உலகை சோகத்தில் ஆழ்த்திய வரலாற்றுச் சம்பவங்களுள் டைட்டானிக் கப்பல் கவிழ்ந்ததும் முக்கிய சம்பவங்களில் ஒன்றாகவே கருதப்படுகிறது. 1912ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10ம் திகதி தனது முதலும், கடைசியுமான பயணத்தை ஆரம்பித்த இந்தக் கப்பலை நினைவு கூரும் விதமாக, உலகம் முழுவதும் நூற்றாண்டு நினைவு தினம் 2012 ஏப்ரல் 10 ம் திகதி (இன்று) அனுசரிக்கப்படுகிறது
.ஆர்எம்எஸ் டைட்டானிக் (RMS Titanic) என்பது ஓர் ஆடம்பர பயணிகள் கப்பலாகும். வட அயர்லாந்தின் பெல்பாஸ்ட் நகரில் உள்ள ஹார்லாண்ட் மற்றும் ஊல்ப் நிறுவனத்தால் இக் கப்பல் உருவாக்கப்பட்டது.
1909 மார்ச் 31ம் திகதியன்று இக்கப்பலின் கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. 882.6 அடி (269 மீ) நீளமும், 175 அடி (53.3மீ) உயரமும், (வளை 92 அடி), 52,310 டன் எடையுடனும் கூடியதாக 9 தளங்களைக் கொண்டு இக்கப்பல் நிர்மாணிக்கப்பட்டது. இக்கப்பலில் 2,435 பயணிகளுக்கும், 892 பணியாட்களுக்கும் தங்குவதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டிருந்தன. ஆபத்து காலத்தில் உதவும் வகையில், 20 உயிர்காப்புப் படகுகளும் சேர்க்கப்பட்டிருந்தன. இக்கப்பல் மே 31, 1911 இல் வெள்ளோட்டமிடப்பட்டது.
ஐக்கிய இராச்சியம் லிவர்பூல் துறைமுகத்தில் பதிவு செய்யப்பட்டிருந்த இக்கப்பல் அக்காலத்தில் மிகவும் மேம்பட்ட தொழில்நுட்பத்தைக் கொண்டு கட்டப்பட்டதாகவும் அது மூழ்கவே முடியாததெனவும் கருதப்பட்டது. 1912 ஏப்ரல் மாதம் 10ம் திகதி, முதன் முதலாகச் சேவைக்கு விடப்பட்டபோது இதுவே உலகின் மிகப்பெரிய முதல் நீராவி ஆடம்பர கப்பலாகும்.
டைட்டானிக் தனது முதற் பயணத்தை இங்கிலாந்தின் சௌதாம்ப்டன் துறைமுகத்தில் இருந்து நியூயோர்க் நகரை நோக்கி ஏப்ரல் 10, 1912 இல் கப்டன் எட்வர்ட் சுமித் தலைமையில் ஆரம்பித்தது. புறப்படும் போது டைட்டானிக்கின் உந்திகளின் தாக்கம் அருகிலிருந்த நியூயோர்க் என்ற கப்பலை நகர்த்தி டைட்டானிக்குக்கு மிக அருகில் செல்ல வைத்தது. இதனால் அது ஒரு மணி நேரம் தாமதித்தே புறப்பட்டது. ஆங்கிலக் கால்வாயைத் தாண்டியதும் பிரான்சில் சேர்பூர்க்கில் நிறுத்தப்பட்டு கூடுதல் பயணிகள் ஏற்றப்பட்டனர். மீண்டும் அடுத்த நாள் அயர்லாந்து, குயீன்ஸ்டவுன் என்ற இடத்தில் நிறுத்தப்பட்டு நியூயோர்க்கை நோக்கி குழந்தைகள், பெண்கள் 531 பேரும் ஆண்கள் 1,692 பேருமாக மொத்தம் 2,223 பயணிகளுடன் பயணிக்கத் தொடங்கியது.
ஏப்ரல் 14 இல் வெப்பநிலை குறைந்து கிட்டத்தட்ட உறைநிலையை அடைந்தது. கடல் மிகவும் அமைதியாக இருந்தது. அமெரிக்கா என்ற கப்பலில் இருந்து டைட்டானிக்க்குக்கு வழியில் பனிப்பாறைகள் உள்ளதாக செய்தி அனுப்பப்பட்டது. ஆனாலும் இச்செய்தி டைட்டானிக்கை அடையவில்லை.
தன் பயணத்தைத் தொடர்ந்த டைட்டானிக் கப்பல், ஏப்ரல் 14ம் தேதி நள்ளிரவு 11.40 மணிக்கு வட அட்லாண்ட்டிக் பெருங்கடலில் பனிப்பாறை ஒன்றுடன் மோதியது. கப்பலை மோதாமல் திருப்பும் முயற்சி நிறைவேறவில்லை. கப்பல் முற்றாக நிறுத்தப்பட்டது. கப்பலில் இருந்து ஆபத்து சமிக்கைகள் பல திசைகளிலும் அனுப்பப்பட்டன. அண்மையில் இருந்த சில கப்பல்களுக்கும் செய்திகள் அனுப்பின. ஆனாலும் அவை எதுவும் டைட்டானிக்குக்கு அருகில் வருவதற்கு நேரம் போதவில்லை. சரியாக அதிகாலை 2:20 மணிக்கு 2 மணி 40 நிமிடங்களில் ஏப்ரல் 15, 1912 இல் முற்றாக மூழ்கியது.
இதில் பயணம் செய்த குழந்தைகள், பெண்கள் 157 பேரும் ஆண்கள் 1,360 பேருமாக மொத்தம் 1,517 பேர் இறந்தனர். இந்நகழ்வு அமைதிக்காலத்தில் நடந்த மிகப்பெரும் கடல் அழிவாகக் கருதப்பட்டது. கடலில் விழுந்தவர்கள் கடும் குளிர் 28 °F (-2 °C) காரணமாக உறைந்து இறந்தனர். உயிர் காப்புப் படகுகள் உதவியுடன் குழந்தைகள், பெண்கள் 374 பேரும், ஆண்கள் 332 பேருமாக மொத்தம் 706 பேர் உயிர்தப்பினர். டைட்டானிக் கப்பல் அக்காலத்தில் மிகவும் மேம்பட்ட தொழில்நுட்பத்தைக் கொண்டு கட்டப்பட்டதாகவும் அது மூழ்கவே முடியாததெனவும் கருதப்பட்டது. இப்படியான ஒரு கப்பல் மூழ்கியது உலகெங்கும் பெரும் அதிர்ச்சியை உண்டுபண்ணியது.
கடலில் இருந்த திசை காட்டும் கருவி சரியாக செயல்படாததே விபத்திற்கு காரணம் என கப்பலில் பயணம் செய்த கேப்டனின் பேத்தி லூயிஸ் பேட்டன் தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். டைட்டானிக்கின் இரண்டாம் நிலை அதிகாரியான சார்ல்ஸ் லைட்டோலர் என்பவரின் பேத்தி ஒரு எழுத்தாளர். ”டைட்டானிக் கப்பலுக்கு முன்னால் பனிக்கட்டி மிதப்பதைக் கண்டுபிடித்து, கப்பலை இடது பக்கமாக திருப்பச் சொன்னார்கள். ஆனால் அதைத் தவறுதலாகப் புரிந்து கொண்டு வலது பக்கமாக திருப்பி விட்டார்கள்,” என சார்ல்ஸ் லைட்டோலர் தன்னிடம் தெரிவித்ததாக 2010 செப்டெம்பரில் அவர் எழுதியுள்ள புத்தகத்தில் தெரிவித்திருந்தார்.
கடல் போக்குவரத்து பாய்மரக் கப்பல்களில் இருந்து நீராவிக் கப்பல்களுக்கு மாற்றம் பெற்ற காலகட்டத்திலேயே இந்த அனர்த்தம் விளைந்ததாகவும் அவர் தனது புத்தகத்தில் எழுதியுள்ளார். அக்காலகட்டத்தில் இரண்டு வெவ்வேறான ஒழுங்கமைப்புகள் நடைமுறையில் இருந்தன. ஒன்று நீராவிக் கப்பல்களில் பயன்படுத்தப்பட்ட ரடர் கட்டளை (Rudder Orders), மற்றையது பாய்மரக் கப்பல்களில் பயன்படுத்தப்பட்ட டில்லர் கட்டளை (Tiller Orders). இவையிரண்டும் ஒன்றுக்கொன்று முற்றிலும் எதிரெதிரானவை. ஒரு முறையில் வலது பக்கம் திருப்பு என்ற கட்டளை மற்றைய முறையில் இடது பக்கத்துக்காகும். சார்லஸ் லைட்டோலர் இதனை வெளியில் சொல்லாமல் இரகசியமாகவே வைத்திருந்ததாக லூயிஸ் பேட்டன் தனது குட் அச் கோல்ட் (Good As Gold) என்ற தனது புத்தகத்தில் தெரிவித்துள்ளார். உயிர் தப்பியவர்களில் லைட்டோலர் மட்டுமே இதனைத் தெரிந்து வைத்துள்ளார். டைட்டானிக் கப்பலின் உரிமையாளர் புரூஸ் இஸ்மே இவ்விரகசியத்தை வெளியிட வேண்டாமென்று அவரிடம் கேட்டுள்ளார். அதிகாரபூர்வ விசாரணைகளில் கூட லைட்டோலர் இதனைத் தெரிவிக்கவில்லை என லூயிஸ் பேட்டன் குறிப்பிட்டிருந்தார்.
விபத்திற்குள்ளான கப்பலின் பாகங்கள் 12000 அடி ஆழத்தில் மண்ணில் புதைந்தன. 1985, செப்.1ல் அமெரிக்காவைச் சேர்ந்த ராபர்ட் பாலர்டு, பிரான்சை சேர்ந்த ஜீன் லூயிஸ் ஆகியோர் மேற்கொண்ட ஆய்வால் கப்பலின் உதிரிபாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. டைடானிக் கப்பல் இப்போது கடல் மட்டத்கிலிருந்து 12,000 அடி ஆழத்தில் இருக்கின்றது. இவ்வாழத்தின் நீரின் அழுத்தம் ஒரு சதுர அங்குலத்திற்கு 6000 இறாத்தல் (2700 கிகி) ஆக உள்ளது.
உலோகவியல் (மெட்டாலர்ஜி) துறையில் அதிக அனுபவம் வாய்ந்த இன்ஜினியர்கள் டிம் போக், ஜெனிபர் ஹூப்பர் மெக்கர்ட்டி ஆகியோர் உடைந்த டைட்டானிக் கப்பலின் பாகங்களை ஆராய்ச்சி செய்தனர். சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில்இ கப்பலின் அடிப்பகுதியை கோர்ப்பதற்கு பயன்படுத்தப்பட்ட ‘ரிவிட்’ (ஆணி) தரமானதாக இல்லை என்று தெரிவித்தார் இதனால், கப்பலின் ஒரு பகுதி மற்ற பகுதிகளை விட உறுதித் தன்மை குறைவாக இருந்திருக்கிறது. அந்த பகுதி பனிப் பாறையில் இடித்ததும் உடைந்துவிட்டது என்று தெரியவந்துள்ளது. அடுத்ததாக, வெப்ப மாற்றம். 1912-ல் கரீபியன் கடல் பகுதியில் வழக்கத்தைவிட அதிக வெப்பம் காணப்பட்டது. இதனால், கடலுக்குள் நீரோட்டத்தின் வேகமும் அதிகமாக இருந்திருக்கிறது. லேப்ரடார் நீரோட்டத்தில் அடித்து வரப்பட்ட பனிப் பாறைகள் திரண்டு தடையை ஏற்படுத்தியிருக்கின்றன. லேப்ரடார் நீரோட்டமும் வடக்கு அட்லான்டிக் வளைகுடா நீரோட்டமும் இணைகிற இடத்தில் பனிப் பாறையில் மோதி டைட்டானிக் விபத்துக்குள்ளானது. கடலில் ஏற்பட்டிருந்த இயற்பியல் மாற்றங்களும் துரதிர்ஷ்டவசமாக கப்பல் விபத்துக்கு காரணமாகிவிட்டது. இவ்வாறு ரிச்சர்ட் கூறியுள்ளார்.
திரைப்படம்
1997ம் ஆண்டு இச்சம்பவத்தை அடிப்படையாகவும் காதலை மையமாகவும் கொண்டு, ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் காமரூன், டைட்டானிக் என்ற படத்தை தயாரித்தார். கப்பலையும், விபத்தையும் நேரில் பார்ப்பதைப் போன்ற உணர்வை இந்த படம் ஏற்படுத்தியது. இத்திரைப்படமே அதுவரை எடுக்கப்பட்ட படங்களில் அதி கூடிய செலவு செய்த படம் ஆகும். இதற்கு நிதி வழங்கிய பராமவுண்ட் பிக்சர்ஸ் மற்றும் 20த் செஞ்சுரி ஃபோக்ஸ் ஆகிய நிறுவனங்கள் சுமார் 200 மில்லியன் அமெரிக்க டாலர்களை இதற்காகச் செலவு செய்துள்ளன. இப்படம் வசூலை வாரிக் குவித்தது மட்டுமல்லாமல் சிறந்த படத்துக்கான விருது உட்பட 11 ஆஸ்கர் விருதுகளையும் வென்றது. தற்போது, கப்பலின் நூறாவது ஆண்டை கொண்டாடும் வகையில், இந்த படம் மீண்டும் "3டி' தொழில்நுட்பத்தில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
அஞ்சலி
டைட்டானிக் கப்பல் மூழ்கிய இடத்தில் அஞ்சலி செலுத்தும் நோக்கில், "தி பால்மோரல்' என்ற கப்பல், 2012 ஏப்ரல் 9ம் தேதி சவுத்தாம்டனிலிருந்து புறப்பட்டு டைட்டானிக் கப்பல் சென்ற அதே பாதையிலே பயணித்து ஏப்ரல் 15ம் தேதி விபத்து நடந்த இடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்த உள்ளது.
உசாத்துணை
*http://www.atimes.com/atimes/Global_Economy/ND11Dj05.html
*http://www.bbc.co.uk/news/uk-northern-ireland-11390144
*http://en.wikipedia.org/wiki/RMS_Titanic*
*http://www.montrealgazette.com/news/todays-paper/Raising+Titanic+last+secret/3565476/story.html
*http://www.titanichistoricalsociety.org/
*http://www.encyclopedia-titanica.org/
*http://www.titanicinquiry.org/USInq/USReport/AmInqRep03.php#a8
*http://library.thinkquest.org/17297/titanic_now.htm
*http://www.imdb.com/title/tt0120338/
No comments:
Post a Comment