Sunday, 13 February 2011

நீரிழிவு நோய் - எனது அனுபவமும், எனது தேடலும் - புன்னியாமீன்-

இன்று உலகம் முழுவதும் பேசப்படும் நோய்களில் ஒன்றாகவே நீரிழிவு நோய் காணப்படுகின்றது. காரணம் இந்நோய் பரவலாக அதிகமான மக்களிடம் காணப்படுவதுடன் அதன் தொடர் விளைவுகளும் பாரதூரமாகவே இருப்பதுமாகும். இந்நோய் வந்து விட்டால் அதை முற்று முழுதாகக் குணமாக்க முடியாது எனக்கூறப்படுகின்றது. இருப்பினும் வைத்திய ஆலோசனைப்படி நடப்பதில் நோயாளி முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதன் மூலம் இந்நோயின் தொடர் விளைவுகளைத் தடுக்கவோ அல்லது குறைக்கவோ முடியும். நீரிழிவு நோயாளி ஒருவரைப் பொருத்த வரையில் சுயகட்டுப்பாட்டுடன் எந்நேரமும் அவதானத்துடன் செயற்பட்டால் தேகாரோக்கியத்தைப் பேணி, வாழ்நாளை நீடித்துக்கொள்ள முடிகிறது.

நீரிழிவு நோய் குறித்து பலநூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பாக அறியப்பட்டிருந்தாலும் கூட, இதற்கான உறுதியான சிகிச்சை முறை என்பது இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப கட்டத்தில் தான் கண்டறியப்பட்டது. 1922ஆம் ஆண்டில் பேண்டிங்க் அண்ட் பெஸ்ட் என்ற கனேடிய விஞ்ஞானிகள் கூட்டணி இன்சுலின் மூலம் நீரிழிவு நோயை முழுமையாக கட்டுப்படுத்தலாம் என்பதைக் கண்டறிந்தனர். அதுவரை, ஒருவருக்கு நீரிழிவு நோய் வந்தால் மரணம் நிச்சயம் என்கிற நிலைதான் நீடித்தது. இன்சுலினை கண்டுபிடித்த 'பேண்டிங்க் அண்ட் பெஸ்ட்" என்ற விஞ்ஞானிகள் கூட்டணியின் தலைவர் பிரெடெங்க் பேண்டிங்கின்" பிறந்த நாளான நவம்பர் 14 ஆம் திகதியை, ஆண்டுதோறும் உலக நீரிழிவு நோய் தினமாக அனுஸ்டிக்கப்படுகிறது. முதன் முதலில் இது 1991 ஆம் ஆண்டு முதல் அனுசரிக்கப்படத் தொடங்கியது, தற்போது உலக அளவில் 192 நாடுகளில் அனுசரிக்கப்படுகிறது.

வயது வித்தியாசம், தகைமை, தராதரம், பால் இன பேதம், செல்வம், வறுமை, நகரம் கிராமம் மட்டுமன்றி தயவு தாட்சண்யம் கூட காட்டாது நீரிழிவு நோய் வேகமாக பரவி வருவதாக கூறப்படுகின்றது. உலக நீரிழிவு நோய் தினத்தில் நீரிழிவுநோய் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான பிரச்சாரங்கள் சர்வதேச ரீதியில் முன்னெடுக்கப்படுகின்றன. பல்வேறு சுகாதார அமைப்புகளும் மருத்துவமனைகளும், தன்னார்வத் தொண்டர் நிறுவனங்களும், நீரிழிவு நோய் அமைப்புகளுடன் இணைந்து இத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்குகின்றன. உலக அளவில் நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரங்களுக்கு வானொலி, தொலைக்காட்சி, விளையாட்டுப் போட்டிகள், பிரச்சாரங்கள், விழிப்புணர்வுக் கூட்டங்கள், பயிற்சி முகாம்கள், கருத்தரங்குகள் ஆகிய தொடர்பு சாதனங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

அது மட்டுமல்லாமல், ஐக்கிய நாடுகள் சபை இந்த நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் தனியான அடையாளச் சின்னம் ஒன்றை வடிவமைத்து வெளியிட்டிருக்கிறது. நீலநிறத்திலான வளையம் நீரிழிவு நோய் தடுப்பின் சின்னமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. எய்ட்ஸ் நோய்க்கு அடுத்தபடியாக நீரிழிவு நோய்க்கு மட்டுமே ஐக்கிய நாடுகள் சபை இப்படித் தனியான ஒரு சின்னத்தை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். இதன் மூலம் உலக அளவில் நீரிழிவுநோய் என்பது மிகப்பெரும் ஆட்கொல்லியாக உருவெடுத்து வருகிறது என்கிற ஆபத்தை ஐக்கிய நாடுகள் சபை குறிப்புணர்த்துவதாக நீரிழிவு நோய் நிபுணர்கள் கருதுகின்றார்கள். தற்போது உலக அளவில் 18 கோடிக்கு மேற்பட்டோர் நீரிழிவு நோயுள்ளவர்களாக உள்ளனர். இந்த எண்ணிக்கை 2025-ல் 36 கோடியே 50 இலட்சமாக அதிகரிக்கலாம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

உலகளாவிய ரீதியில் நீரிழிவு நோயாளிகள் அதிகம் உள்ள 10 நாடுகளை (2009 தகவல் படி) பின்வருமாறு வகைப்படுத்தலாம்.

1) இந்தியா 2) சீனா 3) அமெரிக்கா 4) இந்தோனேசியா 5) ஜப்பான் 6) பாகிஸ்தான் 7) ரஷ்யா 8) பிரேஸில் 9) இத்தாலி 10) பங்களாதேஷ் என்பனவாகும்.
முதலிடத்தில் காணப்படும் இந்தியாவில் தற்போது சுமார் 2 கோடியே 50 இலட்சத்திலிருந்து 3 கோடி பேர் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதில் ஆச்சரியம் என்னவென்றால், 2 கோடிப் பேருக்கு தங்களுக்கு இந்த நோய் இருப்பதே தெரியாமல் இருக்கின்றனர் என்றும் ஒரு புள்ளி விவரம் தெரிவிக்கிறது. இவ்வாறு நோயைப்பற்றி தெரிந்து கொள்ளாதோர் இந்தியாவில் மாத்திரமல்லாமல் மூன்றாம் உலக நாடுகளிலும் அதிகமாகக் காணப்படுகின்றனர்.

நீரிழிவு தொடர்பாக கருத்து வெளியிட்ட அமெரிக்க டாக்டர் ஒருவர் 'நீரிழிவு உள்ள ஒருவர் தனக்கு நீரிழிவு உள்ளதென்று தெரிந்து கொண்டால், நீரிழிவு என்பது அவருக்கு ஒரு நோயல்ல." என்று குறிப்பிட்டிருந்தார். இதன் அர்த்தம் நீரிழிவு நோய் உள்ள ஒருவர் தனது கட்டுப்பாட்டின் மூலம் நோயைக் கட்டுப்படுத்திக் கொள்ளலாம் என்பதாகும். நாம் நோயைக் கட்டுப்பாடாக வைத்திருப்பதற்கு, முதலில் அந்நோயைப்பற்றி முழுமையாக நன்கு அறிந்து வைத்திருக்க வேண்டும். அதாவது நீரிழிவு நோய் என்ன காரணத்தால் ஏற்படுகிறது. அது மனித உடலை எந்த வகையில் பாதிக்கிறது என்பதைப் பற்றிய விளக்கங்களை நோயாளிகள் மட்டுமல்லாது அனைவரும் அறிந்திருத்தல் வேண்டியது இன்றியமையாதது.

முதலில் நீரிழிவு என்றால் என்ன என்பது பற்றி சிறிய விளக்கம் ஒன்றை எளிமையான முறையில் பெற்றுக் கொள்வோம். எமது இரத்தத்தில் இனிப்புச்சத்து (குளுக்கோசின் அளவு) வழமையாக இருப்பதிலும் பார்க்க அதிகரிப்பதினாலேயே நீரிழிவு நோய் ஏற்படுகிறது. இக்குளுக்கோசானது நாம் உண்ணும் உணவிலுள்ள மாப்பொருள் சமிபாடடைந்து குளுக்கோசாக மாற்றப்பட்டு குருதியால் அகத்துறிஞ்சப்படுகிறது. சாதாரண மனிதனின் 100ml குருதியில் 80-120mg குளுக்கோசு காணப்படுகிறது. எமது உடல் இயக்கத்திற்குத் தேவையான குளுக்கோசு எமது உடற் கலங்களுக்குள் உடைக்கப்பட்டுப் பெறப்படுகிறது. குருதியில் உள்ள குளுக்கோசு உடற்கலங்களுக்குள் செல்ல உதவுவது உணவுப்பாதையுடன் தொடர்பாக இருக்கும். சதையி (Pancreases) எனும் சுரப்பியால் சுரக்கப்படும். "இன்சுலின்" (Insulin) எனப்படும் ஓர் ஓமோன் ஆகும். இவ் இன்சுலின் உடலில் தொழிற்படாது விடுவதால் அல்லது இன்சுலின் சுரக்கும் அளவு குறைவதால் குருதியிலுள்ள குளுக்கோசு உடற்கலங்களுக்குள் செல்வது தடைப்படும். இதனால் குருதியில் குளுக்கோசின் அளவு கூடுகிறது. சாதாரணமாக சிறுநீரகங்கள் (Kidney) குளுக்கோசை சிறுநீருடன் வெளியேற்றுவதில்லை.

குருதியில் குளுக்கோசின் அளவு கூடும் போது அதாவது 100ml குருதியில் குளுக்கோசின் அளவு 180mg ற்கு மேலாகக் கூடும் போது சிறுநீரகங்கள் மேலதிக குளுக்கோசை சிறுநீருடன் வெளியேற்றுகின்றன. இதனை சிறுநீரில் சீனி (Sugar) இருக்கிறது எனக் குறிப்பிடுகிறோம். இவ்வாறு சிறுநீருடன் குளுக்கோசு போகும் போது உடலிலிருந்து அதிகம் நீரும் சேர்ந்தே வெளியேறும். இதனால் வழமையிலும் பார்க்க அதிகளவு சிறுநீர் உண்டாவதால் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிய நிலை ஏற்படும். இதனாலேயே இதை நீரிழிவு என்கிறோம். அதிகளவு நீர் வெளியேறுவதால் மிதமிஞ்சிய தாகமும் ஏற்படுகிறது.

சிலரின் உடலில் நீரிழிவு நீண்டகாலங்களாகக் காணப்பட்டாலும் கூட நோயாளியின் அறியாத்தன்மை காரணமாக தனக்கு நீரிழிவு உள்ளது என்பதை நோயாளி உணர்ந்து கொள்வதில்லை. இதனால் பல பாரதூரமான விளைவுகள் ஏற்பட்ட சந்தர்ப்பங்களும் உண்டு. எனவே நீரிழிவு நோயின் மூலமான அறிகுறிகள் சிலதை நோக்குவோம்.

1. அடிக்கடி சிறுநீர் கழித்தல், வழமைக்கு மாறாக இரவிலும் பல தடவை சிறுநீர் கழிக்க வேண்டிய நிலை ஏற்படல்.
2 அடிக்கடி தாகம் ஏற்படல்.
3. அசாதாரண பசி ஏற்படல்.
4. உடல் சோர்வாக இருத்தல்.
5. உடல் நிறை குறைந்து கொண்டு போதல்.
6. தலை சுற்றுதல்,மயக்கம் போன்றன அடிக்கடி ஏற்படல்.
7. கை, கால்களில் விரைப்புத் தன்மை ஏற்படுதல்.
8. தேகத்தில் பருக்களும், கட்டிகளும் தோன்றல்.
9. ஆண், பெண் இனப்பெருக்க உறுப்புகளில் ,கூடிய அழற்சி ஏற்படல்.
10. கண் பார்வை குறைவடைதல்.
11. புண்கள் ஏற்படின் அவை ஆறுவதற்கு வழமையிலும் கூடிய நாட்கள் எடுத்தல்.
12. எளிதில் கோபமடைதல்.

மேற்குறிப்பிட்ட அறிகுறிகளில் சிலவற்றை சிலகாலமாக நீங்கள் அவதானித்தால் அருகிலுள்ள வைத்திய சாலைக்குச் சென்று சிறுநீர்ப்பரிசோதனை செய்வதன் மூலம் அந்நோய் இருக்கின்றதா?, என்பதை அறிந்து கொள்ளலாம். பின்பு இரத்தப்பரிசோதனை செய்வதன் மூலமே இந்நோயை நிச்சயப்படுத்திக் கொள்ளலாம். நீரிழிவு நோய் காணப்படுமிடத்து டாக்டரை அணுகி உரிய சிகிட்சை முறைகளை மேற்கொள்ளல் அவசியமாகும்.

பொதுவாக நீரிழிவு நோயினை நான்காக வகைப்படுத்தலாம். அதாவது, முதல் வகை நீரிழிவு நோய், இரண்டாம் வகை நீரிழிவு நோய், கர்ப்பகால நீரிழிவு நோய், சதையியில் (Pancreases) ஏற்படும் கற்களால் உருவாகும் நீரிழிவு நோய் என்ற அடிப்படையில் நான்கு வகையான நீரிழிவு நோய்களே தெற்காசிய நாடுகளைச் சேர்ந்தவர்களில் 98 சதவீதமானவர்களை பாதிப்பதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

முதல் வகை நீரிழிவு நோய் என்பது பெரும்பாலும் குழந்தைகளை தாக்கும் தன்மை கொண்டது. இதனால் சில மருத்துவர்கள் இதை குழந்தைகளின் நீரிழிவு நோய் என்றும் அழைக்கிறார்கள். குழந்தை பிறந்தது முதல் முப்பது வயது வரை தாக்கும் தன்மை கொண்டது எனப்படுகின்றது.

இந்த முதல் பிரிவு நீரிழிவு நோய் ஏன் ஏற்படுகிறது என்பது தொடர்பில் தெளிவான உறுதியான ஆராய்ச்சி முடிவுகள் எட்டப்படவில்லை. மனிதர்களின் உடம்பில் இயற்கையிலேயே இருக்கும் நோய் எதிர்ப்புத்தன்மையானது, திடீரென்று சதையியியைத் (Pancreases) தாக்கி அதில் இருக்கும் இன்சுலின் சுரக்கும் சுரப்பிகளை அழித்து விடுகிறது. இதனால் இன்சுலின் சுரக்கும் தன்மையை சதையி இழந்துவிடுகிறது. இப்படி மனித உடம்பின் ஒரு பகுதி கலங்கள் , இன்னொரு பகுதிக் கலங்களை ஏன் தாக்குகிறது என்பதற்கு இதுவரை உறுதியான காரணங்கள் தெரியவில்லை. ஒருவகையான வைரஸ் தாக்குதல் காரணமாகவே இப்படி நடப்பதாக அண்மைக்கால கண்டுபிடிப்புகள் கூறினாலும் அந்த குறிப்பிட்ட வைரஸை இனம் காண்பதற்கான ஆய்வுகள் இன்னமும் தொடர்ந்துகொண்டிருக்கின்றன.

அதனால், இந்த முதல் வகை நீரிழிவு நோயைப் பொறுத்தவரை, இது ஒருவருக்கு வந்தால் அவருக்கு ஆயுட்காலம் முழுமைக்கும் இன்சுலின் ஊசிமூலம் குளுக்கோசின் அளவைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது சிறந்த வழியாகக் கூறப்படுகின்றது.

உலகளாவிய ரீதியில் எண்ணிக்கை அடிப்படையில் பெரும்பாலானவர்களை பாதிப்பது இரண்டாவது வகை நீரிழிவு நோயாகும். இந்த இரண்டாவது வகை நீரிழிவு நோயைப் பொறுத்தவரை, அது ஒருவருக்கு வருவதற்கு பல காரணங்கள் காணப்படுகின்றன.

பெற்றோருக்கு நீரிழிவு நோய் இருந்தால் அவர்களின் பிள்ளைகளுக்கு நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்புகள் 80 சதவீதம் இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. அது தவிர கூடுதல் உடல் பருமன், அதிகபட்ச கொழுப்புச்சத்துள்ள உணவுகள் சாப்பிடுவது, உடற்பயிற்சியற்ற வாழ்க்கைமுறை போன்ற காரணிகள், ஒருவருக்கு நீரிழிவு நோயை வரவழைப்பதில் முக்கிய பங்காற்றுவதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மூன்றாவது வகையான கர்ப்பகால நீரிழிவு நோய். சில பெண்களுக்கு கர்ப்பகாலத்தில் தற்காலிகமாக வருவது. கர்ப்பகாலத்தில் பெண்களின் உடல் எடை அதிகரிப்பதாலும், கருவில் இருக்கும் குழந்தையின் வளர்ச்சி காரணமாகவும், பெண்களுக்கு கூடுதலாக இன்சுலின் தேவைப்படுகிறது. பெரும்பாலானவர்களுக்கு இந்த கூடுதல் இன்சுலின் இயற்கையாகவே சுரந்தாலும், சில பெண்களுக்கு இது சுரப்பதில்லை. அதனால் அவர்களின் இரத்தத்தில் குளுக்கோசின் அளவு அதிகரித்து, அவர்களுக்கு நீரிழிவு நோய் ஏற்படுகிறது. இவர்களின் கர்ப்பத்தின் இறுதியில் குழந்தை பிறந்ததும் இவர்களில் பலருக்கு நீரிழிவு நோய் இல்லாது போய்விடும்.

நான்காவது வகையான நீரிழிவுநோயை பொறுத்தவரை, சதையியில் ஏற்படும் கற்கள் காரணமாக இது உருவாகிறது. இது உருவாவதற்கு போஷாக்கின்மை உள்ளிட்ட பல்வேறு வகையான சுற்றுப்புற காரணங்கள் இருப்பதாக கூறப்பட்டாலும், இதற்கான பிரதான காரணி எது என்பது குறித்து இன்னமும் ஆய்வுகள் தொடர்கின்றன.

நீரிழிவினால் ஏற்படும் தீய விளைவுகள் பற்றியும் தெரிந்து வைத்திருத்தல் வேண்டும். ஒரு நீரிழிவு நோயாளி நோயைக் கட்டுப்பாடாக வைத்திருப்பதில் கவனம் செலுத்துவது குறைவடைந்தால் அவர் பாராதூரமான பின்விளைவுகளை எதிர்நோக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாவார். இது காலப்போக்கில் உடலில் பல்வேறு தொகுதிகளில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

1. குறைந்த இன்சுலின் தொழிற்பட்டால் ஏற்படும் விளைவுகளால் குருதிக் குழாய்களில் அடைப்பு ஏற்படலாம். இதனால் காலப்போக்கில் குருதி ஓட்டம் குறைவடைவதனால் மாரடைப்பு, உயர்இரத்த அழுத்தம் போன்ற இதய நோய்கள் தோன்றலாம்.
2. குறைந்த குருதி விநியோகம் மற்றும் பல காரணங்களால் நரம்புகள் பாதிக்கப்பட்டு உடலின் புலனுணர்வு பாதிக்கப்படும்.
3. விழித்திரையில் மாற்றத்தினால் (Retinopathy) கண்வில்லையில் ஏற்படும் மாற்றத்தினாலும் (Cataract) கண்பார்வை இல்லாது போகும் அபாயம் ஏற்படல்.
4. பாலியல் உறுப்புக்கள், சிறுநீரகம், கை, கால், தோல் பகுதிகளில் தொற்று நோய்கள் ஏற்படலாம். பிரதானமாக இந்நோய்களில் Candida எனப்படும் பங்கசு நோய் ஏற்படும்.
5. சிறுநீரகத்தில் சிக்கல் ஏற்படலாம் அல்லது இயங்க மறுக்கலாம். குறைந்த குருதி விநியோகம் நரம்புப் பாதிப்புகளால் பிரதானமாக கால்களில் பாதிப்புகள் ஏற்படல். குறைந்த புலனுணர்வால் நடப்பதில் கஸ்டம் ஏற்படுவதுடன் பாதப்பகுதியில் நோயாளர்கள் உணர முடியாமலேயே புண்கள் தோன்றலாம். இவ்வகைப் புண்கள் குணமடையாது போகின் பாதிக்கப்பட்ட கால் பகுதிகள் வெட்டியகற்ற வேண்டிய நிலை ஏற்படலாம்.

நோயைக்கட்டுப்படுத்தும் முறைகள்
1. சில நோயாளர்களுக்கு இந்நோயை உணவுக்கட்டுப்பாடுகளின் மூலமும்.
2. சிலருக்கு உணவுக்கட்டுப்பாடுடன் மருந்து, மாத்திரைகள் உட்கொள்வதன் மூலமும்
3. சிலருக்கு உணவுக்கட்டுப்பாடுகளுடன் இன்சுலின் ஊசி ஏற்றுதல்; மூலமும் கட்டுபாட்டில் வைத்திருக்கலாம். நீரிழிவு நோய் உள்ளவர்கள் 16% மக்கள் இன்சுலின் உபயோகிக்கிறார்கள். மற்றவர்களில் 54% மாத்திரைகளும் 17% இரண்டும் உபயோகிக்கிறார்கள் என புள்ளி விபரங்கள் குறிப்பிடுகின்றன. .

நீரிழிவு நோய்களுக்காகச் சிகிட்சை பெற்றுக் கொண்டிருப்போர் கவனிக்க வேண்டியவை:

1. வைத்தியரின் ஆலோசனைப்படி உணவுக்கட்டுப்பாட்டை இறுக்கமாகக் கடைப்பிடிக்க வேண்டும்.
2. வைத்திய ஆலோசனைப்படி குளிசையை அல்லது இன்சுலின் ஊசியை ஒழுங்காக எடுக்க வேண்டும்.
3. மருந்து எடுத்து அல்லது ஊசி ஏற்றி அரைமணி நேரத்திற்குள் (30 நிமிடம்) உணவை உட்கொள்ளுதல் வேண்டும்.
4. சில சந்தர்ப்பங்களில் மருந்த எடுத்த பின் உணவு உட்கொள்ளத்தவறினால் அல்லது மேலதிகமாக மருந்தை உட்கொண்டாலோ களைப்பு, பசி, மயக்கம், தலைச்சுற்று, நெஞ்சுப்படபடப்பு, அதிகளவு வியர்த்தல், உடல் குளிர்தல் போன்ற அறிகுறிகள் தென்படும். இப்படியான சந்தர்ப்பங்களில் குளுக்கோசு அல்லது வேறு இனிப்பு வகைகள் உடனடியாக உட்கொள்ளல் அவசியமாகும். இதனால் சிறிதளவு இனிப்பு வகைகளோ அல்லது குளுக்கோசோ எந்த நேரமும் உங்களுடன் வைத்திருத்தல் நன்று. (குறிப்பாக இன்சுலின் அதிகளவில் உடலில் ஏற்றிக் கொள்பவர்கள்) மேலும் நீரிழிவு நோயாளிகள் வெளியிடங்களுக்குத் தனியே செல்லும் போது தான் ஒரு நீரிழிவு நோயாளி என்பதை தெரிவிக்கும் விபரமடங்கிய குறிப்பொன்றை தன்னுடன் வைத்திருத்தல் பாதுகாப்பு மிக்கதாகும்.
5. தினமும் தேகாப்பியாசம் செய்தல் வேண்டும்.
6. உடல் சுத்தத்தைப்பேணல் வேண்டும். பிரதானமாக பாதங்களைச் சுத்தமாகவும் உலர்ந்ததாகவும் பேண வேண்டும். நீரிழிவு நோயுள்ளவர்கள் தனது கால்களையும், கால் நகங்களையும் தினம் தோறும் அவதானித்து கொள்ளல் வேண்டும்.
7. உணவுக்கட்டுப்பாடின்றி உண்பதன் மூலமோ அல்லது மருந்துகளை ஒழுங்கீனமாக பாவிப்பதன் மூலமாகவோ குருதியில் குளுக்கோசின் அளவு அதிகமாகி வயிற்றுப் புரட்டல், நாவரட்சி, மயக்கம் போன்றன ஏற்படலாம். அப்படி ஏற்படின் உடனடியாக மருத்துவரை நாடல் வேண்டும்.

நீரிழிவு நோய் ஏற்பட்டுள்ளவர்கள், எச்சந்தர்ப்பத்திலும் மிகவும் அவதானமான முறையில் தமது உடல் ஆரோக்கியத்தைப் பேணிக்கொள்வதுடன், உணவு முறைகளையும் கட்டுப்பாட்டினுள் வைத்திருப்பது மிகவும் இன்றியமையாததாகும்.

உசாத்துணை:

* http://www.healthyyears.org/
* http://www.ncbi.nlm.nih.gov/pubmedhealth/PMH0002194
* http://www.diabetes.com/
* http://en.wikipedia.org/wiki/Diabetes_mellitus
* http://www.diabetessrilanka.org/
* Harris MI, Flegal KM, Cowie CC, et al. (April 1998). "Prevalence of diabetes, impaired fasting glucose, and impaired glucose tolerance in U.S. adults. The Third National Health and Nutrition Examination Survey, 1988–1994".

2 comments:

 1. அருமையான தகவல்கள் தந்துள்ளீர்கள். நீண்ட நாட்களாக இதைப்பற்றிய தகவல்கள் தேடிக்கொண்டிருந்தேன். மிக்க நன்றி...

  அந்தமான் தமிழ் நெஞ்சன்

  ReplyDelete
 2. Very good information about how to manage diabetes and many thanks to the author. One could hardly imagine how a person suffers when diseases like diabetes come and it reminds an old saying "Prevention is better than cure". The blame starts from our approach towards nature, life, body and mind. We think we are more grown and we can control the universe by ditching and covering-up nature, body and mind. We forget the basics that our body is a formulation of real world phsical elements that need treatment by natural ways. We try to be more aggressive towards life to become rich in money(having all time sitting job with no body work), have good and decent life-style. At last we pay for the aggression and decency in the ending session and spending all the money and time in hospital for the god-damn sake of decency and acting by covering up real things.

  When we find the root cause it all started from the mind with heavenly hallucinations. We have to train our mind to accept good and bad the same way, but we celebrate only what comes short, easy, pleasent and brings hell out of havoc after a long contract with them. We celebrate sweet, pleasent smell, feather touch surrounding, sound and vision that tickles our mind and show haterd towards hot, ditchy smell and noisy surroundings. Finally in the end of race we feel that we lost the greatest and invaluable gift from inside when the demons'(diseases') remorseless attack. we finally learn that our mind is not everything without body and we come to know we are the greatest idiots in the uinverse when we see the disease free normal person. Then our dancing(good body) stops for the music(bad mind)and god's-sake decency vanishes and fall suddenly as son of the soil.

  Does it mean that we could change the things after it started? No, Really impossible! We are cursed with no escape as nobody could help anyone and end up in summing global warming. I feel ashame about this mind set and every so called decent person is leading others into a deep pit. From my long time analyses about the gifted personalities(disease free) they are mostly from agriculture who seem to be dirty and indecent beings. Do lots of physical activities connected with nature(not inside a room) in the sunlight. The sweat comes out. Make this a daily habit and you are now free from the demons for ever. This again proved me that balanced use of body and mind is the only way to lead a disease free life and free from the demon's curse. This is the real way to become rich and decent and I couldn't say anything more than this as there is no other alternative even if we cry, fly or die.

  Try not to think that one is more knowledgable by ditching down the body and this law couldn't be broken as it is natures law and it is the same before millions of years and for ever. Please remember it.

  ReplyDelete