Sunday, 27 July 2014

என் வாழ்வில் பெருநாளும், நானும் - புன்னியாமீன்


நினைத்துப் பார்க்கின்றேன்..... - 01
என் வாழ்வில் பெருநாளும், நானும்

சுமார் 40 வருடங்களுக்கு முன் நடந்த ஒரு நிகழ்வை முதற்தடவையாக எழுத்தில் பதிய விடுகின்றேன்...

அப்போது நான் மாணவன்.
வீட்டில் ஒரே மகன் என்பதால் எனக்குப் பெருநாள் விசேடம் தான்.
வாப்பா எப்படியும் பெருநாளைக்கு எனக்குப் பல புத்தாடைகளை வாங்கித் தந்து விடுவார்.
ஒரு பெருநாளன்று...
எனக்கு 'ஆரியசூட்' (சிங்கள ஆண்கள் அணியும் ஆடை. இலங்கையின் தேசிய ஆடையும் கூட) எனக்கு வாங்கித் தந்திருந்தார். எனக்கு ஞாபகம். வெள்ளை நிற பட்டுத்துணியாடை அது.
சிறிய வயதில் பெருநாளன்று புத்தாடைகளை அணிந்து கொண்டு நண்பர்களுடன் சேர்ந்து பாதை வழியே திரிவதும், ஜில்போல (மாபிள்) விளையாடுவதும் முக்கிய விடயம். பெருநாள் என்றாலே அதுதான் என்பது போல...

நானும் கிராமத்தின் அந்த மரபுக்கு விதிவிலக்காகவில்லை.
எனது புதிய 'ஆரியசூட்டை' அணிந்து கொண்டு நண்பர்களுடன் சேர்ந்து ஊர் சுற்ற ஆரம்பித்தேன்.
அச்சமயம் ஆரியசூட் எமது கிராமத்தவர்களுக்கு புதிது. எனவே நான் ஒரு ஹீரோ போல நடந்து சென்றேன்.

அப்போது....
என்னை விட ஓரிரு வயது குறைந்த பையன் ஒருவன் (என் குடும்பத்தினரும் கூட) என் உடையை மிகுந்த ஆசையுடன் பார்த்தான். அவன் மிகவும் வரிய நிலையில் வாழ்ந்தவன். ஒரு நேர சாப்பாட்டுக்குக் கூட கஷ்டப்படுபவர்கள்.....

என் புத்தாடையை தொட்டுப்பார்த்தான்.
முகர்ந்து பார்த்தான்.
அவன் கண்களில் நீர் துளிகள் கசிந்தன.
அவனது பெருமூச்சு சிறியவனாக இருந்தாலும் என்னை வெகுவாகப் பாதித்தது.

அந்த வயதிலும் அவனது ஏக்கத்தை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.
அவனது பார்வை -
அவனது கண்ணீர் -
அவனது பெருமூச்சு......
என்னை மிகவும் காயப்படுத்தி விட்டது.

வீட்டுக்கு வந்து முதல் வேலையாக ஆரியசூட்டை கலட்டி விட்டு பழைய உடுப்பொன்றை அணிந்து கொண்டேன்.

இது ஒரு சிறிய விடயமென்றாலும்
ஒவ்வொரு பெருநாள் வரும் போதும்
அவனது பார்வை -
அவனது கண்ணீர் -
அவனது பெருமூச்சு.
என் மனக்கண் முன்பே வந்து நிற்கும்.

இப்போதும் கூட

அன்றிலிருந்து இன்றுவரை.....
பெருநாள் தினத்தன்று நான் புத்தாடை அணிந்து பள்ளிவாயிலுக்கு சென்று வந்தபின்
என் பெருநாள் முடிந்து விடும்.
அதில் எனக்குத்திருப்தி.
பெருநாளன்று நான் எங்கும் செல்லமாட்டேன்.
ஆனால் வீட்டுக்கு வருபவர்களை
இன் முகத்துடன் வரவேற்று உபசரிப்பேன்.
அன்று ஏற்பட்ட மனப்பாதிப்பை
இன்றுவரை எனக்கு மறக்க முடியாமல் இருப்பது
உளவியலின் பார்வையில்
ஒரு மனக்குறைபாடாக இருக்கலாம்.

ஆனால் என் பார்வையில்....
எனக்கு அது சரியாகவே
40 ஆண்டுகள் கடந்தும் படுகிறது.

நான் மரணிக்கும் வரை
இதையே விரும்புகின்றேன்.


Thursday, 17 July 2014

பல ஆண்டு முற்றுகையில் காசாவில் வாழ்க்கை

 சுமார் 1.7 மிலியன் மக்கள் தொகை கொண்ட காசா நிலப்பரப்பு, 40 கிமீ நீளமும், 10 கிமீ அகலமும் கொண்டது. மத்தியதரைக்கடல், இஸ்ரேல், எகிப்து ஆகியவற்றால் சூழப்பட்ட பகுதி.

முதலில் எகிப்தால் ஆக்ரமிக்கப்பட்டது காசா நிலப்பரப்பு. எகிப்து இன்னும் காசாவின் தென் எல்லையைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. இந்த கடற்கரையோர நிலப்பரப்பை இஸ்ரேல் 1967 போரின் போது கைப்பற்றியது.
ஆனால் 2005ம் ஆண்டில் இஸ்ரேல் இந்தப் பகுதியிலிருந்த தனது படைகளையும், சுமார் 7,000 குடியேறிகளையும் விலக்கிக்கொண்டது.
அதற்கு ஓராண்டுக்குப் பின்னர், தீவிரவாத இஸ்லாமியக் குழுவான ஹமாஸ் பாலத்தீன சட்டசபைத் தேர்தல்களில் வென்றது. பாலத்தீன நிர்வாக அமைப்பின் அதிபர் மஹ்மூத் அப்பாஸின் ஃபத்தா குழுவுடன் ஏற்பட்ட வன்முறையான பிளவை அடுத்து, ஹமாஸ், காசாவை 2007லிருந்து 2014வரை ஆட்சி செய்தது.
ஹமாஸ் காசாவில் வெற்றி பெற்றவுடன், இஸ்ரேல் அப்பகுதியின் மீது முற்றுகையை அமல்படுத்தி, அங்கிருந்து பொருட்கள் மற்றும் மக்கள் வெளியே வருவதையோ, அல்லது அங்கு செல்வதையோ தடுத்தது. எகிப்தும் காசாவின் தென்பகுதி எல்லையை மூடியது.

நடமாடும் சுதந்திரம்

காசாவில் ஏற்கனவே வரையறைக்குள் இருந்த நடமாடும் சுதந்திரம்2013ன் மத்திய காலப்பகுதிக்குப் பின்னர், குறிப்பாக, எகிப்து ரஃபா எல்லைப்புறக் கடவைச் சாவடியில் புதிய கட்டுப்பாடுகளை விதித்து, எகிப்து-காசா எல்லைப்புறப் பகுதியில் இருக்கும் சுரங்கவழிக் கடத்தல் வலையமைப்புகளை மூடத் தொடங்கியதும், மேலும் கணிசமாக குறைந்துவிட்டது.
2013ம் ஆண்டின் முதல் பகுதியில் ரஃபா கடவைச்சாவடியில், மாதமொன்றுக்கு சுமார் 40,000 பேர் கடந்து சென்றனர். ஆனால் 2013 ஜூலையிலிருந்து டிசம்பர் மாதம் வரையிலான காலகட்டத்தில், போக்குவரத்து இந்தப் பகுதியில் மாதமொன்றுக்கு 9,550 பேர் என்ற அளவுக்குக் குறைந்தது.
சமீப ஆண்டுகளில், இஸ்ரேல், வடக்கே உள்ள எரெஸ் கடவைச்சாவடியில் கட்டுப்பாடுகளை விதித்ததை அடுத்து, ரஃபா கடவைச் சாவடியே, பாலத்தீனர்களுக்கு காசாவுக்குள் நுழையவும், வெளியேறவும் இருக்கும் ஒரே இடமாக மாறிவிட்டது.
ஆனால் இந்த முற்றுகை இறுகிய பின்னர், இந்தக் கடத்தல் சுரங்க வழிகள் பல்கிப் பெருகிவிட்டன. இந்த வழிகள் மூலமாக, கட்டுமானப் பொருட்கள் , கால்நடைகள், எரிபொருட்கள், உணவு, பணம் மற்றும் ஆயுதங்கள் என எல்லாம் இறக்குமதி செய்யப்படுகின்றன.
இந்த முற்றுகை 2010 ஜூன் மாதம் தளர்த்தப்பட்டபோது, செயல்பாட்டில் இருந்து வந்த சுமார் 1,000 சுரங்கங்கள் 200லிருந்து 300 வரை என்று குறைந்தன. தனியார் துறைக்கு கட்டுமானப் பொருட்கள் மற்றும் எரிபொருட்களைக் கடத்திவருவதில் கடத்தல்காரர்கள் கவனம் செலுத்தினர். இவை இஸ்ரேலில் கிடைப்பதை விட எகிப்தில் குறைந்த விலைக்குக் கிடைத்தன.
ஆனால் 2013ல் இந்த சுரங்க வழிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையின் விளைவாக, காசாவிற்குப் பொருட்களைக் கடத்துவது ஏறக்குறைய முற்றிலுமாக நின்று, அங்கு கட்டுமானப் பொருட்கள், எரிபொருள் மற்றும் உணவுப் பொருட்களின் விலை உயர்ந்தது.

பொருளாதாரம்

காசா மக்கள் பொதுவாக 1990களில் இருந்த்தை விட இப்போது மோசமான நிலையில் இருக்கிறார்கள்.
அவர்களில் 21 சதவீதத்தினர் மிகவும் வறிய நிலையில் இருக்கிறார்கள். மாத வருமானம் 534 டாலர்களுக்கும் குறைவுதான். மேற்குக் கரையில் இருக்கும் பாலத்தீனர்கள் ஒப்பீட்டளவில் பார்த்தால், சற்று மேம்பட்ட நிலையில் இருக்கிறார்கள். அவர்களில் 7.8 சதவீதத்தினரே வறுமையில் இருக்கிறார்கள்.
காசா நிலப்பரப்பில் வேலையில்லாதோர் விகிதம் 40.8 சதவீதம். இது மேற்குக் கரையைவிட கணிசமான அளவு அதிகம். குறிப்பாக இளைஞர்களிடையே வேலையில்லாத் திண்டாட்ட விகிதம் 50 சதவீதக்கும் மேலாக இருக்கிறது காசாவில்.
கடத்தலுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் 2013ல் காசாவின் பொருளாதாரத்திற்கு சுமார் 460 மிலியன் டாலர்கள் நஷ்ட்த்தை ஏற்படுத்திவிட்டன என்று ஹமாஸ் நிர்வாகத்தில் இருக்கும் பொருளாதார அமைச்சகம் கூறுகிறது.
நெருக்கடியில் காசா பள்ளிகள்
காசாவின் பள்ளிக் கல்வி அமைப்பு நெருக்கடியில் இருக்கிறது. இந்தப் பகுதியில் உள்ள பள்ளிக்கூடங்களை நட்த்திவரும் ஐநா மன்றம், 2020வாக்கில் அதிகரிக்க எதிர்பார்க்கப்படும் மக்கள் தொகைக்கு ஏற்ப மேலும் 440 பள்ளிக்கூடங்கள் கூடுதலாகத் தேவைப்படுவதாகக் கூறுகிறது.
சுமார் 4.63 லட்சம் குழந்தைகள் 694 தொடக்க மற்றும் இடை நிலைப் பள்ளிகளில் படிக்கிறார்கள்.
கல்வி வசதிப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய பல பள்ளிக்கூடங்கள் இரட்டை ஷிப்ட் முறையில் இயங்குகின்றன. இதனால் பாடம் நடத்தும் நேரம் குறைக்கப்படுகிறது. வகுப்புகளின் அளவும் பெரிதாகவே இருக்கின்றன.
இதனால் பள்ளி நாட்கள் குறைந்த நேரமே நீடிக்கின்றன. இடை நிலைக் கல்வியமைப்பில் மாணவர் சேர்க்கை குறைவாகவே இருக்கிறது. ஆனாலும், கல்வி அறிவு குறித்த அதிகாரபூர்வப் புள்ளிவிவரங்கள் பெண்களுக்கு 93 சதவீதம், ஆண்களில் 98 சதவீதம் என்று உயர்வாகவே இருக்கின்றன.
மேலும் ஒரு பிரச்சினை – 13 பள்ளிகள் காசா-இஸ்ரேல் எல்லைப்புற வேலி அருகே அமைந்திருக்கின்றன. இந்தப் பகுதியில்தான் இஸ்ரேலியத் துருப்புக்களுக்கும் பாலத்தீனத் தீவிரவாதிகளுக்கும் இடையே அடிக்கடி மோதல்கள் நடக்கின்றன.

மக்கள் தொகை

காசாவின் மக்கள் தொகை இந்த தசாப்தத்தின் முடிவில் 2.13 மிலியனாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது ஏற்கனவே உலகில் மிக அதிக ஜனத்தொகை அடர்த்தியுள்ள பகுதிகளில் ஒன்றான காசா நிலப்பரப்பில் மக்கள் தொகை அடர்த்தியை மேலும் அதிகரிக்கும்.
சராசரியாக, காசாவில் மக்கள் தொகை சதுர கிமீக்கு 4,505 என்று இருக்கிறது. இது 2020ம் ஆண்டு வாக்கில் சதுர கிமீக்கு 5,835ஆக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இயற்கையாக ஏற்படும் மக்கள் தொகை அதிகரிப்பாலும், இஸ்ரேல் 2008-2009ல் நடத்திய தரைவழித் தாக்குதலாலும், 70,000 வீடுகள் பற்றாக்குறை இருப்பதாக ஐ.நா மன்றம் கூறுகிறது. சுமார் 12,000 பேர் அவர்களது வீடுகள் அழிக்கப்பட்ட நிலையில் இடம்பெயர்ந்து வாழ்கிறார்கள்.
வயது 15க்கு மேல் இருப்பவர்களில் , 15லிருந்து 29வயதானவர்கள் சுமார் 53 சதவீதமாக இருக்கிறார்கள். இது மிகவும் அதிகமான ஒரு எண்ணிக்கை.
பொருளாதார வளர்ச்சி இருந்தால் இந்த இளம் வயதினர் வேலைக்குப் போக வாய்ப்பு இருக்கிறது. அது நடக்கவில்லை என்றால், சமூக பதற்றங்களூம்,வன்முறையும் தீவிரவாதமும் அதிகரிக்கும் சாத்தியக்கூறு இருப்பதாக ஐ.நா கூறுகிறது.

காசாவில் மருத்துவப் பிரச்சினை
காசாவில் மக்களின் ஆரோக்கியம் தொடர்பான அறிகுறிகளை பார்த்தால், நடுத்தரமான ஏன் வளம்மிக்க நாடுகளில் உள்ளதுபோல் இருப்பதாக ஐநா கூறுகிறது. ஆனால் மருத்துவ சேவையின் தரம் மேம்படுத்தப்பட வேண்டியுள்ளது.
மக்களுக்கு போதுமான வசதிகளை செய்துதர முடியாத நிலையில் மருத்துவ சேவை மையங்கள் இருந்துவருகின்றன.
2013 ஆம் ஆண்டு மையப்பகுதியில் எகிப்து அதிகாரிகள் எடுத்த சில நடவடிக்கைகளின் விளைவாக காசாவில் மருத்துவ சேவைகளின் தரம் தாழ்ந்துள்ளதென ஐநா கூறுகிறது.
ரஃபாவிலுள்ள எல்லைக்கடவை மையத்தை எகிப்தியர்கள் மூடியதை அடுத்து, மருத்துவ சிகிச்சைக்காக எகிப்து செல்லும் மக்களின் எண்ணிக்கையும் குறைந்தது.
மருத்துப் பொருட்கள் கிடைப்பதும் கஷ்டமாகியது.
பொருட்களைப் கடத்திக் கொண்டுவருவதற்கு பயன்பட்ட சுரங்கங்களை எகிப்து மூடியதை அடுத்து எரிபொருளுக்கும் மின்சாரத்துக்கும் தட்டுப்பாடு ஏற்பட மருத்துவமனைகளும் பாதிக்கப்பட்டன.

உணவு

2012ஆம் ஆண்டுக்கும் 2013ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் உணவுத் தட்டுப்பாடும், உணவு பாதுகாப்பின்மையும் காசாவில் அதிகரித்துள்ளது. காசாவின் ஜனத்தொகையில் எண்பது சதவீதமானோர் ஏதோ ஒரு வடிவத்தில் உணவு உதவியை பெற்றுவருகிறார்கள், காரணம் தாமாக உணவுத் தேவையை பூர்த்தி செய்யக்கூடிய வருமானம் இவர்களுக்கு இல்லை.
காசா இஸ்ரேல் இடையிலான எல்லை நெடுகிலும் 1.5 கிலோமீட்டர் அகலம் கொண்ட நிலப்பரப்பை, யாருக்கும் சொந்தமற்ற நிலப்பரப்பு என இஸ்ரேல் அறிவித்துள்ளது. எனவே அங்கு காசா மக்கள் விவசாயமும் செய்ய முடியாது.
இதனால் அவ்விடத்தின் உணவு உற்பத்தி ஆண்டுக்கு 75 ஆயிரம் டன்கள் என்ற அளவினால் குறைந்துபோயுள்ளது.
2012 நவம்பரில் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையில் ஏற்படுத்தப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தத்தை அடுத்து காசா மக்கள் மீன்பிடிக்கக்கூடிய கடல் எல்லை மூன்று கடல் மைல் தூரம் என்ற அளவிலிருந்து ஆறு கடல்மைல்களாக அதிகரிக்கப்பட்டது என்றாலும், ஹமாஸ் ரொக்கெட் வீச்சை அடுத்து அது மீண்டும் 3 கடல்மைல்களாக குறைக்கப்பட்டுவிட்டது.
எல்லை தாண்டும் பாலஸ்தீன மீன்பிடிப் படகுகளை நோக்கி இஸ்ரேலிய கடற்படையினர் அடிக்கடி சுடுவதும் உண்டு.
இந்த எல்லைக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டால், காசா மக்களுக்கு உணவும் கிடைக்கும் வேலைவாய்ப்பும் பெருகும் என்று ஐநா கூறுகிறது.

மின்சாரம்

காசாவைப் பொறுத்தவரை தினந்தோறும் மின்வெட்டுகள் உண்டு. காசாவுக்கு மின்சாரம் கிடைப்பது பெரும்பங்கு இஸ்ரேலிடம் இருந்துதான். காசாவில் ஒரேயொரு மின் உற்பத்தி நிலையம் உண்டு. கொஞ்சம் மின்சாரத்தை எகிப்தும் வழங்குகிறது. ஆனால் காசாவுக்கு தேவைப்படுமளவான மின்சாரம் அதற்கு கிடைப்பதில்லை.
வீட்டிலேயே ஜெனரேட்டர்கள் இருந்தாலும், எரிபொருள் விலை மிகவும் அதிகம்.
காசாவின் மின் உற்பத்தி நிலையம் எகிப்திலிருந்து கிடைக்கும் டீசலையே பெரிதும் நம்பியுள்ளது. ஆனால் பொருள் கடத்தலுக்கான சுரங்கப்பாதைகள் அடைபட்டதிலிருந்து மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
2013ல் டீசல் இல்லாமல் 43 நாட்களுக்கு இந்த மின் உற்பத்தி நிலையம் மூடப்படவேண்டி வந்தது.
அந்நேரம் மின்வெட்டுகள் அதிகமாகி அடிப்படை சேவைகள்கூட மோசமாக பாதிக்கப்பட்டன.
கத்தார் கொடுத்த உதவித்தொகையை வைத்து இஸ்ரேலிடம் இருந்து டீசல் வாங்கி மின் நிலையம் மீண்டும் இயங்க ஆரம்பித்தது என்றாலும் இவ்வாண்டு மீண்டும் மின்வெட்டுகள் அதிகமாகியுள்ளன.
காசாவை ஒட்டிய கடல்பரப்பில் எரிவாயு வயல்கள் இருப்பதாகவும், இதனை எடுத்துப் பயன்படுத்தினால் காசாவின் மின் தேவையையும் பூர்த்தி செய்யலாம், அதைத்தாண்டி வெளியிலும் விற்று முன்னேறலாம் என ஐநா கூறுகிறது.

குடிநீர் மற்றும் துப்புரவு வசதிகள்

காசாவில் குறைவாகவே மழை பெய்யும், குடிநீர் ஆதாரமாக விளங்கும், குடிநீர் தொடர்ந்து கிடைக்கும் அளவிலுள்ள ஏரிகளும் அங்கு இல்லை. எனவே அங்கு தண்ணீர் தட்டுப்பாடும் அதிகம்.
தவிர கடல் நீர் நிலத்தடி நீரில் கலந்து அதுவும் உப்பாகிவிட்டது. காசாவில் குழாய்களில் வரும் தண்ணீரில் 5 சதவீதமான நீர்தான் உலக சுகாதார நிறுவனத்தால் அறிவுறுத்தப்பட்ட தரத்தில் இருக்கிறது.
காசாவிலுள்ள 3,40,000 பேர் குறைவான தரத்திலுள்ள நீரையே குடிக்கப் பயன்படுத்தி வருகின்றனர்.
கழிவு நீரை சுத்திகரிப்பது, சாக்கடை வசதி போன்றவையும் இங்கு பெரும்பிரச்சினைகளாக உள்ளன. இங்குள்ள கழிவு நீரை சுத்தம் செய்யும் மையங்கள் அளவுக்கதிகமான பளுவை சுமக்கின்றன. தவிர இவையெல்லாம் தற்காலிக ஏற்பாடுகளாக நிறுவப்பட்ட இடங்கள்தான். எனவே ஒவ்வொரு நாளும் 90 மில்லியன் லிட்டர்கள் அளவான கழிவுநீர் சுத்திகரிக்கப்படாமல் மத்தியதரைக்கடலில் விடப்பட்டு வருகிறது. இதனால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது, பொதுமக்களின் ஆரோக்கியம் கெடுகிறது, மீன்வளமும் அழிகிறது.
2013 நவம்பரில் மின் தட்டுப்பாடு நிலவியபோது கழிவுநீர் அதிகமாகி, சுத்திகரிப்பு நிலையங்கள் வெள்ளக்காடாகின.
அடுத்த மாதம் புயல் ஒன்று தாக்கியபோது, வெள்ளநீரும் கழிவுநீரும் ஒன்றாகக் கலந்து பெரும் சுகாதார அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருந்தது.

தரவுகள் புகைப்படங்கள் : நன்றி - பிபிஸி

Monday, 14 July 2014

பத்திராஜகொட தேரரே சம்பவத்தின் சூத்திரதாரி: அஸ்கர் மௌலவியின் விளக்கம்

அளுத்கமதர்காநகர் சம்பவங்களுக்கு மூலகாரணமாக அமைந்த காதியவத்த பௌத்த தேரர் தாக்குதல் தொடர்பாக முதலில் கைதாகிய மௌலவி அஸ்கர் இடம்பெற்ற நிகழ்வுகள் தொடர்பாக எம்முடன் பகிர்ந்து கொண்ட தகவல்கள்.

தர்கா நகரில் இல்ஹாருல் இஸ்லாம் அரபுக் கல்லூரியில் கல்வி பயின்று தற்போது தர்காநகரில் குர்ஆன் மத்ரஸாவொன்றில் கடமையாற்றிக் கொண்டிருக்கின்றார்.

சம்பவத்தின் ஆரம்பம்

ஜூன் மாதம் 12ம் திகதி நண்பகல் 12.30 மணியிருக்கும். காதியவத்தையிலுள்ள எனது வீட்டின் முன் எனது அண்ணன் நின்று கொண்டிருந்தார். குறித்த தினத்தன்று எனது தம்பிபணியாற்றும் கடை உரிமையாளரின் திருமண நாள். எனது உம்மா,தங்கையை திருமணவீட்டுக்கு அழைத்துச் செல்வதற்காக எனது அண்ணன் முச்சக்கர வண்டியொன்றினை எடுத்து வருவதற்காக மோட்டார் சைக்கிளில் சொன்றிருந்தார்.


முச்சக்கரவண்டி வீட்டுக்கு முன்பு நிறுத்தப்பட்டிருந்தது. எனது அண்ணன் முச்சக்கர வண்டிக்கு முன்னால் இடது பக்கமாக மோட்டார் சைக்கிளை வைத்துக் கொண்டிருந்தார். அப்போது தேரரின் வாகனம் வந்தது. இரண்டு மூன்று தடவை ஹோர்ன் சத்தம் ஒலித்தது. எனது அண்ணன் மோட்டார் சைக்கிளை முச்சக்கர வண்டிக்குப் பின்னால் நிறுத்தி வைத்தார்.

வாக்குவாதம்

மோட்டார் சைக்கிள் அகற்றப்பட்டதும் தேரரின் வாகனம் முன்னே சென்று நிறுத்தப்பட்டது. வாகனத்தில் இருந்து இறங்கிய வான் சாரதி எனது அண்ணனுக்கு தூஷண வார்த்தைகளால் பேச ஆரம்பித்தார். பொறுக்க முடியாத நிலையில் அண்ணனும் பதிலுக்கு பேச ஆரம்பித்தார். பின் எனது தம்பி உள்ளே இருந்து ஓடி வந்தான். நானும் வேண்கதவை திறந்த படி நின்று கொண்டிருந்தேன். அப்போது அண்ணனுக்கும் வாகன சாரதிக்கும் இடையிலான வாய்த்தர்க்கம் கடுமையாகியது. எனது அண்ணன் வாகனச் சாரதியைப் பிடித்து தள்ளியதுடன் இரண்டு அடியையும் விட்டான். அப்பொழுது வாகனத்திலிருந்த தேரர் இறங்கி வந்தார். வாகனச் சாரதி தேரரை அவ்விடத்தில் நிறுத்தி விட்டு வாகனத்தை ஓட்டிச் சென்றார்.

தேரருடன் உரையாடல்

இதன் பின் தேரருடன் நான் நடந்த சம்பவத்தை கூறிக்கொண்டிருந்தேன். தேரரும் நல்ல முறையில்தான் என்னுடன் பேசினார். சற்று நேரத்தில் அந்த இடத்திற்கு பதிராஜகொட விகாராதிபதி வந்தார். வாகன சாரதி போய்ச் சொன்னதையடுத்து அந்த தேரர் இங்கு வந்து மிகவும் மோசமான முறையில் பேச ஆரம்பித்தார். பத்திராஜகொட தேரர் எனது வீட்டுக்கு முன் வந்து மிகவும் மோசமான வார்த்தைகளால் ஏசினார். அப்போது அந்த இடத்தில் வாகன சாரதி இருக்கவில்லை. என்றாலும் வாகனச் சாரதி சிறிது நேரத்தில் அங்கு வந்தார்.

மன்னிப்பு கேட்டோம்

எனது மாமா ஒருவர் அங்கு வந்து பத்திராஜகொட தேரருடன் பேசினார். பின்னர் தேரர்களுடன் கலந்துரையாடியதுடன் நடந்த தவறுக்காக அவர்களிடம் மன்னிப்புக் கோரினோம். எனது அண்ணனே மன்னிப்புக் கோர வேண்டுமென தேரர்கள் கேட்க அண்ணனும் அவர்களிடம் மன்னிப்புக் கோரினார். பின் அண்ணனும் தம்பியும் திருமண வீட்டுக்கு சென்றனர். பின் நான் தேரர்களுடன் நிலைமைகள் தொடர்பாக கலந்துரையாடிக் கொண்டிருந்தேன்.

பொலிஸாரால் கைது

இச்சம்பவத்தில் இரண்டு மோட்டார் போக்குவரத்து பொலிஸார் குறித்த இடத்துக்கு வந்தனர். அப்போது பதிராஜகொட தேரர் என்னைக் காட்டி இவர்தான் சாரதியைத்தாக்கியவர் எனக் கூறவும் போக்குவரத்து பொலிஸார் என்னைப் பொலிஸாரிடம் அழைத்துச் சென்றனர்.

மணியளவில் பொலிசுக்குப் போய்ச் சேர்ந்தேன். அங்கு என்னிடம் நடந்த சம்பவம் தொடர்பாக வாக்கு மூலம் பெறப்பட்டது. அவ்விடத்திற்கு வந்த குருந்துவத்த தேரர் இவர் என்னை அடிக்கவில்லைசாரதியை இவர் அண்ணன்தான் அடித்துத் தள்ளினார் என்றார்.

பத்திராஜகொட தேரர் பொலிஸ் நிலையத்துக்குள் சப்தமிட்டுக் கொண்டிருந்தார். குருந்துவத்த தேரர் தன்னை அடிக்கவில்லை என தெரிவித்ததால் எவரும் இங்கு வரவேண்டியதில்லை என அங்கு வந்திருந்த சாட்சிகளையும் பொலிஸ் பொறுப் பதிகாரி விரட்டினார். என்றாலும் பதிராஜகொட தேரரை விரட்டவில்லை. ஏரத்தாழ இரண்டு மணித்தியாளத்திற்கு மேலாக பொலிஸ் நிலையத்திற்குள் தங்கியிருந்து கைத்தொலைபேசி மூலம் அடிக்கடி தொடர்புகளை மேற்கொண்டவண்ணம் இருந்தார். பின்னர் அங்கு அதிகமானோர் திரள ஆரம்பித்தனர். பத்திராஜகொட தேரர் உள்ளே இருந்து அங்கு வந்திருந்தவர்களுடன் பேசி விட்டு பின் உள்ளே வருவார்,பொலிஸாருடன் பேசுவார்.

நடவடிக்கை வேண்டும்

பத்திராஜகொட தேரர் பொலிஸ் அதிகாரியை நோக்கி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இன்றேல் நிலைமை விபரீதமாகும் என்றார். அப்படியானால் குருந்துவத்த தேரர் ஆஸ்பத்திரியில் தங்கி சிகிச்சை பெற வேண்டுமென பொறுப்பதிகாரி குறிப்பிட்டார். குருந்துவத்தை தேரரின் வற்புறுத்தலின் பேரில் ஆஸ்பத்திரியில் தங்கி நின்று சிகிச்சை பெற விருப்பம் தெரிவித்தார். இதன் பின்தான் என்னிடம் வாக்குமூலம் பெறப்பட்டது. பின் குருந்துவத்தை தேரர் ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆனார்.

அண்ணன்தம்பி கைது

மணியிருக்கும் போது பொலிஸ் நிலையத்தைச் சுற்றி நூற்றுக்கணக்கானோர் ஒன்று திரண்டனர். எனது அண்ணனையும்தம்பியையும் பொலிஸ் பொறுப்பதிகாரிமணியளவில் கைது செய்து பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தார். என்றாலும் பொலிஸ் நிலையத்தை சுற்றி அனைவரும் நிரம்பியிருந்ததால் அண்ணன்தம்பியை பிற்பகல் மணிக்கே பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.

ரிமாண்டில் வைத்தனர்

மாலை 5.30 மணிக்கு என்னையும்அண்ணனையும்தம்பியையும் ரிமாண்டில் போட்டனர். காலில் விழுந்து மன்னிப்புக் கேட்குமாறும் எம்மைப் பணித்தனர். பொலிஸில் மூன்று பேரிடமும் வாக்கு மூலம் பெறப்பட்டதன் பின்னர் எம்மை களுத்துறை சிறைச்சாலைக்கு அழைத்துச் சென்றனர். சிறைச்சாலையில் 21 நாள் இருந்தேன்.

பொய்யான வாக்குமூலம்

தேரரை அடிக்க வேண்டாமென அழுதோம். அவர்கள் கேட்கவில்லை. அவரை அடித்தார்கள் என ஒரு சாட்சி பொய்ச்சாட்சி வழங்கினார். அவரது மனைவி இப்படி சாட்சியம் அளித்தார். நான் சொல்வது பொய்ச்சாட்சியாக இருந்தால் நானும் எனது கணவரும்பிள்ளைகளும் வாகனத்தில் மோதி சாகவேண்டும் என சாட்சியமளித்தார். என்னைக்காட்டி நான் அடித்ததாகவும் கூறினார்கள். குருந்துவத்த தேரரை வற்புறுத்தியே மனம் மாற்றியுள்ளார்கள்.

எம்மீது தாக்கினர்

எனது தம்பியை பொலிஸ் நிலையம் அழைத்துவருகையில் தேரர்கள் தாக்கியுள்ளனர். அதனால் அவரது முகம் வீங்கியிருந்தது. பொலிஸ் ரிமாண்டில் வைக்கப்பட்டிருந்த போது அங்கு வந்த தேரர்கள் ரிமாண்டில் இருந்த சக கைதிகளைப் பார்த்து அடியுங்கள்கொன்று போடுங்கள் எனச் சத்தமிட்டனர். இவர்களை கொன்றால் உங்களை வெளியே எடுப்போம் எனத் தேரர்கள் கத்தினர் ரிமாண்டில் வைத்திருக்கையில் காலில் வீழ்ந்து மன்னிப்பு கோருமாறு வற்புறுத்தினர். அப்போது அங்கிருந்த பெரும்பான்மைக் கைதிகள் எம்மைத் தாக்கினர். பின்னர் ரிமாண்டிலிருந்த பெரும்பான்மைக் கைதிகள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.

வழக்கு ஒத்திவைப்பு

இப்போது நாங்கள் விடுவிக்கப்பட்டுள்ளோம். வழக்கு விசாரணை ஆகஸ்ட் 6ம் திகதி நடைபெறவுள்ளது. உண்மையான விசாரணை இடம்பெற்றால் நீதி கிடைக்கும் என நம்புகிறேன்.

வீடு தாக்கப்படவில்லை

தர்காநகர் வன்முறைச் சம்பவங்களின் போது எமது வீடு தாக்கப்பட வில்லை. சம்பவ தினத்தன்று மூன்று முச்சக்கரவண்டிகளில் வீட்டை உடைக்க வந்திருக்கிறார்கள். எனினும் பொலிஸாரின் தலையீட்டால் அது தவிர்க்கப்பட்டுள்ளது.
ஸிராஜ் எம். சாஜஹான்
(நன்றி: நவமணி)

Friday, 11 July 2014

ஒரு பாமரனின் கேள்வி

அறிஞர்கள் பெருமக்களிடத்தேயும்,
உலமாக்கள் பெருமக்களிடத்தேயும்
விளக்கத்தை அறிந்து கொள்ள ஆசைப்படும்
ஒரு பாமரனின் கேள்வி


இப்போது பொதுபலசேனா குர்ஆனை பகிரங்கமாகவே விமர்சிக்க ஆரம்பித்து விட்டார்கள்.

இலங்கையின் அரசியலமைப்பின் பிரகாரம் பௌத்தத்திற்கு முதன்மை ஸ்தானம் வழங்கப்பட்ட போதிலும், கூட பல்லின மக்கள் வாழும் நாடு என்ற அடிப்படையில் ஏனைய இன மக்களுக்கும் மத உரிமைகள் வழங்கப்பட்டுள்ளதாக படித்த ஞாபகம்.

ஆனால் இன்று...

''குர் ஆனின் தவறான கருத்துக்களினாலேயே முஸ்லிம்கள் தவறான பாதைகளில் செல்கின்றனர். எனவே முஸ்லிம்கள் குர் ஆனை கைவிட்டுவிட்டு பௌத்தத்தை பின்பற்றுங்கள் என பொது பல சேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞான சார தேரர் அழைப்பு விடுத்துள்ளார்.

மத்திய கிழக்கு நாடுகளில் பாராளுமன்ற முறைமைக்கு மாறாக சட்டத்தை இயற்றி, நடைமுறைப்படுத்தும் சூரா சபை, அதே நடைமுறையை இலங்கையில் செயற்படுத்தி, நாட்டில் முஸ்லிம் மதத்தவர்கள் மூலம் பிரிவினையை ஏற்படுத்த அனுமதி அளிக்க முடியாது. முஸ்லிம்கள் நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்திவிட்டு பழியை பௌத்தர்கள் மீது சுமத்த ஆரம்பித்து விட்டனர்.

நானும் குர் ஆனை படித்திருக்கின்றேன், அதில் பிழையான கருத்துக்களும், பலி வாங்கள்களும், பெண்களை இழிவுபடுத்தும் கருத்துக்களே மேலோங்கி நிற்கின்றன. எனவே குர் ஆனை கைவிட்டு எம்மோடு இணைந்து அமைதியாக வாழ வழியேற்படுத்துவோம் என்று செய்தியாளர் சந்திப்பு ஒன்றின் போது கலகொட அத்தே ஞான சார தேரர் முஸ்லிம் இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.


இது போல இன்னும் பல..

இது
இலங்கையில் வாழும் சிறுபான்மையினத்தவரான முஸ்லிம்களின் அடிப்படை உரிமையை மீறக் கூடியதா? தெரியாமல் தான் கேட்கின்றேன் அரசியலமைப்பின் படி இத்தகைய கருத்துக்களை முன்வைக்க இடமுண்டா?
இது
இலங்கையில் வாழும் சிறுபான்மையினத்தவரான முஸ்லிம்களின் அடிப்படை உரிமையை மீறக் கூடியதா? தெரியாமல் தான் கேட்கின்றேன் அரசியலமைப்பின் படி இத்தகைய கருத்துக்களை முன்வைக்க இடமுண்டா?

ஜம்மியத்துல் உலமா, ஏப்ரல் 2014 இல் விடுத்த விசேட அறிக்கையில் ''அல்-குர்ஆன் ‘தகீய்யா’ எனும் ஒரு கொள்கையைப் போதிப்பதாகவும் அக்கொள்கை பிற சமயத்தவர்களை ஏமாற்றுவதற்கும், அவர்களின் உடமைகளைக் கைப்பற்றுவதற்கும், அவர்களது சொத்துகளை அபகரிப்பதற்கும் அனுமதிப்பதாகவும் அமைந்திருக்கின்றது என சமீபத்தில் ‘பொது பல சேனா’வின் செயலாளர் அல்-குர்ஆன் மீது மிகப் பெரும் அபாண்டமொன்றை சுமத்தியுள்ளார். இவ்வாறான கூற்று உலக முஸ்லிம்களை பொதுவாகவும், இலங்கை வாழ் முஸ்லிம்களைக் குறிப்பாகவும் மிகவும் மனவேதனையடையச் செய்துள்ளது.

இந்த மத நிந்தனை தொடர்பான விவகாரத்தை அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா மாண்புமிகு ஜனாதிபதி அவர்களினதும் மற்றும் அஸ்கிரிய பீட மகாநாயக்க தேரர் அவர்களினதும் கவனத்திற்குக் கொண்டுவரவுள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக உரிய தரப்பினர் காத்திரமான நடவடிக்கைகளை உடன் மேற்கொள்வர் என ஜம்இய்யா எதிர்பார்க்கிறது. பல முஸ்லிம்கள் பொலிஸ் நிலையங்களில் முறையீடுகளை பதிவு செய்துள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும்.

எனவே, இலங்கை வாழ் முஸ்லிம்கள் என்றும் போல நிதானமாகவும், பொறுமையுடனும் நடந்து கொள்ளுமாறு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா கேட்டுக்கொள்கிறது''
எனக் குறிப்பிட்டிருந்தது.

மாண்புமிகு ஜனாதிபதி அவர்களினதும் மற்றும் அஸ்கிரிய பீட மகாநாயக்க தேரர் அவர்களினதும் கவனத்திற்குக் கொண்டு வந்த போது என்ன நடந்தது? நான் நினைக்கின்றேன் அளுத்கம, பேருவளை சம்பவங்கள் இதற்குப் பின் தான் நடந்தது.

நாங்கள் இன்னும் நிதானமாகவும், பொறுமையுடனுமே நடந்து வருகின்றோம்.

இப்போது அதிகமதிகமாக விமர்சிக்கத் தொடங்கி விட்டார்கள். சில வேளை உலமாசபையின் அடுத்த அறிக்கையும் ஆயத்தமாகியிருக்கலாம்.

உலமாக்களே
அறிஞர்களே
இப்போதும் வாயை மூடி வீட்டில் இருந்து கொண்டு அல்லாஹ்விடம் பிரார்த்தித்துக் கொண்டு இருந்தால் போதுமா?
நானொரு பாமரன். தெரியாமல் தான் கேட்கின்றேன் என்ன செய்யலாம் ???

Thursday, 3 July 2014

இராணுவ வெற்றிகளில் கட்டியெழுப்பப்படும் “அல்-கிலாபா” - சில மயக்கங்கள்...!!

ஒரு அமைப்பு திடீரென தன்னை இஸ்லாமிய சாம்ராஜியத்தின் காவலர்கள் என பிரகடனம் செய்கிறது. அதன் தலைவர் தனக்கு பையா (சத்தியப்பிரமாணம் ) செய்யுமாறு வேண்டுகிறார். பல கோத்திரத் தலைவர்களும், ஆயுதக்குழுக்களும், உலகின் பல பாகங்களில் போராடும் போராளியமைப்புக்களும் இவர் கட்டளைக்கு கட்டுப்பட்டு பைஅத் செய்கின்றனர். உலக முஸ்லிம் உம்மாவும் இந்த வேண்டுகோளை மானசீகமாக ஆதரிக்கிறது. எல்லாம் சரி மூன்று கேள்விகளைத் தவிர.

முதலாவது, இஸ்லாமிய அரசின் அமீருல் முஃமினீன் என்பவர் மறைந்திருந்து கொண்டு தன்னை முஸ்லிம்களின் தலைவராக வெளிப்படுத்துகிறார். அவரது பழைய இரண்டு மூன்று புகைப்படங்களை மட்டும் வைத்துக்கொண்டு. அவர் பேசிய ஒலிநாடாக்களின் துணையுடன். இது இஸ்லாமிய வரலாற்றில் நிகழாத ஒரு நிகழ்வாகும். நபி தன்னை வெளிப்படுத்திய நிலையிலேயே யத்ரிப்பின் (மதீனா) கிலாபாவை ஒழுங்கமைத்தார். பின் வந்த உத்தம சஹாபாக்களும் அவ்வாறே வெளிப்படையாக செயற்பட்டனர். ஆனால் இங்கோ நிலை தலைகீழாக உள்ளது. உமர் ரழி அவர்கள் கூறினார்கள்: யார் முஸ்லீம்களின் கருத்து பரிமாறல்கள் இல்லாமல், அவர்களது ஆலோசனையை பெறாமல் ஒரு மனிதருக்கு பைஅத் செய்கிறானோ அவர் தன்னை ஏமாற்றத்திற்கும் அழிவிற்கும் உட்படுத்திக் கொண்டார்.'

இரண்டாவது, முற்றாக ஈராக்கினை கைப்பற்றாத நிலையில், சிரியாவை அசாத்தின் இராணுவத்திடம் இருந்து பூரணமாக மீட்க முடியாத நிலையில், அது தன்னை இஸ்லாமிய கிலாபா என்கிறது. அது மட்டுமல்ல அவசர அவசரமாக ஜோர்தான் நோக்கியும், சவுதி அரேபியா நோக்கியும் அதன் அணிகளை நகர்த்துகிறது. வட ஆபிரிக்காவையும், மேற்காசியாவையும், தெற்காசியாவையும், கிழக்காசியாவையும், அவுஸ்திரேலியாவையும் இஸ்லாமிய ஆளுகைக்குள் கொண்டு வருவோம் என சூளுரைக்கிறது. அதற்கான வரைபடங்களை வெளியிடுகிறது. இராணுவவியலில் இது முட்டாள்தனமான செயற்பாடு என்பதனை விட ஒரு பொய்யான இராணுவ புனைதல் என்றே நோக்க வேண்டியுள்ளது. ஒரு கெரில்லாக் குழு மரபு இராணுவமாக பரிணமித்த நிலையில் அது பேசும் வேடிக்கையான வார்த்தைகள் இவை.


மூன்றாவது, இந்த ஐ.எஸ். எனும் அமைப்பின் கிலாபா பிரகடனத்தை உலகலாவிய முஸ்லிம் உம்மாவிற்காக போராடும் அல்லது அதற்காக உழைக்கும் ஜிஹாதிய ஆதரவு மார்க்க அறிஞர்கள் வரவேற்காமையாகும். கிலாபாவின் தேவையையும், அமீருல் முஃமினீனின் அவசியத்தையும் வலியுறுத்தும் இவர்கள் I.S. (Islamic State)-ன் வருகையை சில இராணுவ அரசியல் தேவைகளின் அடிப்படையில் அங்கிகரித்த போதிலும் அவர்களது கிலாபா பிரகடனத்தை ஆதரிக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது. I.S. (Islamic State)-ன் பிதா மகனான முஸ்அப் அல்-ஸர்க்கவி (ரஹ்) அவர்களை வழி நடாத்திய அய்மன் ஸவாஹிரி (ரஹ்) அவர்களாகட்டும், சிரியாவினதும் ஈராக்கினதும் இவர்களது போராட்டத்திற்கு போராளிகளை அனுப்பும் சப்ளை பொட்களை வழிநடாத்திய அபூ-கதாதா (ரஹ்) ஆகட்டும், யாருமே இந்த பிரகடனத்தை அங்கீகரிக்கவில்லை. ஆனால் அவர்கள் பிரகடனத்தின் தேவையை மறுக்கவில்லை.

“கிலாபா” மற்றும் “அமீருல் முஃமினீன்”, இந்த இரண்டு வார்த்தைகளுமே ஒரு முஸ்லிமின் ஆன்மா, மனம், புத்தி, ஜீவன், உடல் என அனைத்திலும் எழுந்து நிற்கும் தீராத கனவு. இரத்தினங்கல் பட்டை தீட்டும் முன்பு சாதாரன கூலாங்கல் போலவே காட்சி தரும். அது போன்றுதான் ஒரு முஸ்லிமின் கிலாபத் பற்றிய அறிவு. அண்மைய ஈராக்கிய நிகழ்வுகள் இது பற்றி தெரியாத, அறியாத முஸ்லிம்களின் உள்ளங்களையும் தெளிவுபெறச் செய்து தமக்கு எதிராக நிகழ்த்தப்படும் குப்பாரிய வன்கொடுமைகளிற்கு எதிராக பாதுகாப்பளிக்கும் முஸ்லிம் சாம்ராஜியத்தின் எழுச்சியையும் வருகையையும் ஆதரிக்கவும், அதன்பால் அவர்களை மானசீகமாகவும் உணர்வுபூர்வமாகவும் ஈர்க்கச் செய்கிறது.

ஈராக்கில் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராக போராடிய ஒரு அணி, பின்னர் 2006-ல் I.S.I. (Islamic State of Iraq) என்ற பெயரில் அது இயங்க ஆரம்பிக்கிறது. இஸ்லாமிக் ஸ்டேட் எனவும், அமீர் முஆவியாவின் ஆட்சியை உருவாக்குவது எனவும் பிரகடனம் செய்கிறார்கள். பலூஜாவை தளமாக கொண்டு அது தன்னை மேலும் பல கட்டமைப்புக்கள் கொண்ட அணியாக வடிவமைக்கிறது. சிரியாவில் பஸர் அல்-அஸாதிய அரசிற்கு எதிரான சண்டைகளில் பங்கேற்க இது ஒரு அணியை அனுப்புகிறது. அதில் பிளவு ஏற்பட்டு Jabah al-Nusrah (JN) எனும் அணி தனியாக இயங்குகிறது. அதன் கட்டளை தளபதியாக அஹமட் ஜுலானி செயற்பட ஆரம்பிக்கிறார். அதாவது I.S.I.-யின் பைஅத் எனும் உறுதிப் பிரமாணத்தை உடைத்து கொண்டு.

பின்னர் இந்த I.S.I. அணியினர் நேரடியாகவே தங்கள் இன்னொரு அணியை சிரியாவில் இறக்குகிறார்கள். சில காலங்களில் அவர்கள் தங்களை I.S.I.S (Islamic State for Iraq & Sham) என பிரகடனம் செய்கிறார்கள். இவர்கள் I.S.I.L. (Islamic Stae for Iraq & Levant) எனவும் அழைக்கப்படுகிறார்கள். பெருமளவில் செச்னியர்களை கொண்ட போராளிக்குழுக்கள் இவர்கள் சார்பாக சிரியாவில் சமரிடுகிறார்கள். பின்னர் குளோபல் ஜிஹாத் எனும் பெயரில் உலகின் பல பாகங்களில் இருந்தும் வந்த போராளிகள் இவ்வணியில் இணைந்து சண்டையிடுகிறார்கள். ஈராக்கின் பல நகரங்களை வெற்றி கொண்ட இவ்வணியினர் ரமழானில் நல்ல செய்தி ஒன்றை உலக முஸ்லிம்களிற்கு அறிவிப்பதாக கடந்த ஜுன் மாதம் செய்தி வெளியிடுகின்றனர் டிவீட்டரில். பின்னர் சில நாட்களிற்கு முன்னர் “இஸ்லாமிய கிலாபா” பிரகடனத்தை வெளியிடுகின்றனர். இதன் பின்னர் தங்களை I.S. (Islamic State) என அழைத்து கொள்ள ஆரம்பிக்கின்றனர்.

இப்போது தான் முஸ்லிம் உம்மாவிற்கு இது பற்றிய விழிப்புணர்வு உருவாகின்றது. அவர்களை அவசரமாகவும் ஆரவாரமாகவும் ஆதரிக்கின்றனர். எந்த அளவிற்கு என்றால் இந்தோனசியாவில் ஒன்று திரண்டு ஐ.எஸ். அமைப்பின் பிரதிநிதி முன்பு வீடியோ கொன்ஸ்பிரன்ஸ் மூலம் பைஅத் கொடுக்கும் அளவிற்கு. அவர்கள் பற்றிய கதைகள், காட்சிகள், சித்திரங்கள் என முஸ்லிம் மீடியாக்கள் அமர்களப்படுத்துகின்றன. நியாயமான எண்ணங்களின் தோற்றப்பாடுகள் இவை.

ஐ.எஸ். எனும் கிலாபாவை பொருப்பேற்றுள்ள அபூபக்கர் அல்-பக்தாதி அவர்களை அமெரிக்காவின் கைக்கூலி என்றோ அவரது அமைப்பினரை இஸ்ரேலின் மேசனரி என்றோ கொச்சைப்படுத்துவது அல்ல இந்த எழுத்துக்களின் நோக்கம். அவர்களின் கிலாபா பிரகடனம் என்பது சில இராணுவ வெற்றிகளை மையப்படுத்தி எழுப்பப்பட்ட மாயையான கோபுரம் எனும் பார்வையை உணர்த்துவதற்காகவும், தமிழ் பேசும் முஸ்லிம் உம்மா இது தொடர்பில் சில புரிதல்களை உள்வாங்குதவன் அவசியம் பற்றியதுமே.

I.S. என்ற வார்த்தை பலமானது. அது உண்மையாக இயல்பாக நிகழ வேண்டும். அதன் அமீருல் முஃமினீன் எனும் முஸ்லிம்களின் தலைவர் அன்று காட்டரபிகள் நபி பெருமானார் (ஸல்) அவர்களின் கையை முத்தமிட்டு நின்றது போல் மக்கள் முன்பாக சாதாரணமாக வெளிப்படல் வேண்டும். உறுதியான இஸ்லாமிய கிலாபாவின் இாஜியத்தை அமைத்ததன் பின்னர் அதன் விரிவாக்கங்களை மேற்கொள்ள வேண்டும். அவரின் தலைமையையும், அவரது ஆட்சியையும், உலக முஸ்லிம் உம்மாவின் அஹ்லுல் சுன்னத் வல்-ஜமாவின் இமாம்கள் பெருமளவில் அங்கீகரிக்க வேண்டும்.

இது நிகழ்ந்தால் நாமும் I.S.-ன் குடிமகன்கள் என எண்ணி மகிழ்வோம்.

by:Abu Maslama
நன்றி: http://khaibarthalam.blogspot.com/