Thursday, 26 April 2012

அறிவுசார் சொத்துரிமை தினம் (World Intellectual Property Day) - புன்னியாமீன்


இன்று ஏப்ரல் 26ஆம் திகதி. ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 26ஆம் திகதி அறிவுசார் சொத்துரிமை தினம் (World Intellectual Property Day) சர்வதேச ரீதியில் கொண்டாடப்பட்டு வருகிறது. மனித வாழ்வில் அன்றாட நடவடிக்கைகளில் ஒரு அங்கமாக அறிவுசார் சொத்துரிமையின் பங்களிப்பு பற்றி மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும், சர்வதேச ரீதியில் கண்டு பிடிப்பாளர்கள், கலைஞர்கள் மற்றும் ஓவியர்கள் சமூகத்துக்கு அளிக்கும் பங்களிப்புகளை கௌரவிக்கவும், அவர்கள் பற்றிய விளக்கங்களை மக்களுக்கு வழங்கவும் இந்நிகழ்வு நடத்தப்பட்டு வருகின்றது.

சர்வதேச அறிவுசார் சொத்துரிமை தினம் அறிவுசார் சொத்துரிமை அமைப்பினால் (World Intellectual Property Organization, WIPO)  2000ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட முடிவுக்கமைய 2001 இல் இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. 2001ஆம் ஆண்டிலிருந்து ஏப்ரல் 26 ஆம் திகதி இத்தினத்தின் நிகழ்வுகள் ஒவ்வொரு கருப்பொருளின் அடிப்படையில் கொண்டாடப்பட்டு வருகின்றது. இத்தினத்தன்று கருத்தரங்குகள், கூட்டங்கள்,  விசேட நிகழ்ச்சித் திட்டங்கள்,  பிரசார நடவடிக்கைகள் போன்றவற்றினூடாக மக்கள் மத்தியில் நிகழ்ச்சி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த முயல்கின்றது.


சர்வதேச அறிவுசார் சொத்துரிமை தினம் எனும்போது மனிதனின் தேவையின் அத்தியாவசியத்தைப் பொறுத்து கண்டுபிடிக்கப்படும் கண்டுபிடிப்பாளர்களுக்கு ஊக்கத்தை வழங்கி அக்கண்டுபிடிப்புக்கள் பற்றி மக்கள் மத்தியில் விளக்கத்தை வழங்கும் அதேநேரத்தில் கண்டுபிடிப்பாளர்களை கௌரவித்து ஊக்கப்படுத்தும் நிகழ்வுகளும் இத்தினத்தன்று முக்கியத்துவப்படுத்தப்படுகின்றது. அதேபோல  கலைஞர்கள் மற்றும் ஓவியர்கள் சமூகத்துக்கு அளிக்கும் பங்களிப்புகளை கௌரவிக்கவும் இத்தினத்தை பயன்படுத்திக் கொள்கின்றனர். விசேடமாக இத்தினத்தன்று மின்விளக்கைக் கண்டுபிடித்த தோமஸ் அல்வா எடிசன்ää கணனி மென்பொருளைக் கண்டுபிடித்த புலோரியென் மியுலர் மற்றும் பிரச்சினைகளுக்குரிய விடயங்களை நீதிமன்றத் தீர்ப்பினை வழங்கிய நீதிபதி ஹியுலெடி சுப்பர்மேன் ஜெரிமி பிரிப்ஸ் ஆகியோர் இத்தினத்தன்று விசேடமாக நினைவுகூரப்படுவர்.

இந்திய இலங்கை போன்ற நாடுகளில் இத்தினத்துக்கு முக்கியத்துவம் அளிப்பது மிகக் குறைவு. இடைக்கிடையே ஒரு சில கருத்தரங்குகள்,  பதாதைகள் மூலம் நிகழ்ச்சித் திட்டத்தை முடித்துக் கொள்கின்றன. உண்மையிலேயே ஒரு மனிதனுக்கு தேவைப்படக்கூடிய ஒரு விடயத்தை கண்டுபிடிக்கும் ஒரு கண்டுபிடிப்பாளர் அல்லது சமூகத்துக்குப் பயன்படக்கூடிய ஒரு ஆக்கத்தை முன்வைக்கக்ககூடிய கலைஞர் அல்லது ஓவியன் இத்தினத்தன்று பிரபல்யப்படுத்தப்பட்டு கௌரவிக்கப்படுபவனாக இருந்தால், இந்நிகழ்ச்சித் திட்டத்தில் யாராவது ஒருவராவது பயனையடைந்த திருப்தி இருக்கலாம். எதிர்காலத்திலாவது இது சாத்தியப்படுமா என்று பொருத்திருந்து பார்ப்போம்.

உசாத்துணை

http://www.wipo.int/ip-outreach/en/ipday/2012/
http://www.wipo.int/pressroom/en/articles/2012/article_0007.html
http://www.prnewswire.com/news-releases/world-intellectual-property-day-salutes-visionary-innovators-149024745.html
http://www.wipo.int/ip-outreach/en/ipday/archive.html

Monday, 23 April 2012

ஏப்ரல் 23 – உலக நூல் மற்றும் பதிப்புரிமை (World Book and Copyright Day) தினம் : புன்னியாமீன்


உலக நூல் மற்றும் பதிப்புரிமை  (World Book and Copyright Day)  தினம் என்பது வாசித்தல், பதிப்பித்தல் மற்றும் பதிப்புரிமையூடாக அறிவுசார் சொத்துக்களைப் பாதுகாத்தல் போன்றவற்றை வளர்க்கும் நோக்குடன் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு நிறுவனம் (யுனெஸ்கோ) ஆண்டுதோறும் ஏப்ரல் 23ஆம் நாளன்று ஒழுங்கு செய்யும் ஒரு நிகழ்வு ஆகும்.

“நூலாருள் நூல் வல்லன் ஆகுதல் வேலாருள் வென்றி வினையுரைப்பான் பண்பு” என புத்தகங்களின் அருமை பெருமைகளையும் அதனைக் கற்பவனின் மாண்பினையும் தெய்வப்புலவர் திருவள்ளுவர் குறள் மூலம் கூறுகின்றார்.

அபிவிருத்தியடைந்த நாடுகளின் முன்னேற்றம் பெருமளவில் நூல் வெளியீட்டிலும் வாசிப்புப் பழக்கத்திலுமே தங்கியிருந்தன. அந்நாடுகள் தெளிவான நூல்வெளியீட்டுக் கொள்கையைக் கொண்டிருந்தமை இதற்கு அடிப்படையாக இருந்தது. மூன்றாம் உலக நாடுகளில் இத்தகைய திட்டவட்டமான நூல்வெளியீட்டுக் கொள்கைகள் இருக்கவில்லை. இது வாசிப்புப் பழக்கத்திலும் ஒரு குறைபாட்டினை தெளிவுபடுத்தியது. அறிவானது ஒருவனுக்கு ஆண்டவனால் வழங்கப்படும் மாபெரும் அருட்கொடையாகும். வாசிப்பானது அறிவினைப் பெருக்கும் ஊற்றுமூலமாகின்றது. எனவேதான் வாசிப்பு மனிதனைப் பூரணமாக்குகின்றது எனக் கூறுவர். இதற்கு அச்சாணிபோல அமைவதும் பங்களிப்புகளைப் புரிவதும் புத்தகங்களாகும். இவை மனிதனை அறிவின்பால் திசை திருப்புகின்றன. இதனை உணர்ந்த யுனெஸ்கோ நிறுவனம் 1972ம் ஆண்டினை சர்வதேச நூல் ஆண்டாகப் பிரகடனப்படுத்தி மூன்றாம் உலக நாடுகள் தமக்கென நூல் கொள்கைகளை உருவாக்கியது.

இருந்தும் சர்வதேச நூல் ஆண்டில்  குறிப்பிட்ட இலக்கை எய்தாத  நிலையில் பாரிஸ் நகரில் 1995 ஆகஸ்ட் 25ஆம் திகதி ஆரம்பமாகி நடைபெற்ற யுனெஸ்கோ நிறுவனத்தின் 28ஆவது மகாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானப்படி ஏப்ரல் 23ம் திகதியை உலக நூல் மற்றும் பதிப்புரிமை தினமாகப் பிரகடனப்படுத்தியது. இதனைத் தொடர்ந்து அறிவைப் பரப்புவதற்கும் உலகெங்கிலுமுள்ள பல்வேறு கலாசாரங்கள் பற்றிய விழிப்புணர்வைப் பெறுவதற்கும் புரிதல், சகிப்புத்தன்மை போன்றவற்றின் மூலம் மனிதர்களின் ஒழுக்கத்தினை மேம்படுத்தவும் புத்தகம் ஒரு சிறந்த கருவியாக இருப்பதினால் ஒவ்வோர் ஆண்டிலும் ஏப்ரல் 23ஆம் தினத்தன்று இது தொடர்பான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் வகையில் உலக நூல் மற்றும் பதிப்புரிமை தினம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

யுனெஸ்கோவுடன் இணைந்து இந்நாளை வெற்றிகரமாகக் கொண்டாடுவதில் பல தனிப்பட்டவர்களும், அமைப்புக்களும் பங்களிப்பு நல்கி வருகின்றன. இவற்றுள் நூலகச் சங்கங்கள் மற்றும் நிறுவனங்களின் அனைத்துலகக் கூட்டமைப்பு (International Federation of Library Associations and Institutions) அனைத்துலகப் பதிப்பாளர் சங்கம் (International Publishers Association) உலகெங்கிலும் இயங்கும் யுனெஸ்கோவுக்கான தேசிய ஆணையகங்கள் ஆகியவற்றின் பங்களிப்புகள்  குறிப்பிடத்தக்கவை.

இங்கு நூலகச் சங்கங்கள் மற்றும் நிறுவனங்களின் அனைத்துலகக் கூட்டமைப்பு (The International Federation of Library Associations and Institutions (IFLA)) எனும்போது நூலக மற்றும் தகவல் சேவைகளினதும் அதன் பயனர்களினதும் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு முன்னணி அனைத்துலக அமைப்பு ஆகும். நூலக மற்றும் தகவல் தொழில்துறையின் குரலை உலக மட்டத்தில் ஒலிப்பதற்காக 1927 ஆம் ஆண்டு ஸ்கொட்லாந்தில் நடைபெற்ற அனைத்துலக மகாநாடு ஒன்றில் இவ்வமைப்பு தொடக்கி வைக்கப்பட்டது. இதன் தலைமையகம் நெதர்லாந்து நாட்டின் ஹேக் நகரிலுள்ள, நெதர்லாந்து தேசிய நூலகமான, ரோயல் நூலகத்தில் இயங்கி வருகிறது.

உலக நூல் மற்றும் பதிப்புரிமை தினம் கொண்டாடப்படும் ஏப்ரல் 23 இன் முக்கியத்துவம் என்ன என்பதை இவ்விடத்தில் கவனத்தில் கொள்ளல் வேண்டும்.

உலக இலக்கியத்துக்கான ஒரு குறியீடாகவே இந்நாள் தெரிவு செய்யப்பட்டதாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது. 1616 ஆம் ஆண்டு இந்நாளிலேயே உலகப் புகழ்பெற்ற நாடக எழுத்தாளரான வில்லியம் ஷேக்ஸ்பியர் மரணித்தார். 1951 ஆம் ஆண்டில் – சார்ல்ஸ் டோவ்ஸ், (நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர்- பிறப்பு 1865) மற்றும் இந்தியாவில் 1992 – சத்யஜித் ராய்,  (உலகப் புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர் -பிறப்பு 1921) போன்றோரும் மரணித்த தினம் இதுவாகும்.

இதே நாளில் 1858 – மாக்ஸ் பிளாங்க்,  (நோபல் பரிசு பெற்ற ஜேர்மனிய இயற்பியலாளர் – இறப்பு 1947) 1867 – ஜொகான்னெஸ் ஃபிபிகர்,  (நோபல் பரிசு பெற்றவர்- இறப்பு 1928) 1897 – லெஸ்டர் பியர்சன்,  (நோபல் பரிசு பெற்ற கனடியப் பிரதமர் – இறப்பு. 1972) 1902 – ஹால்டோர் லாக்ஸ்னெஸ்,  (நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் -இறப்பு 1998) போன்ற உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர்கள் பிறந்துள்ளனர்.

இந்நாளைக் கொண்டாடும் எண்ணம் முதன் முதலாக ஸ்பெயின் நாட்டிலுள்ள கட்டலோனியாவில் உருவானது. இவர்கள் ஏப்ரல் 23 ஆம் நாளை சென். ஜோர்ஜின் நாளாகக் கொண்டாடினர். இந்நாளில் ஆண்களும்,  பெண்களும் புத்தகத்தையும்,  ரோஜா மலரையும் தம்மிடையே பரிசாகப் பரிமாறிக் கொள்வார்கள். மேற்குறிப்பிட்ட அடிப்படையிலேயே ஏப்ரல் 23ம் திகதி தேர்ந்தெடுக்கப்பட்டது.

இக்காலகட்டத்தில் இலத்திரனியல் ஊடகங்கள் மிக வேகமாக வளர்ச்சியடைந்து மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்றுவந்தாலும் கூட,  அச்சு ஊடகங்கள் அறிவை வழங்குவதற்கும் தகவலைப் பரப்புவதற்கும் மிக முக்கிய சாதனமாகத் தொடர்ந்துமிருப்பது உணரப்பட்டுள்ளது. நூல்களும் மற்றும் எழுத்து ஆவணங்களும் மக்களின் முதுசொங்களையும் பண்பாட்டுப் பாரம்பரியங்களையும் பேணிப் பாதுகாப்பதற்கும் பிற் சந்ததியினருக்கு அவற்றை வழங்குவதற்கும் பொருத்தமான கருவிகளாக அமைந்துள்ளன. இலத்திரனியல் ஊடகங்கள் ஊடாக இவை பேணப்பட்டாலும்கூட, அச்சு ஊடகங்களில் காணப்படும் நம்பகத்தன்மையைப்போல் இவையிருப்பதில்லை என்பது பரவலான கருத்தாகும். எனவேதான் வளர்ச்சியடைந்த நாடுகளில்கூட அச்சு ஊடகங்கள் தொடர்ந்தும் தனித்துவ வளர்ச்சி கண்டு வரும் அதேநேரத்தில் நவீன தொழில்நுட்பங்களுடன் மேலும் மேலும் முன்னேறிக் காணப்படுகின்றன. 

அதேநேரம், அபிவிருத்தியடைந்துவரும் மூன்றாம் உலக நாடுகளில் மிகத் தாமதமாகவே அச்சு ஊடக வளர்ச்சி நடைபெறுகின்றது. இதற்குக் காரணம் பெரும்பாலான மூன்றாம் உலக நாடுகளில் தேசிய ரீதியில் நூல் வெளியீட்டுக் கொள்கை ஒன்று காணப்படாமையே. அபிவிருத்தியடைந்துவரும் நாடுகள் தமக்கென நூல் வெளியீட்டுக் கொள்கைகளை வகுத்துக்கொள்ள யுனிசெப் தொடர்ச்சியான ஆலோசனைகளை கூறி வருவதுடன் அதற்கான குறிக்கோள்களையும், வழிகாட்டல்களையும் வழங்கி வருகின்றது.

மூன்றாம் உலக நாடுகளில் இந்தியா, சிங்கப்பூர், நைஜீரியா, தாய்லாந்து, மலேசியா போன்ற நாடுகள் ஆசியாவில் தலைசிறந்த நூல் வெளியீட்டு நாடுகளாக திகழ்கின்றன. அண்மைக்காலமாக இலங்கையும் நூல் வெளியீட்டில் கணிசமான முன்னேற்றத்தைக் கண்டுள்ளது.

இருப்பினும் பொதுவாக மூன்றாம் உலக நாடுகளில் நூல் வெளியீட்டின்போது சர்வதேச தராதரங்கள் பேணப்படாமை இன்றுவரை காணப்படக்கூடிய ஒரு குறைபாடாகவே உள்ளது. குறிப்பாக அச்சகங்கள் இலாப நோக்கத்தைக் கருத்திற்கொண்டு செயற்படுவதினால் நூல்களின் அச்சீட்டுத் தரம் பெருமளவுக்கு குறைவடைகின்றது என்று குற்றஞ்சாட்டப்படுகின்றது.

விசேடமாக இந்தியா,  இலங்கை போன்ற நாடுகள் சர்வதேச புத்தக தராதர எண்ணை (ISBN) பெற்றுக்கொள்வதில் கரிசனை காட்டுவதில்லை. இந்நாடுகளில் அச்சிடப்படக்கூடிய ஏனைய மொழி நூல்களைவிட தமிழ்மொழி நூல்களில் இத்தகைய குறைபாட்டினை பெருமளவுக்குக் காணலாம். கலை, விஞ்ஞான,  இலக்கியப் படைப்புக்களின் பதிப்புரிமை சம்பந்தமான பேர்ண் உடன்படிக்கைக்கும் (1886) , 1979ஆம் ஆண்டின் 52ம் இலக்க Code of intellectual Property Act எனப்படும் அறிவாண்மைச் சொத்துகள் கோவைச் சட்டத்துக்கும் அமைய நூல் வெளியீடுகள் பாதுகாப்பைப் பெற வேண்டும்.

பொதுவாக மூன்றாம் உலக நாடுகளில் வாசகர்களை வாசிப்புத்துறையில் ஈடுபடுத்தும்முகமாக நடவடிக்கைகளை மேற்கொள்வது மிகப் பெரும் பணியாகக் காணப்படுகின்றது. புத்தகங்கள் பற்றி சில அறிஞர்களின் கருத்துக்களை இவ்விடத்தில் தொகுத்து நோக்குவது பயனுடையதாக இருக்கும்.

வாழும் மனிதர்களுக்கு அடுத்தபடி உலகில் மிகச் சிறந்தவை புத்தகங்கள் தான் – சார்ல்ஸ் கிங்ஸ்,  நூலகம் மூளைக்கான மருத்துவமனை – யாரோ,  பிரதிபலிக்காத வாசிப்பு,  ஜீரணிக்காத உணவினைப்போன்றது – எட்மண்ட் ப்ரூக்,  புத்தகம் என்பது உங்கள் கையோடு பயணிக்கும் தோட்டம் – சீனப் பழமொழி, சிறந்த புத்தகம் என்பது மந்திரக் கம்பளம் போல. அது நாம் நுழைய முடியாத உலகிற்று அழைத்துச் செல்லும் காட்சி-யாரோ, புத்தகங்கள் நாட்டின் மதிக்க முடியாத சொத்து – அடுத்த தலைமுறையினருக்கு தரப்போகும் சிறந்த சொத்து – ஹென்றி. மேற்படி சில கருத்துக்கள் புத்தகங்களின் முக்கியத்துவத்தை உணர்த்துவதாக அமைந்திருப்பதைக் காணலாம்.

‘என்னை என்றும் எப்போதும் எச்சமயத்திலும் கைவிடாத நண்பனாக புத்தகங்கள் திகழ்கின்றன’ என மறைந்த பாரதப் பிரதமர் நேருஜியின் கருத்தும் ‘புத்தகம் போன்றதொரு சிறந்த நண்பன் மனிதருக்கு எவருமில்லை’ என ராஸ்கி என்பார் நவின்ற கருத்தும் ‘எனது புத்தகத்தின் ஒவ்வொரு பக்கமும் என் வாழ்க்கையை நிர்ணயிக்கின்றது’ என ஒரு கல்வியியலாளர் செப்பிய கருத்தும் புத்தகங்களின் அவசியத்தை எடுத்தியம்புகின்றன.

18ம் நூற்றாண்டில் தோமஸ் ஹேம்ட்வூர் மற்றும் பிரோய் போன்றவர்களின் அயராத உழைபினால் கிராமிய நூலகங்கள் உருவாகின. இக்காலப்பகுதியில் வில்லியம் எட்வேர்ட் என்பவர் மக்களுக்காக பொதுநூலகங்கள் மக்களால் நடத்தப்படவேண்டும் எனும் கோட்பாட்டில் பெரும் வெற்றிகண்டார். 1900.08.04ம் திகதி பெரிய பிரித்தானியாவில் நூலகச் சட்டம் அமுலாக்கப்பட்டது.

இவ்விடத்தில் இலங்கையின் தமிழ்மொழி புத்தக வெளியீடு சம்பந்தமாக சில கருத்துக்களையும் பதிவாக்குதல் வேண்டும். இலங்கையில் தமிழ்மொழி நூல் வெளியீட்டுக்கான தனிப்பட்ட நிறுவனங்கள் மிகக் குறைவு. இலங்கையில் எழுத்தாளனே வெளியீட்டாளனாக செயற்பட வேண்டிய நிலைப்பாடு உண்டு. இந்தியாவைப் போல ஒரு எழுத்தாளரால் பதிப்பிக்கப்படக்கூடிய நூல்களை கொள்வனவு செய்ய அரச மட்டத்தில் நிலையான திட்டங்களில்லை. எனவே ஒரு தமிழ் நூலை வெளியிடக்கூடிய எழுத்தாளன் தான் அச்சிட்டப் புத்தகங்களை சந்தைப்படுத்திக் கொள்ள முடியாமல் நட்டப்படும் சந்தர்ப்பங்கள் தான் அதிகம்.

இலங்கையில் இந்து சமய கலாசார திணைக்களம் மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் போன்றன சுமார் 5000 ரூபாவுக்கு உட்பட்ட தொகையில் எழுத்தாளர்களின் நூல்களை கொள்வனவு செய்தாலும்கூட, இங்கு ஒரு தேசிய கொள்கையின்மை காரணமாக இனவாதம்,  பிரதேசவாதம், அரசியல் செல்வாக்கு என்பன ஆதிக்கம் செலுத்துவதால் பெரும்பாலான எழுத்தாளர்கள் தொடர்ந்தும் பாதிக்கப்பட்டுக் கொண்டே வருகின்றார்கள்.

மறுபுறமாக ஒரு தேசிய கொள்கையின்மையாலும்,  மேற்படி திணைக்களங்களின் அடாவடித்தனப் போக்கினாலும் இலங்கையில் காணப்படக்கூடிய யுத்த நிலை காரணமாகவும் இலங்கையின் தமிழ்மொழி நூல் வெளியீடு என்பது ஒரு நீண்ட இடைவெளியை வளர்க்கப் போகின்றது என்பது உறுதி.

உசாத்துணை:
http://www.unesco.org/new/en/unesco/events/prizes-and-celebrations/celebrations/international-days/world-book-and-copyright-day-2012
http://www.un.org/en/events/bookday/
http://archive.ifla.org/VI/1/conf/worldbook.htm
http://news.xinhuanet.com/english/photo/2012-04/23/c_131545640.htm
https://www.facebook.com/pages/The-World-Book-and-Copyright-Day-23-April/117151158310065

Saturday, 21 April 2012

புவி தன் சமநிலையை இழக்க மனிதர்களில் அலட்சியப் போக்கே காரணம் - புன்னியாமீன்


 மனிதர்களில் அலட்சியப்போக்கு காரணமாக புவி தன் சமநிலையை இழந்து செல்கிறது. நவீன விஞ்ஞான தொழில்நுட்ப மாற்றங்கள், கைத்தொழில் மயமாக்கல், நகர மயமாக்கல் சனத்தொகைப் பெருக்கம் ஆகிய காரணிகளால் சூழல் பல வகையாக மாசடைகிறது. நச்சு வாயுக்களால் வளிமண்டலம் நிரம்பியுள்ளது. காடழிப்பினால் இயற்கை மழையை புவி இழந்துள்ளது. போர்ச் சூழலினாலும் அணுப் பரிசோதனைகளாலும் அழிவுகளைப் புவி எதிர்நோக்குகின்றது. இத்தனைக்கும் மனிதனின் அலட்சியப்போக்கும், சுயநலமுமே காரணமாக இருக்கின்றது. இத்தகைய பேராபத்துகளில் இருந்து நாம் வாழும் புவியைப் பாதுகாக்க மக்கள் அனைவரும் ஒருமித்து செயற்பட வேண்டியதன் அவசியம் உணரப்படுகின்றது. இந்தப் பின்னணியிலேயே சர்வதேச புவிதினம் அனுஸ்டிக்கப்படுகிறது.

சர்வதேச புவிதினம் என்பது ஆண்டு தோறும் ஏப்ரல் 22ம் நாளன்று புவியின் சுற்றுச் சூழல் மாசடைவதைத் தடுக்கும் நோக்கோடு அனைத்து நாடுகளிலும் கடைப்பிடிக்கப்பட்டுவரும் ஒரு சிறப்பு நாளாகும். உலகளாவிய ரீதியில் புவியின் சூழல் மாசடைவதைக் கருத்திற்கொண்டு முதன் முதலாக ஐக்கிய அமெரிக்காவில் சுற்றுச் சூழலியல் நிபுணரும் செனட்டருமான கேலோர்ட் நெல்சன் என்பவர் சுற்றுச்சூழல் பற்றிய அறிவைப் பரப்பத் தகுந்த நாளாக 1970 ஆம் ஆண்டு ஏப்ரல் 22 ம் திகதியை தேர்ந்தெடுத்து அழைப்பு விடுத்தார். அவரது அழைப்பை ஏற்று 20 மில்லியன் மக்கள் இந்நிகழ்வில் பங்கெடுத்தார்கள். அன்றிலிருந்து ஆண்டு தோறும் இந்நாள் உலகளாவிய ரீதியில் சர்வதேச பூமி நாளாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ஐக்கிய நாடுகள் சபை ஜூன் 5ம் திகதியை சர்வதேச சுற்றுச் சூழல் தினமாக அனுசரித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் என்பன மனித வாழ்க்கைக்காக இறைவனால் வழங்கப்பட்ட நன் கொடையாகும். புவியை அலங்கரித்துள்ள கடல், நதி, நீர்வீழ்ச்சிகள், காடு, கழனி, வனாந்தரங்கள், மலைகள், பள்ளத்தாக்குகள் அனைத்தும் மனித வாழ்க்கைக்கு அத்தியவசியமானவை.

வானம் பூமி வளிமண்டலம் ஆதவனின் ஒளி சந்திரனின் குளிர்ச்சி, மலையின் சிருங்காரம், காலையின் கனிவு, மரம், செடி, கொடிகள், தரை வாழ், கடல் வாழ் உயிரினங்கள், பறவைகள், அத்தனையும் இயற்கையின் அணிகலன்கள். மனிதன் வாழ்க்கையை வளமாக நடத்துவதற்கு அத்தனையும் தேவையானவை. இந்தச் சுற்றாடல் தொகுதி புவியின் சமநிலையைப் பேணி வருகின்றது. இச்சமநிலையில் ஏற்படும் மாற்றங்கள் புவியின் தன்மையை மாற்றி விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தி விடும்.

பூமி- மத்திய கோட்டுப் பகுதியில் தன் மீது போர்த்தி அழகு பார்க்கும் பச்சைக் கம்பளம்தான் இந்த எழில் கொஞ்சும் இயற்கை. குறிப்பாக அயன மண்டல மழைக்காடுகளைக் குறிப்பிடலாம் இந்த மழைக் காடுகளைத் தேசத்தின் மிகக் குறுகிய பரப்பில் கொண்டிருக்கும் நாடுகள் மீது: ஏனைய நாடுகள் பொறாமை கொள்ளும் அளவுக்கு மழைக்காடுகள் −இயற்கையின் புதையல்களாகவே இருக்கின்றன.

இந்தோனேசியா, இந்தியா, இலங்கை, பிரேசில், கொலம்பியா, பொலிவியா, பேரு, வெனிசுலா, மலேசியா… என்று விரல் விட்டு எண்ணக்கூடிய சில வெப்ப மண்டல நாடுகளில் மட்டுமே மழைக்காடுகள் காணக் கிடைக்கின்றன.

இருந்தும் இந்த பூமியின் ஒட்டுமொத்த உயிரின வகைகளில் (இதுவரை பெயரிடப்பட்ட 104 மில்லியன் தாவர – விலங்கினங்களைத் தவிர பன்மடங்கு ஏராளமான ஜீவராசிகள் இன்னமும் அடையாளம் காணப்படாமல் உள்ளன) பாதியளவு, சூரியன் நுழையவே தயங்கும் அடர்ந்த இந்தக் காடுகளில்தான் இராஜாங்கம் செய்கின்றன. அதிலும் இவற்றில் பெரும்பாலானவை உலகின் வேறு எந்தப் பகுதிகளிலும் காண முடியாத அளவுக்கு அந்தந்த நாடுகளுக்கு மட்டுமே சொந்தக்காரர்களாக இருக்கின்றன.

ஒரு குறிப்பிட்ட காலம் வரைக்கும் மலேரியா நோய்க்குரிய ஒரேயொரு தீர்வாக இருந்த ‘குயினைன்’ பெறப்பட்ட தென் அமெரிக்காவின் சிங்கோனா மரம் தொடங்கி- குருதிப்புற்று நோய்க்கு மருந்தாகும் மடகாஸ்கரின் பட்டிப்பூ ஊடாக- இன்னமும் மனிதனை வதைத்துக் கொண்டிருக்கும் உயிர்க்கொல்லி நோய்களுக்கு மருந்தாகக் கண்டறியப்பட வேண்டிய ஏராளமான தாவரங்கள் வரையில் கொண்டிருக்கும் முழு உலகுக்குமான ‘மருத்துவ அலுமாரியாக இயற்கை, மழைக்காடுகளையே உருவாக்கியிருக்கிறது. புற்றுநோய்க்கு எதிரானவை என அடையாளம் காணப்பட்ட 3000 க்கும் அதிகமான மூலிகைகளில் 70 சதவீதம் வரை இந்தக் காடுகளிலேயே காணப்படுகின்றன.

உலகம் பூராவும் உள்ள மழைக் காடுகளில் ஆயிரத்துக்கும் அதிகமான இனக் குழுமங்களாக 140 மில்லியன் பழங்குடியினர் இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இவர்களின் கலாசாரமும் வாழ்க்கை முறையும் மழைக் காடுகளின் நிலைத்திருத்தலில் வசிக்கும் பங்கு பிரதானமானது. ஏராளமான இரகசியங்களைப் பொத்தி வைத்திருக்கும் மழைக்காட்டின் ‘சாவி’ காடுகளின் பாதுகாவலர்களாகிய இந்தப் பழங்குடியினரின் கைகளிலேயே இருக்கிறது. பல நூற்றாண்டு காலப் பட்டறிவின் ஊடாக இவர்கள் தேர்வு செய்து பயன்படுத்தும் மழைக்காட்டுத் தாவர- விலங்கினங்களே புதிய ரக இனங்களாக வெளியுலகுக்கு ஆராய்ச்சியாளர்களால் அறிமுகம் செய்யப்படுகின்றன. தாய்லாந்தின் லுஆ (Lua) பழங்குடியினர் மாத்திரமே 75 விதமான உணவுப் பயிர் வகைகளையும் 25 வகையான மூலிகைகளையும் இனங்கண்டு பயிரிடுகிறார்கள் என்றால் உலகம் பூராவும் உள்ள மழைக்காட்டுப் பழங்குடிகளிடமிருந்து நாம் பெற்றுக் கொள்ள வேண்டிய மரபணு வளங்களைக் கற்பனை செய்ய இயலாது.

ஆண்டுக்கு 120 தொடக்கம் 235 அங்குலம் வரையும் மழை வீழ்ச்சியைப் பெறும் மழைக் காடுகள் நீர்ச்சுழற்சியில் பங்கேற்பதன் மூலம் பூமியின் தட்பவெப்ப நிலையைத் தீர்மானிப்பதில் பிரதான பங்களிப்பைச் செய்கின்றன. மழைக்காடுகளுக்கு வெளியே பூமியின் பிற பகுதிகளில் உள்ள உயிரினங்களின் தொடர்ச்சியான இருத்தலுக்கும் இன்றியமையாத ஒரு காட்டுத்தொடர்தான் இந்த மழைக்காடுகள்.


ஆனால், இவ்வளவு இருந்தும் பொன் முட்டையிடும் வாத்தாக மழைக்காடுகள் படிப்படியாக சிதைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் சூழலியற் படுகொலை இன்னமும் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கிறது. இதனை வேறு வார்த்தையில் கூறுவதாயின் மனிதன் படிப்படியாக இயற்கையை அழித்துக் கொண்டிருக்கின்றான்.

நூறு ஆண்டுகளுக்கு முன்னர் பூமியின் நிலப்பரப்பில் 12 சதவீதத்தை அலங்கரித்துக் கொண்டிருந்த அயன மண்டல மழைக்காடுகள் இன்று வெறும் ஐந்து சதவீதம் என்று கூறும் அளவிற்கு குறுகிப் போயிருக்கிறது. நிமிடமொன்றுக்கு 50 தொடங்கி 100 ஏக்கர் பரப்பளவுள்ள காடுகள் அழிக்கப்படுவதாக செய்தித் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே இயற்கை மனிதனின் கொடுரப்பிடிக்குள் சிக்கி படிப்படியாக அழிந்து கொண்டே வருகிறது.

இயற்கையை அழிப்பதனால் அழிக்கப்படுவது ஆயிரக்கணக்கான தாவர விலங்கின வகைகளும் ஈடு செய்யப்பட முடியாத பாரம்பரியப் பொருளுமே தவிர வறுமை ஒழிப்பல்ல. மாறாக பூமி சந்தித்தது கோரப்புயல்களும்; இயற்கையோடு ஒட்டிய வகையில் பஞ்சம், பட்டினி என்று பொசுக்கிக் கொண்டிருக்கும் கடும் வறட்சி போன்றனவையுமே. அதாவது இயற்கையை அழிப்பதனால் புவிச்சமநிலைக் குலைவுகள் தான் ஏற்படுகின்றன.

‘பசியால் மரணித்துக் கொண்டிருக்கும் ஒருவன் தன்னுடைய அடிப்படைத் தேவையைப் பூர்த்தி செய்து கொள்வதற்கு முன்னால் எப்படிச் சூழல் பாதுகாப்பைப் பற்றிச் சிந்திக்க முடியும்? என்று நீங்கள் சிந்திக்கலாம். உங்கள் நாடுகள் வெளியேற்றும் கரிக்காற்றை ஜீரணிக்கும் சக்தி எங்கள் காடுகளுக்கு உண்டு என்று நீங்கள் நினைத்தால் எங்கள் காடுகளைக் காப்பாற்றுவதற்கும், காடுகளை நம்பி வாழ்க்கை நடத்தும் மக்களுக்காகவும் நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?’ சிந்திக்க வேண்டிய வினா தான். இதே வினாவைத்தான் வளர்ந்த நாடுகளை நோக்கி மூன்றாம் உலக நாடுகள் பிரேசிலில் 1992-ல் நடந்த பூமி உச்சி மாநாட்டிலிருந்து இன்னமும் கேட்டுக் கொண்டேயிருக்கின்றன.

அமிலப்படிவுகள் மண்ணின் வளத்தை நச்சாக்கி விடுகின்றது. கைத்தொழில் வாயுக்கள் வளிமண்டலத்தைக் குறிப்பாக ஓசோன் படலத்தை அழித்துக் கொண்டிருக்கின்றது. இதனால் புவி உஸ்ணமடைவதுடன் சூழலையும் பாதிக்கின்றது. சுற்றாடல் மாசடைவதைத் தவிர்ப்பதன் மூலம் புவியை நாம் பாதுகாக்க முடியும்.திட்டமிடாத காடழிப்பு மண் அகழ்வு விவசாயத்தில் அளவுக்கதிகமாக நச்சுத்திரவத்தை பயன்படுத்தல் இரசாயனப் பசளைகளைப் பயன்படுத்தல் தொழிற்சாலைக் கழிவுகளையும் வீட்டுக் கழிவுகளையும் பாதுகாப்பாக அகற்றாமை ஆகிய செயற்பாடுகளால் சூழல் மாசடைகிறது.

மனிதன் சூழலைப் பாதுகாக்கும் அக்கறையுடன் இருந்தால் மட்டுமே இத்தகைய ஆபத்துக்களில் இருந்து புவியைப் பாதுகாக்கலாம்.

இது தனிப்பட்ட ஒவ்வொரு மனிதனின் உள்ளத்திலும் ஆழமாக பதிய வேண்டும்.அவ்வாறு இல்லாமல் எத்தகைய கோசங்கள் இடுவதாலும், எத்தகைய பயனும் ஏற்பட்டு விடப்போவதில்லை.

நாம் உலகளாவிய ரீதியில் சிந்திக்காமல் எம்ரமைச்சூழவுள்ள வளங்களையாவது பாதுகாப்பதற்கு திட சங்கற்பம் பூணுவோம்.

உசாத்துணை:
http://www.earthday.org/
http://en.wikipedia.org/wiki/Earth_Day
http://www.un.org/News/Press/docs/2009/ga10823.doc.htm
http://therumpus.net/2009/04/the-rumpus-interview-with-denis-hayes/
http://www.kidzworld.com/article/3382-earth-day-cleaning-up-our-planet/

Tuesday, 17 April 2012

நினைவுச் சின்னங்களுக்கும், அமைவுத் தளங்களுக்குமான சர்வதேச தினம் (International Day for Monuments and Sites) - புன்னியாமீன்


நினைவுச் சின்னங்களுக்கும், அமைவுத் தளங்களுக்குமான சர்வதேச தினம் (International Day for Monuments and Sites) ஆண்டு தோறும் ஏப்ரல் 18ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. 1982ம் ஆண்டில் டுயுனீசியாவில் நடைபெற்ற நினைவுச் சின்னங்களுக்கும் அமைவுத் தளங்களுக்குமான அனைத்துலக மாநாட்டின் தீர்மானப்படி 1983ம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற யுனெஸ்கோ பொதுச் சபையின் 22வது கூட்டத் தொடரில், ஏப்ரல் 18ம் தேதியை நினைவுச் சின்னங்களுக்கும், அமைவுத் தளங்களுக்குமான சர்வதேச தினமாக பிரகடனப்படுத்தப்பட்டது.

வரலாற்று முக்கியத்துவமிக்க உலகப் பண்பாட்டு மரபின் பல்வகைமைத் தன்மை தொடர்பில் மக்கள் மத்தியில் அறிவினை ஏற்படுத்துவதும் அவற்றைக் கண்ணியப்படுத்தி பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் இத்தினத்தின் நோக்கமாகும். உலகளாவிய ரீதியில் ஒவ்வொரு நாடுகளிலும் வரலாற்று முக்கியத்துவமிக்க மரபுரிமைச் சின்னங்கள் காணப்படுகின்றன. இந்த மரபுரிமைச் சின்னங்கள் நாட்டின் வரலாற்றுச் சான்றுகளை பதிவுகளாக்குகின்றன.

எனவே இந்த மரபுரிமைச் சின்னங்கள் பற்றியும் அவற்றின் இருப்புகள் வரலாற்று பின்னணிகள் பற்றிய அறிவும் விளக்கங்களும் மக்களுக்கு தேவைப்படுகிறது. இத்தினத்தில் மக்களுக்கு இது பற்றிய தெளிவை வழங்குவதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இச்செயற்திட்டத்தை நினைவுச் சின்னங்களுக்கும் அமைவுத் தளங்களுக்குமான அனைத்துலக சபை (International Council on Monuments and Sites) மிகச்சிறப்பான முறையில் நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிறது.

நினைவுச் சின்னங்களுக்கும், அமைவுத் தளங்களுக்குமான அனைத்துலக சபை (International Council on Monuments and Sites) என்பது உலக அளவில் உயர்தொழில் அறிஞர்களை அதாவது கட்டிடக்கலைஞர்கள், வரலாற்றாளர்கள், தொல்லியலாளர்கள், கலை வரலாற்றாளர்கள், புவியியலாளர்கள், மானிடவியலாளர்கள், பொறியியலாளர்கள், நகரத் திட்டமிடலாளர்கள் போன்றோரை உள்ளடக்கிய ஒர் அமைப்பு ஆகும். ஆங்கிலத்தில் ICOMOS என்னும் சுருக்கப் பெயரால் இந்தச் சபை அழைக்கப்படுகிறது. பண்பாட்டு மரபு சார்ந்த இடங்களை கட்டிடக்கலை மற்றும் தொல்லியல் சார்ந்த மரபுச் சின்னங்களை பராமரிப்புச் செய்வதில், ஈடுபட்டுள்ள, சர்வதேச மட்டத்திலான ஒரே அரசுசாரா நிறுவனமும் இதுவேயாகும்.

1964ம் ஆண்டில் வெனிஸ் நகரில் கூடிய மாநாட்டினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நினைவுச் சின்னங்களையும், அமைவுத் தளங்களையும் பரிபாலனம் செய்தல் மற்றும் பாதுகாத்தல் தொடர்பிலான பட்டயத்தின் அடிப்படையிலேயே இதன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பட்டயம் வெனிஸ் பட்டயம் எனப் பரவலாக அறியப்படுகிறது.

உலக மரபுத் தளங்கள் தொடர்பில் இவ்வமைப்பு ஐக்கிய நாடுகள் கல்வி அறிவியல் பண்பாட்டு நிறுவனத்துக்கு (யுனெஸ்கோ) ஆலோசனைகளை வழங்கி வருகிறது. உலகளாவிய ரீதியில் வரலாற்று முக்கியத்துவமிக்க இடங்களை இனங்கண்டு அவற்றை பாதுகாப்பதில் இந்த அமைப்பு மிகத்திறம்பட செயற்பட்டு வருகிறது.

இதன் ஒரு அங்கமாக உலகின் பண்பாட்டு மரபுகளின் பல்வகைமை தொடர்பிலும், அவற்றைப் பாதுகாப்பதிலும், பரிபாலனம் செய்வதிலும் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் ஆண்டு தோறும் ஏப்ரல் மாதம் 18ம் தேதியை நினைவுச் சின்னங்களுக்கும், அமைவுத் தளங்களுக்குமான அனைத்துலக நாள் என அறிவித்துக் கொண்டாடி வருகிறது

இன்று கட்டிடக்கலை, தொல்பொருட்கள் (artifacts), தொல்லுயிர் எச்சம், மற்றும் நிலத் தோற்றங்கள் என்பன உள்ளிட்ட எஞ்சிய பொருட்களைக் வெளிக்கொணர்ந்து, ஆவணப்படுத்தி, பகுப்பாய்வு செய்வதன் மூலம் செய்யப்படும் மனிதப் பண்பாடு பற்றிய அறிவினை தொல்பொருளியல் (Archaeology) ஊடாக பெற முடிகிறது.

தொல் பொருளியலின் இலக்குகள் வேறுபடுவதுடன், இதன் நோக்கங்கள், பொறுப்புக்கள் தொடர்பான வாதங்களும் இருந்துவருகின்றன. சில இலக்குகள், வரலாற்றுக்கு முந்திய மற்றும் வரலாற்றுக் கால மனிதப் பண்பாட்டின் தோற்றத்தையும், வளர்ச்சியையும் ஆவணப்படுத்தல், அவற்றை விளக்குதல்; பண்பாட்டு வரலாற்றைப் புரிந்து கொள்ளுதல்; பண்பாட்டுப் படிமுறை வளர்ச்சியைக் கால வரிசைப்படுத்தல்; மனித நடத்தைகள் பற்றி ஆய்வு செய்தல் என்பவற்றை உள்ளடக்குகின்றன.

தொல்லியலாளர்கள், தங்கள் துறையில் பயன்படுத்தப்படும் முறைகள் பற்றி ஆய்வு செய்வதிலும் கவனம் செலுத்துகின்றனர். அத்துடன், கடந்தகாலம் பற்றிய அவர்களது கேள்விகளில் தொக்கி நிற்கும் கோட்பாட்டு மற்றும் தத்துவம் சார்ந்த அடிப்படைகள் தொடர்பான ஆய்வுகளிலும் அவர்களுக்கு ஆர்வம் உண்டு. புதிய தொல்லியற் களங்களைக் கண்டுபிடித்தல், அவற்றில் அகழ்வாய்வு செய்தல், வகைப்படுத்தல், பகுப்பாய்தல் பேணிக்காத்தல் என்பனவெல்லாம், தொல்லியல் சார்ந்த வழிமுறைகளின் பல்வேறு முக்கியமான கட்டங்கள் ஆகும். இவை ஒருபுறம் இருக்கத் தொல்லியலில் பெருமளவு பல்துறைசார் ஆய்வுகளும் நடைபெறுகின்றன. இதற்காக இது, வரலாறு, கலை வரலாறு, செந்நெறி இலக்கியம், புவியியல், நிலவியல், இயற்பியல், தகவல் அறிவியல், வேதியியல், புள்ளியியல், தொல்பழங்காலச் சூழலியல், தொல்விலங்கியல், தொல்தாவரவியல் போன்ற துறைகளில் தங்கியுள்ளது.

கட்டிடக்கலை என்பது கட்டிடங்கள் வடிவமைப்புச் செய்வதற்கான கலையும் அறிவியலும் ஆகும். ஒரு விரிவான வரைவிலக்கணம், பெருமட்டத்தில், நகரத் திட்டமிடல், நகர்ப்புற வடிவமைப்பு மற்றும் நிலத்தோற்றம் முதலியவற்றையும், நுண்மட்டத்தில், தளபாடங்கள், உற்பத்திப்பொருள் முதலியவற்றை உள்ளடக்கிய, முழு உருவாக்கச் சூழலின் வடிவமைப்பைக் கட்டிடக்கலைக்குள் அடக்கும். ஆக இத்துறைகள் ஊடாக நினைவுச்சின்னங்களுக்கும், வரலாற்று முக்கியத்துவமிக்க இடங்களுக்கும் உலகளாவிய ரீதியில் விழிப்புணர்வை வழங்கி அவற்றைப் பேணி பாதுகாப்பு வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்வதே இத்தினத்தின் நோக்கமாகும்.

உசாத்துணை:
* http://en.wikipedia.org/wiki/International_Day_For_Monuments_and_Sites
* http://18april.icomos.org/
* http://international.icomos.org/18thapril/2007/index.html
* http://www.unesco.org/new/en/natural-sciences/environment/water/single-view-fresh-water/news/18_april_international_day_for_monuments_and_sites_2011_cultural_heritage_of_water/

Wednesday, 11 April 2012

வந்தபின் கவலைப்படுவதை விட வருமுன் காப்பது மேல் – புன்னியாமீன்


2012 ஏப்ரல் 11ம் திகதி இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவு அருகே பாண்டா அசே பகுதியில் மிக பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது இந்தியாவின் பல பகுதிகளிலும், இலங்கையிலும், தாய்லாந்து, சிங்கப்பூர் உள்ளிட்ட தென் கிழக்கு ஆசியாவின் பல நாடுகளி்லும் உணரப்பட்டது. இந்திய நேரப்படி 2012 ஏப்ரல் 11ம் திகதி பகல் 2 மணியளவில் இந்தியப் பெருங்கடலில் பூமிக்கு அடியில் 30 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோளில் 8.7 புள்ளிகளாகப் பதிவாகியது. இதையடுத்து அந்தமன் நிகோபார் தீவுகள் உள்ளிட்ட இந்தியாவின் கிழக்குப் பகுதிகள், இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, தாய்லாந்து உள்பட உலகம் முழுவதும் 28 நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. முதல் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அடுத்தடுத்து 2 முறை அதிக சக்தி வாய்ந்த நில அதிர்வுகள் ஏற்பட்டன. இதனால் அந்த நாட்டுக்கும் மேலும் 27 நாடுகளுக்கும் முதலில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டு பின்னர் வாபஸ் பெறப்பட்டு, பின்னர் மீண்டும் எச்சரிக்கை விடப்பட்டது. இறுதியாக மாலை நேரத்தில் சுனாமி எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டது.

உலகளாவிய ரீதியில் காலத்துக்குக்காலம் ஏதோவொரு வகையில் மனிதகுலத்துக்கு பேரழிவுகள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கின்றன. இப்பேரழிவுகளை பல கோணங்களில் இனங்காட்டலாம். மனிதனால் மனிதனுக்கு செய்யப்படும் செயற்பாடுகள். குறிப்பாக மனிதனால் உருவாக்கப்பட்ட ஆயுதங்களினால் ஏற்படக்கூடிய அழிவுகள். யுத்த அழிவுகளை இங்கு கோடிட்டுக்காட்டலாம். மனிதனால் உருவாக்கப்பட்ட அணுகுண்டு உட்பட நவீன ரககுண்டுகள் நொடிப்பொழுதில் பல்லாயிரக்கணக்கான உயிர்களை பலிகொள்ளத்தக்கவை. செயற்கைக் காரணிகளைத் தவிர இயற்கைக் காரணிகளாலும் உலகளாவிய ரீதியில் பேரழிவுகள் ஏற்பட்டுக்கொண்டே இருக்கின்றன.

வரலாற்றுக்காலம் முதல் இயற்கைக் காரணிகள் ஏற்படுத்திய அழிவுகள் குறிப்பிடப்பட்டாலும் கூட, நவீன காலத்தில் உலகளாவிய ரீதியிலான சனப்பெருக்கமானது இத்தகைய இயற்கை அழிவுகளினால் பல்லாயிரக்கணக்கான உயிர்களை உடனடியாக காவு கொள்வதினால் அவற்றின் விளைவுகள் முன்னைய காலங்களைவிட இக்காலத்தில் விசாலமாகத் தென்படுகின்றது.

இயற்கை அழிவுகள் எனும்போது மனிதனின் சக்திக்கப்பாட்பட்டது. கொள்ளை நோய்கள்,  சூறாவளிகள்,  நில அதிர்வுகள்,  எரிமலை வெடிப்புக்கள்,  கடும் மழை,  வெள்ளம்,  கடும் வரட்சி…. இவ்வாறு இயற்கை அழிவுகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.

இயற்கைக் காரணிகளால் ஏற்படக்கூடிய பேரழிவுகள் ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தை அல்லது பல பிரதேசங்களை அல்லது பல நாடுகளை ஒரே நேரத்தில் தாக்கக் கூடியதாகவும் இருப்பதை நாம் காண்கின்றோம். இப்படிப்பட்ட நிலையில் இயற்கை அழிவினை எம்மால் முழுமையாக கட்டுப்படுத்த முடியாதுவிடினும்கூட, இயற்கை அழிவுகளிலிருந்து ஓரளவேனும் பாதுகாப்பினை எவ்வாறு பெற்றுக் கொள்ளலாம் என்பது குறித்தும் அது குறித்த நடவடிக்கைகளை நாம் எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்தும் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சித் திட்டங்கள் காலத்தின் தேவையாகும்.

இயற்கைப் பேரழிவுகளை எடுத்துநோக்கும்போது அண்மைக்காலங்களில் நாம் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட இயற்கை நிகழ்வாக சுனாமிப் பேரலைத் தாக்கம் அமைந்திருந்ததை அவதானிக்கலாம். சுனாமி பற்றி சிறு விளக்கமொன்றினை இவ்விடத்தில் பெற்றுக் கொள்வது பொறுத்தமானதாக இருக்கலாம். ஜப்பானிய நாட்டில் மீனவர்களின் மீன்பிடித் துறைமுகங்களைத் தாக்கி பெருமளவு சேதங்களை விளைவித்த துறைமுக அலைகளையே அவர்கள் சுனாமி என்று அழைத்தனர். சுனாமி என்பது ஜப்பானிய மொழியில் உள்ள வார்த்தை (சுனாமி:津 波.)  ‘ட்சு’ சுனாமி. தான் சுனாமி. ‘ட்சு” என்றால் துறைமுகம், ‘னாமி” என்றால் பேரலை என்று பொருள். சுனாமி என்பது துறைமுக பேரலை. சில நிமிடங்கள் முதல் சில நாட்கள் வரை கூட,  அதுவும் பல்லாயிரக்கணக்கான இராட்சத அலைகளை உருவாக்கக்கூடியது தான் சுனாமி.

இந்த ஜப்பானிய சொல்லை உலகளாவிய ரீதியில் இன்று அனைத்து நாடுகளும் பயன்படுத்துகின்றன. அலையாக வந்து அழிவுகளை ஏற்படுத்தும் கடல் உண்மையில் வெளியிலிருந்து தனக்குப் பாதிப்பு ஏற்படும் வரை அமைதியாகவே இருக்கும். கடல் நம்மைத் தாக்கும் போது அது வேறொரு வகையில் தாக்கத்திற்குள்ளாவதை நம்மில் பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

அண்மைக்கால சுனாமி பேரலைகளை நோக்குமிடத்து கடலில் ஏற்பட்ட புகம்பங்களே காரணமாக அமைந்திருந்தன. பூகம்பம் என்பது நிலப்பகுதியில்,  கடல் பகுதியில்,  மலைப்பகுதியில் ஏற்படும். நிலப்பகுதியில் ஏற்பட்டால் ஏற்பட்ட நிலப்பரப்பில் உள்ளவை அதிர்ந்து சேதமாகின்றது. கடலில் ஏற்பட்டால் கடலின் ஆழ்பகுதியில் ஏற்படக்கூடிய அதிர்வு சிலநேரங்களில் சுனாமிப் பேரலைகளைத் தோற்றுவிக்கின்றன. பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஒரே நிலப்படையில் தான் புவியிருந்ததாக குறிப்பிடப்படுகின்றது. இயற்கையில் ஏற்பட்ட பல்வேறு தாக்கங்கள் காரணமாக புவி கண்டங்களாக பிரியப்,  பிரிய, அதன் தட்ப,  வெப்ப,  இயற்கை சூழ்நிலைகளுக்கு ஏற்ப,  பல்வேறு நிலப்படைகள் உருவாயின. இந்த நிலப்படைகள் மீது தான் ஒவ்வொரு கண்டமும் அமைந்துள்ளன. நிலம்,  கடல் எல்லாவற்றையும் தாங்கி நிற்பது இந்த நிலப்படைகள் தான். இதைத் தான் ‘டெக்டானிக் பிளேட்கள்’ என்று புவியியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

யுரேஷியன் பிளேட்,  ஆஸ்திரேலியன் பிளேட் இரண்டும்,  இந்தோனேசியாவின் வடக்கே சுமத்ரா தீவில் மோதியது. அதனால் பூகம்பம் ஏற்பட்டது. அதன் அலைகள் தான் இந்துமா சமுத்திரத்தில் சுனாமியை ஏற்படுத்தியுள்ளதாக புவியியல் ஆதாரங்கள் மூலமாக அறியமுடிகின்றது. அதேநேரம்,  சுனாமி பேரலைகள் ஏற்பட பல காரணங்கள் குறிப்பிடப்படுகின்றன.  கடலாழத்தில் ஏற்படும் எத்தகைய பாதிப்புக்களின்போதும், கடலாழ பூகம்பம் தோன்றும்போதும்,  கடலை ஒட்டிய நிலப்பகுதியில் பூகம்பம் தோன்றும்போதும்,  மலையில் எரிமலைகள் தோன்றும்போதும்,   வானில் கிரகங்களின் செயல்பாடுகள் மாறும் போதும்,  (இது இன்னும் உறுதிப்படுத்தப் படவில்லை) கடலில் பௌதீக மாற்றங்கள் ஏற்படும் போதும்,  விண்ணிலிருந்து கற்கள் போன்ற கனமான பொருட்கள் கடலில் விழும் போதும்.  கடலில் காணப்படும் பனிப் பாறைகள் உருகுவதால் நீர்மட்டத்தின் அளவு வேறுபடும் போதும். தகுந்த கரையோரப் பாதுகாப்பு அரண்கள் இல்லாமையால் ஏற்படும் பாரிய கடலரிப்புகளின் போதும் சுனாமிப் பேரலைகள் ஏற்படுமென குறிப்பிடப்பட்டுள்ளது.

மேற்குறிப்பிட்ட இயற்கைக் காரணங்களைத் தவிர தற்காலத்தில் பன்னாட்டு விஞ்ஞானிகளாலும் கடலில் நடத்தப்படும் அணுவாயுதப் பரிசோதனைகளின் பக்கவிளைவுகளாலும் ஏற்படலாம்.

கி.மு.,  365ம் ஆண்டு ஜூலை மாதத்தில் கிழக்கு மத்திய தரைக்கடலில் தோன்றி,  எகிப்தில் அலெக்சாண்டிரியாவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியதை தற்போதைய கண்டுபிடிப்புகளுக்குட்பட்ட வகையில் முதல் சுனாமி என ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

சமீப கால நிகழ்வுகளை எடுத்துக் கொண்டால், முதன்முதலில் 1755ம் ஆண்டு,  நவம்பர் 1ம் தேதி போர்த்துக்கல் நகரான லிஸ்பனில் ஏற்பட்ட பயங்கர பூகம்பம்,  போர்த்துக்கல்,  ஸ்பெயின்,  மொராக்கோ நாடுகளில் சுனாமி பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. 1883ம் ஆண்டளவில் ஜாவா சுமத்ரா இடையே கிரகோடா என்ற பகுதி எரிமலைப் பகுதியாக திகழ்ந்தது. அங்கு ஏற்பட்ட பூகம்பத்தில் பல்லாயிரம் கிலோமீட்டர் தூரத்துக்கு அப்போது சத்தம் கேட்டதாக தகவல் கூறுகிறது. 35 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர். இவ்வாறாக ஜப்பான் பகுதியிலும் அடிக்கடி சுனாமித் தாக்குதல்கள் இடம்பெற்று வந்துள்ளன. 1964ம் ஆண்டு அலாஸ்கா வளைகுடாவில் மிகப் பயங்கர சுனாமி ஏற்பட்டது. அதன் விளைவாக, அலாஸ்கா, வான்கூவர் தீவு (பிரிட்டீஷ் கொலம்பியா), அமெரிக்காவில் கலிபோர்னியா,  ஹவாய் பகுதிகளை தாக்கியது.

21ஆம் நூற்றாண்டில் உலகளாவிய ரீதியில் ஏற்பட்ட மாபெரும் இயற்கை அனர்த்தங்களுள் 2004 டிசம்பர் 26 ஆம் திகதி சுனாமியே இதுவரை பதிவாகியுள்ளது. இச்சுனாமி இலங்கை வரலாற்றிலும் பாரிய அழிவை ஏற்படுத்திய ஒன்றாக திகழ்கின்றது. 2004 டிசம்பர் 26 ஆம் திகதி முழு உலகையும் துன்பத்தில் ஆழ்த்திய சுனாமிப் பேரலை இலங்கை உட்பட இந்தியா,  இந்தோனேஷியா போன்ற நாடுகளில் பேரழிவை ஏற்படுத்தியது. இலங்கையின் கரையோரப் பகுதிகளில் பெரும்பாலான மாவட்டங்கள் இச்சுனாமியின் கொடூர அழிவுகளைச் சந்தித்தன. உயிர் அழிவுகளுடன் பல வருடங்களாகத் தேடிய தேட்டங்களும் சில நொடிகளில் இயற்கையின் சீற்றத்தால் அழிந்து போயின.

இச்சுனாமி இலங்கையில் ஏற்படுத்திய அழிவுகளைப் பின்வருமாறு வகைப்படுத்தலாம். உயிர்ச்சேதங்கள்,  பொருட் சேதங்கள்,  உட்கட்டமைப்புச் சேதங்கள்,  வாழ்வாதாரத் தொழிற்சேதங்கள். இச்சேதங்கள் இலங்கைக்கு மட்டும் உரியதல்ல. சுனாமியால் பாதிக்கப்பட்ட அனைத்து நாடுகளுக்குமே உரியன.

இலங்கையில் மாத்திரம் உத்தியோகபூர்வ தகவல்களின்படி 30, 977 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். குழந்தைகள் உட்பட 5, 644 பேர் காணாமற் போயுள்ளனர். 15, 197 நபர்கள் உடல் ஊனமுற்றோர் அல்லது குறிப்பிடத்தக்க பாதிப்புக்கோ உள்ளாகியுள்ளனர். சுனாமியினால் பாதிக்கப்பட்ட மற்றைய நாடுகளுடன் ஒப்பீட்டளவில் இது குறைவாக இருந்த போதும் சின்னஞ்சிறு நாடான எமக்கு இது பேரழிவாகவே உள்ளது. இச்சுனாமியில் மாத்திரம் மொத்தமாக 2 இலட்சத்து 75 ஆயிரம் உயிர்களுக்கு மேல் காவுகொள்ளப்பட்டுள்ளன.

உயிர்ச் சேதங்கள் ஒருபுறமிருக்க சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் சொல்லில் அடங்காது. இலங்கையில் நாடளாவிய ரீதியில் எடுக்கப்பட்ட கணக்கின்படி 78, 387 வீடுகள் முற்றிலுமாக அழிந்துள்ளன. 60, 197 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்தன. இவ்வீடுகளுடன் சேர்ந்து மக்களின் பரம்பரைச் சொத்துக்கள் பலவும் அழிந்து போயின. வாழ்நாள் முழுவதும் தேடிய தேட்டங்கள் அனைத்தையும் சிலமணி நேரத்தில் இழந்த இம்மக்கள் கரையோர மாவட்டங்கள் பலவற்றிலும் உட்கட்டமைப்புக்களில் பெரும்பாலானவற்றைச் சுனாமி அழித்தொழித்தது. அம்பாறை,  மட்டக்களப்பு,  அம்பாந்தோட்டை,  காலி,  யாழ்ப்பாணம்,  முல்லைத்தீவு மாவட்டங்கள் அதனால் பெரிதும் பாதிப்புக்குள்ளாயின. 161 பாடசாலைகள் முற்றாகவும் 59 பாடசாலைகள் பகுதியளவிலும் நாடு முழுவதிலும் சேதமடைந்துள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இவற்றை விட வணக்கஸ்தலங்கள்,  வைத்தியசாலைகள்,  மக்கள் மண்டபங்கள்,  பொதுச் சந்தைகள் போன்ற பல சொத்துக்களும் முற்றாகவும் பகுதிகளாகவும் அழிந்து போயின. மின்சாரம்,  தொலைபேசி, குடிநீர் போன்றவற்றின் இணைப்புக்கள் முற்றாக சீர்குலைந்தன. வீதிகள்,  பாலங்கள் பலவும் போக்குவரத்திற்குதவாதவாறு சேதமடைந்தன.

மக்களின் வாழ்வாதாரங்கள் பலவும் சுனாமியினால் அழித்தொழிக்கப்பட்டன. பாதிப்புக்குள்ளான மாவட்ட மக்களின் வேளாண்மை உட்பட அனைத்துப் பயிர்களையும் கோழி வளர்ப்பு,  கால்நடை வளர்ப்பு என அனைத்தையும் சுனாமி அழித்துச் சென்றது. சிறு முதலீடுகள் மட்டுமின்றி பாரிய முதலீடுகளை மேற்கொண்டிருந்த வர்த்தகர்கள் அனைவரும் நிர்க்கதிக்குள்ளாயினர்.
ஒரு மணித்தியாலத்திற்கும் குறைவான நேரத்தில் பாரிய அழிவை ஏற்படுத்திச் சென்ற இச்சுனாமியினால் ஆண்டாண்டு காலம் தங்கள் இருப்பிடங்களில் வசித்த 154, 963 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் அகதிகளாக இடம்பெயர்ந்தனர். இதைவிட 235, 145 குடும்பங்கள் முற்றாகப் பாதிப்புக்குள்ளாயின. வரலாற்றில் முன்னொரு போதும் கண்டிராத இப்பேரழிவைக் கண்ட இலங்கை அரசு சந்தித்தது.

சுனாமி என்றால் ஜப்பான்தான் என்ற நிலை மாறி 2004ஆம் ஆண்டு சுனாமியை உலகளாவிய நாடுகளுக்கே ஒரு எச்சரிக்கையை விடுத்தது. சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சர்வதேச சமூகமும் சர்வதேச அமைப்புகளும் உதவிகளை வழங்கியபோதிலும்கூட,  இழப்புகளை ஈடுசெய்ய முடியாது. சுனாமி கற்றுத் தந்த பாடம் இயற்கைப் பேரழிவுகளிலிருந்து எவ்வாறு எம்மைக் காக்கலாம் என்ற உணர்வினை மக்கள் மத்தியில் தோற்றுவித்தது.

சுனாமி அறிவித்தல் முன்னேற்பாடாக மேற்கொள்ளப்பட்டுள்ள சில நடவடிக்கைகளை நோக்குவோம்.  அமெரிக்காவில் உள்ள ஹவாய் தீவில்தான் முதன் முதலாக பசுபிக் பெருங்கடல் பிராந்திய சுனாமி எச்சரிக்கை அமைப்பு நிறுவப்பட்டது. அதற்கு காரணம் 20ஆம் நூற்றாண்டில் சுனாமியால் தாக்கப்பட்ட முதல் இடம் ஹவாய் என்பதினாலாகும். அமெரிக்கா 1949ல் அங்கு பசிபிக் கடல் சுனாமி எச்சரிக்கை அமைப்பை நிறுவியது. அப்போது விடுக்கப்பட்ட எச்சரிக்கைகளில் 75 சதவீதம் தவறாக அமைந்தது. இதனால் பொது மக்கள் மூட்டை முடிச்சுகளை எடுத்துக் கொண்டு இடம் பெயர்வதும் மீண்டும் பழைய இடத்துக்கே திரும்புவதும் சலிப்பை ஏற்படுத்தின. செலவும் ஆனது. அதனால் சுனாமி அலை உருவானால் மட்டும் கடலில் இருந்து தகவல் கொடுக்க கருவி வேண்டும் என்பதை உணர்ந்து கண்டுபிடிக்கப்பட்டதுதான் ‘சுனாமி மிதவை கருவி’.

1960ல் சிலியில் ஏற்பட்ட பூகம்பத்தால் ராட்சத அலைகள் ஹவாயை தாக்கின. இதனால் 12 ஆண்டுக்குப்பின் அங்கு மீண்டும் சுனாமி ஏற்பட்டது. முன்னரே உஷார் தகவல்கள் அனுப்பப் பட்டதால் அங்கு 61 பேர் மட்டுமே பலியானார்கள். அப்போது ஜப்பான்,  பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட பசுபிக் கடல் நாடுகளுக்கும் எச்சரிக்கை அமைப்பு வேண்டும் என்று உணரப்பட்டது. 1963ல் சர்வதேச சுனாமி எச்சரிக்கை மையம் அமைக்கப்பட்டது. இதில் உறுப்பினராக 26 நாடுகள் உள்ளன. உறுப்பினராக சேர்ந்துள்ள நாடுகளுக்கு மட்டுமே எச்சரிக்கைத் தகவல்களை அனுப்ப வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது. ஆஸ்திரேலியா,  கனடா,  சிலி,  கொலம்பியா,  குக் ஐலண்ட்ஸ்,  கோஸ்டரிகா,  தென் கொரியா,  வடகொரியா,  ஈக்வேடார்,  எல்சல்வடார்,  பிஜி,  பிரான்ஸ்,  குவாதமாலா,  இந்தோனேஷியா,  ஜப்பான்,  மெக்சிகோ,  நியூசிலாந்து,  நிகரகுவா,  பெரு,  பிலிப்பைன்ஸ்,  ரஷ்யா,  சமோவா,  சிங்கப்பூர்,  தாய்லாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு மட்டுமே சுனாமி பேரலைகள் பற்றிய தகவல் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது இம்முறை மேலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

கடலில் நிலநடுக்கம் ஏற்பட்டவுடன்,  சுனாமி அலைகள் கடலில் ஏற்படுகின்றனவா என்பதை அறிய சுனாமி எச்சரிக்கைக் கருவிகளால் மட்டுமே முடியும். அவற்றில் உள்ள பிரத்யேக கருவிகள்,  கடலில் நீர் இயக்கத்தில் ஏதாவது மாற்றம் இருக்கிறதா என்பதை தொடர்ந்து கண்காணித்துக் கொண்டே இருக்கும். நிலநடுக்கம் ஏற்பட்ட உடன் கடல் அலைகள் தோன்றினால்,  அந்த அலைகள் உருவாக்கும் அழுத்த மாறுபாட்டை ஒலி அலைகளாக மாற்றி, அவற்றை சிக்னல்களாக வானில் உள்ள செயற்கைக் கோள்களுக்கு அனுப்பிவைக்கும். அங்கிருந்து தரையில் உள்ள மையங்கள் சிக்னலைப் பெற்றுக் கொள்ளும். அலையின் தன்மையை விஞ்ஞானிகள் அறிந்து அது பாதிப்பை ஏற்படுத்துமானால் எச்சரிக்கைத் தகவல்களை அனுப்புவார்கள்.

இத்தகவலை சுனாமி உருவான 3 நிமிடத்தில் வெவ்வேறு நாடுகளில் உள்ள அலுவலகங்களுக்கு சென்றுவிடும். ஆனால்,  சுனாமி அலைகள் உருவான இடத்துக்கும் கரைப் பகுதிக்கும் உள்ள தூரத்தைப் பொறுத்துத்தான் அலைகளின் தாக்குதல் வேகம் மற்றும் நேரம் அமையும்.

நிலநடுக்கம் ஏற்படும் போதெல்லாம்,  சுனாமி குறித்த பயம் இனி ஆசிய நாடுகளின் கடலோர பகுதி மக்களுக்கு ஏற்படும். இதைத் தடுக்க தெற்காசியாவுக்கான சார்க்,  தென்கிழக்கு ஆசிய நாடுகளான பிம்ஸ்டெக்,  ஆபிரிக்க-ஆசிய கூட்டமைப்புகள் இந்தியாவுடன் இணைந்து கடலில் சுனாமி எச்சரிக்கை அமைப்புகளை நிறுவ வேண்டும். அதை சர்வதேச சுனாமி எச்சரிக்கை அமைப்புக்கு கீழ் கொண்டு வரவேண்டும். எதிர்காலத்தில் பாதிப்புக்கு உள்ளாகக்கூடிய நாடுகளை பட்டியலிட்டு அந்நாடுகள் அனைத்தையும் இந்த பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரவேண்டும். அண்மைக்காலங்களாக அடிக்கடி சுனாமி எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டிருப்பதனால் மக்கள் சோர்வடைந்துள்ளதை காணமுடிகின்றது. சிலர் இவற்றை இன்னும் விளக்கமே இன்றி காணப்படுகின்றனர். கருவிகள் பொருத்துவது மாத்திரமல்ல. அவற்றின் செயல்பாட்டின் நிலை பற்றிய உணர்வுகளை மக்கள் மனங்களில் பதிக்க வேண்டியதும் ஒரு முக்கியமான தேவையாகும்.

Tuesday, 10 April 2012

ஆர்எம்எஸ் டைட்டானிக் (RMS Titanic) கப்பல் நூற்றாண்டு நினைவு தினம் - புன்னியாமீன்


 உலகை சோகத்தில் ஆழ்த்திய வரலாற்றுச் சம்பவங்களுள் டைட்டானிக் கப்பல் கவிழ்ந்ததும் முக்கிய சம்பவங்களில் ஒன்றாகவே கருதப்படுகிறது. 1912ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10ம் திகதி தனது முதலும், கடைசியுமான பயணத்தை ஆரம்பித்த இந்தக் கப்பலை நினைவு கூரும் விதமாக, உலகம் முழுவதும் நூற்றாண்டு நினைவு தினம் 2012 ஏப்ரல் 10 ம் திகதி (இன்று) அனுசரிக்கப்படுகிறது
.
ஆர்எம்எஸ் டைட்டானிக் (RMS Titanic) என்பது ஓர் ஆடம்பர பயணிகள் கப்பலாகும். வட அயர்லாந்தின் பெல்பாஸ்ட் நகரில் உள்ள ஹார்லாண்ட் மற்றும் ஊல்ப் நிறுவனத்தால் இக் கப்பல் உருவாக்கப்பட்டது.

1909 மார்ச் 31ம் திகதியன்று இக்கப்பலின் கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. 882.6  அடி (269 மீ) நீளமும், 175 அடி (53.3மீ) உயரமும், (வளை 92 அடி), 52,310 டன் எடையுடனும் கூடியதாக 9 தளங்களைக் கொண்டு இக்கப்பல் நிர்மாணிக்கப்பட்டது. இக்கப்பலில் 2,435 பயணிகளுக்கும், 892 பணியாட்களுக்கும் தங்குவதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டிருந்தன. ஆபத்து காலத்தில் உதவும் வகையில், 20 உயிர்காப்புப் படகுகளும் சேர்க்கப்பட்டிருந்தன. இக்கப்பல் மே 31, 1911 இல் வெள்ளோட்டமிடப்பட்டது.

ஐக்கிய இராச்சியம் லிவர்பூல் துறைமுகத்தில் பதிவு செய்யப்பட்டிருந்த இக்கப்பல் அக்காலத்தில் மிகவும் மேம்பட்ட தொழில்நுட்பத்தைக் கொண்டு கட்டப்பட்டதாகவும் அது மூழ்கவே முடியாததெனவும் கருதப்பட்டது. 1912 ஏப்ரல் மாதம் 10ம் திகதி, முதன் முதலாகச் சேவைக்கு விடப்பட்டபோது இதுவே உலகின் மிகப்பெரிய முதல் நீராவி ஆடம்பர கப்பலாகும்.

டைட்டானிக் தனது முதற் பயணத்தை இங்கிலாந்தின் சௌதாம்ப்டன் துறைமுகத்தில் இருந்து நியூயோர்க் நகரை நோக்கி ஏப்ரல் 10, 1912 இல் கப்டன் எட்வர்ட் சுமித் தலைமையில் ஆரம்பித்தது. புறப்படும் போது டைட்டானிக்கின் உந்திகளின் தாக்கம் அருகிலிருந்த நியூயோர்க் என்ற கப்பலை நகர்த்தி டைட்டானிக்குக்கு மிக அருகில் செல்ல வைத்தது. இதனால் அது ஒரு மணி நேரம் தாமதித்தே புறப்பட்டது. ஆங்கிலக் கால்வாயைத் தாண்டியதும் பிரான்சில் சேர்பூர்க்கில் நிறுத்தப்பட்டு கூடுதல் பயணிகள் ஏற்றப்பட்டனர். மீண்டும் அடுத்த நாள் அயர்லாந்து, குயீன்ஸ்டவுன் என்ற இடத்தில் நிறுத்தப்பட்டு நியூயோர்க்கை நோக்கி குழந்தைகள், பெண்கள் 531 பேரும் ஆண்கள் 1,692 பேருமாக மொத்தம் 2,223 பயணிகளுடன் பயணிக்கத் தொடங்கியது.

ஏப்ரல் 14 இல் வெப்பநிலை குறைந்து கிட்டத்தட்ட உறைநிலையை அடைந்தது. கடல் மிகவும் அமைதியாக இருந்தது. அமெரிக்கா என்ற கப்பலில் இருந்து டைட்டானிக்க்குக்கு வழியில் பனிப்பாறைகள் உள்ளதாக செய்தி அனுப்பப்பட்டது. ஆனாலும் இச்செய்தி டைட்டானிக்கை அடையவில்லை.

தன் பயணத்தைத் தொடர்ந்த டைட்டானிக் கப்பல், ஏப்ரல் 14ம் தேதி நள்ளிரவு 11.40  மணிக்கு வட அட்லாண்ட்டிக் பெருங்கடலில் பனிப்பாறை ஒன்றுடன் மோதியது. கப்பலை மோதாமல் திருப்பும் முயற்சி நிறைவேறவில்லை. கப்பல் முற்றாக நிறுத்தப்பட்டது. கப்பலில் இருந்து ஆபத்து சமிக்கைகள் பல திசைகளிலும் அனுப்பப்பட்டன. அண்மையில் இருந்த சில கப்பல்களுக்கும் செய்திகள் அனுப்பின. ஆனாலும் அவை எதுவும் டைட்டானிக்குக்கு அருகில் வருவதற்கு நேரம் போதவில்லை. சரியாக அதிகாலை 2:20 மணிக்கு 2 மணி 40 நிமிடங்களில் ஏப்ரல் 15, 1912 இல் முற்றாக மூழ்கியது.
இதில் பயணம் செய்த குழந்தைகள், பெண்கள் 157 பேரும் ஆண்கள் 1,360 பேருமாக மொத்தம் 1,517 பேர் இறந்தனர். இந்நகழ்வு அமைதிக்காலத்தில் நடந்த மிகப்பெரும் கடல் அழிவாகக் கருதப்பட்டது.  கடலில் விழுந்தவர்கள் கடும் குளிர் 28 °F (-2 °C)  காரணமாக உறைந்து இறந்தனர்.  உயிர் காப்புப் படகுகள் உதவியுடன் குழந்தைகள், பெண்கள் 374 பேரும், ஆண்கள் 332 பேருமாக மொத்தம் 706 பேர் உயிர்தப்பினர். டைட்டானிக் கப்பல் அக்காலத்தில் மிகவும் மேம்பட்ட தொழில்நுட்பத்தைக் கொண்டு கட்டப்பட்டதாகவும் அது மூழ்கவே முடியாததெனவும் கருதப்பட்டது. இப்படியான ஒரு கப்பல் மூழ்கியது உலகெங்கும் பெரும் அதிர்ச்சியை உண்டுபண்ணியது.


கடலில் இருந்த திசை காட்டும் கருவி சரியாக செயல்படாததே விபத்திற்கு காரணம் என கப்பலில் பயணம் செய்த கேப்டனின் பேத்தி லூயிஸ் பேட்டன் தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். டைட்டானிக்கின் இரண்டாம் நிலை அதிகாரியான சார்ல்ஸ் லைட்டோலர் என்பவரின் பேத்தி ஒரு எழுத்தாளர். ”டைட்டானிக் கப்பலுக்கு முன்னால் பனிக்கட்டி மிதப்பதைக் கண்டுபிடித்து, கப்பலை இடது பக்கமாக திருப்பச் சொன்னார்கள். ஆனால் அதைத் தவறுதலாகப் புரிந்து கொண்டு வலது பக்கமாக திருப்பி விட்டார்கள்,” என சார்ல்ஸ் லைட்டோலர் தன்னிடம் தெரிவித்ததாக 2010 செப்டெம்பரில் அவர் எழுதியுள்ள புத்தகத்தில் தெரிவித்திருந்தார்.

கடல் போக்குவரத்து பாய்மரக் கப்பல்களில் இருந்து நீராவிக் கப்பல்களுக்கு மாற்றம் பெற்ற காலகட்டத்திலேயே இந்த அனர்த்தம் விளைந்ததாகவும் அவர் தனது புத்தகத்தில் எழுதியுள்ளார். அக்காலகட்டத்தில் இரண்டு வெவ்வேறான ஒழுங்கமைப்புகள் நடைமுறையில் இருந்தன. ஒன்று நீராவிக் கப்பல்களில் பயன்படுத்தப்பட்ட ரடர் கட்டளை (Rudder Orders), மற்றையது பாய்மரக் கப்பல்களில் பயன்படுத்தப்பட்ட டில்லர் கட்டளை (Tiller Orders). இவையிரண்டும் ஒன்றுக்கொன்று முற்றிலும் எதிரெதிரானவை. ஒரு முறையில் வலது பக்கம் திருப்பு என்ற கட்டளை மற்றைய முறையில் இடது பக்கத்துக்காகும். சார்லஸ் லைட்டோலர் இதனை வெளியில் சொல்லாமல் இரகசியமாகவே வைத்திருந்ததாக லூயிஸ் பேட்டன் தனது குட் அச் கோல்ட் (Good As Gold)  என்ற தனது புத்தகத்தில் தெரிவித்துள்ளார். உயிர் தப்பியவர்களில் லைட்டோலர் மட்டுமே இதனைத் தெரிந்து வைத்துள்ளார். டைட்டானிக் கப்பலின் உரிமையாளர் புரூஸ் இஸ்மே இவ்விரகசியத்தை வெளியிட வேண்டாமென்று அவரிடம் கேட்டுள்ளார். அதிகாரபூர்வ விசாரணைகளில் கூட லைட்டோலர் இதனைத் தெரிவிக்கவில்லை என லூயிஸ் பேட்டன் குறிப்பிட்டிருந்தார்.


 விபத்திற்குள்ளான கப்பலின் பாகங்கள் 12000 அடி ஆழத்தில் மண்ணில் புதைந்தன. 1985, செப்.1ல் அமெரிக்காவைச் சேர்ந்த ராபர்ட் பாலர்டு, பிரான்சை சேர்ந்த ஜீன் லூயிஸ் ஆகியோர் மேற்கொண்ட ஆய்வால் கப்பலின் உதிரிபாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. டைடானிக் கப்பல் இப்போது கடல் மட்டத்கிலிருந்து 12,000 அடி ஆழத்தில் இருக்கின்றது. இவ்வாழத்தின் நீரின் அழுத்தம் ஒரு சதுர அங்குலத்திற்கு 6000 இறாத்தல் (2700 கிகி) ஆக உள்ளது.

உலோகவியல் (மெட்டாலர்ஜி)  துறையில் அதிக அனுபவம் வாய்ந்த இன்ஜினியர்கள் டிம் போக், ஜெனிபர் ஹூப்பர் மெக்கர்ட்டி ஆகியோர் உடைந்த டைட்டானிக் கப்பலின் பாகங்களை ஆராய்ச்சி செய்தனர். சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில்இ கப்பலின் அடிப்பகுதியை கோர்ப்பதற்கு பயன்படுத்தப்பட்ட ‘ரிவிட்’ (ஆணி) தரமானதாக இல்லை என்று தெரிவித்தார் இதனால், கப்பலின் ஒரு பகுதி மற்ற பகுதிகளை விட உறுதித் தன்மை குறைவாக இருந்திருக்கிறது. அந்த பகுதி பனிப் பாறையில் இடித்ததும் உடைந்துவிட்டது என்று தெரியவந்துள்ளது. அடுத்ததாக, வெப்ப மாற்றம். 1912-ல் கரீபியன் கடல் பகுதியில் வழக்கத்தைவிட அதிக வெப்பம் காணப்பட்டது. இதனால், கடலுக்குள் நீரோட்டத்தின் வேகமும் அதிகமாக இருந்திருக்கிறது. லேப்ரடார் நீரோட்டத்தில் அடித்து வரப்பட்ட பனிப் பாறைகள் திரண்டு தடையை ஏற்படுத்தியிருக்கின்றன. லேப்ரடார் நீரோட்டமும் வடக்கு அட்லான்டிக் வளைகுடா நீரோட்டமும் இணைகிற இடத்தில் பனிப் பாறையில் மோதி டைட்டானிக் விபத்துக்குள்ளானது. கடலில் ஏற்பட்டிருந்த இயற்பியல் மாற்றங்களும் துரதிர்ஷ்டவசமாக கப்பல் விபத்துக்கு காரணமாகிவிட்டது. இவ்வாறு ரிச்சர்ட் கூறியுள்ளார்.திரைப்படம்

1997ம் ஆண்டு இச்சம்பவத்தை அடிப்படையாகவும் காதலை மையமாகவும் கொண்டு, ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் காமரூன், டைட்டானிக் என்ற படத்தை தயாரித்தார். கப்பலையும், விபத்தையும் நேரில் பார்ப்பதைப் போன்ற உணர்வை இந்த படம் ஏற்படுத்தியது. இத்திரைப்படமே அதுவரை எடுக்கப்பட்ட படங்களில் அதி கூடிய செலவு செய்த படம் ஆகும். இதற்கு நிதி வழங்கிய பராமவுண்ட் பிக்சர்ஸ் மற்றும் 20த் செஞ்சுரி ஃபோக்ஸ் ஆகிய நிறுவனங்கள் சுமார் 200 மில்லியன் அமெரிக்க டாலர்களை இதற்காகச் செலவு செய்துள்ளன. இப்படம் வசூலை வாரிக் குவித்தது மட்டுமல்லாமல் சிறந்த படத்துக்கான விருது உட்பட 11 ஆஸ்கர் விருதுகளையும் வென்றது. தற்போது, கப்பலின் நூறாவது ஆண்டை கொண்டாடும் வகையில், இந்த படம் மீண்டும் "3டி' தொழில்நுட்பத்தில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.


அஞ்சலி

டைட்டானிக் கப்பல் மூழ்கிய இடத்தில் அஞ்சலி செலுத்தும் நோக்கில், "தி பால்மோரல்' என்ற கப்பல், 2012 ஏப்ரல் 9ம் தேதி  சவுத்தாம்டனிலிருந்து புறப்பட்டு டைட்டானிக் கப்பல் சென்ற அதே பாதையிலே பயணித்து ஏப்ரல் 15ம் தேதி விபத்து நடந்த இடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்த உள்ளது.

உசாத்துணை
*http://www.atimes.com/atimes/Global_Economy/ND11Dj05.html
*http://www.bbc.co.uk/news/uk-northern-ireland-11390144
*http://en.wikipedia.org/wiki/RMS_Titanic*
*http://www.montrealgazette.com/news/todays-paper/Raising+Titanic+last+secret/3565476/story.html
*http://www.titanichistoricalsociety.org/
*http://www.encyclopedia-titanica.org/
*http://www.titanicinquiry.org/USInq/USReport/AmInqRep03.php#a8
*http://library.thinkquest.org/17297/titanic_now.htm
*http://www.imdb.com/title/tt0120338/

Thursday, 5 April 2012

தமிழகத்தில் தீவிரமடைந்து வரும் பன்றிக் காய்ச்சல் - புன்னியாமீன்


தமிழகத்தில் பன்றிக் காய்ச்சல் தீவிரமடைந்து வருவதை அடுத்து, பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது. கடந்த ஜனவரியில் மீண்டும் தலைதூக்க ஆரம்பித்த பன்றிக் காய்ச்சல், கடந்த வாரம் தீவிரமடைந்தது. ஒரு வாரத்தில், சென்னை, திருப்பூர், கோவை, சேலம் ஆகிய மாவட்டங்களில், ஒரு சிறுமி உட்பட 23 பேருக்கு பன்றிக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் அதிகபட்சமாக, சென்னை மாவட்டத்தில் 11 பேர் இக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி கந்தசாமி, 75, பன்றிக் காய்ச்சல் பாதிப்பால், கடந்த 1ம் தேதி மருத்துவமனையில் இறந்தார். இதையடுத்து, காய்ச்சல் குறித்த பீதி மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. பன்றிக் காய்ச்சல் வைரஸ் தாக்குதலை உணர, குறிப்பிட்ட அறிகுறிகள் இல்லாததால், சளி, இருமல் இருந்தாலே, பன்றிக் காய்ச்சலாக இருக்குமோ என அச்சப்படும் மனநிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

இதனைக் கருத்திற்கொண்டு இக்கட்டுரை எழுதப்பட்டது...


காலத்திற்குக் காலம் உலகளவில் பாரிய அழிவுகளையும், அச்சுறுத்தல்களையும் ஏற்படுத்தக்கூடிய வகையில் ஏதாவது விடயங்கள் இடம்பெற்றுக் கொண்டே இருக்கின்றன. இத்தகைய அழிவுகளுக்கும், அச்சுறுத்தல்களுக்கும் சில சந்தர்ப்பங்களில் இயற்கை அனர்த்தங்கள் அல்லது தொற்று நோய் பரவல்கள் காரணிகளாக இருக்கலாம்.

நோய்த் தொற்று என்ற அடிப்படையில் 21ஆம் நூற்றாண்டின் முதல் தசாப்தத்திலே உலகை அச்சுறுத்தும் ஒரு நோயாக பன்றிக் காய்ச்சல் என்றழைக்கப்படும் ஏ/ எச்1என்1 இன்புளுயன்சா / ஸ்வைன் ஃப்ளு (swine flu / swine influenza) வேகமாக பரவி வருகின்றது.

இந்தியாவில் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட முதல் நோயாளி ஜூலை 3, 2009 இல் உயிரிழந்தார். ஜூன் 11, 2009 அன்று உலக சுகாதார நிறுவனம் பன்றிக் காய்ச்சலை கொள்ளை நோயாக அறிவித்துள்ளது.

பன்றி காய்ச்சல் என்றால் என்ன?

ஸ்வைன் இன்புளுயன்சா / ஸ்வைன் ஃப்ளு / பன்றிக் காய்ச்சல் (swine flu / swine influenza) பன்றிகளுக்கும் / கோழிகளுக்கும் (பொதுவாக) வரும் ஒரு வித சுவாச நோய் ஆகும். இது A இன்புளுயன்சா என்ற வைரஸ் கிருமிகளால் ஏற்படுகிறது. ஃப்ளூ எனப் பொதுவாக அழைக்கப்படும் இன்புளுயன்சா பறவைகளிலும், முலையூட்டிகளிலும் காணப்படும் ஒருவகைத் தொற்று நோய் ஆகும். இது ஆர்த்தோமிக்சோவிரிடே (Orthomyxoviridae) குடும்பத்தைச் சேர்ந்த ஆர்.என்.ஏ வைரஸினால் (virus) உண்டாகிறது. நோயுற்ற முலையூட்டிகள் இருமும் போதும் தும்மும் போதும் காற்றின் மூலம் நோய்க் கிருமிகள் பரவுவதால் பிற முலையூட்டிகளில் தொற்றிக் கொள்கின்றன. இவ்வாறே இந்நோய் ஒருவரிடமிருந்து இன்னொருவக்குத் தொற்றுகிறது. நோயுற்ற பறவைகளின் எச்சங்களில் இருந்தும் தொற்று ஏற்படும். எச்சில், மூக்குச் சளி, மலம், குருதி என்பவற்றூடாகவும் தொற்று ஏற்படும் வாய்ப்பு உள்ளது. ஏ/ எச்1.என்1 இன்புளுயன்சா சளிக்காய்ச்சல் அல்லது பன்றிக் காய்ச்சல் என்பதும் ஒரு ஆபத்தான நோயாகும். இந்நோய் இன்புளுயன்சா A, இன்புளுயன்சா B, மற்றும் இன்புளுயன்சா C என்னும் மூன்று வகையான வைரஸ்களினால் ஏற்படுகிறது. இதில் இன்புளுயன்சா A யினால் மிக அதிகமான அளவிலும், இன்புளுயன்சா C னால் மிக அரிதாகவும் தொற்றுதல் ஏற்படுகிறது.

இந்நோய் பன்றிகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவுகிறது. பெரும்பாலும் பன்றிப் பண்ணைகளில் வேலை செய்பவர்களைத் தாக்குகிறது. பன்றியின் சுவாசப் பையில் இருக்கும் எச்1என்1 என்ற வைரஸ் கிருமிகள் ஆர்.என்.ஏ. மூலக் கூற்றை அடிப்படையாக கொண்டு உருமாறி மனிதர்களை தொற்றக் கூடியவை. ஒரு மனிதரை தாக்கியபின், மனிதரின் உடலுக்குள் இவ்வைரஸ் மரபணு சடுதி மாற்றம் பெற்று பின் மனிதனிடம் இருந்து வேறு ஒரு மனிதனைத் தாக்குகிறது..

பன்றிக்காய்ச்சலை உருவாக்கும் எச்1என்1 வகை வைரஸானது 1918இல் உலகளாவிய ரீதியில் வேகமாகப் பரவிய 'எசுப்பானிய ஃப்ளூ" எனும் வைரஸ் இனத்தைச் சேர்ந்தது. 1918ஆம் ஆண்டில் ஏற்பட்ட 'எசுப்பானிய ஃப்ளூ" காரணமாக ஏறக்குறைய 50 மில்லியன் மனித உயிர்கள் காவுகொள்ளப்பட்டதாக கூறப்படுகின்றது. ஆனால் தற்போது பரவி வரும் பன்றிக்காய்ச்சலை உருவாக்குவது ஒரு புதிய ஏ/ எச்1என்1 வைரஸ் ஆகும். இது இன்ஃப்ளுயென்சா ஏ வகை வைரஸின் துணைப்பிரிவான எச்1என்1 வகையிலுள்ள நான்கு திரிபுருக்களில் ஏற்பட்ட சடுதி மாற்றங்களால் தோன்றியது எனக் கருதப்படுகிறது. பன்றிகளுடன் நேரடி தொடர்புடைய மனிதர்களை இந்த வைரஸ் எளிதாக தொற்றும். ஐரோப்பாவில் 1965ம் ஆண்டு 17 பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டனர். 1976ம் ஆண்டு நியூஜெர்சியிலும் இந்த நோயின் பாதிப்புகள் கண்டறியப்பட்டது.

பன்றிகளுக்கு வருகின்ற மூச்சுக்குழல் நோய் படிப்படியாக மனிதருக்கு தொற்றத் தொடங்கியது. ஆனால் ஆரம்பத்தில், இந்நோய்க்கு ஆளான மனிதரிடமிருந்து பிற மனிதருக்கு இது தொற்றவில்லை. எனவே நோய் பரவும் வேகம் மிகவும் குறைவாக இருந்தது. தற்போது மெக்ஸிகோவில் பரவிய எச்1என்1 வைரஸ் மனிதரிடமிருந்து பிற மனிதருக்கு தொற்றி மிகவிரைவாக நோய் பரவும் நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த நூறு ஆண்டுகளில் பன்றிக் காய்ச்சல் இத்தகைய கொள்ளை நோயாகப் பரிமாணம் கொள்வது இது நான்காவது முறையாகும். ஆயினும், இந்தத் தடவை பன்றிக் காய்ச்சலின் வீரியம், இதுவரை "மிதமானதாக' இருக்கிறது என ஒப்புக்கொள்ளும் நிபுணர்கள், அதன் வீரியமும் வேகமும் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது என்பதையும் எடுத்துரைக்கின்றனர். அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து போன்ற வளர்ச்சியடைந்த நாடுகளுக்கே பன்றிக் காய்ச்சல் கொள்ளை நோய் பெரும் சவாலாகத் திகழும்போது, இந்தியா போன்ற ஒருங்கிணைந்த வளர்ச்சியடையாத நாடுகளுக்கு பன்றிக் காய்ச்சல் இன்னும் பெரிய சவாலாக விளங்கும் என்பதில் சந்தேகம் எதுவுமில்லை.

நோய் தாக்கி இருப்பதற்கான அறிகுறிகள்

பன்றிக் காய்ச்சலுக்கான அறிகுறிகள் பொதுவான சளிக்காய்ச்சலின் அறிகுறிகளைப் போன்றவை. அதாவது,
*   தொடர்ந்த தலை வலி, குளிருதல், நடுங்குதல் விறைப்பு, தசைநார் வலி,
இருமல் / சளி / மூக்கில் நீர்வடிதல் / தொண்டை அழற்சி/ தும்மல் / பசியின்மை / சாப்பாடு மீது வெறுப்பு
*   தலை சுற்றல் / மயக்கம்
*   உடல் வலி / வயிற்றுப் பகுதி மற்றும் இதயப் பகுதிகளில் வலி
*   இடைவிடாத காய்ச்சல் (100.o F க்கு மேல்),
*   வயிற்று போக்கு, குமட்டல் வாந்தி எடுத்தல்

குழந்தைகளுக்கு இந்நோய் தொற்றியிருந்தால் தொடர்ந்த காய்ச்சல், சளி மற்றும் மூச்சுத் திணறல், மூச்சு விட சிரமப்படல், உடல் தோல் ஒரு வித நீல நிறமாக மாறுதல். (இதை நகக்கணுவை கவனிப்பதன் மூலம் எளிதில் கண்டுபிடிக்கலாம்), தண்ணீர் அதிகம் குடிக்காமல் இருத்தல், அசாதாரணமாக தூங்குதல், எழுந்திருக்காமல் இருத்தல், அல்லது வழமைப்போல் இல்லாமல் சோர்ந்து இருத்தல், தூக்கி கொண்டாலும் அழுது கொண்டே இருத்தல், அமைதியின்றி இருத்தல், தோலில் சொறி (rash) போன்று தடித்து காணப்படல் போன்ற காரணிகளை வைத்து இனங்காணலாம்.

நோய் தடுப்பு முறை

நோய் தாக்கப்பட்ட நபர்களிடம் இருந்து விலகி இருப்பது அல்லது தவிர்க்க முடியாத காரணத்திற்காக அருகில் செல்லும் போது நுகர்மூடி (மாஸ்க்) அணிந்துகொள்வது மற்றும் வாழுமிடத்தை மிகத் தூய்மையாக வைத்துகொள்வது நோய் பரவலை தற்போதைக்கு தடுக்கும் முறைகள் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது முக்கியமாக, இருமல், தும்மல், தொடுதல் போன்றவற்றால் மட்டுமே நோய் தொற்று ஏற்படுகிறது. இந்நோய், ஏற்கனவே பன்றி காய்ச்சல் வந்த ஒருவரை தொடுதல் அல்லது அவர் அருகாமையில் இருத்தல் போன்றவற்றால் ஏற்படுகிறது. இந்நிலையில் சளிக்காய்ச்சல் பரவாது தடுப்பதற்கு உங்கள் கைகளைக் கழுவுவதே ஒரேயொரு சிறந்த வழி என கனடா நலத்துறை விபர மடலில் தெரிவிக்கப்பட்டிருந்தது கைகளை அடிக்கடி சவர்க்காரம், இளஞ்சுடுநீர் கொண்டு 15 முதல் 20 விநாடிகள் வரை கழுவ வேண்டும். அல்லது மதுசாரம் மிகுந்த கை-பூசி கொண்டு சுத்தப்படுத்த வேண்டும். கை கழுவாமல் கண், மூக்கு, வாய் என்பவற்றைத் தொடுவதைத் தவிர்க்க வேண்டும்.

மென்தாள் (டிசு), அல்லது கைக்குட்டை கொண்டு இருமவும் அல்லது தும்மவும். அதன் பின்னர் கைகளைக் கழுவவும் அல்லது கிருமிபோக்கி கொண்டு சுத்தப்படுத்தவும்.

சளிக்காய்ச்சல் நுண்ணங்கி தொற்றக்கூடிய பாத்திரங்கள், குவளைகள், இசைக்கருவிகளின் வாய்முனைகள், தண்ணீர்ப் புட்டிகள் முதலிய பொருட்களைப் பகிரக் கூடாது. நோயுற்ற ஒருவர் தும்மும் போது காற்றின் மூலம் நோய்க் கிருமிகள் பரவுவதால், மேசை, கீபோர்ட், மௌஸ், டெலிபோன் கருவிகள், கதவு கைபிடிகள், லிப்ட் பொத்தான்கள், ரூபாய் நோட்டுக்கள், நாணயங்கள், பழம்- கறிகாய்கள் போன்றவற்றாலும் பரவலாம். ஆகையால் எப்போதுமே, இவற்றை எல்லாம் கையாண்டவுடன் கை கழுவுதல், நோய் வருவதை ஓரளவுக்கு தடுக்கும்.

உங்களை நோய் தாக்கி இருந்தால், வீட்டிலேயே இருக்கவும். இதனால் மற்றவர்களுக்குநோய் பரவுவதை தவிர்க்கலாம். நன்கு ஒய்வெடுக்கவும், உடற் பயிற்சி செய்யவும், பானங்கள், நிறையப் பருகவும், சத்துணவு வகைகளை உண்ணவும். இந்த நோய் வந்தால் நோயுற்றவரை தனிமைப் படுத்துவது அவசியமாகிறது. உலகம் முழுதும் இந்நோய் பரவும் வாய்ப்புள்ளதாக (WHO) அறிவித்துள்ளது.

பன்றிக் காய்ச்சல் தொடர்பான அவதானங்கள்.

பன்றிக் காய்ச்சல் குறித்த ஆழமான புரிதலும், அரசும் குடிமக்களும் சேர்ந்து மேற்கொள்ளும் ஒருங்கிணைந்த செயல்பாடுகளுமே இதன் தாக்கத்தை மட்டுப்படுத்தும் என்பதை நாம் அடிப்படையாகப் புரிந்து கொள்ள வேண்டும். பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களுக்கும் ஏனைய காய்ச்சல்களால் பாதிக்கப்பட்டவர்களைப் போலவே இருமல், சளி, தொண்டை வலி, தலைவலி, உடல்வலி மற்றும் காய்ச்சல் ஆகிய நோய்க்குறிகள் காணப்படும். இவ்வகை பன்றிக் காய்ச்சல், "மூச்சுத் திணறலோடு கூடிய விஷக்காய்ச்சல் எனப் பரவலாக அறியப்பட்டிருந்தாலும், முந்தைய வகைகளிலிருந்து சில அடிப்படையான அம்சங்களில் மாறுபடுகிறது. காய்ச்சல் ஒரு நோய்க்குறியாக பலரிடம் காணப்படுவதில்லை. அதேவேளை, வயிற்றோட்டம் ஒரு முக்கிய நோய்க்குறியாகப் பலரிடம் காணப்பட்டுள்ளது.

நோய் தீவிரமடையும்போது, சுவாச உறுப்புகளுக்குள் சளிகோர்த்துக் கொள்வதால், மூச்சுத்திணறல் உண்டாகும். உச்ச நிலையில் சிறுநீரகம், இதயம், மூளை முதலிய முக்கிய அவயவங்கள் செயலிழப்பதால் மரணம் உண்டாகலாம்.

இது மட்டுமன்றி ஆஸ்மா போன்ற சுவாச மண்டல நோய்கள், HIV மற்றும் நீரிழிவு முதலான நோய் எதிர்ப்பைக் குறைக்கும் நோய்கள் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்களும், உடல் பருமன் கொண்டவர்களும், கருவுற்றிருக்கும் பெண்களும் பன்றிக் காய்ச்சலின் தீவிரத் தாக்குதலுக்கு உள்ளாக சாத்தியமுள்ளவர்கள் என நிபுணர்கள் கூறுகின்றனர். பன்றிக் காய்ச்சல் கொள்ளை நோயைப் பரவாமல் தடுக்கவும் அதன் தாக்கத்தைத் தணிக்கவும் நோய் குறித்த நடைமுறை ரீதியிலான புரிதலும், ஒருங்கிணைந்த அணுகுமுறையும் அவசியம்.

உலக சுகாதார நிறுவன அறிக்கைகளை விரிவாக ஆராயும் போது பன்றிக் காய்ச்சல் எனும் கொள்ளை நோய் ஒருசில நாட்களிலோ அல்லது ஓரிரு வாரங்களிலோ தீர்ந்துவிடக்கூடிய பிரச்சினையில்லை என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.. இந்நோய் தட்பவெப்ப சூழலுக்கேற்ப அலை அலையாக ஓரிரு ஆண்டுகளாகத் தொடர்ந்து தாக்க வாய்ப்பிருப்பதாக சுட்டிக்காட்டப்படுகிறது. தனி மனிதர்கள் மற்றும் குடும்பங்களைப் பொருத்தவரை, வெறுமனே பீதியடைவதும் வதந்திகளைப் பரப்புவதும், அன்றாடப் பணிகளைத் தவிர்த்துக்கொள்ள விளைவதும் நடைமுறை ரீதியான பலன் எதனையும் தரப்போவதில்லை. தனிமனிதர்களும் குடும்பங்களும் பொறுப்புணர்வோடு நடந்து கொள்ள வேண்டும். நோயின் இயல்பையும், அதன் தாக்கத்தின் தீவிரத்தையும் மக்கள் அறிவுபூர்வமாக விளங்கிக் கொள்ள முன்வருவதோடு, ஆரோக்கியமான பழக்கவழக்கங்களைக் கைக்கொள்ளவும் முன்வர வேண்டும். மக்கள் அதிகமாக இருக்கக்கூடிய மருத்துவமனைகள், பஸ் மற்றும் ரயில் நிலையங்களில் பணிபுரிவோர் நிறுவனங்களில் பணியாற்றுவோரில் யாருக்கேனும் நோய்க்குறிகள் இருந்தால் அவர்களும் பாதுகாப்பு முகமூடி அணிந்து கொள்ள வேண்டும். மற்றபடி வீதிகளில் வருவோர் போவோர் எல்லாம் முகமூடி அணிந்து கொள்வது பொதுவான அச்சத்தையும், குழப்பத்தையும் உண்டாக்குவதைத் தவிர வேறெந்தப் பலனையும் தராது.

நோய் இருப்பதாகச் சந்தேகப்படுபவர்களை பரிசீலனை செய்வதற்கான மருத்துவ நிறுவனங்களையும், தரமான பரிசோதனைக் கூடங்களையும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் ஒருங்கிணைப்போடு பரவலாக ஏற்பாடு செய்ய வேண்டும். ஏனெனில் ஓரிரு மையங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடினால், அதுவே நோய் பரவுவதற்கு வழிவகை செய்ததாகிவிடும். பன்றிக் காய்ச்சல் நோயில் பாதிக்கப்பட்டவர்கள் என பரிசோதனை மூலம் நிரூபிக்கப்பட்டவர்களை தக்க முன்னேற்பாடுகளுடன் வீடுகளிலேயே சிகிச்சை செய்யவும், தீவிரமாகப் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளவர்கள் ஆகியோரை வைத்திய நிலையங்களில் சேர்த்து சிகிச்சை செய்யத் தேவையான வழிகாட்டுதலையும், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் தகுந்த ஏற்பாட்டையும் செய்ய வேண்டும்.

நோயின் தீவிரத்தை மட்டுப்படுத்த உதவுவதாகக் கருதப்படும் டாமிஃபுளூ வைரஸ் கொல்லி மருந்தை தட்டுப்பாடின்றி பெற்றுக் கொள்ள வழிவகைகள் செய்யப்பட வேண்டும். பன்றிக் காய்ச்சல் நோய் பாதிப்பு இருக்கும் நாடுகளுக்கு செல்வதைத் தவிர்க்க வேண்டும். அத்துடன் வெளிநாடுகளுக்கு சென்று திரும்புபவர்கள், தங்களுக்கு நோய் பாதிப்பு உள்ளதா, இல்லையா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

பன்றி காய்ச்சல் சிகிச்சைக்கு உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டு நெறிமுறை:

பன்றி காய்ச்சல் சிகிச்சை குறித்து உலக சுகாதார நிறுவனம் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது பன்றி காய்ச்சல் நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு 'ஒசல்டமிவிர்' / "oselitamivir (Tamiflu (r)" 'ஜானமிவிர்' "zanamivir (Reienza (r) ஆகிய மருந்துகளை அளிக்க வேண்டும். ஒசல்டமிவிர் கிடைக்காவிட்டால், ஜானமிவிர் மருந்தை கொடுக்கலாம். இந்த மருந்துகள் நிமோனியாவை கட்டுப்படுத்துகிறது.

பன்றி காய்ச்சலால் கடுமையாக பாதிக்கப்படாத நபர்களுக்கு இந்த வைரஸ் தடுப்பு மருந்துகளை அளிக்கக்கூடாது. 5 வயதுக்கு மேற்பட்ட ஆரோக்கியமான குழந்தைகளுக்கு கூட, அவர்கள் கடுமையாக பாதிக்கப்படாத நிலையில் இந்த மருந்துகளை கொடுக்க வேண்டிய தேவை இல்லை. மூச்சுத்திணறல், நெஞ்சு வலி, 3 நாட்களுக்கு மேல் நீடிக்கும் காய்ச்சல் போன்ற பன்றி காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். குழந்தைகள் வேகமாகவோ, சிரமப்பட்டோ மூச்சு விடுதல், சுறுசுறுப்பு இல்லாமை, படுக்கையை விட்டு எழுவதில் சிரமம், விளையாடுவதில் ஆர்வம் இன்மை ஆகியவற்றுடன் காணப்படுவதும் பன்றி காய்ச்சலுக்கான அறிகுறிகளாகும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

"oselitamivir (Tamiflu (r))" அல்லது "zanamivir (Reienza (r)) ஆகிய மருந்து வகைகள் சிகிச்சைக்கு உதவுகின்றன. antiviral medicines அல்லது oral pills கூட சில நேரம் நோய்கிருமிகள் மேலும் அதிகரிப்பதை தடுப்பதாகவும் கூறப்படுகின்றது. நோய் தாக்கிய இரண்டு நாட்களுக்குள் மருத்துவரின் ஆலோசனைப்படி antiviral medicine/pill எடுத்துக்கொண்டால் ஓரளவுக்கு குணம் கிடைப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த விதமான சுய-மருத்துவம் செய்யக்கூடாது.

இந்த நோய்க்கு இன்னும் தனிப்பட்ட தடுப்பு மருந்து ஏதும் கண்டு பிடிக்கப்படவில்லை. சாதாரண காய்ச்சலுக்கு அளிக்கப்படும் மருந்தை தான் தற்போது தருகின்றனர்.

oselitamivir (Tamiflu (r))" டா‌மிபுளு மாத்திரைகளை முறையின்றி பயன்படுத்துவது ஆபத்தானதாகும். பன்றிக் காய்ச்சலுக்குப் பயன்படுத்தப்படும் டாமிபுளு மாத்திரைகளை, மரு‌த்துவ‌ர்க‌ளி‌ன் அ‌றிவுறு‌த்த‌ல் இ‌‌ல்லாம‌ல், முறையின்றி உட்கொண்டால் மோசமான ‌பி‌ன் விளைவுகளை ஏற்படுத்தி விடும் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. இந்தியா போன்ற நாடுகளில் பன்றிக் காய்ச்சலுக்கான டாமிபுளு மாத்திரைகளை, பொதும‌க்க‌ள், மரு‌த்துவ‌ர்க‌ள் ஆலோசனையின்றி பயன்படுத்துவதாகவும், முறைப்படி ஐந்து நாட்கள் உட்கொள்ளாமல் இடையில் நிறுத்தி விடுவதாகவும் உலக சுகாதார நிறுவனத்துக்கு முறைப்பாடுகள் வந்ததையடுத்து மேற்குறிப்பிட்ட கருத்தினை வெளியிட்டிருந்தது.

இது குறித்து உலக சுகாதார அமைப்பின் தொற்று நோய் கட்டுப்பாடு மையத்தின் நிபுணர்கள் கூறுகை‌யி‌ல், "டாமி புளு மருந்துகளை முறையின்றி பயன்படுத்தினால் மருந்தின் சக்தியை எச்1என்1 வைரஸ் தடுத்து நிறுத்தி மோசமான விளைவுகளை ஏற்படுத்தி விடும். டாமி புளு தனது சக்தியை இழக்க நேரிடும். எனவே மரு‌த்துவ‌ர்க‌ள் பரிந்துரைப்படியே மருந்துகளை உட்கொள்ள வேண்டும் எ‌ன்று எ‌ச்ச‌ரி‌த்து‌ள்ளா‌ர். எனவே, பொதும‌க்க‌ள் யாரு‌ம், சாதாரண கா‌ய்‌ச்சலு‌க்காகவோ, ச‌ளி‌க்காகவோ மரு‌த்துவ ப‌ரிசோதனை இ‌ன்‌றி டா‌‌மி புளு மா‌த்‌திரைகளை‌ப் உட்கொள்ள வேண்டாம் எனவும் உட‌ல் நல‌ப் பா‌தி‌ப்பு ஏ‌ற்ப‌ட்டா‌ல் உ‌ரிய மரு‌‌த்துவரை அணு‌கி, அவரது ப‌ரி‌ந்துரை‌யி‌ன் படி ‌சி‌கி‌ச்சை மே‌ற்கொ‌ள்ளல் வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.

மேலு‌ம், ப‌ன்‌றி‌க் கா‌ய்‌ச்ச‌ல் பா‌தி‌ப்பு‌க்கு‌ள்ளானவ‌ர்க‌ள், பய‌ந்தோ, அ‌றியாமையாலோ ‌வீ‌ட்டி‌ற்கு‌ள் முட‌ங்‌கி இரு‌க்காம‌ல், தகு‌ந்த மரு‌த்துவமனை‌யி‌ல் உடனடியாக ‌சி‌கி‌ச்சை பெ‌ற்று குணமடையலா‌ம். ப‌ன்‌றி‌க் கா‌ய்‌ச்ச‌ல் நோ‌ய்‌க்கு உடனடியாக உ‌ரிய ‌‌சி‌கி‌ச்சை மே‌ற்கொ‌ண்டா‌ல் ‌நி‌ச்சயமாக பூரண குணமடையலா‌ம். ஒருவ‌ரிட‌ம் இரு‌ந்து ஒருவரு‌க்கு ப‌ன்‌றி‌க் கா‌ய்‌ச்ச‌ல் பரவுவதை‌த் தடு‌க்க நாமு‌ம் ந‌ம்மை சு‌த்தமாக வை‌த்து‌க் கொ‌ள்ள வே‌ண்டு‌ம். து‌ம்‌மிய‌ப் ‌பிறகோ, இரு‌‌மிய‌ப் ‌பிறகோ நமது கைகளை சு‌த்தமாக கழுவ வே‌ண்டு‌ம். வெ‌ளி‌யி‌ல் செ‌ன்று‌வி‌ட்டு வ‌ந்தது‌ம் கை, கா‌ல்களை ந‌ன்கு கழு‌வி, ‌பி‌ன்ன‌ர் முக‌த்தையு‌ம் கழுவுவதை பழக்கமாகக் கொண்டிருத்தல் வேண்டும். தன்னை நோய் தாக்கியிருந்தால் அல்லது சந்தேகம் இருந்தால் உடனடியாக மருத்துவரை நாடுங்கள். நோயிருக்குமோ என்ற சந்தேகம் தோன்றிய மூன்று நாட்களுக்கும் இரத்தப் பரிசோதனை செய்து கொள்ளுங்கள். முதல் நான்கைந்து நாட்களுக்குள் respiratory specimen (சளி) பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

உசாத்துணை:
http://www.cdc.gov/flu/about/season/
http://www.medicinenet.com/swine_flu/article.htm
http://www.cdc.gov/h1n1flu/qa.htm
http://www.nlm.nih.gov/medlineplus/h1n1fluswineflu.html
http://www.webmd.com/cold-and-flu/flu-guide/swine-flu-faq-1
http://www.huffingtonpost.com/news/swine-flu/
http://www.who.int/csr/disease/swineflu/en/
http://www.who.int/mediacentre/news/statements/2009/h1n1_20090425/en/index.html
http://www.hpa.org.uk/swineflu