Tuesday, 31 January 2012

இலங்கைத் தமிழ் மாணவர்களின் இன்றைய கல்விநிலை குறித்து எழுத்தாளர் புன்னியாமீன் அவர்களுடன் ஒரு நேர்காணல்

மீளப்பிரசுரம். 

இலங்கைத் தமிழ் மாணவர்களின் கல்விநிலை குறித்த எனது இந் நேர்காணல் இந்தியா தமிழ் நாட்டில் முன்னணித் தமிழ் இணையத்தளங்களில் ஒன்றான ‘சங்கமம் லைவ்’ இல் 19.06.2009 பிரசுரமானதாகும். இந்த நேர்காணல் முனைவர். மு. இளங்கோவன் இணையத்தளத்திலும், கல்வி சார்ந்த பல இணையத்தளங்களிலும் உடன் மறுபிரசுரம் செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் பிரபல எழுத்தாளர் ‘பொன்மொழிவேந்தன்’ இந்நேர்காணலை பெற்றிருந்தார்.

நேர்காணல்  ‘பொன்மொழிவேந்தன்’ (தமிழ் நாடு)

இலங்கையைச் சேர்ந்த எழுத்தாளர் புன்னியாமீன் அவர்கள் 150 மேற்பட்ட நூல்களை எழுதியுள்ள ஒரு முன்னணி எழுத்தாளராவார். சமூக உணர்வுமிக்க இவரும், இவரது நூல் வெளியீட்டகமான சிந்தனைவட்டமும் 2002, 2006 ஆம் ஆண்டுகளில் இலங்கையில் சப்பிரகமுவ மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளப்பாழின் போதும், 2004ஆம் ஆண்டு சுனாமி நிகழ்வின் போதும் மாணவர்களின் கல்வியை இலக்காகக் கொண்டு பல்வேறுபட்ட சேவை நலத்திட்டங்களை முன்னெடுத்து நடத்தியுள்ளனர்.
மேலும் கல்வியைத் தொடர வசதி இல்லாத நூற்றுக்கணக்கான மாணவர்களுக்குக் கல்வியைத் தொடர உதவிகளைச் செய்துள்ளதுடன்,பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பயிலும் வசதி குறைந்த மருத்துவ, பொறியியல் துறை மாணவர்களுக்குப் பல்வேறு உதவிகளைச் செய்து வருகின்றனர்.

2006ஆம் ஆண்டில் இலண்டனில் வசிக்கும் புகழ்பெற்ற நூலகவியலாளர் திருவாளர் என். செல்வராஜா அவர்களின் வழிகாட்டலுடன் ‘அயோத்தி நூலக சேவை’யின் பரிந்துரையின்படி ‘இலண்டன் புக்ஸ்’ எப்ரோட் நிறுவனத்தின் மூலமாக 4 மில்லியன் உரூபாய்க்கு மேலாகப் பாடசாலைப் புத்தகங்களைப் பெற்று இலங்கையில் உள்ள 115 நூல் நிலையங்களுக்குப் பெறுமதி மிக்க நூல்களை வழங்கினர். அதே நேரம் சிந்தனை வட்டத்தின் தரம் 5 புலமைப்பரிசில் வழிகாட்டல் திட்டத்தின் கீழ் 1996ஆம் ஆண்டு முதல் அனாதைச் சிறுவர்கள், அகதிச் சிறுவர்கள் போன்ற, சராசரியாக 300க்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு ஆண்டு தோறும் விளம்பரங்கள் இன்றி உதவிகளை வழங்கி வருகின்றனர்.

தற்போது வன்னி அவலத்தில் இருந்து மீண்டுள்ள மாணவர்களின் கல்வியை மேம்படுத்த சிந்தனைவட்டம், இலண்டனைத் தளமாகக் கொண்டியங்கும் தேசம்நெற் இணையத்தளத்துடனும், சில புரவலர்களுடனும், பொதுநல அமைப்புகளுடனும் இணைந்து இருபத்து எட்டு இலட்சம் ரூபாய் நிதித்திட்டத்தில் 5ஆம் தர புலமைப் பரிசில் தேர்வுக்குத் தோற்றும் நலன்புரிநிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள பாடசாலைகளில் கற்கும் ஒவ்வொரு மாணவனுக்கும் 30 மாதிரி வினாத்தாள்களையும், 04 வழிகாட்டிப் புத்தகங்களையும் வழங்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதனை முன்னிட்டு சிந்தனைவட்டப் பணிப்பாளர் எழுத்தாளரும் பதிப்பாளருமான புன்னியாமீன் அவர்களுடன் மேற்கொண்ட சிறப்பு நேர்காணல் கீழே தொகுத்து தரப்பட்டுள்ளது.

கேள்வி: வன்னி அவலத்தில் இருந்து மீண்டுள்ள மாணவர்களின் கல்வி நிலையை மேம்படுத்தத் திட்டமிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அறிகின்றோம். வன்னி அவலத்தில் இருந்து மீண்டுள்ள மாணவர்களின் நிலை பற்றி சற்று விளக்க முடியுமா?
பதில்: இலங்கையில் கல்வியால் உயர்ந்து உலகளாவிய ரீதியில் தடம்பதித்த ஒரு சமூகத்தை உருவாக்கிய இலங்கையில் வடபுலத்து மண் கடந்த 30 ஆண்டு கால யுத்தத்தினால் இன்று சொல்லொனாத் துயரங்களை சுமந்து ‘பூஜ்ய கல்வி அலகை’ எதிர்நோக்கக் கூடிய ஒரு சமூகமாக மாறிவிட்டது. வடபுலத்து மண்ணில் தமிழர்கள் செறிவாக வாழ்ந்து வந்த கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சி, பூநகரி, கண்டாவலை ஆகிய கல்விக் கோட்டங்களைச் சேர்ந்த அனைத்துப் பாடசாலைகளும் இயங்கவில்லை.
முல்லைத் தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு கல்வி வலயத்தைச் சேர்ந்த பாடசாலைகளும், துணுக்காய் கல்வி வலயத்தைச் சேர்ந்த துணுக்காய், ஒட்டிசுட்டான், மாந்தை கிழக்கு ஆகிய கோட்டங்களைச் சேர்ந்த பாடசாலைகளும் இயங்கவில்லை. இதனை இன்னும் தெளிவாகக் குறிப்பிடுவதாக இருந்தால் கிளிநொச்சி, முல்லைத் தீவு நிர்வாக மாவட்டங்களைச் சேர்ந்த எந்தப் பாடசாலைகளுமே இயங்கவில்லை எனலாம். இங்கு எந்த மக்களுமே இல்லை. அண்மைக் கால யுத்தத்தில் மாத்திரம் வடபுலத்து மண்ணிலிருந்து இடம்பெயர்ந்த மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் வவுனியாவிலும் யாழ்ப்பாணத்திலும் அகதி முகாம்களில் கூடாரங்களில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். கடந்த வாரம் கல்வி அமைச்சர் பாராளுமன்றத்தில் அறிவித்த அறிவித்தலின்படி சுமார் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் நலன்புரிநிலையங்களில் உள்ளனர்.
வவுனியாவில் அமைக்கப்பட்டுள்ள நலன்புரி நிலையங்களில் சுமார் 53 பாடசாலைகள் இயங்குகின்றன. இப்பாடசாலைகளில் இம்மாணவர்கள் கல்வி பயில்கின்றனர். நலன்புரி நிலையங்களில் ஆரம்பப் பிரிவு தொடக்கம் க.பொ.த உயர்தரம் வரை கற்பித்தலுக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இருப்பினும் முறைசார் கல்வித்திட்டத்தின் கீழ் அனைத்து மாணவர்களாலும் உரிய கல்வியினை பெற்றுக் கொள்ள முடியாதுள்ளது.

கேள்வி : இதனை எந்த அடிப்படையில் நியாயப்படுத்துவீர்கள்?
பதில் : இடம் பெயர்ந்துள்ள மாணவர்கள் மையமாகக் கொண்டு அமைக்கப்பட்ட நலன்புரி நிலையப் பாடசாலைகளில் பெரும்பாலான பாடசாலைகளில் கற்றல் கற்பித்தலுக்குரிய சூழ்நிலை இல்லை. இதனை இரண்டு கோணங்களில் தெளிவு படுத்தலாம்.

ஒன்று இடம்பெயர்ந்த அனைத்து மாணவர்களை அவதானிக்குமிடத்து அவர்கள் அதிகளவிலான மானசீகமான பாதிப்புகளுக்கு உட்பட்டிருப்பதை உணரமுடிகின்றது. அவர்கள் வாழ்ந்த சூழலிலிருந்து தனது நண்பர்கள், உறவினர்கள், பெற்றோர்களை இழந்து அல்லது பிரிந்து வந்த துயரசூழ்நிலை ஒரு புறம். ஏற்கனவே கற்றுவந்த சூழலைவிட வித்தியாசமான சூழலில் அடிப்படை வசதிகள் குறைந்த நிலையில் கற்க வேண்டிய நிர்ப்பந்தம் மறுபுறம். இத்தகைய காரணிகளால் மனோநிலையில் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையிலேயே இம்மாணவர்கள் கல்வியினைத் தொடர வேண்டிய நிலையில் உள்ளனர்.

இரண்டாவதாக இவர்கள் கற்கும் சூழ்நிலை. வசதியான பாடசாலைகளில் வசதி வளங்களோடு கற்று விட்டு தற்போது நலன்புரி நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கொட்டில்களில் அல்லது மர நிழல்களில் கற்க வேண்டிய நிலை. இங்கு பெரும்பாலான மாணவர்களுக்கு மேசை, கதிரைகள் கிடையாது, சீருடை கிடையாது. நிலங்களில் அமர்ந்து கொண்டே கற்கின்றனர். இவர்கள் கற்கும் இடங்களை ஊடறுத்துக் கொண்டு முகாம்களில் உள்ள பெரியவர்கள் செல்லக்கூடிய நிலையும் உண்டு. இவர்கள் கற்கும் இடங்களுக்கு அண்மையில் சீட்டாடுவதும், வம்பளப்பதும் உண்டு. இங்குள்ள நிலையை இன்னும் தெளிவு படுத்துவதாயின் ஆரம்ப வகுப்பில் கற்பிக்கும் சில ஆசிரியர்கள் தனது குழந்தைக்கு பாலூட்டிக் கொண்டு கற்பிக்கும் அவலமும் நலன்புரிநிலையப் பாடசாலைகளில் உண்டு. எனவே மாணவர்களின் மனோ நிலைப்பாதிப்பும், கற்கும் சூழ்நிலையும் தொடர்பு படுத்திப்பார்க்கும் போது முறைசார் கல்வியை மேற்கொள்ள முடியாதிருப்பதைத் தங்களால் உணர்ந்து கொள்ள முடியும்.

கேள்வி: மாணவர்களின் மனோ நிலைப்பாதிப்புக்களைக் களைவதற்காக யாதேனும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளனவா?
பதில்: இது குறித்து விரிவான விளக்கத்தை என்னால் தர முடியாது. இருப்பினும் மனஅழுத்தங்களுடன் கூடிய மாணாக்கரின் மனோநிலைப் பாதிப்பினை குறைப்பதற்காக வேண்டி கல்வித் திணைக்களமும், ஏனைய சில நிறுவனங்களும் சில கவுன்சிலின் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அறிகின்றோம். இந்த செயற்கையான சூழ்நிலையில் அவர்களது மனோநிலை மாற்றங்களை சீர்செய்வதென்பது கடினமான காரியமே. அதற்காக வேண்டி இந்த மாணவர்களை விட்டுவிடமுடியாது. வட பகுதிகள் தமிழர் கல்வியால் எழுச்சி பெற்றவர்கள். கல்வியால் எழுச்சிபெற்ற சமூகம் கல்வியால் வீழ்ச்சி பெற்றுவிடக் கூடாது. இதனை ஒவ்வொருவரும் உணர வேண்டிய கட்டத்தில் உள்ளோம். ஏதேவொரு வழியில் ஓரளவுக்காவது கல்வியின்பால் அவர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்த விழைய வேண்டியது ஒவ்வொருவரின் கடமையாகும்.

கேள்வி : இங்குக் கற்கும் மாணவர்கள் காலை உணவைப் பெற்று வருகிறார்களா?
பதில் : முகாம்களில் வழங்க வேண்டிய உணவினையே பெற வேண்டிய நிலையில் இவர்கள் இருப்பதினால் அனைத்து மாணவர்களும் காலை ஆகாரத்தை எடுத்த பின்பே வருவார்கள் என்று கூற முடியாது. மாணவர்களுக்கு உலக உணவுத்திட்டத்தின் கீழ்உணவு வழங்க நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது. அதே நேரம் நலன்புரி நிலையப் பாடசாலைகள் இரண்டு அல்லது மூன்று கட்டங்களாகவும் இயங்குவதை இங்கு குறிப்பிடல் வேண்டும். அதாவது காலையில் சில வகுப்புகள், மத்தியானம் சில வகுப்புகள், பின்நேரம் சில வகுப்புகள் என ஒழுங்கு படுத்தப்பட்டுள்ளன. இலங்கையில் உள்ள பாடசாலைகள் பொதுவாக காலை 7.30 மணிமுதல் பி.ப 1.30 மணிவரை ஆறு மணிநேரம் இயங்கும். ஆனால் இங்கு இயங்கும் பாடசாலைகள் 3 அல்லது 4 மணிநேரமே இயங்கி வருகின்றன.

கேள்வி: வட இலங்கையிலிருந்து இடம்பெயர்ந்து தற்போது வவுனியா நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள மாணவர்களுள் தரம் 05 இல் பயிலும் மாணவர்களின் கல்வி நடவடிக்கை தொடர்பாக சிந்தனைவட்டம் சிறப்புக் கவனம் செலுத்தி வருவதாக அறிகின்றோம். தரம் 5வகுப்பை நீங்கள் ஏன் தேர்ந்து எடுத்தீர்கள்?
பதில்: இலங்கையில் மாணவர்களை மையப்படுத்தி அரசாங்கத்தால் 03 பரீட்சைகள் நடத்தப்படுகின்றன. இதில் முதலாவது பரீட்சை தரம் 05 மாணவர்களை மையமாகக் கொண்ட புலமைப்பரிசில் பரீட்சையாகும். ஏனைய பரீட்சைகள் க.பொ.த சாதாரண தர பரீட்சை, க.பொ.த. உயர்தரப் பரீட்சை என்பனவாகும். தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சை இலங்கை மாணவனொருவன் எதிர்நோக்கும் முதல் அரசாங்கப் பரீட்சையாகும். அதே நேரம் இது ஒரு போட்டிப் பரீட்சையாகும். இந்தப் பரீட்சையில் சித்தியடையும் மாணவனுக்கு உயர்தரக் கல்வி வரை கற்பதற்கு அரசாங்கம் புலமைப்பரிசில் பணம் வழங்கும். (ஆண்டுதோறும் 5000 ரூபாய்) அத்துடன் இலங்கையில் முன்னணி பாடசாலைகளில் கற்பதற்கான வாய்ப்பும் அம்மாணவர்களுக்குக் கிடைக்கின்றது. இப்பரீட்சை தரம் 5ஐ சேர்ந்த சிறிய மாணவர்களுக்கான அரசாங்கத்தால் நடத்தப்படும் முதல் பரீட்சை என்ற வகையிலும் இப்பரீட்சை இன்னும் இரண்டு மாதங்களில் அதாவது எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்தில் நடைபெறவுள்ளமையினாலும் இப்பரீட்சையை நாங்கள் முதற் கட்டமாகத் தேர்ந்தெடுத்துள்ளோம்.

கேள்வி: நலன்புரி நிலையங்களில் தரம் 5 இல் கல்வி பயிலும் எத்தனை மாணவர்கள் அளவில் இருக்கின்றார்கள்?
பதில்: வவுனியா மாவட்டத்திலுள்ள நலன்புரி நிலையப் பாடசாலைகளில் உத்தியோக பூர்வ இணைப்பாளரும், உதவிக் கல்விப்பணிப்பாளருமான திரு.த. மேகநாதன் அவர்களின் 2009.06.01ஆம் திகதிய உத்தியோகபூர்வ அறிக்கையின் பிரகாரம் வவுனியா நலன்புரி நிலையங்களில் இயங்கும் 53 பாடசாலைகளிலும் தரம் 5 இல் கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை 4872 ஆகும்.. இந்த மாணவர்களின் பரீட்சையை எதிர்நோக்கி நாம் செயல்பட்டு வருகின்றோம்.

கேள்வி: இந்த மாணவர்களின் கல்வி நிலை எவ்வாறு உள்ளது எனக் குறிப்பிட முடியுமா?
பதில்: இம்மாணவர்களின் கல்வித் தரம் மிகவும் பாதிப்படைந்த நிலையிலேயே காணப்படுகின்றது. வட பகுதியில் யுத்த நிலை காரணமாக கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் கடந்த ஆறு மாதங்களாக எந்தவொரு பாடசாலைகளும் இயங்கவில்லை. அதேநேரம், வவுனியா நலன்புரி நிலையங்களிலுள்ள மடு கல்வி வலயம், துணுக்காய் கல்வி வலயம் போன்ற கல்வி வலய மாணவர்கள் ஓராண்டு காலங்களுக்கு மேல் பாடசாலை வாசனையை அறியாமலே உள்ளனர். இந்த மாணவர்கள் தான் எதிர்வரும் ஆகஸ்டில் பரீட்சையை எதிர்நோக்கப் போகின்றார்கள். இலங்கை அரசாங்கத்தால் நடத்தப்படும் பரீட்சை நாடளாவிய ரீதியில் ஒரு பொதுப் பரீட்சை என்பதனால் பரீட்சை திகதிகள் ஒத்திவைக்கப் படமாட்டாது. எனவே இம்மாணவர்கள் பாதிக்கப்பட்ட நிலையிலும் கூட ஆகஸ்ட் பரீட்சையை எழுதியேயாக வேண்டிய நிலையில் உள்ளனர்.

கேள்வி: அப்படியாயின் ஆறு மாதங்களுக்கு மேல் பாடசாலை கல்வியையே பெறாத மாணவர்களுக்கு எந்த வகையில் வழிகாட்டலை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளீர்கள்?
பதில்: பாடத்திட்டத்தின் பிரகாரம் தரம் 4, 5 வகுப்புகளில் இம்மாணவர்கள் பல பாட அலகுகளை முடித்திருக்க வேண்டும். ஆனால் அந்த வாய்ப்பு இம்மாணவர்களுக்கு கிடைக்கவில்லை. இதனால் மாணவர்களை துரிதமாக வழிநடத்தக்கூடிய வகையில் நாங்கள் 30 மாதிரி வினாத்தாள்களையும், 04 வழிகாட்டிப் புத்தகங்களையும் வழங்கி மாணவர்களின் துரித வழிகாட்டலுக்கான ஏற்பாட்டினை செய்கின்றோம். எமது 30 மாதிரி வினாத்தாள்களையும், 04 வழிகாட்டிப் புத்தகங்களையும் மாணவர்களுக்கு வழங்கி நலன்புரி நிலையங்களில் உள்ள ஆசிரியர்கள் வழிநடத்துகின்றனர்.

கேள்வி: இத்திட்டத்தைச் சிந்தனை வட்டம் மாத்திரம் மேற்கொள்கிறதா? அல்லது வேறும் அமைப்புக்களோடு சேர்ந்து மேற்கொள்ளப்படுகிறதா?
பதில்: இத்திட்டத்தை சிந்தனை வட்டம் மாத்திரம் மேற்கொள்ளவில்லை. இந்த செயற்பாட்டுக்கு லண்டனைத் தளமாகக் கொண்டு இயங்கும் ‘தேசம்நெற் இணையத்தளத்’தினர் மற்றும் ‘மத்திய இலங்கை முஸ்லிம் பட்டதாரிகள் ஒன்றியம்’ உட்பட லண்டனில் வேறு சில அமைப்புகள் வழங்கும் உதவியினாலேயே இத்திட்டத்தை முன்னெடுத்து செல்லக் கூடியதாகவுள்ளது.ஒரு மாணவனுக்கு 570ரூபாய் வீதம் பெறுமதிமிக்க 30 மாதிரிவினாத்தாள்களையும், 04 வழிகாட்டிப் புத்தகங்களையும் 4872 மாணவர்களுக்கும் தனித்தனியாக வழங்கும் வேலைத்திட்டத்திற்கான மொத்த செலவினம் இலங்கை நாணயப்படி 2,777,040 ரூபாவாகும். இதில் மூன்றிலொரு பங்கான ரூபாய் 925,680 சிந்தனைவட்டம் நேரடியாகப் பொறுப்பேற்று நடத்துகின்றது. 7 இலட்சம் ரூபாய்களை வழங்க மத்திய இலங்கை முஸ்லிம் பட்டதாரிகள் சங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது. மீதித் தொகையினை லண்டனைத் தளமாகக் கொண்டு இயங்கும் ‘தேசம்நெற் இணையத்தளத்’தினரும், வேறும் சில அமைப்புகளும் வழங்க முன்வந்துள்ளன. இலங்கையிலிருந்து பாடத்திட்டத்திற்கு அமைய இவ்வினாத்தாள்களை தயாரித்தல், அச்சிடல், முகாம்களுக்கு நேரடியாக வினியோகித்தல் போன்ற கருமங்களை சிந்தனை வட்டமே நேரடியாக பொறுப்பேற்று நடத்துகின்றனர். எமது இத்திட்டத்திற்கு வவுனியா மாவட்டத்திலுள்ள நலன்புரி நிலையப் பாடசாலைகளின் உத்தியோகபூர்வ இணைப்பாளரும், உதவிக் கல்விப்பணிப்பாளருமான திரு. த. மேகநாதன் அவர்கள் பூரண ஒத்துழைப்பினை நல்கி வருகின்றார்.

கேள்வி: இன்னும் எவ்வளவு காலத்திற்கு இந்த மாணவர்களின் இந்நிலை தொடரும் என எதிர்பார்க்கின்றீர்கள்?
பதில்: 180 நாட்களுள் இடம்பெயர்ந்த மக்களின் அரைவாசிக்கும் மேற்பட்டோர் மீள்குடியேற்றம் செய்ய வேண்டும் என்று அரசாங்கம் கூறி வருகின்றது. அவ்வாறு நடக்குமாயின் வரவேற்கக்கூடிய விடயம். ஆனால், கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் வட இலங்கை பிரதேசத்தில் அடிப்படை கட்டமைப்புகள் முழுமையாக சீர்குழைந்துள்ள நிலையில் இது எவ்வளவு தூரத்திற்கு சாத்தியமாகும் என்பது கேள்விக் குறியாகவேயுள்ளது. எவ்வாறாயினும் ஆறு மாதங்களுக்கு மாத்திரமல்ல. இன்னும் நீண்ட காலத்துக்கு வன்னிப் பிரதேசத்தில் நலன்புரிநிலையங்கள் இயங்குமெனக் கொண்டால் இங்குள்ள மாணவர்களின் எதிர்கால நலன்கருதி பல விசேட திட்டங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும்.
கேள்வி: அவ்வாறு யாதாயினும் திட்டம் வைத்துள்ளீர்களா?
பதில்: மாணவர்கள் நலன்புரி நிலையங்களில் வாழும் வரை எம்மால் ஆன உதவிகளை செய்யவே திட்டமிட்டுள்ளோம். எமது முதல் கட்டப்பணியின் பலாபலன்களை அவதானித்து இரண்டாம் கட்டமாக டிசம்பர் மாதத்தில் நடைபெறும் க.பொ.த. சாதாரண தர பரீட்சையை மையமாகக் கொண்டு சில வேலைத்திட்டங்களை நாம் தயாரித்து வருகின்றோம். எமது இந்த செயல்திட்டத்துக்கு பேராதனைப் பல்கலைக்கழக சில புத்திஜீவிகளும் பூரண ஒத்துழைப்பினை நல்கி வருகின்றனர்.

கேள்வி: இலங்கைத் தமிழ் அரசியல்வாதிகளும், புலம்பெயர் ஈழத்துத் தமிழர்களும் இலங்கையின் பிரச்சினைகள் குறித்து ஒருமித்த நிலைப்பாட்டில் உள்ளனரா?
பதில்: இவ்வளவு பாடங்களைக் கற்றும் இலங்கைத் தமிழ் அரசியல் தலைமைத்துவங்கள் ஒன்றிணையக்கூடிய ஒரு போக்கினை காட்டி நிற்கவில்லை. இன்று சுமார் 1 மில்லியனுக்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழ் மக்கள் புலம்பெயர்ந்து ஐரோப்பிய, அமெரிக்க, ஆசிய நாடுகளில் வாழ்ந்தாலும்கூட புலம்பெயர்ந்த தமிழர்களால் கொள்கையளவிலான ஒருமைப்பாட்டினைக் காணமுடியவில்லை. இது விமர்சனங்களுக்கும், விளம்பரங்களுக்கும் அப்பாற்பட்ட ஒரு காலம்.
அண்மையில் இலங்கையின் பேராதனைப் பல்கலைக்கழக கல்வியாளர்கள் “வெளியிட்டிருந்த ஓர் அறிக்கையில் இன்றைய சூழ்நிலை வடபுலத்து தமிழர்களின் கல்வியை நேரடியாக 15 ஆண்டுகள் பின்நோக்கித் தள்ளிவிட்டது” என்று கூறப்பட்ட கருத்து சிந்திக்கத்தக்கதே. அதாவது, இதன் உள்ளார்த்தமான கருப்பொருள் இன்னுமொரு புதியதொரு தலைமுறையினரால் தான் கல்வியினை கட்டியெழுப்ப முடியும் என்பதை வெளிப்படுத்துவதாகவே அமைகின்றது. எனவே, தற்போது உள்ள இளம் சந்ததியினரை குறிப்பாக மானசீக தாக்கங்களுக்கு உட்பட்டுள்ள இவர்களுக்கு நாம் செய்ய முடியும். ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டிய கட்டத்தில் உள்ளனர்.

கேள்வி தமிழ் நாட்டில் வாழும் எமது உறவுகளின் செயற்பாடு தொடர்பாக என்ன குறிப்பிட விரும்புகின்றீர்கள்?
பதில்: தமிழ் நாட்டில் வாழும் உறவுகள் இலங்கை தமிழ் மக்களைப் பற்றியும், அகதிகள் பற்றியும் விசேட கரிசனைக் காட்டி வருவது ஆரோக்கியமான விடயமே. அதேநேரம், சில அரசியல்வாதிகள் இதனைக் குறுகிய நோக்கில் அவதானித்து அரசியல் இலாபம் தேட விளைவது வேதனைத் தருகின்றது.
தமிழ் நாட்டு அரசும் மத்திய அரசும் இலங்கை தமிழ் அகதிகளுக்கான வேண்டி பல்வேறுபட்ட உதவிகளை செய்து வருகின்றன. அதேபோல தமிழ் நாட்டில் உள்ள தனிப்பட்ட பரோபகாரிகளும் இம்மக்களைப் பற்றி சிந்தித்து யாதாவது தம்மால் ஆன உதவிகள் புரிவார்களாயின் இச்சந்தர்ப்பத்தில் பேருதவியாக இருக்கும். அப்படிப்பட்ட பரோபரிகாரிகள் உதவிகள் செய்யுமிடத்து இடம்பெயர்ந்தவர்களின் அத்தியாவசியத் தேவையென்பதைவிட சமூகத்தின் எதிர்கால நோக்கம் கொண்டு செயல்படுமிடத்து அதன் பயன் மிகவும் உச்சமாக இருக்கும் என்பது எனது தாழ்மையான அபிப்பிராயம்.
ஏனெனில், தமிழ் நாட்டில் வாழக்கூடிய பல பரோபகாரிகளுக்கு இலங்கையுடனான நேரடியான தொடர்புகள், உறவுகள் காணப்படுகின்றன. எனவே, அவர்கள் மூலமாக உண்மை நிலைகளை அறிந்து உதவிகளை வழங்க முற்படுவார்களாயின் வரவேற்கக்கூடியதாக இருக்கும். இவ்விடத்தில் நான் ஒன்றைக் குறிப்பிட விரும்புகின்றேன். அரச மட்ட உதவிகள் ஒருபுறமிருக்க தமிழ் நாட்டில் வாழக்கூடிய பரோபகாரிகள் இலங்கை தமிழ் அகதிகள் பற்றி சிந்திக்க வேண்டியது காலத்தின் தேவையாகும்.
உரையாடியவர்: பொன்மொழிவேந்தன்
http://sangamamlive.in/index.php?/content/view/3163/
http://muelangovan.blogspot.com/2009/06/blog-post_19.html

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள்

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை வவுனியா நிவாரணக் கிராம மாணவர்களுக்கான பரீட்சைப் பெறுபேறுகள் 31.10.2009 இல் வெளியிடப்பட்டன. இம்முடிவுகளின்படி நிவாரணக் கிராமங்களிலிருந்து பரீட்சைக்குத் தோற்றிய 5413 மாணவர்களுள் 507  மாணவர்கள் சித்தியடைந்தனர். முல்லைத்தீவு,  கிளிநொச்சி மாவட்டங்களில் மாணவர்கள் கூடிய புள்ளிகளாக 175 புள்ளிகளைப் பெற்றமை விசேட அம்சமாகும்.

வட மாகாணத்தின் ஏற்பட்ட யுத்த நிலை காரணமாக 2009 ஜுன் மாத புள்ளி விபரப்படி தரம் 05இல் கல்வி பயிலும் 4872 மாணவர்கள் வவுனியா நிவாரணக்கிராமங்களில் அகதிகளாக்கப்பட்டனர். இம்மாணவர்களின் கல்வி நிலையைக் கருத்திற் கொண்டு சிந்தனைவட்டமும் தேசம்நெற் உம் கல்வி நிவாரண செயற்றிட்டமாக ஒவ்வொரு மாணவனுக்கும் 30 மாதிரி வினாத்தாள்களையும் 04 வழிகாட்டிப் புத்தகங்களையும் வழங்கியது. இத்திட்டம் ஒரு நிவாரணக் கிராமத்தை மாத்திரம் கருத்திற் கொள்ளாமல் வவுனியாவில் அமைந்துள்ள அனைத்து நிவாரணக் கிராமங்களையும் கருத்திற் கொண்டே செயற்படுத்தப்பட்டது.

வவுனியா நிவாரணக் கிராமங்களுக்கு வந்து சேர்ந்திருந்த மாணவர்கள் 6 மாதங்களுக்கு மேற்பட்ட காலம் பாடசாலை மண்ணையே மிதிக்காமலிருந்தனர். இந்த மாணவர்களை துரிதமாகப் பயிற்றுவிக்கும் வகையிலேயே சிந்தனைவட்டம் தேசம்நெற் கல்வி நிவாரண செயற்றிட்டம் அமைந்திருந்தது. சிந்தனைவட்டம் தேசம்நெற் கல்வி நிவாரண செயற்றிட்ட வழிகாட்டிப் புத்தகங்களையும், மாதிரி வினாத்தாள்களையும் நிவாரணக்கிராமங்களைச் சேர்ந்த ஆசிரியர்கள் முறையாகப் பயிற்றுவித்தமையினால் 507 மாணவர்கள் சித்தியடைந்தனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த 196 மாணவர்களும் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 267 மாணவர்களும் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த 27 மாணவர்களும் யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த 7 மாணவர்களும் வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த 10 மாணவர்களும் சித்தியடைந்தனர். இங்கு மன்னார்,  வவுனியா,  யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களுக்கு வேறு வெட்டுப்புள்ளிகள் காணப்பட்ட போதிலும் கூட,  இம்மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் நிவாரணக் கிராமங்களில் வசித்த நிலையில் இவர்கள் நிவாரணக்கிராம மாணவர்களாகவே கருத்திற் கொள்ளப்பட்டு நிவாரணக் கிராமங்களுக்குரிய வெட்டுப்புள்ளியே இவர்களுக்கு சேர்க்கப்பட்டன.

இதன்படி 507 மாணவர்கள் சித்தியடைந்துள்ளதுடன் வவுனியா மாவட்டத்தில் ஆகக் கூடிய புள்ளியாக 135 புள்ளியையும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 175 புள்ளியையும் கிளிநொச்சி மாவட்டத்தில் 175 புள்ளியையும் மன்னார் மாவட்டத்தில் 134 புள்ளியையும் யாழ். மாவட்டத்தில் 135 புள்ளியையும் பெற்று தலா ஒவ்வொரு மாணவர்கள் முதலிடத்தை பிடித்தனர்.

Monday, 23 January 2012

டாக்டர் ஹிமானா சையத் அவர்களுடன் நேர்காணல் - புன்னியாமீன்

இந்தியாவைச் சேர்ந்த பிரபல இஸ்லாமிய எழுத்தாளரான டாக்டர் ஹிமானா சையத் சனவரி 20ஆம் திகதி 1947ம் ஆண்டில் தமிழ் நாட்டில் பிறந்தவர். கடந்த 50 ஆண்டுகாலமாக இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்துறையின்  வளர்ச்சிக்கு விசாலமான பங்களிப்பினை வழங்கிவருகின்றார்.

படைப்பிலக்கியத் துறையில் இதுவரை 650 க்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ள இவர்  12 சிறுகதைத் தொகுதிகளை வெளியிட்டுள்ளார். மேலும் 10 நாவல்களையும் எழுதியுள்ளார். இவற்றுள் 8 நாவல்கள் நூலுருப் பெற்றுள்ளன. ஒரு மருத்துவர் என்றடிப்படையில் மருத்துவத்துறை சார்ந்தும், குடும்ப உளவியல் சார்ந்தும், இலக்கியம், சமயம், ஆய்வு தொடர்பாகவும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியுள்ளார். இவரின் சில கட்டுரைகள் தொகுக்கப்பட்டு 18 நூல்கள் இதுவரை வெளிவந்துள்ளன. மேலும், ஒரு கவிதைத் தொகுதியையும் இவர் தந்துள்ளார். 1964ம் ஆண்டில் இவரது முதல் கவிதை பிரசுரமானது. முதல் சிறுகதை 1986ம் ஆண்டு வெளிவந்தது.

தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டு கடந்த வாரம் இலங்கை வந்திருந்த டாக்டர் ஹிமானா சையத் அவர்களுடன்,  இலங்கையின் தேசிய வாரப்பத்திரிகையான 'நவமணி' சார்பாக சனவரி 22, 2012 இல்  சார்பாக என்னால் மேற்கொண்ட நேர்காணலை கீழே தந்துள்ளேன்.

கேள்வி: டாக்டர் அவர்களே, இந்தியா தமிழ் நாட்டில் பிறந்த நீங்கள் இலங்கை இஸ்லாமிய எழுத்தாளர்களுடன் நெருக்கமான உறவினை வைத்துள்ளீர்கள். இது வரை 5 தடவைகள் இலங்கைக்கு வந்ததாகவும் அறிகின்றேன். இந்நிலையில் இலங்கை இஸ்லாமிய எழுத்தாளர்கள் பற்றி தாங்கள் எத்தகைய கருத்தினைக் கொண்டுள்ளீர்கள்? இது பற்றி சற்று குறிப்பிட முடியுமா?

பதில்: இலங்கை இஸ்லாமிய எழுத்தாளர்களை நான் மிகவும் நேசிக்கின்றேன். தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு இவர்களின் பங்களிப்பு விசாலமானது. இலங்கையின் முதலாவது நாவலை 19ம் நூற்றாண்டின் இறுதியில் தந்தவர் அறிஞர் சித்திலெவ்வை. அந்த காலம் முதல் இன்றுவரை இலங்கை இஸ்லாமிய எழுத்தாளர்கள் இலக்கியத்துறையின் பல்வேறுபட்ட சாதனைகளை நிகழ்த்தி வருகின்றார்கள். இதனை நான் பாராட்டுகின்றேன்.

அறிஞர் சித்திலெவ்வை ஒரு வழக்கறிஞர். அவருடைய தந்தையும் ஒரு வழக்கறிஞர் என கவிஞர் ஏ. இக்பால் பதிவு செய்துள்ளார். கற்ற சூழ்நிலையில் வாழ்ந்த அறிஞர் சித்திலெவ்வை சமூகம் பற்றியும், ஆத்மீகம் பற்றியும் பல்வேறு ஆக்கங்களைத் தந்துள்ளார். அதேநேரத்தில் இலக்கியம் சார்ந்து நோக்குமிடத்தில் அவரின் 'அசன்பே சரிதை' இலங்கைத் தமிழ் இலக்கியத்தில் முதல் நாவல் என்ற பதிவினைப் பெற்றுள்ளது. சித்திலெவ்வை அவர்கள் ஆத்மீக சிந்தனைகளை எந்த அழுத்தத்துடன் எழுதினாரோ அதே அழுத்தத்துடன் இலக்கியத்திலும் ஈடுபட்டுள்ளார். இதே காலகட்டத்தில் மாப்பிள்ளை லெவ்வை ஆலிம் அவர்களினால் தாமரைப் பட்டிணம் எனும் நூலும் எழுதப்பட்டுள்ளது. மாப்பிள்ளை லெவ்வை ஆலிம் தமிழ்நாடு கீழைக்கரையைச் சேர்ந்தவராக இருந்தாலும் இலங்கையுடன் வைத்திருந்த நெருக்கமான உறவை வைத்து இலங்கையிலிருந்தே இந்நூலை எழுதியுள்ளதாக அறிய முடிகின்றது.

இங்கு அவதானிக்க வேண்டிய ஒரு விடயம். இருவரும் ஆத்மீக சிந்தனைவாதிகள். ஆத்மீக சிந்தனைவாதிகளாக இருந்துகொண்டே இவர்கள் இலக்கியம் படைத்துள்ளார்கள். இந்த அடிப்படையில் நோக்கும்போது தமிழ் இலக்கியத்திற்கு அடிப்படையை வழங்கியவர்கள் ஆத்மீகத் தளத்திலிருந்தே அதனை மேற்கொண்டுள்ளார்கள். இந்த நிலை இலங்கையிலிருந்தே வேரூன்றியுள்ளது. இதனால் இலங்கையின் இலக்கியங்களையும் இலக்கியவாதிகளையும் நான் முழுமையாக நேசிக்கின்றேன். இதனை எனது ஆய்வுக்கட்டுரைகளில் நான் பல தடவைகள் எடுத்துரைத்துள்ளேன். இவற்றிற்கு யாரும் இதுவரை மறுப்பு தெரிவித்ததாக தெரியவில்லை.

கேள்வி: இலங்கை இஸ்லாமிய தமிழ் இலக்கியம் தொடர்பாக தங்கள் கருத்துக்கு நாங்கள் நன்றி கூறுகின்றோம். இருப்பினும் இவ்விடத்தில் இன்னுமொரு விடயத்தையும் அறிந்துகொள்ள ஆசைப்படுகின்றேன். அதாவது பொதுப்படையாகக் காணக்கூடிய ஒரு நிலை தமிழக இஸ்லாமிய எழுத்தாளர்களுள் பலர் இலங்கை இஸ்லாமிய எழுத்தாளர்கள் பற்றி முழுமையான அபிப்பிராயமொன்றை கொண்டிராமையை அவதானிக்க முடிகின்றது. உதாரணமாக அண்மையில் காயல்பட்டிணத்தில் நடைபெற்ற இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டில் நான் கலந்துகொண்ட போது தமிழகத்தில் சில முக்கிய பிரமுகர்கள் இலங்கையில் இத்தனை முஸ்லிம் எழுத்தாளர்கள் இருக்கின்றார்களா? என்று ஆச்சரியத்துடன் என்னிடம் தனிப்பட்ட முறையில் கேட்டனர். இதிலிருந்து இலங்கை முஸ்லிம் எழுத்தாளர்களில் குறிப்பிட்ட சிலரை தவிர ஏனையவர்களைப் பற்றி தமிழக எழுத்தாளர்கள் அறிந்திருக்கவில்லை என்று தான் எண்ணத் தோன்றுகின்றது. இது பற்றி என்ன கூற விரும்புகின்றீர்கள்?

பதில்: தங்களது இக்கூற்றினை நான் மறுக்கவில்லை. இவ்வாறான நிலைக்கு எமது பல எழுத்தாளர்களிடம்  தேடுதல் முயற்சிகள் இல்லாமையே மூல காரணம். மேலும் எமது எழுத்தாளர்கள் பலரிடம் நான் தான் எழுதுகின்றேன். நான் தான் சிறந்த எழுத்தாளன் என்ற மனோநிலை அல்லது மமதையும் காணப்படுகின்றது. இவர்கள் நமது முன்னோர்கள் இஸ்லாமிய தமிழ் இலக்கியத்திற்கு வழங்கிய முக்கியத்துவத்தினை தெரியாமலிருப்பதும், சமகாலத்தில் உள்ள எழுத்தாளர்கள் பற்றி கூட தெரிந்து கொள்ளாமலிருப்பதால்  இவ்வாறான நிலை தோன்றுவதற்கு வழிகோலியுள்ளது எனலாம். ஓர் இலக்கியவாதி தன்னை மாத்திரம் மையப்படுத்தாது ஏனையவர்கள் பற்றியும் தேடல்கள் மேற்கொள்ளும்பொழுது மேற்குறிப்பிட்ட நிலை தோன்ற இடமில்லை.

தனிப்பட்ட முறையில் என்னைப்பற்றி கூறுவதாயின் எந்த சந்தர்ப்பத்திலும் படைப்பிலக்கியத்தில் நான் ஒரு சிறந்த எழுத்தாளன் என்று நினைத்ததில்லை. ஏனையவர்கள் பற்றியும் எமது முன்னோர்கள் பற்றியும் நான் தேடுவதாலேயே இலங்கை எழுத்தாளர்களையும் நான் மதிக்கின்றேன்.

இதுவொரு புறமிருக்க இலங்கையில் குறிப்பிட்ட சில எழுத்தாளர்களை தவிர ஏனைய முஸ்லிம் எழுத்தாளர்கள் பற்றி போதிய விபரங்கள் தமிழக முஸ்லிம் எழுத்தாளர்களுக்கு கிடைக்காமலிருக்கின்றன. தமிழக முஸ்லிம் ஊடகங்கள் கூட இதனை இனங்கண்டு கொள்வதில்லை. தமிழ் நாட்டுடன் தொடர்பான குறிப்பிட்ட சில எழுத்தாளர்களை மாத்திரமே அறிந்து வைத்திருக்கின்றமையும் மேற்குறிப்பிட்ட நிலைக்கு மற்றுமொரு காரணமாக இருக்கலாம்.

கேள்வி: உண்மைதான் டாக்டர். இலங்கை இஸ்லாமிய தமிழ் எழுத்தாளர்கள், பற்றிய விபரங்கள் முறைப்படி தொகுக்கப்படாமல் இருப்பதினால் ஒரு ஆவண வடிவில் தமிழ்நாட்டில் வாழக்கூடிய இஸ்லாமிய தமிழ் எழுத்தாளர்களுக்கும் தெரிந்துகொள்ள முடியாமலிருக்கின்றது. அதேநேரம், தமிழ்நாட்டில் இஸ்லாமிய தமிழ் இலக்கியவாதிகள் பற்றிய ஆவணப்படுத்தல்கள் மேற்கொள்ளப்படுகின்றனவா?

பதில்: இலங்கையிலோ தமிழகத்திலோ இஸ்லாமிய தமிழ் இலக்கியவாதிகள் பற்றி ஆவணப்படுத்தப்படுதல் காலத்தின் இன்றியமையாத தேவையாகும். நான் அறிந்தவரை இலங்கையில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வர் அவர்களது காலத்தில் இலங்கை முஸ்லிம் எழுத்தாளர்கள், கலைஞர்கள் வாழ்வோரை வாழ்த்துவோம் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் கௌரவப்படுத்தப்பட்டதுடன், அவர்கள் பற்றிய குறிப்புகளும் ஆவணமாக்கப்பட்டுள்ளன. அதன் பிறகு இத்தகைய நடவடிக்கைகளில் தாங்கள் ஈடுபட்டதாக அறிய முடிகின்றது. ஆனால், இவை முழுமையடையவில்லை. இப்பதிவுகள் தமிழ்நாட்டு இஸ்லாமிய ஊடகங்களுக்கோ, தமிழ் நாட்டு எழுத்தாளர்களுக்கோ கிடைக்கவில்லை. தேடலில் ஈடுபட்டுள்ள என்னைப் போன்ற சிலராலேயே ஓரளவேனும் விபரங்களை பெற்றுக்கொள்ள முடிகின்றது.

தமிழகத்திலும் இதே நிலையைத் தான் காண்கின்றோம். தமிழகத்தில் வாழக்கூடிய இஸ்லாமிய தமிழ் எழுத்தாளர்கள் பற்றி முழுமையான விபரத்திரட்டுக்களுக்கான எத்தகைய ஆக்கபூர்வமான நடவடிக்கைகளும் இதுவரை மேற்கொள்ளப்பட்டதாக நான் அறியவில்லை. தமிழகத்தில் பல இஸ்லாமிய தமிழ் ஆராய்ச்சி மாநாடுகள் நடைபெற்றன. இவைகளில் கூட  தமிழகத்தில் வாழும் இஸ்லாமிய எழுத்தாளர்கள் பற்றி சரியானதும் முழுமையானதுமான தகவல்கள் வெளிவரவில்லை. சில மாநாடுகளில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் கூட முழுமையானதாக இருக்கவில்லை. இது மிகவும் வருந்தத்தக்க ஒரு விடயமே. எம்மவர்கள் பற்றி முறையான பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு ஆவணப்படுத்தப்படாத நிலையில் எதிர்கால சந்ததியினருக்கு இலங்கை, இந்திய இஸ்லாமிய தமிழ் எழுத்தாளர்களின் பணிகள் பற்றி தெரியாமல் போய்விடக் கூடிய வாய்ப்புகள் கணிசமாக உள்ளன என்பதை மறுப்பதற்கியலாது.

தமிழ்நாட்டில் மணிமேகலைப் பிரசுரத்தினால் லேனா தமிழ்வாணன் மூலம் பிரசித்திபெற்ற பிரமுகர்களின் முகவரிகள் எனும் நூல் தொடர்ச்சியாக வெளியிடப்படுகின்றது. இது தமிழக எழுத்தாளர்களையும் இனங்கண்டுகொள்ளக்கூடிய ஒரு ஆவணமாக உள்ளது. விரிவான ஆய்வாக இல்லாவிட்டாலும்கூட முகவரிகளையாவது முறையாக தெரிந்துகொள்ளலாம். இது தவிர இஸ்லாமிய தமிழ் எழுத்தாளர்கள் பற்றி விரிவான ஆய்வுகள் இடம்பெற்றதாக என்னால் குறிப்பிட முடியாது.

கேள்வி: இலங்கை இந்திய தமிழ் இஸ்லாமிய எழுத்தாளர்களிடையே இஸ்லாமிய இலக்கிய மாநாடுகள் மூலமாக ஏற்படக்கூடிய உறவு ஒரு தற்காலிக உறவாகவே காணப்படுகின்றது. மாறாக இந்திய இலங்கை தமிழ் இஸ்லாமிய எழுத்தாளர்களிடையே ஒரு நிலையானதும் யதார்த்தபூர்வமான உறவினை எந்த வகையில் ஏற்படுத்தலாம் என தாங்கள் நினைக்கின்றீர்கள்?

பதில்: நல்ல கேள்வி. இலக்கிய மாநாடுகள் என்றுகூறும்போது இலங்கையிலோ தமிழ்நாட்டிலோ அங்கங்குள்ள மாநாட்டு அமைப்பாளர்களுடன் தொடர்புள்ளவர்கள் மாத்திரமே முக்கியத்துவப்படுத்தப்படுகின்றனர். இது ஒரு குறைபாடாகவே உள்ளது. இலங்கையிலே அல்லது தமிழ்நாட்டிலோ எத்தனையோ தரம் வாய்ந்த இஸ்லாமிய தமிழ் எழுத்தாளர்கள் இலைமறை காய்களாக இருக்கின்றார்கள். இவர்களிடையே ஒரு யதார்த்தபூர்வமான உறவை ஏற்படுத்துவதென்பது இலகுவான காரியமல்ல. குறிப்பாக இலங்கை எழுத்தாளர்கள் பற்றி தமிழகத்திலும், தமிழக எழுத்தாளர்கள் பற்றி இலங்கையிலும் அறிமுகம் செய்யும் நிகழ்ச்சித் திட்டங்கள், ஆய்வுகள் மேற்கொள்ளப்படல் வேண்டும்.

நடுநிலைமையான ஆய்வுகளை மேற்கொள்ளப்படும்போது இத்தகைய உறவுகளை வலுப்படுத்தக்கூடியதாக இருக்கலாம். மேலும் இலங்கையிலுள்ள இஸ்லாமிய ஊடகங்களில் தமிழ் நாட்டு இஸ்லாமிய எழுத்தாளர்கள் பற்றியும் அதேபோல தமிழ் நாட்டிலுள்ள இஸ்லாமிய ஊடகங்களில் இலங்கை இஸ்லாமிய எழுத்தாளர்கள் பற்றியும் அறிமுகப்படுத்துவதுடன் இவர்களுடனான தொடர்பு முகவரிகளையும் வெளியிட வேண்டும்.

அவ்வாறாயின் இருதரப்பு எழுத்தாளர்கள் மத்தியிலும் ஓரளவிற்காவது தொடர்புகள் ஏற்பட்டு கருத்துப் பரிமாற்றங்கள் வளர்ச்சியடையலாம். இத்தகைய நிலை இலங்கை,இந்திய தமிழ் இஸ்லாமிய எழுத்தாளர்களிடை பாலமாக அமையலாம் என்பது எனது அபிப்பிராயம்.

இருப்பினும் இலங்கையிலும் சரி தமிழ்நாட்டிலும் சரி இதற்கான ஊடக வசதிகளின்மை பெரும் குறைபாடாகவே காணப்படுகின்றது. தமிழ்நாட்டை எடுத்துக் கொள்ளும்போது நிரந்தரமாக வெளிவரும் இஸ்லாமிய இதழ்கள் வெகு குறைவாகவே உள்ளன. இலங்கையிலும் இதே நிலையை அவதானிக்கின்றேன்.

கேள்வி: டாக்டர் அவர்களே! இப்படிப்பட்ட சூழ்நிலையில் நீங்கள் ஒரு படைப்பிலக்கியவாதியாக மாத்திரமல்லாது தமிழ் இலக்கிய ஆய்வுத்துறைகளிலும் கூடிய பங்களிப்பினை வழங்கி வருபவர் என்ற அடிப்படையில் மேற்குறிப்பிட்ட உறவு நிலையை ஏற்படுத்த தங்களால் எத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியுமெனக் கருதுகின்றீர்கள்?

பதில்: இலங்கையிலும் சரி தமிழகத்திலும் சரி இஸ்லாமிய தமிழ் எழுத்தாளர்களின் முழுமையான விபரங்களைத் திரட்டுவதென்பது மிகவும் கடினமானதொரு விடயம். இத்தகைய பணியினை மேற்கொள்வதற்கு தியாக மனப்பான்மை தேவை. இக்காலகட்டத்தில் தொலைத்தொடர்புத் துறையில் பாரிய முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இணையத்தளங்கள்ää வலைப்பூக்களின் வருகை வியக்கத்தகு முன்னேற்றங்களைக் கண்டுள்ளது. விபரங்களைத் திரட்டுவதற்கு ஊக்க மிகு இளையதலைமுறையினரின் சேவைகளைப் பெறுவதன் மூலம் ஓரளவேனும் விபரங்களைத் திரட்டி இணைப்புக்குரிய ஒரு வழிமுறையை மேற்கொள்ளலாம் என கருதுகின்றேன். உதாரணமாக எனது பேஸ் புக்கில் 2500க்கும் மேற்பட்ட இளையதலைமுறையினர் இணைந்துள்ளனர். இதனையொரு வேண்டுகோளாக விடுப்பதன் மூலம் இவர்களது சேவையை பெற முடியுமென எதிர்பார்க்கின்றேன். அதேநேரம், நவீன இலத்திரனியல் ஊடகங்களில் இளையதலைமுறையினரின் தொடர்புபோல மூத்த தலைமுறையினரின் தொடர்புகளை கூடியளவில் பெறமுடியாதுள்ளது. நிச்சயமாக இது விடயத்தில் நவீன தொலைத்தொடர்பு ஊடகங்களையே பயன்படுத்துவது கூடிய பலன் தருமென எதிர்பார்க்கின்றேன். இதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பேன்.

கேள்வி: டாக்டர் அவர்களே! நீங்கள் அறிந்தவரை  இலங்கையில் வாழக்கூடிய முஸ்லிம் பெண் எழுத்தாளர்கள் பற்றி என்ன கூற விரும்புகின்றீர்கள்?

பதில்: உண்மையிலேயே நான் மகிழ்ச்சியடைகின்றேன். இலங்கையில் வாழக்கூடிய முஸ்லிம் பெண் எழுத்தாளர்கள் மிகவும் தரமான முறையில் தமது எண்ணக்கிடக்கைகளை இலக்கியங்களாக வடித்து வெளியிடுகின்றனர். கவிதைஇ சிறுகதை போன்ற துறைகளில் கூடிய ஆர்வம் காட்டும் அதேநேரம் நாவல் இலக்கியத்துறையிலும் ஆர்வம்  காட்டி வருவது வரவேற்கத்தக்கதொரு விடயமாகும். தமிழ்நாட்டிலும் பல தரமான பெண் எழுத்தாளர்கள் எழுதிவருகின்றார்கள். ஒப்பீட்டளவில் கூறுவதாயின் இலங்கையில் பங்களிப்புச் செய்யும் பெண் எழுத்தாளர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் எழுதக்கூடிய முஸ்லிம் பெண் எழுத்தாளர்களைவிடவும் அதிகமானதாகும். அதேபோலதான் ஆண் எழுத்தாளர்களின் எண்ணிக்கையையும் குறிப்பிட முடியும்.  

கேள்வி: இறுதியாக நான் தங்களிடம் கேட்க விரும்புவது அண்மைக்காலமாக இலத்திரனியல் ஊடகங்கள் கூடுதலான தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. இலத்திரனியல் ஊடகங்களின் வளர்ச்சி அச்சு ஊடகங்களை பாதிக்குமென தாங்கள் கருதுகின்றீர்களா?

பதில்: உண்மைதான். 21ம் நூற்றாண்டில் இலத்திரனியல் ஊடகங்களின் தாக்கம் வெகுவாக அதிகரித்துவிட்டது. இன்று தேசிய பத்திரிகைகள் கூட தமது பத்திரிகைச் செய்திகளை இணையத்தளங்களில் வெளியிடுவதுடன்இ ஈ பத்திரிகைகளையும் வெளியிடுகின்றன. அது மட்டுமல்ல பல இணையத்தளங்கள் தமிழ் நூல்களை முழுமையாகவே வெளியிடுகின்றன. இலங்கையில்கூட நூலகம் எனும் இணையத்தளம் 8000க்கும் மேற்பட்ட நூல்களை பிடிஎஃப் வடிவில் முழுமையாக பதிவேற்றியுள்ளதாக அறிகின்றேன். இணையத்தளப் பாவனையாளர்களால் இவற்றை பார்வையிடுவது இலகுவானது. ஒரு பெரிய நூலகமே இணையத்துக்குள் சுருங்கிவிடுகின்றது.

ஆனாலும், எவ்வளவு தூரத்திற்கு இத்தகைய நவீனத்துவ முறைகள் வளர்ச்சியடைந்தாலும்கூட அச்சு ஊடகங்கள் வளர்ந்துகொண்டே இருக்குமே தவிர நிச்சயமாக அவை வீழ்ந்துவிடமாட்டாது. இதனை மூன்றாம் உலக நாடுகளை விட இன்றைய மேற்குலக நாடுகளில் அனுபவங்களுடன் ஒப்புநோக்கும் போது அவதானிக்கின்றோம். எனவே பத்திரிகைகள், நூல் வெளியீடுகள் என்பன காலத்தால் நிலைக்குமே தவிர அவை நிச்சயமாக அழிவை நோக்கிச் செல்லாது என்பதை என்னால் உறுதியாகத் தெரிவிக்க முடியும்

Thursday, 5 January 2012

தமிழ் விக்கிப்பீடியா உலகில் புன்னியாமீனின் சாதனை - பாத்திமா இப்பத் அஸா

இலங்கை வீரகேசரி வெளியீட்டு நிறுவனம் இலங்கை வாழ் முஸ்லிம்களுக்காக வெளியிடும் தேசிய பத்திரிகையான  விடிவெள்ளியில் 2012 ஜனவரி 5ம் திகதி இந்த நேர்காணல் பிரசுரமானது.

இலங்கையின் மத்திய மலைநாட்டின் தலைநகர் கண்டி மாநகருக்கு சுமார் 10கிலோமீற்றர் தூரத்தில் அமைந்துள்ள உடத்தலவின்னை மடிகே எனும் முஸ்லிம் கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட கலாபூசணம் பீ.எம்.புன்னியாமீன்  ஒரு எழுத்தாளராகவும், சர்வதேச ஊடகவியலாளராகவும், பத்திரிகையாளராகவும் பன்னூலாசிரியருமாக அறியப்பட்டவர். இவர் 1970களில்  இலக்கியத்துறையில் ஈடுபாடுகொள்ள ஆரம்பித்து  இதுவரை 166 சிறுகதைகளையும் ஒரு நாவலையும் கல்வி கலை இலக்கியம் ஆய்வியல் அரசியல்விளையாட்டு சமூகவியல ஆகிய பல்வேறு துறைகளில் 15000க்கும் மேற்பட்ட கட்டுரைகளையும் எழுதியுள்ளார். இலங்கையில் தமிழ்மொழியில் இதுவரை 179 நூல்களை எழுதி வெளியிட்டு இலங்கை தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒரு தனி அத்தியாயத்தை இவர் ஆரம்பித்துள்ளதுடன் இவரின் வெளியீட்டுப் பணியகமான சிந்தனை வட்டத்தின்   மூலம் ஈழத்து எழுத்தாளர்களினதும் புலம்பெயர் தமிழ் எழுத்தாளர்களினதும் 340 நூல்களை இதுவரை வெளியிட்டுமுள்ளார்.

ஆரம்ப காலங்களில் இலங்கை, இந்தியா மற்றும் புலம்பெயர் தமிழர்கள் வாழும்   நாடுகளில் வெளிவரும் தமிழ் இதழ்களிலும் பத்திரிகைகளிலும் எழுதிவந்த இவர் கடந்த மூன்றாண்டுகளாக இலத்திரனியல் ஊடகங்களில் அதிகளவில் பங்களிப்பு செய்து வருகின்றார். லண்டனிலிருந்து வெளிவரும் ‘தேசம் இணையத்திலும் பிரான்ஸிலிருந்து வெளிவரும் இலங்கை நெற் இணையத்திலும் இந்தியாவிலிருந்து வெளிவரும் முன்னணி இணையத்தளமான தட்ஸ்தமிழ் (வன் இந்தியா) இணையத்தளத்திலும் இவரது பல அரிய கட்டுரைகளும் அரசியல் ஆய்வுகளும் வெளிவந்துள்ளன. கடந்த ஆண்டில் சப்ரகமுவ பல்கலைக்கழக தமிழ்த்துறை சிறப்புக் கற்கை மாணவி செல்வி எம்.ஐ.எப் நபீலா என்பவர் “இலங்கையில் தமிழ் எழுத்தாளர்களும் இணையப் பாவனையும் எனும் தலைப்பில் எழுதிய ஒரு ஆய்வுக் கட்டுரையில் உலகளாவிய ரீதியில் இயங்கும் 183 இணையத் தளங்களில் பீ.எம்.புன்னியாமீனின் ஆக்கங்கள் இடம்பெற்றுள்ளதைச் சுட்டிக்காட்டியிருந்ததுடன் புன்னியாமீனது கட்டுரைகள் இடம்பெற்ற அந்த 183 இணையத்தளங்களின் முகவரிகளையும் பட்டியலிட்டுக் குறிப்பிட்டுமிருந்தார்.

கடந்த 2010ம் ஆண்டு நவம்பர் 14ம் திகதி முதல் 2011ம் ஆண்டு நவம்பர் 13ம் திகதி வரையிலான ஓராண்டுக் காலப்பகுதியில் பல்வேறு துறைகளிலும் பெரியதும் சிறியதுமான 7500 கட்டுரைகளை எழுதி அவற்றைத் தமிழ் விக்கிபீடியாவில் பதிவேற்றம் செய்து புதிய சாதனையொன்றை நிகழ்த்தியுள்ளார். இதனை உலகளாவிய ரீதியில் தமிழ் மொழியில்  தனியொரு மனிதனால் நிகழ்த்தப்பட்ட சாதனையாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. புன்னியாமீன் தமிழ்விக்கிப்பீடியாவிலும் தமிழ் விக்கி செய்திகளிலும் அண்மைக்காலமாக அதிகளவில் பங்களிப்பினை செய்து வருகின்றார். இது தொடர்பாக விடிவெள்ளியின் சார்பில் அவரை நாம் சந்தித்தோம்.

கேள்வி:     ஓராண்டுக்குள் 7500 கட்டுரைகளை தமிழ்மொழியில் எழுதி தமிழ் எழுத்துலகில் ஒரு சாதனை படைத்துள்ளதாக அறிகின்றோம். இது பற்றி சற்று விளக்க முடியுமா?

 பதில்: ஒரு சாதனையைப் புரிய வேண்டும் என்ற நோக்கில் நான் எழுதவில்லை. அண்மைக் காலங்களாக இலத்திரனியல் ஊடகங்களில் நான் அதிகமாக எழுத ஆரம்பித்தேன். இச்சந்தர்ப்பத்தில் கடந்த நவம்பர் மாதத்தில் தமிழ் விக்கிப்பீடியாவுடன் எனக்கு உறவு ஏற்பட்டது. தமிழ்விக்கிப்பீடியாவில் கட்டுரைகளை பதிவேற்றம் செய்வதற்கான வாய்ப்பு திறந்த நிலையில் உள்ளதினாலும் விக்கிப்பீடியாவில் அதிகார நிர்வாக தரத்திலுள்ளவர்களும் விக்கிப்பயனர்களும் திறந்த நிலையில் பழகி எனது எழுத்துக்கு ஊக்கம் தந்தமையினாலும் என்னை அறியாமலேயே சரியாக ஓராண்டுக்குள் 7500 கட்டுரைகளை பதிவேற்றம் செய்தேன். விக்கிப்பீடியா குழுமத்தில் தமிழ் விக்கிப்பீடியாவில் நான் 2010 நவம்பர் 14ம் திகதி இணைந்தேன். நவம்பர் 14 2010 முதல் மார்ச்சு 16, 2011 வரையிலான காலகட்டத்தில் என்னால் 500 கட்டுரைகளை எழுத முடிந்தது. தொடர்ந்து நவம்பர் 14, 2010 முதல் ஏப்ரல் 5, 2011 வரையிலான காலப்பகுதியில் 1000 கட்டுரைகளையும், ஏப்ரல் 6,  2011 முதல் மே 5 2011 வரையிலான காலப்பகுதியில் 2000 கட்டுரைகளையும், மே 6, 2011 முதல் ஜுன் 22, 2011 வரையிலான காலப்பகுதியில் 3000 கட்டுரைகளையும், ஜுன் 23, 2011 முதல் ஓகஸ்ட் 22, 2011 வரையிலான காலப்பகுதியில் 4000 கட்டுரைகளையும், ஓகஸ்ட் 23, 2011 முதல் செப்டம்பர் 30, 2011 வரையிலான காலப்பகுதியில் 5000 கட்டுரைகளையும்,  அக்டோபர் 1,  2011 முதல் அக்டோபர் 19, 2011 வரையிலான காலப்பகுதியில் 6000 கட்டுரைகளையும், அக்டோபர் 20, 2011 முதல் நவம்பர் 6, 2011 வரையிலான காலப்பகுதியில் 7000 கட்டுரைகளையும், நவம்பர் 07,  2011 முதல் நவம்பர் 13, 2011 வரையிலான காலப்பகுதியில் 7500 கட்டுரைகளையும் என்னால் எழுத முடிந்தது. டிசம்பர் 17. 2011 தமிழ்விக்கிப்பீடியாவில் 8255 கட்டுரைகளை நான் எழுதியுள்ளேன். என்னால் எழுதப்பட்ட கட்டுரைகள பின்வரும் முகவரிகளில் படிக்க முடியும்.

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D:P.M.Puniyameen

http://toolserver.org/~soxred93/pages/index.php?name=P.M.Puniyameen&namespace=0&redirects=noredirects&lang=ta&wiki=wikipedia&getall=1

கேள்வி:     தமிழ்விக்கிப்பீடியாவில் நீங்கள் எத்தகைய கட்டுரைகளை எழுதிவருகின்றீர்கள்?

பதில்: ஆரம்பகாலத்தில் இலங்கை எழுத்தாளர்கள் ஊடகவியலாளர்கள் கலைஞர்கள் மற்றும் வரலாற்று அறிஞர்கள் ஆகியோர் பற்றிய கட்டுரைகளை எழுதிவந்தேன். பின்னாளில் இலங்கை எழுத்தாளர்களினால் எழுதப்பட்ட நூல்களைப் பற்றி எழுதினேன். தொடர்ந்து இலங்கை தமிழ் இலக்கியம் அரசியல் பொருளாதாரம் வரலாறு கலைத்துவ அம்சங்கள் போன்ற விடயங்களை எழுதினேன். கிரிக்கற் விளையாட்டில் எனக்கு இயல்பாகவே ஆர்வம் அதிகம். 1996ம் ஆண்டு உலகக் கிண்ணத்தை இலங்கை வெற்றிகொண்ட நேரம் வீல்ஸ் வேல்ட் கப் எனும் தலைப்பில் ஒரு நூலை நான் எழுதினேன். இலங்கையின் தமிழ்மொழி மூலமாக கிரிக்கற் பற்றி எழுதப்பட்ட முதல் நூலாக அது மதிப்பீடு செய்யப்பட்டது. இவ்வடிப்படையில் அண்மைக் காலமாக உலகளாவிய ரீதியில் கிரிக்கெட் வீரர்களைப் பற்றி எழுதிவருகின்றேன். மேலும் இலங்கையில் மட்டுமல்லாமல் இந்தியா மலேசியா சிங்கப்பூர் பர்மா (மியன்மார்) போன்ற நாடுகளில் உள்ள தமிழ் முஸ்லிம் எழுத்தாளர்கள்; பற்றியும் தமிழ் மக்களாலும் முஸ்லிம் மக்களாலும் தமிழ்மொழியில் எழுதப்பட்ட பத்திரிகைகள் சஞ்சிகைகள் பற்றியும் எழுதிவருகின்றேன்.

கேள்வி:     ஓராண்டில் உள்ள 365 நாட்களில் நீங்கள் எவ்வாறு ஓராண்டுக்குள் 7500 கட்டுரைகளை எழுதினீர்கள்?

பதில்: இந்த கேள்விக்கு பதில் வழங்குவது சற்று கடினமான விடயமே. ஓராண்டுக்குள் 7500 கட்டுரைகள் எழுத வேண்டுமென திட்டமிட்டிருந்தால் சிலநேரங்களில் சாத்தியப்படுத்துவது கடினமாக இருந்திருக்கலாம். ஆரம்பத்தில் எந்தவித இலக்கு  நோக்கமுமில்லாமல் நான் எழுதினேன். என்னை அறியாமலேயே என் கட்டுரைகளின் எண்ணிக்கை அதிகரித்தன. 5000 கட்டுரைகளை செப்டம்பர் 30 2011 எழுதிமுடித்த பின்பு விக்கிநிர்வாகிகளும் சில பயனர்களும் தந்த உத்வேகத்தால் நவம்பர் 13ம் திகதிக்கு முன்பு (ஓராண்டுக்குள்) 7500 கட்டுரைகளை எழுதிமுடிக்க வேண்டும் என இலக்குவைத்தேன். இறுதிகட்டங்களில் திட்டமிட்டு முழுநேரமாக செயல்பட்டமையினாலேயே மேற்குறிப்பிட்ட இலக்கை அடைய முடிந்தது. சராசரியாக நோக்குமிடத்து இக்காலகட்டத்தில் நாளொன்றுக்கு எனது சராசரி கட்டுரையாக்கம்: 20.55 மாதமொன்றுக்கான சராசரி கட்டுரையாக்கம்: 625

கேள்வி:     தமிழ்விக்கிபீடியாவில் ஒரு நாளில் 300 கட்டுரைகளை  எழுதியதாகவும் அறிகின்றோம்.  இதுபற்றி சற்று குறிப்பிட முடியுமா?

பதில்: ஏப்ரல் 20. 2011 இலங்கை நேரப்படி அதிகாலை 5.40 முதல் நள்ளிரவு 1.30 மணிவரை சுமார் 20 மணித்தியாலங்கள் தொடர்ச்சியாக 300 கட்டுரைகளை பதிவேற்றம் செய்தேன். 19ம் திகதி காலை விக்கிப்பீடியாவைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது எனது அலுவலக கணனி இயக்குனர்கள் இப்படியொரு முயற்சியை மேற்கொண்டால் என்ன என என்னைக் கேட்டுக்கொண்டார்கள். அதன் பின்பே என் சிந்தனையிலும் இத்திட்டம் உதித்தது. பின்பு இது விடயமாக அனைத்துத் திட்டங்களை வகுத்து 20ம் திகதி இலக்குப் பயணத்திற்கு ஆயத்தமானேன்.    இதற்காக 3 கனணிகளை பயன்படுத்தினோம். எனது அலுவலகத்தில் பணிபுரியும் மௌலவி ரமீஸ்தீன் அவர்களும், திருமதி இல்முன் நிஸா ஹிலால் அவர்களும் மற்றும் என் மகன் சஜீர் அகமது, மகள் பாத்திமா சம்ஹா ஆகியோருடன் இணைந்து என் மனைவி மஸீதா புன்னியாமீனும் இப்பணிக்கு முழுமையான பங்களிப்பை நல்கினர். அனைத்தும் என்னால் நேரடியாக வழிகாட்டப்பட்டு கண்காணிக்கப்பட்டதுடன் 300 கட்டுரைகளும் என்னாலே தரவேற்றம் செய்யப்பட்டன. இதில் விசேடம் என்னவென்றால் 300 கட்டுரைகளும் ஒரே தினத்தில் எழுதப்பட்டவை என்பதாகும்.


கேள்வி: விக்கிபீடியாவுடன் நெருக்கமான உறவினைக் கொண்டுள்ள நீங்கள் விக்கிபீடியாபற்றி சற்று விளக்க முடியமா?

பதில்: 21ஆம் நூற்றாண்டின் இரண்டாவது தசாப்தம் ஆரம்பித்துள்ள நிலையில்  இணையக் கலைக்களஞ்சியமாக விளங்கும் விக்கிப்பீடியாக உலகளாவிய ரீதியில் 283 மொழிகளில் சுமார் 2 கோடி 61 இலட்சம் தகவல்களை தன்னகத்தே கொண்டு இணைய வசதியுள்ளவர்களால் நினைத்த நேரத்தில் தேவைப்படும் விடயங்களை இலகுவாகவும் இலவசமாகவும் பெற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்பினை வழங்கி வருகின்றது. இணையக் கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியா பொது உள்வாங்கியாக காணப்படுவதினால் புத்திஜீவிகளுக்கும் கற்றவர்களுக்கும்  தெரிந்தவர்களுக்கும் தாம் தெரிந்தவற்றை தரவேற்றம் செய்யக் கூடிய வாய்ப்பினை வழங்கி வருகின்றது. மொழி ரீதியாக ஒன்றுபட்டாலும்கூட பல்வேறுபட்ட கலை கலாசார  பாரம்பரிய மரபுகள் சமூக ரீதியில் வித்தியாசப்படலாம். அவற்றையும் திரட்டி எதிர்கால சந்ததியினருக்கு தம் முன்னைய தலைமுறையினரின் வரலாறுகளைப் பற்றியும் கலாசார பாரம்பரியங்களின் மான்மியங்கள் பற்றியும் தம் மொழியினூடே அறிந்து கொள்ளக்கூடிய வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுப்பதில் விக்கிப்பீடியா இன்றைய காலகட்டத்தில் முன்நிற்கின்றது. நவீன இலத்திரனியல் தொழிநுட்பத்தின் வளர்ச்சியில் பெறப்பட்ட இக் கால கட்டத்தில் கலைக்களஞ்சிய தளங்கள் என்பன ஆவணமாக்கல் பொக்கிசங்களாகும். இன்று கலைக்களஞ்சிய தளங்கள் என்ற அடிப்படையில் விக்கிபீடியா மைக்ரோசொஃப்ட் என்கார்ட்டா பிரிட்டானிக்கா  என்சைக்ளோபீடியா  டொட் கொம்  போன்ற சில தளங்கள் காணப்படுகின்றன. இவற்றுள் விக்கிபீடியா கலைக்களஞ்சிய தளம் முதன்மை நிலையைப் பெற்று விளங்குகின்றது.

கேள்வி:     விக்கி என்றால் என்ன?

பதில்: விக்கி (Wiki) என்னும் சொல்  ஹவாய் மொழியில் வழங்கப்படும்  'விரைவு" என்னும் பொருளைத் தரும் சொல்லாகும். இந்த  இணையத்தளத்துக்கு வரும் பார்வையாளர்களால் தளத்தின் உள்ளடக்கத்தை திருத்தவோ  கூட்டவோ குறைக்கவோ மாற்றியமைக்கக் கூடியதாகவோ இருக்கும். நடைமுறைக்கும் தொடர்பாடல்களுக்கும் இது எளிமையானதாக இருப்பதால் விக்கிகள் கூட்டு எழுத்தாக்க முயற்சிகளுக்கு சிறந்த கருவியாகத் திகழ்கின்றன.

 'விக்கி" என்ற சொல் இது போன்ற இணையத்தளங்களை இயக்க உதவும் ' விக்கி மென்பொருளை'க் குறிக்கும். 'விக்கிவெப்' என்ற மென்பொருள் தான் விக்கி முறையில் அமைந்த முதல் மென்பொருளாக உள்ளது. விக்கிவெப் என்ற பெயரை 'வார்ட் கன்னிங்ஹாம்" என்பவர் முதலில் வைத்தார். விக்கி இணையத்தளங்களுக்கு எடுத்துக்காட்டாக விக்கிப்பீடியா விக்சனரி ஆகிய இணையத்தளங்களை குறிப்பிடலாம். விக்கி  (Wiki) + என்சைக்கிளோபீடியா (Encyclopedia) என்னும் இரு சொற்கள் இணைந்தே விக்கிபீடியா (Wikipedia) என்ற சொல் உருவானது.

 கேள்வி:     விக்கிபீடியா உருவாக்கம் பற்றி சற்று கூறமுடியுமா?

 பதில்: புதிய மிலேனியத்தின் ஆரம்பத்தில் 'நுபீடியா" என்ற இலவச இணைய கலைக் களஞ்சியப் பணியைப் புரிந்தவரும்  தற்போது விக்கிப்பீடியாத் திட்டங்களை முன்னின்று நடத்தும் விக்கிமீடியா அமைப்பின் தாபகரும்  வேறுபல விக்கிதிட்டங்களை நடத்துபவருமான அமெரிக்காவைச் சேர்ந்த  "ஜிம்மி வேல்ஸ்"  (ஜிம்மி டொனால்ட் ஜிம்போ வேல்ஸ் - பிறப்பு ஆகஸ்ட் 7 1966 மற்றும் அமெரிக்க மெய்யியலாளரும் விக்கிப்பீடியாவினை கூட்டாக நிறுவியவரும் இலவச தகவல் களஞ்சியமான சிடிசென்டியம் (குடிமக்கள் தொகுப்பு) உருவாக்குனருமான லாரன்சு மார்க் லாரி சாங்கர் (பிறப்பு ஜுலை 16 1968)  ஆகிய இருவரும் இணைந்து  கட்டற்ற பன்மொழிக் கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவை ஆரம்பித்தனர்.

 அனைவரும் பங்களிக்கக்கூடிய வகையில் கட்டமைக்கப்பட்ட கலைக்களஞ்சியம் உருவாக்கும் இலக்குகளை வேல்ஸ் தீர்மானித்தார்.  அந்த இலக்கினை அடைய விக்கி மென்பொருளை பயன்படுத்தும் திட்டத்தினை  சாங்கர் செயற்படுத்தினார்.  இவ்விதமாக ஜனவரி 15 2001 இல் விக்கிப்பீடியா பிறந்தது. ஆரம்பத்தில் ஆங்கில மொழியில் மட்டும் பதிப்பித்த விக்கிப்பீடியா படிப்படியாக பல மொழிகளில் வியாபகமடைந்தது. விக்கபீடியாவின் பிரதான கொள்கையான நடுநிலைநோக்கு மற்றும் பிற கொள்கை வழிகாட்டல்கள் நுபீடியாவில் கடைபிடிக்கப்பட்ட கொள்கைகளையொட்டியே உருவாக்கப்பட்டன.

 விக்கிப்பீடியா ஆரம்பிக்கப்பட்ட ஆண்டின் இறுதியில் 18 மொழிகளில் சுமார் 20000 கட்டுரைகளை உள்ளடக்கியிருந்தது. தற்போது 283 மொழிகள் என பல மொழிகளில் இது ஓர் இயக்கமாக வியாபித்து வளர்ச்சியடைந்துள்ளது.  ஆங்கில விக்கிபீடியாவில்    டிசம்பர் 17 2011 இல்  3,25,380 கட்டுரைகளும்  283 மொழிகளிலுமுள்ள விக்கிப்பீடியாக்களில் 20,618,480 கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன. ஆங்கில விக்கிபீடியாவில்  டிசம்பர் 17 2011 இல்   15,906,048 பயனர்களும் 283   மொழிகளிலுமுள்ள விக்கிப்பீடியாக்களில 32,224,666  பயனர்களும் பங்களித்துள்ளனர். விக்கிப்பீடியாவில் பயனர்கள் என்ற கூறும்போது விக்கியில் எழுதிää  பங்களிப்பவர்களை குறிக்கும்.

 கேள்வி: ஆங்கில விக்கிபீடியா ஜனவரி 15 2001 இல் தோன்றியதாகக் குறிப்பிட்டீர்கள். தமிழ் விக்கிப்பீடியாவின் தோற்றம் பற்றியும் அதன் தற்போதைய நிலைபற்றியும்    குறிப்பிடமுடியுமா?

 பதில்: எளிய தமிழில் தரமான கட்டற்ற கலைக்களஞ்சியத்தை உருவாக்குவதே தமிழ் விக்கிப்பீடியாவின் முதன்மைக் குறிக்கோளாகும். தமிழ் விக்கிப்பீடியா 2003ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதத்தில் தொடங்கப்பட்டதாகப் பதிவுகள் காட்டுகின்றன. ஆனால் இது தமிழ் விக்கிப்பீடியாவுக்காக ஓர் இடம் ஒதுக்கப்பட்டதையே குறிக்கிறது. அப்போது ஆங்கில இடைமுகத்துடன் கூடிய ஒரு வெற்றுப் பக்கமே இருந்தது. அவ்வாண்டு நவம்பர் மாதத்திலேயே தமிழ் இடைமுகத்துடன் கூடிய முறையான தமிழ் விக்கிப்பீடியா உருவானது. தமிழ் விக்கிப்பீடியா தளம் ஆங்கில இடைமுகத்துடன் காணப்பட்ட நிலையில் தமிழ் விக்கிப்பீடியாவின் முன்னோடியாகக் கருதப்படும் இ. மயூரநாதன் நவம்பர் 2003இல் தளத்தின் இடைமுகத்தின் பெரும்பகுதியைத் தமிழாக்கினார்.  ஐக்கிய அரபு அமீரகம் அபுதாபியில் கட்டிடக் கலைஞராகப் பணியாற்றிவரும்  இலங்கை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இ. மயூரநாதன்  யாழ்ப்பாணம் வைதீஸ்வரா கல்லூரியில் பழைய மாணவராவார். செப்டம்பர் 19 2003 இல் இவரின் முதல் கட்டுரை பதிவுசெய்யப்பட்டது. டிசம்பர் 17  2011வரை 3603 கட்டுரைகளையும் உள்ளிட்டுள்ளார். தமிழ் விக்கிப்பீடியாவில் தொடர்ச்சியாக எட்டாண்டுகளுக்கு மேல் சேவையாற்றிவரும் இவரின் பணி இன்றுவரை தொடர்கிறது.

ஐக்கிய இராச்சியத்தில் வசித்து வந்த அமல்சிங் என்ற பயனர் ஆங்கில தலைப்புடன் நவம்பர் 12 2003 இல் முதல் தமிழ் கட்டுரையை வெளியிலிருந்து உள்ளிட்டார். டிசம்பர் 17  2011 வரை தமிழ் விக்கிப்பீடியாவில 42,632 கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. ஆரம்பத்தில் மிகவும் மெதுவாகவே தமிழ் விக்கிப்பீடியா வளர்ந்தாலும் எவ்வித தொய்வும் இல்லாமல் படிப்படியாக வளர்ச்சியடைந்து கொண்டே வருகின்றது. பிறமொழி விக்கிப்பீடியாக்களுடன் ஒப்பிடுகையில் கட்டுரைகள் உள்ளாக்கத்தில் தமிழ் விக்கிப்பீடியா 60 வது இடத்தில் இருக்கின்றது. டிசம்பர் 17  2011 வரை 33,928 தம்மைப் பயனர்களாகப் பதிவு செய்துகொண்டுள்ளனர். எனினும் தொடர்ச்சியாக பங்களித்து வருபவர்களின் எண்ணிக்கை 50க்கும் குறைவாகும். மேலும் விக்கியுடன் இணைந்த வகையில் பின்வரும் திட்டங்களும் நடைமுறையில் உள்ளன. அவை: விக்சனரி (கட்டற்ற அகரமுதலி) விக்கி மேற்கோள்கள் (மேற்கோள்களின் தொகுப்பு) விக்கி இனங்கள் (உயிரினங்களின் கோவை) விக்கி செய்திகள் (கட்டற்ற உள்ளடக்கச் செய்திச் சேவை) விக்கி மூலம் (கட்டற்ற மூல ஆவணங்கள்) விக்கி பொது (பகிரப்பட்ட ஊடகக் கிடங்கு) விக்கி பல்கலைக்கழகம் (கட்டற்ற கல்வி கைநூல்களும் வழிகாட்டல்களும்)     விக்கி நூல்கள் (கட்டற்ற நூல்கள் மற்றும் கையேடுகள்) மேல்-விக்கி (விக்கிமீடியா திட்ட ஒருங்கிணைப்பு.

 கேள்வி:     தமிழ் விக்கிப்பீடியாவின் குறிக்கோள்கள் கொள்கைகள் என்ன?

பதில்: விக்கிப்பீடியா பல மொழிகளில் அமையப்பெற்றிருந்தாலும்கூட  குறித்த மொழியின் குறித்த மொழிசார் கலை  கலாசார பண்பாட்டு விழுமியங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என எதிர்ப்பார்க்கின்றது. இவ்வடிப்படையில் தமிழ் விக்கிப்பீடியா இலகு  தமிழில் தரமான கட்டற்ற கலைக்களஞ்சியத்தை உருவாக்கும் முதன்மைக் குறிக்கோளைக் கொண்டுள்ளமையால் இது நடுநிலை நோக்கு பதிப்புரிமைகளை மீறாமை மெய்யறிதன்மை  இணக்க முடிவு பாதுகாப்புக் கொள்கை, தனிநபர் விமர்சனங்களைத் தவிர்த்தல்  பங்காற்றும் பயனர்களின் பங்களிப்புக்களுக்கு மதிப்பளித்தல் போன்ற கொள்கைகளைப் பிரதானமாகக் கொண்டு இதன் பணிகள் தூரநோக்குடன் செயற்படுத்தப்படுகின்றன.

 கேள்வி:  தமிழ் விக்கிப்பீடியாவில் பிரதான உள்ளடக்கம்பற்றி குறிப்பிட முடியுமா?

பதில்: தமிழ் விக்கிப்பீடியாவின் பிரதான உள்ளடக்கமாக பின்வரும் பிரதான தலைப்புகள் அமைகின்றன. தமிழ் பண்பாடு வரலாறு அறிவியல் கணிதம் தொழில்நுட்பம் புவியியல் சமூகம் நபர்கள் இவை மேல்விக்கியில் எல்லாமொழி விக்கிப்பீடீயாக்களிலும் இருக்க வேண்டிய மூல கட்டுரை அமைப்புகள் என பரிந்துரை செய்யப்பட்டவையாகும். மேற்படி ஒன்பது பிரதான தலைப்புகளுக்கமைய விக்கிப்பீடியாவில் காணப்படக்கூடிய கட்டுரைகள் பல துணைப் பிரிவுகளாக பிரிக்கப்பட்டு வகைப்படுத்தப்பட்டுள்ளன. இந்த வகைப்படுத்தலின் கீழ் பல நூற்றுக்கணக்கான கட்டுரைகள் இணைக்கப்பட்டுள்ளன. விக்கியின் மென்பொருள் தொழில்நுட்பம் மிகவும் எளிமையாகவும் இலகுவாகவும் காணப்படுவதினால் தமிழ் விக்கிப்பீடியாவிலுள்ள கட்டுரைகளில் பயணிப்பது இலகு. மேலும் குறித்த விடயம் தொடர்பாக தேடல் மேற்கொள்ள வேண்டுமெனில் தேடல் கட்டத்தில் தமிழில் தட்டச்சு செய்து உரிய தலைப்பைத் தேடலாம்.

 ஒரு தகவல் களஞ்சியம் என்ற வகையில் விக்கிப்பீடியாவில் இணைக்கப்பட்டுள்ள கட்டுரைகள் தரமானவை. ஆதாரபூர்வமானவை. மேலும் உரிய கட்டுரைகள் குறித்து மேலதிக தகவல்களைப் பெற்றுக் கொள்ள வேண்டுமாயின் வெளியிணைப்புகளை தேர்ந்து அதனைச் சொடுக்குவதன் மூலம் விரிவுகளைப் பெற்றுக் கொள்ளலாம். வெளியிணைப்புக்கள் தமிழ் மொழியிலேயே இருக்குமெனக் கருத முடியாது.

 கேள்வி:     நீங்கள் அறிந்த வரையில் இலங்கையில் விக்கிப்பீடியா பாவனை எந்தளவில் உள்ளதெனவும் விக்கிப்பீடியாவில் தமிழ் முஸ்லிம் பயனர்களின் நிலை பற்றியும் குறிப்பிட முடியுமா?

 பதில்: இலங்கையில் விக்கிப்பீடியாவின் பாவனை ஒப்பீட்டளவில் குறைவாகவே காணப்படுகின்றது. இதற்கு பல காரணங்களைக் குறிப்பிடலாம். குறிப்பாக 2007ம் ஆண்டுக்கு முன்பு இலங்கையில் தரவிறக்கம் செய்யப்படும் அலகுகளுக்கேற்ப கட்டணம் செலுத்த வேண்டியிருந்தமையினால் இணையப்பாவனை அதிகரிக்கவில்லை. இந்நிலையில் 2007ம் ஆண்டிளவில் ஸ்ரீலங்கா ரெலிகொம் புரோட்பேன்ட் இணைய இணைப்பு சேவையை இலங்கையில் அறிமுகப்படுத்தி,  தற்போது நாடளாவிய ரீதியில் விரிவுபடுத்தி வருகின்றது. புரோட்பேன்ட் இணைய சேவையில் தரவிறக்கம் செய்யும் அலகு கட்டுப்படுத்தப்படாததினால் நிலையான கட்டணத்தை செலுத்துவதினூடாக இணையப்பாவனையை தொடரலாம். இதனால் இலங்கையில் இணையப் பாவனை கடந்த சில ஆண்டுகளாக குறிப்பிடத்தக்க அளவு வளர்ச்சி கண்டுள்ளது. 2010 நவம்பரில் ஸ்ரீலங்கா ரெலிகொம் அறிக்கையை மேற்கோள் காட்டி இலங்கையின் இணையப் பாவனை 8.1 வீதமாக வளர்ச்சி கண்டுள்ளதாக உலக வங்கியின் அறிக்கை தெரிவிக்கின்றது. அதேநேரம்  வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கும் இச்சேவை விரிவுபடுத்தப்பட்டுள்ளதுடன் தனியார் தொலைதொடர்பு நிறுவனங்களும் போட்டிப் போட்டுக் கொண்டு இணைய இணைப்புகளை பாவனையாளர்களுக்கு வழங்கி வருவதினால் எதிர்வரும் காலங்களில் இலங்கையில் இணையத்தளப் பாவனை வெகுவாக அதிகரிக்கலாம் என எதிர்பார்க்க முடியும். பருமட்டான ஆய்வுகளின்படி இலங்கையில் உயர்கல்வி பெறும் மாணவர்கள் இன்று ஆங்கில விக்கியையே அதிகளவில் பயன்படுத்துகின்றார்கள் என்பதை அறிய முடிகின்றது. ஆங்கில விக்கிப்பீடியாவில் சகல துறைகளையும் சேர்ந்த 3 மில்லியன்களுக்கும் மேற்பட்ட கட்டுரைகள் உள்ளதினால் வேண்டப்படும் தலைப்பில் வேண்டிய கட்டுரைகளை தேர்ந்தெடுக்கப்படக் கூடியதாக இருக்கும். இந்த அடிப்படையில் இன்று பல்கலைக்கழக மாணவர்கள் அதிகளவில் விக்கிப்பீடியாவுடன் தொடர்புகொள்வதை அவதானிக்க முடிகின்றது. இலங்கையில் ஆங்கில விக்கியுடன் ஒப்புநோக்கும்போது தமிழ் விக்கிப்பீடியாவின் பயன்பாடு மிகமிகக் குறைவென்றே குறிப்பிட வேண்டும். அண்மைக்காலமாக வடக்கு கிழக்கு மாகாணங்களிலும் இலங்கையில் சில பல்கலைக்கழகங்களிலும் தமிழ் விக்கிப்பீடியா பயன்பாடு அதிகரித்து வருவதாக தெரிய வருகின்றது.

 கேள்வி:     தமிழ் விக்கிப்பீடியாவை அறிமுகம் செய்ய யாதாவது திட்டங்களை மேற்கொண்டுள்ளீர்களா?

 பதில்: 2009ம் ஆண்டிலிருந்து உலகின் பல பகுதிகளில் தமிழ் விக்கிப்பீடியாவை அறிமுகம் செய்யும் அறிமுகப்பட்டறைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இலங்கையில் முதலாவது தமிழ் விக்கிப்பீடியா அறிமுகப்பட்டறை டிசம்பர் 28 2010ல் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்டது. கிழக்குப் பல்கலைக்கழக உதவிப் பதிவாளரான சஞ்சீவ சிவக்குமார் இவர் விக்கிப்பீடியாவின் நிர்வாகிகளில் ஒருவரும்கூட. இதனை முன்நின்று நடத்தினார். இது தவிர தமிழ் விக்கிப்பீடியா ஸ்தாபகர் மயுரநாதன் யாழ்ப்பாணத்தில் அறிமுக நிகழ்வொன்றை நடத்தியுள்ளார். சஞ்சீவ சிவகுமார் கிழக்கிலங்கையில் மூன்று அறிமுக நிகழ்வுகளை நடத்தினார். இவை தவிர வேறு அறிமுக நிகழ்வுகள் இலங்கையில் நடத்தப்படவில்லை.

 கேள்வி:     மலேசியாவில் தமிழ்விக்கிப்பீடியா அறிமுக நிகழ்வொன்றை நீங்கள் நடத்தியதாக அறிகின்றோம். இலங்கையில் ஏன் இது போன்ற நிகழ்வுகளை தங்களால் நடத்த முடியவில்லை.

 பதில்: உண்மை தான். மலேசிய தமிழ்இலக்கிய மகாநாட்டிற்கு சென்றிருந்த நேரத்தில் ஏற்கனவே திட்டமிட்டபடி தமிழ் விக்கிப்பீடியா அறிமுக நிகழ்வொன்றை மே 22 2011 மலேசியாவில் நடத்தினேன். இந்நிகழ்ச்சியில் வல்லினம் இலக்கிய சஞ்சிகையின் ஆசிரியர் பீடத்தை சேர்ந்த சில அன்பர்களும் செம்பருத்தி சஞ்சிகையின் ஆசிரியர் பீடத்தை சேர்ந்த சில அன்பர்களும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். இந்த ஒன்று கூடலுக்கான ஏற்பாட்டினை வல்லினம் ஆசிரியர் ம. நவீன் ஏற்பாடு செய்திருந்தார். இவ்வறிமுக நிகழ்வு செம்பருத்தி அலுவலகம் இல. 03 ஜலான் யப் அக்சேக் 50300 கோலாலம்பூரில் நடைபெற்றது.

 தமிழ்விக்கிப்பீடியாவில் நான் ஒரு நிர்வாகியல்ல. ஒரு சாதாரண பயனராகவே இதுவரை எழுதி வருகின்றேன். இலங்கையிலும் சில அறிமுகப் பட்டறைகளை நடத்த திட்டமுண்டு எனினும் ஒரு சாதாரண பயனர் என்ற நிலையில் சில இடையூறுகளை சந்திக்க வேண்டி ஏற்பட்டதினால் அவற்றை நடத்த முடியவில்லை. அண்மையில்கூட கண்டி மாநகரில் ஒரு முக்கிய பாடசாலையில் தமிழ்விக்கிப்பீடியா தொடர்பான பயிற்சிப் பட்டறையொன்றை நடத்த ஏற்பாடுகளை செய்திருந்தேன். இச்சந்தர்ப்பத்தில் விக்கிப்பீடியா ஈடுபாடு தொடர்பாக ஆதாரங்களை நிரூபிக்க முடியாமையினால் அத்திட்டத்தை கைவிட வேண்டிய நிலை ஏற்பட்டது. இருப்பினும் நிர்வாகியான சிவக்குமாருடன் இணைந்து சில பட்டறைகளை நடத்த திட்டமிட்டுள்ளேன். கணினி வசதியுள்ள பாடசாலைகள் எம்முடன் தொடர்புகொள்ளும்போது தமிழ்விக்கிப்பீடியாவின் பயன்பாடு தமிழ்விக்கிப்பீடியாவில் எம்மவர்கள் எழுதுவது எவ்வாறு குறித்த பயிற்சிப் பட்டறையொன்றை எம்மால் ஏற்பாடு செய்ய முடியும். இதற்காக வேண்டி எவ்வித கட்டணங்களையும் செலுத்த வேண்டி அவசியமில்லை. நாம் இலவசமாகவே நடத்தித் தருவோம்.

கேள்வி:     தமிழ்விக்கிப்பீடியாவில் காணப்படும் கட்டுரைகள் பெரும்பாலும் இந்திய தமிழ் நடையிலேயே எழுதப்பட்டுள்ளதாக சிலர் குறைகூறுகின்றனர். இது பற்றி தங்களால் என்ன கூற முடியும்?

 பதில்: இக்கருத்தில் உண்மைகள் இல்லாமலில்லை. தமிழ்விக்கிப்பீடியாவை தமிழ்நாட்டிலுள்ள மாணவர்களும் பல்கலைக்கழகங்களும் அதிகமாக பயன்படுத்துவதினால் தமிழ்நாட்டில் வழங்கப்படும் மொழிநடைக்கேற்ப கட்டுரைகள் வடிவமைக்கப்படுகின்றன. அதேநேரம் இலங்கையில் புழக்கத்திலுள்ள மொழிநடையிலும் அதன் கருத்துக்களை நாங்கள் அடைப்புக்குள் சேர்த்து வருகின்றோம். அநேகமான கட்டுரைகள் இவ்வாறு சேர்க்கப்பட்டுள்ளன. மீதிக் கட்டுரைகளிலும் விரைவில் சேர்க்கப்படும். உதாரணமாக விஞ்ஞானம் எனும் பதத்தை அறிவியல் என்று இந்திய நடையில் இருக்கும். அதேபோல இரசாயனம் எனும்போது வேதியல் என்றும் காணப்படும். இது போன்ற சொற்களில் இலங்கையில் பிரயோகத்திலுள்ள சொற்களை அடைப்புக்குள் சேர்க்க நாங்கள் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம்.

கேள்வி:     இலங்கைப் பயனர்கள் தமிழ் விக்கிப்பீடியாவில் இணைவதால் எத்தகைய நன்மைகளைப் பெறுவர் என நீங்கள் கருதுகின்றீர்கள்?

 பதில்: விக்கிப்பீடியா என்பது ஒரு கலைக்களஞ்சியமாகும். விக்கிப்பீடியாவைப் போல ஏனைய இணையத்தளங்கள் தமிழ்மொழி மூலமாக கலைக்களஞ்சியப் பாணியில் அமைந்திருப்பதில்லை. தமிழ் விக்கிப்பீடியாவை நாம் பயன்படுத்தும்போது கல்வி கற்கும் மாணவர்களுக்கும் பொதுவறிவுத் தகவல்களை பெற்றுக் கொள்ள விரும்பும் மாணவர்களுக்கும் தேவைப்படும் தகவல்களை தமிழ்மொழி மூலமாகவே பெற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்புண்டு. அதேபோல பதிவேற்றம் செய்ய விரும்பும் எந்தவொரு தகவலையும் மிக எளிமையான முறையில் பதிவேற்றம் செய்யலாம். ஏனைய இணையத்தளங்களைவிட விக்கிப்பீடியாவில் இதற்கான வாய்ப்புகள் அதிகம். இலங்கையைப் பொறுத்தவரையில் தமிழ் முஸ்லிம் மக்களிடையே வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த எத்தனையோ விடயங்கள் இதுவரை பதிவேற்றம் செய்யப்படாமல் உள்ளன. இது மாத்திரமல்ல கல்வி பொருளாதாரம் கலை கலாசாரம் இலக்கியம் என்றடிப்படையில் பல விடயங்களை எம்மால் பதிவேற்றம் செய்ய முடியும். தமிழ்விக்கிப்பீடியா பக்கத்துக்குச் சென்று எமது பெயரில் புகுபதி செய்துகொண்டு தாம் விரும்பிய ஆக்கங்களை பதிவேற்றம் செய்யலாம். விக்கிப்பீடியா பயனர்கள் உலகளாவிய ரீதியில் இருப்பதினால் எம்மால் பதிவேற்றம் செய்யப்படும் ஆக்கங்கள் உடனுக்குடன் கவனத்திற் கொள்ளப்பட்டு திருத்தங்கள் தேவைப்படின் திருத்தங்கள் செய்யப்படும். இதன் மூலமாக அப்பதிவு ஒரு ஆதாரபூர்வ ஆவணமாக மாற்றம் பெறுகின்றது. அதேபோல சில ஆவணங்களையும் எம்மால் பதிவேற்றம் செய்ய முடியும்.

 கேள்வி:     தமிழ்விக்கிப்பீடியாவில் ஒரு போட்டியொன்று சர்வதேச ரீதியில் நடத்தப்படுவதாக அறிகின்றோம். இது பற்றி சற்று குறிப்பிடுவீர்களா?

பதில்: எழுத்து மட்டும் அறிவல்ல என்ற ஒரு அடிப்படையில் தமிழர்கள் தமிழ்பேசும் மக்களின் வாழ்வியலுடன் சம்பந்தப்பட்ட புகைப்படங்கள் அசைப்படங்கள் வரைபடங்கள் நிலப்படங்கள் ஒலிக்கோப்புகள் நிகழ்பட காணொளிகள் போன்றவற்றினூடாக ஒரு அறிவியலைப் பெறும் நோக்கில் இப்போட்டி நடத்தப்பட்டு வருகின்றது. இப்போட்டியில் கலந்துகொள்ளக்கூடியவர்கள் புகைப்படங்கள்ää அசைப்படங்கள் வரைபடங்கள் நிலப்படங்கள் ஒலிக்கோப்புகள் நிகழ்பட காணொளிகள் போன்றவற்றை விக்கிப்பீடியா காமன்ஸ் தளத்தில் பதிவேற்றுவதன் மூலமாக தமிழ்விக்கிப்பிடியா ஊடகப் போட்டியில் பங்கேற்று வெற்றிபெறுபவர்கள் பணப் பரிசினைப் பெற்றுக்கொள்ளலாம். இப்போட்டி நவம்பர் 15ம் திகதியிலிருந்து 2012 பெப்ரவரி இறுதி வரை நடைபெறவுள்ளது. தமிழ்விக்கிப்பீடியா தளத்திற்குச் சென்றால் தமிழ்விக்கிப்பீடியா முகப்பில் இப்போட்டிற்கான இணைப்பும் விபரங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றினூடாக இப்போட்டியில் பங்கேற்கலாம். குறிப்பாக இலங்கையில் வாழக்கூடிய தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் தமது பாரம்பரியமிக்க வரலாற்றுச் சான்றுகளை பதிவேற்றுவதன் மூலம் அவற்றை ஒரு ஆவணமாகவும் மாற்றிக் கொள்ளக் கூடிய வாய்ப்பு இதன் மூலம் ஏற்படுகின்றது.

கேள்வி:     இலங்கையில் வாழக்கூடிய முஸ்லிம் மக்கள் விக்கிப்பீடியா மூலமாக எத்தகைய பயனைப் பெற்றுள்ளனர் என கருதுகிறீர்கள்?

பதில்: விக்கிப்பீடியா என்பது ஒரு இனத்துக்காகவோ மதத்துக்காகவோ மொழிக்காகவோவென்று உருவாக்கப்பட்டதல்ல. விக்கிப்பீடியாவில் யாரும் பயன் பெறலாம். பிறரையும் பயன்பெறச் செய்யலாம். தங்கள் கேள்விப் பொறுத்து பதில் வழங்குவதாயின் இலங்கையில் முஸ்லிம்கள் 1000 ஆண்டுகளுக்கு மேல் வாழ்வதாக வரலாற்றுச் சான்றுகள் உறுதிப்படுத்துகின்றன. அத்துடன் இலங்கையில் வாழக்கூடிய முஸ்லிம்கள் ஒரு தனிப்பட்ட கலாசாரத்தினைப் பின்பற்றி வாழ்ந்துவருகின்றனர். ஆனால் முஸ்லிம்களை பொறுத்தமட்டில் வரலாற்றுச் சான்றுகள் இதுகாலவரை பெரிதாக ஆவணப்படுத்தப்படவில்லை. எனவே முஸ்லிம்களின் வரலாற்றுச் சான்றுகளை ஆவணப்படுத்தவும் முஸ்லிம்களின் கலை கலாசார பண்பாட்டு மரபு ரீதியான மற்றும் சமய ரீதியான விடயங்களை ஆவணப்படுத்தவும் தமிழ்விக்கிப்பீடியாவையும் ஆங்கில விக்கிப்பீடியாவையும் எம்மால் பயன்படுத்திக் கொள்ள முடியும். இதனை நாங்கள் சிந்திப்பது எதிர்கால சந்ததியினருக்கு நாம் விட்டுச் செல்லும் பதிவுகளாக அமைய இடமுண்டு. 


* http://www.vidivelli.lk/epaper/index.php  விடிவெள்ளி: 2012 ஜனவரி 5 (பக்கம் 7)
* http://thesamnet.co.uk/?p=32186http://www.vidivelli.lk/epaper/index.php  :தேசம்நெற்(லண்டன்)  2012  ஜனவரி 5