Saturday, 31 March 2012

ஏப்ரல் 1 -முட்டாள்களான அறிவாளிகள் தினம் – புன்னியாமீன்


சர்வதேச ரீதியில் அன்னையர் தினம், தந்தையர் தினம், காதலர் தினம், மகளிர் தினம், தொழிளாலர்கள் தினம் என்று மனிதர்களுக்குப் பலவிதமான தினங்கள் இருப்பது போலவே முட்டாள்களுக்கும் என்று ஒரு தினம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் ஏனைய தினங்களுக்கு உரிமை கொண்டாடுவதைப் போல இத்தினத்தில் தமக்கும் பங்கிருப்பதாகச் சொல்லிக் கொள்ள எவரும் முன் வருவதில்லை. அதே நேரம் தம்மை அடையாளப்படுத்திக் கொள்ளாமல் அடுத்தவரை முட்டாளாக்க முனையும் முட்டாள்களான அறிவாளிகளின் தினம் என்றாலும் பிழையாகாது. அதுதான் இந்த ஏப்ரல் முதல் தேதியாகும்.

விஷயங்களை அறிந்து கொள்பவன் அறிஞன் ஆகின்றான் என்பார்கள். அதேபோல் ஒரு முட்டாள் ‘தான் ஒரு முட்டாள்’ என்பதை அறிந்து கொள்ளும்போது அவனும் ஒரு ‘அறிஞனாக’ வாய்ப்புக் கிட்டுகிறதா என்று எமக்கும் முட்டாள்தனமாக சிந்திக்க தோன்றுகிறது.

“The first of April is the day we remember what we are the other 364 days of the year ” – Mark Twain என்று நம்மைப்பற்றி முன்பே உரத்துச் சொல்லிவிட்டார். கற்றாரைக் கற்றாரே காமுறுவது போல் ஒரு முட்டாள் அவனை விடப் பெரிய முட்டாள் மெச்சுவான் என்றும் யாரோ ஒருவரும் கூறியுள்ளதாகவும் அறிகிறோம்.

“முட்டாள்கள் தினம்” ஏப்ரல் 1ம் தேதி உலகமெல்லாம் முட்டாள்களாக்கும் முயற்சி நடைபெறுகிற ஒரு முட்டாள் நாள். இது எவ்வாறு ஆரம்பமானது என்ற வினாவும் எம்முள் எழுகின்றது.

புராதன வரலாற்றில் ரோமானிய நாட்காட்டியின்படி ஏப்ரல் 1ம்தேதி தான் வசந்தம் ஆரம்பிக்கும் பொன்னாளாகும். புராதன வரலாற்றில் புத்தாண்டுக் கொண்டாட்டங்களை மிகுந்த உற்சாகத்தோடு கொண்டாடியதற்கான வரலாற்றுக் குறிப்புகள் காணப்படுகின்றன. ஹார்வி என்னும் வரலாற்றாய்வாளர் தனது குறிப்பில், ” பிரான்சு தேசத்தின் அரசன் ஒன்பதாம் சார்லஸ் காலத்தில் மார்ச் மாதம் 25ம் தேதியிலிருந்து ஒருவார கால புத்தாண்டுக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டதாக குறிப்பிடுகிறார். திருவிழாவைப்போல் நடைபெறும் இந்தக் கொண்டாட்டங்களின்போது ஒருவருக்கொருவர் பரிசுப் பொருள்களையும், அன்பளிப்புகளையும் வழங்கி தங்கள் அன்பை வெளிப்படுத்திக் கொண்டதாக குறிப்பிடுகிறார்.

இந்த ஒருவாரக் கொண்டாட்டத்தின் இறுதி நாளான ஏப்ரல் ஒன்றாம் தேதி பெரு விருந்துடன் புத்தாண்டு விழா நிறைவெய்தியதாகக் குறிப்பிட்டுள்ளார்.

1562ம் ஆண்டளவில் அப்போதைய போப்பாண்டவரான 13வது கிரகரி அவர்கள் பழைய ஜூலியன் ஆண்டுக் கணிப்பு முறையை ஒதுக்கி புதிய கிரேகோரியன் ஆண்டுக் கணிப்பு முறையை நடைமுறைப்படுத்தினார். இதன்படி ஜனவரி 1 அன்றுதான் புத்தாண்டு ஆரம்பமாகின்றது. 1562ம் ஆண்டில் போப் கிரகோரி புதிய ஆண்டுத் துவக்கத்தை நடைமுறைப்படுத்தும்படி அறிவித்தார். ஆண்டுத் துவக்க நாளாக ஜனவரி 1ம் தேதியை அறிமுகம் செய்துவைத்தார்.

இனி மேல் பிரான்ஸ் தேசம் முழுமையும் இந்த நாட்காட்டிதான் என்று ஊர்தோறும் அறிவிக்கப்பட்டது. இந்த மாற்றத்தை ஏற்றுக் கொள்ளாதவர்கள் அல்லது போப்பின் அறிவிப்பை நம்பாதவர்கள் ஏப்ரல் 1ம் தேதியையே புத்தாண்டுப் பிறப்பாகக் கொண்டாடினர்.

இந்தப் “புதிய” புத்தாண்டு தினத்தை ஐரோப்பிய தேசங்களும், அவற்றின் மக்களும் உடனேயே ஏற்றுக் கொள்ளவில்லை. அதற்குச் சில காலம் எடுத்தது. அதற்குக் காரணங்கள் பல உண்டு. அன்றைய கால கட்டத்தில் இது போன்ற செய்திகள் அல்லது மாற்றங்கள் சகலரையும் சென்றடைவதற்குரிய தகுந்த சாதனங்கள் இருக்கவில்லை. அத்தோடு பழைய வழக்கத்தைப் புறம் தள்ளி புதிய வழக்கத்தை ஏற்றுக் கொள்வதையும் இம்மக்கள் மறுத்திருக்கலாம். ஆகவே இம் மக்கள் தொடர்ந்தும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதியையே தமது புத்தாண்டுத் தினமாகக் கொண்டாடி வந்தார்கள்.

எவ்வாராயினும் பிரான்ஸ் 1852ம் ஆண்டிலும் ஸ்காட்லாந்து 1660ம் ஆண்டிலும், ஜெர்மனி, டென்மார்க், நார்வே போன்ற நாடுகள் 1700ம் ஆண்டிலும், இங்கிலாந்து 1752ம் ஆண்டிலும், இந்தப் புதிய புத்தாண்டு தினத்தை உத்தியோகபூர்வமாக ஏற்றுக் கொண்டன.

புதிய வழக்கத்தை ஏற்றுக் கொண்டு ஜனவரி முதலாம் திகதியை புத்தாண்டாகக் கொண்டாடத் தொடங்கிய மக்கள் இந்த பழைய வழக்கத்தைப் பேணி ஏப்ரல் மாதம் முதல் தேதியில் புத்தாண்டைக் கொண்டாடுபவர்களை ஏப்ரல் முட்டாள்கள் என்று இவர்கள் அழைத்தார்கள். இதிலிருந்து ஏப்ரல் முட்டாள்கள் தினம் ஆரம்பமாயிற்று என்பது பலராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது.

என்றாலும் 1582ம் ஆண்டுக்கு முன்னரேயே 1508ம் ஆண்டில் பிரான்ஸ் தேசத்தில் முட்டாள்கள் தினம் கொண்டாடப்பட்டு வந்துள்ளது என்பதற்கு சான்றுகள் உண்டு. அதேபோல் டச்சு மொழியிலும் 1539ம் ஆண்டுக் காலப் பகுதியில் முட்டாள்கள் தினம் பற்றிச் சொல்லப்பட்டிருப்பதை அறியக் கூடியதாக உள்ளது.

1466ம் ஆண்டு மன்னன் பிலிப்பை அவரது அரச சபை விகடகவி, பந்தயம் ஒன்றில் வென்று மன்னனையே முட்டாளாக்கிய நாள் ஏப்ரல் முதலாம் தினம் என்றும் கூறப்படுகிறது.

ரோமாபுரியில் கிறிஸ்தவர்கள் அதிகாரத்திற்கு வந்தபோது, நடைமுறைகளை மாற்றினார்கள். தற்போதுள்ள ஈஸ்ட்டர் பண்டிகையினையும் மாற்றி அறிவித்தார்கள். பழமையான கொண்டாட்டங்களை மாற்றியதோடு அவற்றில் ஒரு சிலவற்றை வேடிக்கை, வினோத கொண்டாட்டங்களுக்குரிய நாளாக மாற்றினர்.
இந்த மாற்றங்களில் நம்பிக்கை இல்லாமலிருந்த இவர்களை கேலியும் கிண்டலும் செய்து விளையாட்டாக முட்டாளாக்கி ஏமாற்றும் போக்கில் ஈடுபட்டனர்.

இதுவே நாம் இன்றைக்கு வேடிக்கையாய் முட்டாள்களாக்கி மகிழ்கிற நாளாக தொடர்ந்திடுகிறது எனலாம். ஜனவரி மாதம் 1ம் தேதியை புத்தாண்டாக ஏற்றுக்கொள்ள மறுத்தவர்கள் அல்லது மறந்தவர்களுக்கு முட்டாள்தனமான பரிசுகளை அனுப்பினர். பெரிய பரிசுக்கூடைகள் போன்று வடிவமைத்து உள்ளே குதிரை முடி, பழைய குப்பை என்று நிரப்பிக் கொடுத்து ஏமாற்றுதல் போன்ற ஏமாற்று வேலைகளைச் செய்து ஏமாற வைத்தனர்.

இதை நம்பும்படியான ஆனால் நகைக்கும்படியான செயலாக செய்து மகிழ்ந்தனர். நெப்போலியன் 1 ஆஸ்திரியாவைச் சேர்ந்த மேரி லூயிஸை 1810ல் திருமணம் செய்துகொண்டார். அந்த மாதம், நாள் ஏப்ரல் 1 என்பதால் மணமகளை கேலி செய்து இருக்கின்றனர். நெப்போலியன் உண்மையாகத் திருமணம் செய்யவில்லை. உன்னை முட்டாளாக்கவே திருமணம் செய்திருக்கிறார் என்று எள்ளி நகையாடியதாகக் கூறப்படுகிறது.

ஏப்ரல் முதல் நாளை, “Poission d’avril ” என்று அழைத்துள்ளனர். இத்தகைய கேலிக்கூத்துக்கள் சுற்றிச் சுழன்று பிரான்சிலிருந்து இங்கிலாந்துக்கும் அங்கிருந்து அமெரிக்காவுக்கும் ஏப்ரல் ‘பூல் விரிந்து பரவி இருக்கிறது. இது குறித்து சிகாகோவில் உள்ள இலினாய்ஸ் பல்கலைக்கழக வரலாற்றுப் பேராசிரியர் ஸ்டீவன் பேன்னிங் ஐரோப்பாவில் எப்படி எல்லாம் நடந்தது என்று விலாவாரியாகக் குறிப்பிட்டுள்ளார்.

கிரகோரியன் காலண்டரை ஏற்றுக்கொண்ட முதல் நாடாக பிரான்சு இருந்தாலும் இத்தகைய கேளிக்கைகளின் ஆணிவேரைக் கண்டுபிடிக்கப் போதுமான ஆதாரக் குறிப்புகள் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்காட்லாந்தில் April Fool’s Dayயை April Gawk என்று கடைப்பிடித்ததாக பேராசிரியர் ஸ்டீவன் தெரிவித்துள்ளார். அதாவது ஏப்ரல் 1ம் தேதி வினோதமாக உடையுடுத்தி ரெண்டுங்கெட்டானாக நடந்து கொண்டு ஸ்காட்டிஷ் மக்கள் அந்த நாளை நகர்த்தியதாக மேலும் தெரிவிக்கிறார்.

ஒரு பொய்யை உண்மை என்று நம்ப வைப்பது, ஒரு கடிதத்தில் அவசரம் என்று மேலே எழுதி உள்ளே முட்டாள், “இன்று ஏப்ரல் ·பூல் தினம் தெரியுமா? அது வேறு யாருமில்லை நீதான்”, இப்படி எழுதி அனுப்புவதை வழக்கமாகச் செய்திருக்கின்றனர்.

பிரெஞ்சுக் குழந்தைகள்கூட காகிதத்தில் மீன் போன்று செய்து தனது சினேகிதர்களின் முதுகில் ஒட்டி அனுப்பிக் கேலி செய்திருக்கின்றனர். இப்படி முதுகில் மீனோடு திரிகிற குழந்தைகளைப் பார்க்கும் குழந்தைகள் “ஏப்ரல் மீன்” என்று அழைத்துக் கேலி செய்திருந்திருக்கின்றனர்.

1986ல் ப்ரெட் வால்டன் இயக்கிய, “ஏப்ரல் பூல்ஸ் டே” திரைப்படம் மிகப் பிரபலமானது. டெபோரா போர்மேன், ஜேய் பேக்கர், டெபோரா குட்ரிச் நடித்திருந்தனர். பாரமவுண்ட் பிக்சர்ஸ் நிறுவனத்தார் பிரம்மாண்டமாக தயாரித்திருந்த இப்படம் ஒளி நாடாக்களிலும் வீர நடை போட்டு வந்ததை குறிப்பாகச் சொல்லலாம்..

ஏப்ரல் முதல் தேதி பல வேடிக்கைகள் மட்டுமல்லாது பல வினைகளும் வந்துள்ளன. அத்தோடு பல மூட நம்பிக்கைகளையும் இந்த ஏப்ரல் முதல் தேதி மக்களுக்கு வழங்கியிருக்கின்றது.

அல்லது மக்களே தங்களுக்கு வழங்கி இருக்கிறார்கள் என்றும் சொல்லலாம்!.

ஓர் ஆலோசனை

மூன்றாம் உலக நாடுகளில் ஐந்து அல்லது ஆறு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் தேர்தல் நாளை முட்டாள் தினமாக பிரகடனப்படுத்தினால் எப்படி இருக்கும்?  .

உண்மையான ஜனநாயக நாள் அல்லவா அது.?

Friday, 30 March 2012

இன்றிரவு 8.30க்கு விளக்குகளை அணையுங்கள் - புன்னியாமீன்உலக இயற்கை நிதியத்தின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதத்தின் கடைசி சனிக்கிழமை தினத்தன்று அனுஸ்டிக்கப்படும் புவி நேரம் என்ற நிகழ்வு இன்று சனிக்கிழமை நடைபெறுகிறது.

இன்றைய தினம் ஒரு மணி நேரத்திற்கு விளக்குகள் அனைத்தும் அணைக்கப்பட வேண்டும் என்பது இந்நிகழ்வின் எதிர்பார்க்கையாகும் .

2007ம் ஆண்டு முதல் இந்த புவி நேரம் என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

உலக இயற்கை நிதியம். இந்த நிகழ்வின்போது உலகம் முழுவதும் உள்ள வர்த்தக நிறுவனங்கள்,  இல்லங்களில் அவசியம் இல்லாத விளக்குகளை ஒரு மணி நேரத்திற்கு அணைக்க அழைப்பு விடப்படும்.

புவி தட்பவெப்ப மாற்றத்தின் விளைவை மக்களுக்கு உணர்த்தும் வகையில் விழிப்புணர்வுக்காக இந்த நிகழ்ச்சியை உலக இயற்கை நிதியம் நடத்தி வருகிறது. கடந்த 5 ஆண்டுகளாக உலகம் முழுவதும் இந்தப் புவி நேரம் நிகழ்ச்சி நடத்தப்பட்டதாகவும் அதில் கோடிக்கணக்கணக்கானோல் கலந்து கொண்டதாகவும தெரிவிக்கப்படுகிறது.

இந்த ஆண்டு புவி நேரம், இன்று சனிக்கிழமை இரவு எட்டரை மணி முதல் ஒன்பதரை மணி வரை நடைபெறவுள்ளது. இம்முறை பல கோடி பேர் பங்கேற்பார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

உசாத்துணை
http://www.dailytimes.com.pk/default.asp?page=2012\03\31\story_31-3-2012_pg13_3
http://www.earthhour.org/
http://www.wwf.org.au/earthhour/

Tuesday, 27 March 2012

தமிழ் எழுத்தாளர்கள் விபரங்கள் சர்வதேச மட்டத்தில் ஆவணப்படுத்தப்படல் வேண்டும் - என். செல்வராஜா (லண்டன்)


17.03.2007  இல் ஜேர்மனி டியுஸ்பேர்க் நகரில் இடம்பெற்ற கலாபூசணம் புன்னியாமீன் எழுதிய 100வது நூலான இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரத்திரட்டு தொகுதி - 04, (புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரத்திரட்டு பாகம் - 01)  வெளியீட்டு விழாவின் போது  சிறப்பு அதிதியாக லண்டனிலிருந்து கலந்து கொண்ட பிரபல நூலகவியலாளரும், பன்னூலாசிரியரும், ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணத் தொகுப்பான  நூல்தேட்ட ஆசிரியருமான என். செல்வராஜா  அவர்களின் உரையிலிருந்து….

"..... திரு.புன்னியாமீன் அவர்களை ஒரு முஸ்லிமாக நோக்காமல், ஓர் அந்நியனாக நோக்காமல், ஒரு தமிழ்பேசும் மனிதனாக நோக்கி,  தமிழ்மொழி வளர்க்கும் ஒரு எழுத்தாளனாக நோக்கி அவரை கௌரவித்து, அவரால் தமிழ்மொழி மூலமாக எழுதப்பட்ட நூறாவது நூலினை வெளியிட்டமைக்கு முதற்கண் ஜெர்மன் தமிழ் எழுத்தாளர் சங்கத்துக்கு என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்....
  
"....புன்னியாமீனுடனான அறிமுகம் எனக்கு 2004ம் ஆண்டு ஏற்பட்டது. 2005ம் ஆண்டில் கொழும்பு தமிழ் சங்கத்தில் என்னுடைய 'நூல்தேட்டம்' மூன்றாவது தொகுதியின் வெளியீட்டுவிழா நடைபெற்ற நேரத்தில் கண்டியில் எழுத்தாளர் சந்திப்பொன்றுக்கான அழைப்பினை புன்னியாமீன் விடுத்தார். சில தினங்கள் கொழும்பில் தங்கியிருக்க வேண்டியிருந்தமையினாலும் எனக்கும் சந்தர்ப்பம் வாய்ப்பாக அமைந்தமையினாலும் அவரின் அழைப்பை ஏற்று நான் கண்டி சென்றேன். கண்டியிலிருந்து சுமார் 10கி.மீ. தொலைவில் புன்னியாமீனின் பிறப்பிடமான 'உடத்தலவின்னை மடிகே' எனும் கிராமம் அமைந்துள்ளது. அக்கிராமத்தின் முக்கியமான கல்விக்கூடமான க/ஜாமியுல் அஸ்ஹர் மத்திய கல்லூரியின் பிரதான கேட்போர் கூடத்தில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த எழுத்தாளர் ஒன்று கூடலுக்கு வந்திருந்த எழுத்தாளர்களைக் கண்டதும் நான் அதிர்ச்சியடைந்தேன். ஏனெனில் 135 முஸ்லிம் எழுத்தாளர்கள் வரையில் அங்கு ஒன்று கூடியிருந்தார்கள்.... இவ்வளவு முஸ்லிம் எழுத்தாளர்களா என்று என்னால் நம்பமுடியவில்லை. ஏனென்றால் பேராசிரியர் வித்தியானந்தன் முதல் பேராசிரியர் கைலாசபதி, பேராசிரியர் சிவத்தம்பி வரை இலங்கை தமிழ், முஸ்லிம் எழுத்தாளர்கள் பற்றி மேற்கொண்ட ஆய்வுகளில் ஏழெட்டு முஸ்லிம் எழுத்தாளர்கள் பற்றியே அடிக்கடி குறிப்பிட்டு வந்துள்ளனர். அந்த எழுத்தாளர்கள் தமிழருடன் நேரடியாகத் தொடர்புபட்டவர்கள், பரிச்சயமானவர்கள்.

".....இலங்கையின் தமிழ் இலக்கிய வரலாற்றினைப் பின்னோக்கிப் பார்க்கும்போது முதலாவது தமிழ் நாவலை எழுதியவர் ஒரு முஸ்லிம். அதேபோல, தமிழ் தினசரியை வெளியிட்டவர் ஒரு முஸ்லிம். இலங்கை முஸ்லிம்கள் தமிழ்மொழி மூலம் எழுத்துலகிலும், பதிப்புலகிலும் பெரும் பங்களிப்பினை வழங்கியுள்ளார்கள், வழங்கி வருகின்றார்கள். ஆனால், தமிழருடன் நேரடியாகத் தொடர்புபட்ட ஒரு சில முஸ்லிம் எழுத்தாளர்களும், இலக்கியவாதிகளுமே ஆய்வாளர்களினால் இனங் காட்டப்பட்டுள்ளமையினால் முஸ்லிம்களின் தமிழ் வளர்க்கும் பணிபற்றி எம்மால் பரவலாக அறிந்துகொள்ள முடியாதுள்ளது...


 "....இந்த எழுத்தாளர் கலந்துரையாடல் நடைபெற்றுக் கொண்டிருந்த போது எனக்கு மேலும் ஒரு ஆச்சரியம் ஏற்பட்டது. ஏனென்றால் அந்த முஸ்லிம் எழுத்தாளர்கள் புலம்பெயர்ந்து கனடாவில் வாழும் அ.முத்துலிங்கத்தைப் பற்றியும், அவுஸ்திரேலியாவில் வாழும் முருகபூபதியைப் பற்றியும், இலண்டனில் வாழும் அமுதுப் புலவர்  பற்றியும் கருத்துக்களை முன்வைத்தார்கள். அதேநேரம் இவர்களிடம் இந்த 135 முஸ்லிம் எழுத்தாளர்கள் பற்றிக் கேட்டால் தெரியும் என்று சொல்வார்களா? அதுமட்டுமல்ல இந்த முஸ்லிம் எழுத்தாளர்களில் பலர் ஒன்றுக்கு மேற்பட்ட பல நூல்களை எழுதியிருக்கின்றார்கள். என்னுடைய நூல்தேட்டம் தொகுதி நான்கில் 250க்கும் மேற்பட்ட முஸ்லிம் எழுத்தாளர்களின் நூல்களைப் பதிவாக்கியுள்ளேன். ஏனெனில் தமிழ் வளர்க்கும் எந்தவொரு எழுத்தாளனையும் இனரீதியாக பாகுபடுத்தாமல் அவர்கள் தமிழ் வளர்ப்பவர்கள் என்ற கண்ணோட்டத்தில் நாங்கள் நோக்குதல் வேண்டும். இந்த அடிப்படையில் புன்னியாமீனை ஒரு முஸ்லிம் எழுத்தாளனாக நோக்காமல் தமிழ் வளர்க்கும் ஒரு எழுத்தாளனாக நோக்கி இந்த விசாலமான பணியினைப் புரிந்தமைக்காக மீண்டுமொருமுறை ஜேர்மன் தமிழ் சங்கத்துக்கு என் நன்றிகளைத் கூறிக் கொள்கின்றேன்... இதனை ஒர் ஆரோக்கிய மான மாற்றமாகவே நான் காண்கிறேன்.....     

"...இவ்விடத்தில் ஒரு விடயத்தைச் சுட்டிக் காட்டல் வேண்டும். புன்னியாமீன் இந்த விபரத்திரட்டின் முதல் மூன்று தொகுதிகளுக்கும் ~முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு என்றே பெயரிட்டிருந்தார். உடத்தலவின்னையில் நடைபெற்ற எழுத்தாளர் ஒன்றுகூடலின் போது 'முஸ்லிம்' என்ற வரையறைக்குள் இதனை மட்டுப்படுத்தாது இந்த ஆய்வினைப் பொதுப்படையாக மேற்கொள்ள வேண்டும் என நான் ஆலோசனை வழங்கினேன். என் ஆலோசனையை ஏற்றுக் கொண்ட புன்னியாமீன் நான்காம் தொகுதியிலிருந்து 'முஸ்லிம்' என்ற வார்த்தைப் பதத்தை நீக்கிவிட்டு 'இலங்கை எழுத்தாளர்கள். ஊடகவியலாளர்கள். கலைஞர்களின் விபரத்திரட்டு' என்று பெயரை மாற்றிக் கொண்டார். நான்காவது தொகுதி இங்கு வெளியிடப்பட்டாலும் கூட இத்தொடரில் இதுவரை ஏழு தொகுதிகள் வெளிவந்துவிட்டன. முதல் மூன்று தொகுதிகள் தவிர ஏனைய நான்கு தொகுதிகளிலும் பொதுப்படை யான பெயரையே பயன்படுத்திருப்பது குறிப்பிடத்தக்கது...

"...தற்போது வெளியிடப்பட்ட இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு  தொகுதி -4, புலம்பெயர் ஈழத்து எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத் திரட்டு 1-ம் பாகமாக வெளிவந்துள்ளது. இத்தகைய விபரத்திரட்டு ஏன் அவசியம் என்பது பற்றியும், அதன் முக்கியத்துவம் பற்றியும் இங்கு கதைப்பது பொருத்தமாயிருக்கும்....

"...ஆவணப்பதிவுகளின் முக்கியத்துவத்தை உணர்த்த  நான் அடிக்கடி வானொலியிலும் சரி, மேடையிலும் சரி எடுத்துக் கூறும் ஓர் உதாரணத்தை இங்கே மீண்டும் கூற விரும்புகின்றேன். அதாவது ஆறுமுகநாவலரை நாங்கள் எடுத்துக் கொள்வோம். ஒரு  திடகாத் திரமான மனிதர். தலையில் சமயகுரவர் பாணியில் உருத்திராட்சை மாலையை அணிந்து கொண்டு சிலை, சிலையாக அவரை வைத்திருகின்றோம். உங்களுக்குத் தெரியுமா அவர்தான் ஆறுமுகநாவலர் என்று...? ஆறுமுகநாவலர் பற்றி அறியும் வகையில் உண்மையான படம் இந்த உலகத்திலே இன்று இல்லை. கிறித்தவ மத பரம்பலுக்கு எதிராகக்குரல் கொடுத்து இந்து சமய புனரமைப்புக்காக உழைத்த பெரியார் ஆறுமுகநாவலரின் படமானது 19ம் நூற்றாண்டில் ஒரு ஓவியனால் வரையப்பட்ட கற்பனை உருவம் மட்டுமேயாகும்....

"...அதற்குக் காரணம் என்ன?....

"...ஒரு காலகட்டத்தில் 'தங்களது படைப்புக்களினூடாகவே படைப்பாளியைப் பார்க்க வேண்டும் என்று ஒரு நிலை உருவாக்கம் பெற்றிருந்தது. அதாவது திருக்குறலினூடாக திருவள்ளுவரைப் பார்க்கின்ற மாதிரி, நாவலர் இயலினூடாக நாவலரைப் பார்க்கின்ற மாதிரி, ஒரு எழுத்தாளனின் படைப்பினூடாக அந்த எழுத்தாளனைப் பார்க்க வேண்டும் என்ற ஒரு நிலை காணப்பட்டது. இதனால்தான் எமது வரலாறுகளை நாம் தொலைத்துவிட்டோம் என்று எண்ணத் தோன்றுகின்றது. எமது வரலாற்றைக் கூட வெள்ளைக்காரர்கள் தான் எழுதி வைத்துப் போயிருக்கிறார்கள். அண்மைக்காலமாக இந்திரபாலா முதல் - பரணவிதான வரை எமது பழைய விடயங்களை வைத்துக் கொண்டு எமது வரலாறுகளை எழுத முற்பட்டனர். 'ஆதாரத்தன்மை இல்லை' என்று இன்னொரு சாரார் இதனையும் நிராகரிக்கின்றார்கள். இங்கே ஏன் ஆதாரமில்லாமல் போனது? நாங்கள் ஆவணப்படுத்தாமல் விட்டதால் தானே! அதே தவறை நாங்கள் இந்த 21ம் நூற்றாண்டிலும் செய்ய வேண்டுமா?...

"...இவ்விடத்தில் புலம்பெயர் தமிழர்களைப் பற்றி நாங்கள் கதைத்துக் கொண்டிருக்கின்றோம். இலங்கைத் தமிழரின் முதற் புலம்பெயர்வு 1870ல் இடம்பெற்றது. 1870ல் வைத்தியலிங்கம் என்பவரே முதலாவதாக புலம்பெயர்ந்து சிங்கப்பூருக்குச் சென்றுள்ளார். இவர் கச்சேரியின் பிரதம இலிகிதராக வேலை செய்தவர். அப்போது இவரின் வெள்ளைக்கார துரை பிரித்தானிய காலனித்துவ ஆட்சியின் கீழிருந்த மலேயாவுக்கு இடமாற்றலாக்கிச் செல்லும்போது வைத்தியலிங்கத்தையும் மலேயாவுக்கு அழைத்துச் சென்றுள்ளார். இதுவே இலங்கைத் தமிழரின் முதலாவது புலம்பெயர்வாக அமைந்துவிடுகின்றது...

"...ஆக ஆரம்ப புலம்பெயர்வுகள் பொருளாதார ரீதியாகவே இருப்பதைக் காணலாம். இப்படியான புலம்பெயர்வில் 1920களில் ஒரு முக்கிய விடயத்தை நான் சுட்டிக்காட்ட வேண்டும். ந.சி. கந்தையாப் பிள்ளை என்பவர் (கந்தரோடையைச் சேர்ந்தவர்) மலேயாவுக்கு புலம்பெயர்ந்து சென்றார். மலேயாவின் அதிக காலம் வாழ்ந்துவிட்டு, பின்பு இந்தியாவிலும் வாழ்ந்துவிட்டு 1966ல் தனது தாயக இருப்பிடமான கந்தரோடைக்கு வந்தார். இவர் 1967ல் இறந்துவிட்டார். இவரிடம் என்ன முக்கியத்துவம் இருந்ததென்றால் அவரும் எம்மைப் போலவே புலம்பெயர்ந்து வாழ்ந்தவர்தான். தன்னைப் பற்றி எங்கேயும் எழுதி வைக்காத பெரிய மனிதர். ஆனாலும் அவர் மொத்தமாக 64 புத்தகங்களை எழுதியுள்ளார். அவை சிறிய புத்தகங்களல்ல. தடித்த புத்தகங்கள். என்னிடம் எல்லாப் புத்தகமும் உள்ளன. 1937ல் தமிழ் அகராதி என்ற புத்தகத்தையும் எழுதியுள்ளார். 2002ல் இப்புத்தகங்களை இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு புண்ணியவான் ந.சி.கந்தையாவைப் பற்றி அறிந்து அவரின் புத்தகங்களை கன்னிமாரா நூலகம், மற்றும் பிரித்தானிய நூலகம் ஆகியவற்றிலிருந்து தேடியெடுத்து அனைத்தையும் 'ந.சி.க  நூல்திரட்டு' எனும் தலைப்பில் 24 தொகுதிகளால் பதிப்பித்திருக்கின்றார். அவர் மூலமே ந.சி. கந்தையாவின் நூல்கள் எனக்குக் கிடைத்தன....

"...இந்த நூல்கள் கிடைத்ததும் ந.சி.கந்தையா என்று பெயர் குறிப்பிடப்பட்ட இவர் பற்றிய குறிப்புக்கள் எங்காவது இருக்கின்றதா என்று தேடிப் பார்த்தேன். கந்தரோடையிலும் இல்லை. யாழ்ப்பாணத்திலும் இல்லை. இவர் ஒரு எழுத்தாளர் என்பது யாழ்ப்பாணத்தவர்களுக்கே தெரியவில்லை. ந.சி.கந்தையாவின் புத்தகங்களைப் பார்க்கும் போது அவர் படம் ஒரு கோட்டுருச் சித்திரமாக வரையப்பட்டுள்ளது. வாழ்க்கைக் குறிப்பு இரண்டொரு வரிகளில் மிகவும் சுருக்கமாகப் போடப்பட்டுள்ளது. அதை வைத்து ஒன்றுமே அறிய முடியாது. இது எப்படி நடந்தது என்று நீங்கள் யோசிக்க வேண்டும். "தன்னுடைய வெளியீடுகளினூடாகவே தன்னைப் பார்க்க வேண்டும்" என்று நினைத்த மனிதராக அவர் இருந்திருக்க வேண்டும். தாயக மண்ணுக்கே போய் அவர் இறந்தாலும்கூட அவரை அடையாளப்படுத்த எந்த தரவுகளுமே இருக்கவில்லை. பின்பு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் சிவலிங்கராஜா இவர் பற்றி ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அதேபோல கொழும்பு தமிழ்ச்சங்கத்தைச் சேர்ந்த கந்தசாமி அவர்களும் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். இவ்வாறு அவர் பற்றி நான்கு கட்டுரைகள் வரை வெளிவந்திருக்கின்றன. அந்நான்கு கட்டுரைகளையும் நான் படித்திருக்கின்றேன். நான்கு கட்டுரைகளும் கிட்டத்தட்ட ஒரே தகவல்களையே தருகின்றன. எனவே அவர் பற்றிய பூரணமான தகவல்கள் யாருக்குமே தெரியாது. அறிந்து கொள்ளவும் முடியாதுள்ளது, காலம் கடந்துவிட்டது.    "... இனிவரும் காலத்திலாவது இதை நாங்கள் தவிர்க்க வேண்டும். அப்படியென்றால் புன்னியாமீன் எழுதியுள்ள இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள்' போன்ற புத்தகங்கள் நிறைய வெளிவர வேண்டும். தமிழ் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரங்கள் சர்வதேச மட்டத்தில் தொகுக்கப்பட்டு ஆவணப்படுத்தப்படல் வேண்டும். எம்மிடம் காணப்படக்கூடிய அரசியல் மற்றும் வேறுபட்ட வேறுபாடுகளை கருத்திற் கொள்ளாது தகவல்களை வழங்கி புன்னியாமீனுக்கு பூரண ஒத்துழைப்பினை வழங்க வேண்டும். புன்னியாமீன் ஒரு மதவாதியல்ல. தமிழ்மொழியை வளர்க்கவும், தமிழ் படைப்பிலக்கியவாதிகள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரங்களைத் திரட்டி பாதுகாக்கவும் கொள்கையளவில் கணிசமாகப் பாடுபடுகின்றார். உங்களுக்குப் பார்த்துக் கொள்ள முடியும். இந்நூலில் ஜெர்மன், பிரித்தானிய, பிரான்ஸ், டென்மார்க் போன்ற நாடுகளில் வாழும் 25 தமிழர்களின் விபரங்கள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன. இது மேலும் விரிவடைய வேண்டும்....

"...ஏற்கெனவே 'எம்மவர்கள்' எனும் தலைப்பில் அவுஸ்திரேலியாவில் வாழும் 'முருகபூபதி' அவர்களும், ஜேர்மன் தமிழ்  எழுத்தாளர் சங்கம்  'ஜேர்மனியில் தடம் பதித்த தமிழர்கள்' எனும் தலைப்பிலும் ஒவ்வொரு நூல்களை வெளியிட்டுள்ளனர். பிரான்ஸ் வண்ணை தெய்வம் மற்றும் கனடாவில் சிலரும் எழுதியுள்ளனர். தற்போது இலங்கையில் இருக்கும் 57 எழுத்தாளர்கள் பற்றி நானும் எழுதிக் கொண்டிருக்கின்றேன். இப்படி விபரத்திரட்டுகள் அதிகமாக வர வேண்டும். இதேபோல எம்மைப் பற்றிய குறிப்புக்களை பதிவாக்கி வைப்போமாயின் நாங்கள் இல்லாத காலத்தில் அடுத்து வரக்கூடிய தலைமுறையினருக்கு எம்மைப் பற்றித் தெரிந்து கொள்ள இவை ஆவணமாகும். உதாரணமாக எடுத்துக் கொள்வோம். ஜேர்மன் தமிழ் எழுத்தாளர் சங்கத்தால் வெளியிடப்பட்ட 'ஜேர்மனியில் தடம் பதித்த தமிழர்கள்' எனும் நூல் இன்னும் எத்தனை காலம் சென்றாலும் கூட 'ஜேர்மனியில்' தமிழர்கள் வாழ்ந்ததற்கான சான்றாக அமைந்து விடுகின்றது....

"...எனவே புன்னியாமீன் அவர்கள் சுயமாக முன்வந்து தனது சொந்தச் செலவிலே சர்வதேச ரீதியில் உள்ள தமிழ் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரங்களைத் திரட்டி ஆவணப்படுத்தும் இப்பணிக்கு நாங்கள் பூரணமான ஒத்துழைப்பினை வழங்க வேண்டும்....      

"...இறுதியாக ஒரு விடயத்தைக் குறிப்பிட விரும்புகின்றேன். புன்னியாமீன் இத்தகைய புத்தகங்களை வியாபார நோக்குடன் செய்வதில்லை. இதை அவர் வியாபார நோக்குடன் செய்திருந்தால் ஆயிரம் பிரதிகளை அச்சிட்டு தாயகத்திலுள்ள நூலகங்களுக்கு இலவசமாக வழங்கியிருக்கமாட்டார். இவரால் தாயகத்திலுள்ள நூலகங்களுக்கு வழங்கிய நூலகங்களின் விபரம் என் கைவசம்  உள்ளது. அதுவும் புலம்பெயர்ந்த தமிழர்களின் விபரத்திரட்டினை தன்னுடைய கைச்செலவிலே நூலகங்களுக்கு அனுப்பி வைத்தார் என்றால் நாங்கள் சிந்திக்க வேண்டும். "ஏன் இந்தப் புத்தகத்தில் ஆயிரம் பிரதிகளை அச்சிட்டீர்கள்?" என்று நான் கேட்தற்கு அவர் சொன்ன பதில் "புலம்பெயர்ந்த தமிழர்களைப் பற்றி தாயகத்தில் உள்ளவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் அவர்களை மறந்துவிடக் கூடாது" என்பதாகும்....எனவே, புன்னியாமீனை நீங்கள் ஒரு முஸ்லிமாகப் பார்ப்பீர்களோ, தமிழ் வளர்க்கும் ஒரு மனிதனாகப் பார்ப்பீர்களோ? எனக்குத் தெரியவில்லை... அது உங்கள் கைகளில்....."

Friday, 23 March 2012

மறைந்தாலும் மறையாத மதுரக்குரல் ராஜேஸ்வரி சண்முகம் - கலாபூசணம் புன்னியாமீன்


“ ஈராயிரமாண்டு இலக்கிய வரலாறு கொண்ட நம் தமிழ் இந்த இருபத்தோராம் நூற்றாண்டில் எப்படியெல்லாம் புதிய நரம்புகளுக்கு ரத்தம் பாய்சுகின்றதென்பதைத் திளைத்துத் திளைத்து - சுவைத்துச் சுவைத்து - மகிழ்ந்து மகிழ்ந்து நெகிழ்ந்து நெகிழ்ந்து புல்லரிக்கும் உச்சரிப்பில் நீங்கள் சொல்லெடுத்துச் சொன்னபோது நாம் மீண்டும் ஒரு கல்லூரி மாணவனாய்க் கற்கத் தொடங்கினேன். எந்திர உலகத்திற்குத் தமிழைக் கொண்டு சேர்த்த மந்திரநிகழ்ச்சி உங்கள் பொதிகைத் தென்றல். காலங் காலமாய்த் தமிழ்க்காத்த கவிஞர் பரம்பரையின் கடைக்குட்டி என்ற முறையில் உங்களுக்கு நான் நாத்தழுதழுக்க நன்றிசொல்கின்றேன்.

வீசும் திசைகளை வைத்தே காற்றுக்குப் பெயரிட்டான் தமிழன்

    வடக்கே இருந்து வருவது வாடைக்காற்று.
    மேற்கே இருந்து வருவது கோடைக்காற்று
    கிழக்கே இருந்து வருவது கொண்டல்காற்று
    தெற்கே இருந்து வருவது தென்றல் காற்று


எங்களுக்குத் தெற்கேயிருந்து வீசுகின்ற நீங்கள் தென்றலாகத் தான் இருக்க முடியும்! இது அர்த்தமுள்ள தென்றல்: ஆனந்தத் தென்றல். பருவம் கடந்துவீசும் பைந்தமிழ் தென்றல்...'' கவிஞர் வைரமுத்து இராஜேஸ்வரி சண்முகமவர்களுக்கு சென்னையிலிருந்து அனுப்பியிருந்த மடலின் சில வாசகங்கள் அவை.


இவைமட்டுமல்ல கவிஞர் வாலி, ஏ.வீ.எ. சரவணன், எஸ். ஏ. சந்திரசேகரன், எஸ்.பி. முத்துராமன், இசையமைப்பாளர் அரவிந், முத்துலிங்கம், பழனிபாரதி, அறிவுமதி, அறிஞர்களான கலாநிதி கைலாசபதி, கலாநிதி சிவதம்பி, டாக்டர் நந்தி, வி.வி. வைரமுத்து, கலையரசு சொர்ணலிங்கம், எஸ். டி. சிவநாயகம்... இவர்கள் போல இன்னும் நூற்றுக்கணக்கான கலைஞர்கள், அறிவாளர்களின் புகழ் மாலைகள் ஏராளம். இலட்சக்கணக்கான, மில்லியன் கணக்கான தமிழ் பேசும் உலக நேயர் நெஞ்சங்களில் நீங்காத இடத்தைப் பெற்றுக்கொண்ட மதுரக்குரல் ராஜேஸ்வரி தமிழ் வானொலி வரலாற்றில் காலத்தால் அழிக்க முடியாத ஒரு சகாப்த்தித்தின் உரிமையாளி.

மதுரக்குரல் இராஜேஸ்வரி சண்முகத்தைப் பற்றி எழுதுவதானால்... ஒரு புத்தகமல்ல பல புத்தகங்களே எழுதலாம். இருப்பினும் ஒருசில தகவல்களை மட்டும் இங்கே தர விளைகின்றேன். 


அம்மா அண்ணாமலையம்மாள், அப்பா- பிச்சாண்டிபிள்ளை ஆகியோரின் மூத்த மகளாக 1938.03.16ம் திகதி கொழும்பில் விவேகானந்த மேட்டில் பிறந்த இவர் இரண்டு சகோதரர்கள், இரண்டு சகோதரிகளுடன் கூடப்பிறந்தவராவார். ஸ்ரீகதிரேசன் வீதி, புனித மரியாள் வித்தியாலயத்தில் ஆங்கிலமொழி மூலம் கல்விகற்றுப் பிறகு நெல் வீதி அரசினர் மத்திய மகா வித்தியாலயத்தில் தனது கல்வியைத் தொடர்ந்தார்.

படிக்கும் போது நடித்த “கண்ணகி" நாடகத்தை பார்த்த வானொலி நாடகத்தயாரிப்பாளர் “சானா" இவரை வானொலி நாடகங்களில் நடிக்க அழைத்தார். தனது 14வது வயதிலே 1952இல் வானொலிக் கலைஞராக அறிமுகமான இவர் நடித்த வானொலி நாடகம்  என்.எஸ்.எம். ராமையா எழுதிய 'விடிவெள்ளி’. ஆமாம் அன்று விடிவெள்ளியாகவே திகழ்ந்தார்.

நூற்றுக்கணக்கான வானொலி நாடகங்களில் மதுரக்குரல் ஒலித்த அதே நேரத்தில் மேடை நாடகங்களிலும் நடிப்புத்திறன் மிளிர்ந்தது. அவற்றுள் பிரபல்யம் பெற்ற இவருக்குப் புகழ் சேர்த்துத்தந்த சில நாடகங்களையாவது ஞாபகப்படுத்தல் வேண்டும். ஸ்புட்னிக் சுருட்டு, வாடகை வீடு, திரு. சி. சண்முகம் எழுதிய பல மேடைநாடகங்கள், ஹாரேராம் நரே கோபால், நெஞ்சில் நிறைந்தவள், லண்டன் கந்தையா, ஸ்ரீமான் கைலாசம், தேரோட்டி மகன், குந்திதேவி பாத்திரம் கண்ணகி, வீருத்தின் பரிசு. முருகையனின் - விடிவை நோக்கி... போன்றமேடைநாடகங்களில் பல்வேறு பாத்திரங்களில் முத்திரை பதித்துப் புகழ்சேர்த்தவர். சிலம்பின் ஒலி, வளவனின் பதியூர்ராணி...என, வானொலி நாடகங்களால் தனது குரல் வளத்துக்கு உரம் சேர்த்தவர். வானொலி நாடகத்திலே முதலில் குரல் பதித்து, நாடகத்துறையையும் ஒலிபரப்புத்துறையையும் தனித்துவமாக மிளிரச் செய்த பெருமை இராஜேஸ்வரி அவர்களுக்கு உண்டென்றால் அது மிகை அல்ல.


1952.12.26ம் திகதி முதல் வானொலிக்கலைஞராக கலைத் துறையில் பாதம்பதித்த இராஜேஸ்வரி 1969 இல் பகுதிநேர அறிவிப்பாளராகவும், 1971இல் மாதர், சிறுவர் பகுதித்தயாரிப்பாளராகவும், முதல் தரம் 1994இல் மீ.உயர் அறிவிப்பாளராகவும் படிப்படியாக உயர்ந்தார்.

இராஜேஸ்வரி அவர்களின் அன்புக்கணவர் திருவாளர் சண்முகம் நாடறிந்த ஒரு நல்ல, சிறந்த நாடகாசிரியர், இவர் எழுதிய வானொலித் தொடர்கள் ஏராளம், விளையாட்டுத்துறை விமர்சனம் செய்வதிலும் அவர் வல்லவர். அவர் எழுதிப்புகழ்பெற்ற வரனொலி நாடகங்கள் சில, துணிவிடு தூது, லண்டன் கந்தையா, புழுகர் பொன்னையா, ஊருக்குழைந்தவன், நெஞ்சில் நிறைந்தவள், இரவில் கேட்டகுரல் அதேபோல மேடையில் புகழ்பெற்றவை, ஸ்புட்னிக் சுருட்டு, ஸ்ரீமான் கைலாசம், வாடகைவீடு, நீதியின் நிழல், ஹரோராம், நரேகோபால், நெஞ்சில் நிறைந்தவை இப்படி இன்னும் பல... கிராமிய கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சின் அரச அதிகாரியாக இருந்து கலைபணி ஆற்றிய திரு. சண்முகம், இராஜேஸ்வரி அவர்களின் முன்னேற்றத்துக்குத் துணை நின்றவர்.

இத்தம்பதியினருக்கு மூன்று குழந்தைகள் - மூத்தவள் பெண். பெயர் வசந்தி சண்முகம் தற்போது திருமதி வசந்திகுமார் அன்னையைப் போலவே சிறுவயது முதல் வானொலியும், மேடையிலும் பங்களிப்பு வழங்கிய இவர் பட்டதாரியாகி இலங்கை வானொலியில் இசைப்பகுதியில் தயாரிப்பாளராக பணியாற்றினார். திருமணமுடித்து இரண்டு ஆண்மக்களோடு பாரதத்தில் வாழ்கின்றார். ஆண் மகன் இருவர். எஸ். சந்திரமோகன் பாடகர், புகைப்படக் கலைஞர், எஸ் சந்திரசேகரன் தனியார் வானொலியில் ஒலிபரப்புத் துறையில் பணியாற்றுகிறார்.


இராஜேஸ்வரி சண்முகம் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சிகளோ பல. அவற்றுள் சில பின்வருமாறு,  இசைச்சித்திரம், முத்துவிதானம், பூவும்பொட்டும், மங்கையர் மஞ்சரி, சிறுவர் நிகழ்ச்சிகள், பொதிகைத் தென்றல், வீட்டுக்கு வீடு, இசையும் கதையும், வானொலி மலர், ஒலிமஞ்சரி... என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.

பேட்டி நிகழ்ச்சிகளை வானொலியில் நடத்தும்போது இவரின்; மதுரக்குரலாலும், மொழிவளத்தாலும் தமிழ் புதுக்கலை தட்டி விடும். தென்னகத்தில் புகழ்பூத்த எத்தனையோ கலைஞர்களை இவர் வானொலியூடாகப் பேட்டிகண்டுள்ளார். அவர்களுள் சிலர் வருமாறு, எஸ் பி. பாலசுப்பரமனியம், இளையராஜா, சங்கர் கணேஷ், கல்யாணிமேனன், எம்.எல். வசந்தகுமாரி,  கே. ஜே; யேசுதாஸ்,  ஜமுனாராணி, கங்கை அமரன், கவிஞர் பூங்குயில், ஜிக்கி, மலேசியா வாசுதேவன், ரீ.எம். சௌந்தரராஜன், சூலமங்கலம் ராஜலஷ்மி, ஆர்.எஸ். மனோகர், எஸ் ஜானகி, வி.கே. ராமசாமி, எஸ்பி. சைலஜா, அசோகன், வாணி ஜெயராம், குட்டிபத்மின, எஸ் பி. முத்துராமன், எஸ்.வி. சேகர், கமலாஹஸன், மனோரமா,  பி. சுசீலா, வைரமத்து, வாலி,  ஸ்ரீகாந்த, ஜென்சி,  ஜொலி ஏப்ரஹாம், சீர்காழி சிவசிதம்பரம், மகாகவிபாரதியின் பேத்தி சகுந்தலா…..

ஐம்பதாண்டு கலைப்பணியினூடாக இவர் பெற்ற கௌரவங்கள்,  பட்டங்கள்,  விருதுகள் ஏராளம் அவற்றுள் சில வருமாறு:

*    1994இல் சிறந்த அறிவிப்பாளருக்கான ஜனாதிபதி விருது. போட்டியின்றி பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றுத் தெரிவானமை குறிப்பிடத்தக்கது.
*   1995 இல் (ஜெயலலிதா விருது) டாக்டர் புரட்சித்தலைவி விருது.
*   பிரான்ஸ் நாட்டுக்கு அழைக்கப்பட்ட இவர் பரிஸ் கலையமுதம் சார்பாக பரிஸ், டென்மார்க், சுவிஸ், நோர்வே, ஜெர்மனி, லண்டன்  போன்ற இடங்களில் கௌரவமளிக்கப்பட்டார்
*   காலாசார அமைச்சின் மூலம் முன்னால் அமைச்சர் செ. இராசதுரை அவர்களினால் மொழிவாளர் செல்வி பட்டமளிக்கப்பட்டது.
*   சுவாமி விபுலாநந்தரின் நூற்றாண்டுப் பெருவிழாவினை முன்னிட்டு முன்னாள் ஜனாதிபதி மேதகு ஜே. ஆர். ஜயவர்தனா அவர்களினால் வாகீசகலாபமணி பட்டமளிக்கப்பட்டது.
*    அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் அவர்களினால் 'தொடர்பியல் வித்தகர்' பட்டமளிக்கப்பட்டது.
*   பேராசிரியர் டாக்டர் இரா. நாகு தமிழ்துறைத்தலைவர் - மாநிலக் கல்லூரி சென்னை பேராசிரியர் அருட்திரு. சி. மணிவண்ணன் தேர்வு ஆணையாளர் தூயவளனார் கல்லூரி திருச்சி ஆகிய தமிழறிஞர்கள் இயக்குனர் இளசை சுதந்திரம் அவர்களினால் எட்டயபுரம் தென்பொரி தமிழ்சங்கம், 'வானொலிக்குயில்' பட்டம் வழங்கி கெரவித்தது.
*    அம்பாறை மாவட்டத்து மருதமுனை, அட்டாளைச்சேனை,     கல்முனை, சாய்ந்தமருது போன்ற இடங்களில் பாராட்டும் தங்கப்பதக்கமும் வழங்கப்பட்டமை. சாய்நதமருது கலைக்குரல் 'வான்மகள்' விருது வழங்கி கௌரவித்தது.
*    இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபன பவளவிழாவில் 50வருட கால சேவை பாராட்டு.
*    சிந்தனை வட்டம் 'நாளைய சந்ததியின் இன்றைய சக்தி' பேராதனை பல்கலைக்கழகத்தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் எஸ்.தில்லை நாதன், கலாநிதி துரை மனோகரன்,  கம்பவாரி ஜெயராஜா போன்றோர் முன்னிலையில் 'மதுரக்குரல்' பட்டம் வழங்கி கௌரவித்தமை.
   
பட்டங்கள் பல பெற்றாலும், பெருமைகள் பல சேர்ந்தாலும்,  பாராட்டுக்களை அள்ளிக் குவித்தாலும் - ஒரு சில கலைஞர்களைப் போல இவர் இறுதிவரை தடம் மாறிவிடவில்லை. அன்று போலவே மார்ச் 23, 2012 இல் மரணிக்கும் வரை குணவதியாகவே இருந்து வந்தார்.

ஆம் பல படிப்பினைகளை எமது இளைய தலைமுறைக்குத்தந்த இவர் மறைந்தாலும் இவரது  மதுரக்குரல் நிச்சியமாக காலத்தால் அழியாது எம் இதயங்களில் என்றும் ஒலித்துக் கொண்டே இருக்கும்.

Wednesday, 21 March 2012

உலக பொம்மலாட்ட தினம் (World Puppetry Day) - புன்னியாமீன்


உலக பொம்மலாட்ட தினம் (World Puppetry Day)  ஆண்டு தோறும் மார்ச் மாதம் 21 ஆம் திகதி கொண்டாடப்படுகின்றது. பழமையான மரபுவழிக் கலைகளில் ஒன்றான  பொம்மலாட்டம் என்பது  பொம்மைகளில் நூலைக் கட்டி திரைக்கு பின்னால் இருந்து இயக்கியபடி கதை சொல்லும் ஒருவித கலையாகும். இது 'கூத்து' வகையை சேர்ந்தது. மரப்பாவைக்கூத்து, பாவைக்கூத்து என்ற பெயர்களாலும் இக்கலை அழைக்கப்படுகிறது.  நாட்டுப்புற மரபுரிமைகளிடையில் ஒரு தனிப்புகழை கொண்டுள்ள தொடர்பாடல் ஊடகமாகவே இப் பொம்மலாட்டத்தை அறிமுகப்படுக்கலாம். இன்று பல்வேறு நவீன தொழில்நுட்பங்களை சாத்தியமாக்குகிற திரைப்படத்தின் மூதாதையாகவும் இந்த கலை கருதப்படுகின்றது.

தென் இந்தியாவில் மரபுவழியாக வளர்ச்சியடைந்த இக்கலை பின்னர் இலங்கை,  ஜாவா உள்ளிட்ட பல நாடுகளுக்கு பயணித்திருப்பதாகக் கூறப்படுகின்றது. பொம்மலாட்டக்கலையில் சீன, மலேசிய, ஜப்பானிய நாடுகளின் பாதிப்புகளும் 20 ஆம் நூற்றாண்டு காலத்தில் ஜெர்மனி, இத்தாலி, செக்கோஸ்லாவாக்கியா போன்ற நாடுகளின் பாதிப்புகளும் காணப்பட்டிருப்பினும் கூட பாரம்பரிய பொம்மலாட்டக் கலை தென் இந்திய குறிகளுடனே இன்னும் நடைப்பெற்று வருவதை அவதானிக்கலாம்.

தமிழ்நாட்டில் பொம்மலாட்டம், ஆந்திராவில் கொய்யா பொம்மலாட்டா எனவும், கர்நாடகத்தில் சூத்ரதா கொம்பயேட்டா எனவும், ஒரிசாவில் கோபலீலா எனவும், மேற்கு வங்கத்தில் சுத்தோர் புதூல் எனவும், அசாமில் புதலா நாச் எனவும், ராஜஸ்தானில் காத்புட்லி எனவும், மகாராஷ்டிரத்தில் காலாசூத்ரி பஹுல்யா எனவும் அழைக்கப்படுகின்றது. பொம்மலாட்டம் என்பதை ஆங்கிலத்தில் ‘Puppet’ என அழைக்கப்படுவதோடு இலங்கையில்  ‘ரூகட’ என அழைக்கப்படுகின்றது. சிங்கள மொழியில் ரூகட என்பது அறை உருவம் என்று விளங்குவதோடு உருவத்தின் மீதி அறைக்கான பங்களிப்பை பொம்மலாட்ட கலைஞனால் வழங்கப்படும். பொம்மலாட்டத்தில் இதிகாசம் மற்றும் புராணக் கதைகள், சரித்திரக் கதைகள் அதிகம் நிகழ்த்தப்படும். தற்போது  அரசியல் விடயங்களும் முக்கியம் பெறுகின்றன.

பொம்மலாட்டத்துக்குப் பயன்படும் பொம்மைகளை பெரும்பாலும் முள் முருங்கை மரத்தில் இருந்து செய்கிறார்கள். இந்த மரத்தின் கட்டைகளை நீரில் ஊற வைத்துப் பின் உலர வைத்து தலை, கால், கை என பொம்மையின் உருவங்களை தனித்தனியாக வெட்டிச் செதுக்குவார்கள். பின் மீண்டும் நன்றாக உலர வைத்து உறுப்புகளை இணைப்பார்கள். இணைக்கப்படும் உறுப்புகள் தனித்தனியாக இயங்கும் வண்ணம் இருக்கும். இந்த பொம்மைகள் 45 செ.மீட்டர் முதல் 90 சென்டி மீட்டர் வரை உயரமுடையதாக இருக்கும்.

பல வகையான பொம்மைகளைக் காணலாம். இதனை உற்பத்தி செய்கின்ற பொருள், மற்றும் பொம்மையை இயக்குகின்ற முறைக்கமைய பொம்மைகள் வகைப்படுத்தப்படும். நூல் பொம்மை, கோள் பொம்மை, நிழல் பொம்மை, கைபொம்மை, விரல் பொம்மை என்றும்,  தோற்றத்தின் படி இருகோண, முக்கோண வடிவத்தில் நிர்மாணிக்கப்படும். பொம்மைகளின் படைப்பாளர்களின் திறமைக்கேற்றப்படி பொம்மை வகைகளை நிர்மாணிக்கின்ற போது அதில் ஒரு நிலையான தரத்தை காணலாம்.

உடல் உறுப்புகளின் அசையக்கூடிய இடங்களை பெரும்பாலும் மாதிரிக்கமைவாகவே நிர்மாணித்து அவற்றிற்கு துணி மணிகளை அணியவைத்து இயக்கும் பலகைகளில் பொருத்திக்கொள்ளப்படும். ஒவ்வொரு பாத்திரங்களின் தராதரம், தகைமைக்கு அமைய அந்தந்த கலைஞனால் தொடர்புப்பட்ட பொம்மையை நடிக்க வைக்கின்ற போது பொம்மலாட்ட கலையின் ஒப்பனை, ஒலி அமைப்பு, உரை, இசை, மேடை அலங்காரம் எனும் மேலும் பல துறைகள் ஒன்றிணைவதை காணலாம்.

ஆர்மோனியம், தபேலா, மிருதங்கம், ஜால்ரா, முகவீணை ஆகிய இசைக்கருவிகள் இக்கலை நிகழ்தலுக்கு பயன்படுத்தப்படும். தற்போது சிலர் எலக்ட்ரானிக்ஸ் இசைக்கருவிகளைப் பயன்படுத்துகிறார்கள். 4 மீட்டர் அகலம், 6 மீட்டர் நீளம், 3 மீட்டர் உயரம் கொண்ட மூன்று புறங்கள் அடைக்கப்பட்ட அரங்கில் மரபு ரீதியாக இந்த கலை நிகழ்த்தப்படும். தென்இந்தியாவில் எந்தக் கதையை எடுத்தாண்டாலும் இடையில், கரகாட்டம், காவடியாட்டம், பேயாட்டம், பாம்பாட்டம் ஆகியவற்றில் ஒன்றை நிகழ்த்த வேண்டும் என்பது மரபாகப் பேணப்படுகின்றது.

அரங்கின் வலதுபுறத்தில் இசைக்கலைஞர்கள் அமர்ந்திருப்பார்கள். முன்புறத்தில் 1 மீட்டர் இடைவெளி விட்டு கறுப்புத் திரைச்சேலை ஒன்று கட்டப்பட்டிருக்கும். இந்தத் திரை, பின்னால் நின்று கொண்டிருக்கும் பொம்மலாட்ட கலைஞர்களின் தலையை மறைக்கும் அளவுக்கு உயரமாக இருக்கும். பொம்மைகள் தொங்குவதற்கான கயிறுகள் கறுப்புத் திரையின் மேல் கட்டப்பட்டிருக்கும். பொம்மலாட்டத்தில் பொதுவாக 9 கலைஞர்கள் பங்கேற்பார்கள். இவர்களில் 4 கலைஞர்கள் பொம்மைகளை இயக்குவார்கள். மற்றைய 4 கலைஞர்கள் இசைக்கலைஞர்களாக இருப்பார்கள். ஒருவர் உதவியாளராக இருப்பார்.

இலங்கையில் பொம்மலாட்டக் கலை ஒரு நாட்டுப்புற கலையாக ஆரம்ப காலத்தில் இருந்து வந்துள்ளது. ஆயினும் இது ஒரு நாடகக் கலையாக பிரபல்யமடைந்தமை  சுமார் இதற்கு 300 ஆண்டுகளுக்கு முன்னரென கருதப்படுகின்றது. இந்திய பொம்மலாட்ட நாடகத்தின் பாதிப்பு காரணமாக இக்கலை இந் நாட்டுக்கு கிடைத்திருப்பதோடு ‘ நாடகம் எனும் நாடக கலைக்கு பின்னர் பிரபல்யம் அடைந்திருப்பதாக அறிஞர்கள் கருதுகின்றனர்.

இலங்கையின் பாரம்பரிய பொம்மலாட்டக் கலை அம்பலாங்கொடை மற்றும் பலபிட்டியா பிரதேசங்களில் இன்றும் பரலவாக காணக் கிடைப்பதோடு இப் பிரதேசங்களின் முன்னோடியான பொம்மலாட்ட வித்துவனாக கந்தெகொட பிரதேசத்தில் வாழ்ந்து வந்த திரு. பொடிசிரினா என்ற கலைஞரே கருதப்படுகின்றார். இவரது பிற்கால சந்ததியினர் சார்ந்த பல குடும்பங்கள் தற்போதும் இப் பாரம்பரிய பொம்மலாட்ட கலையை ஆடி வருகின்றனர். இக் குடும்பங்களை சார்ந்த உறவினர்கள் இலங்கையில் பல பாகங்களிலும் குடியேறியதினால் கொழும்பு, கம்பஹா மற்றும் கண்டி போன்ற பிரதேசங்களிலும் இக்கலையினை காணக்கூடியதாக உள்ளது.

இந் நாட்டில் பாரம்பரியமற்ற பொம்மலாட்ட கலை இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் ஆசிய மற்றும் ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளின் பாதிப்பிற்கு உட்படடிருந்தது. பல்கலைக்கழக அறிஞர்களின் ஒத்துழைப்பு கிடைத்ததினால் இத்துறை பல நவீன பரிணாமங்களை இன்று அடைந்துள்ளது.  அனைவரும் ஒன்றாக ரசிக்கக் கூடிய ஒரு கலை துறையான பொம்மலாட்ட நாடகக் கலையை எதிர்கால சந்ததியினருக்கு பாதுகாத்து வழங்குவது கலைஞர்களின் தார்மீகப் பொறுப்பாகும்.

உசாத்துணை

http://www.sri-lanka-almanac.com/sri_lanka_almanac_puppetry_portal/sri_lanka_almanac_puppetry_portal.html
http://www.puppetryindia.org/prevalence.htm
http://www.dawn.com/2011/03/21/world-puppet-day-21-march.html
http://www.dawn.com/2012/03/20/puppet-festival-begins-tomorrow.html
http://www.youtube.com/watch?v=PxUDle6Aky0
http://www.schoolofpuppetry.com.au/tutorials.php/happy-world-puppetry-day-2012
http://www.geotamil.com/pathivukal/vesa_on_tamilarts.htm 

நான் எழுதிய நூல்களின் பட்டியல் 01 - புன்னியாமீன்


2011 ஆம் ஆண்டு வரை என்னால் எழுதி வெளிவந்த மொத்த நூல்களின் எண்ணிக்கை 180 ஆகும். எனது முதலாவது நூல் 1979 ம் ஆண்டு நவம்பர் மாதத்திலும், 180 வது நூல் 2011 நவம்பர் மாதத்திலும் வெளிவந்தது. இந்த முதலாவது பட்டியலில் என்னால் எழுதி வெளிவந்த (1 முதல் 25 வரை) 25 நூல்கள் பட்டியல் படுத்தப்பட்டுள்ளன.

* என்னால் எழுதி வெளிவந்த நூல்கள் (1 முதல் 5 வரை)

எனது முதலாவது நூல் (நவம்பர் 1979)
தேவைகள் (சிறுகதைத் தொகுதி)

எனது இரண்டாவது நூல் (மார்ச் 1986)
நிழலின் அருமை (சிறுகதைத் தொகுதி)

எனது மூன்றாவது நூல் (1987)
இலக்கிய விருந்து (இலக்கியத் திறனாய்வு).

எனது  நான்காவது நூல் (மே 1987)
இலக்கிய உலா (இலக்கியத் திறனாய்வு)

எனது  ஐந்தாவது நூல் (அக்டோபர் 1987)
அடிவானத்து ஒளிர்வுகள் (நாவல்)

மேலதிக வாசிப்புக்கு....
http://sinthanaivattam.blogspot.com/2012/02/1-5.html

* என்னால் எழுதி வெளிவந்த நூல்கள் (6 முதல் 10 வரை)

எனது  ஆறாவது நூல் (1988)
பிரித்தானியாவின் அரசியல் முறை. (1வது பதிப்பு : ஜனவரி 1988)

எனது  ஏழாவது நூல் (நவம்பர் 1988)
கிராமத்தில் ஒரு தீபம் (வரலாறு)

எனது  எட்டாவது நூல் (நவம்பர் 1989)
கரு (சிறுகதைத் தொகுதி)

எனது  ஒன்பதாவது நூல் (ஜனவரி 1990)
அந்த நிலை (சிறுகதைத் தொகுதி)

எனது  10வது நூல் (பெப்ரவரி 1990)
நெருடல்கள் (சிறுகதைத் தொகுதி)

மேலதிக வாசிப்புக்கு...
http://sinthanaivattam.blogspot.com/2012/02/6-10.html


* என்னால் எழுதி வெளிவந்த நூல்கள் (11 முதல் 15 வரை)

எனது 11வது நூல் (ஜுன் 1990)
புதிய மொட்டுகள் (கவிதைத் தொகுப்பு)
 
எனது 12வது நூல் (ஆகஸ்ட் 1990)
அரசறிவியல் மூலதத்துவங்கள் - பகுதி 1. (அரசறிவியல் நூல்)

எனது 13வது நூல் (செப்டெம்பர் 1990)
அரசறிவியல் மூலதத்துவங்கள் - பகுதி 02. (அரசறிவியல் நூல்)

எனது 14 வது நூல் (நவம்பர் 1990)
அரும்புகள் (கவிதைத் தொகுப்பு)

எனது 15வது நூல் ((ஜனவரி 1991)
அரசறிவியல் தொகுதி 3: இலங்கை உள்ளுராட்சிமுறை, கட்சிமுறை, வெளிநாட்டுக் கொள்கை. (அரசறிவியல் நூல்)

மேலதிக வாசிப்புக்கு..
http://sinthanaivattam.blogspot.com/2012/02/11-15.html

* என்னால் எழுதி வெளிவந்த நூல்கள் (16 முதல் 20 வரை)

எனது  16வது நூல் (அக்டோபர் 1991)
வரலாறு: ஆண்டு 11. (வரலாறு)

எனது  17வது நூல் (அக்டோபர் 1991)
வரலாறு - குறிப்புகள் (ஆண்டு – 9).

எனது  18வது நூல் (அக்டோபர் 1991)
வரலாறு – குறிப்புகள் (ஆண்டு – 10).

எனது  19வது நூல் (அக்டோபர் 1991)
வரலாறு – குறிப்புகள் (ஆண்டு – 11).

எனது 20 வது நூல் (நவம்பர் 1991)
வரலாறு: ஆண்டு 9. (வரலாறு)

மேலதிக வாசிப்புக்கு..
http://sinthanaivattam.blogspot.com/2012/02/16-1991-11.html

* என்னால் எழுதி வெளிவந்த நூல்கள் (21 முதல் 25 வரை)

எனது  21வது நூல் (நவம்பர் 1991)
வரலாறு: ஆண்டு 10. (வரலாறு)

எனது 22வது நூல் (ஜனவரி 1992)
அரசறிவியல் பகுதி 1: கோட்பாடுகளும் எண்ணக் கருக்களும். (அரசறிவியல் நூல்)

எனது 23வது நூல் (நவம்பர் 1992)
அரசறிவியல் கோட்பாடுகள். (அரசறிவியல் நூல்)

எனது 24வது நூல் (மே 1993)
அரசறிவியல் பகுதி 2: இலங்கையின் அரசியல் திட்டவளர்ச்சி (அரசறிவியல் நூல்)

எனது 25வது நூல் (ஜூன் 1993)
தெரிவுசெய்யப்பட்ட நாடுகள். (அரசறிவியல் நூல்)

மேலதிக வாசிப்புக்கு..
http://sinthanaivattam.blogspot.com/2012/02/21-1991-10.html

(பட்டியல் 2 தொடரும்…)

Friday, 16 March 2012

நானும் முகநூலும் - கலாபூசணம் புன்னியாமீன்முகநூல் பற்றிய அறிமுகத்தை எனக்குத் தந்தவர் நண்பர் சசிவன். நூலகம் இணையத்தளத்தில் தமிழ் நூல்களைப் பதிப்பது தொடர்பான விடயத்தில் எனக்கு அறிமுகமானவரே சசீவன். அவரே முகநூலின் கணக்கினை எனக்கு ஆரம்பித்துத் தந்தார். இந்த அடிப்படையில் முகநூலில் நான் இணைந்தது நவம்பர் 7, 2009 ஆகும்.

ஆனால் சுமார் இரண்டு வருடகாலம் நான் எவ்விதமான ஆர்வத்தையும் முகநூல் மீது காட்டவில்லை.  உண்மையில் முகநூல் பற்றி எனக்கு ஆரம்பத்தில் நம்பிக்கையிருக்கவில்லை. முகநூல் பற்றி பிழையான கருத்தொன்றையே நான் கொண்டிருந்தேன். கடவுச்சொல்லைக் கூட மறந்துவிட்டேன்.  இந்நிலையில் என்னுடைய மகன் என் பழைய அஞ்சல்களைத் தேடி கடவுச்சொல்லை கண்டுபிடித்து இடைக்கிடையே எனது பக்கத்தில் ஏதாவது செய்வான். இக்காலகட்டத்தில் முகநூல் என்பது இளையதலைமுறையினருக்கான ஓர் பரிமாற்று ஊடகமாக இதை இன்னும் தெளிவுபடுத்துவதாயின் காதலர்களுக்கான ஒரு ஊடகமாகவே நான் கருதிவந்தேன்.

இந்நிலையில் ஒரு நாள் முகநூல் பக்கத்தை திறந்து பார்த்தேன். இதில் இளையவர்கள் மாத்திரமல்ல. பலதரப்பினர் இணைந்திருப்பதையும், கருத்துக்கள் சுயமாக வெளியிடக்கூடிய வாய்ப்புக்கள் இருப்பதையும் என்னால் உணர்ந்துகொள்ள முடிந்தது. இப்படிப்பட்ட நிலையில் தான் இந்திய தமிழ்நாட்டைச் சேர்ந்த எனது நண்பரும், தமிழ்நாட்டில் மாத்திரமல்லாமல் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளின் நன்கறியப்பட்ட எழுத்தாளருமான டாக்டர் ஹமானா சையத் அவர்கள் எனது இல்லத்திற்கு வருகை தந்தார். அச்சமயம் எனது புகைப்பட அல்பங்களை பார்வையிட்ட அவர் இவற்றை உங்கள் முகநூலில் போடலாமே என ஆலோசனைக் கூறினார். முகநூல் பற்றி நான் வைத்திருந்த தவறான எண்ணத்தை எனக்கு எடுத்துரைத்து முகநூல் பற்றிய தெளிவான விளக்கமொன்றைத் தந்தார். அவரின் கருத்துரைகளால் தெளிவு பெற்ற நான் அதன் பின்பே முகநூலில் படிப்படியாக ஈடுபாடுகொள்ள ஆரம்பித்தேன். 2012ம் ஜனவரி இறுதிப்பகுதியில் இருந்து தமிழ் விக்கிப்பீடியா ஈடுபாட்டினை நான் வெகுவாகக் குறைத்தமையினால் அந்த நேரத்தை முகநூலில் எனக்கு ஒதுக்க முடியுமானதாக இருந்தது. 

21ம் நூற்றாண்டின் இன்றைய காலகட்டத்தில் தகவல் தொழிநுட்பத்தில் பல்வேறுபட்ட வியக்கத்தகு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. நவீன கால இலத்திரனியல் ஊடகங்களின் வளர்ச்சியில் பல சாதக பாதகங்கள் உள்ளன என்பதை யாராலும் மறுப்பதற்கு இயலாது. நாம் அவற்றைப் பயன்படுத்தும் முறைகளிலேயே அவை தங்கியுள்ளன. நவீனகால இலத்திரனியல் ஊடகங்களின் பயன்பாட்டில் நாங்கள் அன்னப்பறவைகளாக மாறிவிடவேண்டும். நிச்சயமாக எமது இளையதலைமுறையினர் மிகவும் புத்திசாலிகள் அவர்களுக்கு எது நல்லவை, எது தீயவை என்பதை பகுத்தறிந்து கொள்ளக்கூடிய ஆற்றல் நிறையவே உண்டு. தீயதை விடுவோம் நல்லதை எடுத்துக்கொள்வோம். அவை எமது கைகளிலே உள்ளன. இணையத்தை எடுத்தாலும் சரி இணையத்துடன் இணைந்த எந்தவொரு நிகழ்வை எடுத்தாலும் சரி இது பொதுப்படையானது.

முகநூலில் ஈடுபடத் தொடங்கியதும் எனக்குள் ஒரு மன நிறைவு ஏற்பட்டது. ஏற்கனவே முகநூலைப் பற்றி நான் வைத்திருந்த அபிப்பிராயத்திலிருந்து மாற்றம் பெறலாயினேன். ஏனைய ஊடகங்களை விட எமது பதிவுகளை வைத்துக் கொள்ளவும் அவற்றை நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளவும் ஒரு சிறந்த ஊடகமாக முகநூலை நான் ஏற்றுக்கொண்டேன். ஒரு எழுத்தாளன் என்ற வகையில் என் மனந்திறந்த கருத்துக்களை எதிர்காலத்தில் (இன்ஸாஅல்லாஹ்) படிப்படியாக பகிர்ந்து கொள்வேன்.  

முகநூலில் நான் இணைந்த பின்பு பல தரப்பிலுமுள்ளவர்களுடன் எனக்குத் தொடர்புகள் ஏற்பட்டுள்ளன. என்னிடம் கல்வி பயின்ற ஆயிரக்கணக்கான மாணவர்கள் இலங்கையில் மாத்திரமல்ல தற்போது கடல் கடந்தும் நல்ல நிலையில் இருக்கின்றார்கள். இவர்களுடன் தொடர்புகளையும் அறிமுகத்தையும் ஏற்படுத்திக்கொள்ள முகநூல் எனக்கு பெரிதும் உதவியாக அமைந்துள்ளது. பழைய உறவுகளைப் புதுப்பித்துக் கொள்ளவும் ஒரு கருவியாக இது இருந்து வருகின்றது.

மறுபுறமாக என்னை என்னாலே அளவிட்டுக் கொள்ளக்கூடிய ஒரு அளவு கோளாகவும் இதனை நான் காண்கின்றேன். நான் இதுவரை 180க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளேன். ஆனால்ää இதுவரை இந்நூல்களைப் பற்றி முறையான பதிவொன்றையும் நான் மேற்கொள்ளவில்லை. முகநூலில் நான் ஈடுபட்ட பின்பே டாக்டர் ஹிமானா சையித் போன்ற நண்பர்கள் தந்த ஆலோசனைப்படி இம்முயற்சியில் தற்போது ஈடுபட்டுள்ளேன். முக நூல் ஈடுபாடு இல்லாதிருப்பின் இம்முயற்சியை நான் தொடர்ந்திருக்கவே மாட்டேன். இத்தேடுதல் முடிந்த பின்பு இவற்றை ஒரு தனி நூலாக தொகுத்து வெளியிடும் எண்ணம் எனக்குண்டு.

நாங்கள் உயிருடன் வாழும் காலத்திலே நாங்கள் செய்தவற்றை தொகுத்து வைத்திருக்கவேண்டும். நாங்கள் இல்லாத காலத்தில் எம்மைப் பற்றி எதிர்கால சந்ததியினர் தெரிந்துகொள்வதற்கான ஒரு ஆதாராமாகவே இவை இருக்கும் என்பதை என்னுள் உணர்த்தியது முகநூலே.  

முகநூல் நண்பர்களுக்கு நான் கூறிக்கொள்ள விரும்புவது இதுவொரு நல்ல களம். இதனை நாங்கள் முறையாகப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். இதனைப் பயன்மிக்கதாகவும் ஆக்கபூர்வமானதாகவும் மாற்றிக்கொள்ளும் ஆற்றல் உங்களுக்குண்டு என்பது எனது நம்பிக்கை.

Monday, 12 March 2012

நானும், நான் செய்த தவறுகளும் (அங்கம் - 02) - கலாபூசணம் புன்னியாமீன்

நீரிழிவுக்கான உலகளாவிய நீல வளைய இலச்சினை

இத்தலைப்பின் கீழ் நான் ஆரம்பித்த கட்டுரைத் தொடருக்கு எதிர்பார்த்ததை விட ஆதரவு கிடைத்தமை மகிழ்ச்சியைத் தருகின்றது. பலர் மின்னஞ்சல் மூலமாகவும், தொலைபேசி மூலமாகவும் நேரடியாக என்னுடன் தொடர்புகொண்டு பல கருத்துக்களை தெரிவித்தனர். குறிப்பாக நான் செய்த தவறுகள் என்று வரும்போது அது தனிப்பட்ட முறையில் என்னைப் பற்றி ஏனையவர்கள் வைத்துள்ள அபிப்பிராயத்தில் குறை ஏற்படும் என்பது என் மேல் வைத்துள்ள அபிமானத்தில் சிலர் கருத்து தெரிவித்தனர். தவறுகள் என்று கூறும்போது எந்த மனிதனுக்கும் ஏற்படக்கூடியவையே. நாங்கள் செய்யும் சில தவறுகள் சிலநேரங்களில் அடுத்தவர்களைப் பாதிக்கலாம். சிலநேரங்களில் எங்களையே பாதிக்கலாம். இங்கு நான் செய்த தவறுகளாக எடுத்துக்கூற விளைவது எனது உடல்நலம், கல்வி, தொழில், பொது வாழ்க்கை, குடும்ப வாழ்க்கை போன்றவற்றில் நான் விட்ட தவறுகளையாகும். இத்தகைய தவறுகளினால் எத்தகைய பாதிப்புகளுக்குள்ளானேன் என்பதை என் வரலாற்றுக் குறிப்பின் ஒரு பகுதியாக முன்வைப்பதேயே நான் நோக்காகக் கொண்டுள்ளேன். இதனூடாக தனிப்பட்டவர்களைக் குறைகண்டு அவர்களைப் பாதிப்படையச் செய்வதையோ அல்லது நிறுவனங்களை குறைக்கூறுவதையோ நான் குறிக்கோளாகக் கொள்ளவில்லை. விசேடமாக என் மீது கொண்ட அபிப்பிராயம் காரணமாக தெரிவித்த கருத்துக்களை நான் சிரமேற்கொண்டு இத்தொடரைத் தொடரலாம் என எண்ணியுள்ளேன். கருத்துக்களைத் தெரிவித்த அன்பு நெஞ்சங்களுக்கு என் இதயங் கனிந்த நன்றிகள். தொடர்ந்தும் உங்கள் கருத்துக்களை செவிமடுக்க நான் தயார் நிலையில் உள்ளேன்.

மூத்தவர்களின் அனுபவங்களை வைத்து இளையவர்கள் தெளிவுபெறுவார்கள் என எதிர்பார்ப்பது ஒரு முறையில் தவறு. ஏனெனில், எமது கருத்துக்கள் எத்தனை பேரை சென்றடையப் போகின்றன? எத்தனை பேர் அதனை கருத்திற்கொள்வார்கள்? என்பதைப் பற்றி எம்மால் தீர்மானிக்க முடியாது. இதைப் பற்றி நான் கவலைப்படவுமில்லை. என் தவறுகள் பதிவாகும்போது எங்காவது எப்போதாவது யாராவதொருவர் இதனைக் கருத்திற் கொள்வாராயின் அதையே எனது வெற்றியாக நான் கருதுவேன்.


நீரிழிவு நோய் - எனது அனுபவமும், எனது தேடலும்

இன்று உலகம் முழுவதும் பேசப்படும் நோய்களில் ஒன்றாகவே நீரிழிவு நோய் காணப்படுகின்றது. வயது வித்தியாசம், தகைமை, தராதரம், பால் இன பேதம், செல்வம், வறுமை, நகரம் கிராமம் மட்டுமன்றி தயவு தாட்சண்யம் கூட காட்டாது நீரிழிவு நோய் வேகமாக பரவி வருவதாக கூறப்படுகின்றது. இந்நோய் பரவலாக அதிகமான மக்களிடம் காணப்படுவதுடன் அதன் தொடர் விளைவுகளும் பாரதூரமாகவே இருக்கின்றன. இந்நோய் வந்து விட்டால் அதை முற்று முழுதாகக் குணமாக்க முடியாது எனக்கூறப்படுகின்றது. இருப்பினும் வைத்திய ஆலோசனைப்படி நடப்பதில் நோயாளி முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதன் மூலம் இந்நோயின் தொடர் விளைவுகளைத் தடுக்கவோ அல்லது குறைக்கவோ முடியும். நீரிழிவு நோயாளி ஒருவரைப் பொருத்த வரையில் சுயகட்டுப்பாட்டுடன் எந்நேரமும் அவதானத்துடன் செயற்பட்டால் தேகாரோக்கியத்தைப் பேணி, வாழ்நாளை நீடித்துக்கொள்ள முடிகிறது.

நீரிழிவு தொடர்பாக கருத்து வெளியிட்ட அமெரிக்க டாக்டர் ஒருவர் 'நீரிழிவு உள்ள ஒருவர் தனக்கு நீரிழிவு உள்ளதென்று தெரிந்து கொண்டால், நீரிழிவு என்பது அவருக்கு ஒரு நோயல்ல." என்று  குறிப்பிட்ட ஒரு கருத்தை நினைத்துப் பார்க்கின்றேன். இக்கருத்தின் உள்ளடக்கம் மிகவும் அழுத்தமானது என்பதை தற்போது உணர்கின்றேன்.  இதன் அர்த்தம் நீரிழிவு நோய் உள்ள ஒருவர் தனது கட்டுப்பாட்டின் மூலம் நோயைக் கட்டுப்படுத்திக் கொள்ளலாம் என்பதாகும். நாம் நோயைக் கட்டுப்பாடாக வைத்திருப்பதற்கு, முதலில் அந்நோயைப்பற்றி முழுமையாக நன்கு அறிந்து வைத்திருக்க வேண்டும். எனக்கு நீரிழிவு நோய் உள்ளது என்றால் என்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள நான் தெரிந்திருக்க வேண்டும். குறிப்பாக உணவு விடயத்தில் நாம் காட்டும் அக்கறையே எம் நோயின் எதிர்காலத் தன்மையைப் தீர்மானிக்கப் போகின்றது.

எனக்கு நீரிழிவு நோயுள்ளது என்பதை நான் தெரிந்துகொண்டது எனது 33வது வயதிலாகும்.

நான் முதல்முதலாக என் இரத்தத்தில் குளுகோசு அளவினைப் பரிசீலித்த போது 315 புள்ளியைக் காட்டியது. இது அதிகமானது. இதற்கு சில வருடங்களுக்கு முன்பே எனக்கு நீரிழிவு ஏற்பட்டிருக்க வேண்டும் டாக்டர் குறிப்பிட்டார். என் நோய் கண்டுபிடிக்கப்பட்டதுடன் குளுகோசின் அளவு அதிகமாக கூடியிருந்ததினால் உடனே சில 'மெட்ஃபார்மின்' மாத்திரைகளை மாத்திரம் தந்து டாக்டர் கூறிய பிரதான ஆலோசனை மருந்துக்குப் பழகிக் கொள்ளாமல் உணவுமுறையைச் சீரமைப்பதன் மூலமும், உடற்பயிற்சியினை அதிகரிப்பதன் மூலமும் நீரிழிவினை ஆரம்பத்தில் கட்டுப்படுத்த முடியும். அடிக்கடி இரத்தப் பரிசோதனை செய்துகொண்டு அதற்குரிய பரிகாரத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள் என்பதாகும்.

நோயைக் கண்டுபிடித்தவுடன் மனதில் ஒரு பயம். வாழ்க்கையில் குணப்படுத்த முடியாத ஒரு நோய்க்கு உட்பட்டுவிட்டேனே என்று மனதுக்குள் ஓர் ஆதங்கம். ஒருவித விரக்தியுணர்வு பயம் காரணமாகவும், வீட்டில் மனைவியின் பிடிவாதம் காரணமாகவும் உணவுமுறையைச் சீரமைப்பதற்குப் பெரிதும் போராடினேன். ஒருவாறாக குளுகோசின் அளவும் குறைந்து விட்டது. இப்போது மனதுக்குள் மீண்டும் மகிழ்ச்சி. படிப்படியாக மருந்துகளை நானே குறைத்துக்கொண்டேன். (டாக்டரின் ஆலோசனையின்றியே)

உணவு விடயத்தில் என் பலவீனத்தை நான் குறிப்பிட வெட்கப்படவில்லை. (இன்றைய காலகட்டத்தில் எமது வாலிபர்களும் அவ்வாறுதான்.) எனது வாலிபப் பராயத்தில் நான் மிக அதிகமாகவே சாப்பிடுவேன். உணவு விடயத்தில் நான் கட்டுப்பாடாக இருந்தேன் என்பதை என்னால் எச்சந்தர்ப்பத்திலும் குறிப்பிட முடியாது. வீட்டில் மாத்திரமல்லாமல் திருமண வீடுகளுக்குச் சென்றாலும் எனது நண்பர்கள் ஒன்றாக சேர்ந்துகொண்டு ஒரே 'சகனி'ல் அமர்ந்தால் எமது உணவின் அளவை அங்கு தீர்மானிக்க முடியாது. அவ்வயதில் போட்டிப் போட்டுக் கொண்டு சாப்பிடுவதில் நாங்கள் அடுத்தவர்களுக் குறைந்தவர்கள் அல்ல. சிலநேரங்களில் ஐந்து, ஆறு சகன்கள் சாப்பிட்ட அனுபவமும் உண்டு.

முஸ்லிம் திருமண வீடுகள் என்றால் கூறவும் தேவையில்லையே. நன்றாக ருசியாக சமைப்பார்கள். நிச்சயமாக சோற்றில் மாத்திரமல்ல, கறிகளிலும் நெய் அதிகமாக சேர்க்கப்பட்டே இருக்கும். (கறிகளைப் பற்றியும் சொல்லத் தேவையில்லையே.)

மறுபுறமாக வீடுகளில் சமைக்கும்போதும் கைக்குத்தரிசிக்குப் பதிலாக சம்பா அரிசிக்கே நாங்கள் அதிகமாகப் பழக்கப்பட்டுள்ளோம். மேலும், எமது முன்னோர்கள் போல நாங்கள் உடலை வருத்தி வேலை செய்வதுமில்லை.

1983ம் ஆண்டில் எனக்கு ஆசிரியர் நியமனம் கிடைத்தது. முதல் நியமனம் தொலஸ்பாகை கலமுதுன இலக்கம் 02 எனும் பெருந்தோட்டப் பாடசாலைக்கே கிடைத்தது. அப்போதைய நிலையில் கண்டி மாவட்டத்தின் மிகவும் கஸ்டப் பிரதேசத்தில் காணப்பட்ட பாடசாலை அது. இப்பாடசாலைக்குச் சென்றுவர சுமார் 9 மைல்கள் நடக்க வேண்டும். பாடசாலைக்குச் செல்ல எந்தவொரு வாகனமும் கிடையாது. (இது பற்றி பிறிதொரு தலைப்பில் விரிவாக நான் எழுதவுள்ளேன்) அப்போது தொழில் நிமித்தமாக ஆரம்பத்தில் தொலஸ்பாகையிலும் பின்பு நாவலப்பிட்டியவிலும் அறையெடுத்து தங்கியிருந்தேன். எனவே, ஹோட்டல் சாப்பாட்டுக்கு நன்கு பழக்கப்பட்டுவிட்டேன். அதேநேரம், 'கொகாகொலா' போன்ற மென்பானங்களை அதிகமாக எடுப்பதற்கும், நொறுக்குத் தீன் வகைகளை உண்பதற்கும் பழக்கப்பட்டுவிட்டேன். இவ்வாறு இக்காலகட்டங்களில் வெளியே எனது உணவுமுறை எல்லை மீறியே இருந்தது. உரிய நேரத்திற்கு சாப்பிடுவதும் மிகமிகக் குறைவு.

இதேகாலகட்டத்தில் மேலதிக வகுப்புகள் நடத்துவதற்கும் நான் ஆரம்பித்திருந்தேன். மேலதிக வகுப்புகளுக்கு விரிவுரைக்குச் சென்றால் கட்டாயமாக 'கொகாகோலா' எனக்கு அவசியம் தேவைப்படும்.

எனது குளுகோசின் அளவு குறைந்தவுடன் 'வேதாளம் மீண்டும் முருங்கை மரமேறிய கதைதான்'. ஏற்கனவே கடைபிடித்தக் கட்டுப்பாடு படிப்படியாக குறைய ஆரம்பித்தது. மனைவி கட்டுப்படுத்த எத்தனித்தாலும்கூட (சிலநேரங்களில் சண்டை வருவதுமுண்டு). கடைகளுக்குச் சென்று திருட்டுத்தனமாக சாப்பிடுவதை பழக்கிப்படுத்திக் கொண்டேன்.

முதல் தடவையாக எனது நோய் கண்டறியப்பட்ட பின்பு முதல் முறையாக உணவுக் கட்டுப்பாட்டில் இருந்து நோய் குறைந்தததையடுத்து நான் விட்ட முக்கியமான தவறு பழையபடி என் உணவுமுறையை மாற்றிக் கெண்டதுதான். குறிப்பாக 1990ம் ஆண்டுகளில் என் தனியார் வகுப்புக்கள் கண்டி, கொழும்பு, குருநாகல் போன்ற இடங்களில் பெரியளவில் நடந்தமையினால் ஹோட்டல் உணவருந்தல் மிகவும் அதிகரித்துவிட்டது.

இறுதியில் 44வது வயதாகும்போது குளுகோசின் அளவு அதிகரித்து இரண்டு தடவைகள் வைத்தியசாலையில் தங்கி சிகிச்சையும் பெற்றேன். ஒரு தடவை குளுகோசின் அளவைப் பார்க்கும்போது 633 புள்ளிகளைக் காட்டியது. உண்மையிலேயே இது மிக மிக அதிகரித்த அளவாகும். டாக்டர்களால் பல தடவைகள் நான் எச்சரிக்கப்பட்டுள்ளேன்.

இதன் பின்பு தான் 47வது வயதில் என் இலங்ககான் சிறுதீவுகளின் (சதையி) செயல்பாடு வெகுவாகக் குறைந்த நிலையில் இன்சுலின் ஊசியை ஏற்றும் நிலைக்கு நான் தள்ளப்பட்டேன். இன்றும் இறைவனின் அருளினாலும், இன்சுலின் தயவாலும் நான் வாழ்ந்து கொண்டிருக்கின்றேன். இன்சுலின் ஒரு நாளைக்கு இரண்டு தடவைகள் எடுக்க வேண்டும். இவ்வாறு இல்லாவிட்டால் அடுத்தநாள் என் குளுகோசின் அளவு 300 புள்ளிகளைத் தாண்டிவிடும். இது தான் எனது நிலை.

தற்போது நான் உணவில் பூரணக்கட்டுப்பாட்டுடன் இருக்கின்றேன். சோறு சாப்பிடும்போதும் சிகப்பு அரிசி அல்லது குத்தரிசியையே சாப்பிடுகின்றேன். அதுவும் ஒரு பிடியளவு மாத்திரமே. குரக்கன்,  சிகப்பரிசி மா ஆகாரங்கள் அதிகமாக சாப்பிடுகின்றேன். கீரைவகைகளை அதிகமாக சாப்பிடுகின்றேன். ஆனாலும் இது என் காலம் கடந்த ஞானம்.  

எனக்கு நீரிழிவு கண்ட நேரத்தில் ஆரம்பத்தில் டாக்டரால் சிபாரிசு செய்யப்பட்ட மருந்துகளை ஒழுங்காக எடுத்துவந்தாலும்கூட பின்பு படிப்படியாக மருந்துகளைக்கூட குறைத்துக் கொண்டேன். சிலநேரங்களில் பாவிப்பதேயில்லை. டாக்டரிடம் அடிக்கடி சென்று ஆலோசனைகள் பெறுவதில்லை. வீட்டில் மனைவி தொல்லைப்படுத்தினாலும் நான் கூறும் பதில் "இப்போது தேகாரோக்கியமாக இருக்கின்றேன். குளுக்கோசு அளவு கூடியுள்ளது என்று தெரிந்தால் மானசீகமானப் பாதிக்கப்பட்டுவிடுவேன்" என்று குருட்டு நியாயம் கற்பித்து தவிர்த்துக் கொள்வேன்.

அன்று நான் செய்த தவறுகளின் விளைவுகளை தற்போது அனுபவிக்கின்றேன்.

நீரிழிவுடன் இணைந்த வகையில் என் இடது காலில் குருதிநரம்புகளில் சில அடைப்புகள் ஏற்பட்டுள்ளன. எனக்கு நீண்ட தூரம் பிரயாணம் செய்யும்போது காலில் வீக்கம் ஏற்படும். அதேநேரம், நடக்கும்போதும் மிகவும் சிரமப்படவேண்டியிருக்கும். 50, 100 அடிகளை வைக்கும்போது காலில் நரம்பில் ஒரு பிடிப்பு ஏற்படும். அப்போது வேதனையைத் தாங்கமுடியாது. அண்மையில் நான் இந்தியா சென்ற நேரத்தில் இது பற்றி பூரணமாக பரிசீலித்தபோது என் இடது காலில் நரம்புகளில் அடைப்புகள் ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. மொத்தமாக ஏழு அடைப்புகள் உள்ளன. இன்னும் இதற்குரிய சரியான பரிகாரத்தை பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் உள்ளேன். கண்டி வைத்தியசாலையில் நரம்பியல்துறை தலைமை வைத்தியரை அணுகி சோதனை செய்தபோது சத்திரசிகிச்சையே இதற்கான ஒரே வழியென குறிப்பிட்டார்.

நீரிழிவு நோயாளர்களில் 15 சதவீதம் பேர் இரத்த நாள (பெரிபரல் வாஸ்குலர்) நோய்க்கு ஆளாகின்றனர் என அறிக்கைகள் தெரிவிக்கின்னறன. இவர்களில் பெரும்பாலானோர் தங்கள் கால்களை இழக்க நேரிடுகிறது. இதயத்திலிருந்து கால்களுக்கு இரத்தம் செல்ல பயன்படும் இரத்த குழாய்கள் பாதிப்படைந்து, கால்களுக்கு செல்லும் இரத்த ஓட்டம் தடைப்படுகிறது. உணர்ச்சியற்ற நிலையில் உள்ள கால்களில், எளிதில் புண்கள் ஏற்பட்டு, நோயாளிகள் தங்கள் கால் விரல்களையோ, காலையோ இழக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. நடக்கும் போது காலில் ஏற்படும் வலி கால் மற்றும் கால் விரல்களின் நிறம் மாறுவது போன்றவை, இந்நோய்க்கான பொதுவான அறிகுறிகள், இந்நோய் முற்றிய நோயாளிகளை ‘எண்டோவாஸ்குலர், ஆஞ்சியோபிளாஸ்டிக், ஸ்டென்ட்ஸ்’ போன்ற நவீன சிகிச்சை மூலம் குணப்படுத்தலாம்.

உண்மையிலேயே ஆரம்பத்தில் ஒரு கட்டுப்பாட்டினை என்னுள் ஏற்படுத்திக் கொண்டிருந்தேன் என்றால் தற்போதைய மனஅழுத்தங்களையும் வேதனைகளையும் நான் சுமக்க வேண்டி ஏற்பட்டிருக்கமாட்டாது.

நீரிழிவு தொடர்பாக நான் சேர்த்து வைத்துள்ள சில தகவல்களை தங்களுடன் பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகின்றேன். அது எனது மனத்திருப்திக்காக....

நீரிழிவு என்றால் என்ன?

இதனை  எளிமையான முறையில் கூறுவதாயின் எமது இரத்தத்தில் இனிப்புச்சத்து (குளுக்கோசின் அளவு) வழமையாக இருப்பதிலும் பார்க்க அதிகரிப்பதாகும். இதனாலேயே நீரிழிவு நோய் ஏற்படுகின்றது.  நாம் உண்ணும் உணவிலுள்ள மாப்பொருள் சமிபாடடைந்து குளுக்கோசாக மாற்றப்பட்டு குருதியால் அகத்துறிஞ்சப்படுகிறது. சாதாரண மனிதனின் 100ml குருதியில் 80-120mg குளுக்கோசு காணப்படுகிறது. எமது உடல் இயக்கத்திற்குத் தேவையான குளுக்கோசு எமது உடற் கலங்களுக்குள் உடைக்கப்பட்டுப் பெறப்படுகிறது. குருதியில் உள்ள குளுக்கோசு உடற்கலங்களுக்குள் செல்ல உதவுவது உணவுப்பாதையுடன் தொடர்பாக இருக்கும். சதையி (Pancreases) எனும் சுரப்பியால் சுரக்கப்படும். "இன்சுலின்" (Insulin)  எனப்படும் ஓர் ஓமோன் ஆகும். இவ் இன்சுலின் உடலில் தொழிற்படாது விடுவதால் அல்லது இன்சுலின் சுரக்கும் அளவு குறைவதால் குருதியிலுள்ள குளுக்கோசு உடற்கலங்களுக்குள் செல்வது தடைப்படும். இதனால் குருதியில் குளுக்கோசின் அளவு கூடுகிறது. சாதாரணமாக சிறுநீரகங்கள் (Kidney)  குளுக்கோசை சிறுநீருடன் வெளியேற்றுவதில்லை.

குருதியில் குளுக்கோசின் அளவு கூடும் போது அதாவது 100ml குருதியில் குளுக்கோசின் அளவு 180mg ற்கு மேலாகக் கூடும் போது சிறுநீரகங்கள் மேலதிக குளுக்கோசை சிறுநீருடன் வெளியேற்றுகின்றன. இதனை சிறுநீரில் சீனி (Sugar)  இருக்கிறது எனக் குறிப்பிடுகிறோம். இவ்வாறு சிறுநீருடன் குளுக்கோசு போகும் போது உடலிலிருந்து அதிகம் நீரும் சேர்ந்தே வெளியேறும். இதனால் வழமையிலும் பார்க்க அதிகளவு சிறுநீர் உண்டாவதால் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிய நிலை ஏற்படும். இதனாலேயே இதை நீரிழிவு என்கிறோம்.


நீரிழிவு நோயின் மூலமான சில அறிகுறிகள்

1. அடிக்கடி சிறுநீர் கழித்தல், வழமைக்கு மாறாக இரவிலும் பல தடவை சிறுநீர் கழிக்க வேண்டிய நிலை ஏற்படல்.
2 அடிக்கடி தாகம் ஏற்படல்.
3. அசாதாரண பசி ஏற்படல்.
4. உடல் சோர்வாக இருத்தல்.
5. உடல் நிறை குறைந்து கொண்டு போதல்.
6. தலை சுற்றுதல், மயக்கம் போன்றன அடிக்கடி ஏற்படல்.
7. கை, கால்களில் விறைப்புத் தன்மை ஏற்படுதல்.
8. தேகத்தில் பருக்களும், கட்டிகளும் தோன்றல்.
9. ஆண், பெண் இனப்பெருக்க உறுப்புகளில் இகூடிய அழற்சி ஏற்படல்.
10. கண் பார்வை குறைவடைதல்.
11. புண்கள் ஏற்படின் அவை ஆறுவதற்கு வழமையிலும் கூடிய நாட்கள் எடுத்தல்.
12. எளிதில் கோபமடைதல்.

மேற்குறிப்பிட்ட அறிகுறிகளில் சிலவற்றை சிலகாலமாக அவதானித்தால் அருகிலுள்ள வைத்திய சாலைக்குச் சென்று சிறுநீர்ப்பரிசோதனை செய்வதன் மூலம் அந்நோய் இருக்கின்றதா?, என்பதை அறிந்து கொள்ளலாம். பின்பு இரத்தப்பரிசோதனை செய்வதன் மூலமே இந்நோயை உறுதிப்படுத்திக் கொள்ளலாம். நீரிழிவு நோய் காணப்படுமிடத்து டாக்டரை அணுகி உரிய சிகிச்சை முறைகளை மேற்கொள்ளல் அவசியமாகும்.

நீரிழிவு நோயின் வகைகள்

பொதுவாக நீரிழிவு நோயினை நான்காக வகைப்படுத்தலாம்.

முதல் வகை நீரிழிவு நோய்

இது பெரும்பாலும் குழந்தைகளை தாக்கும் தன்மை கொண்டது. இதனால் சில மருத்துவர்கள் இதை குழந்தைகளின் நீரிழிவு நோய் என்றும் அழைக்கிறார்கள். குழந்தை பிறந்தது முதல் முப்பது வயது வரை தாக்கும் தன்மை கொண்டது எனப்படுகின்றது.

மனிதர்களின் உடம்பில் இயற்கையிலேயே இருக்கும் நோய் எதிர்ப்புத்தன்மையானது, திடீரென்று சதையியியைத் (Pancreases) தாக்கி அதில் இருக்கும் இன்சுலின் சுரக்கும் சுரப்பிகளை அழித்து விடுகிறது. இதனால் இன்சுலின் சுரக்கும் தன்மையை சதையி இழந்துவிடுகிறது. இப்படி மனித உடம்பின் ஒரு பகுதி கலங்கள், இன்னொரு பகுதிக் கலங்களை ஏன் தாக்குகிறது என்பது தொடர்பில் தெளிவான உறுதியான ஆராய்ச்சி முடிவுகள் எட்டப்படவில்லை. ஒருவகையான வைரஸ் தாக்குதல் காரணமாகவே இப்படி நடப்பதாக அண்மைக்கால கண்டுபிடிப்புகள் கூறினாலும் அந்த குறிப்பிட்ட வைரஸை இனம் காண்பதற்கான ஆய்வுகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. அதனால், இந்த முதல் வகை நீரிழிவு நோயைப் பொறுத்தவரை, இது ஒருவருக்கு வந்தால் அவருக்கு ஆயுட்காலம் முழுமைக்கும் இன்சுலின் ஊசிமூலம் குளுக்கோசின் அளவைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது சிறந்த வழியாகக் கூறப்படுகின்றது.

இரண்டாவது வகை நீரிழிவு


உலகளாவிய ரீதியில் எண்ணிக்கை அடிப்படையில் பெரும்பாலானவர்களை பாதிப்பது இரண்டாவது வகை நீரிழிவு நோயாகும். இந்த இரண்டாவது வகை நீரிழிவு நோயைப் பொறுத்தவரை, அது ஒருவருக்கு வருவதற்கு பல காரணங்கள் காணப்படுகின்றன.

பெற்றோருக்கு நீரிழிவு நோய் இருந்தால் அவர்களின் பிள்ளைகளுக்கு நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்புகள் 80 சதவீதம் இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. அது தவிர கூடுதல் உடல் பருமன், அதிகபட்ச கொழுப்புச்சத்துள்ள உணவுகள் சாப்பிடுவது, உடற்பயிற்சியற்ற வாழ்க்கைமுறை போன்ற காரணிகள், ஒருவருக்கு நீரிழிவு நோயை வரவழைப்பதில் முக்கிய பங்காற்றுவதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மூன்றாவது வகையான நீரிழிவு நோய்.

மூன்றாவது வகையான கர்ப்பகால நீரிழிவு நோய். சில பெண்களுக்கு கர்ப்பகாலத்தில் தற்காலிகமாக வருவது. கர்ப்பகாலத்தில் பெண்களின் உடல் எடை அதிகரிப்பதாலும், கருவில் இருக்கும் குழந்தையின் வளர்ச்சி காரணமாகவும், பெண்களுக்கு கூடுதலாக இன்சுலின் தேவைப்படுகிறது. பெரும்பாலானவர்களுக்கு இந்த கூடுதல் இன்சுலின் இயற்கையாகவே சுரந்தாலும், சில பெண்களுக்கு இது சுரப்பதில்லை. அதனால் அவர்களின் இரத்தத்தில் குளுக்கோசின் அளவு அதிகரித்து, அவர்களுக்கு நீரிழிவு நோய் ஏற்படுகிறது. இவர்களின் கர்ப்பத்தின் இறுதியில் குழந்தை பிறந்ததும் இவர்களில் பலருக்கு நீரிழிவு நோய் இல்லாது போய்விடும்.

நான்காவது வகையான நீரிழிவுநோய்

இது சதையியில் ஏற்படும் கற்கள் காரணமாக இது உருவாகிறது. இது உருவாவதற்கு போஷாக்கின்மை உள்ளிட்ட பல்வேறு வகையான சுற்றுப்புற காரணங்கள் இருப்பதாக கூறப்பட்டாலும், இதற்கான பிரதான காரணி எது என்பது குறித்து இன்னமும் ஆய்வுகள் தொடர்கின்றன.

தெற்காசிய நாடுகளைச் சேர்ந்தவர்களில் 98 சதவீதமானவர்களை மேற்குறிப்பிட்ட நான்கு வகைகளுமே பாதிப்பை செலுத்துவதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

நீரிழிவின் பாரதூர விளைவுகள்

நீரிழிவினால் ஏற்படும் தீய விளைவுகள் பற்றியும் தெரிந்து வைத்திருத்தல் வேண்டும். ஒரு நீரிழிவு நோயாளி நோயைக் கட்டுப்பாடாக வைத்திருப்பதில் கவனம் செலுத்துவது குறைவடைந்தால் அவர் பாராதூரமான பின்விளைவுகளை எதிர்நோக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாவார். இது காலப்போக்கில் உடலில் பல்வேறு தொகுதிகளில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

* குறைந்த இன்சுலின் தொழிற்பட்டால் ஏற்படும் விளைவுகளால் குருதிக் குழாய்களில் அடைப்பு ஏற்படலாம். இதனால் காலப்போக்கில் குருதி ஓட்டம் குறைவடைவதனால் மாரடைப்பு, உயர்இரத்த அழுத்தம் போன்ற இதய நோய்கள் தோன்றலாம்.
* குறைந்த குருதி விநியோகம் மற்றும் பல காரணங்களால் நரம்புகள் பாதிக்கப்பட்டு உடலின் புலனுணர்வு பாதிக்கப்படும்.
* விழித்திரையில் மாற்றத்தினால் (Retinopathy) கண்வில்லையில் ஏற்படும் மாற்றத்தினாலும் (Cataract)  கண்பார்வை இல்லாது போகும் அபாயம் ஏற்படல்.
* பாலியல் உறுப்புக்கள், சிறுநீரகம், கை, கால், தோல் பகுதிகளில் தொற்று நோய்கள் ஏற்படலாம். பிரதானமாக இந்நோய்களில் Candida எனப்படும் பங்கசு நோய் ஏற்படும்.
* சிறுநீரகத்தில் சிக்கல் ஏற்படலாம் அல்லது இயங்க மறுக்கலாம். குறைந்த குருதி விநியோகம் நரம்புப் பாதிப்புகளால் பிரதானமாக கால்களில் பாதிப்புகள் ஏற்படல். குறைந்த புலனுணர்வால் நடப்பதில் கஸ்டம் ஏற்படுவதுடன் பாதப்பகுதியில் நோயாளர்கள் உணர முடியாமலேயே புண்கள் தோன்றலாம். இவ்வகைப் புண்கள் குணமடையாது போகின் பாதிக்கப்பட்ட கால் பகுதிகள் வெட்டியகற்ற வேண்டிய நிலை ஏற்படலாம்.

நோயைக்கட்டுப்படுத்தும் முறைகள்

* சில நோயாளர்களுக்கு இந்நோயை உணவுக்கட்டுப்பாடுகளின் மூலமும்.
* சிலருக்கு உணவுக்கட்டுப்பாடுடன் மருந்து, மாத்திரைகள் உட்கொள்வதன் மூலமும்
* சிலருக்கு உணவுக்கட்டுப்பாடுகளுடன் இன்சுலின் ஊசி ஏற்றுதல்; மூலமும் கட்டுபாட்டில் வைத்திருக்கலாம். நீரிழிவு நோய் உள்ளவர்கள் 16% மக்கள் இன்சுலின் உபயோகிக்கிறார்கள். மற்றவர்களில் 54% மாத்திரைகளும் 17% இரண்டும் உபயோகிக்கிறார்கள் என புள்ளி விபரங்கள் குறிப்பிடுகின்றன. .

நீரிழிவு நோய்களுக்காகச் சிகிச்சை பெற்றுக் கொண்டிருப்போர் 
கவனிக்க வேண்டியவை:

* வைத்தியரின் ஆலோசனைப்படி உணவுக்கட்டுப்பாட்டை இறுக்கமாகக் கடைப்பிடிக்க வேண்டும்.
* வைத்திய ஆலோசனைப்படி மாத்திரையை அல்லது இன்சுலின் ஊசியை ஒழுங்காக எடுக்க வேண்டும்.
* மருந்து எடுத்து அல்லது ஊசி ஏற்றி அரைமணி நேரத்திற்குள் (30 நிமிடம்) உணவை உட்கொள்ளுதல் வேண்டும்.
* சில சந்தர்ப்பங்களில் மருந்தை எடுத்த பின் உணவு உட்கொள்ளத்தவறினால் அல்லது மேலதிகமாக மருந்தை உட்கொண்டாலோ களைப்பு, பசி, மயக்கம், தலைச்சுற்று, நெஞ்சுப்படபடப்பு, அதிகளவு வியர்த்தல், உடல் குளிர்தல் போன்ற அறிகுறிகள் தென்படும். இப்படியான சந்தர்ப்பங்களில் குளுக்கோசு அல்லது வேறு இனிப்பு வகைகள் உடனடியாக உட்கொள்ளல் அவசியமாகும். இதனால் சிறிதளவு இனிப்பு வகைகளோ அல்லது குளுக்கோசோ எந்த நேரமும் வைத்திருத்தல் நன்று. (குறிப்பாக இன்சுலின் அதிகளவில் உடலில் ஏற்றிக் கொள்பவர்கள்) மேலும் நீரிழிவு நோயாளிகள் வெளியிடங்களுக்குத் தனியே செல்லும் போது தான் ஒரு நீரிழிவு நோயாளி என்பதை தெரிவிக்கும் விபரமடங்கிய குறிப்பொன்றை தன்னுடன் வைத்திருத்தல் பாதுகாப்பு மிக்கதாகும்.
* தினமும் தேகாப்பியாசம் செய்தல் வேண்டும்.
* உடல் சுத்தத்தைப்பேணல் வேண்டும். பிரதானமாக பாதங்களைச் சுத்தமாகவும் உலர்ந்ததாகவும் பேண வேண்டும். நீரிழிவு நோயுள்ளவர்கள் தனது கால்களையும், கால் நகங்களையும் தினம் தோறும் அவதானித்து கொள்ளல் வேண்டும்.
* உணவுக்கட்டுப்பாடின்றி உண்பதன் மூலமோ அல்லது மருந்துகளை ஒழுங்கீனமாக பாவிப்பதன் மூலமாகவோ குருதியில் குளுக்கோசின் அளவு அதிகமாகி வயிற்றுப் புரட்டல், நாவரட்சி, மயக்கம் போன்றன ஏற்படலாம். அப்படி ஏற்படின் உடனடியாக மருத்துவரை நாடல் வேண்டும்.

நீரிழிவு நோய் ஏற்பட்டுள்ளவர்கள், எச்சந்தர்ப்பத்திலும் மிகவும் அவதானமான முறையில் தமது உடல் ஆரோக்கியத்தைப் பேணிக்கொள்வதுடன், உணவு முறைகளையும் கட்டுப்பாட்டினுள் வைத்திருப்பது மிகவும் இன்றியமையாததாகும்.

நீரிழிவு நோய்

நீரிழிவு நோய் குறித்து பலநூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பாக அறியப்பட்டிருந்தாலும் கூட, இதற்கான உறுதியான சிகிச்சை முறை என்பது இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப கட்டத்தில் தான் கண்டறியப்பட்டது. 1922ஆம் ஆண்டில் பேண்டிங்க் அண்ட் பெஸ்ட் என்ற கனேடிய விஞ்ஞானிகள் கூட்டணி இன்சுலின் மூலம் நீரிழிவு நோயை முழுமையாக கட்டுப்படுத்தலாம் என்பதைக் கண்டறிந்தனர். அதுவரை, "ஒருவருக்கு நீரிழிவு நோய் வந்தால் மரணம் நிச்சயம்" என்கிற நிலைதான் நீடித்தது. இன்சுலினை கண்டுபிடித்த 'பேண்டிங்க் அண்ட் பெஸ்ட்" என்ற விஞ்ஞானிகள் கூட்டணியின் தலைவர் பிரெடெங்க் பேண்டிங்கின்" பிறந்த நாளான நவம்பர் 14 ஆம் திகதி, ஆண்டுதோறும் உலக நீரிழிவு நோய் தினமாக அனுஸ்டிக்கப்படுகிறது. முதன் முதலில் இது 1991 ஆம் ஆண்டு முதல் அனுசரிக்கப்படத் தொடங்கியது, தற்போது உலக அளவில் 193 நாடுகளில் அனுசரிக்கப்படுகிறது.

அது மட்டுமல்லாமல், ஐக்கிய நாடுகள் சபை இந்த நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் தனியான அடையாளச் சின்னம் ஒன்றை வடிவமைத்து வெளியிட்டிருக்கிறது. நீலநிறத்திலான வளையம் நீரிழிவு நோய் தடுப்பின் சின்னமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. எய்ட்ஸ் நோய்க்கு அடுத்தபடியாக நீரிழிவு நோய்க்கு மட்டுமே ஐக்கிய நாடுகள் சபை இப்படித் தனியான ஒரு சின்னத்தை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். இதன் மூலம் உலக அளவில் நீரிழிவுநோய் என்பது மிகப்பெரும் ஆட்கொல்லியாக உருவெடுத்து வருகிறது என்கிற ஆபத்தை ஐக்கிய நாடுகள் சபை குறிப்புணர்த்துவதாக நீரிழிவு நோய் நிபுணர்கள் கருதுகின்றார்கள். தற்போது உலக அளவில் 18 கோடிக்கு மேற்பட்டோர் நீரிழிவு நோயுள்ளவர்களாக உள்ளனர். இந்த எண்ணிக்கை 2025-ல் 36 கோடியே 50 இலட்சமாக அதிகரிக்கலாம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

உலகளாவிய ரீதியில் நீரிழிவு நோயாளிகள் அதிகம் உள்ள 10 நாடுகளை (2009 தகவல் படி) பின்வருமாறு வகைப்படுத்தலாம்.

1) இந்தியா
2) சீனா
3) அமெரிக்கா
4) இந்தோனேசியா
5) ஜப்பான்
6) பாகிஸ்தான்
7) ரஷ்யா
8) பிரேஸில்
9) இத்தாலி
10) பங்களாதேஷ் என்பனவாகும்.
நீரிழிவு நோய் குறித்த தகவல்களுக்கான ஆதார மூலங்கள்

* Williams textbook of endocrinology (12th ed.). Philadelphia: Elsevier/Saunders. pp. 1371–1435. ISBN 978-1437703245.
* http://www.bbc.co.uk/health/physical_health/conditions/in_depth/diabetes/
* "Diabetes Blue Circle Symbol". International Diabetes Federation (17 March 2006).
* http://salasalappu.com/?p=47597
* http://www.medicalnewstoday.com/info/diabetes/
* "Definition and Diagnosis of Diabetes Mellitus and Intermediate Hyperglycemia" (pdf). World Health Organization.
* http://en.wikipedia.org/wiki/Diabetes_mellitus
* http://www.diabetes.com/
* http://www.diabetessrilanka.org/
* http://reallogic.org/thenthuli/?p=147
 
(தொடரும்)