Wednesday 14 November 2012

இஸ்லாமிய புதுவருடம், ஒரு சிறு விளக்கம் - புன்னியாமீன்

இஸ்லாமிய புதுவருடம், ஒரு சிறு விளக்கம் - புன்னியாமீன்

(இஸ்லாமிய புதுவருடம் தொடர்பாக சிறு விளக்கமொன்றினைத் தரும் படி சிலபிறமதச் சகோதரர்கள் முகநூல் மூலமாகவும், தொலைபேசி மூலமாகவும் என்னைக் கேட்டுக்கொண்டதற்கிணங்க இதனை எழுதுகின்றேன்.)

'சூரிய சுழற்சியை' அடிப்படையாக கொண்டே தமிழ், சிங்கள,  ஆங்கில வருடங்கள் கணிக்கப்படுகின்றன. ஆனால் இஸ்லாமிய புதுவருடம் சந்திர சுழற்சியை அடிப்படையாக கொண்டு கணிக்கப்படுகின்றது. இதன்படி இஸ்லாமிய புது வருடத்தின் முதல் மாதமாக முஹர்ரம் திகழ்கின்றது. 'ஹிஜ்ரி' ஆண்டு என்பது அண்ணல் பெருமானார் முஹம்மது (ஸல்) அவர்கள் மக்காவை விட்டு மதீனாவுக்குப் புலம்பெயர்ந்த 'ஹிஜ்ரத்' பயணத்தை அடிப்படையாகக் கொண்டு நிர்ணயிக்கப்பட்டதாகும்.

முற்றிலும் சந்திரனின் சுழற்ச்சியை அடிப்படையாக கொண்ட இஸ்லாமிய நாட்காட்டி 638 (கிபி) அன்று நபி முஹம்மது (ஸல்) அவர்களின் நெருங்கிய தோழரும், இரண்டாவது கலிபாவுமான உமர் பின் கத்தாப் அவர்களால், அவர் காலத்தில் இருந்த பல்வேறு நாட்காட்டி பிரச்சனைகளை முடிவுக்கு கொண்டுவர அறிமுகப்படுத்தபட்டது. உமர்(ரழி), அறிஞர்களுடன் கலந்தாலோசித்து இஸ்லாமிய காலம் கணக்கிடும் முறையை ஹிஜ்ராவிலிருந்து தொடங்க முடிவு செய்யப்பட்டது. ஹிஜ்ராவின் முதல் மாதமாகிய முஹர்ரமின் முதல் நாளிலிருந்து இஸ்லாமிய நாளேட்டை ஆரம்பிப்பதாகவும் முடிவு செய்யபட்டது. முஹர்ரம் 1, 1 ஹிஜ்ரி என்பது ஆங்கில நாளேட்டில் ஜுலை 16, 622 (கிபி) குறிக்கிறது. இஸ்லாத்தில் புது வருடத்திற்கென தனியான எந்தக் கொண்டாட்டங்களும் இல்லை. என்றாலும், இஸ்லாமிய மாதக் கணிப்பீட்டையும், ஒரு வருடம் முடிகின்றது. மறு வருடம் தொடர்கின்றது என்ற உண்மையுமாவது உணர்ந்திருப்பது அவசியமாகும்.

இ‌‌ஸ்லா‌மிய ஆ‌ண்டிலு‌ம் ம‌ற்ற எ‌ல்லா ஆ‌ண்டுகளை‌ப் போல 12 மாத‌ங்க‌ள் வகு‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன.

இஸ்லாமிய மாதங்கள்
1. முஹர்ரம்: இ‌ஸ்லா‌மிய ஆ‌ண்டி‌ன் முத‌ல் மாதமாகு‌ம்.
2. ஸஃபர்
3. ரபீவுல் அவ்வல்
4. ரபியுல் ஆகிர்
5. ஜமாத்துல் அவ்வல்
6. ஜமாத்துல் ஆகிர் 
7. ரஜப்
8. ஷஃபான்
9. ரமலான்
10. ஷவ்வால்
11. துல்கஃதா
12. துல்ஹஜ் : இ‌ஸ்லா‌மிய ஆ‌ண்டி‌ன் ‌நிறைவு மாத‌ம் இது. இ‌ஸ்லா‌‌மிய ஐ‌‌ம்பெரு‌ம் கடமைக‌ளி‌ல் ஒ‌ன்றான ஹ‌ஜ் கடமை ‌நிறைவே‌ற்ற‌ப்படு‌ம் மாத‌ம் இது.

கிறித்துவ ஆண்டுக்கும் ஹிஜ்ரி ஆண்டுக்குமுள்ள வேற்றுமைகள்:

சூரியனைக் கொண்டு கணக்கிடப்பட்டு வரும் ஆண்டுக்கு இயேசு கிறித்து பிறப்பை மையமாக வைத்து கிறித்து பிறப்பதற்கு முன் (கி.மு.) என்றும், கிறித்து பிறந்த பின் (கி.பி.) என்றும் குறிப்பிடப்படுகிறது. இதன்படி 24 மணிநேர கால அளவினை ஒரு நாளுக்குச் சமமாக்கிக் கொள்கிறோம். கிறித்துவ ஆண்டுக் கணக்கு சூரிய சுழற்சியை அடிப்படையாகக் கொண்டு நாட்கள் பெரும்பாலும் 365 ஆகவும், ஹிஜ்ரி ஆண்டு சந்திர பெயர்ச்சியை அடித்தளமாகக் கொண்டு நாட்கள் பெரும்பாலும் 355 ஆகவும் கணக்கிடப்பட்டுள்ளன. இந்த கணக்கின்படி மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை சந்திர ஆண்டு ஒரு மாதம் அதிகரிக்கிறது. 36 ஆண்டுகளுக்கு ஒருமுறை சந்திர ஆண்டு ஒரு வருடம் அதிகரித்து விடுகிறது எனவும் அறிகிறோம்.

இதன்படி, சூரிய ஆண்டு ஒரு குறிப்பிட்ட மாத காலத்தில் ஒரு குறிப்பிட்ட பருவம் என்று உலகம் உள்ளளவும் நிலைத்திருக்கும். இதில் பெரும்பாலும் அதிக வேற்றுமை இருக்க முடியாது. பருவ காலங்களிலும் அதிக வித்தியாசம் இருக்க முடியாது. வசந்த காலம், கோடைக் காலம், மழைக் காலம், குளிர் காலம் ஆகியன கிறித்து ஆண்டின்படி குறிப்பிட்ட மாதங்களில் தோன்றுகின்றன. பருவங்கள் தோன்றுவது கொண்டே மனிதன் செயல்பட முடியும்.

ஆனால் அதேசமயம் ஹிஜ்ரி மாதங்களுக்கும், பருவங்களுக்கும் எவ்வித சம்பந்தமும் கிடையாது. காரணம் மூன்று சூரிய ஆண்டுக்கு ஒருமுறை ஒரு ஹிஜ்ரி மாதமும், முப்பத்தாறு சூரிய ஆண்டுகளுக்கொரு முறை பன்னிரண்டு ஹிஜ்ரி மாதங்களும் சுற்றி வருகின்றன. பிறையாண்டுகளும், பருவ காலங்களும் மாறி மாறி வருகின்றன.

No comments:

Post a Comment