Saturday, 16 June 2012

அரபுலகின் நம்பிக்கை நட்சத்திரமாக எதிர்பார்க்கப்படும் கலாநிதி முஹம்மது முர்ஸி - புன்னியாமீன்

 மக்கள் புரட்சியின் பின் எகிப்தின் மக்களாட்சிக்கான 
                                          முதலாவது  ஜனாதிபதித் தேர்தல்.

                        அரபுலகின் நம்பிக்கை நட்சத்திரமாக எதிர்பார்க்கப்படும் 
                                                   கலாநிதி முஹம்மது முர்ஸி  
                                                                   

மக்கள் புரட்சியின் மூலம் " முபாரக்கின் சர்வாதிகார ஆட்சி முடிவுக்கு வந்ததன் பின்னர் எகிப்தில் முதலாவது ஜனாதிபதித் தேர்தல் 2012 மே மாதம் 23, 24 ஆம் திகதிகளில் நடைபெற்றது. இதில் 5 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர். எகிப்தின் அதிகாரமுள்ள ஜனாதிபதிப் பதவியை பெற்றுக்கொள்ள மொத்தம் 13 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் எந்தவொரு வேட்பாளரும்  ஐம்பது சதவீத பெரும்பான்மையைப் பெறவில்லை. இஃவானுல் முஸ்லிமீனின் அரசியல் பிரிவான சுதந்திரத்திற்கும் நீதிக்குமான கட்சியின் வேட்பாளர் கலாநிதி முஹம்மது முர்ஸி 5764952 வாக்குகளைப் பெற்று முதலிடத்தைப் பெற்றுக்கொண்டார். அது அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளின் 24.7 வீதமாகும். முபாரக் ஆட்சியின் இறுதிக் காலக்கட்டத்தில் பிரதமர் பதவி வகித்த அஹ்மத் ஸபீக் 5505327 வாக்குகளுடன் (23.6வீதம்) இரண்டாம் இடத்தைப் பெற்றார். இதன்படி எதிர்வரும் 16, 17 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள மீள் சுற்றுத் தேர்தலில் இருவரும் போட்டியிடுகின்றனர். பல தசாப்தங்களாக எதிரும் புதிருமாக இருந்துவந்த இரண்டு அணிகளை இந்த இரண்டு வேட்பாளர்களும் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர்.

எகிப்திய ஜனாதிபதித் தேர்தலின் இரண்டாம் சுற்றில் கலாநிதி முர்ஸிக்கு ஆதரவளிப்பதாக எகிப்திய தஃவா ஸலபிய்யா அமைப்பின் சுறா சபை அறிவித்துள்ளது. அதேவேளை முன்னாள் இஹ்வான் உயர் மட்ட உறுப்பினரான அப்துல் முன்இம் அபுல் புதூஹ்வும் தனது ஆதரவை முஹம்மது முர்ஸிக்கு வழங்கவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் எகிப்திய மக்கள் எழுச்சியின் வேட்பாளராக முஹம்மது முர்ஸியை தாங்கள் கருதுவதாக பொது வாலிப எழுச்சி அமைப்புகள் அறிவித்துள்ள அதேவேளை அஹ்மத் ஸபீக்கை எகிப்திய சர்வாதிகார ராஜாங்கத்தின் எச்சம் என்றும் எகிப்தின் முன்னாள் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள ஆயுள் தண்டனையை ”இது நீதிமன்றத்தின் தீர்ப்பல்ல இது ஒரு அரசியல் தீர்ப்பு” என்றும் தெரிவித்துள்ளன.

எகிப்திய ஜனாதிபதித் தேர்தலின் இரண்டாம் சுற்றில் நீதியைத் தெரிவு செய்யுமாறு அனைத்து எகிப்தியர்களையும் அல்லாமா யூசுஃப் அல் கர்ளாவி கோரியுள்ளார். தேர்தலை பகிஸ்கரிக்குமாறு கோருவது குறித்து எச்சரித்த அவர் அப்படிச் செய்வது சாட்சி சொல்ல மறுப்பதைப் போன்றது எனவும் தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிலையில் எகிப்தில் இரண்டாம் கட்ட தேர்தலில்  வெற்றிவாய்ப்பு அதிகம் உள்ள வேட்பாளராக இஃவான்களின் வேட்பாளர் முஹம்மது முர்ஸி கருதப்படுகின்றார். எகிப்தில் மட்டுமல்ல முஸ்லிம் உலகிலும் இவர் வெற்றி பெறவேண்டுமென எதிர்பார்க்கப்படுகின்றது. குறிப்பாக இவர் வெற்றி பெறுவது முஸ்லிம் உலகின் எழுச்சிக்கு வித்தாகலாம் என்பது சிலரின் வாதமாகவும் உள்ளது.

கலாநிதி முஹம்மத் முர்ஸி இஹ்வான்களால் உருவாக்கப்பட்ட சுதந்திரத்திற்கும் நீதிக்குமான கட்சியின் தலைவராவார். அத்துடன் இஹ்வானுல் முஸ்லிமூன் இயக்கத்தின் ‘மக்தபுல் இர்ஸாத்’ என அழைக்கப்படும் உயர் வழிகாட்டல் சபையின் அங்கத்தவராகவும் இருந்தவர். அரசியல் கட்சி உருவாக்கப் பட்ட பின்னர், முழுநேர அரசியல் பணியில் ஈடுபடுவதற்காக இயக்கத்தின் வேண்டுகோளின் பெயரில் மக்தபுல் இர்ஸாதிலிருந்து அவர் ராஜினாமா செய்தார். ஹஸ்னி முபாரக்கின் ஆட்சிக்கு எதிரான செயற்பாடுகளில் இவர் முக்கிய பங்கெடுத்தார்.

எகிப்தின் கிழக்கு மாகாணமான ஸர் கிய்யாவில் அத்வா எனும் கிராமத்தில் 1951 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பிறந்த இவரது முழுப் பெயர் முஹம்மத் முர்ஸி ஈஸா அய்யாத் என்பதாகும். 1975 இல் கெய்ரோ பல்கலைக் கழகத்தில் பொறியியல் துறையில் இளமாணிப் பட்டத்தையும் 1978 இல் முதுமாணிப் பட்டத்தையும் பெற்றுக்கொண்டார். 1982 இல் அமெரிக்காவிலுள்ள தென் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பொறியியல் துறையில் கலாநிதிப் பட்டத்தைப் பெற்றார்.

கெய்ரோ பல்கலைக்கழகத்திலும் ஐக்கிய அமெரிக்காவின் தெற்கத்திய கலிஃபோர்னியா பல்கலைக்கழக பொறியியல் பீடத்திலும் கடமையாற்றியுள்ளார். 1982 மற்றும் 1985 க்கு இடைபட்ட காலத்தில் கலிஃபோர்னியா வட ரிட்ஜ் (North Ridge in California) பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராகவும் 1985 இலிருந்து 2010 ஆண்டுவரை சாகஜிக்  (The University of Zagazig) பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தின் மூலப்பொருள்கள் பொறியியல் துறையின் பேராசிரியராகவும், தலைவராகவும் கடமையாற்றியுள்ளார். எண்பதுகளில் அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசாவிலும் (NASA)  கடமையாற்றியுள்ளார். இங்கு “உலோகங்களில் metal surface treatment” என்ற துறையில் அதிக ஆய்வுகள் செய்துள்ளார்.

கலாநிதி முர்ஸி கடின உழைப்புக்கு பெயர் போனவர். அவர் பணியாற்றிய பல்வேறு துறைகளில் அர்ப்பணிப்போடு செயற் பட்டு, சிறந்து விளங்கினார். சிறந்த அரசியல் தலைவரான அவர், தனது ஆற்றல்களையும் திறன்களையும் நடைமுறையில் நிரூபித்தார். அதன் மூலம் ஒரு உறுதியான ஆற்றல் மிக்க, தீர்க்கமான இஸ்லாமிய அரசியல் முற்போக்கு தலைவராக உருவாகியுள்ளார் . இவர் நடைமுறை உற்பத்தி தீர்வுகள் தொடர்பாக எகிப்தில் தொழில் துறையின் பல முக்கிய பிரிவுகளில் ஆராய்ச்சிகளை செய்துள்ளார்.

சர்வாதிகார அடக்குமுறைகளையும் மற்றும் தூக்கியெறியப்பட்ட ஆட்சியின் அடக்குமுறை நடவடிக்கைகளையும் தொடர்ந்து உறுதியாக எதிர்த்து வந்தமையினால் முர்ஸி பல முறை கைது செய்யப்பட்டு சிறை வாழ்க்கையை அனுபவித்துள்ளார். 2005 தேர்தல் முறைகேட்டுக்கும் துஸ்பிரயோகத்திற்கும் ஆளானபோது, அதற்கெதிரான ஆர்ப்பாட்டங்களில் கலாநிதி முர்ஸி முக்கிய பங்கெடுத்தார். அவர் நீதிபதிகளின் சுதந்திரத்தை ஆதரித்து செயற்பட்டார். தேர்தல் ஊழல்கள் தொடர்பாக வெளிப்படையாகப் பேசிய நீதிபதிகளைத் தண்டிப்பதையும் அவர் கடுமையாக எதிர்த்தார். 2006 மே 18 ஆம் திகதி கலாநிதி முர்ஸி மக்கள் விரோத இராணுவத்தினால் கைதுசெய்யப்பட்டு ஏழு மாதங்கள் சிறை வைக்கப்பட்டார்.


அவர் எகிப்திய புரட்சியின் ஆரம்ப நாட்களில் ஜனவரி 28, 2011 அன்று ‘கோபத்திற்குரிய வெள்ளிக்கிழமை’ காலை இடம்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தின்போது அவர் மீண்டும் கைது செய்யப்பட்டார். அவருடன் பெருந் தொகையான இஹ்வான்களும் கைதுசெய்யப்பட்டனர். எகிப்தில் இடம்பெற்ற அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில் இஹ்வான்களைக் கலந்துகொள்ளாமல் தடுத்து நிறுத்தும் ஒரு முயற்சியாகவே இது இருந்தது. புரட்சியின்போது சிறைகள் உடைக்கப்பட்டு, கைதிகள் பலர் தப்பினர். ஆனால் எப்போதும் எல்லாவற்றிலும் ஒழுங்கு முறைகளை மட்டுமே பேணும் முஹம்மது முர்ஸி அவரது சிறை கூடத்தில் இருந்து வெளியேற மறுத்துவிட்டார். அங்கிருந்தவாறு செய்மதி, தொலைக்காட்சி மற்றும் செய்திச் சேவைகளை தொடர்புகொண்ட அவர்,  நீதித்துறை அதிகாரிகளை சிறைக்கு வந்து, கைதுசெய்யப்பட்ட இஹ்வான் தலைவர்களது சட்டநிலை தொடர்பாக ஆராயுமாறு வேண்டினார். ஆனால் எவரும் அங்கு சென்று பார்கவில்லை.

கலாநிதி முஹம்மது முர்ஸி மட்டுமல்ல ஹ{ஸ்னி முபாரக்கின் அநியாயம் அவரது குடும்பத்தையும் விட்டுவைக்கவில்லை . அவரது மகன், டாக்டர் அஹமத் 2000 ஆம் ஆண்டில் பாராளுமன்றத்தில் தனது தந்தை அறிக்கை ஒன்றை சமர்ப்பித்த பின்னர் கைது செய்யப்பட்டார். அவர் தனது தந்தை ‘மக்கள் சட்டமன்றத்தில்’ ஒரு பாராளுமன்ற உறுப்பினராக இருந்தபோது 3 முறை கைது செய்யப்பட்டுள்ளார்.

2000 ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில் கலாநிதி முஹம்மது முர்ஸி இஹ்வான் அமைப்பின் பாராளுமன்ற குழு தலைவராக மிகவும் தாக்கமுள்ள, செல்வாக்குள்ள முக்கிய நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார் . மக்களுக்கு எதிரான அநீதிகளுக்கு எதிராக செயல்பட்டுள்ளார் . இதன் காரணமாக சர்வதேச அரங்கில் இவர் 2000 ஆம் ஆண்டு தொடக்கம் 2005 ஆம் ஆண்டுவரையான காலத்திற்கான சிறந்த பாராளுமன்ற உறுப்பினராகவும் தெரிவானார். 2005 பாராளுமன்றத் தேர்தலின் முதற்கட்ட வாக்குப் பதிவின்போது கலாநிதி முர்ஸி, தனக்கு அடுத்து வந்த வேட்பாளரை விடவும் அதிகூடிய வாக்குகளைப் பெற்றார். ஆனால், இரண்டாம் கட்டத் தேர்தல் நடந்தபோது அவரது போட்டி வேட்பாளர் வென்றதாக அறிவிக்கப்பட்டது.

கலாநிதி முர்ஸி இஹ்வானுல் முஸ்லிமூன் இயக்கத்தின் அரசியல் பிரிவில் முக்கிய பாத்திரத்தை வகித்தவர். அத்துடன் அந்தப் பிரிவின் மேற்பார்வையாளராகவும் இருந்தவர். 2004 இல் இயக்கம் முன்னெடுத்த சீர்திருத்த முனைப்பின்போதும், 2007 இல் வெளியிட்ட அரசியல் நிகழ்ச்சித் திட்டத்தின்போதும் இயக்கத்தின் அரசியல் பிரிவு முக்கிய பங்கு வகித்தது. 2010 பாராளுமன்றத் தேர்தலின்போது அரசியல் செயற்பாடுகளை வழிநடத்துவதில் அவர் முன்னணியில் இயங்கினார்.

மீண்டும் எகிப்தில் சு10டுபிடித்துள்ள ஜனாதிபதி தேர்தலில் களத்தில் பிரகாசமாக மின்னும் தாரகையாக கலாநிதி முஹம்மது முர்ஸி வெளிப்படுகிறார். இன்னும் சில தினங்களில் நடைபெறபோகும் ஜனாதிபதி தேர்தலில் பின்னர் இவர் பற்றிய வெற்றி அறிவிப்பை இஸ்லாத்தின் ஒரு கட்ட அரசியல் வெற்றியாக கண்டுகொள்ள முடியும் என எகிப்தும் அரபுலகும் எதிர்பார்த்துள்ளது.

No comments:

Post a Comment