Monday 23 January 2012

டாக்டர் ஹிமானா சையத் அவர்களுடன் நேர்காணல் - புன்னியாமீன்

இந்தியாவைச் சேர்ந்த பிரபல இஸ்லாமிய எழுத்தாளரான டாக்டர் ஹிமானா சையத் சனவரி 20ஆம் திகதி 1947ம் ஆண்டில் தமிழ் நாட்டில் பிறந்தவர். கடந்த 50 ஆண்டுகாலமாக இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்துறையின்  வளர்ச்சிக்கு விசாலமான பங்களிப்பினை வழங்கிவருகின்றார்.

படைப்பிலக்கியத் துறையில் இதுவரை 650 க்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ள இவர்  12 சிறுகதைத் தொகுதிகளை வெளியிட்டுள்ளார். மேலும் 10 நாவல்களையும் எழுதியுள்ளார். இவற்றுள் 8 நாவல்கள் நூலுருப் பெற்றுள்ளன. ஒரு மருத்துவர் என்றடிப்படையில் மருத்துவத்துறை சார்ந்தும், குடும்ப உளவியல் சார்ந்தும், இலக்கியம், சமயம், ஆய்வு தொடர்பாகவும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியுள்ளார். இவரின் சில கட்டுரைகள் தொகுக்கப்பட்டு 18 நூல்கள் இதுவரை வெளிவந்துள்ளன. மேலும், ஒரு கவிதைத் தொகுதியையும் இவர் தந்துள்ளார். 1964ம் ஆண்டில் இவரது முதல் கவிதை பிரசுரமானது. முதல் சிறுகதை 1986ம் ஆண்டு வெளிவந்தது.

தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டு கடந்த வாரம் இலங்கை வந்திருந்த டாக்டர் ஹிமானா சையத் அவர்களுடன்,  இலங்கையின் தேசிய வாரப்பத்திரிகையான 'நவமணி' சார்பாக சனவரி 22, 2012 இல்  சார்பாக என்னால் மேற்கொண்ட நேர்காணலை கீழே தந்துள்ளேன்.

கேள்வி: டாக்டர் அவர்களே, இந்தியா தமிழ் நாட்டில் பிறந்த நீங்கள் இலங்கை இஸ்லாமிய எழுத்தாளர்களுடன் நெருக்கமான உறவினை வைத்துள்ளீர்கள். இது வரை 5 தடவைகள் இலங்கைக்கு வந்ததாகவும் அறிகின்றேன். இந்நிலையில் இலங்கை இஸ்லாமிய எழுத்தாளர்கள் பற்றி தாங்கள் எத்தகைய கருத்தினைக் கொண்டுள்ளீர்கள்? இது பற்றி சற்று குறிப்பிட முடியுமா?

பதில்: இலங்கை இஸ்லாமிய எழுத்தாளர்களை நான் மிகவும் நேசிக்கின்றேன். தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு இவர்களின் பங்களிப்பு விசாலமானது. இலங்கையின் முதலாவது நாவலை 19ம் நூற்றாண்டின் இறுதியில் தந்தவர் அறிஞர் சித்திலெவ்வை. அந்த காலம் முதல் இன்றுவரை இலங்கை இஸ்லாமிய எழுத்தாளர்கள் இலக்கியத்துறையின் பல்வேறுபட்ட சாதனைகளை நிகழ்த்தி வருகின்றார்கள். இதனை நான் பாராட்டுகின்றேன்.

அறிஞர் சித்திலெவ்வை ஒரு வழக்கறிஞர். அவருடைய தந்தையும் ஒரு வழக்கறிஞர் என கவிஞர் ஏ. இக்பால் பதிவு செய்துள்ளார். கற்ற சூழ்நிலையில் வாழ்ந்த அறிஞர் சித்திலெவ்வை சமூகம் பற்றியும், ஆத்மீகம் பற்றியும் பல்வேறு ஆக்கங்களைத் தந்துள்ளார். அதேநேரத்தில் இலக்கியம் சார்ந்து நோக்குமிடத்தில் அவரின் 'அசன்பே சரிதை' இலங்கைத் தமிழ் இலக்கியத்தில் முதல் நாவல் என்ற பதிவினைப் பெற்றுள்ளது. சித்திலெவ்வை அவர்கள் ஆத்மீக சிந்தனைகளை எந்த அழுத்தத்துடன் எழுதினாரோ அதே அழுத்தத்துடன் இலக்கியத்திலும் ஈடுபட்டுள்ளார். இதே காலகட்டத்தில் மாப்பிள்ளை லெவ்வை ஆலிம் அவர்களினால் தாமரைப் பட்டிணம் எனும் நூலும் எழுதப்பட்டுள்ளது. மாப்பிள்ளை லெவ்வை ஆலிம் தமிழ்நாடு கீழைக்கரையைச் சேர்ந்தவராக இருந்தாலும் இலங்கையுடன் வைத்திருந்த நெருக்கமான உறவை வைத்து இலங்கையிலிருந்தே இந்நூலை எழுதியுள்ளதாக அறிய முடிகின்றது.

இங்கு அவதானிக்க வேண்டிய ஒரு விடயம். இருவரும் ஆத்மீக சிந்தனைவாதிகள். ஆத்மீக சிந்தனைவாதிகளாக இருந்துகொண்டே இவர்கள் இலக்கியம் படைத்துள்ளார்கள். இந்த அடிப்படையில் நோக்கும்போது தமிழ் இலக்கியத்திற்கு அடிப்படையை வழங்கியவர்கள் ஆத்மீகத் தளத்திலிருந்தே அதனை மேற்கொண்டுள்ளார்கள். இந்த நிலை இலங்கையிலிருந்தே வேரூன்றியுள்ளது. இதனால் இலங்கையின் இலக்கியங்களையும் இலக்கியவாதிகளையும் நான் முழுமையாக நேசிக்கின்றேன். இதனை எனது ஆய்வுக்கட்டுரைகளில் நான் பல தடவைகள் எடுத்துரைத்துள்ளேன். இவற்றிற்கு யாரும் இதுவரை மறுப்பு தெரிவித்ததாக தெரியவில்லை.

கேள்வி: இலங்கை இஸ்லாமிய தமிழ் இலக்கியம் தொடர்பாக தங்கள் கருத்துக்கு நாங்கள் நன்றி கூறுகின்றோம். இருப்பினும் இவ்விடத்தில் இன்னுமொரு விடயத்தையும் அறிந்துகொள்ள ஆசைப்படுகின்றேன். அதாவது பொதுப்படையாகக் காணக்கூடிய ஒரு நிலை தமிழக இஸ்லாமிய எழுத்தாளர்களுள் பலர் இலங்கை இஸ்லாமிய எழுத்தாளர்கள் பற்றி முழுமையான அபிப்பிராயமொன்றை கொண்டிராமையை அவதானிக்க முடிகின்றது. உதாரணமாக அண்மையில் காயல்பட்டிணத்தில் நடைபெற்ற இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டில் நான் கலந்துகொண்ட போது தமிழகத்தில் சில முக்கிய பிரமுகர்கள் இலங்கையில் இத்தனை முஸ்லிம் எழுத்தாளர்கள் இருக்கின்றார்களா? என்று ஆச்சரியத்துடன் என்னிடம் தனிப்பட்ட முறையில் கேட்டனர். இதிலிருந்து இலங்கை முஸ்லிம் எழுத்தாளர்களில் குறிப்பிட்ட சிலரை தவிர ஏனையவர்களைப் பற்றி தமிழக எழுத்தாளர்கள் அறிந்திருக்கவில்லை என்று தான் எண்ணத் தோன்றுகின்றது. இது பற்றி என்ன கூற விரும்புகின்றீர்கள்?

பதில்: தங்களது இக்கூற்றினை நான் மறுக்கவில்லை. இவ்வாறான நிலைக்கு எமது பல எழுத்தாளர்களிடம்  தேடுதல் முயற்சிகள் இல்லாமையே மூல காரணம். மேலும் எமது எழுத்தாளர்கள் பலரிடம் நான் தான் எழுதுகின்றேன். நான் தான் சிறந்த எழுத்தாளன் என்ற மனோநிலை அல்லது மமதையும் காணப்படுகின்றது. இவர்கள் நமது முன்னோர்கள் இஸ்லாமிய தமிழ் இலக்கியத்திற்கு வழங்கிய முக்கியத்துவத்தினை தெரியாமலிருப்பதும், சமகாலத்தில் உள்ள எழுத்தாளர்கள் பற்றி கூட தெரிந்து கொள்ளாமலிருப்பதால்  இவ்வாறான நிலை தோன்றுவதற்கு வழிகோலியுள்ளது எனலாம். ஓர் இலக்கியவாதி தன்னை மாத்திரம் மையப்படுத்தாது ஏனையவர்கள் பற்றியும் தேடல்கள் மேற்கொள்ளும்பொழுது மேற்குறிப்பிட்ட நிலை தோன்ற இடமில்லை.

தனிப்பட்ட முறையில் என்னைப்பற்றி கூறுவதாயின் எந்த சந்தர்ப்பத்திலும் படைப்பிலக்கியத்தில் நான் ஒரு சிறந்த எழுத்தாளன் என்று நினைத்ததில்லை. ஏனையவர்கள் பற்றியும் எமது முன்னோர்கள் பற்றியும் நான் தேடுவதாலேயே இலங்கை எழுத்தாளர்களையும் நான் மதிக்கின்றேன்.

இதுவொரு புறமிருக்க இலங்கையில் குறிப்பிட்ட சில எழுத்தாளர்களை தவிர ஏனைய முஸ்லிம் எழுத்தாளர்கள் பற்றி போதிய விபரங்கள் தமிழக முஸ்லிம் எழுத்தாளர்களுக்கு கிடைக்காமலிருக்கின்றன. தமிழக முஸ்லிம் ஊடகங்கள் கூட இதனை இனங்கண்டு கொள்வதில்லை. தமிழ் நாட்டுடன் தொடர்பான குறிப்பிட்ட சில எழுத்தாளர்களை மாத்திரமே அறிந்து வைத்திருக்கின்றமையும் மேற்குறிப்பிட்ட நிலைக்கு மற்றுமொரு காரணமாக இருக்கலாம்.

கேள்வி: உண்மைதான் டாக்டர். இலங்கை இஸ்லாமிய தமிழ் எழுத்தாளர்கள், பற்றிய விபரங்கள் முறைப்படி தொகுக்கப்படாமல் இருப்பதினால் ஒரு ஆவண வடிவில் தமிழ்நாட்டில் வாழக்கூடிய இஸ்லாமிய தமிழ் எழுத்தாளர்களுக்கும் தெரிந்துகொள்ள முடியாமலிருக்கின்றது. அதேநேரம், தமிழ்நாட்டில் இஸ்லாமிய தமிழ் இலக்கியவாதிகள் பற்றிய ஆவணப்படுத்தல்கள் மேற்கொள்ளப்படுகின்றனவா?

பதில்: இலங்கையிலோ தமிழகத்திலோ இஸ்லாமிய தமிழ் இலக்கியவாதிகள் பற்றி ஆவணப்படுத்தப்படுதல் காலத்தின் இன்றியமையாத தேவையாகும். நான் அறிந்தவரை இலங்கையில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வர் அவர்களது காலத்தில் இலங்கை முஸ்லிம் எழுத்தாளர்கள், கலைஞர்கள் வாழ்வோரை வாழ்த்துவோம் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் கௌரவப்படுத்தப்பட்டதுடன், அவர்கள் பற்றிய குறிப்புகளும் ஆவணமாக்கப்பட்டுள்ளன. அதன் பிறகு இத்தகைய நடவடிக்கைகளில் தாங்கள் ஈடுபட்டதாக அறிய முடிகின்றது. ஆனால், இவை முழுமையடையவில்லை. இப்பதிவுகள் தமிழ்நாட்டு இஸ்லாமிய ஊடகங்களுக்கோ, தமிழ் நாட்டு எழுத்தாளர்களுக்கோ கிடைக்கவில்லை. தேடலில் ஈடுபட்டுள்ள என்னைப் போன்ற சிலராலேயே ஓரளவேனும் விபரங்களை பெற்றுக்கொள்ள முடிகின்றது.

தமிழகத்திலும் இதே நிலையைத் தான் காண்கின்றோம். தமிழகத்தில் வாழக்கூடிய இஸ்லாமிய தமிழ் எழுத்தாளர்கள் பற்றி முழுமையான விபரத்திரட்டுக்களுக்கான எத்தகைய ஆக்கபூர்வமான நடவடிக்கைகளும் இதுவரை மேற்கொள்ளப்பட்டதாக நான் அறியவில்லை. தமிழகத்தில் பல இஸ்லாமிய தமிழ் ஆராய்ச்சி மாநாடுகள் நடைபெற்றன. இவைகளில் கூட  தமிழகத்தில் வாழும் இஸ்லாமிய எழுத்தாளர்கள் பற்றி சரியானதும் முழுமையானதுமான தகவல்கள் வெளிவரவில்லை. சில மாநாடுகளில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் கூட முழுமையானதாக இருக்கவில்லை. இது மிகவும் வருந்தத்தக்க ஒரு விடயமே. எம்மவர்கள் பற்றி முறையான பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு ஆவணப்படுத்தப்படாத நிலையில் எதிர்கால சந்ததியினருக்கு இலங்கை, இந்திய இஸ்லாமிய தமிழ் எழுத்தாளர்களின் பணிகள் பற்றி தெரியாமல் போய்விடக் கூடிய வாய்ப்புகள் கணிசமாக உள்ளன என்பதை மறுப்பதற்கியலாது.

தமிழ்நாட்டில் மணிமேகலைப் பிரசுரத்தினால் லேனா தமிழ்வாணன் மூலம் பிரசித்திபெற்ற பிரமுகர்களின் முகவரிகள் எனும் நூல் தொடர்ச்சியாக வெளியிடப்படுகின்றது. இது தமிழக எழுத்தாளர்களையும் இனங்கண்டுகொள்ளக்கூடிய ஒரு ஆவணமாக உள்ளது. விரிவான ஆய்வாக இல்லாவிட்டாலும்கூட முகவரிகளையாவது முறையாக தெரிந்துகொள்ளலாம். இது தவிர இஸ்லாமிய தமிழ் எழுத்தாளர்கள் பற்றி விரிவான ஆய்வுகள் இடம்பெற்றதாக என்னால் குறிப்பிட முடியாது.

கேள்வி: இலங்கை இந்திய தமிழ் இஸ்லாமிய எழுத்தாளர்களிடையே இஸ்லாமிய இலக்கிய மாநாடுகள் மூலமாக ஏற்படக்கூடிய உறவு ஒரு தற்காலிக உறவாகவே காணப்படுகின்றது. மாறாக இந்திய இலங்கை தமிழ் இஸ்லாமிய எழுத்தாளர்களிடையே ஒரு நிலையானதும் யதார்த்தபூர்வமான உறவினை எந்த வகையில் ஏற்படுத்தலாம் என தாங்கள் நினைக்கின்றீர்கள்?

பதில்: நல்ல கேள்வி. இலக்கிய மாநாடுகள் என்றுகூறும்போது இலங்கையிலோ தமிழ்நாட்டிலோ அங்கங்குள்ள மாநாட்டு அமைப்பாளர்களுடன் தொடர்புள்ளவர்கள் மாத்திரமே முக்கியத்துவப்படுத்தப்படுகின்றனர். இது ஒரு குறைபாடாகவே உள்ளது. இலங்கையிலே அல்லது தமிழ்நாட்டிலோ எத்தனையோ தரம் வாய்ந்த இஸ்லாமிய தமிழ் எழுத்தாளர்கள் இலைமறை காய்களாக இருக்கின்றார்கள். இவர்களிடையே ஒரு யதார்த்தபூர்வமான உறவை ஏற்படுத்துவதென்பது இலகுவான காரியமல்ல. குறிப்பாக இலங்கை எழுத்தாளர்கள் பற்றி தமிழகத்திலும், தமிழக எழுத்தாளர்கள் பற்றி இலங்கையிலும் அறிமுகம் செய்யும் நிகழ்ச்சித் திட்டங்கள், ஆய்வுகள் மேற்கொள்ளப்படல் வேண்டும்.

நடுநிலைமையான ஆய்வுகளை மேற்கொள்ளப்படும்போது இத்தகைய உறவுகளை வலுப்படுத்தக்கூடியதாக இருக்கலாம். மேலும் இலங்கையிலுள்ள இஸ்லாமிய ஊடகங்களில் தமிழ் நாட்டு இஸ்லாமிய எழுத்தாளர்கள் பற்றியும் அதேபோல தமிழ் நாட்டிலுள்ள இஸ்லாமிய ஊடகங்களில் இலங்கை இஸ்லாமிய எழுத்தாளர்கள் பற்றியும் அறிமுகப்படுத்துவதுடன் இவர்களுடனான தொடர்பு முகவரிகளையும் வெளியிட வேண்டும்.

அவ்வாறாயின் இருதரப்பு எழுத்தாளர்கள் மத்தியிலும் ஓரளவிற்காவது தொடர்புகள் ஏற்பட்டு கருத்துப் பரிமாற்றங்கள் வளர்ச்சியடையலாம். இத்தகைய நிலை இலங்கை,இந்திய தமிழ் இஸ்லாமிய எழுத்தாளர்களிடை பாலமாக அமையலாம் என்பது எனது அபிப்பிராயம்.

இருப்பினும் இலங்கையிலும் சரி தமிழ்நாட்டிலும் சரி இதற்கான ஊடக வசதிகளின்மை பெரும் குறைபாடாகவே காணப்படுகின்றது. தமிழ்நாட்டை எடுத்துக் கொள்ளும்போது நிரந்தரமாக வெளிவரும் இஸ்லாமிய இதழ்கள் வெகு குறைவாகவே உள்ளன. இலங்கையிலும் இதே நிலையை அவதானிக்கின்றேன்.

கேள்வி: டாக்டர் அவர்களே! இப்படிப்பட்ட சூழ்நிலையில் நீங்கள் ஒரு படைப்பிலக்கியவாதியாக மாத்திரமல்லாது தமிழ் இலக்கிய ஆய்வுத்துறைகளிலும் கூடிய பங்களிப்பினை வழங்கி வருபவர் என்ற அடிப்படையில் மேற்குறிப்பிட்ட உறவு நிலையை ஏற்படுத்த தங்களால் எத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியுமெனக் கருதுகின்றீர்கள்?

பதில்: இலங்கையிலும் சரி தமிழகத்திலும் சரி இஸ்லாமிய தமிழ் எழுத்தாளர்களின் முழுமையான விபரங்களைத் திரட்டுவதென்பது மிகவும் கடினமானதொரு விடயம். இத்தகைய பணியினை மேற்கொள்வதற்கு தியாக மனப்பான்மை தேவை. இக்காலகட்டத்தில் தொலைத்தொடர்புத் துறையில் பாரிய முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இணையத்தளங்கள்ää வலைப்பூக்களின் வருகை வியக்கத்தகு முன்னேற்றங்களைக் கண்டுள்ளது. விபரங்களைத் திரட்டுவதற்கு ஊக்க மிகு இளையதலைமுறையினரின் சேவைகளைப் பெறுவதன் மூலம் ஓரளவேனும் விபரங்களைத் திரட்டி இணைப்புக்குரிய ஒரு வழிமுறையை மேற்கொள்ளலாம் என கருதுகின்றேன். உதாரணமாக எனது பேஸ் புக்கில் 2500க்கும் மேற்பட்ட இளையதலைமுறையினர் இணைந்துள்ளனர். இதனையொரு வேண்டுகோளாக விடுப்பதன் மூலம் இவர்களது சேவையை பெற முடியுமென எதிர்பார்க்கின்றேன். அதேநேரம், நவீன இலத்திரனியல் ஊடகங்களில் இளையதலைமுறையினரின் தொடர்புபோல மூத்த தலைமுறையினரின் தொடர்புகளை கூடியளவில் பெறமுடியாதுள்ளது. நிச்சயமாக இது விடயத்தில் நவீன தொலைத்தொடர்பு ஊடகங்களையே பயன்படுத்துவது கூடிய பலன் தருமென எதிர்பார்க்கின்றேன். இதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பேன்.

கேள்வி: டாக்டர் அவர்களே! நீங்கள் அறிந்தவரை  இலங்கையில் வாழக்கூடிய முஸ்லிம் பெண் எழுத்தாளர்கள் பற்றி என்ன கூற விரும்புகின்றீர்கள்?

பதில்: உண்மையிலேயே நான் மகிழ்ச்சியடைகின்றேன். இலங்கையில் வாழக்கூடிய முஸ்லிம் பெண் எழுத்தாளர்கள் மிகவும் தரமான முறையில் தமது எண்ணக்கிடக்கைகளை இலக்கியங்களாக வடித்து வெளியிடுகின்றனர். கவிதைஇ சிறுகதை போன்ற துறைகளில் கூடிய ஆர்வம் காட்டும் அதேநேரம் நாவல் இலக்கியத்துறையிலும் ஆர்வம்  காட்டி வருவது வரவேற்கத்தக்கதொரு விடயமாகும். தமிழ்நாட்டிலும் பல தரமான பெண் எழுத்தாளர்கள் எழுதிவருகின்றார்கள். ஒப்பீட்டளவில் கூறுவதாயின் இலங்கையில் பங்களிப்புச் செய்யும் பெண் எழுத்தாளர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் எழுதக்கூடிய முஸ்லிம் பெண் எழுத்தாளர்களைவிடவும் அதிகமானதாகும். அதேபோலதான் ஆண் எழுத்தாளர்களின் எண்ணிக்கையையும் குறிப்பிட முடியும்.  

கேள்வி: இறுதியாக நான் தங்களிடம் கேட்க விரும்புவது அண்மைக்காலமாக இலத்திரனியல் ஊடகங்கள் கூடுதலான தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. இலத்திரனியல் ஊடகங்களின் வளர்ச்சி அச்சு ஊடகங்களை பாதிக்குமென தாங்கள் கருதுகின்றீர்களா?

பதில்: உண்மைதான். 21ம் நூற்றாண்டில் இலத்திரனியல் ஊடகங்களின் தாக்கம் வெகுவாக அதிகரித்துவிட்டது. இன்று தேசிய பத்திரிகைகள் கூட தமது பத்திரிகைச் செய்திகளை இணையத்தளங்களில் வெளியிடுவதுடன்இ ஈ பத்திரிகைகளையும் வெளியிடுகின்றன. அது மட்டுமல்ல பல இணையத்தளங்கள் தமிழ் நூல்களை முழுமையாகவே வெளியிடுகின்றன. இலங்கையில்கூட நூலகம் எனும் இணையத்தளம் 8000க்கும் மேற்பட்ட நூல்களை பிடிஎஃப் வடிவில் முழுமையாக பதிவேற்றியுள்ளதாக அறிகின்றேன். இணையத்தளப் பாவனையாளர்களால் இவற்றை பார்வையிடுவது இலகுவானது. ஒரு பெரிய நூலகமே இணையத்துக்குள் சுருங்கிவிடுகின்றது.

ஆனாலும், எவ்வளவு தூரத்திற்கு இத்தகைய நவீனத்துவ முறைகள் வளர்ச்சியடைந்தாலும்கூட அச்சு ஊடகங்கள் வளர்ந்துகொண்டே இருக்குமே தவிர நிச்சயமாக அவை வீழ்ந்துவிடமாட்டாது. இதனை மூன்றாம் உலக நாடுகளை விட இன்றைய மேற்குலக நாடுகளில் அனுபவங்களுடன் ஒப்புநோக்கும் போது அவதானிக்கின்றோம். எனவே பத்திரிகைகள், நூல் வெளியீடுகள் என்பன காலத்தால் நிலைக்குமே தவிர அவை நிச்சயமாக அழிவை நோக்கிச் செல்லாது என்பதை என்னால் உறுதியாகத் தெரிவிக்க முடியும்

No comments:

Post a Comment