Tuesday 10 September 2013

உலக தற்கொலை முயற்சி தடுப்பு தினம் (World Suicide Prevention Day)


உலக தற்கொலை முயற்சி தடுப்பு தினம் (World Suicide Prevention Day)
 
உலகளாவிய ரீதியில் ஆண்டு தோறும் செப்டம்பர் 10ஆம் திகதி உலக தற்கொலை முயற்சி தடுப்பு தினமாக (World Suicide Prevention Day) அனுசரிக்கப்படுகிறது. இத் தினத்தினை தற்கொலை தடுப்பிற்கான சர்வதேச அமைப்பு ( (IASP), இ உலக சுகாதார‌ அமைப்பு (WHO) ஆகியன இணைந்து 2003 ஆம் ஆண்டில் இருந்து பிரகடனப்படுத்தி நினைவு கூர்ந்துவருகிறது.

தற்கொலை என்பது ஒருவர் தன்னைத்தானே கொலை செய்து கொள்வதாகும். முட்டாள்தனமாக, கோழைத்தனமாக, பரிதாபமாக மனிதன் எடுக்கும் முடிவுகளில் ஒன்றாகவே இது இருக்கின்றது. தற்கொலை என்பது இறப்புக்களுக்கான காரணத்தில் 13 ஆவது இடத்தை வகிக்கிறது. அதிக தற்கொலைகள் இடம்பெறும் பகுதியாக சீனா மற்றும் கிழக்கு ஐரோப்பா பகுதிகள் இனங்காணப்படுகின்றன. அதேவேளை, பதிவு செய்யப்பட்ட தற்கொலைகள் குறைந்த பகுதிகளாக லத்தீன் அமெரிக்காவும் ஆசியாவின் சில சில பகுதிகளும் அறியப்பட்டுள்ளன.

''தற்கொலை செய்ய முடிவெடுப்பவர், தன்னை மட்டும் மாய்த்துக் கொள்வதில்லை. தன்னை சார்ந்திருக்கும் குடும்பத்தையும் சேர்த்தே படுகுழியில் தள்ளி விடுகிறார். தற்கொலை என்னும் தவறான முடிவு, பல்வேறு சமூகப்பிரச்னைகளை ஏற்படுத்துகிறது'' என மன நல நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

உலகளாவிய ரீதியில் 40 செக்கன்களுக்கு ஒரு முறை என்ற ரீதியில் 3 000 நபர்கள் தினமும் தற்கொலை செய்துகொள்கிறார்கள் என உலக சுகாதார நிறுவனம் குறிப்பிடுகிறது. பெண்களை விட இரண்டு மடங்கு ஆண்கள்தான் தற்கொலை செய்கிறார்கள். அதிலும் குறிப்பாக 15 வயதிற்கும் 24 வயதிற்கும் இடைப்பட்டவர்களே அதிகம் தற்கொலை செய்துகொள்கிறார்கள் என அறியப்பட்டுள்ளது.

மன அழுத்தம், குற்றவுணர்வு, இயலாமை, வெட்கம், கடுமையான உடல்வலி, நிதிச் சிக்கல்கள் உள்ளிட்ட பல காரணங்கள் ஒருவரைத் தற்கொலைக்குத் தூண்டலாம். பொதுவாக, தற்கொலை கடவுளுக்கு எதிரான செயலாக கருதப்படுகிறது.
உசாத்துணை
http://www.scoop.co.nz/stories/GE1309/S00041/world-suicide-prevention-day.htm
http://www.who.int/mediacentre/events/official_days/en/
https://en.wikipedia.org/wiki/World_Suicide_Prevention_Day
http://edu.tamilclone.com/
http://importantdays1000.blogspot.com/2012/09/10.html#sthash.g8gnomTg.dpuf


Monday 26 August 2013






ஆய கலைகள் 64
ஆய கலைகள் 64 பற்றி கேள்விப்பட்டு இருக்கிறோம் . இதுவரை ஏனோ அந்த 64 கலைகள் எது எது என்று தெரிந்து கொள்ள ஆர்வம் வரவில்லை. தற்செயலாக இணையத்தில் கிடைத்தது. அவற்றைத் தங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகின்றேன்.

01. எழுத்திலக்கணம் (அக்கரவிலக்கணம்)
02. எழுத்தாற்றல் (லிகிதம்)
03. கணிதம்
04. மறைநூல் (வேதம்)
05. தொன்மம் (புராணம்)
06. இலக்கணம் (வியாகரணம்)
07. நயனூல் (நீதி சாத்திரம்)
08. கணியம் (சோதிட சாத்திரம்)
09. அறநூல் (தரும சாத்திரம்)
10. ஓகநூல் (யோக சாத்திரம்)
11. மந்திர நூல் (மந்திர சாத்திரம்)
12. நிமித்திக நூல் (சகுன சாத்திரம்)
13. கம்மிய நூல் (சிற்ப சாத்திரம்)
14. மருத்துவ நூல் ( வைத்திய சாத்திரம்)
15. உறுப்பமைவு நூல் (உருவ சாத்திரம்)
16. மறவனப்பு (இதிகாசம்)
17. வனப்பு
18. அணிநூல் (அலங்காரம்)
19. மதுரமொழிவு (மதுரபாடணம்)
20. நாடகம்
21. நடம்
22. ஒலிநுட்ப அறிவு (சத்தப் பிரமம்)
23. யாழ் (வீணை)
24. குழல்
25. மதங்கம் (மிருதங்கம்)
26. தாளம்
27. விற்பயிற்சி (அத்திரவித்தை)
28. பொன் நோட்டம் (கனக பரீட்சை)
29. தேர்ப்பயிற்சி (ரத ப்ரீட்சை)
30. யானையேற்றம் (கச பரீட்சை)
31. குதிரையேற்றம் (அசுவ பரீட்சை)
32. மணிநோட்டம் (ரத்தின பரீட்சை)
33. நிலத்து நூல்/மண்ணியல் (பூமி பரீட்சை)
34. போர்ப்பயிற்சி (சங்கிராமவிலக்கணம்)
35. மல்லம் (மல்ல யுத்தம்)
36. கவர்ச்சி (ஆகருடணம்)
37. ஓட்டுகை (உச்சாடணம்)
38. நட்புப் பிரிப்பு (வித்துவேடணம்)
39. காமநூல் (மதன சாத்திரம்)
40. மயக்குநூல் (மோகனம்)
41. வசியம் (வசீகரணம்)
42. இதளியம் (ரசவாதம்)
43. இன்னிசைப் பயிற்சி (காந்தருவ வாதம்)
44. பிறவுயிர் மொழியறிகை (பைபீல வாதம்)
45. மகிழுறுத்தம் (கவுத்துக வாதம்)
46. நாடிப்பயிற்சி (தாது வாதம்)
47. கலுழம் (காருடம்)
48. இழப்பறிகை (நட்டம்)
49. மறைத்ததையறிதல் (முஷ்டி)
50. வான்புகவு (ஆகாயப் பிரவேசம்)
51. வான்செலவு (ஆகாய கமனம்)
52. கூடுவிட்டுக் கூடுபாய்தல் (பரகாயப் பிரவேசம்)
53. தன்னுருக் கரத்தல் (அதிருசியம்)
54. மாயச்செய்கை (இந்திரசாலம்);
55. பெருமாயச்செய்கை (மகேந்திரசாலம்)
56. அழற்கட்டு (அக்கினித் தம்பனம்)
57. நீர்க்கட்டு (சலத்தம்பனம்)
58. வளிக்கட்டு (வாயுத்தம்பனம்)
59. கண்கட்டு (திருட்டித்தம்பனம்)
60. நாவுக்கட்டு (வாக்குத்தம்பனம்)
61. விந்துக்கட்டு (சுக்கிலத்தம்பனம்)
62. புதையற்கட்டு (கனனத்தம்பனம்)
63. வாட்கட்டு (கட்கத்தம்பனம்)
64. சூனியம் (அவத்தைப் பிரயோகம்)

Saturday 24 August 2013

அன்பு உறவுகளே

உதவி கோரல்
 

புத்தகங்கள் சஞ்சிகைகள் சேகரிக்கும் தங்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
 

நான் இதுவரை 163 சிறுகதைகள் எழுதியுள்ளேன். இவற்றுள் 100 சிறுகதைகளைத் தொகுத்து 'புன்னியாமீன் கதைகள்' எனும் தனிப்புத்தகமொன்றை (இன்ஸா அல்லாஹ்) வெளியிடும் எண்ணம் எனக்குண்டு.

ஆனால் துரதிஸ்டமாக 1980களின் இறுதியில் வெளிவந்ந பல கதைகளை நான் இழந்துவிட்டேன். குறிப்பாக இந்தியாவிலிருந்து வெளிவரும் தாமரை, கலைமகள், தீபம் போன்ற இதழ்களில் வெளிவந்த பல கதைகளும் இலங்கையில் ஞாயிறு இதழ்களில் பிரசுரமான பல கதைகளும் என்னுடைய பழைய வீட்டில்: அடைமழையின் போது பின்புறமிருந்த வித்தல் (மண்மேடு) சரிந்ததினால் வீடு பாதிக்கப்பட்டு சிதைந்து விட்டன. இதனால் என் பல பொக்கிஸங்கள் அழிந்துவிட்டன.

அன்பு உறவுகளே

தங்கள் சேகரிப்பில் உள்ள பழைய இதழ்களில் என் கதைகளை நீங்கள் கண்டால் தயவு செய்து அதன் புகைப்படப் பிரதியொன்றை எனக்கு அனுப்பினால் மிகவும் நன்றிக்குரியவனாக இருப்பேன். இதை ஓர் உதவியாகவே கோருகின்றேன்.

எனது முகவரி
P.M. PUNIYAMEEN
14, UDATALAWINNA MADIGE,
UDATALAWINNA 20802
SRILANKA

கைபேசி எண்
OO94 77 633 7258
தயவுசெய்து உங்கள் நண்பர்களுக்கும் இதனைப்பகிர்ந்து ஒத்ழைப்பைத் தாருங்கள்
நன்றி

அன்புடன்
புன்னியாமீன்


Wednesday 27 March 2013

அன்பு உள்ளங்களே…

அன்பு உள்ளங்களே…

எனது தாயின் மறைவையிட்டு நேரடியாக வருகை தந்த, மற்றும் தொலைபேசி மின்அஞ்சல் முகநூல் மூலமாக அனுதாபம் தெரிவித்த; அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை பிரதேச சபை உறுப்பினர்கள் உட்பட நேச உள்ளங்களுக்கும், மரணச் செய்தியை பிரசுரித்த பத்திரிகைகள், இலத்திரனியல் ஊடகங்களுக்கும், எனதும், எனது குடும்பத்தினரதும் சார்பாக, எனது இதயபூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

அன்புடன்
புன்னியாமீன்.



Saturday 16 March 2013

எனது இறுதி நூல் வெளியீட்டு விழா – புன்னியாமீன்

எனது இறுதி நூல் வெளியீட்டு விழா – புன்னியாமீன்

நேர்காணல்: ராஜ்சுகா

எழுத்தாளரும், வெளியீட்டாளரும், பன்னூலாசிரியருமான கலாபூசணம் புன்னியாமீன் அவர்களுடைய 'ஓர் ஈரநெஞ்சனின் உளவியல் உலா' எனும் நூல் வெளியீட்டு விழா அண்மையில் கொழும்பில் நடைபெற்றது. ஏனைய தமிழ் நூல் வெளியீட்டு விழாக்களைப் போல்லாமல் வித்தியாசமான முறையில் விழா ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர் மா.கருணாநிதி தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், சர்வதேச குர்ஆன் ஓதல் போட்டியில் முதலிடம் பெற்ற மொஹமட் ரிஸ்வானின் கிராத்துடன் விழா ஆரம்பமாகியது. இலங்கையில் உளவியல்துறை மூத்த பேராசிரியர் ரோலன்ட் அபேபால, இலங்கையில் சிரேஸ்ட மனோ வைத்திய நிபுணர் நிரோஸ மென்டிஸ் பிரதம அதிதிகளாக கலந்து கொண்டனர். விழாவில் நூலாய்வு இடம்பெறவில்லை. இருப்பினும் அல்ஹாஜ் என்.ஏ. ரஷீட் சிறப்புரையையும், நூலாசியர் புன்னியாமீன் வெளியீட்டுரையையும், உலாநாயகன் யூ.எல்.எம் நௌபர் அவர்கள் ஏற்புரையையும் நிகழ்த்தியதுடன் திருமதி மஸீதா புன்னியாமீன் கவி வாழ்த்திசைத்தார்.

இந்த வித்தியாசமான விழா தொடர்பாக தேசிய, சர்வதேச ஊடகங்கள் இலங்கையில் அண்மைக்காலத்தில் நடைபெற்ற சாதனைக்குரிய விழா என்ற அடிப்படையில் செய்திகளை வெளியிட்டிருந்தன.

இது விடயமாக  கலாபூஷணம் புன்னியாமீன் அவர்களை அவர் இல்லத்தில் சந்தித்தேன்.



கேள்வி: கடந்த பெப்ரவரி 25ம் திகதி கொழும்பு ஜே.ஆர். ஜயவர்தனா கலாசார மண்டபத்தில் தங்களது சிந்தனை வட்டத்தின் 350 வது நூலான ஓர் ‘ஈர நெஞ்சனின் உளவியல் உலா' நூல் வெளியீட்டு விழாவின் போது, ஏனைய தமிழ் நூல் வெளியீட்டு விழாக்களில் காண முடியாத சனத்திரளைக் கண்டு வியப்படைந்தோம். இது பற்றி என்ன கூற விரும்புகின்றீர்கள் ஐயா.

பதில் :- புகழனைத்தும் படைத்தவனுக்கே! என்னுடைய 185வது நூலான ‘ஓர் ஈர நெஞ்சனின் உளவியல் உலா' வெளியீட்டு விழா உண்மையிலேயே எனக்கும் பூரண மன நிறைவைத் தந்தது. சிந்தனை வட்டத்தின் 350 நூலான இந்நூல் உளவளத் துணையாளர் அல்ஹாஜ் யூ.எல்.எம். நௌபர் அவர்களைப் பற்றியும், அவரது உளவளவியல் அணுகுமுறைகள் பற்றியும் உளவளவியல் கோட்பாடுகள் பற்றியும் எழுப்பட்டதாகும். 


யூ.எல்.எம். நௌபர் அவர்கள் கடந்த நான்கு தசாப்த காலத்தில் 2500க்கும் மேற்பட்டோருக்கு உளவியல் உளவளவில்துணை சிகிச்சை அளித்துள்ளார். ஆனால் அவரது வாழ்க்கையில் இதுவரை, தான் சிகிச்சை வழங்கிய ஒருவரிடமும் ஒரு சதமேனும் பணமாகவோ அன்பளிப்பாகவோ பெற்றதில்லை. இதனால் அவரிடம் சிகிச்சை பெற்று குணம் கண்டவர்கள் அவர் மீது அதீத பற்று வைத்துள்ளனர். அவரிடம் சிகிச்சை பெற்று குணம் கண்ட பலர் விழாவிற்கு வந்திருந்தனர். மேலும் எனது இலக்கிய நண்பர்களும் ஊடகத் துறை நண்பர்களும் வந்திருந்தனர். இந்த அடிப்படையில் ஐநூற்று ஐம்பது பார்வையாளர்களுக்கு மேல் வந்திருந்தமை மனமகிழ்வுக்குரிய ஓரு விடயமாக இருந்தது.


கேள்வி :-    ஐநூற்றி ஐம்பது பேருக்கு மேல் வந்திருந்தனர் என்று நீங்கள் எந்த அடிப்படையில் உறுதியாகக் கூறுவீர்கள்?

பதில் :- நல்லதொரு கேள்வி சுகா, இதனை நான் ஆதாரபூர்வமாகவே கூறுகின்றேன். ஏனெனில் கொழும்பு ஜே.ஆர். ஜயவர்தனா கலாசார நிலைய பிரதான மண்டபத்தில் சுமார் 400 பேர் அமரக் கூடிய ஆசனங்களே உள்ளன. இதற்கு மேலதிகமாக நாங்கள் 150 ஆசனங்களை வெளியிலிருந்து வாடகைக்கும் பெற்றிருந்தோம். அவற்றை பிரதான மண்டபத்துடன் இணைந்த மண்டபத்திலிட்டு ஸ்க்ரீன் காட்சி மூலமாக திரையில் நிகழ்வுகளை ஒளிபரப்ப ஏற்பாடுகளைச் செய்திருந்தோம். எனவே ஐநூற்றி ஐம்பது கதிரைகள் மண்டபத்தில் இருந்த போதிலும் கூட ஆசனங்களின்றி பலர் நின்று கொண்டிருந்ததை நீங்களும் கண்டிருக்கலாம். அத்துடன் வெளியீட்டு விழாவுக்கு வந்த அனைவருக்கும் சுவடு எனும் நூலொன்றை இலவசமாக விநியோகித்தோம். சுவடு ஐநூறு பிரதிகளே அச்சிடப்பட்டன. அவையனைத்தும் வருகை தந்தவர்களுக்கு வழங்கி பிரதிகள் முடிந்ததினால் பலருக்கு எம்மால் வழங்க முடியவில்லை. இதனை வைத்துப் பார்க்கும் போது நிச்சயமாக ஐநூற்றி ஐம்பது பேருக்கு மேல் வந்தனர் என்று என்னால் உறுதியாகக் கூற முடியும்.

கேள்வி: மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது ஐயா, இன்னுமொரு விழா நடத்தும் போது இதைவிட அதிக மக்கள் வெள்ளம் வர பிரார்த்திக்கின்றேன் என என் கேள்வியைத் தொடர முன்பே புன்னியாமீன் அவர்கள் குறுக்கிட்டார்கள்.

''உங்கள் பிரார்த்தனைக்கு நன்றி சுகா.. ஆனால் ஒரு முக்கிய தகவலையும் இவ்விடத்தில் கூறவிரும்புகின்றேன். என் வாழ்வில் இனியொரு நூல் வெளியீட்டு விழாவினை நடத்தும் எண்ணம் எனக்கில்லை. கொழும்பு ஜே.ஆர். ஜயவர்தனா கலாசார நிலையத்தில் நடைபெற்ற வெளியீட்டு விழா எனது தனிப்பட்ட நூல் வெளியீடுகளின் இறுதியான வெளியீட்டு விழாவாக இருக்கலாம்''.
                   
கலாபூசணம் புன்னியாமீனின் இந்தப் பதில் எனக்கு அதிர்ச்சியைத் தந்தது. ''இது இறுதியான வெளியீட்டு விழாவென்று ஏன் ஐயா அத்தகைய முடிவிற்கு வந்தீர்கள்?''

பதில் :- வெளியீட்டு விழாவை நான் நடத்த நடத்த மாட்டேன் என்பது என் இறுதியானதும், உறுதியானதுமான முடிவாகும். காரணம் ‘ஓர் ஈர நெஞ்சனின் உளவியல் உலா' வெளியீட்டு விழாவிற்கு எந்த ஓர் அரசியல்வாதியையும் அழைக்காது கல்விமான்களை மாத்திரமே அதிதிகளாக அழைத்திருந்தேன். இருப்பினும் இவ் விழாவிற்கு வருகை தந்த பார்வையாளர்கள் எண்ணிக்கையையும், விற்பனையான பிரதிகளின் எண்ணிக்கையையும் அதனால் நான் பெற்ற அன்பளிப்புகளையும் என்னால் இனி எட்ட முடியாதிருக்கும். எனவே தான் இனி வெளியீட்டு விழாக்கள் நடத்துவதில்லை என்று முடிவெடுத்தேன். ஆனால் இடைக்கிடையே சில கௌரவிப்பு விழாக்களை சிந்தனை வட்டம் நடத்தும்.


கேள்வி: இந்த விழாவின் போது பார்வையாளர்கள் முண்டியடித்துக் கொண்டு பிரதிகள் வாங்கியதை அவதானிக்க முடிந்தது. இது பற்றி என்ன கூற விரும்புகின்றீர்கள்?

பதில்: விழாவின் போது பார்வையாளர்கள் முண்டியடித்துக் கொண்டு புத்தகங்கள் வாங்கிய நிகழ்வானது நாங்கள் திட்டமிடாத நிகழ்வாக இருந்த போதிலும் கூட உலா நாயகன் நௌபர் அவர்களின் மீது வருகை தந்தவர்களில் அனேகர் வைத்திருந்த அபிப்பிராயம் காரணமாக அவர் கைகளாலே புத்தகங்களைப் பெற அவர்கள் விரும்பினர். முதற்பிரதி, சிறப்புப் பிரதியென பெயர் குறிப்பிடாது விடினும் கூட உலா நாயகன் நௌபர் அவர்களின் மீது கொண்ட மதிப்பின் காரணமாக நல்உள்ளங்கள் ஓரு இலட்சம் ரூபாய், எழுபத்தையாயிரம் ரூபாய், ஐம்பதாயிரம் ரூபாய்….. என பெருந்தொகை பணத்தைத் தந்து நூலினை கொள்வனவு செய்தமை மறக்கமுடியாத நிகழ்வாகவே இருக்கின்றது. உண்மையிலேயே இலங்கையில் நடைபெற்ற இலக்கிய விழாக்களில் இது ஒரு வித்தியாசமான நிகழ்வாக இருக்க வேண்டும். அதே நேரத்தில் அச்சிடப்பட்ட பிரதிகளில் அரைவாசிக்கு மேல் விழாவன்றே விற்பனையானமையும், இரண்டாம் பதிப்புக்கு தற்போது ஏற்பாடுகளைச் செய்து வருகின்றமையும் மன நிறைவைத் தருகின்றது.
                                            
கேள்வி :- இது வரை தங்களது சிந்தனை வட்டம் நான்கு கௌரவிப்பு விழாக்களை நடத்தி இலங்கையில் பல சிரேஸ்ட பிரஜைகளை கௌரவித்துள்ளதை அறிகின்றோம் ஐயா. இது பற்றி சற்று குறிப்பிட முடியுமா?

பதில் :- நிச்சயமாக சிந்தனை வட்டத்தின் நூறாவது வெளியீடான இரட்டைத் தாயின் ஒற்றைக் குழந்தை நூலினை நவம்பர் 11, 2000 திகதியன்று கண்டி சிட்டி மிஸன் மண்டபத்தில் சுமார் இருநூறு எழுத்தாளர்கள், கலைஞர்கள் முன்னிலையில் வெளியிட்டேன். அவ்விழாவின் போதும் நான் அரசியல்வாதிகளை அழைக்கவில்லை. அப்போதைய பேராதனைப் பல்கலைக் கழக தமிழ்த்துறைத் தலைவர் கலாகீர்த்தி பேராசிரியர் எஸ். தில்லைநாதன், பேராதனைப் பல்கலைக்கழக தமிழ்த் துறைப் பேராசிரியர் க.அருணாசலம், பேராதனைப் பல்கலைக்கழக தமிழ்த் துறை முதுநிலை விரிவுரையாளர் கலாநிதி துரை மனோகரன் பிரபல சட்டத்தரணி ஏ.எம். ஜிப்ரி ஆகிய தமிழறிஞர்கள் இவ்விழாவிற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

இவ்விழாவின் போது பிரபல எழுத்தாளரும் மல்லிகை சஞ்சிகையின் ஆசிரியருமான திரு.டொமினிக் ஜீவா, பிரபல மூத்த பெண் வானொலி அறிவிப்பாளரான (காலம் சென்ற) திருமதி. இராஜேஸ்வரி சண்முகம், தமிழ் இலக்கியக் காவலரும் பிரபல வெளியீட்டாளருமான சிறீதரசிங், பன்னூலாசிரியரும் கலாசார அமைச்சின் முன்னையநாள் ஆலோசகருமான அல்ஹாஜ் எஸ்.எச்.எம்.ஜெமீல் ஆகியோருக்கு விருது வழங்கி பொன்னாடை போர்த்தி பரிசில்கள் வழங்கி கௌரவித்தோம். அத்துடன் 2002ம் ஆண்டு மார்ச் மாதம் உடதலவின்னையில் வைத்து மூத்த வானொலி அறிவிப்பாளர் ஜனாப் பீ.எச்.அப்துல் ஹமீத் அவர்களையும் சிந்தனை வட்டம் கௌரவித்து பெருமையுற்றது.


சிந்தனை வட்டத்தின் இருநூறாவது வெளியீட்டு விழா செப்டம்பர் 11, 2005ம் திகதி உடத்தலவின்னை மடிகே ஜாமியுல் அஸ்ஹர் மத்திய கல்லூரியின் அஷ்ரப் கேட்போர் கூடத்தில் வெகு விமர்சையாக நடத்தினோம். முழுநாள் நிகழ்வாக அவ்வழாவில் 135க்கு மேற்பட்ட முஸ்லிம் தமிழ் எழுத்தாளர்கள் கலந்து கொண்டனர்.  இப்பெரு விழாவில் ஐக்கிய இராச்சியத்தைச் சேர்ந்த மூத்த நூலகவியலாளர் திரு என். செல்வராஜா சிரேஷ்ட பத்திரிகையாளர் (மர்ஹ{ம்) எம.பீ.எம்.அஸ்ஹர், மூத்த சிறுகதை எழுத்தாளர் திருமதி நயீமா சித்தீக், மூத்த கவிஞர் அல்ஹாஜ் கல்ஹின்னை ஹலீம்தீன், இலக்கியக் காவலர் ஜனாப் எம்.எம்.எம்.ரஸீன் ஆகியோரை முறையே இலக்கிய வித்தகர் இதழியல் வித்தகர், சிறுகதைச் செம்மணி, இரு மொழி வித்தகர், சமூக சேவைச் செம்மல் ஆகிய பட்டங்களை வழங்கி கௌரவித்தோம்.

சிந்தனை வட்டத்தின் 300 வது நூல் வெளியீட்டு விழா டிசம்பர் 28, 2008 இல் வத்தேகெதர அஸ்ஸபா மஹா வித்தியாலய கேட்போர் கூடத்தில் நடைபெற்ற போது ஞானம் சஞ்சிகையின் ஆசிரியரும் பிரபல பன்னூலாசிரியருமான டாக்டர் தி.ஞானசேகரன், மூத்த எழுத்தாளர் திரு இரா. நாகலிங்கம் (அன்புமணி), தமிழ் சிங்கள இலக்கியப் பாலம் அமைக்கும் பிரபல எழுத்தாளரும், மொழி பெயர்ப்பாளருமான மடுலுகிரியே விஜேரத்ன மூத்த கவிஞர் ஜனாப் த. மீரா லெவ்பை (அனலக்தர்), ஆசிரியப் பெருந்தகை அல்ஹாஜ் ஐ.ஹாஜிதீன் ஆகியோரை முறையே இதழியல் வித்தகர், எழுத்தியல் வித்தகர், பன்மொழி வித்தகர், கவிப்புனல், ஆசிரியச் செம்மல் ஆகிய பட்டங்கள் வழங்கி கௌரவித்தோம். இவ்விழாவில் ஞாயிறு தினக்குரல் ஆசிரியர் ராஜபாரதி பிரதம அதிதியாகக் கலந்து கொண்டதுடன் அல்ஹாஜ் யூ.எல்.எம். நௌபர் தலைமை வகித்தார். மண்டபம் நிறைந்த பார்வையாளர்கள் கலந்து கொண்டனர்.

இந்த வரிசையில் கடந்த பெப்ரவரி 25, 2013 இல் சிந்தனை வட்டத்தின் 350 வது நூல் வெளியீட்டு விழாவின் போது பிரபல எழுத்தாளரும் திறனாய்வாளருமான கே.எஸ்.சிவகுமாரன், பொதுச் சேவையில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டுள்ள பரோபகாரிகளான அல்ஹாஜ் ஏ.ஆர்.எம்.அரூஸ், அல்ஹாஜ் எஸ்.எம்.அனீப் மௌலானா, சிரேஷ்ட ஊடகவியலாளரும் நவமணி தேசியப் பத்திரிகையின் ஆசிரியருமான அல்ஹாஜ் என்.எம்.அமீன், உளவளத் துணையின் தன்னலமற்ற சேவை வழங்கி வரும் ஜனாப்.எம்.எஸ்.எம். அஸ்மியாஸ், திருமதி யமுனா பெரேரா ஆகியோரை முறையே இருமொழி வித்தகர், சேவைச் செம்மல், இதழியல் வித்தகர், சீர்மைச் செம்மல் ஆகிய பட்டங்களை வழங்கி கௌரவித்தோம். 

இதுவரை எனது சிந்தனை வட்டத்தால் நடத்தப்பட்ட கௌரவிப்பு விழாக்களின் போது பொன்னாடை போர்த்தல், விருது வழங்கல், பதக்கம் அணிவித்தல், சான்றிதழ் வழங்கல், பரிசுப் பொதிகளை வழங்கல் போன்றவை வருகை தந்த பிரமுகர்களால் நிகழ்த்தப்படும். ஆனாலும் முதல் மூன்று கௌரவிப்பு விழாக்களிலும் கௌரவிக்கப்பட்ட பிரமுகர்கள் ஒருவரேனும் இவ்விழாவிற்கு வருகைதராமை சற்று வேதனையையே தந்தது.

கேள்வி :- தங்கள் வெளியீட்டு, கௌரவிப்பு விழாக்களின் போது அரசியல்வாதிகளை அழைக்காமைக்கு யாதேனும் காரணங்களுண்டா?

பதில் : அரசியல்வாதிகள் கலந்துகொள்ளுமிடத்து சில நேரங்களில் எமது விழா நோக்கம் பிழைக்கலாம். சில சந்தர்ப்பங்களில் நாங்கள் அழைக்கும் அரசியல்வாதிகளின் நிகழ்ச்சித் திட்டத்திற்கு அமையவே எம்மால் செயல்பட வேண்டி இருக்கும். இதனை நான் விரும்புவதில்லை. எனவே தான் கல்விமான்களையும் புத்திஜீவிகளையும் அழைத்து அவர்களை முன்னிலைப்படுத்தி இவ்விழாக்களை நடத்துவதை கொள்கையளவில் நான் கடைபிடித்து வருகின்றேன்.
கேள்வி : இவ்விழாவின் போது பெருந்தொகையான ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டதை அவதானிக்க முடிந்தது. அவர்களின் பங்களிப்பு எவ்வாறு இருந்தது?

பதில் : மிகவும் திருப்திகரமாக இருந்தது. விழா நடந்த தினத்திலிருந்து வானொலி, தொலைக்காட்சிகள், இணையத்தளங்கள், பத்திரிகைகள் மற்றும் அச்சு ஊடகங்களில் செய்திகளை கொண்டு சென்றனர். இலங்கையில் மாத்திரமன்றி புலம் பெயர்ந்து தமிழ் பேசும் மக்கள் வாழும் கனடா, அவுஸ்திரேலியா, இந்தியா, பிரான்ஸ், ஐக்கிய இராச்சியம் போன்ற நாடுகளில் இணையங்களிலும் பத்திரிகைகளிலும் செய்திகள் வெளிவந்தன. இதையிட்டு அவர்களுக்கு என் நன்றிகளைக் கூறிக்கொள்ள நான் கடமைப்பட்டுள்ளேன். 

கேள்வி : சிந்தனை வட்டம் இதுவரை 350 நூல்களை வெளியிட்ட போதும் கூட 350 வது நூல் உளவியல் சார்ந்த ஒரு வித்தியாசமான நூலாக இருந்தது. இத்தகைய நூலை நீங்கள் எழுதி வெளியிடக் காரணமென்ன?

பதில் : நல்ல கேள்வி! இதற்கு சற்று விரிவான முறையிலே நான் பதில் தர வேண்டும். சிந்தனை வட்டத்தின் மூலமாக இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு என பதினைந்து தொகுதிகளை எழுதி வெளியிட்டேன். இவற்றில் 350 பேரைப்பற்றி விரிவாக எழுதி விபரங்களுடன் நான் பதிவு செய்தேன். அத்துடன் தேசிய ரீதியிலும் சர்வதேச ரீதியிலும் இணையத்தளங்களிலும் ஆவணக் காப்பகங்களிலும் அவற்றை ஆவணமாக பதிவாக்கினேன். இருப்பினும் இவற்றின் மூலமாக பல இலட்ச ரூபாய்களை நான் இழந்தேன். குறிப்பாக எனது நூல்களில் இடம் பெற்ற சில எழுத்தாளர்கள், கலைஞர்கள், ஊடகவியலாளர்கள் ஒரு நூலையேனும் பெறாமல் இருந்தமை வேதனையைத் தந்தது. தொடர்ந்து என்னால் வெளியிடப்பட்ட நூல்கள் மூலம் நான் பெருந்தொகையான பணத்தினை இழக்க வேண்டி ஏற்பட்டது. இலங்கையில் வெளியீட்டாளர்களும், விநியோகஸ்தர்களும் ஒருவராகவே இருப்பதனால் நூல்களை வெளியிடுபவர்கள் இத்தகைய நிலையை அனுபவித்திருப்பர். இந்நிலையில் மனதளவிலும் பொருளாதார ரீதியிலும் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் சகோதரர் யூ.எல்.எம். நௌபர் அவர்கள் எனக்குத் தந்த உளவளவியல்துணை பரிகாரங்களே மீண்டும் என்னை எழுதத் தூண்டியது.

யூ.எல்.எம். நௌபர் அவர்களின் அணுகுமுறைகளும் அவரின் சுய இயல்புகளும், பண்புகளும் என்னை வெகுவாகக் கவர்ந்தன. அவரை ஒரு ஈர நெஞ்சனாகவே நான் கண்டேன். அதன் விளைவாகவே அவரைப் பற்றி விரிவாக ஆராய ஆரம்பித்தேன். இவ் ஆய்வின் விளைவாகவே ஓர் ஈரநெஞ்சனின் உளவியல் உலா உருவானது.

கேள்வி : ஓர் ஈர நெஞ்சனின் உளவியல் உலா எனும் நூலில் உளவளவியலாளர் யூ.எல்.எம். நௌபர் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை விட உளவியல் கருத்துக்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து எழுதியிருந்தீர்கள். இது தொடர்பாக என்ன கூற விரும்புகின்றீர்கள்?

பதில் : ஒரு உளவியல் நூல் என்ற வகையில் மன அழுத்தம், மனத்தளர்ச்சி, மனச் சோர்வு, மனமும் மன நோய்களும், மனம், மூட நம்பிக்கைகளும் அவற்றால் ஏற்படும் விளைவுகளும், குழந்தைகளும் மனச் சோர்வும், மாணவர்களுக்கு ஏற்படும் உளவியல் பாதிப்புக்கள், நவீன தொழிநுட்பமும் மன நெருக்கடிகளும் போன்ற தலைப்புகளை விரிவாக ஆராய்ந்தேன். அதே நேரம் இத்தலைப்புகளுடன் இணைந்த பிரச்சினைகளுக்கு உளவளவியலாளர் யூ.எல்.எம். நௌபர் அவர்களின் சிகிச்சை முறைகள் பற்றியும் தொடர்புபடுத்தியிருந்தேன். உண்மையிலேயே மன உளைச்சல்கள் மிக்க இந்த 21ம் நூற்றாண்டில் உளவியல் என்பது மிக முக்கியமானதொரு பரப்பாக மாறிவிட்டது என்பதையும் மறுப்பதற்கியலாது. 
கேள்வி : ஓர் ஈர நெஞ்சனின் உளவியல் உலா என்ற நூல் 572 பக்கங்களைக் கொண்ட ஓர் ஆய்வு நூலாக அமைந்திருந்தது. இந்நூலை எழுதி முடிக்க எவ்வளவு காலம் உங்களுக்கு எடுத்தது?

பதில் : இந்நூலை சரியாக மூன்று மாதங்களில் எழுதி முடித்தேன். என்னால் எழுதப்பட்ட சகல விடயங்களும் நூறு வீதம் ஆதாரபூர்வமானவையே. சுமார் 25 உளவியல் நூல்களுக்கு மேல் படித்தும், சுமார் 500 இணையத்தளங்களுக்கு மேல் பார்வையிட்டும் யூ.எல்.எம். நௌபர் அவர்களினால் சிகிச்சை பெற்ற 126 பேரைச் சந்தித்தும் ஆதாரபூர்வமான தகவல்களைப் பெற்று இந்நூலை எழுதினேன். இரவு பகலாக எழுதினாலும் கூட மூன்று மாதங்களுக்குள் முடித்தமை எனக்கே ஆச்சரியமாக உள்ளது.

கேள்வி : இறுதியாக, எழுத்துலகில் உங்கள் எதிர்காலத் திட்டத்தைப் பற்றிக் கூற முடியுமா?

பதில் : நிச்சயமாக, இந்நூலை எழுத எத்தனித்த போது உளவியல் பற்றி பல விடயங்களை நான் படித்துக் கொண்டேன். இன்றைய காலகட்டத்தில் ஒவ்வொருவருக்கும் உளவியல் கற்கை அவசியம் என்ற வகையில் எதிரகாலத்தில் (இறைவன் நாடினால்) உளவியல் தொடர்பான பல நூல்களை எழுதும் எண்ணம் எனக்குண்டு.





Friday 1 March 2013

‘ஓர் ஈர நெஞ்சனின் உளவியல் உலா' : நிறைவானதோர் நூல் வெளியீட்டு விழா


 உளவளவியலாளரான யூ.எல்.எம்.நௌபரின் வாழ்க்கை வரலாற்றுப்பதிவுகளையும் உளவியல் அடிப்படைகளையும் உள்ளடக்கிய கலாபூஷணம் புன்னியாமீன் எழுதிய “ஓர் ஈர நெஞ்சனின் உளவியல் உலா” நூல் வெளியீட்டுவிழா கொழும்பு, ஜே.ஆர். ஜயவர்த்தனா கலாசார மண்டபத்தில் பெப்ரவரி 25இல் வெகு சிறப்பாக நடைபெற்றது.


 பொதுவாக இலங்கையில் நடைபெறும் தமிழ் நூல் வெளியீட்டு விழாக்களைப் பொருத்தவரையில் நூறு பேரைத் திரட்டுவது என்பது ஒரு சாதனையாக இருக்கும். நூல் வெளியீட்டின் போது முதல் பிரதி சிறப்புப் பிரதி என்று பெறுவோர் பட்டியல்  நீண்டிருக்கும். ஆனால் ஒரு ஈரநெஞ்சனின் உளவியல் உலா வெளியிட்டு விழா அழைப்பிதழில் இத்தகைய பட்டியல்களைக் காணமுடியவில்லை. இருப்பினும் விழா   நடைபெற்ற நேரத்தில் கலந்துகொண்ட பார்வையாளர்களுக்கும்,  ஊடகங்களுக்கும் நிகழ்வின் நிகழ்ச்சிகள் புதினமாகவும் அதிர்ச்சியாகவே இருந்தது.


 கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர் மா.கருணாநிதி தலைமையில் நடைபெற்ற இவ்விழா சர்வதேச ரீதியில் குர்ஆன் ஓதல் போட்டியில் முதலிடம் பெற்று இலங்கைக்குப் பெருiமை தேடித்தந்த மொஹமட் ரிஸ்வானின் கிராத்துடன் விழா ஆரம்பமாகியது. இலங்கையில் உளவியல் துறையில் மூத்த பேராசிரியர் ரோலன்ட் அபேபால, மனோ வைத்திய நிபுணர் நிரோஸ மென்டிஸ் பிரதம அதிதிகளாக கலந்துகொண்டார்.

 நூலாய்வு இடம்பெறவில்லை. இருப்பினும் இலங்கையில் முன்னனி சிந்தனையாளர்களில் ஒருவரான  அல்ஹாஜ் என்.ஏ.ரஷீட் சிறப்புரையையும் நூலாசியர் புன்னியாமீன் வெளியீட்டுரையையும் நிகழ்த்தியதுடன், திருமதி மஸீதா புன்னியாமீன் கவி வாழ்த்திசைத்தார்.

உளவளவியலாளரான யூ.எல்.எம்.நௌபர் அவர்கள் தன்னலமற்ற ஒரு உளவலவியாளலார் சுமார் நான்கு தசாப்த காலமாக சுமார் 2500 மேற்பட்டோரை உளவியல் சிகிச்சை மூலமாக குணப்படுத்தியுள்ளார். இவர் சேவைக்காக ஒரு சதமேனும் பணமோ, அல்லது அன்பளிப்புகளோ பெறுவதில்லை. இத்தகைய சேவைகளை மிகத் தெளிவாகவும் ஆதாரபூர்வமாகவும் இந்நூலில் தெளிவுபடுத்தியிருந்ததுடன் உளவியல் பற்றியும் விரிவாக எழுதியுள்ளார்.


 இந்த விழாவின் போது, நூலாசிரியர் கலாபூஷணம் புன்னியாமீன் உளவளவியலாளரான யூ.எல்.எம்.நௌபர் அவர்களை பொன்னாடை போர்த்தியும்,  பூமாலை அணிவித்தும் 1998 கின்னஸ் சாதனையில் அவ்வாண்டுக்கான அச்சுப்பதிவில் சிறிய அளவு கொண்டதாக  பதிவாகியிருந்த குர்ஆன் பிரதியொன்றையும் வழங்கியும் கௌரவித்தார்.




 அதனைத்தொடர்ந்து மேலும் சிரேஷ்ட பிரஜைகள் அறுவரும் கௌரவிக்கப்பட்டனர். எழுத்தாளரும் திறனாய்வாளருமான  கே.எஸ் சிவகுமாரன் - இருமொழி வித்தகர் என்றும், தொழிலதிபர் ஏ.ஆர்.எஸ். அல்ஹாஜ் அரூஸ் - மற்றும் அல்ஹாஜ் எஸ்.எம். அனீப் மௌலானா ஆகியோர் சேவைச்செம்மல் என்றும்,  சிரேஷ்ட ஊடகவியலாளரும், நவமணி பிரதம ஆசிரியருமான அல்ஹாஜ் என்.எம்.அமீன் இதழியல் வித்தகர் என்றும் உளவியல் விரிவுரையாளரான திருமதி யமுனா பெரேரா மற்றும் ஜனாப் எம்.எஸ்.எம். அஸ்மியாஸ் ஆகியோர் சீர்மியச் செம்மல்  என்றும்  பட்டம் சூட்டி பொன்னாடை போர்த்தி, நினைவுச்சின்னங்களும், பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.




 நாட்டின் நாலாபுறத்திலுமிருந்து  பெரும் எண்ணிக்கையானோர் இவ்விழாவில் கலந்துக்கொண்டதுடன் பெரும்பாலானோர் நூலின் பிரதிகளை முண்டியடித்துக்கொண்டு வாங்கியமையும் 500 பேருக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டதுடன் 300 மேற்பட்ட பிரதிகள் விற்பனை செய்யப்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்க விஷேட அம்சமாகும்.  நீண்ட இடைவெளிக்குப்பின்னர் கொழும்பில் நடைபெற்ற ஒரு நிறைவான நூல் வெளியீட்டு விழாவாக இவ்விழாவை குறிப்பிடலாம்.

“ஓர் ஈர நெஞ்சனின் உலவியல் உலா "நூலானது, நூலாசிரியர் கலாபூஷணம் புன்னியாமீனை முகாமைத்துவப் பணிப்பாளராக கொண்டியங்கும்  உடத்தலவின்னை சிந்தனை வட்டத்தின் 350ஆவது வெளியீடாகும் என்பதும் புன்னியாமீன் மூலம் எழுதப்பட்ட 185 வது நூல் என்பதும் குறிப்பிடத்தக்கது. 572 பக்கங்களைக் கொண்ட இந்நூலின் விலை ரூபாய் 880 ஆகும்.
நன்றி:
* http://www.sonakar.com/2013/02/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88/
*http://tamil.news.lk/news/sri-lanka/3552-2013-02-26-10-28-27
*http://www.jaffnamuslim.com/2013/02/blog-post_2441.html