Friday 24 December 2010

அனுபவம் : இதுவொரு படிப்பினையாக அமையட்டும். – புன்னியாமீன்

எந்தவொரு விடயத்தையும் நாளை செய்வோம்,  நாளை மறுநாள் செய்வோம்,  அடுத்தவாரம் செய்வோம்,  அடுத்த மாதம் செய்வோம்... என ஒத்திவைக்கும் பழக்கம் எம்முள் பலரிடம் காணப்படுகின்றது.

இதற்கு நானும் விதிவிலக்கானவனல்ல.

இவ்வாறு காலம் கழிப்பதனால் என் வாழ்க்கையில் ஏற்பட்ட ஒரு நிஜ சம்பவத்தை உங்களுடன் பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகின்றேன்.

எனது வலப்பக்கக் கண்ணில் வெள்ளை படர்தல் (கெற்றாக்) சுமார்  மூன்று நான்கு வருடங்களுக்கு முன்பே ஏற்பட்டுவிட்டது. அதேநேரம்,  நான் ஒரு நீரிழிவு நோயாளி. சுமார் 17 வருடங்களாக நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு கடந்த நான்கு ஆண்டுகளாக இன்சுலிங் ஊசி போட்டுக் கொண்டிருக்கின்றேன். ஒரு நீரிழிவு நோயாளி என்ற அடிப்படையில் கண்,  சிறுநீரகம்,  இதயம் போன்றவற்றில் ஏற்படக்கூடிய நோய்களுக்கு நான் கூடிய கரிசனை காட்டியிருக்க வேண்டும்.



என் வலக் கண்ணில் வெள்ளை படர்தல் ஏற்பட்ட போதிலும்கூட, இடக்கண் நூறு வீதம் தெளிவாக இருந்தது. இதனால் வாசிப்பதிலோ அல்லது ஏனைய விடயங்களிலோ எனக்கு சிரமம் இருந்ததாக தெரியவில்லை. இதனால் கடந்த மூன்று நான்கு வருடங்களாக வலக் கண்ணில் காணப்பட்ட வெள்ளை படர்தலை சத்திரசிகிச்சை மூலமாக அகற்ற வேண்டும் என நினைத்தாலும்கூட,  என் உதாசீனப் போக்கினால் அதனைப் பிற்போட்டே வந்துள்ளேன். சுமார் ஒன்றரை வருடங்களுக்கு முன்பு கண் சிகிச்சை நிபுணர் டாக்டர் சீமன் அவர்களிடம் சத்திரசிகிச்சை செய்யவென சென்று இரத்தத்தின் குளுகோசின் அளவு கூடியதினால் டாக்டர் அதனைப் பிற்போட்டார். நானும் அதனை பெரிதுபடுத்தவில்லை.

இந்நிலையில் என் வலக் கண்ணில் முழுமையாகப் பார்வையிழந்த நிலையில் வலியும் ஏற்படத் தொடங்கியது. இறுதியில் சில வாரங்களுக்கு முன்பு டாக்டர் சீமனிடம் கண் சத்திரசிகிச்சைக்காக சென்றேன். என் கண்ணைப் பரிசீலித்த டாக்டர் சீமன் ''சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டாலும் என் பார்வை மீளத் திரும்பும் நிகழ்த்தகவு ஐம்பதுக்கு ஐம்பது தான்'' எனக் கூறினார். எப்படியோ சத்திரசிகிச்சைக்குட்படுத்தப்பட்டேன். இறைவனின் அருளால் எனது பார்வை மீளக் கிடைத்தது. இருப்பினும் இன்னும் பார்வை நிழலுருப் பரிமாணத்தில் அமைந்துள்ளமையினால் அதற்காக நான் வைத்திய சிகிச்சை செய்து கொண்டிருக்கின்றேன்.

இங்கு முக்கிய விடயம் என்வெனில் என் வலக் கண்ணில் பார்வையிழந்ததும் வலக்கண் புலன்நரம்புகளும் படிப்படியாக செயலிழக்க ஆரம்பித்துள்ளன. இதை எம்மால் உணர்ந்துகொள்ள முடியாது. உரிய சத்திரசிகிச்சையை பிற்போடாமல் உரியகாலத்திலேயே நான் மேற்கொண்டிருப்பேன் எனில் இத்தகைய பாதிப்புகளை தவிர்த்திருக்கலாம்.

ஒரு காரியத்தை பிற்போடுவதினால் நாம் பல இழப்புக்களை சந்திக்கின்றோம். அதில் உதாரணத்திற்காகவே எனது அனுபவத்தில் ஒரு சிறு துளியினை இவ்விடத்தில் பகிர்ந்து கொண்டேன்.  ஏனெனில்,  இது அனைவருக்கும் ஒரு படிப்பினையாக அமைய வேண்டும் என்பதற்காகவே.

என் கண் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்படுவதற்கு முன்பு இது பற்றி எழுதிய கட்டுரையொன்றை நான் கீழே இணைத்துள்ளேன். இக்கட்டுரை இலங்கையில் ஞாயிறு தினக்குரலிலும், பல இணையத்தளங்களிலும் பிரசுரமானதாகும்.


கவனயீனங்கள், அறியாமை தேகாரோக்கியத்தைப் பாதிக்கும் 
- புன்னியாமீன்

உலகில் வாழும் ஒவ்வொரு மனிதனும் அங்கசம்பூர்ணமாகவும்,  தேகாரோக்கியமாகவும் வாழவே விரும்புகின்றான். பொதுவாக தேகாரோக்கியமாக வாழ்ந்தால் கூட,  சில சந்தர்ப்பங்களில் அவனின் சில கவனயீனங்கள் மற்றும்  அறியாமை காரணமாக சில தேகாரோக்கிய பாதிப்புகள் அவனில் செல்வாக்குச் செலுத்தத் தொடங்குகின்றது. இதன் காரணமாக அங்கசம்பூரணமாகவும், தேகாரோக்கியமாகவும் பிறந்த ஒருவன் தனது சில அங்கங்களை இழக்கவும், நோய்வாய்ப்படவும் ஏதுவாக அமைகின்றது. மறுபுறமாக இயற்கையிலே சிலர் அங்கவீனர்களாக, இயற்கை நோயாளிகளாகப் பிறப்பதும் உண்டு. இந்த பிறவி நிலை காரணமாக உடல் ஊனம், செவி ஊனம், பார்வை ஊனம்,  மந்தபுத்தி நிலை போன்ற பல நிலைகள் ஏற்படுகின்றன. இயற்கையாகவோ அன்றேல் விபத்துக்கள்,  கவனயீனங்கள்; அறியாமைகள் காரணமாகவோ ஏற்படக்கூடிய அங்கவீன நிலைகளோ மனிதன் என்ற வகையில் எம்மால் குறைவான நிலையில் மதிப்பிடுவது தவறாகும். அங்கவீனர்களும் மனிதப் பிறவிகளே. அவர்களுக்கும் சமூகத்தில் சமவுரிமை வழங்கப்பட வேண்டும் என்பதே மனிதாபிமான நிலை.

"சமூகத்தில் அவர்களாலும் உயர்ந்த நிலைக்கு வரமுடியும். சமூகத்தில் அவர்கள் குறை பிறவிகள் அல்லர்" போன்ற எண்ணக்கருக்களை விளைவிப்பதற்காக வேண்டி குறித்த அங்கவீனம் தொடர்பாக தேசிய, சர்வதேச ரீதியில் விழிப்புணர்வுகளை ஏற்படுத்துவதற்காக வேண்டி பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதையும் அவதானிக்கின்றோம். உலகிலே மனிதர்களாக பிறந்து விட்ட ஒவ்வொருவரும் தாம் பெறும் அறிவு.  அனுபவம்.  ஆற்றல் என்பவற்றினூடாக விழிப்புணர்ச்சி பெறும் போது மனிதனின் தேவைகளும் துலக்கம் பெற்று ஈடேறி வருவதை நாம் கண்கூடாக காண்கின்றோம்.

இந்த அடிப்படையில் விழிப்புலனில் ஏற்படக்கூடிய குறைபாடு காரணமாக பார்வையை இழந்துள்ளோரை கௌரவிக்கவும், அவர்கள் பற்றிய உணர்வுகளை ஏற்படுத்தவும் அத்தகையோருக்கு உதவிகளை வழங்குவதற்கும் ஒக்டோபர் மாதம் 15ஆம் திகதி சர்வதேச விழிப்புலனற்றோர் தினம் அல்லது வெள்ளை பிரம்பு தினமாக அனுஸ்டிக்கப்படுகின்றது.

பொக்கிஷமாகப் பாதுகாக்க வேண்டிய பொருட்களைக் கண் மாதிரி பாதுகாக்க வேண்டும் எனச் சொல்வது வழக்கம். கண் என்பது அத்தனை பத்திரமாக,  பொக்கிஷமாகப் பாதுகாக்கப்பட வேண்டியதொரு உறுப்பாகும். நமது உள்ளத்து உணர்ச்சிகளைப் பிரதிபலிப்பவை கண்களே. கண்களில் உண்டாகிற பிரச்சினைகள் ஆரோக்கியத்துக்கு மட்டுமின்றி,  அழகுக்கும் உகந்ததல்ல.

இந்த உலகத்தைக் கண்டு இரசிப்பதற்கு நமக்கு அளிக்கப்பட்டிருக்கும் அதிசய உறுப்பு கண்ணாகும். மனிதனின் கண் என்பது ஒளியை உணர்வதற்கு உதவும் ஓர் உறுப்பாகும். வெவ்வேறு விதமான ஒளியை உணரும் உறுப்புகள் பல விலங்குகளிடையே காணப்படுகின்றன. மிக எளிய கண்கள் சுற்றுப்புறத்தில் உள்ள ஒளி அல்லது இருளை மட்டும் கண்டு உணரவல்லவை. இன்னும் மேம்பட்ட (complex) கண்கள்,  காட்சிகளைப் பார்க்கும் திறன் அளிக்கக்குடியவை. பாலூட்டிகள்,  பறவைகள், ஊர்வன,  மீன்கள் உட்பட்ட பல மேல்நிலை உயிரினங்கள் இரு கண்களைக் கொண்டுள்ளன. இவ்விரு கண்களும் ஒரே தளத்தில் அமைந்து ஒரே முப்பரிமாணப் படிமத்தை (binocular vision) காண உதவுகின்றன. மனிதர்களின் பார்வையும் இவ்வாறானதே; இரு கண்களும் வெவ்வேறு தளங்களில் அமைந்து இரு வேறு படிமங்களை (monocular vision) காண உதவுகின்றன. இந்தக் கண்ணகளில் ஏற்படக்கூடிய பாதிப்புக்களே பார்வையீனத்தை ஏற்படுத்துகின்றன. இத்தகைய பார்வையீனம் இயற்கையாக அமையலாம். அன்றேல் விபத்துக்கள்,  நோய்கள் காரணமாக அமையலாம்.

நமது கண் ஒரு நிழற்படக்கருவியைப்  போன்று இயங்குகிறது. ஒளியின் உதவியுடன் ஒரு நிழற்படக்கருவி   பொருட்களைப் படம் பிடிப்பதைப் போல,  நமது கண்ணும் ஒளியின் உதவியுடன் பொருட்களின் உருவத்தை கணப்பொழுதில் படம்பிடித்து,  மனதில் பதிவு செய்து,  பின்பு அதை மூளையில் விருத்தி செய்கிறது. கண்ணின் அனைத்து பாகங்களும் ஒருங்கிணைந்து,  ஒரு குழுவைப் போன்று இயங்கி நமக்குப் பார்வை அளிக்கிறது. இதில் விழிப்படலம் என்ற பாகம் முக்கிய பங்கு வகிக்கிறது. கருமையான ‘கண் மணி”க்குள் நுழையும் ஒளிக்கதிர்களை, விழிப்படலம் திசைதிருப்புகிறது. திசை திரும்பிய ஒளிக்கதிர் ‘கண்மணி”க்குப் பின்னால் உள்ள ‘வில்லையைச் சென்றடைகிறது. இந்த வில்லை தனது உருவத்தை மாற்றிக் கொண்டு,  தொலைவில் மற்றும் அருகில் உள்ள பொருட்களின் மீது ஒளிக்கதிர்களை ஒருமுனைப்படுத்துகிறது. இதனாலேயே ஒரு பொருள் எமக்குப் புலப்படுகிறது.

கண்பார்வையற்ற விழிப்புலனற்ற மானிடர்பால் எமது கவனம் ஈர்க்கப்பட வேண்டிய நல்லதோர் வாய்ப்பினை உலகுக்கு துலாம்பரமாக வெளிச்சமிட்டு காட்டுவதற்காகவே இவ்வெள்ளைப் பிரம்பு தினம் உலகளாவிய ரீதியில் அனுஸ்டிக்கப்படுகிறது. வெள்ளைப் பிரம்பு தினம் என்றாலே மூக்கின் மீது விரல் வைத்து சிந்திப்பவர்கள் இதன் தாற்பரியத்தை உணராதிருப்பது சற்று கவலைக்குரியதாயினும் இன்றைய நிலையில் வெள்ளைப் பிரம்பு தினம் சமூக ரீதியில் மேலெடுக்கப்பட்டு எல்லோரது கவனத்தையும் ஈர்த்து வருவதும் அவதானிக்கத்தக்கதொன்றாகும்

மூன்றாம் உலக நாடுகளை விட மேற்கத்தேய நாடுகளில் வெள்ளைப்பிரம்பு தினத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதைக் காண்கிறோம். ‘வெள்ளைப் பிரம்பு' உலக விழிப்புலனற்ற சம்மேளனத்தினால் 1969 ஒக்டோபர் 15 முதல் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. இவ்விடத்தில் இதன் பின்னணியினை நாம் ஆராய்வோமாயின் அது எம்மை இரண்டாவது உலக மகாயுத்தத்தின் இறுதிக்கு எம்மை இட்டுச் செல்கின்றது.

இந்த யுத்தத்தினை முடிவுக்கு கொண்டு வருவதற்கு அமெரிக்கா ஜப்பானில் ஹிரோஷிமாவிலும், நாகசாகியிலும் அணுகுண்டை வீசியது  உலக வரலாற்றால் மறக்க முடியாத ஒருகரை படிந்த நிகழ்வாகும். இன்றும் கூட இப்பகுதிகளில் பிறக்கின்ற குழந்தைகள் பல குறைபாடுகளுடனேயே பிறப்பதை நாம் செய்திகள் மூலம் அறிகின்றோம். அவற்றுள் முக்கியமான ஒன்றாக விழிப்புலன் அற்றோரின் நிலையினையும் காண்கின்றோம். இவ்வாறு பெருமளவினோர் ஜப்பானில் பார்வை இழக்கவே அதற்கான சிகிச்சையினை பெற்றுக்கொள்வதற்காக அவ்வேளை ஜப்பானில் பிரபல்யமாக இருந்த வைத்தியர் Hey யை மக்கள் நாடினர். தம்மை நாடி வந்தோரில் கூடியளவிலானோரின் பார்வையை வைத்தியரால் பெற்றுக்கொடுக்க முடியவில்லை. இத்தகையதொரு பரிதாபகரமான நிலைமையை எதிர்நோக்கிய வைத்தியர் Hey மனிதர்கள் என்ற வகையில் அவர்களையும் சமூகத்தில் நடமாட வைப்பதற்கு வழிதேடினார். அதன் பிரதிபலனாக உருவானதே வெள்ளைப் பிரம்பாகும். வைத்தியர் Hey யின் சிந்தனையில் விசையும் திசையும் (Mobility and Oriyantation)உதித்தது. ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு ஆபத்து ஏற்படாத வண்ணம் நகர்வதற்கு பயன்படுத்திய முறையில் வெள்ளைப் பிரம்பு மகத்துவம் பெற்றது.

வெள்ளைப் பிரம்பைப் பயன்படுத்துவோர் விழிப்புலனற்றோர் ஆவர். இவ்விழிப்புலனற்றோர்,  ஒரு இடத்திலிருந்து இன்னோர் இடத்திற்கு நகரும்போது அல்லது நடமாடும்போது அவர்களுக்கு பக்கத்துணையாக தாம் நகரும் இலக்கை நோக்கிய பயணத்திற்கும் வெள்ளைப் பிரம்பைப் பயன்படுத்துகின்றனர்.

எல்லாவற்றிற்கும் மேலாக,  விழிப்புணர்வு உள்ளோர் வெள்ளைப் பிரம்பினை பயன்படுத்தி வரும் ஒருவரை விழிப்புலனற்ற ஒருவர் என்று இனம் கண்டு கொள்ளவும்,  அவர்களுக்கு உதவுவதற்கும் வெள்ளைப்பிரம்பு உதவுகின்றது. இந்த இயந்திர யுகத்தில் தங்களுக்கென ஒரு துணையாக இவ்வெள்ளைப் பிரம்பை உருவாக்கி அதனை எங்களது கையிலேயே துணையாகத் தந்து எவரது உதவியுமின்றி தாமாகவே நகருவதற்கு இவ்வெள்ளைப் பிரம்பு ஒரு மனிதனாகவே உதவுலவது விழிப்புலனற்றோருக்குக் கிடைத்துள்ள ஒரு வரப்பிரசாதமாகும். இதற்கான உலக அங்கீகாரம் 1969 இல் கிடைத்தது.

கண்கள் சம்பந்தப்பட்ட சிலபொது விடயங்களை இவ்விடத்தில் தெரிந்து கொள்வது பயனுடையதாக இருக்கலாம்.

முக்கியமாக வரக்கூடிய கண் சம்பந்தமான நோய்கள்

கிட்டப் பார்வை,  தூரப் பார்வை,  பார்வை மந்தம்,  கண்ணில் சதை வளர்தல்,  கண்ணில் பூவிழுதல்,  கண்களில் உள்ள மெல்லிய நரம்புகளில் இரத்தம் உறைதல் காரணமாகப் பார்க்கின்ற பொருட்கள் கலங்களாகத் தெரிதல்,  கண்ணில் நீர்வடிதல்,  மாலைக்கண்,  வெளிச்சத்தைப் பார்க்க முடியாமை,  கண் கோளாறு தொடர்ந்து இருப்பதால்,  அதன் மூலமாக வரும் தலைவலி,  தொற்று நோய்க் கிருமிகள் மூலம் வரும் கண் நோய்,  மஞ்சள் காமாலை மூலமாக வரும் நோய்,  கண் கோளாறு மூலமாக தூக்கமின்மை,  வெள்ளெழுத்து என்னும் கண்பார்வைக் குறைவு இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.

******

இரண்டு கண்களுக்குள்ளும் பார்வையில் உள்ள வேற்றுமை சில சமயங்களில்,  ஒரு கண் கிட்டப்பார்வை,  தூரப்பார்வை அல்லது காட்டராக்ட் போன்றவற்றால் பாதிக்கப்பட்டிருந்தால் ஆம்ப்லையோபியா எனும் நோய் உருவாகலாம். சோர்வான அல்லது வலிமை குறைந்த கண்ணிலிருந்து,  மூளைக்குப் போதுமான அளவு தூண்டுதல் இல்லாத நிலையில்,  வலிமையான மற்றொரு கண் ஆதிக்கம் செலுத்துகிறது. இதனால் சோர்வான அல்லது ஆம்ப்லையோபியா-வினால் பாதிக்கப்பட்ட கண் மேலும் ஒடுக்கப்பட்டு,  இறுதியில் பார்வை இழக்க நேரிடலாம்.

*******
சூரியனிலிருந்து வெளிப்படும் UVB- கதிர்வீச்சு கண்ணின் வெளிபாகங்களைத் தாக்குகிறது; இதனால் கண்களில் எரிச்சல்,  வறட்சி,  வீக்கம் அல்லது புண்,  வயதுக்கு மீறிய தோற்றம் ஆகியவை ஏற்படலாம் . UVB- கதிர்வீச்சு கண்களுக்கு மட்டுமல்லாது,  தோலுக்கும் கேடு விளைவிக்கிறது;

*******
நமது கண்களுக்கு ஏற்படும் காயங்களில் குறைந்தபட்சம் 90% காயங்கள் தடுக்கப்படக்கூடியவை. அமெரிக்காவில்,  ஒற்றைக் கண்ணில் ஏற்படும் கண் பார்வையின்மைக்கு முதன்மைக் காரணம் கண்களில் ஏற்படும் காயங்களாகும்; இது உலகம் முழுவதும் கண் பார்வையின்மைக்கு இரண்டாம் காரணமாக விளங்குகிறது (முதற் காரணம் ‘காட்ராக்ட்” ஆகும்). இக்காயங்கள் முப்பது வயதிற்குட்பட்ட நபர்களில்,  பெருவாரியாகக் காணப்படுகிறது (57% ). கண் காயங்களுக்கான முக்கிய காரணங்கள் - வீட்டில் பயன்படுத்தப்படும் இரசாயனப் பொருட்கள்,  தொழிற்சாலைக் குப்பைகள்,  பாட்டரி அமிலம்,  விளையாட்டின் போது ஏற்படும் விபத்துகள்,  வாணவேடிக்கை,  UVB-  கதிர்வீச்சுகளுக்குத் தம்மை அதிக அளவில் வெளிப்படுத்திக் கொள்வது,  சரியான மேற்பார்வையின்றி வயதிற்குப் பொருந்தாத விளையாட்டு பொருட்களுடன் விளையாடுவது ஆகியவை. 20% கண் காயங்கள் தொழில் ரீதியாக ஏற்படுபவை; அவற்றுள் 95% காயங்கள் கட்டுமானப் பணியில் உள்ள ஆண்களுக்கு ஏற்படுகிறது.

*******

‘மயோபியா' என்பது ஒருவரது தூரப்பார்வையை பாதிக்கும் நிலையாகும். தூரத்தில் உள்ள பொருட்கள் மங்கலாக காணப்படுவது
இரு கண்களும் வெவ்வேறு திசைகளை பார்ப்பது போன்ற தோற்றம் இதன் அறிகுறியாகும். கண்களில் உள்ள குறைகளை சரிப்படுத்தக்கூடிய வில்லை கண்ணாடி அல்லது பார்வை வில்லை மயோபியா-வை சரிப்படுத்த உதவுகின்றன.

********

‘ப்ரெஸ்பயோபியா’ என்பது ஒருவரது கிட்டப்பார்வையை பாதிக்கும் நிலை. இதனால்,  ஒரு கலைந்த உருவம் பதிக்கப்பட்டு,  அது பின்னர் மூளைக்கு அனுப்பப்படுகிறது. அருகில் உள்ள பொருட்கள் மங்கலாக காணப்படுவது இரு கண்களும் வெவ்வேறு திசைகளை பார்ப்பது போன்ற தோற்றம் இந்நோயின் அறிகுறிகளாகும்.
கண்களில் உள்ள குறைகளை சரிப்படுத்தக்கூடிய வில்லைகள் கண்ணாடி அல்லது விழிவில்லைகளை பயன் படுத்துவதன் மூலம் இதனைக்கட்டுப்படுத்தலாம்.

********

குழந்தைகளிடம் தோன்றும் பார்வைக் குறைபாடுகளைக் கண்டறிதல்.
1)  வகுப்புப் பாடங்கள் கவனிக்கும் போது தலைவலி அல்லது களைப்பாக இருப்பது.
2)  கண்கள் அடிக்கடி கலங்கிக் காணப்படுவது.
3) இரண்டு கண்களிலும் பார்வை சீராக இல்லாமலிருப்பது.
4)  கடைக்கண் இமைகள் சிவந்து அல்லது வீங்கி இருப்பது.
5) கண் கட்டி அடிக்கடி வருவது.
6) சாதாரணமாக இருக்கும்போதோ அல்லது படிக்கும் போதோ கண்களில் நீர் வடிவது போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டால் உடனே டாக்டரைப் பார்க்க வேண்டும்.

********
கண்கள் இரண்டும் ஒரே நோக்குடன் இல்லாமல் ஒன்றுக்கொன்று முரண்பட்டு வெவ்வேறு திசைகளை  நோக்கி இருந்தால் அது மாறுகண் (Squint) எனப்படும். சிலர் இதை அதிர்ஷ்டத்தின் சின்னமாகக் கருதுகிறார்கள். சிலர் நாளடைவில் தானாகவே சரியாகிவிடும் என்று விட்டுவிடுகிறார்கள். இவை தவறான கருத்துக்களாகும். மாறுகண் நோய் உடனடியாகக் கவனிக்கப்படவேண்டிய ஒன்று. அதைத் தக்க சமயத்தில் சரி செய்யாவிட்டால் அந்தக் கண் பார்வையை இழந்துவிடும் அபாயம் உள்ளது. 10 வயதிற்குள் இந்தப் பிரச்சினையை சரி செய்ய வேண்டும். வயதாகியும் சிலர் மாறுகண்ணோடு நன்றாக இருப்பதுபோல்தான் தெரியும். ஆனால் அவரின் கண் நரம்புகள் பாதிப்படைந்திருக்கும். ஆகவே இதை உடனே கவனிப்பதே நல்லது.

******

கண்களில் கருவிழியில் வெள்ளையாகத் தெரிவதைத்தான் பூ விழுந்து விட்டது என்கிறோம். இது வந்தால்  உடனடியாக கண் மருத்துவரிடம் காட்ட வேண்டும். அது புரையாக இருக்கலாம். அல்லது கண்ணில் தோன்றும் புற்றுநோயாகவும்கூட இருக்கலாம்.

*******

விட்டமின் ஏ கண்பார்வையும் கண்ணுடன் தொடர்புடைய நோய்களுக்கும் சிறந்தது. முருங்கைக்கீரை,  முளைக்கீரை,  பொன்னாங்கண்ணிக்கீரை,  அவரைக்கீரை,  முருங்கைக்காய் போன்ற பச்சைக் காய்கறிகள்,  எளிதாகக் கிடைக்கக் கூடிய பப்பாளிப் பழம் போன்றவற்றில் விட்டமின் ஹஏ‘ போதிய அளவு உள்ளது. மேலும் மாம்பழம் கரட், பால்,  வெண்ணெய்,  முட்டை,  மீன்,  மீன் எண்ணெய் ஆகியவற்றிலும் இச்சத்து உள்ளது.

********

எமது கண்களைப் பாதுகாத்துக் கொள்ள இரவில் படுக்கைக்குப் போவதற்கு முன்பு கண்களையும்,  முகத்தையும் சுத்தமான தண்ணீர் கொண்டு கழுவ வேண்டும். எக்காரணத்திற்காகவும் அழுக்குத்துணி அல்லது பிறருடைய கண்களைத் துடைக்கப் பயன்படுத்திய துணி ஆகியவற்றைக் கொண்டு நம்முடைய கண்களைத் துடைக்கக் கூடாது.

*********

கண்நோய் அல்லது கண் வலி,  தூசு,  பிசிறு போன்றவை இருந்தால் கண்ட கண்ட மருந்துகளை கண்ணில் போடாமலும் காலதாமதமாகாமலும்  கண் மருத்துவரிடம் செல்ல வேண்டும்.

********

 கண் வெண்பகுதியை மூடும் இமை உள்பகுதி சிவத்தலும்,  அதில் வீக்கமும் ஏற்படுதல் அழற்சி என்று அழைக்கப்படுகிறது. இது திடீரென தோன்றி மறையும் தன்மை கொண்டது. இது தானே மறைந்தாலும் மருத்துவரின் சிகிச்சையும் சில சமயங்களில் தேவைப்படும்.
1. பொதுவாக இரண்டு கண்களும் பாதிக்கப்படும்,  ஒவ்வொரு கண்ணாக பாதிப்பு தொடங்கும்.
2. கண்ணின் வெண்மைப் பகுதியில் ரத்தக் குழாய்கள் நன்றாகத் தெரியும் அல்லது கண் சிவந்திருக்கும்.
3. கண் இமைகளும் லேசாக சிகப்பு நிறத்திலோ,  இளஞ்சிவப்பு நிறத்திலோ ஆகிவிடும்.
4. கண் பிசு பிசு வென்று ஒட்டிக் கொள்ளும்,  தூங்கி விழிக்கும்போது இது மோசமாக இருக்கும். கண்களில் இருந்து நீர் சுரந்து கொண்டே இருக்கும்.
5. கண் எரிச்சலோ,  வலியோ ஏற்படும்.
6. சில சமயங்களில் ஒளியால் கண்கள் கூசும்.
இத்தகைய நோய்க்குறிகள் கண்டோர் டாக்டரை அனுகி சிகிச்;சை பெறல் வேண்டும்.  நோயின் காரணத்திற்கு தகுந்தவாறு சிகிச்சை மாறுபடும். களிம்புகள்.  சொட்டு மருந்துகள் கொடுத்து கண் கிருமியை அகற்றலாம், மருந்து மாத்திரைகள் மூலம் ஒவ்வாமையால் ஏற்படும் நோய்க்குறிகளை தீர்க்கலாம்.

*******

கண்கள் சிவந்தாலே அது கண் இமை அழற்சி என்று கருத வேண்டிய அவசியமில்லை. கண்ணின் உள்ளே திடீரென அழுத்தம் அதிகரிப்பது Acute Angle Closure Glaucoma எனப்படும். இதனாலும் கூட கண்கள் விரைவில் சிவப்பு நிறமாக மாறும். ஆரம்ப நிலையிலேயே அழுத்தம் குறைக்கப்பட்டால் பார்வை விரைவில் பூரண குணமடையும்,  தாமதம் ஏற்பட்டால் கண் பார்வையில் நிரந்தர சேதம் ஏற்படும். எனவே உடனடியாக சிகிச்சை அவசியம். அறிகுறிகள் : பார்வை திடீரென மந்தமடைதல், கடுமையான கண்வலி ,  தலைவலி, குமட்டல் மற்றும் வாந்தி, கண்கள் கூசுதல்,  வெளிச்சத்தில் பார்க்க முடியாமை

**********

சிலருக்கு அடிக்கடி கண்கள் வீங்கின மாதிரி மாறும். இது உடல் நலத்தில் ஏதோ கோளாறு என்பதற்கான அறிகுறி காலையில் தென்படுகிற வீக்கம். குளிர்ந்த மற்றும் சூடான தண் ரால் மாறி,  மாறிக் கழுவுவதால் சரியாகும். கண்களைச் சுற்றியுள்ள தசைகளை லேசாக நீவிக் கொடுக்கலாம். வீக்கம் குறைகிற வரை கண்களுக்கான மசாஜ் செய்யக் கூடாது. அடிக்கடி இப்படி வீக்கம் தென்பட்டால் மருத்துவரை அணுகலாம்.

*******

இரவு படுப்பதற்கு முன் கண்களில் போட்ட மேக்கப் முற்றிலும் அகற்றப்பட வேண்டும். முதலில் செயற்கை இமைகள் பொருத்தியிருந்தால் அதை அகற்ற வேண்டும். ஐ மேக்கப் ரிமூவர் என்றே கிடைக்கிறது. அதில் பஞ்சைத் தொட்டு கண்களை மூடியபடி வெளியிலிருந்து உள்ளே மூக்கை நோக்கித் துடைக்க வேண்டும். இரண்டு,  மூன்று முறைகள் இப்படிச் செய்யவும். பிறகு கண்களைத் திறந்து,  வேறொரு பஞ்சால் கண்களின் உள் பக்கத்தையும்,  கீழ் இமைகளையும் சுத்தப்படுத்த வேண்டும். கண்ணில் உள்ள மேக்கப் முழுக்க அகற்றப் படாவிட்டால், அது எரிச்சலை உண்டாக்கி,  கண்கள் சிவந்து போகுமாறு செய்யும்.

Thursday 9 December 2010

சர்வதேச மனித உரிமைகள் தினம் International Human Rights Day -புன்னியாமீன்-

சர்வதேச மனித உரிமைகள் தினம் ஆண்டு தோறும் டிசம்பர் 10ஆம் திகதி அனுஸ்டிக்கப்படுகிறது. இரண்டாம் உலகமகா யுத்தம் நடைபெற்றபோது நடந்த சொத்திழப்புக்கள், மனிதப்படுகொலைகள், அட்டுழியங்கள் மற்றும் மனிதப்பேரழிவுகளின் பின்னர் தோன்றிய ஐக்கிய நாடுகள் சபையால் பிரகடனப்படுத்தப்பட்டதே இந்த மனித உரிமைப் பிரகடனமாகும்.

1945 -ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை உருவாக்கப்பட்டது. ஐக்கிய நாடுகள் சபையின் உருவாக்கத்தையடுத்து 1946 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 16 ஆம் திகதி ஐக்கிய நாடுகள் "மனித உரிமை ஆணைக் குழு" உதயமாகியது. ஐம்பத்து மூன்று அங்கத்துவ நாடுகளைக் கொண்ட இம் மனித உரிமை ஆணைக் குழு, தனது முதல் வேலைத்திட்டமாக 'சர்வதேச மனித உரிமைப் பிரகடனத்தை உருவாக்குவதற்கு அமெரிக்க ஜனாதிபதியின் மனைவி எலினா ரூஸ்வெல்ட் தலைமையில் ஒரு குழுவை அமைத்தது. ஐம்பத்து மூன்று அங்கத்துவ நாடுகளின் பிரதிநிதிகளைக் கொண்ட இந்த குழுவின் சிபாரிசின் படி 30 பிரிவுகளின் கீழ் மனித உரிமைகள் இனங்காணப்பட்டு அனைத்துலக மனித உரிமைகள் (Universal Declaration of Human Rights) பிரகடனம் ஐக்கிய நாடுகள் சபைக்கு சமர்ப்பிக்கப்பட்டது.

டிசம்பர் 10, 1948-ஆம் ஆண்டு பிரான்ஸின் தலைநகரான பாரிஸில் உள்ள "பலேடு சாயிலோற்'  என்ற மண்டபத்தில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச் சபையினால் இந்தப் பிரகடனத்திற்கு 58 நாடுகள் அங்கீகாரம் வழங்கியது.

இந்த புனித நாள் 1950 -ஆம் ஆண்டிலிருந்து டிசம்பர் 10 ஆம் திகதி "சர்வதேச மனித உரிமைகள் தினமாக"  (International Human Rights Day) கொண்டாடப்பட்டு வருகிறது. "சகல மனிதப் பிரஜைகளும் சமத்துவமானதும், விட்டுக் கொடுக்க முடியாததுமான உரிமைகள் மற்றும் அடிப்படைச் சுதந்திரங்களுடனேயே பிறக்கின்றனர்"  என்ற உண்மையை உணர்த்தும் வகையிலான நிகழ்வுகளும், செயற்திட்டங்களும் இத்தினத்தில் முழு உலகிலும் முன்னெடுக்கப்படுகின்றன. இன்று மனித உரிமைகளைப் பேணிக்காத்து மேம்படுத்துவதற்கான உலகளாவிய ஒரு நியமமாக இந்தப் பிரகடனம் மாறிவிட்டது.

இந் நிகழ்வுகளின் பிரதான நிகழ்ச்சி இத்தினத்தில் நியூயோர்க்கில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் நடைபெறும். அதே நேரத்தில் உலகளாவிய ரீதியில் அரசுகளும், மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களும் இந்நாளையொட்டி பல்வேறு முக்கிய நிகழ்வுகளை நடத்துவது வழக்கமாகும். மனித உரிமைகள் பாதுகாக்கப்படுவதை அனைத்து தரப்பினருக்கும் வலியுறுத்தும் வகையிலும், மனித உரிமைகள் தொடர்பான விடயங்களை மக்களுக்கு தெளிவுபடுத்தும் நோக்கத்துடனும் இத்தினம் உலகளாவிய ரீதியில் அனுஷ்டிக்கப்படுகின்றது. ஒவ்வொரு வருடமும் சர்வதேச மனித உரிமைகள் தினத்துக்கென தொனிப் பொருள் ஒன்று நிர்ணயிக்கப்படுகிறது. கடந்த 2008ம் ஆண்டுக்கான தொனிப்பொருள் "எங்கள் எல்லோருக்குமான கௌரவமும் நீதியும்' (dignity and justice for all of us) என்பதாகும்.
1776 ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்க சுதந்திரப்பிரகடனத்தின், 'எல்லாப் பிரஜைகளும் சமமாகவே படைக்கப்பட்டிருக்கிறார்கள், அவர்கள் வாழும் உரிமை, சுதந்திரம், மகிழ்ச்சியை நாடும் உரிமை போன்றன அவர்களிடமிருந்து பிரிக்கமுடியாத உரிமைகளாகும்." என கூறப்பட்டிருந்தது. எனவே மனித உரிமை என்பது, எல்லா மனிதர்களுக்கும் உரித்தான அடிப்படை உரிமைகளும், சுதந்திரங்களும் ஆகும். மனித உரிமைகள் என்பதனுள் அடங்குவதாகக் கருதப்படும் சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுள், வாழும் உரிமை, சுதந்திரம், கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம், சட்டத்தின் முன் சமநிலை, பண்பாட்டு உரிமை, உணவுக்கான உரிமை, வேலை செய்யும் உரிமை, கல்வி உரிமை என்பன முக்கியமானவையாகக் கருதப்படுகின்றது.

மனித உரிமைகளின் சுருக்க வரலாறு.

மனித உரிமையின் வரலாறு பல நூறு ஆண்டுகளைக் கொண்டது. பதிவு செய்யப்பட்ட வரலாற்றுக் காலம் முழுவதிலும் சமய, பண்பாட்டு, மெய்யியல், சட்டம் ஆகிய துறைகளின் வளர்ச்சிகளினால் இது விரிவு படுத்தப்பட்டுள்ளது. கிமு 539 இல் பாரசீகப் பேரரசன் சைரஸ் என்பவனால் வெளியிடப்பட்ட 'நோக்கப் பிரகடனமும்,' கிமு 272-231 காலப்பகுதியில் இந்தியாவின் அசோகப் பேரரசனால் வெளியிட்ட 'அசோகனின் ஆணையும்" கிபி 622 இல் முகமது நபி அவர்களால் உருவாக்கப்பட்ட "மதீனாவின் அரசியல் சட்டமும்" விதந்து கூறக்கூடியவை. ஆங்கிலச் சட்ட வரலாற்றில் 1215 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட "சுதந்திரத்துக்கான பெரும் பட்டயம்" (Magna Carta Libertatum) முக்கியத்துவம் பெறுகின்றது.

மறுமலர்ச்சிக் காலத்தில் 1525 ஆம் ஆண்டில் விவசாயிகளின் கோரிக்கைகள் தொடர்பாக ஜெர்மனியில் வெளியிடப்பட்ட "கருப்புக் காட்டின் பன்னிரண்டு அம்சங்கள்" (Twelve Articles of the Black Forest) என்னும் ஆவணமே ஐரோப்பாவின் மனித உரிமை தொடர்பான முதல் பதிவு எனக் கூறப்படுகின்றது. 1689 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட 'பிரித்தானிய உரிமைகள் சட்டமூலமும்", 1789 ஆகஸ்ட் 26 ஆம் திகதி பிரான்சின் தேசியசபையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட 'மனிதர்களுக்கும், குடிமக்களுக்குமான உரிமைகள் அறிக்கையும்". 1776 ம்ஆண்டு ஐக்கிய அமெரிக்க சுதந்திரப் போராட்டத்தை அடுத்து முன்வைக்கப்பட்ட 'ஐக்கிய அமெரிக்க விடுதலை அறிக்கையும்", 1789ம்ஆண்டு பிரான்ஸியப் புரட்சியை அடுத்து 'மனிதர்களுக்கும் குடிமக்களுக்குமான உரிமைகள்" அறிக்கையும். முக்கியத்துவம் பெறுகின்றன. மேலும் அனைத்துல செஞ்சிலுவைச் சங்கக் குழு நிறுவப்பட்டமை, 1864 ஆம் ஆண்டின் "லீபர் நெறிகள்" 1864 ஆம் ஆண்டின் முதலாம் ஜெனீவா மாநாடு என்பன அனைத்துலக மனிதாபிமானச் சட்டங்களுக்கு அடிப்படையாக அமைந்ததுடன் இரண்டு உலகப் போர்களுக்குப் பின்னர் அச் சட்டங்கள் மேலும் வளர்ச்சி பெற உதவின.

முதலாம் உலகப் போரின் பின்னர் உருவான வொர்சாய் ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, 1919 ஆம் ஆண்டில் "சர்வதேச சங்கம்" உருவானது. இச்சங்கம், மீண்டும் ஒரு உலக மகா யுத்தம் நடைபெறக்கூடாது, என்பதைக் குறிக்கோலாகக் கொண்டிருந்தது. இந்த அடிப்படையில் ஆயுதக் களைவு, கூட்டுப் பாதுகாப்பு மூலம் போரைத் தவிர்த்தல், நாடுகளிடையேயான முரண்பாடுகளை கலந்துபேசுதல், இராஜதந்திர வழிமுறைகள், உலக நலன்களை மேம்படுத்துதல் என்பவற்றின் மூலம் தீர்த்துக்கொள்ளுதல் போன்றவற்றை நோக்கங்களாகக் கொண்டிருந்தது. இம்முயற்சிகள் பூரண வெற்றியினைத் தரவில்லை. ஆனாலும், மனித உரிமைகளுடன் இத்திட்டங்கள் நெருக்கமான தொடர்புகளைக் கொண்டுள்ளன. இவை இன்றைய உலக மனித உரிமைகள் அறிக்கையிலும் உள்வாங்கப்பட்டுள்ளன.

மனித உரிமைகள் பற்றிய உலகப் பிரகடனம்

1948 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட 'சர்வதேச மனித உரிமை சாசனம்" 30 உறுப்புரைகளைக் கொண்டது. உலகளாவிய ரீதியில் நாடுகளின் அரசியல் திட்டங்கள் மனித உரிமைகள் பற்றிய உறுப்புரைகளை ஐ.நா.வின் மனித உரிமைகள் சாசனத்துக்கு இசைவாகவே அமைக்கப்பட்டுள்ளன. மேலும், இவ்வுறுப்புரைகள் தற்போது விரிவான செயற்பாடுகளை மையமாகக் கொண்டு காலத்துக்குக் காலம் விரிவுபடுத்தப்பட்டதாக பிற்சேர்க்கையாக இணைக்கப்பட்டுள்ளதாகவும் உள்ளன. உதாரணமாக 1993ஆம் ஆண்டு வியன்னா நகரில் நடைபெற்ற மனித உரிமைகள் தொடர்பான உலக மாநாட்டுப் பிரகடனத்தில் "மனிதனின் மதிப்பிலிருந்தும், கண்ணியத்திலிருந்தும் விளைவதே மனித உரிமைகள்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மனிதர்கள், மனிதர்களாகப் பிறந்த காரணத்தினால் அவர்களுக்குக் கிடைத்த அடிப்படையான, விட்டுக் கொடுக்க முடியாத, மறுக்க முடியாத உரிமைகளை நாம் மனித உரிமைகள் என்று அழைக்கிறோம். மனித உரிமைகள் என்பது யாராலும் உருவாக்கப்பட்டதல்ல, அதுபோல் மனித உரிமைகள் எவராலும் வழங்கப்பட்டதுமல்ல. எனவே தான் மனித உரிமைகள் எவராலும் பறிக்கப்பட முடியாத உரிமைகள் எனக் கூறப்படுகின்றது.

மனித உரிமை பிரகடனம் முப்பது உறுப்புரைகளை உள்ளடக்கியுள்ளது. இதில் முதலாவது உறுப்புரை சுதந்திரமாக பிறக்கும் மனிதர்கள் யாவரும் சமமானவர்களெனவும் மதிப்பையும் நியாயத்தையும் கொண்டவர்களெனவும் கூறுகின்றது. இரண்டாவது உறுப்புரை இன, மத, மொழி, பால், நிறம், அரசியல் வேறுபாடுமின்றி, சமூக வேறுபாடுமின்றி இப்பிரகடனம் சகலருக்கும் உரித்தானதாக கூறப்படுகின்றது. உறுப்புரை மூன்றிலிருந்து இருபத்தொன்று (3 - 21) வரை உள்ளவற்றில் மனித இனத்தின் சிவில், அரசியல் உரிமைகள் பற்றி கூறப்படுகின்றது. அதாவது பாதுகாப்பு, அடிமைத்தனம், சித்திரவதை, சட்டத்தின் முன்னால் சமத்துவம், வேறுபாடு, அடிப்படை உரிமைகள், கைது, நீதி, நிரபராதி, அரசியல் தஞ்சமும் துன்புறுத்தல், திருமணம், சொத்துரிமை, சிந்தனை உரிமை, பேச்சு சுதந்திரம், தகவல் பரிமாற்ற உரிமை, ஒன்று கூடும் சுதந்திரம் போன்றவற்றை பற்றி அவை கூறுகின்றன. மற்றைய சரத்துகளான இருபத்தியிரண்டிலிருந்து இருபத்தியேழு வரையானவை (22 - 27) மனித இனத்தின் பொருளாதார சமூக கலாசார உரிமைகளை உள்ளடக்கியுள்ளன. அதாவது வேலை, உடை, உணவு, தங்குமிடம், மருத்துவ பராமரிப்பு, கல்வி போன்ற விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. இதில் இறுதி சரத்துக்களான இருபத்து எட்டிலிருந்து முப்பதுவரை இச் சாதனத்தின் நடைமுறை, பொறுப்பு, உரிமை ஆகியவற்றை உள்ளடக்கியதாக் காணப்படுகிறது. இந்த சர்வதேச மனித உரிமை பிரகடனத்தை சரியான முறையில் கடைப்பிடிக்க வேண்டும் என்ற கடமைப்பாடு ஐக்கிய நாடுகள் சபையில் அங்கத்துவம் வகிக்கும் ஒவ்வொரு நாட்டுக்கும் உரியது.

சர்வதேச மனித உரிமை சாசனம் 30 உறுப்புரைகளும் கீழே சுருக்கமாகத் தொகுத்துத் தரப்பட்டுள்ளன.

உறுப்புரை 1:  சமத்துவ உரிமை - சகல மனிதர்களும் சுதந்திரமாகவே பிறக்கின்றனர். அவர்கள் பெருமானத்திலும், உரிமைகளிலும் சமமானவர்கள், அவர்கள் நியாயத்தையும், மனச்சாட்சியையும் இயற்பண்பாகப் பெற்றவர்கள்.

உறுப்புரை 2: ஏற்றத்தாழ்வுகள் காட்டப்படாமல் இருப்பதற்கான உரிமை - இனம், நிறம், பால், மொழி, மதம், அரசியல் மற்றும் தேசிய அல்லது சமூகம், பிறப்பு அல்லது பிற அந்தஸ்து என்பன எத்தகைய வேறுபாடுகளுமின்றி இப்பிரகடனத்தில் தரப்பட்டுள்ள அனைத்து உரிமைகளுக்கும், சுதந்திரங்களுக்கும் அனைவரும் உரித்துடையவராவர். அதாவது நிறத்தில், பாலினத்தில், மதத்தில், மொழியில் வேறுபாடு இருப்பினும் அனைவரும் சமமே!

உறுப்புரை 3:  வாழ்வதற்கும், சுதந்திரத்திற்கும், பாதுகாப்பிற்கும் ஆளெவருக்குமான உரிமை. அதாவது சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் வாழும் உரிமை அனைவருக்கும் உண்டு

உறுப்புரை 4:  அடிமை நிலை, அடிமை வியாபாரம் அவற்றில் எல்லா வகையிலும் விடுபடுவதற்கான சுதந்திரம். அதாவது உங்களை அடிமையாக நடத்த எவருக்கும் உரிமை இல்லை. அதேபோல 'யாரையும் அடிமையாக நடத்த உங்களுக்கும் உரிமை இல்லை".

உறுப்புரை 5: சித்திரவதைக்கு, மனிதத் தன்மையற்ற அல்லது இழிவான நடாத்துகைக்கு உள்ளாகாமல் இருப்பதற்கான சுதந்திரம்.

உறுப்புரை 6:  சட்டத்தின் முன் ஆளாக கணிக்கப்படுத்துவதற்கான உரிமை
. அதாவது சட்டத்தால் சமமாக நடத்தபடுவதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு

உறுப்புரை 7:  சட்டத்தின் முன் அனைவரும் சமன். பாரபட்சம் எதுவுமின்றி சட்டத்தின் பாதுகாப்புக்கும் உரித்துடையவர்கள்.

உறுப்புரை 8:  ஒவ்வொரு நாடுகளிலும் அரசியலமைப்பினால், அல்லது சட்டத்தினால் அவர்களுக்கு அளி்க்கப்பட்ட அடிப்படை உரிமைகளை மீறும் செயல்களுக்காக தகுதியான நியாய சபை முன் பரிகாரம் பெறுவதற்கான உரிமை. அதாவது ஒருவரது உரிமை மதிக்கப்படாத போது சட்ட உதவியை நாடும் உரிமை.

உறுப்புரை 9:  சட்டத்துக்குப் புறம்பாக கைது செய்யப்படுதல், தடுத்து வைக்கப்படுதல், நாடுகடத்தல் ஆகியவற்றுக்கு எவரும் ஆட்படுத்தப்படலாகாது. அதாவது நீதிக்கு புறம்பாக உங்களை காவலில் வைக்கவோ, உங்கள் தேசத்தில் இருந்து நாடு கடத்தவோ உரிமை இல்லை.

உறுப்புரை 10:  நீதியான, பகிரங்கமான விசாரணைக்கான உரிமை

உறுப்புரை 11:
1. தண்டனைக்குரிய தவறுக்குக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளோர் குற்றம் நிரூபிக்கப்படும் வரை சுத்தவாளியென ஊகிக்கப்படும் உரிமை. அவ்விளக்கத்தில் அவர்களது எதிர்வாதங்களுக்கு அவசியமான எல்லா உறுதிப்பாட்டு உத்தரவாதங்களும் அவர்களுக்கிருத்தல் வேண்டும்.

2. தேசிய, சர்வதேசிய நாட்டிடைச் சட்டத்தின் கீழ் ஏதேனும் செயல் அல்லது செய்யாமை புரியப்பட்ட நேரத்தில் அச்செயல் அல்லது செய்யாமை தண்டணைக்குரிய தவறொன்றாக அமையாததாகவிருந்து அச்செயல் அல்லது செய்யாமை காரணமாக, எவரும் ஏதேனும் தண்டணைக்குரிய தவறுக்குக் குற்றவாளியாகக் கொள்ளப்படலாகாது. அத்துடன், தண்டணைக்குரிய தவறு புரியப்பட்ட நேரத்தில் ஏற்புடையதாகவிருந்த தண்டத்திலும் பார்க்கக் கடுமையான தண்டம் விதிக்கப்படலாகாது.

உறுப்புரை 12: அந்தரங்கத்துவம், குடும்பம், வீடு, அல்லது தொடர்பாடல்களில் எவரும் தலையிடாமல் இருப்பதற்கான சுதந்திரம். அனைவருக்கும் நமது அந்தரங்கத்தை காத்துக்கொள்ள உரிமை உண்டு.

உறுப்புரை 13:  ஒவ்வொரு நாட்டினதும் எல்லைக்குள்ளும் சுதந்திரமாக நடமாடுவதற்கான, நாட்டை விட்டு வெளியேற, திரும்பி வருவதற்கான உரிமை

உறுப்புரை 14: ஆபத்து காலத்தில் பிற நாட்டில் தஞ்சம் கேட்க உரிமை உண்டு

(1.) வேறு நாடுகளுக்குச் செல்வதன் மூலம் துன்புறுத்தலிலிருந்து புகலிடம் நாடுவதற்கும், துன்புறுத்ததலிலிருந்து புகலிடம் வழங்குவதற்கும் எவருக்கும் உரிமையுண்டு.

(2.) அரசியற் குற்றங்கள் அல்லாத குற்றங்கள் சம்பந்தமாகவும், அல்லது ஐக்கிய நாடுகள் சபையின் நோக்கங்களுக்கும், நெறிகளுக்கும் முரணான செயல்களிலிருந்து உண்மையாக எழுகின்ற வழக்குத் தொகுப்புகள் சம்பந்தமாகவும் இவ்வுரிமை கேட்டுப் பெறப்படலாகாது.

உறுப்புரை 15:
(1.) ஒவ்வொரு பிரஜைக்கும் ஒரு தேசிய இனத்தினராகவிருக்கும் உரிமை உண்டு.

(2.) எவரினரும் தேசிய இனத்துவம் மனப்போக்கான வகையில் இழப்பிக்கப்படுதலோ அவரது தேசிய இனத்துவத்தை மாற்றுவதற்கான உரிமை மறுக்கப்படுதலோ ஆகாது.

உறுப்புரை 16: விரும்பிய ஒருவரை திருமணம் செய்துகொள்ள குடும்ப பாதுகாப்பிற்கான உரிமை

(1.) பராய வயதையடைந்த ஆண்களும், பெண்களும், இனம், தேசிய இனம் அல்லது சமயம் என்பன காரணமாக கட்டுப்பாடெதுவுமின்றி திருமணம் செய்வதற்கும், ஒரு குடு்ம்பத்தை கட்டியெழுப்புவதற்கும் உரிமை உடையவராவர். திருமணஞ் செய்யும் பொழுதும் திருமணமாகி வாழும் பொழுதும், திருமணம் கலைக்கப்படும் பொழுதும் அவர்கள் ஒவ்வொருவருக்கும் சம உரிமையுண்டு.
(2.) திருமணம் முடிக்கவிருக்கும் வாழ்க்கைத் துணைவோரின் சுதந்திரமான, முழுச் சம்மதத்துடன் மட்டுமே திருமணம் முடிக்கப்படுதல் வேண்டும்.

(3.) குடும்பமே சமுதாயத்தில் இயற்கையானதும் அடிப்படையானதுமான அலகாகும். அது சமுதாயத்தினாலும் அரசினாலும் பாதுகாக்கப்படுவதற்கு உரித்துடையது.

உறுப்புரை 17: சொத்து வைத்துக்கொள்ளும் உரிமை
(1.) தனியாகவும், கூட்டாகவும் ஆதனத்தைச் சொந்தமாக வைத்திருப்பதற்கு ஒவ்வொருவருக்கும் உரிமையுண்டு.
(2.) எவரினதும் ஆதனம் ஒருதலைப்பட்ச மனப்போக்கான வகையில் இழக்கப்படுதல் ஆகாது.

உறுப்புரை 18:  மதம் மற்றும் நம்பிக்கையை பின்பற்றுவதற்கான சுதந்திரம் சிந்தனைச் சுதந்திரம், மனச்சாட்சிச் சுதந்திரம், மதச் சுதந்திரம் என்பவற்றுக்கு ஒவ்வொருவருக்கும் உரிமையுண்டு. இவ்வுரிமையினுள் ஒருவர் தமது மதத்தை அல்லது நம்பிக்கையை மாற்றுவதற்கான சுதந்திரமும், போதனை, பயிலல், வழிபாடு, அநுட்டானம் என்பன மூலமும் தத்தமது மதத்தை அல்லது நம்பிக்கையைத் தனியாகவும், வேரொருவருடன் கூடியும், பகிரங்கமாகவும் தனி்ப்பட்ட முறையிலும் வெளிப்படுத்துவதற்கான சுதந்திரமும் அடங்கும்.

உறுப்புரை 19:  கருத்து, தகவலிற்கான சுதந்திரம். கருத்துச் சுதந்திரத்துக்கும் பேச்சுச் சுதந்திரத்துக்கும் எவருக்கும் உரிமையுண்டு. இவ்வுரிமையானது தலையீடின்றிக் கருத்துக்களைக் கொண்டிருப்பதற்கும், எவ்வழிவகைகள் மூலமும், எல்லைகளைப் பொருட்படுத்தாமலும், தகவலையும் கருத்துக்களையும் நாடுவதற்கும், பெறுவதற்கும் பரப்புவதற்குமான சுதந்திரத்தையும் உள்ளடக்கும்.

உறுப்புரை 20:  எந்த ஒரு கூட்டத்திலும் கலந்து கொள்ள, சங்கத்தில் உறுபினராக உரிமை உண்டு
(1.) சமாதான முறையில் ஒன்று கூடுவதற்கும் இணைவதற்குமான சுதந்திரத்துக்கு உரிமையுண்டு.

(2.) ஒரு சங்கத்தில் சேர்ந்தவராகவிருப்பதற்கு எவரும் கட்டாயப்படுத்தப்படலாகாது.

உறுப்புரை 21:  அரசியல் உரிமை - அரசாங்கத்தில், சுதந்திரமான தேர்தலில் பங்குபற்றவும், பொதுச்சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்குமான உரிமை
(1.) ஒவ்வொருவருக்கும் தத்தம் நாட்டின் ஆட்சியில் நேரடியாகவோ அல்லது சுதந்திரமான முறையில் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் மூலமாகவோ பங்குபெறுவதற்கு உரிமையுண்டு.
(2.) ஒவ்வொருவருக்கும் தத்தம் நாட்டிலுள்ள அரசாங்க சேவையில் சமமான முறையில் அமர்த்தப்படுவதற்கு உரிமையுண்டு.

(3.) மக்களின் விருப்பே அரசாங்க அதிகாரத்தின் எல்லையாக அமைதல் வேண்டும். இவ்விருப்பானது, குறித்த காலத்தில் நீதியாகவும், நேர்மையாகவும் நடைபெறும் தேர்தல்கள் மூலம் வெளிப்படுத்தப்படல் வேண்டும்.

உறுப்புரை 22:  சமூகப் பாதுகாப்பிற்கும், தன் திறன்களை வளர்த்துக்கொள்ளவும் கூடிய உரிமை - .

உறுப்புரை 23:  தொழில் புரியவும், ஊதியத்தைப் பெறுவதற்குமான உரிமை

(1.) ஒவ்வொருவரும் தொழில் செய்வதற்கான, அத்தொழிலினைச் சுதந்திரமான முறையில் தேர்ந்தெடுத்துக் கொள்வதற்கும், தொழிலின்மைக்கெதிரான பாதுகாப்பு உடையோராயிருப்பதற்கான உரிமையை உடையர்.

(2.) ஒவ்வொருவரும் வேறுபாடெதுவுமின்றி, சமமான தொழிலுக்குச் சமமான சம்பளம் பெறுவதற்கு உரித்துடையவராவர்.

(3.) வேலை செய்யும் ஒவ்வொருவரும் தாமும் தமது குடும்பத்தினரும் மனித மதிப்புக்கிணையவுள்ள ஒரு வாழ்க்கையை நடத்துவதனை உறுதிப்படுத்தும் நீதியாவதும் அநுகூலமானதுமான ஊதியத்திற்கு உரிமையுடையோராவர். அவசியமாயின் இவ்வூதியம் சமூகப் பாதுகாப்பு வழிமுறைகளினால் குறை நிரப்பபடுவதாயிருத்தல் வேண்டும்.
(4.) ஒவ்வொருவருக்கும் தத்தம் நலன்களைப் பாதுகாப்பதற்கெனத் தொழிற் சங்கங்களை அமைப்பத்தற்கும். அவற்றில் சேர்வதற்குமான உரிமையுண்டு.
உறுப்புரை 24 இளைப்பாறுவதற்கும், ஓய்வெடுக்கவும் உரிமை - இளைப்பாறுவதற்கும், ஓய்விற்கும் ஒவ்வொருவரும் உரிமையுடையவர். இதனுள் வேலை செய்யும் மணித்தியால வரையறை, சம்பளத்துடனான விடுமுறைகள் அடங்கும்.

உறுப்புரை 25: நல்ல வாழ்க்கை தரத்திற்கான உரிமை
(1.) ஒவ்வொருவரும் உணவு, உடை, உரையுள், மருத்துவக் காப்பு, அவசியமான சமூக சேவைகள் என்பன உட்பட தமதும் தமது குடும்பத்தினாலும் உடனலத்துக்கும் நல்வாழ்வுக்கும் போதுமான வாழ்க்கைத்தரத்துக்கு உரிமையுடையவராவர். அத்துடன் வேலையின்மை, இயலாமை, கைம்மை, முதுமை காரணமாகவும் அவை போன்ற அவரது கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட பிற சூழ்நிலை காரணமாகவும் வாழ்க்கை வழியில்லாமை ஏற்படும் சந்தர்ப்பங்களில் பாதுகாப்புக்கும் உரிமையுடையவராவர்.
(2.) தாய்மை நிலையும் குழந்தைப் பருவமும் விசேட கவனிப்பிற்கும் உதவிக்கும் உரித்துடையன. சகல குழந்தைகளும் அவை திருமண உறவிற் பிறந்தவையாயினுஞ்சரி அத்தகைய உறவின்றிப் பிறந்தவையாயினுஞ்சரி, சமமான சமூகப் பாதுகாப்பினைத் அனுபவிக்கும் உரிமையுடையன.

உறுப்புரை 26: கல்விக்கான உரிமை
(1.) ஒவ்வொருவருக்கும் கல்வி கற்பதற்கான உரிமையுண்டு. குறைந்தது ஆரம்ப அடிப்படைக் கட்டங்களிலாவது கல்வி இலவசமானதாயிருத்தல் வேண்டும். ஆரம்பக் கல்வி கட்டாயப்படுத்தல் வேண்டும். தொழில் நுட்பக் கல்வியும் உயர் தொழிற் கல்வியும் பொதுவாகப் பெறப்படத்தக்கன வாயிருத்தல் வேண்டும். உயர் கல்வியானது யாவருக்கும் திறமையடிப்படையின் மீது சமமான முறையில் கிடைக்கக் கூடியதாக்கப்படுதலும் வேண்டும்.

(2.) கல்வியானது மனிதனின் ஆளுமையை முழுதாக விருத்தி செய்யுமுகமாகவும் மனிதவுரிமைகளுக்கும் அடிப்படைச் சுதந்திரங்களுக்குமான மரியாதையை வலுப்படு்த்துமுகமாகவும் ஆற்றப்படுத்தப்படல் வேண்டும்.

உறுப்புரை 27:  தங்கள் சமூகத்தின் பண்பாட்டு அறிவியல் வளர்சியை பகிர்ந்து கொள்ளும் உரிமை -
(1.) சமுதாயத்தின் பண்பாட்டு வாழ்க்கையிற் சுதந்திரமாகப் பங்குகொள்வதற்கும், கலைகளைத் தூய்ப்பதற்கும் அறிவியல் முன்னேற்றத்திலும், அதன் நன்மைகளிலும் பங்கெடு்ப்பதற்கும் எவருக்கும் உரிமையுண்டு.
(2.) அறிவியல், இலக்கிய, கலைப் படைப்பின் ஆக்கியற் கர்த்தா என்ற வகையில் அப்படைப்புகள் வழியாக வரும் ஒழுக்க நெறி, பருப்பொருள் நலங்களின் பாதுகாப்பிற்கு அத்தகையோர் ஒவ்வொருவருக்கும் உரிமை உடையவராவர்.

உறுப்புரை 28:  மனித உரிமைகளை உறுதிசெய்யும் சமூக முறைமையில் பங்குபற்றும் உரிமை இப்பிரகடனத்தில் எடுத்துக் காட்டப்பட்டுள்ள உரிமைகளும் சுதந்திரங்களும் முழுமையாக எய்தப்படக்கூடிய சமூக, சர்வ தேசிய நாட்டிடை அமைப்பு முறைக்கு ஒவ்வொருவரும் உரித்துடையவராவர்.

உறுப்புரை 29:  ஒவ்வொருவரும் பிறரது உரிமையை மதிக்க வேண்டும்
(1.) எந்த ஒரு சமூகத்தினுள் மாத்திரமே தத்தமது ஆளுமையின் கட்டற்ற பூரணமான வளர்ச்சி சாத்தியமாகவிருக்குமோ அந்தச் சமூகத்தின்பால் ஒவ்வொருவருக்கும் கடமைகள் உண்டு.
(2.) ஒவ்வொருவரும் அவரது உரிமைகளையும் சுதந்திரங்களையும் பிரயோகிக்கும் பொழுது இன்னொருவரின் உரிமைகளுக்கும் சுதந்திரங்களுக்குமுரிய அங்கீகாரத்தையும் மதி்ப்பையும் பெற்றுக் கொடுக்கும் நோக்கத்துக்காகவும், சனநாயக சமுதாயமொன்றின் ஒழுக்கசீலம், பொது மக்கள் ஒழுங்கமைதி, பொது சேமநலன் என்பவற்றுக்கு நீதியான முறையில் தேவைப்படக் கூடியவற்றை ஏற்படுத்தல் வேண்டுமெனும் நோக்கத்துக்காகவும் மட்டுமே சட்டத்தினால் தீர்மானிக்கப்படும் வரையறைகளுக்கு மாத்திரமே கட்டுப்படுவராயாமைதல் வேண்டும்.
(3.) இவ்வுரிமைகளும் சுதந்திரங்களும் ஐக்கிய நாடுகள் சபையின் நோக்கங்களுக்கும் நெறிகளுக்கும் முரணாக எவ்விடத்திலேனும் பிரயோகிப்படலாகாது.

உறுப்புரை 30:  இந்த பிரகடனத்தில் குறிபிட்டுள்ள எந்த ஒரு உரிமையையும் நீக்கும் உரிமை கிடையாது இப்பிரகடனத்திலுள்ள எவையும். இதன்கண் எடுத்துக்காட்டப்பட்டுள்ள உரிமைகள், சுதந்திரங்கள் ஆகியவற்றிலுள்ள எவற்றையும் அழிக்கும் நோக்கத்தையுடைய ஏதேனும் முயற்சியில் ஈடுபடுவதற்கும் அல்லது செயலெதனையும் புரிவதற்கும் எந்த ஒரு நாட்டுக்கோ குழுவுக்கோ அல்லது ஒருவருக்கோ உட்கிடையாக யாதேனும் உரிமையளிப்பதாகப் பொருள் கொள்ளப்படுதலாகாது.

மனித உரிமை என்பது, எல்லா மனிதர்களுக்கும் உரித்தான அடிப்படை உரிமைகளும், சுதந்திரங்களும் ஆகும்.

தற்கால உலக அரசியல் அரங்கில் குடியியல், அரசியல் உரிமைகள் சம்பந்தமாகவோ, பொருளாதார, சமூக, கலாசார உரிமைகள் சம்பந்தமாகவோ, எந்த விடயத்தை எடுத்துக் கொண்டாலும், மனித உரிமைகள் என்பதே பிரதான அம்சமாகத் திகழ்கிறது. மனித உரிமைகள் பற்றிய இந்தப் புதிய அக்கறை எழுச்சிபெற்ற மானுடத்தின் வெளிப்பாடு என்பது தெளிவானதே.

இவ்விடத்தில் 1998 மார்ச் 18ம் திகதி ஜெனீவாவில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 54வது அமர்வில் அப்போதைய செயலாளர் நாயகம் கோபி அன்னான் நிகழ்த்திய உரை மனித உரிமைகள் தொடர்பான புதிய விளக்கத்தை வழங்குகின்றது. அதாவது ' சகல மக்களும் வன்முறை, பட்டினி, நோய், சித்திரவதை, பாகுபாடு ஆகிய பயங்கரவாதப்பிடியிலிருந்து விடுதலை பெற்று சுதந்திரமாக வாழவே விரும்புகின்றனர்."

1979 இலிருந்து பல நாடுகள் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக கண்காணிப்புக்குட்படத் தொடங்கின. 1995 இல் எல் சல்வடோர், கம்பொடியா, ஹெயிட்டி, ருவண்டா, புரூண்டி ஆகிய நாடுகளில் ஐ. நா தன் கவனத்தைச் செலுத்தியது. 1993 ஜுன் 14 இல் வியட்னாமில் நடந்த 2வது மனித உரிமைகள் மகாநாடு பெண்கள் உரிமைகள் பற்றி கவனம் செலுத்தியது. இலங்கையில் யுத்த நிலையின் போது உரிமை மீறல்கள் தொடர்பாக கவனத்தில் எடுத்தது.

இலங்கை இப்பிரகடனம் ஐக்கிய நாடுகள் சபையினால் நடைமுறைப்படுத்தப்பட்ட வேளையில் இலங்கை ஐ.நா.வில் அங்கத்துவம் பெற்றிருக்கவில்லை. ஆனால் ஆங்கிலேய காலனித்துவத்திடமிருந்து இலங்கை அதே ஆண்டில் தான் சுதந்திரத்தை பெற்றுக் கொண்டது. நாம் ஏற்கெனவே பார்த்த சர்வதேச மனித உரிமை பிரகடனத்தின் சரத்தில் எவற்றை இலங்கைத் தீவில் வாழும் மக்களுக்கு சாதகமாக இலங்கை ஆட்சியாளர் பாவித்துள்ளார்கள்? உண்மையை கூறுவதானால் சர்வதேச மனித உரிமை பிரகடனத்தில் குறிப்பிட்டுள்ள அத்தனை சரத்துக்களையும் இலங்கை மீறியுள்ளதற்கான ஆதாரங்கள் பலதை உதாரணப்படுத்தலாம்.

மனித உரிமைகள் என்பது சமாதானத்துக்கும், பாதுகாப்புக்கும், பொருளாதார அபிவிருத்திக்கும், சமூக சமத்துவத்துக்கும், பூரணத்துவம் வாய்ந்த ஊடகமாக உள்ளது. ஐ. நா. தாபனம இந்த மனித உரிமைகளை வெளிப்படுத்தவும், மேம்படுத்தவும், பாதுகாக்கவும் ஒரு மையமாகச் செயல்படுகிறது. இலங்கை சுதந்திரம் பெற்ற வேளையிலே குடியுரிமை, வாக்குரிமை பற்றி எடுத்துக் கூறும் இருபத்தியோராம் உறுப்புரையை மீறியது. அதாவது மலையகத் தோட்டத் தொழிளாலர்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டது. இதை தொடர்ந்து 1956 ஆம் ஆண்டு சிங்களச்சட்டம் மூலம் சரத்து 2 உம் 3 உம் மீறப்பட்டன. 1956 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட இனக் கலவரங்கள் மூலம் சாரம் 3, 5, 12, 17 ஆகியவை மீறப்பட்டுள்ளன.

நூறு ஆண்டுகளுக்கு மேலாக பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வந்த மக்களை 1964 ஆம் ஆண்டு சிறிமா சாஸ்திரி ஒப்பந்தம் நாடு கடத்தியதன் மூலம் சாரம் 4, 15, 23 ஆகியவை மீறப்பட்டுள்ளன. தமிழ் மாணவர்கள் சம கல்வி மறுக்கப்பட்டு தரப்படுத்தல் அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம் சாரம் 26 மீறப்பட்டுள்ளது. தொடர்ச்சியான அவசரகால நிலையுடன் கூடிய பயங்கரவாதச் சட்டம் மூலம் சரத்துக்கள் 2, 3, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 மீறப்பட்டுள்ளன. இவ்வாறு அடிக்கிக் கொண்டு போகலாம். இந்நிலை யுத்தகாலத்தில் மிகைத்திருந்தது.

இலங்கை போன்ற நாடுகளில் இனப்படுகொலை, சிறுபான்மையினர் ஒதுக்கப்படல், கல்வி, வேலை வாய்ப்புக்களில் அசமத்துவ நிலை, எதேச்சையாகக் கைது செய்யப்படல், காணாமற் போதல், தடுப்புக்காவல் தண்டனைகள், சிறைக்குள் படுகொலை, ஆகிய மனித உரிமை மீறல்கள் இனிமேலும் நடைபெறாதவாறு ஐ.நா சட்டரீதியான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். மனித உரிமைகள் ஜனநாயகத்தின் ஆணிவேர், உயிர் நாடி, அது சகலராலும் மதிக்கப்பட அது பற்றிய விழிப்புணர்வு தேவை.