Saturday, 18 February 2012

நானும், நான் செய்த தவறுகளும் - கலாபூசணம் புன்னியாமீன் (அங்கம் - 01)

இதுவொரு வித்தியாசமான தலைப்பாக இருக்கலாம்.

ஒவ்வொரு மனிதரும் தம் வாழ்வில் தெரிந்தோ தெரியாமலோ,  விரும்பியோ விரும்பாமலோ பல தவறுகளை செய்துகொண்டே இருக்கின்றனர்.

அடுத்தவர்களின் தவறுகளை நாங்கள் தேடி விமர்சிப்பதைவிட நாம் செய்த தவறுகளையும்,  செய்யும் தவறுகளையும் மீளாய்வு செய்து பார்க்கும்போது எமக்குள் பல படிப்பினைகள் தோன்றக் கூடும். சிலநேரங்களில் நாம் பெற்றுக் கொள்ளும் படிப்பினைகள் காலத்தைத் தாண்டிவிடுவதினால் எமக்கு அர்த்தமற்றுப் போனாலும் இனிவரும் தலைமுறையினருக்கு அவை ஒரு படிப்பினையாக இருக்குமாயின் எமது மீளாய்வில் அர்த்தம் இருக்கும்.

நான் செய்த தவறுகள்,  நான் செய்துகொண்டிருக்கும் தவறுகள் இவற்றைப் பற்றி நான் மீளாய்வு செய்வதற்கோ, வெளிப்படையாகக் கூறுவதற்கோ வெட்கப்படவில்லை. என்னால் செய்யப்பட்ட தவறுகள் நான் வாழும் காலத்தில் எனக்கு எத்தகைய பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளன. இந்த தவறுகளை நான் களைவதற்கு எத்தகைய முயற்சிகளை மேற்கொண்டேன். அம்முயற்சிகள் எத்தகைய தாக்கத்தினை ஏற்படுத்தின. என் தவறு அடுத்து வரக்கூடிய தலைமுறையினருக்கு எவ்வாறு படிப்பினையாக அமையும் என்ற விடயங்களில் கூடிய கரிசனையைக் காட்டி இத்தொடரினை எழுத முடிவெடுத்துள்ளேன்.

ஆனாலும் இத்தொடர் ஓர் ஒழுங்கமைப்பில் அமையாது.

ஒரு மனிதன் என்ற வகையில் என் வாலிபப் பருவத்தில் நான் விட்ட தவறுகள், என் குடும்ப வாழ்க்கையில் விட்ட தவறுகள்,  என் எழுத்து வாழ்க்கையில் விட்ட தவறுகள், தற்போதும் நான் விட்டுக் கொண்டிருக்கும் தவறுகள்.... என் வாழ்க்கை வட்டத்தின் சகல பருவங்களிலும் என்னால் நடந்ததாக  நான் கருதும் அல்லது என்னால் இனங்கண்டு கொள்ள முடியுமான அனைத்துத் தவறுகளையும் ஒவ்வொன்றாக எடுத்து ஆராய்வதே எனது நோக்கமாகும்.

இதுவொரு வித்தியாசமான முயற்சியாக இருந்தாலும்கூட எதிர்கால சந்ததியினருக்கு நான் சொல்லும் ஒரு செய்தியாகவே இதனைப் பார்க்கின்றேன்.

எனவே இது குறித்து உங்கள் கருத்துக்களை பரிமாறிக் கொள்வீர்களாயின் இதனை மேலும் மேலும் செப்பனிட்டு என்னால் தர முடியும் என கருதுகின்றேன்.

அனுபவம் : இதுவொரு படிப்பினையாக அமையட்டும். (அங்கம் - 01)

எந்தவொரு விடயத்தையும் நாளை செய்வோம்,  நாளை மறுநாள் செய்வோம்,  அடுத்தவாரம் செய்வோம்,  அடுத்த மாதம் செய்வோம்... என ஒத்திவைக்கும் பழக்கம் எம்முள் பலரிடம் காணப்படுகின்றது.

- இதற்கு நானும் விதிவிலக்கானவனல்ல.

இவ்வாறு காலம் கழிப்பதனால் என் வாழ்க்கையில் ஏற்பட்ட ஒரு சம்பவத்தை முதலில் பரிமாறிக் கொள்கின்றேன். பொதுவாக என் வாழ்க்கையில் ஒரு விடயத்தை எடுத்தால் அதனை பிற்படுத்தி செய்யும் மனோநிலை என் வாழ்வில் நான் மேற்கொள்ளும் பெரும் தவறாகும். இதனால் நான் பல இழப்புகளையும்,  பாதிப்புகளையும் சந்தித்திருக்கின்றேன்.

எனது வலப்பக்கக் கண்ணில் வெள்ளை படர்தல் (கெற்றாக்) சுமார் மூன்று நான்கு வருடங்களுக்கு முன்பே ஏற்பட்டுவிட்டது. எனது குடும்ப வைத்தியர் கூட இதற்குரிய சிகிச்சையைப் பெற்றுக்கொள்ளும்படி  பல தடவைகள் என்னை எச்சரித்துள்ளார்.  நான் ஒரு நீரிழிவு நோயாளி. சுமார் 19 வருடங்களாக நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு கடந்த ஐந்து ஆண்டுகளாக இன்சுலிங் ஊசி போட்டுக் கொண்டிருக்கின்றேன். ஒரு நீரிழிவு நோயாளி என்ற அடிப்படையில் கண்,  சிறுநீரகம்,  இதயம் போன்றவற்றில் ஏற்படக்கூடிய நோய்களைப் பற்றி தெரிந்துவைத்துள்ள நான் கூடிய கரிசனை காட்டியிருக்க வேண்டும்.

என் வலக் கண்ணில் வெள்ளை படர்தல் ஏற்பட்ட போதிலும்கூட, இடக்கண் நூறு வீதம் தெளிவாக இருந்தது. இதனால் வாசிப்பதிலோ அல்லது ஏனைய விடயங்களிலோ எனக்கு சிரமமும் இருப்பதாக தெரியவில்லை. இதனால் கடந்த மூன்று நான்கு வருடங்களாக வலக் கண்ணில் காணப்பட்ட வெள்ளை படர்தலை சத்திரசிகிச்சை மூலமாக அகற்ற வேண்டும் என நினைத்தாலும்கூட,  என் உதாசீனப் போக்கினால் அதனைப் பிற்போட்டே வந்துள்ளேன். சுமார் ஒன்றரை வருடங்களுக்கு முன்பு கண் சிகிச்சை நிபுணர் டாக்டர் சீமன் அவர்களிடம் சத்திரசிகிச்சை செய்யவென சென்று இரத்தத்தின் குளுகோசின் அளவு கூடியதினால் டாக்டர் அதனைப் பிற்போட்டார். நானும் அதனை பெரிதுபடுத்தவில்லை.

இந்நிலையில் என் வலக் கண்ணில் முழுமையாகப் பார்வையிழந்த நிலையில் வலியும் ஏற்படத் தொடங்கியது. என் வலது கண் நன்றாக பாதிக்கப்பட்டுள்ளமை எனனாலே உணர்ந்துகொள்ளக் கூடியதாகவும் இருந்தது. இடது கண்ணை ஒரு கையால் மூடிக்கொண்டு வலது கையால் பார்க்க எத்தனிக்கையில் எதுவித பார்வையும் இல்லாதிருந்தது. இறுதியில் 2010 டிசம்பர் மாதத்தின் அப்போது கண்டியில் புகழ்பெற்று விளங்கிய  டாக்டர் சீமனிடம் கண் சத்திரசிகிச்சைக்காக சென்றேன். டாக்டர் சீமன் அவர்கள் கண்டியில மாத்திரமல்ல இலங்கையிலே புகழ்பெற்றவர். சர்வதேச ரீதியில்கூட விசேட சத்திரசிகிச்சைகளுக்காக அடிக்கடி வெளிநாடுகளுக்கு செல்பவர். இலங்கையில் வடக்கு பகுதியில் இடம்பெற்ற யுத்த நிலையில்கூட அப்பிரதேச மக்களுக்கு இவர் ஆற்றிய சேவையை தற்போதும் அம்மக்கள் நன்றியுடன் நினைவுகூர்வர். அரசாங்க வைத்தியசாலையில் கண் தொடர்பாக கைவிடப்பட்ட பலருக்கு இவர் சிகிச்சையளித்து வெற்றி கண்டதை ஒரு ஊடகவியலாளர் என்ற வகையில் நான் தெரிந்து வைத்திருந்தேன். 

என் கண்ணைப் பரிசீலித்த டாக்டர் சீமன் ''சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டாலும் என் பார்வை மீளத் திரும்பும் நிகழ்த்தகவு ஐம்பதுக்கு ஐம்பது தான்'' எனக் கூறினார். உண்மையிலேயே எனக்கு பேரதிர்ச்சியானது. அனுபவமிக்க டாக்டர் அவ்வாறு கூறியதும் முதற் கட்டமாக எனது கவனயீனத்துக்காக வேண்டி கவலைப்பட்டேன். என்னையறியாமல் என் கண்கள் ஊற்றெடுத்தன.

என் வாழ்க்கையில் மூலமாக இருப்பதே எழுத்தும், வாசிப்புமாகும். இந்நிலையில் என் பார்வை பாதிக்கப்படுமென்றால் நான் என் வாழ்க்கையையே இழந்துவிட்டதாககத் தான் கருதவேண்டும். எப்படியோ டாக்டரின் விசேட பரிசோதனைகளுக்குப் பின்பு சத்திரசிகிச்சைக்குட்படுத்தப்பட்டேன். எனது அட்டையில் ஐம்பதுக்கு ஐம்பது என்பது டாக்டர் வட்டமிட்டு குறிப்பிட்டிருந்தார். இறைவனின் அருளினாலும்  டாக்டரின் அனுபவத்தினாலும் எனது பார்வை மீளக் கிடைத்தது. இருப்பினும் இன்னும் பார்வை நிழலுருப் பரிமாணத்தில் அமைந்துள்ளமையினால் அதற்காக நான் இதுவரை வைத்திய சிகிச்சை செய்து கொண்டே இருக்கின்றேன்.

இங்கு முக்கிய விடயம் என்வெனில் என் வலக் கண்ணில் பார்வையிழந்ததும் வலக்கண் புலன்நரம்புகளும் படிப்படியாக செயலிழக்க ஆரம்பித்துள்ளன. இதை எம்மால் உணர்ந்துகொள்ள முடியாது. உரிய சத்திரசிகிச்சையை பிற்போடாமல் உரியகாலத்திலேயே நான் மேற்கொண்டிருப்பேன் எனில் இத்தகைய பாதிப்புகளை தவிர்த்திருக்கலாம்.

ஒரு காரியத்தை பிற்போடுவதினால் நாம் பல இழப்புக்களை சந்திக்கின்றோம். அதில் உதாரணத்திற்காகவே எனது அனுபவத்தில் ஒரு சிறு துளியினை இவ்விடத்தில் பகிர்ந்து கொண்டேன்.  ஏனெனில்,  இது அனைவருக்கும் ஒரு படிப்பினையாக அமைய வேண்டும் என்பதற்காகவே.

என் கண் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்படுவதற்கு முன்பு இது பற்றி எழுதிய கட்டுரையொன்றை நான் கீழே இணைத்துள்ளேன். இக்கட்டுரை இலங்கையில் ஞாயிறு தினக்குரலிலும், பல இணையத்தளங்களிலும் பிரசுரமானதாகும்.

இக்கட்டுரையை படிக்கும்போது தெரியாத் தனமாக நான் விட்ட தவறென இதைக் கருதமாட்டேன். தெரிந்துகொண்டும் விட்ட மாபெரும் தவறுகளனில் ஒன்றாகவே இதனை நான் இன்றும் பார்க்கின்றேன்.

கவனயீனங்கள், அறியாமை தேகாரோக்கியத்தைப் பாதிக்கும்


உலகில் வாழும் ஒவ்வொரு மனிதனும் அங்கசம்பூர்ணமாகவும்,  தேகாரோக்கியமாகவும் வாழவே விரும்புகின்றான். பொதுவாக தேகாரோக்கியமாக வாழ்ந்தால் கூட,  சில சந்தர்ப்பங்களில் அவனின் சில கவனயீனங்கள் மற்றும்  அறியாமை காரணமாக சில தேகாரோக்கிய பாதிப்புகள் அவனில் செல்வாக்குச் செலுத்தத் தொடங்குகின்றது. இதன் காரணமாக அங்கசம்பூரணமாகவும், தேகாரோக்கியமாகவும் பிறந்த ஒருவன் தனது சில அங்கங்களை இழக்கவும், நோய்வாய்ப்படவும் ஏதுவாக அமைகின்றது. மறுபுறமாக இயற்கையிலே சிலர் அங்கவீனர்களாக, இயற்கை நோயாளிகளாகப் பிறப்பதும் உண்டு. இந்த பிறவி நிலை காரணமாக உடல் ஊனம், செவி ஊனம், பார்வை ஊனம்,  மந்தபுத்தி நிலை போன்ற பல நிலைகள் ஏற்படுகின்றன. இயற்கையாகவோ அன்றேல் விபத்துக்கள்,  கவனயீனங்கள்; அறியாமைகள் காரணமாகவோ ஏற்படக்கூடிய அங்கவீன நிலைகளோ மனிதன் என்ற வகையில் எம்மால் குறைவான நிலையில் மதிப்பிடுவது தவறாகும். அங்கவீனர்களும் மனிதப் பிறவிகளே. அவர்களுக்கும் சமூகத்தில் சமவுரிமை வழங்கப்பட வேண்டும் என்பதே மனிதாபிமான நிலை.

"சமூகத்தில் அவர்களாலும் உயர்ந்த நிலைக்கு வரமுடியும். சமூகத்தில் அவர்கள் குறை பிறவிகள் அல்லர்" போன்ற எண்ணக்கருக்களை விளைவிப்பதற்காக வேண்டி குறித்த அங்கவீனம் தொடர்பாக தேசிய, சர்வதேச ரீதியில் விழிப்புணர்வுகளை ஏற்படுத்துவதற்காக வேண்டி பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதையும் அவதானிக்கின்றோம். உலகிலே மனிதர்களாக பிறந்து விட்ட ஒவ்வொருவரும் தாம் பெறும் அறிவு.  அனுபவம்.  ஆற்றல் என்பவற்றினூடாக விழிப்புணர்ச்சி பெறும் போது மனிதனின் தேவைகளும் துலக்கம் பெற்று ஈடேறி வருவதை நாம் கண்கூடாக காண்கின்றோம்.

இந்த அடிப்படையில் விழிப்புலனில் ஏற்படக்கூடிய குறைபாடு காரணமாக பார்வையை இழந்துள்ளோரை கௌரவிக்கவும், அவர்கள் பற்றிய உணர்வுகளை ஏற்படுத்தவும் அத்தகையோருக்கு உதவிகளை வழங்குவதற்கும் ஒக்டோபர் மாதம் 15ஆம் திகதி சர்வதேச விழிப்புலனற்றோர் தினம் அல்லது வெள்ளை பிரம்பு தினமாக அனுஸ்டிக்கப்படுகின்றது.

பொக்கிஷமாகப் பாதுகாக்க வேண்டிய பொருட்களைக் கண் மாதிரி பாதுகாக்க வேண்டும் எனச் சொல்வது வழக்கம். கண் என்பது அத்தனை பத்திரமாக,  பொக்கிஷமாகப் பாதுகாக்கப்பட வேண்டியதொரு உறுப்பாகும். நமது உள்ளத்து உணர்ச்சிகளைப் பிரதிபலிப்பவை கண்களே. கண்களில் உண்டாகிற பிரச்சினைகள் ஆரோக்கியத்துக்கு மட்டுமின்றி,  அழகுக்கும் உகந்ததல்ல.

இந்த உலகத்தைக் கண்டு இரசிப்பதற்கு நமக்கு அளிக்கப்பட்டிருக்கும் அதிசய உறுப்பு கண்ணாகும். மனிதனின் கண் என்பது ஒளியை உணர்வதற்கு உதவும் ஓர் உறுப்பாகும். வெவ்வேறு விதமான ஒளியை உணரும் உறுப்புகள் பல விலங்குகளிடையே காணப்படுகின்றன. மிக எளிய கண்கள் சுற்றுப்புறத்தில் உள்ள ஒளி அல்லது இருளை மட்டும் கண்டு உணரவல்லவை. இன்னும் மேம்பட்ட (complex) கண்கள்,  காட்சிகளைப் பார்க்கும் திறன் அளிக்கக்குடியவை. பாலூட்டிகள்,  பறவைகள், ஊர்வன,  மீன்கள் உட்பட்ட பல மேல்நிலை உயிரினங்கள் இரு கண்களைக் கொண்டுள்ளன. இவ்விரு கண்களும் ஒரே தளத்தில் அமைந்து ஒரே முப்பரிமாணப் படிமத்தை (binocular vision) காண உதவுகின்றன. மனிதர்களின் பார்வையும் இவ்வாறானதே; இரு கண்களும் வெவ்வேறு தளங்களில் அமைந்து இரு வேறு படிமங்களை (monocular vision) காண உதவுகின்றன. இந்தக் கண்ணகளில் ஏற்படக்கூடிய பாதிப்புக்களே பார்வையீனத்தை ஏற்படுத்துகின்றன. இத்தகைய பார்வையீனம் இயற்கையாக அமையலாம். அன்றேல் விபத்துக்கள்,  நோய்கள் காரணமாக அமையலாம்.

நமது கண் ஒரு நிழற்படக்கருவியைப்  போன்று இயங்குகிறது. ஒளியின் உதவியுடன் ஒரு நிழற்படக்கருவி   பொருட்களைப் படம் பிடிப்பதைப் போல,  நமது கண்ணும் ஒளியின் உதவியுடன் பொருட்களின் உருவத்தை கணப்பொழுதில் படம்பிடித்து,  மனதில் பதிவு செய்து,  பின்பு அதை மூளையில் விருத்தி செய்கிறது. கண்ணின் அனைத்து பாகங்களும் ஒருங்கிணைந்து,  ஒரு குழுவைப் போன்று இயங்கி நமக்குப் பார்வை அளிக்கிறது. இதில் விழிப்படலம் என்ற பாகம் முக்கிய பங்கு வகிக்கிறது. கருமையான ‘கண் மணி”க்குள் நுழையும் ஒளிக்கதிர்களை, விழிப்படலம் திசைதிருப்புகிறது. திசை திரும்பிய ஒளிக்கதிர் ‘கண்மணி”க்குப் பின்னால் உள்ள ‘வில்லையைச் சென்றடைகிறது. இந்த வில்லை தனது உருவத்தை மாற்றிக் கொண்டு,  தொலைவில் மற்றும் அருகில் உள்ள பொருட்களின் மீது ஒளிக்கதிர்களை ஒருமுனைப்படுத்துகிறது. இதனாலேயே ஒரு பொருள் எமக்குப் புலப்படுகிறது.

கண்பார்வையற்ற விழிப்புலனற்ற மானிடர்பால் எமது கவனம் ஈர்க்கப்பட வேண்டிய நல்லதோர் வாய்ப்பினை உலகுக்கு துலாம்பரமாக வெளிச்சமிட்டு காட்டுவதற்காகவே இவ்வெள்ளைப் பிரம்பு தினம் உலகளாவிய ரீதியில் அனுஸ்டிக்கப்படுகிறது. வெள்ளைப் பிரம்பு தினம் என்றாலே மூக்கின் மீது விரல் வைத்து சிந்திப்பவர்கள் இதன் தாற்பரியத்தை உணராதிருப்பது சற்று கவலைக்குரியதாயினும் இன்றைய நிலையில் வெள்ளைப் பிரம்பு தினம் சமூக ரீதியில் மேலெடுக்கப்பட்டு எல்லோரது கவனத்தையும் ஈர்த்து வருவதும் அவதானிக்கத்தக்கதொன்றாகும்

மூன்றாம் உலக நாடுகளை விட மேற்கத்தேய நாடுகளில் வெள்ளைப்பிரம்பு தினத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதைக் காண்கிறோம். ‘வெள்ளைப் பிரம்பு' உலக விழிப்புலனற்ற சம்மேளனத்தினால் 1969 ஒக்டோபர் 15 முதல் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. இவ்விடத்தில் இதன் பின்னணியினை நாம் ஆராய்வோமாயின் அது எம்மை இரண்டாவது உலக மகாயுத்தத்தின் இறுதிக்கு எம்மை இட்டுச் செல்கின்றது.

இந்த யுத்தத்தினை முடிவுக்கு கொண்டு வருவதற்கு அமெரிக்கா ஜப்பானில் ஹிரோஷிமாவிலும், நாகசாகியிலும் அணுகுண்டை வீசியது  உலக வரலாற்றால் மறக்க முடியாத ஒருகரை படிந்த நிகழ்வாகும். இன்றும் கூட இப்பகுதிகளில் பிறக்கின்ற குழந்தைகள் பல குறைபாடுகளுடனேயே பிறப்பதை நாம் செய்திகள் மூலம் அறிகின்றோம். அவற்றுள் முக்கியமான ஒன்றாக விழிப்புலன் அற்றோரின் நிலையினையும் காண்கின்றோம். இவ்வாறு பெருமளவினோர் ஜப்பானில் பார்வை இழக்கவே அதற்கான சிகிச்சையினை பெற்றுக்கொள்வதற்காக அவ்வேளை ஜப்பானில் பிரபல்யமாக இருந்த வைத்தியர் Hey யை மக்கள் நாடினர். தம்மை நாடி வந்தோரில் கூடியளவிலானோரின் பார்வையை வைத்தியரால் பெற்றுக்கொடுக்க முடியவில்லை. இத்தகையதொரு பரிதாபகரமான நிலைமையை எதிர்நோக்கிய வைத்தியர் Hey மனிதர்கள் என்ற வகையில் அவர்களையும் சமூகத்தில் நடமாட வைப்பதற்கு வழிதேடினார். அதன் பிரதிபலனாக உருவானதே வெள்ளைப் பிரம்பாகும். வைத்தியர் Hey யின் சிந்தனையில் விசையும் திசையும் (Mobility and Oriyantation)உதித்தது. ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு ஆபத்து ஏற்படாத வண்ணம் நகர்வதற்கு பயன்படுத்திய முறையில் வெள்ளைப் பிரம்பு மகத்துவம் பெற்றது.

வெள்ளைப் பிரம்பைப் பயன்படுத்துவோர் விழிப்புலனற்றோர் ஆவர். இவ்விழிப்புலனற்றோர்,  ஒரு இடத்திலிருந்து இன்னோர் இடத்திற்கு நகரும்போது அல்லது நடமாடும்போது அவர்களுக்கு பக்கத்துணையாக தாம் நகரும் இலக்கை நோக்கிய பயணத்திற்கும் வெள்ளைப் பிரம்பைப் பயன்படுத்துகின்றனர்.

எல்லாவற்றிற்கும் மேலாக,  விழிப்புணர்வு உள்ளோர் வெள்ளைப் பிரம்பினை பயன்படுத்தி வரும் ஒருவரை விழிப்புலனற்ற ஒருவர் என்று இனம் கண்டு கொள்ளவும்,  அவர்களுக்கு உதவுவதற்கும் வெள்ளைப்பிரம்பு உதவுகின்றது. இந்த இயந்திர யுகத்தில் தங்களுக்கென ஒரு துணையாக இவ்வெள்ளைப் பிரம்பை உருவாக்கி அதனை எங்களது கையிலேயே துணையாகத் தந்து எவரது உதவியுமின்றி தாமாகவே நகருவதற்கு இவ்வெள்ளைப் பிரம்பு ஒரு மனிதனாகவே உதவுலவது விழிப்புலனற்றோருக்குக் கிடைத்துள்ள ஒரு வரப்பிரசாதமாகும். இதற்கான உலக அங்கீகாரம் 1969 இல் கிடைத்தது.

கண்கள் சம்பந்தப்பட்ட சிலபொது விடயங்களை இவ்விடத்தில் தெரிந்து கொள்வது பயனுடையதாக இருக்கலாம்.

முக்கியமாக வரக்கூடிய கண் சம்பந்தமான நோய்கள்

கிட்டப் பார்வை,  தூரப் பார்வை,  பார்வை மந்தம்,  கண்ணில் சதை வளர்தல்,  கண்ணில் பூவிழுதல்,  கண்களில் உள்ள மெல்லிய நரம்புகளில் இரத்தம் உறைதல் காரணமாகப் பார்க்கின்ற பொருட்கள் கலங்களாகத் தெரிதல்,  கண்ணில் நீர்வடிதல்,  மாலைக்கண்,  வெளிச்சத்தைப் பார்க்க முடியாமை,  கண் கோளாறு தொடர்ந்து இருப்பதால்,  அதன் மூலமாக வரும் தலைவலி,  தொற்று நோய்க் கிருமிகள் மூலம் வரும் கண் நோய்,  மஞ்சள் காமாலை மூலமாக வரும் நோய்,  கண் கோளாறு மூலமாக தூக்கமின்மை,  வெள்ளெழுத்து என்னும் கண்பார்வைக் குறைவு இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.

******

இரண்டு கண்களுக்குள்ளும் பார்வையில் உள்ள வேற்றுமை சில சமயங்களில்,  ஒரு கண் கிட்டப்பார்வை,  தூரப்பார்வை அல்லது காட்டராக்ட் போன்றவற்றால் பாதிக்கப்பட்டிருந்தால் ஆம்ப்லையோபியா எனும் நோய் உருவாகலாம். சோர்வான அல்லது வலிமை குறைந்த கண்ணிலிருந்து,  மூளைக்குப் போதுமான அளவு தூண்டுதல் இல்லாத நிலையில்,  வலிமையான மற்றொரு கண் ஆதிக்கம் செலுத்துகிறது. இதனால் சோர்வான அல்லது ஆம்ப்லையோபியா-வினால் பாதிக்கப்பட்ட கண் மேலும் ஒடுக்கப்பட்டு,  இறுதியில் பார்வை இழக்க நேரிடலாம்.

*******
சூரியனிலிருந்து வெளிப்படும் UVB- கதிர்வீச்சு கண்ணின் வெளிபாகங்களைத் தாக்குகிறது; இதனால் கண்களில் எரிச்சல்,  வறட்சி,  வீக்கம் அல்லது புண்,  வயதுக்கு மீறிய தோற்றம் ஆகியவை ஏற்படலாம் . UVB- கதிர்வீச்சு கண்களுக்கு மட்டுமல்லாது,  தோலுக்கும் கேடு விளைவிக்கிறது;

*******
நமது கண்களுக்கு ஏற்படும் காயங்களில் குறைந்தபட்சம் 90% காயங்கள் தடுக்கப்படக்கூடியவை. அமெரிக்காவில்,  ஒற்றைக் கண்ணில் ஏற்படும் கண் பார்வையின்மைக்கு முதன்மைக் காரணம் கண்களில் ஏற்படும் காயங்களாகும்; இது உலகம் முழுவதும் கண் பார்வையின்மைக்கு இரண்டாம் காரணமாக விளங்குகிறது (முதற் காரணம் ‘காட்ராக்ட்” ஆகும்). இக்காயங்கள் முப்பது வயதிற்குட்பட்ட நபர்களில்,  பெருவாரியாகக் காணப்படுகிறது (57% ). கண் காயங்களுக்கான முக்கிய காரணங்கள் - வீட்டில் பயன்படுத்தப்படும் இரசாயனப் பொருட்கள்,  தொழிற்சாலைக் குப்பைகள்,  பாட்டரி அமிலம்,  விளையாட்டின் போது ஏற்படும் விபத்துகள்,  வாணவேடிக்கை,  UVB-  கதிர்வீச்சுகளுக்குத் தம்மை அதிக அளவில் வெளிப்படுத்திக் கொள்வது,  சரியான மேற்பார்வையின்றி வயதிற்குப் பொருந்தாத விளையாட்டு பொருட்களுடன் விளையாடுவது ஆகியவை. 20% கண் காயங்கள் தொழில் ரீதியாக ஏற்படுபவை; அவற்றுள் 95% காயங்கள் கட்டுமானப் பணியில் உள்ள ஆண்களுக்கு ஏற்படுகிறது.

*******

‘மயோபியா' என்பது ஒருவரது தூரப்பார்வையை பாதிக்கும் நிலையாகும். தூரத்தில் உள்ள பொருட்கள் மங்கலாக காணப்படுவது
இரு கண்களும் வெவ்வேறு திசைகளை பார்ப்பது போன்ற தோற்றம் இதன் அறிகுறியாகும். கண்களில் உள்ள குறைகளை சரிப்படுத்தக்கூடிய வில்லை கண்ணாடி அல்லது பார்வை வில்லை மயோபியா-வை சரிப்படுத்த உதவுகின்றன.

********

‘ப்ரெஸ்பயோபியா’ என்பது ஒருவரது கிட்டப்பார்வையை பாதிக்கும் நிலை. இதனால்,  ஒரு கலைந்த உருவம் பதிக்கப்பட்டு,  அது பின்னர் மூளைக்கு அனுப்பப்படுகிறது. அருகில் உள்ள பொருட்கள் மங்கலாக காணப்படுவது இரு கண்களும் வெவ்வேறு திசைகளை பார்ப்பது போன்ற தோற்றம் இந்நோயின் அறிகுறிகளாகும்.
கண்களில் உள்ள குறைகளை சரிப்படுத்தக்கூடிய வில்லைகள் கண்ணாடி அல்லது விழிவில்லைகளை பயன் படுத்துவதன் மூலம் இதனைக்கட்டுப்படுத்தலாம்.

********

குழந்தைகளிடம் தோன்றும் பார்வைக் குறைபாடுகளைக் கண்டறிதல்.
1)  வகுப்புப் பாடங்கள் கவனிக்கும் போது தலைவலி அல்லது களைப்பாக இருப்பது.
2)  கண்கள் அடிக்கடி கலங்கிக் காணப்படுவது.
3) இரண்டு கண்களிலும் பார்வை சீராக இல்லாமலிருப்பது.
4)  கடைக்கண் இமைகள் சிவந்து அல்லது வீங்கி இருப்பது.
5) கண் கட்டி அடிக்கடி வருவது.
6) சாதாரணமாக இருக்கும்போதோ அல்லது படிக்கும் போதோ கண்களில் நீர் வடிவது போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டால் உடனே டாக்டரைப் பார்க்க வேண்டும்.

********
கண்கள் இரண்டும் ஒரே நோக்குடன் இல்லாமல் ஒன்றுக்கொன்று முரண்பட்டு வெவ்வேறு திசைகளை  நோக்கி இருந்தால் அது மாறுகண் (Squint) எனப்படும். சிலர் இதை அதிர்ஷ்டத்தின் சின்னமாகக் கருதுகிறார்கள். சிலர் நாளடைவில் தானாகவே சரியாகிவிடும் என்று விட்டுவிடுகிறார்கள். இவை தவறான கருத்துக்களாகும். மாறுகண் நோய் உடனடியாகக் கவனிக்கப்படவேண்டிய ஒன்று. அதைத் தக்க சமயத்தில் சரி செய்யாவிட்டால் அந்தக் கண் பார்வையை இழந்துவிடும் அபாயம் உள்ளது. 10 வயதிற்குள் இந்தப் பிரச்சினையை சரி செய்ய வேண்டும். வயதாகியும் சிலர் மாறுகண்ணோடு நன்றாக இருப்பதுபோல்தான் தெரியும். ஆனால் அவரின் கண் நரம்புகள் பாதிப்படைந்திருக்கும். ஆகவே இதை உடனே கவனிப்பதே நல்லது.

******

கண்களில் கருவிழியில் வெள்ளையாகத் தெரிவதைத்தான் பூ விழுந்து விட்டது என்கிறோம். இது வந்தால்  உடனடியாக கண் மருத்துவரிடம் காட்ட வேண்டும். அது புரையாக இருக்கலாம். அல்லது கண்ணில் தோன்றும் புற்றுநோயாகவும்கூட இருக்கலாம்.

*******

விட்டமின் ஏ கண்பார்வையும் கண்ணுடன் தொடர்புடைய நோய்களுக்கும் சிறந்தது. முருங்கைக்கீரை,  முளைக்கீரை,  பொன்னாங்கண்ணிக்கீரை,  அவரைக்கீரை,  முருங்கைக்காய் போன்ற பச்சைக் காய்கறிகள்,  எளிதாகக் கிடைக்கக் கூடிய பப்பாளிப் பழம் போன்றவற்றில் விட்டமின் ஹஏ‘ போதிய அளவு உள்ளது. மேலும் மாம்பழம் கரட், பால்,  வெண்ணெய்,  முட்டை,  மீன்,  மீன் எண்ணெய் ஆகியவற்றிலும் இச்சத்து உள்ளது.

********

எமது கண்களைப் பாதுகாத்துக் கொள்ள இரவில் படுக்கைக்குப் போவதற்கு முன்பு கண்களையும்,  முகத்தையும் சுத்தமான தண்ணீர் கொண்டு கழுவ வேண்டும். எக்காரணத்திற்காகவும் அழுக்குத்துணி அல்லது பிறருடைய கண்களைத் துடைக்கப் பயன்படுத்திய துணி ஆகியவற்றைக் கொண்டு நம்முடைய கண்களைத் துடைக்கக் கூடாது.

*********

கண்நோய் அல்லது கண் வலி,  தூசு,  பிசிறு போன்றவை இருந்தால் கண்ட கண்ட மருந்துகளை கண்ணில் போடாமலும் காலதாமதமாகாமலும்  கண் மருத்துவரிடம் செல்ல வேண்டும்.

********

 கண் வெண்பகுதியை மூடும் இமை உள்பகுதி சிவத்தலும்,  அதில் வீக்கமும் ஏற்படுதல் அழற்சி என்று அழைக்கப்படுகிறது. இது திடீரென தோன்றி மறையும் தன்மை கொண்டது. இது தானே மறைந்தாலும் மருத்துவரின் சிகிச்சையும் சில சமயங்களில் தேவைப்படும்.
1. பொதுவாக இரண்டு கண்களும் பாதிக்கப்படும்,  ஒவ்வொரு கண்ணாக பாதிப்பு தொடங்கும்.
2. கண்ணின் வெண்மைப் பகுதியில் ரத்தக் குழாய்கள் நன்றாகத் தெரியும் அல்லது கண் சிவந்திருக்கும்.
3. கண் இமைகளும் லேசாக சிகப்பு நிறத்திலோ,  இளஞ்சிவப்பு நிறத்திலோ ஆகிவிடும்.
4. கண் பிசு பிசு வென்று ஒட்டிக் கொள்ளும்,  தூங்கி விழிக்கும்போது இது மோசமாக இருக்கும். கண்களில் இருந்து நீர் சுரந்து கொண்டே இருக்கும்.
5. கண் எரிச்சலோ,  வலியோ ஏற்படும்.
6. சில சமயங்களில் ஒளியால் கண்கள் கூசும்.
இத்தகைய நோய்க்குறிகள் கண்டோர் டாக்டரை அனுகி சிகிச்;சை பெறல் வேண்டும்.  நோயின் காரணத்திற்கு தகுந்தவாறு சிகிச்சை மாறுபடும். களிம்புகள்.  சொட்டு மருந்துகள் கொடுத்து கண் கிருமியை அகற்றலாம், மருந்து மாத்திரைகள் மூலம் ஒவ்வாமையால் ஏற்படும் நோய்க்குறிகளை தீர்க்கலாம்.

*******

கண்கள் சிவந்தாலே அது கண் இமை அழற்சி என்று கருத வேண்டிய அவசியமில்லை. கண்ணின் உள்ளே திடீரென அழுத்தம் அதிகரிப்பது Acute Angle Closure Glaucoma எனப்படும். இதனாலும் கூட கண்கள் விரைவில் சிவப்பு நிறமாக மாறும். ஆரம்ப நிலையிலேயே அழுத்தம் குறைக்கப்பட்டால் பார்வை விரைவில் பூரண குணமடையும்,  தாமதம் ஏற்பட்டால் கண் பார்வையில் நிரந்தர சேதம் ஏற்படும். எனவே உடனடியாக சிகிச்சை அவசியம். அறிகுறிகள் : பார்வை திடீரென மந்தமடைதல், கடுமையான கண்வலி ,  தலைவலி, குமட்டல் மற்றும் வாந்தி, கண்கள் கூசுதல்,  வெளிச்சத்தில் பார்க்க முடியாமை

**********

சிலருக்கு அடிக்கடி கண்கள் வீங்கின மாதிரி மாறும். இது உடல் நலத்தில் ஏதோ கோளாறு என்பதற்கான அறிகுறி காலையில் தென்படுகிற வீக்கம். குளிர்ந்த மற்றும் சூடான தண் ரால் மாறி,  மாறிக் கழுவுவதால் சரியாகும். கண்களைச் சுற்றியுள்ள தசைகளை லேசாக நீவிக் கொடுக்கலாம். வீக்கம் குறைகிற வரை கண்களுக்கான மசாஜ் செய்யக் கூடாது. அடிக்கடி இப்படி வீக்கம் தென்பட்டால் மருத்துவரை அணுகலாம்.

*******

இரவு படுப்பதற்கு முன் கண்களில் போட்ட மேக்கப் முற்றிலும் அகற்றப்பட வேண்டும். முதலில் செயற்கை இமைகள் பொருத்தியிருந்தால் அதை அகற்ற வேண்டும். ஐ மேக்கப் ரிமூவர் என்றே கிடைக்கிறது. அதில் பஞ்சைத் தொட்டு கண்களை மூடியபடி வெளியிலிருந்து உள்ளே மூக்கை நோக்கித் துடைக்க வேண்டும். இரண்டு,  மூன்று முறைகள் இப்படிச் செய்யவும். பிறகு கண்களைத் திறந்து,  வேறொரு பஞ்சால் கண்களின் உள் பக்கத்தையும்,  கீழ் இமைகளையும் சுத்தப்படுத்த வேண்டும். கண்ணில் உள்ள மேக்கப் முழுக்க அகற்றப் படாவிட்டால், அது எரிச்சலை உண்டாக்கி,  கண்கள் சிவந்து போகுமாறு செய்யும்.

மேலே உள்ளவை நான் எழுதிய கட்டுரைகளில் ஒன்றாகும். எனவே தெரிந்தும் நான் விட்ட தவறை என்னவென்று சொல்வது. அதாவது நாங்களே எங்கள் வாழ்க்கையுடன் விளையாடிக் கொள்கின்றோமல்லவா?

தொடரும்....

Saturday, 11 February 2012

விக்கிபீடியாவில் ஓராண்டுக்குள் 7500 கட்டுரைகள் - நேர்காணல்: இக்பால் அலி

இலங்கையின் மத்திய மலைநாட்டின் தலைநகர் கண்டி நகருக்கு அண்மையில் அமைந்துள்ள உடத்தலவின்னை மடிகே எனும் கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட கலாபூசணம் பீ.எம்.புன்னியாமீன் ஒரு எழுத்தாளராகவும், சர்வதேச ஊடகவியலாளராகவும், பத்திரிகையாளராகவும், பன்னூலாசிரியருமாக அறியப்பட்டவர். மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக தமிழ்  இலக்கியத்துறையில் ஈடுபட்டுவரும் இவர்  இதுவரை 179 தமிழ் நூல்களை எழுதி வெளியிட்டு இலங்கை தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒரு சாதனையைப் படைத்துள்ளார்.


மேலும் இவர் 166 சிறுகதைகளையும், ஒரு நாவலையும், கல்வி, கலை, இலக்கியம், ஆய்வியல், அரசியல், விளையாட்டு, சமூகவியல் ஆகிய பல்வேறு துறைகளில் 15000க்கும் மேற்பட்ட கட்டுரைகளையும் எழுதியுள்ளார். இவரின் கட்டுரைகள் சிங்கள, ஆங்கில மொழிகளில் மொழிபெயர்பாகியுமுள்ளன. அவரை அவரது இல்லத்தில் சந்தித்தேன்.


கேள்வி: 1978ம் ஆண்டில் ‘அரியணை ஏறிய அரச மரம்’ எனும் தலைப்பிலான உருவகக் கதை மூலம் ஈழத்துத் தமிழ் இலக்கியப் பரப்பில் அரியணை ஏறியுள்ள நீங்கள் அண்மைக் காலங்களாக இலத்திரனியல் ஊடகங்களில் கூடிய பங்களிப்பு வழங்கி வருவதை அவதானிக்க முடிகின்றது. இது பற்றி சற்று விளக்க முடியுமா?


பதில்: முதற்கண் தினகரன் வாரமஞ்சரிக்கு என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்ள வேண்டும். ஏனெனில், எனது முதல் படைப்பிலக்கியமான ‘அரியணை ஏறிய அரச மரம்’ எனும் உருவகக் கதையை தினகரன் வாரமஞ்சரி 1978ம் ஆண்டில் பிரசுரித்தது. என்னால் எழுதப்பட்ட முதலாவது கதையே தேசிய பத்திரிகையொன்றில் பிரசுரமானதால் ஏற்பட்ட உத்வேகம் தொடர்ந்தும் எழுதக்கூடிய மனோநிலையை என்னுள் உருவாக்கியது. அதிலிருந்து தினகரன் உட்பட இலங்கையில் அனைத்து தேசிய பத்திரிகைகளிலும், சஞ்சிகைகளிலும் எழுதலானேன். 1980களில் இந்தியாவிலிருந்து வெளிவந்த தீபம், கனையாழி, தாமரை, கலைமகள் போன்ற தரமான இலக்கிய சஞ்சிகைகளிலும் 2000களிலிருந்து எம்மவர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் வெளிவரக்கூடிய பத்திரிகைகளிலும், சஞ்சிகைகளிலும் கட்டுரைகள், ஆய்வுகள் போன்றவற்றை எழுதினேன். புலம்பெயர் நாடுகளில் என் எழுத்துகளுக்கு வரவேற்புக் கிடைத்தன. இதையடுத்தே 2008ம் ஆண்டிலிருந்து அதிகமாக இணையத்தளங்களில் எழுத ஆரம்பித்தேன். தற்போது அதிகமாக இணையத்தளங்களிலேயே எழுதிவருகின்றேன்.


கேள்வி: அண்மையில் சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவியொருவர் எழுதியிருந்த ஓர் ஆய்வுக் கட்டுரையில் உங்கள் ஆக்கங்கள் 183 இணையத்தளங்களில் வெளிவந்துள்ளதாக ஆய்வு ரீதியாக குறிப்பிட்டிருந்தார். இதைப் பற்றி சற்று விளக்க முடியுமா?


பதில்: உண்மைதான். அவர் குறிப்பிட்ட ஆய்வினை 2010ம் ஆண்டு இறுதியில் மேற்கொண்டார் என நினைக்கின்றேன். அக்காலத்தில் சர்வதேச ரீதியில் வெளிவரும் 183 இணையத்தளங்களிலும், வலைப்புகளிலும் என் ஆக்கங்கள் இடம்பெற்றிருந்தன. அதற்காக நான் அத்தனை இணையத்தளங்களுக்கும் நேராக எழுதினேன் என்று பொருள்படாது. குறிப்பிட்ட சில இணையத்தளங்களைத் தேர்ந்தெடுத்து அவற்றுக்கு மாத்திரமே நேரடியாக எழுதிவருகின்றேன். பின்பு என் கட்டுரைகள் ஏனைய இணையத்தளங்களில் மீள் பிரசுரம் செய்யப்படுகின்றன. இப்போதைய நிலையில் 230க்கும் மேற்பட்ட இணையத்தளங்களில் எனது ஆக்கங்கள் பிரசுரமாயுள்ளன.


கேள்வி: இணையத்தளங்களில் மாத்திரமா தற்போது எழுதிவருகின்றீர்கள்?


பதில்: இல்லை. இலங்கை, இந்தியா மற்றும் புலம்பெயர் நாடுகளிலுள்ள அச்சு ஊடகங்களிலும் எழுதிவருகின்றேன். ஆனால், இலங்கை, இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், பிரித்தானியா, நோர்வே, சுவிச்சர்லாந்து, பிரான்ஸ், அவுஸ்திரேலியா, ஜெர்மனி, ஐக்கிய அமெரிக்கா, கனடா, தென் ஆபிரிக்கா, மொரிசியஸ் தீவுகள் போன்ற நாடுகளை தளமமைத்துக் கொண்டு இயங்கும் இணையத்தளங்களில் அதிகளவில் எழுதிவருகின்றேன்.


கேள்வி: இணையத்தளங்களில் எத்தகைய ஆக்கங்களை நீங்கள் எழுதிவருகின்றீர்கள்?


பதில்: ஒரு குறிப்பிட்ட தலைப்பை வரையறுக்க முடியாது. இலங்கையில் அரசியல், இலங்கையில் தேர்தல்கள், இலங்கையில் பொருளாதாரம், வரலாறு, சமூகம் என நல்லுறவு தொடர்பான ஆக்கங்களையும் மற்றும் சர்வதேச நினைவு தினங்கள், சர்வதேச முக்கியத்துவமிக்க விடயங்கள், இலங்கை எழுத்தாளர்கள், கலைஞர்கள், ஊடகவியலாளர்கள் பற்றிய அறிமுகம் போன்ற பல்வேறு துறைகளைப் பற்றிய விரிவான ஆக்கங்களை ஆதாரபூர்வமாக எழுதிவருகின்றேன். இதன் காரணமாகவே எனது ஆக்கங்களுக்கு கூடிய வரவேற்பு கிடைத்தது வருகின்றது. இதனை வாசகர்களின் பின்னூட்டங்கள் மூலமாக அறிந்துகொள்ள முடிகின்றது.


கேள்வி: அச்சு ஊடகங்களில் எழுதுவதற்கும், இணையத்தளங்களில் எழுதுவதற்கும் எத்தகைய வேறுபாட்டினை நீங்கள் உணர்கின்றீர்கள்?


பதில்: பொதுவாக அச்சு ஊடக எழுத்துக்கும், இணைய ஊடகங்களில் உள்ள எழுத்துக்கும் என்னைப் பொறுத்தவரையில் பாரிய வித்தியாசங்கள் காணப்படுவதில்லை. ஆனால், அச்சு ஊடகங்கள் எனும் போது சில தடையீடுகளை சந்திக்க வேண்டியுள்ளது. குறிப்பாக இலங்கையைப் பொறுத்தமட்டில் இன்னும் இலத்திரனியல் ஊடகங்களின் அறிமுகம் பெரிதளவிற்கு இடம்பெறவில்லை. இலங்கையில் 2008ம் ஆண்டின் பின்பே ஓரளவிற்கு இணையப்பாவனை அதிகரித்து வருகின்றது. இருப்பினும் இலங்கையில் வாழக்கூடிய தமிழ் பேசும் மக்களிடையே இன்றுவரை கணினிப் பாவைனையும், இணையப்பாவனையும் குறைவாகவே உள்ளது. அதேநேரம், கணினி, இணையம் ஆகியவற்றில் தமிழ்மொழிப் பிரயோகமும் குறைவாகவேயுள்ளது. இத்தகைய நிலையில் இலங்கை தமிழ்மொழி எழுத்தாளர்கள் கூடுதலான அளவிற்கு அச்சு ஊடகங்களையே பயன்படுத்த விளைகின்றனர்.


இணைய ஊடகங்களுக்கு ஆக்கங்களை அனுப்பும்போது மின்னஞ்சல் மூலமாக ஆக்கங்களை அனுப்ப முடிவதினால் தாமதமின்றி அவை பிரசுரமாகக் கூடிய வாய்ப்புகள் இருக்கின்றன. இணையங்களில் செய்திகள் மாத்திரமல்ல, இலக்கியக் கட்டுரைகள், ஆய்வுக் கட்டுரைகள், அரசியல் கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள், நாவல்கள் போன்ற இலக்கியப் படைப்புகளையும் பிரசுரித்து வருகின்றன. இதற்கென தனி வளையமைப்புக்களும் உள்ளன. திரட்டிகளின் உதவி கொண்டு தேடல்கள் மூலம் எமக்குத் தேவையானவற்றை அடைந்து கொள்ள முடியும். மேலும், குறித்த ஆக்கங்களை எத்தனை ஆண்டுகள் சென்றாலும் கூட வாசித்தறிந்து கொள்ளக்கூடியதாக இருக்கும். நவீன தொழில்நுட்ப மாற்றத்துடன் இணையங்களும் பல புதிய பரிமாணங்களை பெற்று வருகின்றன. இணையத்தளத்தின் மூலம் மின்னணுக் கல்வி (E-learning) மின்னணுக் கருத்தரங்கம்  (E-conference) ஆகியவைகூட இன்று நடைமுறையில் உள்ளன. பல்லூடகக் கருவியாகவும் (Multi media)  கணனி இன்று பரிணமித்துள்ளது. எனவே எழுத்து, பேச்சு, படம் என்று பலவகைப்பட்ட ஊடகங்கள் வழியே ஒருவர் உலகெங்கும் தொடர்பு கொள்ளக்கூடிய ஒரு பிரமாண்டமான வளர்ச்சி இன்று ஏற்பட்டுள்ளது. இவற்றை எம்மவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.


கேள்வி: இலங்கையில் தமிழ் இணையப்பாவனை குறைவாக உள்ளது எனக் குறிப்பிட்டீர்கள். இதற்கான காரணம் யாதாக இருக்கலாம்?


பதில்: உண்மை. இதற்குப் பல காரணங்கள் உள்ளன. உலகில் டிசம்பர் 1990 கணக்குப்படி ஒரே ஒரு இணையத்தளம் தான் இருந்தது. 2011 மார்ச்; மாத கணக்குப்படி இணைய உருண்டையின் மொத்தப் பாவனையாளர்களின் எண்ணிக்கை 2,095,006,005 ஆகும். உலக அளவில் 30.2% வீதமாக இணையத்தளப் பாவனை அதிகரித்துள்ள அதேநேரத்தில் இலங்கையில் 8.3 வீதமாகவே காணப்படுகிறது. ஸ்ரீலங்கா டெலிகொம்மினது பதிவுகளுக்கமைய உலக வங்கியால் வெளியிடப்பட்ட அறிக்கையில் 2010 முதல் ஒன்பது மாதங்களில் இலங்கையில் இணையத்தள பாவனையாளர்கள் 1,776,200 என அறிய முடிகின்றது. இது மொத்த சனத்தொகையின் 8.3% ஆகும்.


தமிழ்மொழி பேசும் எம்மவர்களிடையே இணையப்பாவனையை விடுத்து கணினிப் பாவனை கூட வெகு குறைவாகவே உள்ளது. மறுபுறமாக 2007ம் ஆண்டுவரை இலங்கையில் இணையப்பாவனையாளர்கள் தரவிரக்கம் செய்யும் அளவிற்கும், பயன்படுத்தப்படும் தொலைபேசி நேர அளவிற்கும் கட்டணங்களை செலுத்த வேண்டியிருந்தமையினால் இணையத்தைப் பயன்படுத்தும் ஒருவருக்கு அதிகமான பணத்தினை கட்டணமாகச் செலுத்த வேண்டிய நிலையிருந்தது. 2007ம் ஆண்டின் பின்பு இலங்கையில் ஸ்ரீலங்கா ரெலிகொம் புரோட்பேன்ட் இணைய இணைப்பினை அறிமுகப்படுத்தியதையடுத்து மாதாந்தக் கட்டணத்தை மாத்திரமே அறவிடும் முறை அறிமுகமாயிற்று. அதேநேரம், இலங்கையில் தனியார் நிறுவனங்களும் போட்டிப் போட்டுக் கொண்டு இணைய இணைப்பின் பல்வேறு சலுகைகளை வழங்கத் தொடங்கின. இந்தடிப்படையில் இணையப்பாவனையாளர்ளுக்கு ஏற்பட்ட வசதிகள் காரணமாக 2007ம் ஆண்டையடுத்து இணையப்பாவனை அதிகரித்துள்ளது. இன்று அரசாங்கம் பாடசாலை மட்டத்தில் கணினிக் கல்வியை ஊக்குவித்துவரும் அதேநேரத்தில் தனியார் நிறுவனங்களும் கணினிக் கல்வியைப் பெற்றுக் கொள்ளக்கூடிய பல்வேறு வசதிகள் வாய்ப்புகளை வழங்கி வருகின்றது. எனவே இலங்கையில் கணினிப் பாவனையும் அதிகரித்து வருகின்றது.


மேற்குலக நாடுகளுடன் ஒப்பிடும்போது இலங்கை மாணவர்களின் கணினிப் பாவனை குறைவாகக் காணப்பட்டாலும் கூட இன்னும் ஐந்தாண்டுகளில் வியக்கத்தக்க வளர்ச்சியைக் காணுமென்பது ஆய்வாளர்களின் கருத்தாகும். எனவே எதிர்காலத்தில் இணையங்கள் முக்கியமான ஊடகமாக திகழப் போகின்றது என்பது சந்தேகமில்லை. இதனைக் கருத்திற்கொண்டு எமது இலங்கை எழுத்தாளர்களும் தத்தமது எழுத்துக்களை இணையத்தளங்களுடன் இணைத்துக்கொள்ள எத்தனித்தல் வேண்டும்.


கேள்வி: அண்மைக்காலமாக தமிழ்விக்கிப்பீடியாவுடன் நெருக்கமான உறவினை பேணிவருவதாகவும் ஓராண்டுக்குள் 7500 கட்டுரைகளை எழுதி தமிழ் இலத்திரனியல் உலகில் ஒரு சாதனையைப் புரிந்ததாகவும் அறிகின்றோம். இது பற்றி சற்று விபரிக்க முடியுமா?


பதில்: 21ஆம் நூற்றாண்டின் இரண்டாவது தசாப்தம் ஆரம்பித்துள்ள நிலையில்  இணையக் கலைக்களஞ்சியமாக விளங்கும் விக்கிப்பீடியாக உலகளாவிய ரீதியில் 283 மொழிகளில் சுமார் 2 கோடி 61 இலட்சம் தகவல்களை தன்னகத்தே கொண்டு இணைய வசதியுள்ளவர்களால் நினைத்த நேரத்தில் தேவைப்படும் விடயங்களை இலகுவாகவும்,  இலவசமாகவும் பெற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்பினை வழங்கி வருகின்றது. இணையக் கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியா பொது உள்வாங்கியாக காணப்படுவதினால் புத்திஜீவிகளுக்கும்,  கற்றவர்களுக்கும்,   தெரிந்தவர்களுக்கும் தாம் தெரிந்தவற்றை தரவேற்றம் செய்யக் கூடிய வாய்ப்பினை வழங்கி வருகின்றது. இந்நிலையில் 2010 நவம்பர் மாதத்தில் தமிழ் விக்கிப்பீடியாவுடன் எனக்கு உறவு ஏற்பட்டது. தமிழ்விக்கிப்பீடியாவில் கட்டுரைகளை பதிவேற்றம் செய்வதற்கான வாய்ப்பு திறந்த நிலையில் உள்ளதினாலும் விக்கிப்பீடியாவில் அதிகார நிர்வாக தரத்திலுள்ளவர்களும் விக்கிப்பயனர்களும் திறந்த நிலையில் பழகி எனது எழுத்துக்கு ஊக்கம் தந்தமையினாலும் என்னை அறியாமலேயே சரியாக ஓராண்டுக்குள் 7500 கட்டுரைகளை பதிவேற்றம் செய்தேன். விக்கிப்பீடியா குழுமத்தில் தமிழ் விக்கிப்பீடியாவில் நான் 2010 நவம்பர் 14ம் திகதி இணைந்தேன். 2011 நவம்பர் 13,  வரையிலான ஒரு வருட காலப்பகுதியில் 7500 கட்டுரைகளை என்னால் எழுத முடிந்தது. இன்றைய திகதி வரை (சனவரி 24, 2012) தமிழ்விக்கிப்பீடியாவில் சிறியதும், பெரியதுமான 8710 கட்டுரைகளை நான் எழுதியுள்ளேன்.


கேள்வி: இலங்கை மாணவர்களுக்கு விக்கிப்பீடியா எந்தளவிற்கு பயன்பாடுள்ளதாக நீங்கள் கருதுகின்றீர்கள்?


பதில்: இலங்கையில் மாணவர்களுக்கான இன்றைய கல்வித்திட்டம் தேடல்களுக்கான வாய்ப்பினை அதிகளவில் ஊக்குவிக்கின்றது. விக்கிப்பீடியா ஒரு கலைக்களஞ்சியமாகும். எனவே மாணவர்களுக்குத் தேவைப்படக்கூடிய பல்வேறுபட்ட பாட விடயங்களையும்,  பொது விடயங்களையும் தமிழ்மொழி மூலமாகவே கற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்புண்டு. தமிழ்விக்கிப்பீடியாவை தமிழ் நாட்டில் வாழக்கூடிய மாணவர்கள் பெருமளவிற்கு பயன்படுத்தி வருகின்றனர். இதனால் மொழிப் பிரயோகத்தில் சில சிக்கல்கள் உருவானாலும்கூட அவற்றை நிவர்த்தி செய்யக்கூடிய வகையில் இலங்கை மாணவர்களுக்கு ஏற்ற சொற்பிரயோகங்கள் சேர்க்கப்பட்டு வருகின்றன. எனவே மாணவர்களின் கற்கையுடன் தொடர்பான பல்வேறுபட்ட தகவல்களை விக்கிப்பீடியா மூலமாக பெற்றுக்கொள்ள முடியும். இன்று தமிழ்விக்கிப்பீடியாவில் 43,900 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. அதேநேரத்தில் ஆங்கில விக்கிப்பீடியாவில் 39 இலட்சத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. உலகளாவிய ரீதியில் இணையப்பாவனையில் விக்கிப்பீடியா இன்று 5வது இடத்தில் உள்ளது. அதேநேரம் தமிழ்விக்கிப்பீடியா நாளொன்று ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டோரால் பார்வையிடப்படுகின்றது. எனவே கல்வியைத் தேடும் மாணவர்களுக்கும், பொது அறிவு உட்பட பல்வேறு தகவல்களையும் தேடும் எமது இளைய தலைமுறையினருக்கும் இலவசமான முறையில் இவற்றைக் கற்றுப் பயன்பெறலாம்.


கேள்வி: இலங்கையில் வாழக்கூடிய தமிழ் முஸ்லிம் எழுத்தாளர்களுக்கு நீங்கள் எதனைக் கூற விரும்புகின்றீர்கள்?


பதில்: மிகவும் கடினமான ஒரு வினா. இலங்கையில் தமிழ் எழுத்தாளர்கள் மற்றும் ஆய்வாளர்கள் இன்னும் மரபு ரீதியிலான வழிகளிலேயே அதிகளவில் நாட்டம் செலுத்தி வருகின்றனர். இலங்கைத் தமிழ் எழுத்தாளர்களுக்கு பத்திரிகைகளையும், சஞ்சிகைகளையும் விட்டால் வேறு ஊடகங்களில்லை என்று கூறுமளவிற்கு மரபு ரீதியான அணுகுமுறைகளிலேயே இன்னும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றனர். இதன் காரணமாக மரபு ரீதியான வழிமுறைகளைப் பேணி வந்த பத்திரிகைகளும், சஞ்சிகைகளும் இன்றும் அதே முறைகளை கடைபிடித்து வருவதினால் குறிப்பிட்ட சில எழுத்தாளர்கள் மாத்திரமே எழுத்துலகில் சோபித்து வர முடியும். இணையத்தள ஊடகங்களின் வளர்ச்சி ஏற்படும்போது இத்தகைய கட்டுப்பாடுகள் தகர்த்தப்படுவதினால் புதிய எழுத்தாளர்கள் வளர்ச்சியடையக் கூடிய வாய்ப்பு உருவாகின்றது. சிலநேரங்களில் எழுத்துக்கள் தரமின்றிப் போய் விடலாம் என்று விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும்கூட,  இதுவொரு புரட்சிகரமான மாற்றமாக அமைய இடமுண்டு.  காலமாற்றங்களுக்கேற்ப எமது எழுத்தாளர்களும், படைப்பாளர்களும் தம்மை மாற்றிக் கொள்ள வேண்டும். மரபு ரீதியான வழிகளிலே தொடர்ந்தும் ஆர்வம்காட்டி வராது புதிய தலைமுறையினரின் போக்குகளுக்கிணங்க தமது எழுத்துக்களை மாற்றியமைத்துக் கொள்ள வேண்டிய காலகட்டத்தில் நாம் உள்ளோம். எனவே எமது சிந்தனைகளில் மாற்றம் தேவை. எமது எழுத்துக்களில் மாற்றம் தேவை. நாம் விரும்பியோ விரும்பாமலோ 21ம் நூற்றாண்டில் இரண்டாம் தசாப்தத்தில் வாழும் நாம் இலத்திரனியமயமாக்கப்பட்ட நவீன தொழில்நுட்பத்துக்குள் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இன்னும் சில ஆண்டுகள் செல்லும்போது எமது தலைமுறையினர் இந்த நவீன தொழில்நுட்ப யுகத்தையே முழுமையாக ஏற்றுக்கொள்ளப் போகின்றார்கள். இதனைக் கருத்திற்கொண்டு எமது போக்கினையும் நாம் மாற்றியமைத்துக்கொள்ள எத்தனிக்க வேண்டும். சற்று கடினமாகக் காணப்பட்டாலும் இது தூரநோக்கின் நிதர்சனம்.

நேர்காணல்: இக்பால் அலி
தினகரன் வாரமஞ்சரி :12.பெப்ரவரி.2012
* http://www.thinakaran.lk/Vaaramanjari/2012/02/12/?fn=f1202122