Wednesday 7 January 2015

சிறுபான்மை இனத்தவர்கள் இலங்கை அரசியலில் தீர்மான சக்தியா? : புன்னியாமீன்

இலங்கையில் நடைபெறும் ஏழாவது ஜனாதிபதித் தேர்தல் நாளை 08ம் திகதி நடைபெறப் போகிறது. இலங்கையின் அரசியலில் பரபரப்பானதொரு சூழ்நிலைக்கு மத்தியில் நாளை இத்தேர்தல் நடைபெறுவதாக இருந்தாலும், நாட்டில் பரவலாக நோக்குகையில் குறிப்பிடும்படியான பாரிய அளவிலான அசம்பாவித சம்பவங்கள் இடம்பெற்றதாக தகவல்கள் வெளிவரவில்லை. எனவே சாதாரணமானதொரு தேர்தலை எதிர்பார்க்களாம் என்பது அனைவரினதும் எதிர்பார்ப்பாக உள்ளது. ஜனாதிபதித் தேர்தலை நீதியாகவும், அமைதியாகவும் நடத்தி முடிப்பதற்கான விரிவான ஏற்பாடுகளை தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய மேற்கொண்டுள்ளார். வாக்களிப்பு நடைபெற்று முடியும் வரை சுமுகமான சூழ்நிலையைப் பேணும் பொருட்டு பொலிஸாருக்கு விசேடமான அறிவுறுத்தல்களும் அதிகாரங்களும் வழங்கப்பட்டுள்ளன.
வாக்காளர் ஒருவர் எக்கட்சியைச் சார்ந்தவராக இருப்பினும் அவர் கொண்டுள்ள ஜனநாயக உரிமையானது வாக்களிப்பது மட்டுமேயாகும். ஏனைய தரப்பினருக்கு இடையூறு செய்வதோ, தனது அரசியல் கொள்கையை மற்றையவருக்குப் பரப்புரை செய்வதோ வாக்காளரின் கடமைகளல்ல… வாக்காளர் ஒவ்வொருவரும் அமைதிகாக்க முற்படும்போது தேர்தல் தொடர்பான அசம்பாவிதங்கள் தலைதூக்குவதற்கு இடமேயில்லை.
நாட்டின் குடிமக்கள் கொண்டுள்ள அடிப்படை உரிமைகளில் வாக்குரிமை யென்பது மிகப் பிரதானமானதாகும். எனவே வாக்காளர் ஒவ்வொருவரும் அவசியம் வாக்களிக்க வேண்டும். ஒவ்வொரு குடிமகனும் தனக்குரிய ஜனநாயக உரிமையை அலட்சியம் செய்து விடுவது முறையல்ல.
நாடெங்குமுள்ள 160 தேர்தல் தொகுதிகள் உள்ளடங்கலாக நாளைய தினம் நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் 19 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 12,314 வாக்களிப்பு நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 1,50,44,490 பேர் வாக்களிப்பதற்கான தகுதியைப் பெற்றுள்ளனர். தேர்தல் கால பாதுகாப்பு நடவடிக்கைகளில் விசேட அதிரடிப்படையினர் உட்பட 71 ஆயிரம் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இது ஒருபுறமிருக்க 2010 ம் ஆண்டு நடைபெற்ற ஆறாவது ஜனாதிபதி தேர்தலைப்பற்றி சிறிது நோக்குவது பயனுள்ளதாக இருக்கும்.
2010 ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ 57.88 வீத வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டினார். இவர் பொது வேட்பாளர் சரத் பொன்சேக்காவை விட 1,842,749 வாக்குகளை மேலதிகமாகப் பெற்றதுடன்,  இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் கூடுதலான மேலதிக வாக்குகளைப் பெற்ற சாதனையையும் படைத்தார். இத்தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ 16 தேர்தல் மாவட்டங்களில் வெற்றியீட்டியதுடன், 06 மாவட்டங்களில் தோல்வியினை தழுவியிருந்தார்.
இந்த 06 மாவட்டங்களும் சிறுபான்மை சமூகத்தினர் செறிவாக வாழும் மாவட்டங்களாகும். வட மாகாணத்தில் யாழ்ப்பாணம், வன்னி தேர்தல் மாவட்டங்களிலும், கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு, திகாமடுல்லை, திருகோணமலை ஆகிய மாவட்டங்களிலும், மத்திய மாகாணத்தில் தோட்டத் தொழிலாளர் அதிகமாக வாழும் நுவரெலியா மாவட்டத்திலும் இவர் தோல்வியடைந்தார்.
இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல்களில் சிறுபான்மை சமூகத்தினரின் வாக்குகளே ஜனாதிபதியைத் தீர்மானிக்கும் சக்தியாக முன்னைய தேர்தல்களில் இருந்துவந்துள்ளன. ஆனால், 2010ம் ஆண்டு தேர்தல் முடிவானது பெரும்பான்மை இனத்தவர் ஒன்றிணைந்தால் வெற்றி பெறலாம் என்ற உணர்வினை பெரும்பான்மை சமூகத்தினர் மத்தியில் வெளிப்படுத்துவதாக அமைந்திருந்ததை அவதானிக்க முடிந்தது. இந்த நிலை இலங்கையின் எதிர்கால அரசியலுக்கு ஆரோக்கியமானதல்ல.
பொதுவாக பெரும்பான்மை இனத்தவர்கள் அதிகமாக வாழக்கூடிய மாவட்டங்களிலும், தேர்தல் தொகுதிகளிலும் மஹிந்தவின் வெற்றி சுமார் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் நிரூபிக்கப்பட்டது. இந்த வெற்றியும் இதனால் வெளிப்படுத்தப்படக்கூடிய உணர்வலைகளும் மஹிந்தவுக்கு மாத்திரமல்ல எதிர்கால அரசியல் போக்குகளுக்கும் ஒரு புதிய உத்வேகத்தை தோற்றுவித்ததை இவ்விடத்தில் சிந்தித்தல் வேண்டும்.
ஒரு ஜனநாயக நாட்டில் மக்கள் தாம் விரும்பிய தலைவனுக்கோ, கட்சிக்கோ வாக்களிக்க முடியும். இதில் யார் யாருக்கு வாக்களித்தார்கள்? என்று ஆராய்வதால் எவ்வித பலனும் கிட்டிவிடப் போவதில்லை. ஆனால், இலங்கைப் போன்ற பல்லின மக்கள் வாழக்கூடிய ஒரு நாட்டில் குறிப்பாக இனவாத சிந்தனைகளைக் கொண்டுள்ள ஒரு நாட்டில் இவ்விடயத்தைப் பற்றி இன்னும் தீர்க்கமான முறையில் ஆராயப்பட வேண்டியது அவசியமானதாகும்.
இலங்கையில் வாழக்கூடிய சிறுபான்மை சமூகத்தினர் என்றடிப்படையில் தமிழர்கள், முஸ்லிம்களின் அரசியல் நடத்தைகள் கடந்த தேர்தலில் எவ்வாறு அமைந்திருந்தன என்பதை இவ்விடத்தில் சற்று மீள்நோக்கிப் பார்க்கும் போது சில விடயங்களை சிந்தனைக்கு எடுக்கமுடியும்.
இலங்கையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சிறுபான்மை சமூகத்தவர்களே அதிகமாக வாழ்கின்றனர். தேர்தல் முடிவுகளின் படி வடக்கு, கிழக்கு மாகாணங்களின் தேர்தல் தொகுதி ரீதியாக முடிவுகள் பின்வருமாறு அமைந்திருந்தன.
வட மாகாணம்: யாழ்ப்பாண மாவட்டம்
ஊர்காவற்துறை தேர்தல் தொகுதி
மஹிந்த ராஜபக்ஸ 4, 611 46.19%
சரத்பொன்சேக்கா 3,976 39.88 %
பதிவுசெய்யப்பட்ட வாக்குகள் 53,111
அளிக்கப்பட்ட வாக்குகள் 10,321
வட்டுக்கோட்டை தேர்தல் தொகுதி
சரத்பொன்சேக்கா 11,712 62.68%
மஹிந்த ராஜபக்ஸ 4,247 22.73 %
பதிவுசெய்யப்பட்ட வாக்குகள் 63,991
அளிக்கப்பட்ட வாக்குகள் 19,436
காங்கேசந்துறை தேர்தல் தொகுதி
சரத்பொன்சேக்கா 8,216 56.90 %
மஹிந்த ராஜபக்ஸ 4,559 31.57%
பதிவுசெய்யப்பட்ட வாக்குகள் 69,082
அளிக்கப்பட்ட வாக்குகள் 14,933
மானிப்பாய் தேர்தல் தொகுதி
சரத்பொன்சேக்கா 13,390 62.01 %
மஹிந்த ராஜபக்ஸ 5,749 26.62 %
பதிவுசெய்யப்பட்ட வாக்குகள் 71,114
அளிக்கப்பட்ட வாக்குகள் 22,475
கோப்பாய் தேர்தல் தொகுதி
சரத்பொன்சேக்கா 13,151 64.13 %
மஹிந்த ராஜபக்ஸ 4,538 22.13%
பதிவுசெய்யப்பட்ட வாக்குகள் 65,798
அளிக்கப்பட்ட வாக்குகள் 21,133
உடுப்பிட்டி தேர்தல் தொகுதி
சரத்பொன்சேக்கா 8,974 67.20 %
மஹிந்த ராஜபக்ஸ 2,545 19.06 %
பதிவுசெய்யப்பட்ட வாக்குகள் 56,426
அளிக்கப்பட்ட வாக்குகள் 13,955
பருத்தித்துறை தேர்தல் தொகுதி
சரத்பொன்சேக்கா 8,585 69.30 %
மஹிந்த ராஜபக்ஸ 2,361 19.06 %
பதிவுசெய்யப்பட்ட வாக்குகள் 48,613
அளிக்கப்பட்ட வாக்குகள் 12,828
சாவகச்சேரி தேர்தல் தொகுதி
சரத்பொன்சேக்கா 11,599 62.39 %
மஹிந்த ராஜபக்ஸ 4,567 24.57%
பதிவுசெய்யப்பட்ட வாக்குகள் 65,141
அளிக்கப்பட்ட வாக்குகள் 19,450
நல்லூர் தேர்தல் தொகுதி
சரத்பொன்சேக்கா 11,543 70.42 %
மஹிந்த ராஜபக்ஸ 3,554 21.68 %
பதிவுசெய்யப்பட்ட வாக்குகள் 72,588
அளிக்கப்பட்ட வாக்குகள் 16,948
யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதி
சரத்பொன்சேக்கா 7,914 66.17 %
மஹிந்த ராஜபக்ஸ 3,296 27.56 %
பதிவுசெய்யப்பட்ட வாக்குகள் 64,714
அளிக்கப்பட்ட வாக்குகள் 12,414
கிளிநொச்சி தேர்தல் தொகுதி
சரத்பொன்சேக்கா 4,717 75.11 %
மஹிந்த ராஜபக்ஸ 991 15.78 %
பதிவுசெய்யப்பட்ட வாக்குகள் 90,811
அளிக்கப்பட்ட வாக்குகள் 6,566
யாழ்ப்பாண மாவட்டத்தில் 11 தேர்தல் தொகுதிகளில் 10 தேர்தல் தொகுதிகளில் சரத்பொன்சேக்கா வெற்றியீட்டினார். இவர் பெற்ற மொத்த வாக்குகள் 113,877 இது 63.84வீதமாகும். யாழ்ப்பாண மாவட்டத்தில் மொத்தமாக பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் எண்ணிக்கை 721,359 ஆகும். இதில் 185,132 வாக்காளர்களே தமது வாக்குகளைப் பதிவு செய்தனர். இது 25.66 வீத வாக்குப் பதிவுகளாகும். 2005ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது யாழ்ப்பாண மாவட்டத்தில் மொத்தமாக 1.21 வீத வாக்காளர்களே வாக்களித்திருந்தனர். 1988, 1994ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல்களில் முறையே 21.72. 2.97 வீத வாக்காளர்களே வாக்களித்தனர். 1982ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் 46.30 வீத வாக்காளர்கள் வாக்களித்தனர். எனவே 82ம் ஆண்டை அடுத்து வந்த தேர்தல்களில் யாழ்ப்பாண மாவட்ட வாக்காளர்கள் மிகக் குறைவான வாக்கு வீதத்திலே வாக்களித்து வருகின்றனர். முன்னைய காலங்களில் இவர்களின் வாக்களிப்புக்கு சில தடைகள் இருந்திருக்கலாம். தற்போதைய நிலையில் இம்மக்களுக்கு வாக்களிக்க விருப்பற்ற நிலையிருப்பதை அவதானிக்க முடிகின்றது. ஜனநாயக நிலையில் இது ஒரு ஆரோக்கியமான நிலையல்ல.
2010ம் ஆண்டு தேர்தல் முடிவுகளின் படி வன்னித் தேர்தல் மாவட்டத்தில் தேர்தல் தொகுதி ரீதியாக முடிவுகள் பின்வருமாறு அமைந்திருந்தன.
வன்னி மாவட்டம்
மன்னார் தேர்தல் தொகுதி
சரத்பொன்சேக்கா 20,157 70.19 %
மஹிந்த ராஜபக்ஸ 6,656 23.18 %
பதிவுசெய்யப்பட்ட வாக்குகள் 85,322
அளிக்கப்பட்ட வாக்குகள் 29,172
வவுனியா தேர்தல் தொகுதி
சரத்பொன்சேக்கா 31,796 66.02 %
மஹிந்த ராஜபக்ஸ 13,742 28.53 %
பதிவுசெய்யப்பட்ட வாக்குகள் 1,12,924
அளிக்கப்பட்ட வாக்குகள் 49,498
முல்லைத்தீவு தேர்தல் தொகுதி
சரத்பொன்சேக்கா 6,882 73.47%
மஹிந்த ராஜபக்ஸ 1,126 18.43%
பதிவுசெய்யப்பட்ட வாக்குகள் 68,729
அளிக்கப்பட்ட வாக்குகள் 9,625
வன்னி மாவட்டத்தில் 03 தேர்தல் தொகுதியிலுமே சரத்பொன்சேக்கா வெற்றியீட்டினார். இவர் பெற்ற மொத்த வாக்குகள் 70,367 ஆகும் இது 66.86வீதமாகும். வன்னி மாவட்டத்தில் மொத்தமாக பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் எண்ணிக்கை 266,975 ஆகும். இதில் 107,680 வாக்காளர்களே தமது வாக்குகளைப் பதிவு செய்தனர். இது 40.33 வீத வாக்குப் பதிவுகளாகும். 2005ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது வன்னி மாவட்டத்தில் மொத்தமாக 34.30 வீத வாக்காளர்களே வாக்களித்திருந்தனர்.
கிழக்கு மாகாணம் கிழக்கு மாகாணத்தில் திகாமடுல்லை தேர்தல் மாவட்டத்தை நோக்குமிடத்து முடிவுகள் பின்வருமாறு அமைந்திருந்தன.
அம்பாறை தேர்தல் தொகுதி
மஹிந்த ராஜபக்ஸ 73,389 67.94 %
சரத்பொன்சேக்கா 32,895 30.45 %
பதிவுசெய்யப்பட்ட வாக்குகள் 145,479
அளிக்கப்பட்ட வாக்குகள் 108,634
சம்மாந்துறை தேர்தல் தொகுதி
சரத்பொன்சேக்கா 27,003 55.95%
மஹிந்த ராஜபக்ஸ 19,991 41.42%
பதிவுசெய்யப்பட்ட வாக்குகள் 71,442
அளிக்கப்பட்ட வாக்குகள் 48,818
கல்முனை தேர்தல் தொகுதி
சரத்பொன்சேக்கா 32,946 75.76 %
மஹிந்த ராஜபக்ஸ 9,564 21.95 %
பதிவுசெய்யப்பட்ட வாக்குகள் 66,135
அளிக்கப்பட்ட வாக்குகள் 44,030
பொத்துவில் தேர்தல் தொகுதி
சரத்பொன்சேக்கா 54,374 59.69 %
மஹிந்த ராஜபக்ஸ 33,979 37.42 %
பதிவுசெய்யப்பட்ட வாக்குகள் 131,779
அளிக்கப்பட்ட வாக்குகள் 91,862
திகாமடுல்லை மாவட்டத்தில் 04 தேர்தல் தொகுதிகளில் 03 தேர்தல் தொகுதிகளில் சரத்பொன்சேக்கா வெற்றியீட்டினார். இவர் பெற்ற மொத்த வாக்குகள் 153,105 இது 49.94 வீதமாகும். திகாமடுல்லை மாவட்டத்தில் மொத்தமாக பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் எண்ணிக்கை 309,474 ஆகும். இதில் 306,562 வாக்காளர்கள் தமது வாக்குகளைப் பதிவு செய்தனர். இது 73.54 % வீத வாக்குப் பதிவுகளாகும்.
மட்டக்களப்பு தேர்தல் மாவட்டத்தை நோக்குமிடத்து முடிவுகள் பின்வருமாறு அமைந்திருந்தன.
மட்டக்களப்பு தேர்தல் தொகுதி
சரத்பொன்சேக்கா 69,975 68.74%
மஹிந்த ராஜபக்ஸ 28,090 27.59%
பதிவுசெய்யப்பட்ட வாக்குகள் 1,55,537
அளிக்கப்பட்ட வாக்குகள் 1,03,685
கல்குடா தேர்தல் தொகுதி
சரத்பொன்சேக்கா 35,608 60.45%
மஹிந்த ராஜபக்ஸ 20,112 34.14%
பதிவுசெய்யப்பட்ட வாக்குகள் 97,135
அளிக்கப்பட்ட வாக்குகள் 60,186
பட்டிருப்பு தேர்தல் தொகுதி
சரத்பொன்சேக்கா 36,776 80.12%
மஹிந்த ராஜபக்ஸ 5,968 13.00%
பதிவுசெய்யப்பட்ட வாக்குகள் 80,972
அளிக்கப்பட்ட வாக்குகள் 47,065
மட்டக்களப்பு மாவட்டத்தில் 03 தேர்தல் தொகுதியிலுமே சரத்பொன்சேக்கா வெற்றியீட்டினார். இவர் பெற்ற மொத்த வாக்குகள் 146,057 ஆகும் இது 68.93வீதமாகும். மட்டக்களப்பு மாவட்டத்தில் மொத்தமாக பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் எண்ணிக்கை 333,644 ஆகும். இதில் 216,287 வாக்காளர்களே தமது வாக்குகளைப் பதிவு செய்தனர்.
திருகோணமலை மாவட்ட தொகுதி ரீதியான முடிவுகள் வருமாறு
மூதூர் தேர்தல் தொகுதி
சரத்பொன்சேக்கா 32,631 51.09%
மஹிந்த ராஜபக்ஸ 21,002 38.03%
பதிவுசெய்யப்பட்ட வாக்குகள் 85,401
அளிக்கப்பட்ட வாக்குகள் 55,915
திருகோணமலை தேர்தல் தொகுதி
சரத்பொன்சேக்கா 35,887 69.42 %
மஹிந்த ராஜபக்ஸ 13,935 26.9 %
பதிவுசெய்யப்பட்ட வாக்குகள் 86685
அளிக்கப்பட்ட வாக்குகள் 52748
சேருவில் தேர்தல் தொகுதி
மஹிந்த ராஜபக்ஸ 27,932 63.10 %
சரத்பொன்சேக்கா 15,260 34.47 %
பதிவுசெய்யப்பட்ட வாக்குகள் 69,047
அளிக்கப்பட்ட வாக்குகள் 44,832
திருகோணமலை மாவட்டத்தில் 03 தேர்தல் தொகுதிகளில் 02 தேர்தல் தொகுதிகளில் சரத்பொன்சேக்கா வெற்றியீட்டினார். இவர் பெற்ற மொத்த வாக்குகள் 87,661 இது 54.09 வீதமாகும். திருகோணமலை மாவட்டத்தில் மொத்தமாக பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் எண்ணிக்கை 241,133 ஆகும். இதில் 152,428 வாக்காளர்கள் தமது வாக்குகளைப் பதிவு செய்தனர்.
அளிக்கப்பட்ட முடிவுகளைப் பார்க்குமிடத்து இங்குள்ள வாக்காளர்களில் அனைவரும் சரத் பொன்சேக்காவுக்கு மாத்திரமே வாக்களித்துள்ளனர் என்று எடுத்துக் கொள்ள முடியாது. மஹிந்தவுக்கும் சிறுபான்மை வாக்குகள் சென்றடைந்திருக்கும். ஆனால், மேலெழுந்த வாரியாக நோக்குமிடத்து ஒரு தேர்தல் தொகுதியின் தோல்வி, ஒரு தேர்தல் மாவட்டத்தின் தோல்வி என்று கூறும்பொழுது தமிழ், முஸ்லிம் மக்கள் மஹிந்தவுக்கு வாக்களிக்கவில்லை என்ற ஓர் உணர்வினையே ஏற்படுத்தக்கூடிய ஒரு நிலை உருவாகலாம். மஹிந்த ராஜபக்ஸ மேல் மாகாணம் கொழும்பு மாவட்டத்தில் வெற்றிபெற்றாலும்கூட, கொழும்பு மாவட்டத்திலும் சிறுபான்மை சமூகத்தினர் செறிவாக வாழக்கூடிய தேர்தல் தொகுதிகளில் மஹிந்த ராஜபக்ஸ தோல்வியுற்றிருந்தமையும் அவதானிக்கத்தக்க ஒன்றாகும்.
இந்நிலைக்கு என்ன காரணம்? என்பதையும் அவதானித்தல் வேண்டும். வடக்கு, கிழக்கு மாகாணத்தில் வாழக்கூடிய மக்கள் குறிப்பாக தமிழ் மக்கள் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் என்பதில் வாதப்பிரதிவாதமில்லை. மஹிந்த ராஜபக்ஸ இறுதி யுத்தத்தை முன்னெடுத்த ஜனாதிபதி. விடுதலைப் புலிகளின் தோல்விக்குக் காரணமாக இருந்த ஒரு ஆட்சியாளர். இந்நிலையில் மஹிந்த நிராகரிக்கப்பட்டது மக்களின் பார்வையில் நியாயமுண்டு. அதேநேரம், கடைசி யுத்தத்தை முன்னெடுத்த தளபதி பொன்சேக்கா. இவர் தளபதியாக இருக்கும்போது இலங்கையிலுள்ள சிறுபான்மையினர் வந்தேறுகுடிகள் என்று பகிரங்கமாக கூறியவர். மேலும், இலங்கையில் வாழக்கூடிய சிறுபான்மையினர் பெரும்பான்மையினரின் நிகழ்ச்சித் திட்டத்திற்கமையவே வாழவேண்டும் என்று கூறியவர். யுத்த நிலையுடன் ஒப்புநோக்கும்போது மஹிந்தவைவிட பொன்சேக்கா உயர்ந்தவர் என்று எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது.
மறுபுறமாக தமிழர்களின் பிரச்சினைக்கு மஹிந்த ராஜபக்ஸவினால் அரசியல் தீர்வு வழங்கப்படவில்லை என்று கூறப்படுகின்றது. அதேநேரம், பொன்சேக்கா தான் ஆட்சிக்கு வந்தால் அத்தகைய ஒரு தீர்வினை வழங்குவதாக எவ்விடத்திலும் பகிரங்கமாக அறிவிக்கவில்லை.
சர்வதேச ஊடகங்கள் குறிப்பாக மேற்குலக நாடுகள் மஹிந்த ராஜபக்ஸ ஆட்சி அமைப்பதில் விரும்பவில்லை என்பது அவர்களின் நடவடிக்கைகளின் மூலமாக வெளிப்படுகின்றது. குறிப்பாக மஹிந்த ராஜபக்ஸவுக்கு இந்தியா, சீனா போன்ற நாடுகளுக்குமிடையிலான நெருக்கமான உறவின் காரணமாக மேற்குலக நாடுகள் மஹிந்த அரசாங்கத்தை பலவழிகளிலும் தாக்குதல்களுக்கு உட்படுத்தி வந்தமை அறிந்ததே. பொதுவாக இச்சக்திகள் அனைத்தும் இலங்கையில் ஆட்சி மாற்றம் ஒன்று ஏற்பட வேண்டுமென்பதை விரும்பியது உண்மை. இந்நிலையில் இச்சக்திகளின் தூண்டுதலுக்கு சிறுபான்மையினர் இரையானார்களா என்பதும் சிந்திக்க வேண்டிய ஒரு விடயமாகவே இருக்கின்றது.
இங்கு இன்னுமொரு உண்மையை நாங்கள் ஏற்றுக் கொள்ளவே வேண்டும். அதாவது, வடக்கு கிழக்கு பிரதேசங்களில் ஆளும்கட்சி சார்பாக இருந்த சிறுபான்மை அரசியல் தலைவர்கள் தமது மக்களுக்கு உரிய சேவையினை வழங்க தவறிவிட்டார்கள் என்பதையே இம்முடிவுகள் பெருவாரியாக எடுத்துக் காட்டுகின்றன. வடக்கிலும் சரி கிழக்கிலும் சரி, தமிழ் அரசியல்வாதிகளும் சரியே, முஸ்லிம் அரசியல்வாதிகளும் சரியே தத்தமது ஆட்சி அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்ளவும், தாம் சமூகத்தின் பிரதிநிதிகளாக காட்டிக் கொள்ளவும் வேண்டும் என்பதற்காக மேற்கொண்ட வியூகங்களும் இங்கு மக்களால் நேரடியாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளன. எனவே, இது விடயம் குறித்து ஆழமான பார்வையொன்றை செலுத்த வேண்டியுள்ளது. வடக்கு கிழக்கு மாகாணங்களில் ஆட்சி அதிகாரத்திலுள்ள எந்தவொரு அமைச்சராலும், எந்தவொரு முதலமைச்சராலும் அவர்களின் ஆசனங்களை தக்கவைத்துக் கொள்ள முடியவில்லை.
தேர்தல் முடிவு வந்துமுடிந்துவிட்டது. இதனை தற்போது அலசுவதால் எவ்வித நன்மையும் பயக்கப்போவதில்லை. ஆனால், ஒரு உண்மையை நாங்கள் இவ்விடத்தில் விளங்கிக் கொள்ள வேண்டும்.
சிறுபான்மையினரின் ஆதரவு இல்லாமல் பெரும்பான்மையினரால் ஆட்சியை அமைக்க முடியுமென்ற ஒரு நிலை தற்போது இலங்கையில் தோற்றுவிக்கப்பட்டுவிட்டது. இங்கு மஹிந்தவுக்கு இந்நிலை தற்போது சாதகமாக இருககலாம்;. பெரும்பான்மை சமூகத்தினர் ஒன்றிணைய வேண்டும் என்ற ஓர் உணர்வு இனி பெரும்பான்மை அரசியல் கட்சிகளில் ஆணித்தரமான கருப்பொருளாக மாற்றமடையக் கூடிய நிலை உருவாகியுள்ளது. ஆளும் தரப்பினரால் பெற்றப்பட்ட இந்த வெற்றி எதிர்காலத்தில் எதிரணிகளின் மனங்களிலும் விதைக்கப்படமாட்டாது என்பதற்கு எவ்விதமான உத்தரவாதமுமில்லை.
இத்தேர்தல் முடிவுகளை பாடமாகக் கொண்டு இதன் பிற்பாடாவது முஸ்லிம், தமிழ் அரசியல்வாதிகள் தமது மக்களுக்காகவும், சமூகத்துக்காகவும் உண்மையான சேவையினை ஆற்ற முன்வர வேண்டும். தொடர்ந்தும் மக்களை ஏமாற்றிக் கொண்டு இருக்க முடியாது என்பதை உணர வேண்டும். தமது மக்கள் என்றும் கற்பனையுலகில் வாழத் தயாரானவர்கள் அல்ல என்பதை இவர்கள் ஆழமாக தமது மனங்களில் பதித்துக் கொள்ள வேண்டும். பாராளுமன்றத்தில் எமக்கு இத்தனைப் பிரதிநிதிகள் இருக்கின்றார்கள். மாகாணசபையில் எமது சமூகத்தை இத்தனைப் பிரதிநிதிகள் பிரதிநிதித்துவப்படுத்துகின்றார்கள். அமைச்சரவையில் எமக்கு இத்தனை அமைச்சர்கள் இருக்கின்றார்கள் என்று கூறிக் கொள்வதால் சிறுபான்மையினராகிய எமக்கு ஒன்றும் ஆகிவிடப் போவதில்லை. எண்ணிக்கை முக்கியமல்ல, செயற்றிறன்மிக்க தலைமைத்துவம் தான் இன்றைய சமூகத்தின் முக்கியத்துவம். வாக்காளர்களை என்றும் ஏமாற்ற முடியாது.
இத்தேர்தலால் ஏற்பட்ட வடுக்கள் நிச்சயமாக பெரும்பான்மை சமூகத்தினர் மத்தியில் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்பது தவிர்க்க முடியாதது. இது சடுதியாக ஏற்படாவிட்டாலும்கூட, ஒரு நீண்ட கால அடிப்படையில் அத்தகைய உணர்வுகள் ஏற்படும். அதற்கான வழியினை இத்தேர்தலில் நாங்கள் காட்டிவிட்டோம். யதார்த்த நிலைகளை தமிழ் மக்களும், சரி முஸ்லிம் மக்களும் சரி உணர்ந்து கொள்ளாவிடின் அல்லது இந்தத் தேர்தல் உதாரணங்களை படிப்பினையாக எடுத்துக் கொள்ளாவிடின் எதிர்காலம் மேலும், மேலும் ஐயப்பாடுமிக்கதாக மாறும் என்பதை நாம் ஒவ்வொருவரும் உணர்ந்துகொள்ள வேண்டும்.
2015 ம் ஆண்டு ஏழாவது ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவும். மைத்திரிபால சிரிசேனாவும் முதன்மை வேட்பாளர்களாக உள்ளனர். தற்போதைய நிலையில் பொது வேட்பாளர் மைத்திரி சூழ சிறுபான்மை அணிகள் அணிதிரண்டுள்ளனர். சிறுபான்மைப் பலம் தனக்கு இல்லையென உணர்துள்ள மஹிந்த பொளத்தர்களின் உணர்வினைத்தூண்டும் வகையில் பிரச்சாரங்ளை முன்னெடுத்து வந்தார்.இந்த நிலையில் மைத்திரி வெற்றியீட்டினால் ஜனாதிபதித்தேர்தலில் தீர்மான சக்தி சிறுபான்மை இனத்தவர்கள் என்ற நிலை வலுவடையும். அல்லாமல் மஹிந்த வெற்றியீட்டும் நிலையில்  சிறுபான்மையின உரிமைகள் கேள்விக்கிடமாகக் கூடிய நிகழ்தகவுகள் அதிகமாக இருக்கும் என்பது தவிர்க்க முடியாததே.

No comments:

Post a Comment