைப் பெறுவதென்பது இயலாத காரியம். மேலும்,  இந்த விபரங்களை ஆவணப்படுத்துவதிலும் என் சொந்த பணத்தையே நான் செலவிடுகின்றேன்.

கூட்டுமொத்தமாக இதுவரை 14 தொகுதிகள் வெளிவந்துள்ளன. இந்த 14 தொகுதிகளிலும் பல இலட்சம் ரூபாய்களை நான் இழந்துள்ளேன். இவ்விடத்தில் ஒரு விடயத்தைக் குறிப்பிட வேண்டும். இலங்கையைப் பொறுத்தமட்டில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம்,  இந்து சமய கலாசார திணைக்களம் போன்றன இலங்கை எழுத்தாளர்களின் நூல்களில் சுமார் 5000 ரூபாய் பெறுமதியான நூல்களை கொள்வனவு செய்து உதவுகின்றன. என்னுடைய இந்த ஆவணத் திரட்டு நூலை கொள்வனவு செய்து உதவும்படி முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம்,  இந்து சமய கலாசார திணைக்களம் ஆகியவற்றிற்கு பலமுறை விண்ணப்பம் செய்த போதிலும்கூட,  அவர்களிடமிருந்து ஒரு பதில் கூட கிடைக்காமை இவ்விடத்தில் சுட்டிக்காட்டப்பட வேண்டியதே. (முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் இதுவரை வெளிவந்த 14 தொகுதிகளில் மூன்று தொகுதிகளை மாத்திரம் சில ஆண்டுகளுக்கு முன் கொள்வனவு செய்தது.)

இலங்கையில் அரச திணைக்களங்களுடனான இத்தகைய உதவிகளை கோரும்போது அரசியல் செல்வாக்குகள்,  அரசியல்வாதிகளின் செல்வாக்குகள்,  பிரதேசவாத செல்வாக்குகள் முதன்மைப் படுத்தப்படுவதினால் சேவையின் பெறுமானத்தை உணர்ந்து செயல்படாத அவர்களிடம் மண்டியிட நான் விரும்புவதில்லை. எவ்வாறாயினும் என் சக்திக்கெட்டியவாறு நான் மேற்கொண்டு செல்லும் முயற்சி எதிர்கால சந்ததியினருக்கு ஒரு பயன்தரும் முயற்சி என்ற நம்பிக்கையில் தொடர்ந்து கொண்டிருக்கின்றேன். நிச்சயமாக இதன் பெறுமானம் என்றோ ஒரு காலத்தில் உணரப்படும்.

கேள்வி:- இலங்கை எழுத்தாளர்கள்,  ஊடகவியலாளர்கள்,  கலைஞர்களின் விபரத்திரட்டுக்கள் தகவல்களைப் பெறும் முறை பற்றியும்,  வகைப்படுத்தல்கள்  மேற்கொள்ளப்படும் முறை பற்றியும் சற்று கூறுங்கள்.

பதில்:- இலங்கை எழுத்தாளர்கள்,  ஊடகவியலாளர்கள்,  கலைஞர்களின் விபரத்திரட்டுக்கான தகவல்களை நேரடியாகவும்,  ஆதாரபூர்வமாகவும் சம்பந்தப்பட்ட எழுத்தாளர்கள்,  ஊடகவியலாளர்கள், கலைஞர்களிடமிருந்தும் மரணித்தவர்களாயின் அவர்களின் உறவினர்களிடமிருந்தும் பெறுகின்றேன். இதற்காக வேண்டி தொடர்புகளுக்காக இலங்கையில் ஞாயிறுதினக்குரல் ஆசிரியர் திருவாளர் இராஜபாரதி அவர்கள் பூரண ஒத்துழைப்பு வழங்கி வருகின்றார். புலம்பெயர் நாடுகளில் நூலகவியலாளர் என். செல்வராஜா,  த. ஜெயபாலன் போன்றோரும்; ஜெர்மனியில் திருவாளர்கள் அருந்தவராசா,  சிவராசா,  ஜீவகன்,  புவனேந்திரன் போன்றோரும் ஒத்துழைப்பு நல்கி வருகின்றனர். புலம்பெயர் ஊடகங்களான உதயன்,  லண்டன் குரல், காலைக்கதிர்,  அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் ஐ.பி.சி.,  தீபம் தொலைக்காட்சி,  ஜெர்மனியில் மண்,  அவுஸ்திரேலியாவில் உதயம்,  இலங்கையில் ஞானம் போன்றன ஊடக அனுசரணையை வழங்கி வருகின்றன. இதன் மூலமாகவே எழுத்தாளர்கள்,  ஊடகவியலாளர்கள்,  கலைஞர்களுடனான தொடர்பினை நான் ஏற்படுத்திக் கொண்டு விபரங்களைப் பெறுகின்றேன். மேலும்,  சில தேடல்களின் மூலமாக பழைய எழுத்தாளர்கள்,  ஊடகவியலாளர்கள்,  கலைஞர்களின் விபரங்களைப் பெறுகின்றேன்.

இந்த இயந்திர யுகத்தில் பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கும் மத்தியில் குறிப்பாக நேரம் போதாமையினால் தேடல் முயற்சிகளினூடாக விபரங்களைத் திரட்டுவதில் பின்னடைவு நிலைதான் காணப்படுகின்றது. விபரத்திரட்டில் எவ்வித வகைப்படுத்தலையும் நான் மேற்கொள்ளவில்லை.
எனக்குக் கிடைக்கும் தகவல்களின் நம்பகத்தன்மைக்கு முன்னுரிமைக் கொடுத்து எழுதுகின்றேன். குறிப்பாக இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட எழுத்தாளர்கள்,  ஊடகவியலாளர்கள்,  கலைஞர்களின் விபரங்களையே நான் திரட்டுகின்றேன். அவர்கள் புலம் பெயர்ந்திருந்தாலும் அவர்கள் இலங்கை மண்ணில் பிறந்தவர்களாகவே இருக்க வேண்டும். இதுவே எனது அடிப்படை.

கேள்வி:- இந்த எழுத்தாளர்கள்,  ஊடகவியலாளர்கள்,  கலைஞர்களின் விபரத்திரட்டின் மூலம் உங்கள் இலக்கு என்ன?

பதில்:- சற்று சிந்திக்க வேண்டிய கேள்வி. 19ஆம் நூற்றாண்டின் ஆரம்ப கட்டத்திலிருந்து 21ஆம் நூற்றாண்டின் ஆரம்ப கட்டம்வரை இலங்கையில் தமிழ்மொழி மூல வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்த 20 ஆயிரத்துக்கும்  மேற்பட்ட எழுத்தாளர்கள்,  ஊடகவியலாளர்கள்,  கலைஞர்களின் இனங்காண முடிகின்றது. ஆனால்,  இவர்கள் அனைவரினதும் விபரங்களைத் திரட்ட முடியும் என்பது நிச்சயமாக என் வாழ்நாளில் முடியாததே. ஏனெனில்,  ஒரு தனி மனிதனாக நின்று தான் பல்வேறுபட்ட பிரச்சினைகளின் மத்தியில் இதுவரை 350 பேருடைய விபரங்களை ஆதாரபூர்வமாக திரட்டித் தொகுத்து ஆவணப்படுத்தியுள்ளேன்.
தங்கள் கேள்விக்கு என்னுடைய இலக்கைக் குறிப்பிடுவதாயின்,  தேகாரோக்கிய நிலையில் நான் உயிருடன் உள்ள வரை இயலுமான வரை விபரங்களைத் திரட்டுவதே இம்முயற்சியில் என்னுடைய அடுத்த இலக்கு 500 பேர். பின்பு 1000……. ஆசையும்,  ஆர்வமும்,  முயற்சியும் உண்டு. என் தேகாரோக்கியத்தைப் பொறுத்து இந்த இலக்கையடையலாம். அடையாமலும் விடலாம்.

இருப்பினும் ஒரு ஆசை. சுமார் எட்டாண்டுகளாக மிகவும் சிரமப்பட்டு பல்வேறு தரப்பினரின் எதிர்ப்புகளை சமாளித்துக் கொண்டு பாரிய பொருளாதாரப் பிரச்சினைகளையும் முகம்கொடுத்து என்னால் மேற்கொள்ளப்பட்டு வரும் இம்முயற்சியை நான் இல்லாத காலங்களில் யாராவது தொடர வேண்டும். அது தனிப்பட்டவராகவும் இருக்கலாம். அல்லது ஒரு அரச அன்றேல் சுயேச்சை நிறுவனமாகவும் இருக்கலாம். இதுவரை என்னால் மேற்கொள்ளப்பட்ட சகல ஆய்வுக்கும் ஆதாரங்கள் உள்ளன. அவை தொடர்ச்சியான ஆய்வுக்கு வழிவகுக்கும்.
கேள்வி:- தங்கள் குறிக்கோள்கள் நிறைவேற வாழ்த்துக்கள். சில எழுத்தாளர்களின் விபரங்களை http://thatstamil.oneindia.in/ இணையத்தளத்திலும் எழுதுவதாக அறிகின்றோம். இதை பற்றி கூற முடியுமா?
பதில்:- எழுத்தாளர்கள்,  ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டினை நான் ஞாயிறு தினக்குரலில் முதன்மையாக செய்து வருகின்றேன். தற்போது ஞாயிறு தினக்குரலில் பிரசுரமாகிவரும் இத்தொடரில் ஒரு குறித்த ஒழுங்கின் அடிப்படையில் செய்து வருகின்றேன். குறிப்பாக எழுத்தாளர்கள்,  ஊடகவியலாளர்கள்,  கலைஞர்களின் பிறப்பிடம், வாழ்விடம்,  பிறந்த திகதி,  பெற்றோர்,  கற்ற பாடசாலைகள்,  தொழில், எழுத்து,  ஊடகம்,  கலைத்துறையில் ஈடுபாடு,  சாதனைகள்,  பெற்ற விருதுகள்,  இத்துறையில் தன்னை ஊக்குவித்தவர்கள் போன்ற விபரங்கள் ஒரு ஒழுங்கமைப்பின் கீழ் இடம்பெறுவதை நீங்கள் அவதானித்திருக்கலாம். மேற்குறிப்பிட்ட ஒழுங்கமைப்பிற்கிணங்க தகவல்களைப் பெற்றுக் கொள்ள முடியாத நிலையில் அல்லது விசேட காரணமொன்றின் நிமித்தம் ஒரு துறையை முதன்மைப்படுத்த வேண்டிய நிலையிலுள்ள எழுத்தாளர்கள்,  ஊடகவியலாளர்கள்,  கலைஞர்களின் விபரங்களை http://thatstamil.oneindia.in/ இணையத்தளத்தில் பிரசுரித்து வருகின்றேன். http://thatstamil.oneindia.in/ இணையத்தளம் இலட்சக்கணக்கான வாசகர்களைக் கொண்ட ஒரு இணையத்தளமாகும். சர்வதேச ரீதியில் இந்த இணையத்தளத்துக்கு வாசகர்கள் உள்ளனர். எனவே,  இந்த இணையத்தளத்தில் எமது படைப்பாளிகளை அறிமுகப்படுத்துவதென்பது சர்வதேச ரீதியிலான ஓர் அறிமுகப்படுத்தலாகவே உள்ளது. இருப்பினும் இத்தகையோரின் அறிமுகம் பிரசுரமானாலும் இவர்கள் நம்மவர்கள் நூற்றொடரிலே இக்குறிப்புகளும் பதிவாக்கப்படும். எதிர்காலத்தில் இலங்கை எழுத்தாளர்கள்,  ஊடகவியலாளர்கள்,  கலைஞர்களின் விபரத்திரட்டில் இடம்பெற்றுள்ள அனைவரையும் சர்வதேச மட்டத்திலான அறிமுகத்தில் சேர்க்க விரிவான திட்டமொன்றை வகுத்து வருகின்றேன். இது பற்றிய விரிவான தகவல்களை பின்பு அறிவிப்பேன். இவ்விடத்தில் http://thatstamil.oneindia.in/ இணையத் தளஆசிரியர் திருவாளர் A.K Khan அவர்களுக்கும்,  நண்பர் முனைவர் மு. இளங்கோவன் அவர்களுக்கும் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

குறிப்பு:-
இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட எழுத்தாளர்கள்,  ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் தங்கள் பற்றிய குறிப்புகளை வழங்க விரும்பினால் உரிய விபரத்திரட்டுப் படிவங்களைப் பெற பின்வரும் முகவரியுடன் தொடர்பு கொள்ளவும்

P.M. PUNIYAMEEN
14, UDATALAWINNA MADIGE,
UDATALAWINNA
SRI LANKA.
தொலை பேசி   : 0094 -812 -493 892
தொலை நகல்   : 0094 -812 -493 746
மின் அஞ்சல்    :  pmpuniyameen @ yahoo.com

நன்றி: ஞாயிறு தினக்குரல் (இலங்கை) : 24 மே 2009