Sunday 1 June 2014

புத்தரின் படுகொலை

புத்தரின் படுகொலை
*************************
- எம்.ஏ.நுஃமான் -

நேற்று என் கனவில்
புத்தர் பெருமான் சுடப்பட்டிறந்தார்.
சிவில் உடை அணிந்த
அரச காவலர் அவரைக் கொன்றனர்.
யாழ் நூலகத்தின் படிக்கட்டருகே
அவரது சடலம் குருதியில் கிடந்தது.

இரவில் இருளில்
அமைச்சர்கள் வந்தனர்.
'எங்கள் பட்டியலில் இவர்பெயர் இல்லை
பின் ஏன் கொன்றீர்?'
என்று சினந்தனர்.

'இல்லை ஐயா,
தவறுகள் எதுவும் நிகழவே இல்லை
இவரைச் சுடாமல்
ஓர் ஈயினைக் கூடச்
சுடமுடியாது போயிற்று எம்மால்
ஆகையினால்......
என்றனர் அவர்கள்.

'சரி சரி
உடனே மறையுங்கள் பிணத்தை'
என்று கூறி அமைச்சர்கள் மறைந்தனர்.

சிவில் உடையாளர்
பிணத்தை உள்ளே இழுத்துச் சென்றனர்.
தொண்ணூறாயிரம் புத்தகங்களினால்
புத்தரின் மேனியை மூடி மறைத்தனர்
*சிகாலோவாத சூத்திரத்தினைக்
கொழுத்தி எரித்தனர்.
புத்தரின் சடலம் அஸ்தியானது
*தம்ம பதமும்தான் சாம்பரானது.

-கவிஞர் எம்.ஏ.நுஃமான்

ஆம் இன்று யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்ட 33வது ஆண்டு நிறைவு இன்று (01.06.2014)

யாழ்ப்பாணம் பொது நூலகம் எரிப்பு என்பது இலங்கை இனஅழிப்பு நடவடிக்கையில் ஒரு முக்கிய கறையாக வரலாற்றில் சிவப்பு வரிகளால் எழுதப்பட்ட நாள்.

தென்கிழக்காசியாவிலேயே மிகப்பெரிய நூலகமாகத் திகழ்ந்த யாழ் நூலகம் இன வெறிக் காடையரால் இலங்கை அரசின் அனுசரணையோடு எரியூட்டப்பட்ட போது கல்வியைக் கண்ணாக கொண்ட தமிழ் சமூகம் உளவியல் ரீதியாக மிகுந்த மன உடைவுக்கு உள்ளாகியது...

இந்த வலியே பின்னாளில் தமிழீழ விடுதலை போராட்டத்திற்கு அதிகம் வலிமை சேர்த்தது...

97,000அரிய நூல்கள் எரியூட்டப்பட்டு கருகிச் சாம்பலாகின. பல பண்டை தமிழ் ஏட்டுச் சுவடிகள் ஆவணங்கள் என இழந்த இழப்புக்கள் இட்டு நிரப்ப முடியாதவை.

No comments:

Post a Comment