Friday 5 December 2014

இலங்கையில் ஜனாதிபதி ஆட்சி முறையும், இதுவரை நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல்களும் : 02 - புன்னியாமீன் -

(தொடர்ச்சி….)

இலங்கையில் ஜனாதிபதிப் பதவி பதவிக்காலத்துக்கு முன் வறிதாகினால் (வெற்றிடமாகினால்)…

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிப் பதவி அவரது பதவிக்காலம் முடிவதற்கு முன் வறிதாகினால் அடுத்துவரும் ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்கான ஏற்பாடுகள் இலங்கைச் ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பில் 37ம் உறுப்புரை,  40ஆம் உறுப்புரை போன்றவற்றிலும் 1981ஆம் ஆண்டு 2ம் இலக்க ஜனாதிபதியைத் தெரிவு செய்வது தொடர்பான (விசேட ஏற்பாடு) சட்ட மூலத்தின் மூலமும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் 37ஆம் உறுப்புரையின் 1ஆம் பந்தியில் ஜனாதிபதிக்குரிய தத்துவங்களும், கடமைகளும், பணிகளும் பிரதமரினால் பிரயோகிக்கப்படுதலும், புரியப்படுதலும், நிறைவேற்றப்படுதலும் எனும் தலைப்பின் கீழ் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் சுகவீனம் காரணமாக,  இலங்கையில் இல்லாமை காரணமாக அல்லது வேறேதும் காரணமாகத் தமது பதவிக்குரிய தத்துவங்களையும், கடமைகளையும்,  பணிகளையும் பிரயோகிப்பதற்கும், புரிவதற்கும், நிறைவேற்றுவதற்கும் இயலாதிருப்பாரெனக் கருதுவாரெனில் அத்தகைய காலத்தின்போது ஜனாதிபதி என்ற பதவியில் பிரதமரை ஜனாதிபதி என்ற பதவிக்குரிய தத்துவங்களையும், பணிகளையும் பிரயோகிப்பதற்கும், புரிவதற்கும், நிறைவேற்றுவதற்கும் அவர் (ஜனாதிபதி) நியமிக்கலாம் என்பதுடன்,  அத்தகைய காலத்தின்போது பிரதமர் என்ற பதவியில் பதிற்கடமை ஆற்றுவதற்கென ஏனைய அமைச்சர்களில் ஒருவரையும் நியமிக்கலாம். (இச்சந்தர்ப்பத்தில் பிரதமர், பதவி வறிதாகியிருப்பின் அல்லது செயலாற்ற இயலாதிருப்பின் அத்தகைய காலப்பகுதியின்போது ஜனாதிபதியின் பதவிக்கான தத்துவங்களையும், கடமைகளையும், பணிகளையும் பிரயோகிப்பதற்கும்,  புரிவதற்கும்,  நிறைவேற்றுவதற்கும் அவர் சபாநாயகரை நியமிக்கலாம்)

37ஆம் உறுப்புரையில் குறிப்பிடப்பட்டுள்ள விபரங்கள் ஒரு தற்காலிக ஏற்படாகும்.

1993 மே 1ஆம் திகதி இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 2ஆவது நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸ அவர்கள் படுகொலை செய்யப்பட்டதையடுத்து ஜனாதிபதியின் பதவி வெற்றிடமானது. (யாப்பின் 38ஆம் உறுப்புரையின் 1ஆம் பந்தி பின்வரும் சூழ்நிலைகளில் ஜனாதிபதிப்பதவி வெற்றிடமாகும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அ) அவர் இறப்பதன் மேல்
ஆ)அவர் இராஜினாமாச் செய்வதன் மேல்
இ) அவர் இலங்கைப் பிரஜை என்ற அந்தஸ்தை இழக்கும்போது
ஈ) தமது பதவிக்காலம் தொடங்கியது முதல் ஒரு மாதத்துக்குள் பதவி ஏற்காவிடில்
உ) 38(2) படி பதவி நீக்கம் செய்யப்பட்டால்
ஊ) 130(அ) படி அவரது தெரிவு பிழையானது என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கினால்
 இந்நிலையில் ஜனாதிபதியின் பதவி வறிதாகும்.

இந்நிலையில் (ஜனாதிபதியின் பதவிக்காலம் முடிவதற்கு முன்னர் அவரின் பதவி வறிதாகும் நிலையில்) நாடாளுமன்றம், நாடாளுமன்ற உறுப்பினருள் ஒருவரை ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்க வேண்டுமென அரசியலமைப்பின் 40ம் உறுப்புரையில் (1) அ,  ஆ,  இ பிரிவுகளில் கூறப்பட்டுள்ளது.

ஜனாதிபதிப் பதவிக்கு அவ்வாறு தெரிவு செய்யப்படுபவர் பதவி வறிதாகிச் செல்லும் ஜனாதிபதியின் பதவிக்காலத்தில் முடிவுறாதெஞ்சியுள்ள காலத்திற்கு மட்டுமே பதவி வகித்தல் வேண்டும்.

அத்தகைய வெற்றிடம் ஏற்பட்ட பின் இயன்றளவு விரைவாகவும், எச் சந்தர்ப்பத்திலும் அத்தேதியிலிருந்து ஒரு மாதத்திற்குப் பிந்தாமலும் தேர்தல் நடத்தப்படல் வேண்டும். நாடாளுமன்ற சட்டத்தினால் ஏற்பாடு செய்யக்கூடியதான அத்தகைய நடவடிக்கை முறைக்கிணங்க அத்தகைய தேர்தல், இரகசிய வாக்களிப்பு மூலமும், அளிக்கப்பட்ட வாக்குகளின் பூரணப் பெரும்பான்மை மூலமும் நடைபெறுதல் வேண்டும்.

அரசியலமைப்பின் 40(1) (இ) பிரிவு அத்தகைய வெற்றிடம் ஏற்பட்ட காலத்திற்கும், புதிய ஜனாதிபதிப் பதவி ஏற்கின்ற காலத்திற்கும் இடைப்பட்ட காலத்தின் போது ஜனாதிபதிப் பதவியில் பிரதமர்  பதிற் கடமையாற்ற வேண்டும் என்பதுடன், பிரதமர்  பதவி, வறிதாக இருக்குமெனின் அல்லது பிரதமர் பதிற் கடமையாற்றுவதற்கு இயலாதவராக இருப்பாரெனின் ஜனாதிபதி என்ற பதவியில் சபாநாயகர் பதிற் கடமையாற்ற வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை ஜனாதிபதி அவர்களின் மறைவையடுத்து மேற்படி ஏற்பாடுகளுக்கமைய (அரசியலமைப்பின் 37(2), 40 (1) (இ) 1993 மே 01ம் திகதி இலங்கையின் பிரதமர் திரு. டி.பி. விஜயதுங்க அவர்கள் பதில் ஜனாதிபதியாகப் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார். அரசியலமைப்பின்படி பதில் ஜனாதிபதிக்கு 1 மாதம் மட்டுமே கடமையாற்ற முடியும். இதற்கிடையில் 40ம் உறுப்புரைப்படி நாடாளுமன்றம் தமது உறுப்பினர் ஒருவரை ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்க வேண்டும். இவ்வாறு ஜனாதிபதியைத் தெரிவு செய்வது தொடர்பான (விசேட ஏற்பாடு) நாடாளுமன்ற சட்ட மூலத்தில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதிப்பதவி வெற்றிடமாகி 3 தினங்களுக்குள் நாடாளுமன்றம் கூட்டப்படல் வேண்டும். அவ்வாறு நாடாளுமன்றம் கூட்டப்பட்டதும் 48 மணிநேரத்திற்குள் நாடாளுமன்ற செயலாளர் நாயகத்தின் விசேட பிரகடனத்தின்படி ஜனாதிபதி பதவிக்கான வேட்பு மனுக்களை (நாடாளுமன்ற அங்கத்தவர்களிடமிருந்து) கோரப்படுவதுடன் வேட்புமனு பெறும் காலம்,  நேரம் என்பனவும் அறிவிக்கப்பட வேண்டும்.

நாடாளுமன்றத்தினுள் ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல்களை நடாத்துவதற்குப் பொறுப்பாக பாராளுமன்றச் செயலாளர் நாயகமே இருப்பார்.

இத்தகைய தேர்தலின்போது கடைபிடிக்கப்படும் ஒழுங்குமுறைகள் சாதாரண தேர்தல் முறைகளை ஒத்ததாகும். வேட்புமனு கோரப்படுதல் எனும்போது இங்கு வேட்பாளரின் அனுமதியுடன் ஒரு அங்கத்தவர் அவர் பெயரைப் பிரேரித்து மற்றொருவர் ஆமோதிக்க வேண்டும். எதிர்ப்போட்டிகள் இல்லாதிருப்பின் பிரேரிக்கப்பட்ட வேட்பாளர் ஏகமனதாக இலங்கையின் அடுத்த நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என பாராளுமன்றச் செயலாளர் நாயகம் அறிவிப்பார். அதையடுத்து ஜனாதிபதி உயர் நீதிமன்ற நீதியரசர் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து ஏற்கனவே பதவி வறிதான ஜனாதிபதியின் பதவிக்காலத்தில் முடிவுறாதெஞ்சியுள்ள காலத்திற்கு ஜனாதிபதியாகப் பதவியேற்றுக் கொள்வார்.

இதன்படி 1993-05-07ஆம் திகதி நாடாளுமன்றம் கூட்டப்பட்டபோது பதில் ஜனாதிபதி டி.பி. விஜயதுங்க அவர்களின் பெயர் முன்மொழியப்பட்டு (திரு. விஜயபால மென்டிஸ் முன்மொழிந்தார்.) வழிமொழியப்பட்டு (திரு. ஏ.ஸீ.எஸ். ஹமீட் வழிமொழிந்தார்) எதிரப்பிரேரணைகள் இல்லாதிருந்தமையால் ஜனாதிபதியாக ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டார். (இவரின் பதவிக்காலம் 1995-01-02 உடன் முடிவடையும். (1988-01-02ஆம் திகதியன்று ரணசிங்க பிரேமதாஸ பதவியேற்றது குறிப்பிடத்தக்கது. முன்னைய ஜனாதிபதியின் பதவிக்காலம் முடிவடையவது 1995-01-02 ஆகும்)

ஜனாதிபதிக்கெதிரான  குற்றப்பிரேரனை ஒன்றினை பாராளுமன்றத்தில் கொண்டு வரக் கூடிய சந்தர்ப்பங்கள்:

ஜனாதிபதிக்கெதிராகக் குற்றப்பிரேரணை ஒன்றினை நாடாளுமன்றத்தில் கொண்டுவந்து ஜனாதிபதியைப் பதவி நீக்கம் செய்யும் வழி முறைகளைப் பற்றி நோக்குமிடத்து,  யாப்பில் 38ம் உறுப்புரையின்படி பின்வரும் சந்தர்ப்பங்களில் குற்றப் பிரேரணையைக் கொண்டு வரக்கூடிய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

38(2)அ – பாராளுமன்ற உறுப்பினர் எவரும் சபாநாயகருக்கு முகவரியிட்டனுப்பும் கடிதத்தின் மூலம் மனப் பலவீனம் அல்லது உடற் பலவீனம் காரணமாக அவரது பதவிக்குரிய பணிகளை நிறைவேற்றுவதற்கு நிரந்தரமாக இயலாதுள்ளார் எனச் சார்த்துகின்ற அல்லது ஜனாதிபதி பின்வருவனவற்றைப் புரிவதற்குக் குற்றவாளியாக உள்ளாரெனச் சார்த்துகின்ற தீர்மானம் பற்றி அறிவித்தல் ஒன்றைக் கொடுக்கலாம்.

1. அரசியலமைப்பினை வேண்டுமென்றே மீறிய குற்றம்
2. தேசத்துரோகம் புரிந்த குற்றம்
3. இலஞ்சம் பெற்ற குற்றம்
4. தமது பதவிக்குரிய அதிகாரங்களைத் து~;பிரயோகம் செய்தமையை உள்ளடக்கிய துர்நடத்தைக்கான அல்லது ஊழல் குற்றம்
5. அல்லது ஒழுக்கக்கேட்டை உற்படுத்தும் ஏதேனும் சட்டத்தின் கீழான ஏதேனும் தவறு.

மேற்படி குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை நடாத்தும்படி உயர்நீதிமன்றத்தைக் கோர நாடாளுமன்ற உறுப்பினர்களால் முடியும். இச்சந்தர்ப்பத்தில் குறித்த குற்றச்சாட்டுகள் எழுத்து மூலம் குறிக்கப்பட்டு நாடாளுமன்ற அங்கத்தவர்களுள் 2/3 குறையாதோர் கையொப்பத்துடன் சபாநாயகருக்குச் சமர்ப்பிக்கலாம். இக்கையொப்பம் 2 /3க்குக் குறைவாக இருப்பின் குறித்த குற்றப் பிரேரணையை சபாநாயகரால் மறுக்கவும் முடியும். இருப்பினும் குறித்த பிரேரணைக்குப் நாடாளுமன்ற அங்கத்தவர்களுள் 1/2 பாதிப் பங்கினருக்கு மேல் கையொப்பமிடப்பட்டிருப்பின், நியாயங்கள் காணப்படுமிடத்து உயர்நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என சபாநாயகர் திருப்திப்பட்டு பாராளுமன்றத்தில் 2/3 பெரும்பான்மையைப் பெற முடியுமென கருதினால் குறித்த பிரேரணையை நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலில் சபாநாயகரால் சேர்க்க முடியும்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியைத் தெரிவுசெய்யும் முறை

1978ஆம் ஆண்டு அரசியலமைப்பின் 30ம் உறுப்புரையின் 2ம் பந்தியில் குடியரசின் ஜனாதிபதியை ஆறாண்டுகளைக் கொண்ட பதவிக் காலத்துக்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்படல் வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்காக வேண்டிய தேர்தல் ஆணையாளர் தேர்தல் திகதியைக் குறித்து தேர்தலை நடாத்துவார். தேர்தல் ஆணையாளரின் அதிகாரப்படி  7 வது ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி 2015 ஜனவரி 08ம் திகதி தீர்மானிக்கப்பட்டது.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடக் கூடிய அபேட்சகர்:-

1. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி ஒன்றினூடாக அல்லது
2. ஒன்றில் அவர் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவராயிருப்பின் அல்லது இருப்பவராயிருப்பின் சுயேட்சை வேட்பாளராக நியமனப் பத்திரத்தைத் தாக்கல் செய்யலாம்.

இவ்வாறு நியமனப்பத்திரம் தாக்கல் செய்யும் வேட்பாளர்கள் பின்வரும் தகைமையீனங்களுள் எதற்கேனும் உட்பட்டவராகயிருத்தலாகாது என்று யாப்பின் 92ம் உறுப்புரை எடுத்துக் கூறுகிறது.

தகைமையீனங்கள் 31(1)

அ)  முப்பது வயதையடையாதவராக இருத்தல்
ஆ)  91ம் உறுப்புரை (1)ம் பந்தியின் ஈ,  உ அல்லது எ எனும் உற்பத்தியின் கீழ்
நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்குத் தகைமை அற்றவராக இருத்தல்
இ) ஜனாதிபதிப் பதவிக்கு மக்களினால் இரு தடவைகள் தேர்ந்தெடுக்கப்பட்டவராக இருத்தல்
ஈ) 38ம் உறுப்புரையின் 2ம் பந்தியின் ஏற்பாடுகளின் கீழ் ஜனாதிபதிப் பதவியிலிருந்து அகற்றப்பட்டவராக இருத்தல்

தேர்தல் ஆணையாளரால் நியமனப் பத்திரம் கோரப்பட்டதும் நியமனப் பத்திரத்தைத் தாக்கல் செய்தல் வேண்டும். கட்டுப்பணமாக அங்கீரிக்கப்பட்ட அரசியல் கட்சியினூடாகப் போட்டியிடுவதாயின் 50, 000வும், சுயேட்சையாகப் போட்டியிடுவதாயின் 75, 000வும் செலுத்தல் வேண்டும்.

தேர்தலில் வாக்களிப்பது எப்படி?

ஜனாதிபதித் தேர்தலில் வழங்கப்படும் வாக்குச் சீட்டில் அபேட்சகர்களின் பெயர்கள் சிங்கள அகர வரிசைக்கிணங்க மும்மொழிகளிலும் அச்சிடப்பட்டிருக்கும். அபேட்சகர்களின் பெயருடன் கட்சியின் சின்னம் அல்லது அபேட்சகருக்கு வழங்கப்பட்ட சின்னம் இரண்டாம் கட்டத்தில் அச்சிடப்பட்டிருக்கும். 3ம் கட்டத்தில் வாக்களிப்பதற்கான இடம் ஒதுக்கப்பட்டிருக்கும். வாக்களிக்கும் போது ஏனைய தேர்தல்களைப் போல “புள்ளடி” ( X ) யிடத் தேவையில்லை. போட்டியிடும் வேட்பாளர்களுக்கு வாக்காளரின் விருப்பத்திற்கமைய 1ம்,  2ம்,  3ம்,  4ம்….. விருப்பங்களைப் பதியலாம்.

இலங்கைத் தேர்தல் சட்டத்தின் பிரகாரம் ஜனாதிபதித் தேர்தலில் 2 வேட்பாளர்கள் மாத்திரம் போட்டியிடும் சந்தர்ப்பத்தில் தமது விருப்பத்தை ஒரு வேட்பாளருக்கும், 3 வேட்பாளர்கள் போட்டியிடின் 1ம்,  2ம் விருப்பங்களையும்,  மூவருக்கு மேல் போட்டியிடின் 3ம்,  4ம் விருப்பங்களையும் வழங்குமாறு வாக்காளர் கேட்கப்படுவர். வாக்களிக்கும் போது ஒரு வேட்பாளருக்கு மாத்திரம் புள்ளடி இட்டால் அந்தப் புள்ளடி உரிய வேட்பாளருக்கான விருப்பத் தெரிவாகக் கொள்ளப்படும். மாறாக ஒரே வாக்குப் பத்திரத்தில் ஒன்றுக்கு மேற்பட்டோருக்கு புள்ளடி இடப்பட்டிருப்பின் அந்த வாக்குப் பத்திரம் நிராகரிக்கப்படும்.

ஜனாதிபதியைத் தேர்ந்தெடுத்தல்.

இலங்கைத் தேர்தல் சட்டத்தின் பிரகாரம் செல்லுபடியான மொத்த வாக்குகளில் 50 சதவீதத்துக்கு மேல் பெற்றவர் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார் என தேர்தல் ஆணையாளர் அறிவிப்பார்.

வேட்பாளர்கள் 3 அல்லது 3க்கு மேல் போட்டியிடும் சந்தர்ப்பத்தில் 50 சதவீத வாக்குகளை எவரும் பெறாத நிலை ஏற்படின் ஆகக் கூடுதலான வாக்குகளைப் பெற்ற இரண்டு வேட்பாளர்கள் தவிர ஏனைய வேட்பாளர் (அல்லது வேட்பாளர்கள்) போட்டியிலிருந்து நீக்கப்படுவர்.

இவ்வாறு நீக்கப்பட்ட போட்டியாளர்கள் பெற்ற வாக்குகளில் இருந்து 2ம் விருப்பத் தெரிவாக போட்டியில் நிற்கும் வேட்பாளருக்குரிய வாக்குகள் எண்ணப்பட்டு பதியப்படும். இக்கணிப்பீட்டின்படி பின்பும் 50 சதவீதம் பெறாவிடின் 3ம்,  (4ம்) விருப்ப வாக்கு கணிக்கப்படும். இறுதியில் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றவர் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்படுவார்.

ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் 32ம் உறுப்புரையின் 1ம் பந்திக்கிணங்க பிரதம நீதியரசரின் முன்னிலையில் அல்லது அந்நீதிமன்றத்தின் வேறு எவரேனும் நீதிபதியின் முன்னிலையில் சத்தியம் செய்து கீழ் ஒப்பிடுவதன் மேல் பதவியேற்றுக் கொள்வார்.

( 1ஆவது ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான குறிப்புகள் இடம்பெறும்.)

No comments:

Post a Comment