Monday, 12 March 2012

நானும், நான் செய்த தவறுகளும் (அங்கம் - 02) - கலாபூசணம் புன்னியாமீன்

நீரிழிவுக்கான உலகளாவிய நீல வளைய இலச்சினை

இத்தலைப்பின் கீழ் நான் ஆரம்பித்த கட்டுரைத் தொடருக்கு எதிர்பார்த்ததை விட ஆதரவு கிடைத்தமை மகிழ்ச்சியைத் தருகின்றது. பலர் மின்னஞ்சல் மூலமாகவும், தொலைபேசி மூலமாகவும் நேரடியாக என்னுடன் தொடர்புகொண்டு பல கருத்துக்களை தெரிவித்தனர். குறிப்பாக நான் செய்த தவறுகள் என்று வரும்போது அது தனிப்பட்ட முறையில் என்னைப் பற்றி ஏனையவர்கள் வைத்துள்ள அபிப்பிராயத்தில் குறை ஏற்படும் என்பது என் மேல் வைத்துள்ள அபிமானத்தில் சிலர் கருத்து தெரிவித்தனர். தவறுகள் என்று கூறும்போது எந்த மனிதனுக்கும் ஏற்படக்கூடியவையே. நாங்கள் செய்யும் சில தவறுகள் சிலநேரங்களில் அடுத்தவர்களைப் பாதிக்கலாம். சிலநேரங்களில் எங்களையே பாதிக்கலாம். இங்கு நான் செய்த தவறுகளாக எடுத்துக்கூற விளைவது எனது உடல்நலம், கல்வி, தொழில், பொது வாழ்க்கை, குடும்ப வாழ்க்கை போன்றவற்றில் நான் விட்ட தவறுகளையாகும். இத்தகைய தவறுகளினால் எத்தகைய பாதிப்புகளுக்குள்ளானேன் என்பதை என் வரலாற்றுக் குறிப்பின் ஒரு பகுதியாக முன்வைப்பதேயே நான் நோக்காகக் கொண்டுள்ளேன். இதனூடாக தனிப்பட்டவர்களைக் குறைகண்டு அவர்களைப் பாதிப்படையச் செய்வதையோ அல்லது நிறுவனங்களை குறைக்கூறுவதையோ நான் குறிக்கோளாகக் கொள்ளவில்லை. விசேடமாக என் மீது கொண்ட அபிப்பிராயம் காரணமாக தெரிவித்த கருத்துக்களை நான் சிரமேற்கொண்டு இத்தொடரைத் தொடரலாம் என எண்ணியுள்ளேன். கருத்துக்களைத் தெரிவித்த அன்பு நெஞ்சங்களுக்கு என் இதயங் கனிந்த நன்றிகள். தொடர்ந்தும் உங்கள் கருத்துக்களை செவிமடுக்க நான் தயார் நிலையில் உள்ளேன்.

மூத்தவர்களின் அனுபவங்களை வைத்து இளையவர்கள் தெளிவுபெறுவார்கள் என எதிர்பார்ப்பது ஒரு முறையில் தவறு. ஏனெனில், எமது கருத்துக்கள் எத்தனை பேரை சென்றடையப் போகின்றன? எத்தனை பேர் அதனை கருத்திற்கொள்வார்கள்? என்பதைப் பற்றி எம்மால் தீர்மானிக்க முடியாது. இதைப் பற்றி நான் கவலைப்படவுமில்லை. என் தவறுகள் பதிவாகும்போது எங்காவது எப்போதாவது யாராவதொருவர் இதனைக் கருத்திற் கொள்வாராயின் அதையே எனது வெற்றியாக நான் கருதுவேன்.


நீரிழிவு நோய் - எனது அனுபவமும், எனது தேடலும்

இன்று உலகம் முழுவதும் பேசப்படும் நோய்களில் ஒன்றாகவே நீரிழிவு நோய் காணப்படுகின்றது. வயது வித்தியாசம், தகைமை, தராதரம், பால் இன பேதம், செல்வம், வறுமை, நகரம் கிராமம் மட்டுமன்றி தயவு தாட்சண்யம் கூட காட்டாது நீரிழிவு நோய் வேகமாக பரவி வருவதாக கூறப்படுகின்றது. இந்நோய் பரவலாக அதிகமான மக்களிடம் காணப்படுவதுடன் அதன் தொடர் விளைவுகளும் பாரதூரமாகவே இருக்கின்றன. இந்நோய் வந்து விட்டால் அதை முற்று முழுதாகக் குணமாக்க முடியாது எனக்கூறப்படுகின்றது. இருப்பினும் வைத்திய ஆலோசனைப்படி நடப்பதில் நோயாளி முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதன் மூலம் இந்நோயின் தொடர் விளைவுகளைத் தடுக்கவோ அல்லது குறைக்கவோ முடியும். நீரிழிவு நோயாளி ஒருவரைப் பொருத்த வரையில் சுயகட்டுப்பாட்டுடன் எந்நேரமும் அவதானத்துடன் செயற்பட்டால் தேகாரோக்கியத்தைப் பேணி, வாழ்நாளை நீடித்துக்கொள்ள முடிகிறது.

நீரிழிவு தொடர்பாக கருத்து வெளியிட்ட அமெரிக்க டாக்டர் ஒருவர் 'நீரிழிவு உள்ள ஒருவர் தனக்கு நீரிழிவு உள்ளதென்று தெரிந்து கொண்டால், நீரிழிவு என்பது அவருக்கு ஒரு நோயல்ல." என்று  குறிப்பிட்ட ஒரு கருத்தை நினைத்துப் பார்க்கின்றேன். இக்கருத்தின் உள்ளடக்கம் மிகவும் அழுத்தமானது என்பதை தற்போது உணர்கின்றேன்.  இதன் அர்த்தம் நீரிழிவு நோய் உள்ள ஒருவர் தனது கட்டுப்பாட்டின் மூலம் நோயைக் கட்டுப்படுத்திக் கொள்ளலாம் என்பதாகும். நாம் நோயைக் கட்டுப்பாடாக வைத்திருப்பதற்கு, முதலில் அந்நோயைப்பற்றி முழுமையாக நன்கு அறிந்து வைத்திருக்க வேண்டும். எனக்கு நீரிழிவு நோய் உள்ளது என்றால் என்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள நான் தெரிந்திருக்க வேண்டும். குறிப்பாக உணவு விடயத்தில் நாம் காட்டும் அக்கறையே எம் நோயின் எதிர்காலத் தன்மையைப் தீர்மானிக்கப் போகின்றது.

எனக்கு நீரிழிவு நோயுள்ளது என்பதை நான் தெரிந்துகொண்டது எனது 33வது வயதிலாகும்.

நான் முதல்முதலாக என் இரத்தத்தில் குளுகோசு அளவினைப் பரிசீலித்த போது 315 புள்ளியைக் காட்டியது. இது அதிகமானது. இதற்கு சில வருடங்களுக்கு முன்பே எனக்கு நீரிழிவு ஏற்பட்டிருக்க வேண்டும் டாக்டர் குறிப்பிட்டார். என் நோய் கண்டுபிடிக்கப்பட்டதுடன் குளுகோசின் அளவு அதிகமாக கூடியிருந்ததினால் உடனே சில 'மெட்ஃபார்மின்' மாத்திரைகளை மாத்திரம் தந்து டாக்டர் கூறிய பிரதான ஆலோசனை மருந்துக்குப் பழகிக் கொள்ளாமல் உணவுமுறையைச் சீரமைப்பதன் மூலமும், உடற்பயிற்சியினை அதிகரிப்பதன் மூலமும் நீரிழிவினை ஆரம்பத்தில் கட்டுப்படுத்த முடியும். அடிக்கடி இரத்தப் பரிசோதனை செய்துகொண்டு அதற்குரிய பரிகாரத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள் என்பதாகும்.

நோயைக் கண்டுபிடித்தவுடன் மனதில் ஒரு பயம். வாழ்க்கையில் குணப்படுத்த முடியாத ஒரு நோய்க்கு உட்பட்டுவிட்டேனே என்று மனதுக்குள் ஓர் ஆதங்கம். ஒருவித விரக்தியுணர்வு பயம் காரணமாகவும், வீட்டில் மனைவியின் பிடிவாதம் காரணமாகவும் உணவுமுறையைச் சீரமைப்பதற்குப் பெரிதும் போராடினேன். ஒருவாறாக குளுகோசின் அளவும் குறைந்து விட்டது. இப்போது மனதுக்குள் மீண்டும் மகிழ்ச்சி. படிப்படியாக மருந்துகளை நானே குறைத்துக்கொண்டேன். (டாக்டரின் ஆலோசனையின்றியே)

உணவு விடயத்தில் என் பலவீனத்தை நான் குறிப்பிட வெட்கப்படவில்லை. (இன்றைய காலகட்டத்தில் எமது வாலிபர்களும் அவ்வாறுதான்.) எனது வாலிபப் பராயத்தில் நான் மிக அதிகமாகவே சாப்பிடுவேன். உணவு விடயத்தில் நான் கட்டுப்பாடாக இருந்தேன் என்பதை என்னால் எச்சந்தர்ப்பத்திலும் குறிப்பிட முடியாது. வீட்டில் மாத்திரமல்லாமல் திருமண வீடுகளுக்குச் சென்றாலும் எனது நண்பர்கள் ஒன்றாக சேர்ந்துகொண்டு ஒரே 'சகனி'ல் அமர்ந்தால் எமது உணவின் அளவை அங்கு தீர்மானிக்க முடியாது. அவ்வயதில் போட்டிப் போட்டுக் கொண்டு சாப்பிடுவதில் நாங்கள் அடுத்தவர்களுக் குறைந்தவர்கள் அல்ல. சிலநேரங்களில் ஐந்து, ஆறு சகன்கள் சாப்பிட்ட அனுபவமும் உண்டு.

முஸ்லிம் திருமண வீடுகள் என்றால் கூறவும் தேவையில்லையே. நன்றாக ருசியாக சமைப்பார்கள். நிச்சயமாக சோற்றில் மாத்திரமல்ல, கறிகளிலும் நெய் அதிகமாக சேர்க்கப்பட்டே இருக்கும். (கறிகளைப் பற்றியும் சொல்லத் தேவையில்லையே.)

மறுபுறமாக வீடுகளில் சமைக்கும்போதும் கைக்குத்தரிசிக்குப் பதிலாக சம்பா அரிசிக்கே நாங்கள் அதிகமாகப் பழக்கப்பட்டுள்ளோம். மேலும், எமது முன்னோர்கள் போல நாங்கள் உடலை வருத்தி வேலை செய்வதுமில்லை.

1983ம் ஆண்டில் எனக்கு ஆசிரியர் நியமனம் கிடைத்தது. முதல் நியமனம் தொலஸ்பாகை கலமுதுன இலக்கம் 02 எனும் பெருந்தோட்டப் பாடசாலைக்கே கிடைத்தது. அப்போதைய நிலையில் கண்டி மாவட்டத்தின் மிகவும் கஸ்டப் பிரதேசத்தில் காணப்பட்ட பாடசாலை அது. இப்பாடசாலைக்குச் சென்றுவர சுமார் 9 மைல்கள் நடக்க வேண்டும். பாடசாலைக்குச் செல்ல எந்தவொரு வாகனமும் கிடையாது. (இது பற்றி பிறிதொரு தலைப்பில் விரிவாக நான் எழுதவுள்ளேன்) அப்போது தொழில் நிமித்தமாக ஆரம்பத்தில் தொலஸ்பாகையிலும் பின்பு நாவலப்பிட்டியவிலும் அறையெடுத்து தங்கியிருந்தேன். எனவே, ஹோட்டல் சாப்பாட்டுக்கு நன்கு பழக்கப்பட்டுவிட்டேன். அதேநேரம், 'கொகாகொலா' போன்ற மென்பானங்களை அதிகமாக எடுப்பதற்கும், நொறுக்குத் தீன் வகைகளை உண்பதற்கும் பழக்கப்பட்டுவிட்டேன். இவ்வாறு இக்காலகட்டங்களில் வெளியே எனது உணவுமுறை எல்லை மீறியே இருந்தது. உரிய நேரத்திற்கு சாப்பிடுவதும் மிகமிகக் குறைவு.

இதேகாலகட்டத்தில் மேலதிக வகுப்புகள் நடத்துவதற்கும் நான் ஆரம்பித்திருந்தேன். மேலதிக வகுப்புகளுக்கு விரிவுரைக்குச் சென்றால் கட்டாயமாக 'கொகாகோலா' எனக்கு அவசியம் தேவைப்படும்.

எனது குளுகோசின் அளவு குறைந்தவுடன் 'வேதாளம் மீண்டும் முருங்கை மரமேறிய கதைதான்'. ஏற்கனவே கடைபிடித்தக் கட்டுப்பாடு படிப்படியாக குறைய ஆரம்பித்தது. மனைவி கட்டுப்படுத்த எத்தனித்தாலும்கூட (சிலநேரங்களில் சண்டை வருவதுமுண்டு). கடைகளுக்குச் சென்று திருட்டுத்தனமாக சாப்பிடுவதை பழக்கிப்படுத்திக் கொண்டேன்.

முதல் தடவையாக எனது நோய் கண்டறியப்பட்ட பின்பு முதல் முறையாக உணவுக் கட்டுப்பாட்டில் இருந்து நோய் குறைந்தததையடுத்து நான் விட்ட முக்கியமான தவறு பழையபடி என் உணவுமுறையை மாற்றிக் கெண்டதுதான். குறிப்பாக 1990ம் ஆண்டுகளில் என் தனியார் வகுப்புக்கள் கண்டி, கொழும்பு, குருநாகல் போன்ற இடங்களில் பெரியளவில் நடந்தமையினால் ஹோட்டல் உணவருந்தல் மிகவும் அதிகரித்துவிட்டது.

இறுதியில் 44வது வயதாகும்போது குளுகோசின் அளவு அதிகரித்து இரண்டு தடவைகள் வைத்தியசாலையில் தங்கி சிகிச்சையும் பெற்றேன். ஒரு தடவை குளுகோசின் அளவைப் பார்க்கும்போது 633 புள்ளிகளைக் காட்டியது. உண்மையிலேயே இது மிக மிக அதிகரித்த அளவாகும். டாக்டர்களால் பல தடவைகள் நான் எச்சரிக்கப்பட்டுள்ளேன்.

இதன் பின்பு தான் 47வது வயதில் என் இலங்ககான் சிறுதீவுகளின் (சதையி) செயல்பாடு வெகுவாகக் குறைந்த நிலையில் இன்சுலின் ஊசியை ஏற்றும் நிலைக்கு நான் தள்ளப்பட்டேன். இன்றும் இறைவனின் அருளினாலும், இன்சுலின் தயவாலும் நான் வாழ்ந்து கொண்டிருக்கின்றேன். இன்சுலின் ஒரு நாளைக்கு இரண்டு தடவைகள் எடுக்க வேண்டும். இவ்வாறு இல்லாவிட்டால் அடுத்தநாள் என் குளுகோசின் அளவு 300 புள்ளிகளைத் தாண்டிவிடும். இது தான் எனது நிலை.

தற்போது நான் உணவில் பூரணக்கட்டுப்பாட்டுடன் இருக்கின்றேன். சோறு சாப்பிடும்போதும் சிகப்பு அரிசி அல்லது குத்தரிசியையே சாப்பிடுகின்றேன். அதுவும் ஒரு பிடியளவு மாத்திரமே. குரக்கன்,  சிகப்பரிசி மா ஆகாரங்கள் அதிகமாக சாப்பிடுகின்றேன். கீரைவகைகளை அதிகமாக சாப்பிடுகின்றேன். ஆனாலும் இது என் காலம் கடந்த ஞானம்.  

எனக்கு நீரிழிவு கண்ட நேரத்தில் ஆரம்பத்தில் டாக்டரால் சிபாரிசு செய்யப்பட்ட மருந்துகளை ஒழுங்காக எடுத்துவந்தாலும்கூட பின்பு படிப்படியாக மருந்துகளைக்கூட குறைத்துக் கொண்டேன். சிலநேரங்களில் பாவிப்பதேயில்லை. டாக்டரிடம் அடிக்கடி சென்று ஆலோசனைகள் பெறுவதில்லை. வீட்டில் மனைவி தொல்லைப்படுத்தினாலும் நான் கூறும் பதில் "இப்போது தேகாரோக்கியமாக இருக்கின்றேன். குளுக்கோசு அளவு கூடியுள்ளது என்று தெரிந்தால் மானசீகமானப் பாதிக்கப்பட்டுவிடுவேன்" என்று குருட்டு நியாயம் கற்பித்து தவிர்த்துக் கொள்வேன்.

அன்று நான் செய்த தவறுகளின் விளைவுகளை தற்போது அனுபவிக்கின்றேன்.

நீரிழிவுடன் இணைந்த வகையில் என் இடது காலில் குருதிநரம்புகளில் சில அடைப்புகள் ஏற்பட்டுள்ளன. எனக்கு நீண்ட தூரம் பிரயாணம் செய்யும்போது காலில் வீக்கம் ஏற்படும். அதேநேரம், நடக்கும்போதும் மிகவும் சிரமப்படவேண்டியிருக்கும். 50, 100 அடிகளை வைக்கும்போது காலில் நரம்பில் ஒரு பிடிப்பு ஏற்படும். அப்போது வேதனையைத் தாங்கமுடியாது. அண்மையில் நான் இந்தியா சென்ற நேரத்தில் இது பற்றி பூரணமாக பரிசீலித்தபோது என் இடது காலில் நரம்புகளில் அடைப்புகள் ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. மொத்தமாக ஏழு அடைப்புகள் உள்ளன. இன்னும் இதற்குரிய சரியான பரிகாரத்தை பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் உள்ளேன். கண்டி வைத்தியசாலையில் நரம்பியல்துறை தலைமை வைத்தியரை அணுகி சோதனை செய்தபோது சத்திரசிகிச்சையே இதற்கான ஒரே வழியென குறிப்பிட்டார்.

நீரிழிவு நோயாளர்களில் 15 சதவீதம் பேர் இரத்த நாள (பெரிபரல் வாஸ்குலர்) நோய்க்கு ஆளாகின்றனர் என அறிக்கைகள் தெரிவிக்கின்னறன. இவர்களில் பெரும்பாலானோர் தங்கள் கால்களை இழக்க நேரிடுகிறது. இதயத்திலிருந்து கால்களுக்கு இரத்தம் செல்ல பயன்படும் இரத்த குழாய்கள் பாதிப்படைந்து, கால்களுக்கு செல்லும் இரத்த ஓட்டம் தடைப்படுகிறது. உணர்ச்சியற்ற நிலையில் உள்ள கால்களில், எளிதில் புண்கள் ஏற்பட்டு, நோயாளிகள் தங்கள் கால் விரல்களையோ, காலையோ இழக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. நடக்கும் போது காலில் ஏற்படும் வலி கால் மற்றும் கால் விரல்களின் நிறம் மாறுவது போன்றவை, இந்நோய்க்கான பொதுவான அறிகுறிகள், இந்நோய் முற்றிய நோயாளிகளை ‘எண்டோவாஸ்குலர், ஆஞ்சியோபிளாஸ்டிக், ஸ்டென்ட்ஸ்’ போன்ற நவீன சிகிச்சை மூலம் குணப்படுத்தலாம்.

உண்மையிலேயே ஆரம்பத்தில் ஒரு கட்டுப்பாட்டினை என்னுள் ஏற்படுத்திக் கொண்டிருந்தேன் என்றால் தற்போதைய மனஅழுத்தங்களையும் வேதனைகளையும் நான் சுமக்க வேண்டி ஏற்பட்டிருக்கமாட்டாது.

நீரிழிவு தொடர்பாக நான் சேர்த்து வைத்துள்ள சில தகவல்களை தங்களுடன் பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகின்றேன். அது எனது மனத்திருப்திக்காக....

நீரிழிவு என்றால் என்ன?

இதனை  எளிமையான முறையில் கூறுவதாயின் எமது இரத்தத்தில் இனிப்புச்சத்து (குளுக்கோசின் அளவு) வழமையாக இருப்பதிலும் பார்க்க அதிகரிப்பதாகும். இதனாலேயே நீரிழிவு நோய் ஏற்படுகின்றது.  நாம் உண்ணும் உணவிலுள்ள மாப்பொருள் சமிபாடடைந்து குளுக்கோசாக மாற்றப்பட்டு குருதியால் அகத்துறிஞ்சப்படுகிறது. சாதாரண மனிதனின் 100ml குருதியில் 80-120mg குளுக்கோசு காணப்படுகிறது. எமது உடல் இயக்கத்திற்குத் தேவையான குளுக்கோசு எமது உடற் கலங்களுக்குள் உடைக்கப்பட்டுப் பெறப்படுகிறது. குருதியில் உள்ள குளுக்கோசு உடற்கலங்களுக்குள் செல்ல உதவுவது உணவுப்பாதையுடன் தொடர்பாக இருக்கும். சதையி (Pancreases) எனும் சுரப்பியால் சுரக்கப்படும். "இன்சுலின்" (Insulin)  எனப்படும் ஓர் ஓமோன் ஆகும். இவ் இன்சுலின் உடலில் தொழிற்படாது விடுவதால் அல்லது இன்சுலின் சுரக்கும் அளவு குறைவதால் குருதியிலுள்ள குளுக்கோசு உடற்கலங்களுக்குள் செல்வது தடைப்படும். இதனால் குருதியில் குளுக்கோசின் அளவு கூடுகிறது. சாதாரணமாக சிறுநீரகங்கள் (Kidney)  குளுக்கோசை சிறுநீருடன் வெளியேற்றுவதில்லை.

குருதியில் குளுக்கோசின் அளவு கூடும் போது அதாவது 100ml குருதியில் குளுக்கோசின் அளவு 180mg ற்கு மேலாகக் கூடும் போது சிறுநீரகங்கள் மேலதிக குளுக்கோசை சிறுநீருடன் வெளியேற்றுகின்றன. இதனை சிறுநீரில் சீனி (Sugar)  இருக்கிறது எனக் குறிப்பிடுகிறோம். இவ்வாறு சிறுநீருடன் குளுக்கோசு போகும் போது உடலிலிருந்து அதிகம் நீரும் சேர்ந்தே வெளியேறும். இதனால் வழமையிலும் பார்க்க அதிகளவு சிறுநீர் உண்டாவதால் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிய நிலை ஏற்படும். இதனாலேயே இதை நீரிழிவு என்கிறோம்.


நீரிழிவு நோயின் மூலமான சில அறிகுறிகள்

1. அடிக்கடி சிறுநீர் கழித்தல், வழமைக்கு மாறாக இரவிலும் பல தடவை சிறுநீர் கழிக்க வேண்டிய நிலை ஏற்படல்.
2 அடிக்கடி தாகம் ஏற்படல்.
3. அசாதாரண பசி ஏற்படல்.
4. உடல் சோர்வாக இருத்தல்.
5. உடல் நிறை குறைந்து கொண்டு போதல்.
6. தலை சுற்றுதல், மயக்கம் போன்றன அடிக்கடி ஏற்படல்.
7. கை, கால்களில் விறைப்புத் தன்மை ஏற்படுதல்.
8. தேகத்தில் பருக்களும், கட்டிகளும் தோன்றல்.
9. ஆண், பெண் இனப்பெருக்க உறுப்புகளில் இகூடிய அழற்சி ஏற்படல்.
10. கண் பார்வை குறைவடைதல்.
11. புண்கள் ஏற்படின் அவை ஆறுவதற்கு வழமையிலும் கூடிய நாட்கள் எடுத்தல்.
12. எளிதில் கோபமடைதல்.

மேற்குறிப்பிட்ட அறிகுறிகளில் சிலவற்றை சிலகாலமாக அவதானித்தால் அருகிலுள்ள வைத்திய சாலைக்குச் சென்று சிறுநீர்ப்பரிசோதனை செய்வதன் மூலம் அந்நோய் இருக்கின்றதா?, என்பதை அறிந்து கொள்ளலாம். பின்பு இரத்தப்பரிசோதனை செய்வதன் மூலமே இந்நோயை உறுதிப்படுத்திக் கொள்ளலாம். நீரிழிவு நோய் காணப்படுமிடத்து டாக்டரை அணுகி உரிய சிகிச்சை முறைகளை மேற்கொள்ளல் அவசியமாகும்.

நீரிழிவு நோயின் வகைகள்

பொதுவாக நீரிழிவு நோயினை நான்காக வகைப்படுத்தலாம்.

முதல் வகை நீரிழிவு நோய்

இது பெரும்பாலும் குழந்தைகளை தாக்கும் தன்மை கொண்டது. இதனால் சில மருத்துவர்கள் இதை குழந்தைகளின் நீரிழிவு நோய் என்றும் அழைக்கிறார்கள். குழந்தை பிறந்தது முதல் முப்பது வயது வரை தாக்கும் தன்மை கொண்டது எனப்படுகின்றது.

மனிதர்களின் உடம்பில் இயற்கையிலேயே இருக்கும் நோய் எதிர்ப்புத்தன்மையானது, திடீரென்று சதையியியைத் (Pancreases) தாக்கி அதில் இருக்கும் இன்சுலின் சுரக்கும் சுரப்பிகளை அழித்து விடுகிறது. இதனால் இன்சுலின் சுரக்கும் தன்மையை சதையி இழந்துவிடுகிறது. இப்படி மனித உடம்பின் ஒரு பகுதி கலங்கள், இன்னொரு பகுதிக் கலங்களை ஏன் தாக்குகிறது என்பது தொடர்பில் தெளிவான உறுதியான ஆராய்ச்சி முடிவுகள் எட்டப்படவில்லை. ஒருவகையான வைரஸ் தாக்குதல் காரணமாகவே இப்படி நடப்பதாக அண்மைக்கால கண்டுபிடிப்புகள் கூறினாலும் அந்த குறிப்பிட்ட வைரஸை இனம் காண்பதற்கான ஆய்வுகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. அதனால், இந்த முதல் வகை நீரிழிவு நோயைப் பொறுத்தவரை, இது ஒருவருக்கு வந்தால் அவருக்கு ஆயுட்காலம் முழுமைக்கும் இன்சுலின் ஊசிமூலம் குளுக்கோசின் அளவைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது சிறந்த வழியாகக் கூறப்படுகின்றது.

இரண்டாவது வகை நீரிழிவு


உலகளாவிய ரீதியில் எண்ணிக்கை அடிப்படையில் பெரும்பாலானவர்களை பாதிப்பது இரண்டாவது வகை நீரிழிவு நோயாகும். இந்த இரண்டாவது வகை நீரிழிவு நோயைப் பொறுத்தவரை, அது ஒருவருக்கு வருவதற்கு பல காரணங்கள் காணப்படுகின்றன.

பெற்றோருக்கு நீரிழிவு நோய் இருந்தால் அவர்களின் பிள்ளைகளுக்கு நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்புகள் 80 சதவீதம் இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. அது தவிர கூடுதல் உடல் பருமன், அதிகபட்ச கொழுப்புச்சத்துள்ள உணவுகள் சாப்பிடுவது, உடற்பயிற்சியற்ற வாழ்க்கைமுறை போன்ற காரணிகள், ஒருவருக்கு நீரிழிவு நோயை வரவழைப்பதில் முக்கிய பங்காற்றுவதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மூன்றாவது வகையான நீரிழிவு நோய்.

மூன்றாவது வகையான கர்ப்பகால நீரிழிவு நோய். சில பெண்களுக்கு கர்ப்பகாலத்தில் தற்காலிகமாக வருவது. கர்ப்பகாலத்தில் பெண்களின் உடல் எடை அதிகரிப்பதாலும், கருவில் இருக்கும் குழந்தையின் வளர்ச்சி காரணமாகவும், பெண்களுக்கு கூடுதலாக இன்சுலின் தேவைப்படுகிறது. பெரும்பாலானவர்களுக்கு இந்த கூடுதல் இன்சுலின் இயற்கையாகவே சுரந்தாலும், சில பெண்களுக்கு இது சுரப்பதில்லை. அதனால் அவர்களின் இரத்தத்தில் குளுக்கோசின் அளவு அதிகரித்து, அவர்களுக்கு நீரிழிவு நோய் ஏற்படுகிறது. இவர்களின் கர்ப்பத்தின் இறுதியில் குழந்தை பிறந்ததும் இவர்களில் பலருக்கு நீரிழிவு நோய் இல்லாது போய்விடும்.

நான்காவது வகையான நீரிழிவுநோய்

இது சதையியில் ஏற்படும் கற்கள் காரணமாக இது உருவாகிறது. இது உருவாவதற்கு போஷாக்கின்மை உள்ளிட்ட பல்வேறு வகையான சுற்றுப்புற காரணங்கள் இருப்பதாக கூறப்பட்டாலும், இதற்கான பிரதான காரணி எது என்பது குறித்து இன்னமும் ஆய்வுகள் தொடர்கின்றன.

தெற்காசிய நாடுகளைச் சேர்ந்தவர்களில் 98 சதவீதமானவர்களை மேற்குறிப்பிட்ட நான்கு வகைகளுமே பாதிப்பை செலுத்துவதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

நீரிழிவின் பாரதூர விளைவுகள்

நீரிழிவினால் ஏற்படும் தீய விளைவுகள் பற்றியும் தெரிந்து வைத்திருத்தல் வேண்டும். ஒரு நீரிழிவு நோயாளி நோயைக் கட்டுப்பாடாக வைத்திருப்பதில் கவனம் செலுத்துவது குறைவடைந்தால் அவர் பாராதூரமான பின்விளைவுகளை எதிர்நோக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாவார். இது காலப்போக்கில் உடலில் பல்வேறு தொகுதிகளில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

* குறைந்த இன்சுலின் தொழிற்பட்டால் ஏற்படும் விளைவுகளால் குருதிக் குழாய்களில் அடைப்பு ஏற்படலாம். இதனால் காலப்போக்கில் குருதி ஓட்டம் குறைவடைவதனால் மாரடைப்பு, உயர்இரத்த அழுத்தம் போன்ற இதய நோய்கள் தோன்றலாம்.
* குறைந்த குருதி விநியோகம் மற்றும் பல காரணங்களால் நரம்புகள் பாதிக்கப்பட்டு உடலின் புலனுணர்வு பாதிக்கப்படும்.
* விழித்திரையில் மாற்றத்தினால் (Retinopathy) கண்வில்லையில் ஏற்படும் மாற்றத்தினாலும் (Cataract)  கண்பார்வை இல்லாது போகும் அபாயம் ஏற்படல்.
* பாலியல் உறுப்புக்கள், சிறுநீரகம், கை, கால், தோல் பகுதிகளில் தொற்று நோய்கள் ஏற்படலாம். பிரதானமாக இந்நோய்களில் Candida எனப்படும் பங்கசு நோய் ஏற்படும்.
* சிறுநீரகத்தில் சிக்கல் ஏற்படலாம் அல்லது இயங்க மறுக்கலாம். குறைந்த குருதி விநியோகம் நரம்புப் பாதிப்புகளால் பிரதானமாக கால்களில் பாதிப்புகள் ஏற்படல். குறைந்த புலனுணர்வால் நடப்பதில் கஸ்டம் ஏற்படுவதுடன் பாதப்பகுதியில் நோயாளர்கள் உணர முடியாமலேயே புண்கள் தோன்றலாம். இவ்வகைப் புண்கள் குணமடையாது போகின் பாதிக்கப்பட்ட கால் பகுதிகள் வெட்டியகற்ற வேண்டிய நிலை ஏற்படலாம்.

நோயைக்கட்டுப்படுத்தும் முறைகள்

* சில நோயாளர்களுக்கு இந்நோயை உணவுக்கட்டுப்பாடுகளின் மூலமும்.
* சிலருக்கு உணவுக்கட்டுப்பாடுடன் மருந்து, மாத்திரைகள் உட்கொள்வதன் மூலமும்
* சிலருக்கு உணவுக்கட்டுப்பாடுகளுடன் இன்சுலின் ஊசி ஏற்றுதல்; மூலமும் கட்டுபாட்டில் வைத்திருக்கலாம். நீரிழிவு நோய் உள்ளவர்கள் 16% மக்கள் இன்சுலின் உபயோகிக்கிறார்கள். மற்றவர்களில் 54% மாத்திரைகளும் 17% இரண்டும் உபயோகிக்கிறார்கள் என புள்ளி விபரங்கள் குறிப்பிடுகின்றன. .

நீரிழிவு நோய்களுக்காகச் சிகிச்சை பெற்றுக் கொண்டிருப்போர் 
கவனிக்க வேண்டியவை:

* வைத்தியரின் ஆலோசனைப்படி உணவுக்கட்டுப்பாட்டை இறுக்கமாகக் கடைப்பிடிக்க வேண்டும்.
* வைத்திய ஆலோசனைப்படி மாத்திரையை அல்லது இன்சுலின் ஊசியை ஒழுங்காக எடுக்க வேண்டும்.
* மருந்து எடுத்து அல்லது ஊசி ஏற்றி அரைமணி நேரத்திற்குள் (30 நிமிடம்) உணவை உட்கொள்ளுதல் வேண்டும்.
* சில சந்தர்ப்பங்களில் மருந்தை எடுத்த பின் உணவு உட்கொள்ளத்தவறினால் அல்லது மேலதிகமாக மருந்தை உட்கொண்டாலோ களைப்பு, பசி, மயக்கம், தலைச்சுற்று, நெஞ்சுப்படபடப்பு, அதிகளவு வியர்த்தல், உடல் குளிர்தல் போன்ற அறிகுறிகள் தென்படும். இப்படியான சந்தர்ப்பங்களில் குளுக்கோசு அல்லது வேறு இனிப்பு வகைகள் உடனடியாக உட்கொள்ளல் அவசியமாகும். இதனால் சிறிதளவு இனிப்பு வகைகளோ அல்லது குளுக்கோசோ எந்த நேரமும் வைத்திருத்தல் நன்று. (குறிப்பாக இன்சுலின் அதிகளவில் உடலில் ஏற்றிக் கொள்பவர்கள்) மேலும் நீரிழிவு நோயாளிகள் வெளியிடங்களுக்குத் தனியே செல்லும் போது தான் ஒரு நீரிழிவு நோயாளி என்பதை தெரிவிக்கும் விபரமடங்கிய குறிப்பொன்றை தன்னுடன் வைத்திருத்தல் பாதுகாப்பு மிக்கதாகும்.
* தினமும் தேகாப்பியாசம் செய்தல் வேண்டும்.
* உடல் சுத்தத்தைப்பேணல் வேண்டும். பிரதானமாக பாதங்களைச் சுத்தமாகவும் உலர்ந்ததாகவும் பேண வேண்டும். நீரிழிவு நோயுள்ளவர்கள் தனது கால்களையும், கால் நகங்களையும் தினம் தோறும் அவதானித்து கொள்ளல் வேண்டும்.
* உணவுக்கட்டுப்பாடின்றி உண்பதன் மூலமோ அல்லது மருந்துகளை ஒழுங்கீனமாக பாவிப்பதன் மூலமாகவோ குருதியில் குளுக்கோசின் அளவு அதிகமாகி வயிற்றுப் புரட்டல், நாவரட்சி, மயக்கம் போன்றன ஏற்படலாம். அப்படி ஏற்படின் உடனடியாக மருத்துவரை நாடல் வேண்டும்.

நீரிழிவு நோய் ஏற்பட்டுள்ளவர்கள், எச்சந்தர்ப்பத்திலும் மிகவும் அவதானமான முறையில் தமது உடல் ஆரோக்கியத்தைப் பேணிக்கொள்வதுடன், உணவு முறைகளையும் கட்டுப்பாட்டினுள் வைத்திருப்பது மிகவும் இன்றியமையாததாகும்.

நீரிழிவு நோய்

நீரிழிவு நோய் குறித்து பலநூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பாக அறியப்பட்டிருந்தாலும் கூட, இதற்கான உறுதியான சிகிச்சை முறை என்பது இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப கட்டத்தில் தான் கண்டறியப்பட்டது. 1922ஆம் ஆண்டில் பேண்டிங்க் அண்ட் பெஸ்ட் என்ற கனேடிய விஞ்ஞானிகள் கூட்டணி இன்சுலின் மூலம் நீரிழிவு நோயை முழுமையாக கட்டுப்படுத்தலாம் என்பதைக் கண்டறிந்தனர். அதுவரை, "ஒருவருக்கு நீரிழிவு நோய் வந்தால் மரணம் நிச்சயம்" என்கிற நிலைதான் நீடித்தது. இன்சுலினை கண்டுபிடித்த 'பேண்டிங்க் அண்ட் பெஸ்ட்" என்ற விஞ்ஞானிகள் கூட்டணியின் தலைவர் பிரெடெங்க் பேண்டிங்கின்" பிறந்த நாளான நவம்பர் 14 ஆம் திகதி, ஆண்டுதோறும் உலக நீரிழிவு நோய் தினமாக அனுஸ்டிக்கப்படுகிறது. முதன் முதலில் இது 1991 ஆம் ஆண்டு முதல் அனுசரிக்கப்படத் தொடங்கியது, தற்போது உலக அளவில் 193 நாடுகளில் அனுசரிக்கப்படுகிறது.

அது மட்டுமல்லாமல், ஐக்கிய நாடுகள் சபை இந்த நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் தனியான அடையாளச் சின்னம் ஒன்றை வடிவமைத்து வெளியிட்டிருக்கிறது. நீலநிறத்திலான வளையம் நீரிழிவு நோய் தடுப்பின் சின்னமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. எய்ட்ஸ் நோய்க்கு அடுத்தபடியாக நீரிழிவு நோய்க்கு மட்டுமே ஐக்கிய நாடுகள் சபை இப்படித் தனியான ஒரு சின்னத்தை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். இதன் மூலம் உலக அளவில் நீரிழிவுநோய் என்பது மிகப்பெரும் ஆட்கொல்லியாக உருவெடுத்து வருகிறது என்கிற ஆபத்தை ஐக்கிய நாடுகள் சபை குறிப்புணர்த்துவதாக நீரிழிவு நோய் நிபுணர்கள் கருதுகின்றார்கள். தற்போது உலக அளவில் 18 கோடிக்கு மேற்பட்டோர் நீரிழிவு நோயுள்ளவர்களாக உள்ளனர். இந்த எண்ணிக்கை 2025-ல் 36 கோடியே 50 இலட்சமாக அதிகரிக்கலாம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

உலகளாவிய ரீதியில் நீரிழிவு நோயாளிகள் அதிகம் உள்ள 10 நாடுகளை (2009 தகவல் படி) பின்வருமாறு வகைப்படுத்தலாம்.

1) இந்தியா
2) சீனா
3) அமெரிக்கா
4) இந்தோனேசியா
5) ஜப்பான்
6) பாகிஸ்தான்
7) ரஷ்யா
8) பிரேஸில்
9) இத்தாலி
10) பங்களாதேஷ் என்பனவாகும்.
நீரிழிவு நோய் குறித்த தகவல்களுக்கான ஆதார மூலங்கள்

* Williams textbook of endocrinology (12th ed.). Philadelphia: Elsevier/Saunders. pp. 1371–1435. ISBN 978-1437703245.
* http://www.bbc.co.uk/health/physical_health/conditions/in_depth/diabetes/
* "Diabetes Blue Circle Symbol". International Diabetes Federation (17 March 2006).
* http://salasalappu.com/?p=47597
* http://www.medicalnewstoday.com/info/diabetes/
* "Definition and Diagnosis of Diabetes Mellitus and Intermediate Hyperglycemia" (pdf). World Health Organization.
* http://en.wikipedia.org/wiki/Diabetes_mellitus
* http://www.diabetes.com/
* http://www.diabetessrilanka.org/
* http://reallogic.org/thenthuli/?p=147
 
(தொடரும்)

No comments:

Post a Comment