Saturday 11 February 2012

விக்கிபீடியாவில் ஓராண்டுக்குள் 7500 கட்டுரைகள் - நேர்காணல்: இக்பால் அலி

இலங்கையின் மத்திய மலைநாட்டின் தலைநகர் கண்டி நகருக்கு அண்மையில் அமைந்துள்ள உடத்தலவின்னை மடிகே எனும் கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட கலாபூசணம் பீ.எம்.புன்னியாமீன் ஒரு எழுத்தாளராகவும், சர்வதேச ஊடகவியலாளராகவும், பத்திரிகையாளராகவும், பன்னூலாசிரியருமாக அறியப்பட்டவர். மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக தமிழ்  இலக்கியத்துறையில் ஈடுபட்டுவரும் இவர்  இதுவரை 179 தமிழ் நூல்களை எழுதி வெளியிட்டு இலங்கை தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒரு சாதனையைப் படைத்துள்ளார்.


மேலும் இவர் 166 சிறுகதைகளையும், ஒரு நாவலையும், கல்வி, கலை, இலக்கியம், ஆய்வியல், அரசியல், விளையாட்டு, சமூகவியல் ஆகிய பல்வேறு துறைகளில் 15000க்கும் மேற்பட்ட கட்டுரைகளையும் எழுதியுள்ளார். இவரின் கட்டுரைகள் சிங்கள, ஆங்கில மொழிகளில் மொழிபெயர்பாகியுமுள்ளன. அவரை அவரது இல்லத்தில் சந்தித்தேன்.


கேள்வி: 1978ம் ஆண்டில் ‘அரியணை ஏறிய அரச மரம்’ எனும் தலைப்பிலான உருவகக் கதை மூலம் ஈழத்துத் தமிழ் இலக்கியப் பரப்பில் அரியணை ஏறியுள்ள நீங்கள் அண்மைக் காலங்களாக இலத்திரனியல் ஊடகங்களில் கூடிய பங்களிப்பு வழங்கி வருவதை அவதானிக்க முடிகின்றது. இது பற்றி சற்று விளக்க முடியுமா?


பதில்: முதற்கண் தினகரன் வாரமஞ்சரிக்கு என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்ள வேண்டும். ஏனெனில், எனது முதல் படைப்பிலக்கியமான ‘அரியணை ஏறிய அரச மரம்’ எனும் உருவகக் கதையை தினகரன் வாரமஞ்சரி 1978ம் ஆண்டில் பிரசுரித்தது. என்னால் எழுதப்பட்ட முதலாவது கதையே தேசிய பத்திரிகையொன்றில் பிரசுரமானதால் ஏற்பட்ட உத்வேகம் தொடர்ந்தும் எழுதக்கூடிய மனோநிலையை என்னுள் உருவாக்கியது. அதிலிருந்து தினகரன் உட்பட இலங்கையில் அனைத்து தேசிய பத்திரிகைகளிலும், சஞ்சிகைகளிலும் எழுதலானேன். 1980களில் இந்தியாவிலிருந்து வெளிவந்த தீபம், கனையாழி, தாமரை, கலைமகள் போன்ற தரமான இலக்கிய சஞ்சிகைகளிலும் 2000களிலிருந்து எம்மவர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் வெளிவரக்கூடிய பத்திரிகைகளிலும், சஞ்சிகைகளிலும் கட்டுரைகள், ஆய்வுகள் போன்றவற்றை எழுதினேன். புலம்பெயர் நாடுகளில் என் எழுத்துகளுக்கு வரவேற்புக் கிடைத்தன. இதையடுத்தே 2008ம் ஆண்டிலிருந்து அதிகமாக இணையத்தளங்களில் எழுத ஆரம்பித்தேன். தற்போது அதிகமாக இணையத்தளங்களிலேயே எழுதிவருகின்றேன்.


கேள்வி: அண்மையில் சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவியொருவர் எழுதியிருந்த ஓர் ஆய்வுக் கட்டுரையில் உங்கள் ஆக்கங்கள் 183 இணையத்தளங்களில் வெளிவந்துள்ளதாக ஆய்வு ரீதியாக குறிப்பிட்டிருந்தார். இதைப் பற்றி சற்று விளக்க முடியுமா?


பதில்: உண்மைதான். அவர் குறிப்பிட்ட ஆய்வினை 2010ம் ஆண்டு இறுதியில் மேற்கொண்டார் என நினைக்கின்றேன். அக்காலத்தில் சர்வதேச ரீதியில் வெளிவரும் 183 இணையத்தளங்களிலும், வலைப்புகளிலும் என் ஆக்கங்கள் இடம்பெற்றிருந்தன. அதற்காக நான் அத்தனை இணையத்தளங்களுக்கும் நேராக எழுதினேன் என்று பொருள்படாது. குறிப்பிட்ட சில இணையத்தளங்களைத் தேர்ந்தெடுத்து அவற்றுக்கு மாத்திரமே நேரடியாக எழுதிவருகின்றேன். பின்பு என் கட்டுரைகள் ஏனைய இணையத்தளங்களில் மீள் பிரசுரம் செய்யப்படுகின்றன. இப்போதைய நிலையில் 230க்கும் மேற்பட்ட இணையத்தளங்களில் எனது ஆக்கங்கள் பிரசுரமாயுள்ளன.


கேள்வி: இணையத்தளங்களில் மாத்திரமா தற்போது எழுதிவருகின்றீர்கள்?


பதில்: இல்லை. இலங்கை, இந்தியா மற்றும் புலம்பெயர் நாடுகளிலுள்ள அச்சு ஊடகங்களிலும் எழுதிவருகின்றேன். ஆனால், இலங்கை, இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், பிரித்தானியா, நோர்வே, சுவிச்சர்லாந்து, பிரான்ஸ், அவுஸ்திரேலியா, ஜெர்மனி, ஐக்கிய அமெரிக்கா, கனடா, தென் ஆபிரிக்கா, மொரிசியஸ் தீவுகள் போன்ற நாடுகளை தளமமைத்துக் கொண்டு இயங்கும் இணையத்தளங்களில் அதிகளவில் எழுதிவருகின்றேன்.


கேள்வி: இணையத்தளங்களில் எத்தகைய ஆக்கங்களை நீங்கள் எழுதிவருகின்றீர்கள்?


பதில்: ஒரு குறிப்பிட்ட தலைப்பை வரையறுக்க முடியாது. இலங்கையில் அரசியல், இலங்கையில் தேர்தல்கள், இலங்கையில் பொருளாதாரம், வரலாறு, சமூகம் என நல்லுறவு தொடர்பான ஆக்கங்களையும் மற்றும் சர்வதேச நினைவு தினங்கள், சர்வதேச முக்கியத்துவமிக்க விடயங்கள், இலங்கை எழுத்தாளர்கள், கலைஞர்கள், ஊடகவியலாளர்கள் பற்றிய அறிமுகம் போன்ற பல்வேறு துறைகளைப் பற்றிய விரிவான ஆக்கங்களை ஆதாரபூர்வமாக எழுதிவருகின்றேன். இதன் காரணமாகவே எனது ஆக்கங்களுக்கு கூடிய வரவேற்பு கிடைத்தது வருகின்றது. இதனை வாசகர்களின் பின்னூட்டங்கள் மூலமாக அறிந்துகொள்ள முடிகின்றது.


கேள்வி: அச்சு ஊடகங்களில் எழுதுவதற்கும், இணையத்தளங்களில் எழுதுவதற்கும் எத்தகைய வேறுபாட்டினை நீங்கள் உணர்கின்றீர்கள்?


பதில்: பொதுவாக அச்சு ஊடக எழுத்துக்கும், இணைய ஊடகங்களில் உள்ள எழுத்துக்கும் என்னைப் பொறுத்தவரையில் பாரிய வித்தியாசங்கள் காணப்படுவதில்லை. ஆனால், அச்சு ஊடகங்கள் எனும் போது சில தடையீடுகளை சந்திக்க வேண்டியுள்ளது. குறிப்பாக இலங்கையைப் பொறுத்தமட்டில் இன்னும் இலத்திரனியல் ஊடகங்களின் அறிமுகம் பெரிதளவிற்கு இடம்பெறவில்லை. இலங்கையில் 2008ம் ஆண்டின் பின்பே ஓரளவிற்கு இணையப்பாவனை அதிகரித்து வருகின்றது. இருப்பினும் இலங்கையில் வாழக்கூடிய தமிழ் பேசும் மக்களிடையே இன்றுவரை கணினிப் பாவைனையும், இணையப்பாவனையும் குறைவாகவே உள்ளது. அதேநேரம், கணினி, இணையம் ஆகியவற்றில் தமிழ்மொழிப் பிரயோகமும் குறைவாகவேயுள்ளது. இத்தகைய நிலையில் இலங்கை தமிழ்மொழி எழுத்தாளர்கள் கூடுதலான அளவிற்கு அச்சு ஊடகங்களையே பயன்படுத்த விளைகின்றனர்.


இணைய ஊடகங்களுக்கு ஆக்கங்களை அனுப்பும்போது மின்னஞ்சல் மூலமாக ஆக்கங்களை அனுப்ப முடிவதினால் தாமதமின்றி அவை பிரசுரமாகக் கூடிய வாய்ப்புகள் இருக்கின்றன. இணையங்களில் செய்திகள் மாத்திரமல்ல, இலக்கியக் கட்டுரைகள், ஆய்வுக் கட்டுரைகள், அரசியல் கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள், நாவல்கள் போன்ற இலக்கியப் படைப்புகளையும் பிரசுரித்து வருகின்றன. இதற்கென தனி வளையமைப்புக்களும் உள்ளன. திரட்டிகளின் உதவி கொண்டு தேடல்கள் மூலம் எமக்குத் தேவையானவற்றை அடைந்து கொள்ள முடியும். மேலும், குறித்த ஆக்கங்களை எத்தனை ஆண்டுகள் சென்றாலும் கூட வாசித்தறிந்து கொள்ளக்கூடியதாக இருக்கும். நவீன தொழில்நுட்ப மாற்றத்துடன் இணையங்களும் பல புதிய பரிமாணங்களை பெற்று வருகின்றன. இணையத்தளத்தின் மூலம் மின்னணுக் கல்வி (E-learning) மின்னணுக் கருத்தரங்கம்  (E-conference) ஆகியவைகூட இன்று நடைமுறையில் உள்ளன. பல்லூடகக் கருவியாகவும் (Multi media)  கணனி இன்று பரிணமித்துள்ளது. எனவே எழுத்து, பேச்சு, படம் என்று பலவகைப்பட்ட ஊடகங்கள் வழியே ஒருவர் உலகெங்கும் தொடர்பு கொள்ளக்கூடிய ஒரு பிரமாண்டமான வளர்ச்சி இன்று ஏற்பட்டுள்ளது. இவற்றை எம்மவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.


கேள்வி: இலங்கையில் தமிழ் இணையப்பாவனை குறைவாக உள்ளது எனக் குறிப்பிட்டீர்கள். இதற்கான காரணம் யாதாக இருக்கலாம்?


பதில்: உண்மை. இதற்குப் பல காரணங்கள் உள்ளன. உலகில் டிசம்பர் 1990 கணக்குப்படி ஒரே ஒரு இணையத்தளம் தான் இருந்தது. 2011 மார்ச்; மாத கணக்குப்படி இணைய உருண்டையின் மொத்தப் பாவனையாளர்களின் எண்ணிக்கை 2,095,006,005 ஆகும். உலக அளவில் 30.2% வீதமாக இணையத்தளப் பாவனை அதிகரித்துள்ள அதேநேரத்தில் இலங்கையில் 8.3 வீதமாகவே காணப்படுகிறது. ஸ்ரீலங்கா டெலிகொம்மினது பதிவுகளுக்கமைய உலக வங்கியால் வெளியிடப்பட்ட அறிக்கையில் 2010 முதல் ஒன்பது மாதங்களில் இலங்கையில் இணையத்தள பாவனையாளர்கள் 1,776,200 என அறிய முடிகின்றது. இது மொத்த சனத்தொகையின் 8.3% ஆகும்.


தமிழ்மொழி பேசும் எம்மவர்களிடையே இணையப்பாவனையை விடுத்து கணினிப் பாவனை கூட வெகு குறைவாகவே உள்ளது. மறுபுறமாக 2007ம் ஆண்டுவரை இலங்கையில் இணையப்பாவனையாளர்கள் தரவிரக்கம் செய்யும் அளவிற்கும், பயன்படுத்தப்படும் தொலைபேசி நேர அளவிற்கும் கட்டணங்களை செலுத்த வேண்டியிருந்தமையினால் இணையத்தைப் பயன்படுத்தும் ஒருவருக்கு அதிகமான பணத்தினை கட்டணமாகச் செலுத்த வேண்டிய நிலையிருந்தது. 2007ம் ஆண்டின் பின்பு இலங்கையில் ஸ்ரீலங்கா ரெலிகொம் புரோட்பேன்ட் இணைய இணைப்பினை அறிமுகப்படுத்தியதையடுத்து மாதாந்தக் கட்டணத்தை மாத்திரமே அறவிடும் முறை அறிமுகமாயிற்று. அதேநேரம், இலங்கையில் தனியார் நிறுவனங்களும் போட்டிப் போட்டுக் கொண்டு இணைய இணைப்பின் பல்வேறு சலுகைகளை வழங்கத் தொடங்கின. இந்தடிப்படையில் இணையப்பாவனையாளர்ளுக்கு ஏற்பட்ட வசதிகள் காரணமாக 2007ம் ஆண்டையடுத்து இணையப்பாவனை அதிகரித்துள்ளது. இன்று அரசாங்கம் பாடசாலை மட்டத்தில் கணினிக் கல்வியை ஊக்குவித்துவரும் அதேநேரத்தில் தனியார் நிறுவனங்களும் கணினிக் கல்வியைப் பெற்றுக் கொள்ளக்கூடிய பல்வேறு வசதிகள் வாய்ப்புகளை வழங்கி வருகின்றது. எனவே இலங்கையில் கணினிப் பாவனையும் அதிகரித்து வருகின்றது.


மேற்குலக நாடுகளுடன் ஒப்பிடும்போது இலங்கை மாணவர்களின் கணினிப் பாவனை குறைவாகக் காணப்பட்டாலும் கூட இன்னும் ஐந்தாண்டுகளில் வியக்கத்தக்க வளர்ச்சியைக் காணுமென்பது ஆய்வாளர்களின் கருத்தாகும். எனவே எதிர்காலத்தில் இணையங்கள் முக்கியமான ஊடகமாக திகழப் போகின்றது என்பது சந்தேகமில்லை. இதனைக் கருத்திற்கொண்டு எமது இலங்கை எழுத்தாளர்களும் தத்தமது எழுத்துக்களை இணையத்தளங்களுடன் இணைத்துக்கொள்ள எத்தனித்தல் வேண்டும்.


கேள்வி: அண்மைக்காலமாக தமிழ்விக்கிப்பீடியாவுடன் நெருக்கமான உறவினை பேணிவருவதாகவும் ஓராண்டுக்குள் 7500 கட்டுரைகளை எழுதி தமிழ் இலத்திரனியல் உலகில் ஒரு சாதனையைப் புரிந்ததாகவும் அறிகின்றோம். இது பற்றி சற்று விபரிக்க முடியுமா?


பதில்: 21ஆம் நூற்றாண்டின் இரண்டாவது தசாப்தம் ஆரம்பித்துள்ள நிலையில்  இணையக் கலைக்களஞ்சியமாக விளங்கும் விக்கிப்பீடியாக உலகளாவிய ரீதியில் 283 மொழிகளில் சுமார் 2 கோடி 61 இலட்சம் தகவல்களை தன்னகத்தே கொண்டு இணைய வசதியுள்ளவர்களால் நினைத்த நேரத்தில் தேவைப்படும் விடயங்களை இலகுவாகவும்,  இலவசமாகவும் பெற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்பினை வழங்கி வருகின்றது. இணையக் கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியா பொது உள்வாங்கியாக காணப்படுவதினால் புத்திஜீவிகளுக்கும்,  கற்றவர்களுக்கும்,   தெரிந்தவர்களுக்கும் தாம் தெரிந்தவற்றை தரவேற்றம் செய்யக் கூடிய வாய்ப்பினை வழங்கி வருகின்றது. இந்நிலையில் 2010 நவம்பர் மாதத்தில் தமிழ் விக்கிப்பீடியாவுடன் எனக்கு உறவு ஏற்பட்டது. தமிழ்விக்கிப்பீடியாவில் கட்டுரைகளை பதிவேற்றம் செய்வதற்கான வாய்ப்பு திறந்த நிலையில் உள்ளதினாலும் விக்கிப்பீடியாவில் அதிகார நிர்வாக தரத்திலுள்ளவர்களும் விக்கிப்பயனர்களும் திறந்த நிலையில் பழகி எனது எழுத்துக்கு ஊக்கம் தந்தமையினாலும் என்னை அறியாமலேயே சரியாக ஓராண்டுக்குள் 7500 கட்டுரைகளை பதிவேற்றம் செய்தேன். விக்கிப்பீடியா குழுமத்தில் தமிழ் விக்கிப்பீடியாவில் நான் 2010 நவம்பர் 14ம் திகதி இணைந்தேன். 2011 நவம்பர் 13,  வரையிலான ஒரு வருட காலப்பகுதியில் 7500 கட்டுரைகளை என்னால் எழுத முடிந்தது. இன்றைய திகதி வரை (சனவரி 24, 2012) தமிழ்விக்கிப்பீடியாவில் சிறியதும், பெரியதுமான 8710 கட்டுரைகளை நான் எழுதியுள்ளேன்.


கேள்வி: இலங்கை மாணவர்களுக்கு விக்கிப்பீடியா எந்தளவிற்கு பயன்பாடுள்ளதாக நீங்கள் கருதுகின்றீர்கள்?


பதில்: இலங்கையில் மாணவர்களுக்கான இன்றைய கல்வித்திட்டம் தேடல்களுக்கான வாய்ப்பினை அதிகளவில் ஊக்குவிக்கின்றது. விக்கிப்பீடியா ஒரு கலைக்களஞ்சியமாகும். எனவே மாணவர்களுக்குத் தேவைப்படக்கூடிய பல்வேறுபட்ட பாட விடயங்களையும்,  பொது விடயங்களையும் தமிழ்மொழி மூலமாகவே கற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்புண்டு. தமிழ்விக்கிப்பீடியாவை தமிழ் நாட்டில் வாழக்கூடிய மாணவர்கள் பெருமளவிற்கு பயன்படுத்தி வருகின்றனர். இதனால் மொழிப் பிரயோகத்தில் சில சிக்கல்கள் உருவானாலும்கூட அவற்றை நிவர்த்தி செய்யக்கூடிய வகையில் இலங்கை மாணவர்களுக்கு ஏற்ற சொற்பிரயோகங்கள் சேர்க்கப்பட்டு வருகின்றன. எனவே மாணவர்களின் கற்கையுடன் தொடர்பான பல்வேறுபட்ட தகவல்களை விக்கிப்பீடியா மூலமாக பெற்றுக்கொள்ள முடியும். இன்று தமிழ்விக்கிப்பீடியாவில் 43,900 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. அதேநேரத்தில் ஆங்கில விக்கிப்பீடியாவில் 39 இலட்சத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. உலகளாவிய ரீதியில் இணையப்பாவனையில் விக்கிப்பீடியா இன்று 5வது இடத்தில் உள்ளது. அதேநேரம் தமிழ்விக்கிப்பீடியா நாளொன்று ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டோரால் பார்வையிடப்படுகின்றது. எனவே கல்வியைத் தேடும் மாணவர்களுக்கும், பொது அறிவு உட்பட பல்வேறு தகவல்களையும் தேடும் எமது இளைய தலைமுறையினருக்கும் இலவசமான முறையில் இவற்றைக் கற்றுப் பயன்பெறலாம்.


கேள்வி: இலங்கையில் வாழக்கூடிய தமிழ் முஸ்லிம் எழுத்தாளர்களுக்கு நீங்கள் எதனைக் கூற விரும்புகின்றீர்கள்?


பதில்: மிகவும் கடினமான ஒரு வினா. இலங்கையில் தமிழ் எழுத்தாளர்கள் மற்றும் ஆய்வாளர்கள் இன்னும் மரபு ரீதியிலான வழிகளிலேயே அதிகளவில் நாட்டம் செலுத்தி வருகின்றனர். இலங்கைத் தமிழ் எழுத்தாளர்களுக்கு பத்திரிகைகளையும், சஞ்சிகைகளையும் விட்டால் வேறு ஊடகங்களில்லை என்று கூறுமளவிற்கு மரபு ரீதியான அணுகுமுறைகளிலேயே இன்னும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றனர். இதன் காரணமாக மரபு ரீதியான வழிமுறைகளைப் பேணி வந்த பத்திரிகைகளும், சஞ்சிகைகளும் இன்றும் அதே முறைகளை கடைபிடித்து வருவதினால் குறிப்பிட்ட சில எழுத்தாளர்கள் மாத்திரமே எழுத்துலகில் சோபித்து வர முடியும். இணையத்தள ஊடகங்களின் வளர்ச்சி ஏற்படும்போது இத்தகைய கட்டுப்பாடுகள் தகர்த்தப்படுவதினால் புதிய எழுத்தாளர்கள் வளர்ச்சியடையக் கூடிய வாய்ப்பு உருவாகின்றது. சிலநேரங்களில் எழுத்துக்கள் தரமின்றிப் போய் விடலாம் என்று விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும்கூட,  இதுவொரு புரட்சிகரமான மாற்றமாக அமைய இடமுண்டு.  காலமாற்றங்களுக்கேற்ப எமது எழுத்தாளர்களும், படைப்பாளர்களும் தம்மை மாற்றிக் கொள்ள வேண்டும். மரபு ரீதியான வழிகளிலே தொடர்ந்தும் ஆர்வம்காட்டி வராது புதிய தலைமுறையினரின் போக்குகளுக்கிணங்க தமது எழுத்துக்களை மாற்றியமைத்துக் கொள்ள வேண்டிய காலகட்டத்தில் நாம் உள்ளோம். எனவே எமது சிந்தனைகளில் மாற்றம் தேவை. எமது எழுத்துக்களில் மாற்றம் தேவை. நாம் விரும்பியோ விரும்பாமலோ 21ம் நூற்றாண்டில் இரண்டாம் தசாப்தத்தில் வாழும் நாம் இலத்திரனியமயமாக்கப்பட்ட நவீன தொழில்நுட்பத்துக்குள் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இன்னும் சில ஆண்டுகள் செல்லும்போது எமது தலைமுறையினர் இந்த நவீன தொழில்நுட்ப யுகத்தையே முழுமையாக ஏற்றுக்கொள்ளப் போகின்றார்கள். இதனைக் கருத்திற்கொண்டு எமது போக்கினையும் நாம் மாற்றியமைத்துக்கொள்ள எத்தனிக்க வேண்டும். சற்று கடினமாகக் காணப்பட்டாலும் இது தூரநோக்கின் நிதர்சனம்.

நேர்காணல்: இக்பால் அலி
தினகரன் வாரமஞ்சரி :12.பெப்ரவரி.2012
* http://www.thinakaran.lk/Vaaramanjari/2012/02/12/?fn=f1202122

No comments:

Post a Comment