Friday, 24 December 2010

அனுபவம் : இதுவொரு படிப்பினையாக அமையட்டும். – புன்னியாமீன்

எந்தவொரு விடயத்தையும் நாளை செய்வோம்,  நாளை மறுநாள் செய்வோம்,  அடுத்தவாரம் செய்வோம்,  அடுத்த மாதம் செய்வோம்... என ஒத்திவைக்கும் பழக்கம் எம்முள் பலரிடம் காணப்படுகின்றது.

இதற்கு நானும் விதிவிலக்கானவனல்ல.

இவ்வாறு காலம் கழிப்பதனால் என் வாழ்க்கையில் ஏற்பட்ட ஒரு நிஜ சம்பவத்தை உங்களுடன் பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகின்றேன்.

எனது வலப்பக்கக் கண்ணில் வெள்ளை படர்தல் (கெற்றாக்) சுமார்  மூன்று நான்கு வருடங்களுக்கு முன்பே ஏற்பட்டுவிட்டது. அதேநேரம்,  நான் ஒரு நீரிழிவு நோயாளி. சுமார் 17 வருடங்களாக நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு கடந்த நான்கு ஆண்டுகளாக இன்சுலிங் ஊசி போட்டுக் கொண்டிருக்கின்றேன். ஒரு நீரிழிவு நோயாளி என்ற அடிப்படையில் கண்,  சிறுநீரகம்,  இதயம் போன்றவற்றில் ஏற்படக்கூடிய நோய்களுக்கு நான் கூடிய கரிசனை காட்டியிருக்க வேண்டும்.என் வலக் கண்ணில் வெள்ளை படர்தல் ஏற்பட்ட போதிலும்கூட, இடக்கண் நூறு வீதம் தெளிவாக இருந்தது. இதனால் வாசிப்பதிலோ அல்லது ஏனைய விடயங்களிலோ எனக்கு சிரமம் இருந்ததாக தெரியவில்லை. இதனால் கடந்த மூன்று நான்கு வருடங்களாக வலக் கண்ணில் காணப்பட்ட வெள்ளை படர்தலை சத்திரசிகிச்சை மூலமாக அகற்ற வேண்டும் என நினைத்தாலும்கூட,  என் உதாசீனப் போக்கினால் அதனைப் பிற்போட்டே வந்துள்ளேன். சுமார் ஒன்றரை வருடங்களுக்கு முன்பு கண் சிகிச்சை நிபுணர் டாக்டர் சீமன் அவர்களிடம் சத்திரசிகிச்சை செய்யவென சென்று இரத்தத்தின் குளுகோசின் அளவு கூடியதினால் டாக்டர் அதனைப் பிற்போட்டார். நானும் அதனை பெரிதுபடுத்தவில்லை.

இந்நிலையில் என் வலக் கண்ணில் முழுமையாகப் பார்வையிழந்த நிலையில் வலியும் ஏற்படத் தொடங்கியது. இறுதியில் சில வாரங்களுக்கு முன்பு டாக்டர் சீமனிடம் கண் சத்திரசிகிச்சைக்காக சென்றேன். என் கண்ணைப் பரிசீலித்த டாக்டர் சீமன் ''சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டாலும் என் பார்வை மீளத் திரும்பும் நிகழ்த்தகவு ஐம்பதுக்கு ஐம்பது தான்'' எனக் கூறினார். எப்படியோ சத்திரசிகிச்சைக்குட்படுத்தப்பட்டேன். இறைவனின் அருளால் எனது பார்வை மீளக் கிடைத்தது. இருப்பினும் இன்னும் பார்வை நிழலுருப் பரிமாணத்தில் அமைந்துள்ளமையினால் அதற்காக நான் வைத்திய சிகிச்சை செய்து கொண்டிருக்கின்றேன்.

இங்கு முக்கிய விடயம் என்வெனில் என் வலக் கண்ணில் பார்வையிழந்ததும் வலக்கண் புலன்நரம்புகளும் படிப்படியாக செயலிழக்க ஆரம்பித்துள்ளன. இதை எம்மால் உணர்ந்துகொள்ள முடியாது. உரிய சத்திரசிகிச்சையை பிற்போடாமல் உரியகாலத்திலேயே நான் மேற்கொண்டிருப்பேன் எனில் இத்தகைய பாதிப்புகளை தவிர்த்திருக்கலாம்.

ஒரு காரியத்தை பிற்போடுவதினால் நாம் பல இழப்புக்களை சந்திக்கின்றோம். அதில் உதாரணத்திற்காகவே எனது அனுபவத்தில் ஒரு சிறு துளியினை இவ்விடத்தில் பகிர்ந்து கொண்டேன்.  ஏனெனில்,  இது அனைவருக்கும் ஒரு படிப்பினையாக அமைய வேண்டும் என்பதற்காகவே.

என் கண் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்படுவதற்கு முன்பு இது பற்றி எழுதிய கட்டுரையொன்றை நான் கீழே இணைத்துள்ளேன். இக்கட்டுரை இலங்கையில் ஞாயிறு தினக்குரலிலும், பல இணையத்தளங்களிலும் பிரசுரமானதாகும்.


கவனயீனங்கள், அறியாமை தேகாரோக்கியத்தைப் பாதிக்கும் 
- புன்னியாமீன்

உலகில் வாழும் ஒவ்வொரு மனிதனும் அங்கசம்பூர்ணமாகவும்,  தேகாரோக்கியமாகவும் வாழவே விரும்புகின்றான். பொதுவாக தேகாரோக்கியமாக வாழ்ந்தால் கூட,  சில சந்தர்ப்பங்களில் அவனின் சில கவனயீனங்கள் மற்றும்  அறியாமை காரணமாக சில தேகாரோக்கிய பாதிப்புகள் அவனில் செல்வாக்குச் செலுத்தத் தொடங்குகின்றது. இதன் காரணமாக அங்கசம்பூரணமாகவும், தேகாரோக்கியமாகவும் பிறந்த ஒருவன் தனது சில அங்கங்களை இழக்கவும், நோய்வாய்ப்படவும் ஏதுவாக அமைகின்றது. மறுபுறமாக இயற்கையிலே சிலர் அங்கவீனர்களாக, இயற்கை நோயாளிகளாகப் பிறப்பதும் உண்டு. இந்த பிறவி நிலை காரணமாக உடல் ஊனம், செவி ஊனம், பார்வை ஊனம்,  மந்தபுத்தி நிலை போன்ற பல நிலைகள் ஏற்படுகின்றன. இயற்கையாகவோ அன்றேல் விபத்துக்கள்,  கவனயீனங்கள்; அறியாமைகள் காரணமாகவோ ஏற்படக்கூடிய அங்கவீன நிலைகளோ மனிதன் என்ற வகையில் எம்மால் குறைவான நிலையில் மதிப்பிடுவது தவறாகும். அங்கவீனர்களும் மனிதப் பிறவிகளே. அவர்களுக்கும் சமூகத்தில் சமவுரிமை வழங்கப்பட வேண்டும் என்பதே மனிதாபிமான நிலை.

"சமூகத்தில் அவர்களாலும் உயர்ந்த நிலைக்கு வரமுடியும். சமூகத்தில் அவர்கள் குறை பிறவிகள் அல்லர்" போன்ற எண்ணக்கருக்களை விளைவிப்பதற்காக வேண்டி குறித்த அங்கவீனம் தொடர்பாக தேசிய, சர்வதேச ரீதியில் விழிப்புணர்வுகளை ஏற்படுத்துவதற்காக வேண்டி பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதையும் அவதானிக்கின்றோம். உலகிலே மனிதர்களாக பிறந்து விட்ட ஒவ்வொருவரும் தாம் பெறும் அறிவு.  அனுபவம்.  ஆற்றல் என்பவற்றினூடாக விழிப்புணர்ச்சி பெறும் போது மனிதனின் தேவைகளும் துலக்கம் பெற்று ஈடேறி வருவதை நாம் கண்கூடாக காண்கின்றோம்.

இந்த அடிப்படையில் விழிப்புலனில் ஏற்படக்கூடிய குறைபாடு காரணமாக பார்வையை இழந்துள்ளோரை கௌரவிக்கவும், அவர்கள் பற்றிய உணர்வுகளை ஏற்படுத்தவும் அத்தகையோருக்கு உதவிகளை வழங்குவதற்கும் ஒக்டோபர் மாதம் 15ஆம் திகதி சர்வதேச விழிப்புலனற்றோர் தினம் அல்லது வெள்ளை பிரம்பு தினமாக அனுஸ்டிக்கப்படுகின்றது.

பொக்கிஷமாகப் பாதுகாக்க வேண்டிய பொருட்களைக் கண் மாதிரி பாதுகாக்க வேண்டும் எனச் சொல்வது வழக்கம். கண் என்பது அத்தனை பத்திரமாக,  பொக்கிஷமாகப் பாதுகாக்கப்பட வேண்டியதொரு உறுப்பாகும். நமது உள்ளத்து உணர்ச்சிகளைப் பிரதிபலிப்பவை கண்களே. கண்களில் உண்டாகிற பிரச்சினைகள் ஆரோக்கியத்துக்கு மட்டுமின்றி,  அழகுக்கும் உகந்ததல்ல.

இந்த உலகத்தைக் கண்டு இரசிப்பதற்கு நமக்கு அளிக்கப்பட்டிருக்கும் அதிசய உறுப்பு கண்ணாகும். மனிதனின் கண் என்பது ஒளியை உணர்வதற்கு உதவும் ஓர் உறுப்பாகும். வெவ்வேறு விதமான ஒளியை உணரும் உறுப்புகள் பல விலங்குகளிடையே காணப்படுகின்றன. மிக எளிய கண்கள் சுற்றுப்புறத்தில் உள்ள ஒளி அல்லது இருளை மட்டும் கண்டு உணரவல்லவை. இன்னும் மேம்பட்ட (complex) கண்கள்,  காட்சிகளைப் பார்க்கும் திறன் அளிக்கக்குடியவை. பாலூட்டிகள்,  பறவைகள், ஊர்வன,  மீன்கள் உட்பட்ட பல மேல்நிலை உயிரினங்கள் இரு கண்களைக் கொண்டுள்ளன. இவ்விரு கண்களும் ஒரே தளத்தில் அமைந்து ஒரே முப்பரிமாணப் படிமத்தை (binocular vision) காண உதவுகின்றன. மனிதர்களின் பார்வையும் இவ்வாறானதே; இரு கண்களும் வெவ்வேறு தளங்களில் அமைந்து இரு வேறு படிமங்களை (monocular vision) காண உதவுகின்றன. இந்தக் கண்ணகளில் ஏற்படக்கூடிய பாதிப்புக்களே பார்வையீனத்தை ஏற்படுத்துகின்றன. இத்தகைய பார்வையீனம் இயற்கையாக அமையலாம். அன்றேல் விபத்துக்கள்,  நோய்கள் காரணமாக அமையலாம்.

நமது கண் ஒரு நிழற்படக்கருவியைப்  போன்று இயங்குகிறது. ஒளியின் உதவியுடன் ஒரு நிழற்படக்கருவி   பொருட்களைப் படம் பிடிப்பதைப் போல,  நமது கண்ணும் ஒளியின் உதவியுடன் பொருட்களின் உருவத்தை கணப்பொழுதில் படம்பிடித்து,  மனதில் பதிவு செய்து,  பின்பு அதை மூளையில் விருத்தி செய்கிறது. கண்ணின் அனைத்து பாகங்களும் ஒருங்கிணைந்து,  ஒரு குழுவைப் போன்று இயங்கி நமக்குப் பார்வை அளிக்கிறது. இதில் விழிப்படலம் என்ற பாகம் முக்கிய பங்கு வகிக்கிறது. கருமையான ‘கண் மணி”க்குள் நுழையும் ஒளிக்கதிர்களை, விழிப்படலம் திசைதிருப்புகிறது. திசை திரும்பிய ஒளிக்கதிர் ‘கண்மணி”க்குப் பின்னால் உள்ள ‘வில்லையைச் சென்றடைகிறது. இந்த வில்லை தனது உருவத்தை மாற்றிக் கொண்டு,  தொலைவில் மற்றும் அருகில் உள்ள பொருட்களின் மீது ஒளிக்கதிர்களை ஒருமுனைப்படுத்துகிறது. இதனாலேயே ஒரு பொருள் எமக்குப் புலப்படுகிறது.

கண்பார்வையற்ற விழிப்புலனற்ற மானிடர்பால் எமது கவனம் ஈர்க்கப்பட வேண்டிய நல்லதோர் வாய்ப்பினை உலகுக்கு துலாம்பரமாக வெளிச்சமிட்டு காட்டுவதற்காகவே இவ்வெள்ளைப் பிரம்பு தினம் உலகளாவிய ரீதியில் அனுஸ்டிக்கப்படுகிறது. வெள்ளைப் பிரம்பு தினம் என்றாலே மூக்கின் மீது விரல் வைத்து சிந்திப்பவர்கள் இதன் தாற்பரியத்தை உணராதிருப்பது சற்று கவலைக்குரியதாயினும் இன்றைய நிலையில் வெள்ளைப் பிரம்பு தினம் சமூக ரீதியில் மேலெடுக்கப்பட்டு எல்லோரது கவனத்தையும் ஈர்த்து வருவதும் அவதானிக்கத்தக்கதொன்றாகும்

மூன்றாம் உலக நாடுகளை விட மேற்கத்தேய நாடுகளில் வெள்ளைப்பிரம்பு தினத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதைக் காண்கிறோம். ‘வெள்ளைப் பிரம்பு' உலக விழிப்புலனற்ற சம்மேளனத்தினால் 1969 ஒக்டோபர் 15 முதல் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. இவ்விடத்தில் இதன் பின்னணியினை நாம் ஆராய்வோமாயின் அது எம்மை இரண்டாவது உலக மகாயுத்தத்தின் இறுதிக்கு எம்மை இட்டுச் செல்கின்றது.

இந்த யுத்தத்தினை முடிவுக்கு கொண்டு வருவதற்கு அமெரிக்கா ஜப்பானில் ஹிரோஷிமாவிலும், நாகசாகியிலும் அணுகுண்டை வீசியது  உலக வரலாற்றால் மறக்க முடியாத ஒருகரை படிந்த நிகழ்வாகும். இன்றும் கூட இப்பகுதிகளில் பிறக்கின்ற குழந்தைகள் பல குறைபாடுகளுடனேயே பிறப்பதை நாம் செய்திகள் மூலம் அறிகின்றோம். அவற்றுள் முக்கியமான ஒன்றாக விழிப்புலன் அற்றோரின் நிலையினையும் காண்கின்றோம். இவ்வாறு பெருமளவினோர் ஜப்பானில் பார்வை இழக்கவே அதற்கான சிகிச்சையினை பெற்றுக்கொள்வதற்காக அவ்வேளை ஜப்பானில் பிரபல்யமாக இருந்த வைத்தியர் Hey யை மக்கள் நாடினர். தம்மை நாடி வந்தோரில் கூடியளவிலானோரின் பார்வையை வைத்தியரால் பெற்றுக்கொடுக்க முடியவில்லை. இத்தகையதொரு பரிதாபகரமான நிலைமையை எதிர்நோக்கிய வைத்தியர் Hey மனிதர்கள் என்ற வகையில் அவர்களையும் சமூகத்தில் நடமாட வைப்பதற்கு வழிதேடினார். அதன் பிரதிபலனாக உருவானதே வெள்ளைப் பிரம்பாகும். வைத்தியர் Hey யின் சிந்தனையில் விசையும் திசையும் (Mobility and Oriyantation)உதித்தது. ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு ஆபத்து ஏற்படாத வண்ணம் நகர்வதற்கு பயன்படுத்திய முறையில் வெள்ளைப் பிரம்பு மகத்துவம் பெற்றது.

வெள்ளைப் பிரம்பைப் பயன்படுத்துவோர் விழிப்புலனற்றோர் ஆவர். இவ்விழிப்புலனற்றோர்,  ஒரு இடத்திலிருந்து இன்னோர் இடத்திற்கு நகரும்போது அல்லது நடமாடும்போது அவர்களுக்கு பக்கத்துணையாக தாம் நகரும் இலக்கை நோக்கிய பயணத்திற்கும் வெள்ளைப் பிரம்பைப் பயன்படுத்துகின்றனர்.

எல்லாவற்றிற்கும் மேலாக,  விழிப்புணர்வு உள்ளோர் வெள்ளைப் பிரம்பினை பயன்படுத்தி வரும் ஒருவரை விழிப்புலனற்ற ஒருவர் என்று இனம் கண்டு கொள்ளவும்,  அவர்களுக்கு உதவுவதற்கும் வெள்ளைப்பிரம்பு உதவுகின்றது. இந்த இயந்திர யுகத்தில் தங்களுக்கென ஒரு துணையாக இவ்வெள்ளைப் பிரம்பை உருவாக்கி அதனை எங்களது கையிலேயே துணையாகத் தந்து எவரது உதவியுமின்றி தாமாகவே நகருவதற்கு இவ்வெள்ளைப் பிரம்பு ஒரு மனிதனாகவே உதவுலவது விழிப்புலனற்றோருக்குக் கிடைத்துள்ள ஒரு வரப்பிரசாதமாகும். இதற்கான உலக அங்கீகாரம் 1969 இல் கிடைத்தது.

கண்கள் சம்பந்தப்பட்ட சிலபொது விடயங்களை இவ்விடத்தில் தெரிந்து கொள்வது பயனுடையதாக இருக்கலாம்.

முக்கியமாக வரக்கூடிய கண் சம்பந்தமான நோய்கள்

கிட்டப் பார்வை,  தூரப் பார்வை,  பார்வை மந்தம்,  கண்ணில் சதை வளர்தல்,  கண்ணில் பூவிழுதல்,  கண்களில் உள்ள மெல்லிய நரம்புகளில் இரத்தம் உறைதல் காரணமாகப் பார்க்கின்ற பொருட்கள் கலங்களாகத் தெரிதல்,  கண்ணில் நீர்வடிதல்,  மாலைக்கண்,  வெளிச்சத்தைப் பார்க்க முடியாமை,  கண் கோளாறு தொடர்ந்து இருப்பதால்,  அதன் மூலமாக வரும் தலைவலி,  தொற்று நோய்க் கிருமிகள் மூலம் வரும் கண் நோய்,  மஞ்சள் காமாலை மூலமாக வரும் நோய்,  கண் கோளாறு மூலமாக தூக்கமின்மை,  வெள்ளெழுத்து என்னும் கண்பார்வைக் குறைவு இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.

******

இரண்டு கண்களுக்குள்ளும் பார்வையில் உள்ள வேற்றுமை சில சமயங்களில்,  ஒரு கண் கிட்டப்பார்வை,  தூரப்பார்வை அல்லது காட்டராக்ட் போன்றவற்றால் பாதிக்கப்பட்டிருந்தால் ஆம்ப்லையோபியா எனும் நோய் உருவாகலாம். சோர்வான அல்லது வலிமை குறைந்த கண்ணிலிருந்து,  மூளைக்குப் போதுமான அளவு தூண்டுதல் இல்லாத நிலையில்,  வலிமையான மற்றொரு கண் ஆதிக்கம் செலுத்துகிறது. இதனால் சோர்வான அல்லது ஆம்ப்லையோபியா-வினால் பாதிக்கப்பட்ட கண் மேலும் ஒடுக்கப்பட்டு,  இறுதியில் பார்வை இழக்க நேரிடலாம்.

*******
சூரியனிலிருந்து வெளிப்படும் UVB- கதிர்வீச்சு கண்ணின் வெளிபாகங்களைத் தாக்குகிறது; இதனால் கண்களில் எரிச்சல்,  வறட்சி,  வீக்கம் அல்லது புண்,  வயதுக்கு மீறிய தோற்றம் ஆகியவை ஏற்படலாம் . UVB- கதிர்வீச்சு கண்களுக்கு மட்டுமல்லாது,  தோலுக்கும் கேடு விளைவிக்கிறது;

*******
நமது கண்களுக்கு ஏற்படும் காயங்களில் குறைந்தபட்சம் 90% காயங்கள் தடுக்கப்படக்கூடியவை. அமெரிக்காவில்,  ஒற்றைக் கண்ணில் ஏற்படும் கண் பார்வையின்மைக்கு முதன்மைக் காரணம் கண்களில் ஏற்படும் காயங்களாகும்; இது உலகம் முழுவதும் கண் பார்வையின்மைக்கு இரண்டாம் காரணமாக விளங்குகிறது (முதற் காரணம் ‘காட்ராக்ட்” ஆகும்). இக்காயங்கள் முப்பது வயதிற்குட்பட்ட நபர்களில்,  பெருவாரியாகக் காணப்படுகிறது (57% ). கண் காயங்களுக்கான முக்கிய காரணங்கள் - வீட்டில் பயன்படுத்தப்படும் இரசாயனப் பொருட்கள்,  தொழிற்சாலைக் குப்பைகள்,  பாட்டரி அமிலம்,  விளையாட்டின் போது ஏற்படும் விபத்துகள்,  வாணவேடிக்கை,  UVB-  கதிர்வீச்சுகளுக்குத் தம்மை அதிக அளவில் வெளிப்படுத்திக் கொள்வது,  சரியான மேற்பார்வையின்றி வயதிற்குப் பொருந்தாத விளையாட்டு பொருட்களுடன் விளையாடுவது ஆகியவை. 20% கண் காயங்கள் தொழில் ரீதியாக ஏற்படுபவை; அவற்றுள் 95% காயங்கள் கட்டுமானப் பணியில் உள்ள ஆண்களுக்கு ஏற்படுகிறது.

*******

‘மயோபியா' என்பது ஒருவரது தூரப்பார்வையை பாதிக்கும் நிலையாகும். தூரத்தில் உள்ள பொருட்கள் மங்கலாக காணப்படுவது
இரு கண்களும் வெவ்வேறு திசைகளை பார்ப்பது போன்ற தோற்றம் இதன் அறிகுறியாகும். கண்களில் உள்ள குறைகளை சரிப்படுத்தக்கூடிய வில்லை கண்ணாடி அல்லது பார்வை வில்லை மயோபியா-வை சரிப்படுத்த உதவுகின்றன.

********

‘ப்ரெஸ்பயோபியா’ என்பது ஒருவரது கிட்டப்பார்வையை பாதிக்கும் நிலை. இதனால்,  ஒரு கலைந்த உருவம் பதிக்கப்பட்டு,  அது பின்னர் மூளைக்கு அனுப்பப்படுகிறது. அருகில் உள்ள பொருட்கள் மங்கலாக காணப்படுவது இரு கண்களும் வெவ்வேறு திசைகளை பார்ப்பது போன்ற தோற்றம் இந்நோயின் அறிகுறிகளாகும்.
கண்களில் உள்ள குறைகளை சரிப்படுத்தக்கூடிய வில்லைகள் கண்ணாடி அல்லது விழிவில்லைகளை பயன் படுத்துவதன் மூலம் இதனைக்கட்டுப்படுத்தலாம்.

********

குழந்தைகளிடம் தோன்றும் பார்வைக் குறைபாடுகளைக் கண்டறிதல்.
1)  வகுப்புப் பாடங்கள் கவனிக்கும் போது தலைவலி அல்லது களைப்பாக இருப்பது.
2)  கண்கள் அடிக்கடி கலங்கிக் காணப்படுவது.
3) இரண்டு கண்களிலும் பார்வை சீராக இல்லாமலிருப்பது.
4)  கடைக்கண் இமைகள் சிவந்து அல்லது வீங்கி இருப்பது.
5) கண் கட்டி அடிக்கடி வருவது.
6) சாதாரணமாக இருக்கும்போதோ அல்லது படிக்கும் போதோ கண்களில் நீர் வடிவது போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டால் உடனே டாக்டரைப் பார்க்க வேண்டும்.

********
கண்கள் இரண்டும் ஒரே நோக்குடன் இல்லாமல் ஒன்றுக்கொன்று முரண்பட்டு வெவ்வேறு திசைகளை  நோக்கி இருந்தால் அது மாறுகண் (Squint) எனப்படும். சிலர் இதை அதிர்ஷ்டத்தின் சின்னமாகக் கருதுகிறார்கள். சிலர் நாளடைவில் தானாகவே சரியாகிவிடும் என்று விட்டுவிடுகிறார்கள். இவை தவறான கருத்துக்களாகும். மாறுகண் நோய் உடனடியாகக் கவனிக்கப்படவேண்டிய ஒன்று. அதைத் தக்க சமயத்தில் சரி செய்யாவிட்டால் அந்தக் கண் பார்வையை இழந்துவிடும் அபாயம் உள்ளது. 10 வயதிற்குள் இந்தப் பிரச்சினையை சரி செய்ய வேண்டும். வயதாகியும் சிலர் மாறுகண்ணோடு நன்றாக இருப்பதுபோல்தான் தெரியும். ஆனால் அவரின் கண் நரம்புகள் பாதிப்படைந்திருக்கும். ஆகவே இதை உடனே கவனிப்பதே நல்லது.

******

கண்களில் கருவிழியில் வெள்ளையாகத் தெரிவதைத்தான் பூ விழுந்து விட்டது என்கிறோம். இது வந்தால்  உடனடியாக கண் மருத்துவரிடம் காட்ட வேண்டும். அது புரையாக இருக்கலாம். அல்லது கண்ணில் தோன்றும் புற்றுநோயாகவும்கூட இருக்கலாம்.

*******

விட்டமின் ஏ கண்பார்வையும் கண்ணுடன் தொடர்புடைய நோய்களுக்கும் சிறந்தது. முருங்கைக்கீரை,  முளைக்கீரை,  பொன்னாங்கண்ணிக்கீரை,  அவரைக்கீரை,  முருங்கைக்காய் போன்ற பச்சைக் காய்கறிகள்,  எளிதாகக் கிடைக்கக் கூடிய பப்பாளிப் பழம் போன்றவற்றில் விட்டமின் ஹஏ‘ போதிய அளவு உள்ளது. மேலும் மாம்பழம் கரட், பால்,  வெண்ணெய்,  முட்டை,  மீன்,  மீன் எண்ணெய் ஆகியவற்றிலும் இச்சத்து உள்ளது.

********

எமது கண்களைப் பாதுகாத்துக் கொள்ள இரவில் படுக்கைக்குப் போவதற்கு முன்பு கண்களையும்,  முகத்தையும் சுத்தமான தண்ணீர் கொண்டு கழுவ வேண்டும். எக்காரணத்திற்காகவும் அழுக்குத்துணி அல்லது பிறருடைய கண்களைத் துடைக்கப் பயன்படுத்திய துணி ஆகியவற்றைக் கொண்டு நம்முடைய கண்களைத் துடைக்கக் கூடாது.

*********

கண்நோய் அல்லது கண் வலி,  தூசு,  பிசிறு போன்றவை இருந்தால் கண்ட கண்ட மருந்துகளை கண்ணில் போடாமலும் காலதாமதமாகாமலும்  கண் மருத்துவரிடம் செல்ல வேண்டும்.

********

 கண் வெண்பகுதியை மூடும் இமை உள்பகுதி சிவத்தலும்,  அதில் வீக்கமும் ஏற்படுதல் அழற்சி என்று அழைக்கப்படுகிறது. இது திடீரென தோன்றி மறையும் தன்மை கொண்டது. இது தானே மறைந்தாலும் மருத்துவரின் சிகிச்சையும் சில சமயங்களில் தேவைப்படும்.
1. பொதுவாக இரண்டு கண்களும் பாதிக்கப்படும்,  ஒவ்வொரு கண்ணாக பாதிப்பு தொடங்கும்.
2. கண்ணின் வெண்மைப் பகுதியில் ரத்தக் குழாய்கள் நன்றாகத் தெரியும் அல்லது கண் சிவந்திருக்கும்.
3. கண் இமைகளும் லேசாக சிகப்பு நிறத்திலோ,  இளஞ்சிவப்பு நிறத்திலோ ஆகிவிடும்.
4. கண் பிசு பிசு வென்று ஒட்டிக் கொள்ளும்,  தூங்கி விழிக்கும்போது இது மோசமாக இருக்கும். கண்களில் இருந்து நீர் சுரந்து கொண்டே இருக்கும்.
5. கண் எரிச்சலோ,  வலியோ ஏற்படும்.
6. சில சமயங்களில் ஒளியால் கண்கள் கூசும்.
இத்தகைய நோய்க்குறிகள் கண்டோர் டாக்டரை அனுகி சிகிச்;சை பெறல் வேண்டும்.  நோயின் காரணத்திற்கு தகுந்தவாறு சிகிச்சை மாறுபடும். களிம்புகள்.  சொட்டு மருந்துகள் கொடுத்து கண் கிருமியை அகற்றலாம், மருந்து மாத்திரைகள் மூலம் ஒவ்வாமையால் ஏற்படும் நோய்க்குறிகளை தீர்க்கலாம்.

*******

கண்கள் சிவந்தாலே அது கண் இமை அழற்சி என்று கருத வேண்டிய அவசியமில்லை. கண்ணின் உள்ளே திடீரென அழுத்தம் அதிகரிப்பது Acute Angle Closure Glaucoma எனப்படும். இதனாலும் கூட கண்கள் விரைவில் சிவப்பு நிறமாக மாறும். ஆரம்ப நிலையிலேயே அழுத்தம் குறைக்கப்பட்டால் பார்வை விரைவில் பூரண குணமடையும்,  தாமதம் ஏற்பட்டால் கண் பார்வையில் நிரந்தர சேதம் ஏற்படும். எனவே உடனடியாக சிகிச்சை அவசியம். அறிகுறிகள் : பார்வை திடீரென மந்தமடைதல், கடுமையான கண்வலி ,  தலைவலி, குமட்டல் மற்றும் வாந்தி, கண்கள் கூசுதல்,  வெளிச்சத்தில் பார்க்க முடியாமை

**********

சிலருக்கு அடிக்கடி கண்கள் வீங்கின மாதிரி மாறும். இது உடல் நலத்தில் ஏதோ கோளாறு என்பதற்கான அறிகுறி காலையில் தென்படுகிற வீக்கம். குளிர்ந்த மற்றும் சூடான தண் ரால் மாறி,  மாறிக் கழுவுவதால் சரியாகும். கண்களைச் சுற்றியுள்ள தசைகளை லேசாக நீவிக் கொடுக்கலாம். வீக்கம் குறைகிற வரை கண்களுக்கான மசாஜ் செய்யக் கூடாது. அடிக்கடி இப்படி வீக்கம் தென்பட்டால் மருத்துவரை அணுகலாம்.

*******

இரவு படுப்பதற்கு முன் கண்களில் போட்ட மேக்கப் முற்றிலும் அகற்றப்பட வேண்டும். முதலில் செயற்கை இமைகள் பொருத்தியிருந்தால் அதை அகற்ற வேண்டும். ஐ மேக்கப் ரிமூவர் என்றே கிடைக்கிறது. அதில் பஞ்சைத் தொட்டு கண்களை மூடியபடி வெளியிலிருந்து உள்ளே மூக்கை நோக்கித் துடைக்க வேண்டும். இரண்டு,  மூன்று முறைகள் இப்படிச் செய்யவும். பிறகு கண்களைத் திறந்து,  வேறொரு பஞ்சால் கண்களின் உள் பக்கத்தையும்,  கீழ் இமைகளையும் சுத்தப்படுத்த வேண்டும். கண்ணில் உள்ள மேக்கப் முழுக்க அகற்றப் படாவிட்டால், அது எரிச்சலை உண்டாக்கி,  கண்கள் சிவந்து போகுமாறு செய்யும்.

7 comments:

 1. அனைவருக்கும் பயனுள்ள கட்டுரை அனைவரும் படிக்க வேண்டிய கட்டுரை கண்ணைப்பற்றி கவனமாக இருக்க வேண்டிய கட்டுரை.. ....நன்றி

  ReplyDelete
 2. மிக முக்கியமான கட்டுரை புன்னியாமீன்

  ReplyDelete
 3. நான் பெற்ற துன்பம் பிறர் காணக்கூடாது என கண் பற்றி ஆழமாக ஆராய்ந்து சகல விடயங்களையும் தந்திருக்கின்றீர்கள். அனைவரும் வாசித்துப் பயன்பெறக்கூடிய கட்டுரை

  ReplyDelete
 4. பயனுள்ள கட்டுரை புன்னியாமீன், தங்கள் அனுபவத்தையும் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

  ReplyDelete
 5. என்னுடைய இக்கட்டுயை மீளப்பிரசுரித்த இலக்கியா இனையத்தளத்துக்கு என் நன்றிகள்

  http://ilakkiyainfo.com/new/?p=21264

  ReplyDelete
 6. என்னுடைய இக்கட்டுரையை மீளப்பிரசுரித்த சலசலப்பு இணையத்தளத்துக்கு என் நன்றிகள்

  http://salasalappu.com/?p=17466

  ReplyDelete
 7. அனைவருக்கும் பயனுள்ள கட்டுரை அனைவரும் படிக்க வேண்டிய கட்டுரை கண்ணைப்பற்றி கவனமாக இருக்க வேண்டிய கட்டுரை.. ....நன்றி

  ReplyDelete