முகநூல் பற்றிய அறிமுகத்தை எனக்குத் தந்தவர் நண்பர் சசிவன். நூலகம் இணையத்தளத்தில் தமிழ் நூல்களைப் பதிப்பது தொடர்பான விடயத்தில் எனக்கு அறிமுகமானவரே சசீவன். அவரே முகநூலின் கணக்கினை எனக்கு ஆரம்பித்துத் தந்தார். இந்த அடிப்படையில் முகநூலில் நான் இணைந்தது நவம்பர் 7, 2009 ஆகும்.
ஆனால் சுமார் இரண்டு வருடகாலம் நான் எவ்விதமான ஆர்வத்தையும் முகநூல் மீது காட்டவில்லை. உண்மையில் முகநூல் பற்றி எனக்கு ஆரம்பத்தில் நம்பிக்கையிருக்கவில்லை. முகநூல் பற்றி பிழையான கருத்தொன்றையே நான் கொண்டிருந்தேன். கடவுச்சொல்லைக் கூட மறந்துவிட்டேன். இந்நிலையில் என்னுடைய மகன் என் பழைய அஞ்சல்களைத் தேடி கடவுச்சொல்லை கண்டுபிடித்து இடைக்கிடையே எனது பக்கத்தில் ஏதாவது செய்வான். இக்காலகட்டத்தில் முகநூல் என்பது இளையதலைமுறையினருக்கான ஓர் பரிமாற்று ஊடகமாக இதை இன்னும் தெளிவுபடுத்துவதாயின் காதலர்களுக்கான ஒரு ஊடகமாகவே நான் கருதிவந்தேன்.
இந்நிலையில் ஒரு நாள் முகநூல் பக்கத்தை திறந்து பார்த்தேன். இதில் இளையவர்கள் மாத்திரமல்ல. பலதரப்பினர் இணைந்திருப்பதையும், கருத்துக்கள் சுயமாக வெளியிடக்கூடிய வாய்ப்புக்கள் இருப்பதையும் என்னால் உணர்ந்துகொள்ள முடிந்தது. இப்படிப்பட்ட நிலையில் தான் இந்திய தமிழ்நாட்டைச் சேர்ந்த எனது நண்பரும், தமிழ்நாட்டில் மாத்திரமல்லாமல் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளின் நன்கறியப்பட்ட எழுத்தாளருமான டாக்டர் ஹமானா சையத் அவர்கள் எனது இல்லத்திற்கு வருகை தந்தார். அச்சமயம் எனது புகைப்பட அல்பங்களை பார்வையிட்ட அவர் இவற்றை உங்கள் முகநூலில் போடலாமே என ஆலோசனைக் கூறினார். முகநூல் பற்றி நான் வைத்திருந்த தவறான எண்ணத்தை எனக்கு எடுத்துரைத்து முகநூல் பற்றிய தெளிவான விளக்கமொன்றைத் தந்தார். அவரின் கருத்துரைகளால் தெளிவு பெற்ற நான் அதன் பின்பே முகநூலில் படிப்படியாக ஈடுபாடுகொள்ள ஆரம்பித்தேன். 2012ம் ஜனவரி இறுதிப்பகுதியில் இருந்து தமிழ் விக்கிப்பீடியா ஈடுபாட்டினை நான் வெகுவாகக் குறைத்தமையினால் அந்த நேரத்தை முகநூலில் எனக்கு ஒதுக்க முடியுமானதாக இருந்தது.
21ம் நூற்றாண்டின் இன்றைய காலகட்டத்தில் தகவல் தொழிநுட்பத்தில் பல்வேறுபட்ட வியக்கத்தகு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. நவீன கால இலத்திரனியல் ஊடகங்களின் வளர்ச்சியில் பல சாதக பாதகங்கள் உள்ளன என்பதை யாராலும் மறுப்பதற்கு இயலாது. நாம் அவற்றைப் பயன்படுத்தும் முறைகளிலேயே அவை தங்கியுள்ளன. நவீனகால இலத்திரனியல் ஊடகங்களின் பயன்பாட்டில் நாங்கள் அன்னப்பறவைகளாக மாறிவிடவேண்டும். நிச்சயமாக எமது இளையதலைமுறையினர் மிகவும் புத்திசாலிகள் அவர்களுக்கு எது நல்லவை, எது தீயவை என்பதை பகுத்தறிந்து கொள்ளக்கூடிய ஆற்றல் நிறையவே உண்டு. தீயதை விடுவோம் நல்லதை எடுத்துக்கொள்வோம். அவை எமது கைகளிலே உள்ளன. இணையத்தை எடுத்தாலும் சரி இணையத்துடன் இணைந்த எந்தவொரு நிகழ்வை எடுத்தாலும் சரி இது பொதுப்படையானது.
முகநூலில் ஈடுபடத் தொடங்கியதும் எனக்குள் ஒரு மன நிறைவு ஏற்பட்டது. ஏற்கனவே முகநூலைப் பற்றி நான் வைத்திருந்த அபிப்பிராயத்திலிருந்து மாற்றம் பெறலாயினேன். ஏனைய ஊடகங்களை விட எமது பதிவுகளை வைத்துக் கொள்ளவும் அவற்றை நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளவும் ஒரு சிறந்த ஊடகமாக முகநூலை நான் ஏற்றுக்கொண்டேன். ஒரு எழுத்தாளன் என்ற வகையில் என் மனந்திறந்த கருத்துக்களை எதிர்காலத்தில் (இன்ஸாஅல்லாஹ்) படிப்படியாக பகிர்ந்து கொள்வேன்.
முகநூலில் நான் இணைந்த பின்பு பல தரப்பிலுமுள்ளவர்களுடன் எனக்குத் தொடர்புகள் ஏற்பட்டுள்ளன. என்னிடம் கல்வி பயின்ற ஆயிரக்கணக்கான மாணவர்கள் இலங்கையில் மாத்திரமல்ல தற்போது கடல் கடந்தும் நல்ல நிலையில் இருக்கின்றார்கள். இவர்களுடன் தொடர்புகளையும் அறிமுகத்தையும் ஏற்படுத்திக்கொள்ள முகநூல் எனக்கு பெரிதும் உதவியாக அமைந்துள்ளது. பழைய உறவுகளைப் புதுப்பித்துக் கொள்ளவும் ஒரு கருவியாக இது இருந்து வருகின்றது.
மறுபுறமாக என்னை என்னாலே அளவிட்டுக் கொள்ளக்கூடிய ஒரு அளவு கோளாகவும் இதனை நான் காண்கின்றேன். நான் இதுவரை 180க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளேன். ஆனால்ää இதுவரை இந்நூல்களைப் பற்றி முறையான பதிவொன்றையும் நான் மேற்கொள்ளவில்லை. முகநூலில் நான் ஈடுபட்ட பின்பே டாக்டர் ஹிமானா சையித் போன்ற நண்பர்கள் தந்த ஆலோசனைப்படி இம்முயற்சியில் தற்போது ஈடுபட்டுள்ளேன். முக நூல் ஈடுபாடு இல்லாதிருப்பின் இம்முயற்சியை நான் தொடர்ந்திருக்கவே மாட்டேன். இத்தேடுதல் முடிந்த பின்பு இவற்றை ஒரு தனி நூலாக தொகுத்து வெளியிடும் எண்ணம் எனக்குண்டு.
நாங்கள் உயிருடன் வாழும் காலத்திலே நாங்கள் செய்தவற்றை தொகுத்து வைத்திருக்கவேண்டும். நாங்கள் இல்லாத காலத்தில் எம்மைப் பற்றி எதிர்கால சந்ததியினர் தெரிந்துகொள்வதற்கான ஒரு ஆதாராமாகவே இவை இருக்கும் என்பதை என்னுள் உணர்த்தியது முகநூலே.
முகநூல் நண்பர்களுக்கு நான் கூறிக்கொள்ள விரும்புவது இதுவொரு நல்ல களம். இதனை நாங்கள் முறையாகப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். இதனைப் பயன்மிக்கதாகவும் ஆக்கபூர்வமானதாகவும் மாற்றிக்கொள்ளும் ஆற்றல் உங்களுக்குண்டு என்பது எனது நம்பிக்கை.
No comments:
Post a Comment