Tuesday 27 March 2012

தமிழ் எழுத்தாளர்கள் விபரங்கள் சர்வதேச மட்டத்தில் ஆவணப்படுத்தப்படல் வேண்டும் - என். செல்வராஜா (லண்டன்)


17.03.2007  இல் ஜேர்மனி டியுஸ்பேர்க் நகரில் இடம்பெற்ற கலாபூசணம் புன்னியாமீன் எழுதிய 100வது நூலான இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரத்திரட்டு தொகுதி - 04, (புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரத்திரட்டு பாகம் - 01)  வெளியீட்டு விழாவின் போது  சிறப்பு அதிதியாக லண்டனிலிருந்து கலந்து கொண்ட பிரபல நூலகவியலாளரும், பன்னூலாசிரியரும், ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணத் தொகுப்பான  நூல்தேட்ட ஆசிரியருமான என். செல்வராஜா  அவர்களின் உரையிலிருந்து….

"..... திரு.புன்னியாமீன் அவர்களை ஒரு முஸ்லிமாக நோக்காமல், ஓர் அந்நியனாக நோக்காமல், ஒரு தமிழ்பேசும் மனிதனாக நோக்கி,  தமிழ்மொழி வளர்க்கும் ஒரு எழுத்தாளனாக நோக்கி அவரை கௌரவித்து, அவரால் தமிழ்மொழி மூலமாக எழுதப்பட்ட நூறாவது நூலினை வெளியிட்டமைக்கு முதற்கண் ஜெர்மன் தமிழ் எழுத்தாளர் சங்கத்துக்கு என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்....
  
"....புன்னியாமீனுடனான அறிமுகம் எனக்கு 2004ம் ஆண்டு ஏற்பட்டது. 2005ம் ஆண்டில் கொழும்பு தமிழ் சங்கத்தில் என்னுடைய 'நூல்தேட்டம்' மூன்றாவது தொகுதியின் வெளியீட்டுவிழா நடைபெற்ற நேரத்தில் கண்டியில் எழுத்தாளர் சந்திப்பொன்றுக்கான அழைப்பினை புன்னியாமீன் விடுத்தார். சில தினங்கள் கொழும்பில் தங்கியிருக்க வேண்டியிருந்தமையினாலும் எனக்கும் சந்தர்ப்பம் வாய்ப்பாக அமைந்தமையினாலும் அவரின் அழைப்பை ஏற்று நான் கண்டி சென்றேன். கண்டியிலிருந்து சுமார் 10கி.மீ. தொலைவில் புன்னியாமீனின் பிறப்பிடமான 'உடத்தலவின்னை மடிகே' எனும் கிராமம் அமைந்துள்ளது. அக்கிராமத்தின் முக்கியமான கல்விக்கூடமான க/ஜாமியுல் அஸ்ஹர் மத்திய கல்லூரியின் பிரதான கேட்போர் கூடத்தில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த எழுத்தாளர் ஒன்று கூடலுக்கு வந்திருந்த எழுத்தாளர்களைக் கண்டதும் நான் அதிர்ச்சியடைந்தேன். ஏனெனில் 135 முஸ்லிம் எழுத்தாளர்கள் வரையில் அங்கு ஒன்று கூடியிருந்தார்கள்.... இவ்வளவு முஸ்லிம் எழுத்தாளர்களா என்று என்னால் நம்பமுடியவில்லை. ஏனென்றால் பேராசிரியர் வித்தியானந்தன் முதல் பேராசிரியர் கைலாசபதி, பேராசிரியர் சிவத்தம்பி வரை இலங்கை தமிழ், முஸ்லிம் எழுத்தாளர்கள் பற்றி மேற்கொண்ட ஆய்வுகளில் ஏழெட்டு முஸ்லிம் எழுத்தாளர்கள் பற்றியே அடிக்கடி குறிப்பிட்டு வந்துள்ளனர். அந்த எழுத்தாளர்கள் தமிழருடன் நேரடியாகத் தொடர்புபட்டவர்கள், பரிச்சயமானவர்கள்.

".....இலங்கையின் தமிழ் இலக்கிய வரலாற்றினைப் பின்னோக்கிப் பார்க்கும்போது முதலாவது தமிழ் நாவலை எழுதியவர் ஒரு முஸ்லிம். அதேபோல, தமிழ் தினசரியை வெளியிட்டவர் ஒரு முஸ்லிம். இலங்கை முஸ்லிம்கள் தமிழ்மொழி மூலம் எழுத்துலகிலும், பதிப்புலகிலும் பெரும் பங்களிப்பினை வழங்கியுள்ளார்கள், வழங்கி வருகின்றார்கள். ஆனால், தமிழருடன் நேரடியாகத் தொடர்புபட்ட ஒரு சில முஸ்லிம் எழுத்தாளர்களும், இலக்கியவாதிகளுமே ஆய்வாளர்களினால் இனங் காட்டப்பட்டுள்ளமையினால் முஸ்லிம்களின் தமிழ் வளர்க்கும் பணிபற்றி எம்மால் பரவலாக அறிந்துகொள்ள முடியாதுள்ளது...


 "....இந்த எழுத்தாளர் கலந்துரையாடல் நடைபெற்றுக் கொண்டிருந்த போது எனக்கு மேலும் ஒரு ஆச்சரியம் ஏற்பட்டது. ஏனென்றால் அந்த முஸ்லிம் எழுத்தாளர்கள் புலம்பெயர்ந்து கனடாவில் வாழும் அ.முத்துலிங்கத்தைப் பற்றியும், அவுஸ்திரேலியாவில் வாழும் முருகபூபதியைப் பற்றியும், இலண்டனில் வாழும் அமுதுப் புலவர்  பற்றியும் கருத்துக்களை முன்வைத்தார்கள். அதேநேரம் இவர்களிடம் இந்த 135 முஸ்லிம் எழுத்தாளர்கள் பற்றிக் கேட்டால் தெரியும் என்று சொல்வார்களா? அதுமட்டுமல்ல இந்த முஸ்லிம் எழுத்தாளர்களில் பலர் ஒன்றுக்கு மேற்பட்ட பல நூல்களை எழுதியிருக்கின்றார்கள். என்னுடைய நூல்தேட்டம் தொகுதி நான்கில் 250க்கும் மேற்பட்ட முஸ்லிம் எழுத்தாளர்களின் நூல்களைப் பதிவாக்கியுள்ளேன். ஏனெனில் தமிழ் வளர்க்கும் எந்தவொரு எழுத்தாளனையும் இனரீதியாக பாகுபடுத்தாமல் அவர்கள் தமிழ் வளர்ப்பவர்கள் என்ற கண்ணோட்டத்தில் நாங்கள் நோக்குதல் வேண்டும். இந்த அடிப்படையில் புன்னியாமீனை ஒரு முஸ்லிம் எழுத்தாளனாக நோக்காமல் தமிழ் வளர்க்கும் ஒரு எழுத்தாளனாக நோக்கி இந்த விசாலமான பணியினைப் புரிந்தமைக்காக மீண்டுமொருமுறை ஜேர்மன் தமிழ் சங்கத்துக்கு என் நன்றிகளைத் கூறிக் கொள்கின்றேன்... இதனை ஒர் ஆரோக்கிய மான மாற்றமாகவே நான் காண்கிறேன்.....     

"...இவ்விடத்தில் ஒரு விடயத்தைச் சுட்டிக் காட்டல் வேண்டும். புன்னியாமீன் இந்த விபரத்திரட்டின் முதல் மூன்று தொகுதிகளுக்கும் ~முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு என்றே பெயரிட்டிருந்தார். உடத்தலவின்னையில் நடைபெற்ற எழுத்தாளர் ஒன்றுகூடலின் போது 'முஸ்லிம்' என்ற வரையறைக்குள் இதனை மட்டுப்படுத்தாது இந்த ஆய்வினைப் பொதுப்படையாக மேற்கொள்ள வேண்டும் என நான் ஆலோசனை வழங்கினேன். என் ஆலோசனையை ஏற்றுக் கொண்ட புன்னியாமீன் நான்காம் தொகுதியிலிருந்து 'முஸ்லிம்' என்ற வார்த்தைப் பதத்தை நீக்கிவிட்டு 'இலங்கை எழுத்தாளர்கள். ஊடகவியலாளர்கள். கலைஞர்களின் விபரத்திரட்டு' என்று பெயரை மாற்றிக் கொண்டார். நான்காவது தொகுதி இங்கு வெளியிடப்பட்டாலும் கூட இத்தொடரில் இதுவரை ஏழு தொகுதிகள் வெளிவந்துவிட்டன. முதல் மூன்று தொகுதிகள் தவிர ஏனைய நான்கு தொகுதிகளிலும் பொதுப்படை யான பெயரையே பயன்படுத்திருப்பது குறிப்பிடத்தக்கது...

"...தற்போது வெளியிடப்பட்ட இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு  தொகுதி -4, புலம்பெயர் ஈழத்து எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத் திரட்டு 1-ம் பாகமாக வெளிவந்துள்ளது. இத்தகைய விபரத்திரட்டு ஏன் அவசியம் என்பது பற்றியும், அதன் முக்கியத்துவம் பற்றியும் இங்கு கதைப்பது பொருத்தமாயிருக்கும்....

"...ஆவணப்பதிவுகளின் முக்கியத்துவத்தை உணர்த்த  நான் அடிக்கடி வானொலியிலும் சரி, மேடையிலும் சரி எடுத்துக் கூறும் ஓர் உதாரணத்தை இங்கே மீண்டும் கூற விரும்புகின்றேன். அதாவது ஆறுமுகநாவலரை நாங்கள் எடுத்துக் கொள்வோம். ஒரு  திடகாத் திரமான மனிதர். தலையில் சமயகுரவர் பாணியில் உருத்திராட்சை மாலையை அணிந்து கொண்டு சிலை, சிலையாக அவரை வைத்திருகின்றோம். உங்களுக்குத் தெரியுமா அவர்தான் ஆறுமுகநாவலர் என்று...? ஆறுமுகநாவலர் பற்றி அறியும் வகையில் உண்மையான படம் இந்த உலகத்திலே இன்று இல்லை. கிறித்தவ மத பரம்பலுக்கு எதிராகக்குரல் கொடுத்து இந்து சமய புனரமைப்புக்காக உழைத்த பெரியார் ஆறுமுகநாவலரின் படமானது 19ம் நூற்றாண்டில் ஒரு ஓவியனால் வரையப்பட்ட கற்பனை உருவம் மட்டுமேயாகும்....

"...அதற்குக் காரணம் என்ன?....

"...ஒரு காலகட்டத்தில் 'தங்களது படைப்புக்களினூடாகவே படைப்பாளியைப் பார்க்க வேண்டும் என்று ஒரு நிலை உருவாக்கம் பெற்றிருந்தது. அதாவது திருக்குறலினூடாக திருவள்ளுவரைப் பார்க்கின்ற மாதிரி, நாவலர் இயலினூடாக நாவலரைப் பார்க்கின்ற மாதிரி, ஒரு எழுத்தாளனின் படைப்பினூடாக அந்த எழுத்தாளனைப் பார்க்க வேண்டும் என்ற ஒரு நிலை காணப்பட்டது. இதனால்தான் எமது வரலாறுகளை நாம் தொலைத்துவிட்டோம் என்று எண்ணத் தோன்றுகின்றது. எமது வரலாற்றைக் கூட வெள்ளைக்காரர்கள் தான் எழுதி வைத்துப் போயிருக்கிறார்கள். அண்மைக்காலமாக இந்திரபாலா முதல் - பரணவிதான வரை எமது பழைய விடயங்களை வைத்துக் கொண்டு எமது வரலாறுகளை எழுத முற்பட்டனர். 'ஆதாரத்தன்மை இல்லை' என்று இன்னொரு சாரார் இதனையும் நிராகரிக்கின்றார்கள். இங்கே ஏன் ஆதாரமில்லாமல் போனது? நாங்கள் ஆவணப்படுத்தாமல் விட்டதால் தானே! அதே தவறை நாங்கள் இந்த 21ம் நூற்றாண்டிலும் செய்ய வேண்டுமா?...

"...இவ்விடத்தில் புலம்பெயர் தமிழர்களைப் பற்றி நாங்கள் கதைத்துக் கொண்டிருக்கின்றோம். இலங்கைத் தமிழரின் முதற் புலம்பெயர்வு 1870ல் இடம்பெற்றது. 1870ல் வைத்தியலிங்கம் என்பவரே முதலாவதாக புலம்பெயர்ந்து சிங்கப்பூருக்குச் சென்றுள்ளார். இவர் கச்சேரியின் பிரதம இலிகிதராக வேலை செய்தவர். அப்போது இவரின் வெள்ளைக்கார துரை பிரித்தானிய காலனித்துவ ஆட்சியின் கீழிருந்த மலேயாவுக்கு இடமாற்றலாக்கிச் செல்லும்போது வைத்தியலிங்கத்தையும் மலேயாவுக்கு அழைத்துச் சென்றுள்ளார். இதுவே இலங்கைத் தமிழரின் முதலாவது புலம்பெயர்வாக அமைந்துவிடுகின்றது...

"...ஆக ஆரம்ப புலம்பெயர்வுகள் பொருளாதார ரீதியாகவே இருப்பதைக் காணலாம். இப்படியான புலம்பெயர்வில் 1920களில் ஒரு முக்கிய விடயத்தை நான் சுட்டிக்காட்ட வேண்டும். ந.சி. கந்தையாப் பிள்ளை என்பவர் (கந்தரோடையைச் சேர்ந்தவர்) மலேயாவுக்கு புலம்பெயர்ந்து சென்றார். மலேயாவின் அதிக காலம் வாழ்ந்துவிட்டு, பின்பு இந்தியாவிலும் வாழ்ந்துவிட்டு 1966ல் தனது தாயக இருப்பிடமான கந்தரோடைக்கு வந்தார். இவர் 1967ல் இறந்துவிட்டார். இவரிடம் என்ன முக்கியத்துவம் இருந்ததென்றால் அவரும் எம்மைப் போலவே புலம்பெயர்ந்து வாழ்ந்தவர்தான். தன்னைப் பற்றி எங்கேயும் எழுதி வைக்காத பெரிய மனிதர். ஆனாலும் அவர் மொத்தமாக 64 புத்தகங்களை எழுதியுள்ளார். அவை சிறிய புத்தகங்களல்ல. தடித்த புத்தகங்கள். என்னிடம் எல்லாப் புத்தகமும் உள்ளன. 1937ல் தமிழ் அகராதி என்ற புத்தகத்தையும் எழுதியுள்ளார். 2002ல் இப்புத்தகங்களை இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு புண்ணியவான் ந.சி.கந்தையாவைப் பற்றி அறிந்து அவரின் புத்தகங்களை கன்னிமாரா நூலகம், மற்றும் பிரித்தானிய நூலகம் ஆகியவற்றிலிருந்து தேடியெடுத்து அனைத்தையும் 'ந.சி.க  நூல்திரட்டு' எனும் தலைப்பில் 24 தொகுதிகளால் பதிப்பித்திருக்கின்றார். அவர் மூலமே ந.சி. கந்தையாவின் நூல்கள் எனக்குக் கிடைத்தன....

"...இந்த நூல்கள் கிடைத்ததும் ந.சி.கந்தையா என்று பெயர் குறிப்பிடப்பட்ட இவர் பற்றிய குறிப்புக்கள் எங்காவது இருக்கின்றதா என்று தேடிப் பார்த்தேன். கந்தரோடையிலும் இல்லை. யாழ்ப்பாணத்திலும் இல்லை. இவர் ஒரு எழுத்தாளர் என்பது யாழ்ப்பாணத்தவர்களுக்கே தெரியவில்லை. ந.சி.கந்தையாவின் புத்தகங்களைப் பார்க்கும் போது அவர் படம் ஒரு கோட்டுருச் சித்திரமாக வரையப்பட்டுள்ளது. வாழ்க்கைக் குறிப்பு இரண்டொரு வரிகளில் மிகவும் சுருக்கமாகப் போடப்பட்டுள்ளது. அதை வைத்து ஒன்றுமே அறிய முடியாது. இது எப்படி நடந்தது என்று நீங்கள் யோசிக்க வேண்டும். "தன்னுடைய வெளியீடுகளினூடாகவே தன்னைப் பார்க்க வேண்டும்" என்று நினைத்த மனிதராக அவர் இருந்திருக்க வேண்டும். தாயக மண்ணுக்கே போய் அவர் இறந்தாலும்கூட அவரை அடையாளப்படுத்த எந்த தரவுகளுமே இருக்கவில்லை. பின்பு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் சிவலிங்கராஜா இவர் பற்றி ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அதேபோல கொழும்பு தமிழ்ச்சங்கத்தைச் சேர்ந்த கந்தசாமி அவர்களும் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். இவ்வாறு அவர் பற்றி நான்கு கட்டுரைகள் வரை வெளிவந்திருக்கின்றன. அந்நான்கு கட்டுரைகளையும் நான் படித்திருக்கின்றேன். நான்கு கட்டுரைகளும் கிட்டத்தட்ட ஒரே தகவல்களையே தருகின்றன. எனவே அவர் பற்றிய பூரணமான தகவல்கள் யாருக்குமே தெரியாது. அறிந்து கொள்ளவும் முடியாதுள்ளது, காலம் கடந்துவிட்டது.    



"... இனிவரும் காலத்திலாவது இதை நாங்கள் தவிர்க்க வேண்டும். அப்படியென்றால் புன்னியாமீன் எழுதியுள்ள இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள்' போன்ற புத்தகங்கள் நிறைய வெளிவர வேண்டும். தமிழ் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரங்கள் சர்வதேச மட்டத்தில் தொகுக்கப்பட்டு ஆவணப்படுத்தப்படல் வேண்டும். எம்மிடம் காணப்படக்கூடிய அரசியல் மற்றும் வேறுபட்ட வேறுபாடுகளை கருத்திற் கொள்ளாது தகவல்களை வழங்கி புன்னியாமீனுக்கு பூரண ஒத்துழைப்பினை வழங்க வேண்டும். புன்னியாமீன் ஒரு மதவாதியல்ல. தமிழ்மொழியை வளர்க்கவும், தமிழ் படைப்பிலக்கியவாதிகள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரங்களைத் திரட்டி பாதுகாக்கவும் கொள்கையளவில் கணிசமாகப் பாடுபடுகின்றார். உங்களுக்குப் பார்த்துக் கொள்ள முடியும். இந்நூலில் ஜெர்மன், பிரித்தானிய, பிரான்ஸ், டென்மார்க் போன்ற நாடுகளில் வாழும் 25 தமிழர்களின் விபரங்கள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன. இது மேலும் விரிவடைய வேண்டும்....

"...ஏற்கெனவே 'எம்மவர்கள்' எனும் தலைப்பில் அவுஸ்திரேலியாவில் வாழும் 'முருகபூபதி' அவர்களும், ஜேர்மன் தமிழ்  எழுத்தாளர் சங்கம்  'ஜேர்மனியில் தடம் பதித்த தமிழர்கள்' எனும் தலைப்பிலும் ஒவ்வொரு நூல்களை வெளியிட்டுள்ளனர். பிரான்ஸ் வண்ணை தெய்வம் மற்றும் கனடாவில் சிலரும் எழுதியுள்ளனர். தற்போது இலங்கையில் இருக்கும் 57 எழுத்தாளர்கள் பற்றி நானும் எழுதிக் கொண்டிருக்கின்றேன். இப்படி விபரத்திரட்டுகள் அதிகமாக வர வேண்டும். இதேபோல எம்மைப் பற்றிய குறிப்புக்களை பதிவாக்கி வைப்போமாயின் நாங்கள் இல்லாத காலத்தில் அடுத்து வரக்கூடிய தலைமுறையினருக்கு எம்மைப் பற்றித் தெரிந்து கொள்ள இவை ஆவணமாகும். உதாரணமாக எடுத்துக் கொள்வோம். ஜேர்மன் தமிழ் எழுத்தாளர் சங்கத்தால் வெளியிடப்பட்ட 'ஜேர்மனியில் தடம் பதித்த தமிழர்கள்' எனும் நூல் இன்னும் எத்தனை காலம் சென்றாலும் கூட 'ஜேர்மனியில்' தமிழர்கள் வாழ்ந்ததற்கான சான்றாக அமைந்து விடுகின்றது....

"...எனவே புன்னியாமீன் அவர்கள் சுயமாக முன்வந்து தனது சொந்தச் செலவிலே சர்வதேச ரீதியில் உள்ள தமிழ் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரங்களைத் திரட்டி ஆவணப்படுத்தும் இப்பணிக்கு நாங்கள் பூரணமான ஒத்துழைப்பினை வழங்க வேண்டும்....      

"...இறுதியாக ஒரு விடயத்தைக் குறிப்பிட விரும்புகின்றேன். புன்னியாமீன் இத்தகைய புத்தகங்களை வியாபார நோக்குடன் செய்வதில்லை. இதை அவர் வியாபார நோக்குடன் செய்திருந்தால் ஆயிரம் பிரதிகளை அச்சிட்டு தாயகத்திலுள்ள நூலகங்களுக்கு இலவசமாக வழங்கியிருக்கமாட்டார். இவரால் தாயகத்திலுள்ள நூலகங்களுக்கு வழங்கிய நூலகங்களின் விபரம் என் கைவசம்  உள்ளது. அதுவும் புலம்பெயர்ந்த தமிழர்களின் விபரத்திரட்டினை தன்னுடைய கைச்செலவிலே நூலகங்களுக்கு அனுப்பி வைத்தார் என்றால் நாங்கள் சிந்திக்க வேண்டும். "ஏன் இந்தப் புத்தகத்தில் ஆயிரம் பிரதிகளை அச்சிட்டீர்கள்?" என்று நான் கேட்தற்கு அவர் சொன்ன பதில் "புலம்பெயர்ந்த தமிழர்களைப் பற்றி தாயகத்தில் உள்ளவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் அவர்களை மறந்துவிடக் கூடாது" என்பதாகும்....எனவே, புன்னியாமீனை நீங்கள் ஒரு முஸ்லிமாகப் பார்ப்பீர்களோ, தமிழ் வளர்க்கும் ஒரு மனிதனாகப் பார்ப்பீர்களோ? எனக்குத் தெரியவில்லை... அது உங்கள் கைகளில்....."

No comments:

Post a Comment