Wednesday 16 November 2011

பீ.எம்.புன்னியாமீன்: மௌனமாய்ப் பெய்யும் பெருமழை! : என்.செல்வராஜா.

உலகெங்குமுள்ள ஈழத்துத் தமிழ் எழுத்தாளர்களின் விபரங்களைத் திரட்டித் தனது சொந்த முயற்சியினால் நவமணி, தினக்குரல் போன்ற ஊடகங்களிலும், பின்னர் அவற்றைத் தொகுத்து பல்தொகுதிகளாக நூலுருவிலும் வெளியிட்டு வந்தவர் பி.எம்.புன்னியாமீன். அண்மையில் மற்றுமொரு சாதனையாளராக அவர் தன்னை இனம்காட்டிக் கொண்டிருக்கிறார். கடந்த ஓராண்டில் பல்வேறு துறைகளிலும், பெரியதும் சிறியதுமான 7500 கட்டுரைகளை எழுதி அவற்றைத் தமிழ் விக்கிபீடியாவில் பதிவேற்றம் செய்து புதிய சாதனையொன்றை நிகழ்த்தியுள்ளார். இச்சாதனை 2010ம் ஆண்டு, நவம்பர் 14ம் திகதி முதல் 2011ம் ஆண்டு, நவம்பர் 13ம் திகதி வரையிலான காலப்பகுதியில் இவரால் நிகழ்த்தப்பட்டது. இதனை உலகளாவிய ரீதியில் தமிழ் மின்-ஊடகமொன்றில் தனியொரு மனிதனால் நிகழ்த்தப்பட்ட சாதனையாகக் கருதுகின்றேன்.

1970ம் ஆண்டுகளில் இலக்கியத்துறையில் ஈடுபாடுகொள்ள ஆரம்பித்த திரு பீ.எம்.புன்னியாமீன் இதுவரை 166 சிறுகதைகளையும், ஒரு நாவலையும், கல்வி, கலை, இலக்கியம், ஆய்வியல், அரசியல், விளையாட்டு, சமூகவியல்; ஆகிய பல்வேறு துறைகளில் 15000க்கும் மேற்பட்ட கட்டுரைகளையும் எழுதியவராவார். இவர் இதுவரை  176 தமிழ் நூல்களை எழுதி  வெளியிட்டுள்ளார்.

ஆரம்ப காலங்களில் இலங்கை, இந்தியா மற்றும் புலம்பெயர் தமிழர்கள் வாழும் நாடுகளில் வெளிவரும் தமிழ் இதழ்களிலும், பத்திரிகைகளிலும் எழுதிவந்த இவர் அண்மைக்காலமாக இலத்திரனியல் ஊடகங்களில் அதிகமாக எழுதி வருகின்றார். லண்டனிலிருந்து வெளிவரும் தேசம்-இணையத்தில் இவரது பல அரிய கட்டுரைகளும் அரசியல் ஆய்வுகளும் வெளிவந்துள்ளன.
அண்மையில் சப்ரகமுவ பல்கலைக்கழக தமிழ்த்துறையின் இறுதியாண்டு மாணவியான செல்வி எம்.ஐ.எப் நபீலா என்பவர் “இலங்கையில் தமிழ் எழுத்தாளர்களும் இணையப் பாவனையும்” எனும் தலைப்பில் தமிழ் ஜேர்னலிஸ்ட் எனும் இணையத்தில், 2010 டிசம்பர் 29ம் திகதி எழுதிய ஓர் ஆய்வுக் கட்டுரையில் உலகளாவிய ரீதியில் செயல்படும் 183 இணையத் தளங்களில் பீ.எம்.புன்னியாமீனின் ஆக்கங்கள் இடம்பெற்றுள்ளதைச் சுட்டிக்காட்டியிருக்கிறார். அத்துடன், திரு புன்னியாமீனது கட்டுரைகள் இடம்பெற்ற அந்த 183 இணையத்தளங்களின் முகவரிகளையும் பட்டியலிட்டுக் குறிப்பிட்டிருந்தார்.

கடந்த ஆண்டு இறுதியிலிருந்து விக்கிப்பீடியாவுடன் திரு புன்னியாமீனுக்கு நெருக்கமான உறவு ஏற்பட்டது. உலகளாவிய ரீதியில் விக்கிப்பீடியா 282 மொழிகளில் வெளிவருவதும், அதிக வாசகர்களால் வாசிக்கப்படும் இணையத் தளங்களின் வரிசையில் 5வது இடத்திலிருப்பதும் தெரிந்ததே. விக்கிப்பீடியா குழுமத்தில் தமிழ் விக்கிப்பீடியாவில் இவர் 2010 நவம்பர் 14ம் திகதி இணைந்து ஆரம்பகாலத்தில், இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் மற்றும் வரலாற்று அறிஞர்கள் ஆகியோரை அங்கு அறிமுகம் செய்துவந்தார். பின்னாளில் தொடர்ந்து இலங்கை அரசியல், பொருளாதாரம், வரலாறு, கலைத்துவ அம்சங்கள் மற்றும் இலங்கை எழுத்தாளர்களின் நூல்கள் ஆகியவற்றை பதிவு செய்ததுடன், அண்மைக் காலமாக உலகளாவிய ரீதியில் கிரிக்கெட் வீரர்களைப் பற்றியும் எழுதிவருகின்றார். மேலும் இலங்கையில் மட்டுமல்லாமல் இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், பர்மா (மியன்மார்) போன்ற நாடுகளில் உள்ள தமிழ் முஸ்லிம் எழுத்தாளர்கள்; பற்றியும் தமிழ்பேசும் முஸ்லிம்களால் வெளியிடப்பட்ட சிற்றிதழ்கள் பற்றியும் எழுதிவருகின்றார்.

தமிழ் விக்கிப்பீடியாவில் இவரின் கட்டுரையாக்கம் தொடர்பான பதிவில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 14, 2010 முதல் மார்ச்சு16, 2011 வரையிலான காலகட்டத்தில் இவர் முதலில் 500 கட்டுரைகளையும் எழுதியுள்ளார். தொடர்ந்து இவரால் நவம்பர்14, 2010 முதல் ஏப்ரல் 5, 2011 வரையிலான காலப்பகுதியில் 1000 கட்டுரைகளும், ஏப்ரல் 6, 2011 முதல் மே 5, 2011 வரையிலான காலப்பகுதியில் 2000 கட்டுரைகளும், மே 6, 2011 முதல் ஜுன் 22, 2011 வரையிலான காலப்பகுதியில் 3000 கட்டுரைகளும், ஜுன் 23, 2011 முதல் ஓகஸ்ட் 22 2011 வரையிலான காலப்பகுதியில் 4000 கட்டுரைகளும், ஓகஸ்ட் 23, 2011 முதல் செப்டம்பர் 30 2011 வரையிலான காலப்பகுதியில் 5000 கட்டுரைகளும், அக்டோபர் 1 , 2011 முதல் அக்டோபர் 19 2011 வரையிலான காலப்பகுதியில் 6000 கட்டுரைகளும் அக்டோபர் 20 2011 முதல் நவம்பர் 6 2011 வரையிலான காலப்பகுதியில் 7000 கட்டுரைகளும் நவம்பர் 07, 2011 முதல் நவம்பர் 13, 2011 வரையிலான காலப்பகுதியில் 7500 கட்டுரைகளும் எழுதப்பட்டுள்ளன.

பல்வேறு சமூக, பொருளாதாரப் பணிகளுக்குள்ளும், இடைக்கிடையே வலிந்து வாட்டி வைத்தியசாலை வரை கொண்டுசென்ற நீரிழிவின் பாதிப்புகளுக்குள்ளும் தடம்புரளாமல், மனம் சோர்வடையாமல், இவருக்கு இத்தகைய சாதனைகளைத் தொடர்ந்து செய்யும் மன வலிமையையும், தன்னம்பிக்கையையும் வழங்கிய இறைவனின் அருளை மேலும் வேண்டி அவரை உளமார வாழ்த்திமகிழ்வோம்.

அவரது மின்னஞ்சல் முகவரி: pmpuniyameen@gmail.com
14.11.2011
என்.செல்வராஜா,

நூலகவியலாளர்,
லண்டன்.


crhj;Jiz:

* http://tamiljournalism.wordpress.com/2010/12/29/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE/

* http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D:P.M.Puniyameen

* http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81

இக்கட்டுரை பிரசுரமான ஏனைய ஊடகங்கள்
* http://thesamnet.co.uk/?p=30968 (ஐக்கிய இராச்சியம்) 15 November 2011
* http://www.ilankainet.com/2011/11/blog-post_5870.html (பிரான்ஸ்) 16 November 2011
*http://lankamuslim.org/2011/11/16/%E0%AE%AA%E0%AF%80-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8C%E0%AE%A9%E0%AE%AE/#more-17621 ( இலங்கை) 16 November 2011
* நவமணி (தேசிய வாராந்தப் பத்திரிகை- இலங்கை)  20 November 2011
* http://www.tamilmurasuaustralia.com/2011/11/blog-post_2303.html  தமிழ் முரசு (அவுஸ்திரேலியா) 20 November 2011

No comments:

Post a Comment